அனல் அவள் 11

                        அனல் அவள் 11

 

 

 

 

இவர்களுக்கு எதிரி என்றால் அது பாலா மட்டுமே என்று அறிந்த‌ மூவரும் அவளை நாளா பக்கமும் சல்லடைப் போட்டு தேடியும் எவர் கண்களுக்கும் அவள் புலப்படவில்லை.

 

நேரம் கடக்க கடக்க ஒவ்வொரு நொடியும் மூவருக்கும் மரண வலியை ஏற்படுத்தியது.

 

இதுவரையிலும் தென்றலின் மீதான தமிழின் நடவடிக்கைகளை மித்ரனே கவனிப்பான்.

 

ஆனால் இன்று விவேகன் அவனை கவனித்தான்.

 

தமிழின் முகத்தில் விவேகன், மித்ரனிற்கு இணையான வேதனையைக் கண்டு கொண்ட விவேகனின் முகம் யோசனையில் சுருங்கியது.

 

கடந்த சில நாட்களுக்கு முன் கல்லூரியில் இவர்கள் இருக்கும் இடத்தில் எல்லாம், தமிழின் முகம் அவுட் ஆஃப் ஃபோக்கஸில் விவேகனின் கண்களுக்கு தெரிந்து கொண்டே இருந்தது.

 

முதலில் அவன் அதை பெரிதாக நினைக்கவில்லை. நாள் ஆக ஆக தமிழ் இவர்களை பின் தொடர்வதை உறுதி செய்திருந்தான் விவேகன்.

 

பிறகு அவனைப் பற்றி கல்லூரியில் விசாரித்த வரையிலும் தவறாக யாரும் கூறி இருக்கவில்லை. அதை விட தமிழுக்கு நண்பர்கள் என்றும் ஏன் நண்பன் என்று ஒருவர் கூட அவன் வைத்திருக்கவில்லை.

 

இவர்களின் நட்பில் இணைய விரும்பி தான் தங்களை அவன் பின் தொடருகிறான் என விஷயத்தை ஓரளவு யூகித்த விவேகன் அவனை அவர்கள் நட்பு வட்டத்திற்குள் இணைத்திருந்தான். இது விவேகனைத் தவிர்த்து யாருக்கும் தெரியாது. ஏன் தமிழே அறியாத ஒன்றும் கூட.

 

அப்படி இருக்கையில், ஒரு  மாதத்திற்கும் குறைவான நாட்கள் பழகிய ஒருவன், அதுவும் அவளை பற்றிய முழு உண்மையும் அறியாத ஒருவன், அவளிற்காக, பதினைந்து வருடங்கள் அவளுடன் உயிருக்கும் மேலாக பழகிய எங்கள் அளவிற்கு இணையாக துடித்துக் கொண்டிருந்ததை பார்த்த விவேகனுக்கு அதிர்ச்சியாகவே இருந்தது.

 

இதை இத்தனை நாட்கள் தான் கவனிக்காமல் விட்டது எப்படி என குழம்பியவன், மேலும் சிந்திக்க நேரம் இல்லாமல் அதனை பிறகு பார்த்து கொள்ளலாம் என தென்றலை தேடும் பணியில் தன்னை புகுத்திக் கொண்டான்.

 

நீண்ட நேரம் கடற்கரையில் தேடியவர்கள். பிறகு அருகில் இருக்கும் மீனவ குப்பத்தில் சென்று அவர்களின் தேடுதல் வேட்டையை துவங்கினர்.

 

அவளை பற்றிய சிறு துரும்பு கூட வெகு நேரம் ஆகியும் அவர்களுக்கு தெரியாமல் போக மூவரும் மிகவும் துவண்டு போய் விட்டனர்.

 

விவேகனிற்கு ‘இந்த உலகம் இப்படியே நின்று விடக் கூடாதா’ என்று இருந்தது. 

 

அவன் தவம் இன்றி அவன் கையில் கிடைத்த தேவதையை இன்று தவற விட்டதை எண்ணி அவன் தன்னைத் தானே மிகவும் கடிந்து கொண்டான்.

 

‘தன் உயிர் இப்போதே உடலை விட்டு பிரிந்து விட வேண்டும்’ என என்றும் கடவுளை நம்பாதவன் 

இன்று அந்த கடவுளிடம் மன்றாடினான்.

 

மித்ரன், அவனுக்கும் அதே மனநிலைதான்.

 

‘தன்னிடம் அதிகம் பாசம்  இல்லாதது போல காட்டிக் கொள்ளும் அவள் என்றும் எப்போதும் எங்கும் தன்னிடம் வம்பு சண்டை செய்து அடித்து துவம்சம் செய்பவள் ஆனால்,

 

‘அந்த அடியில் என்றும் சிறு வலியை கூட நான் உணர்ந்ததில்லை. அவள் என் மீது நேரடியாக அன்பு காட்டாவிடினும் கண்களால் பேசும் கரிசனம், நான் அறிந்த ஒன்றே. இன்று தன் கண்முன்னே அவளை தவற விட்டதை’ எண்ணி அவன் மிகவும் வருந்தினான்.

 

தமிழுக்கோ, ‘என்ன செய்வது என்ன சொல்வது மித்ரன்‌, விவேகன் இவர்கள் இருவரில் யாரை தேற்றுவது, இல்லை முதலில் தன்னைத் தானே தேற்றிக் கொள்ள வேண்டுமா’ என்று புரியாத தெரியாத ஒரு மனநிலையில் இருந்தான்.

 

பிறகு மூவரும் ஒன்று சேர்ந்து அந்த குப்பத்தில் உள்ள மக்களிடம் அவளின் புகைப்படத்தை காட்டியவாறு அவளைத் தேடிக் கொண்டு இருந்தனர்.

 

அப்போது, அவர்களுக்கு எதிரில் ஒரு மீனவர் மீன்பிடி வலையை தோளில் சுமந்தவாறு வந்து கொண்டிருந்தார்.

 

அவரும் அந்த கூட்டத்தில் இருந்து இருக்கலாம் என யூகித்த விவேகன், அவரிடம் சென்று விசாரித்தான்.

 

அப்போது அந்த மீனவர் ஒரு குடிசை வீட்டை கைகாட்டி, அவள் அங்கு இருப்பதாக கூறினார். பிறகு மூவரும் ஒன்று சேர்ந்து அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு அந்த குடிசையை நோக்கி ஓடிச் சென்றனர்.

 

முதலில் உள்ளே சென்ற விவேகன், அவள் இருந்த நிலையை கண்டு மிகவும் கோபமுற்றான் வந்த கோபத்திற்கு அவளை அடித்தால் நிச்சயமாக அவள் உடல்நிலை தாங்காது என நினைத்தான்.

 

அதனால் தன்னால் இயன்றவரை அவனை கட்டுப்படுத்திக் கொண்டு நின்று இருந்தான்.

 

அவனை தொடர்ந்து வந்த மித்ரனும் தமிழும் அவள் இருந்த நிலையை கண்டு அழுவதா சிரிப்பதா இல்லை கோபப்படுவதா என்று தெரியாமல் தலையில் அடித்து கொண்டு நின்று கொண்டனர்.

 

இவர்களின் இந்த நிலைக்கு காரணமான அவளோ, அங்கு அந்த மீனவர் வீட்டின் மீன் குழம்பு சாப்பாட்டை ஒரு பிடி பிடித்து கொண்டு இருந்தாள்.

 

இங்கே இவர்கள் தாகம் மறந்து, பசியின்றி தெருத்தெருவாக ஒரு நாயை விட கேவலமாக சுற்றித் திரிந்து கொண்டிருக்க, இவள் இவ்வாறு செய்தால் யாருக்குத்தான் கோபம் வராது.

 

அவர்கள் வந்து ஐந்து நிமிடம் கழித்தே அவர்களின் வருகையை உணர்ந்தவள்.

 

“வாங்கடா வாங்கடா மீன் குழம்பு அருமையா இருக்கு வந்து சாப்பிடுங்க, உங்களுக்கும் சேர்த்து தான் சாப்பாடு வாங்கி வச்சிருக்கேன்” என மூவரையும் அவள் அருகில் அழைக்க, அவ்வளவுதான் விவேகனின் பொறுமை காற்றில் பறந்து விட்டது.

 

விவேகன் தன்னை நோக்கி கோபமாக வருவதை அறிந்தவள் நடுக்கத்துடன் எழுந்து நிற்க, விவேகனிற்க்கு  முன் மித்ரன் ஓடி சென்று தென்றலை மறைத்தவாறு நின்று கொண்டான்.

 

ஏனென்றால் பலமுறை இவனிடம் பொறி கலங்க அரை வாங்கியவன் 

அல்லவா அவனின் அடி பற்றி நன்கு அறிந்தவன் ஆகையால் அவளை அந்த அடியிலிருந்து காப்பாற்ற எண்ணி அவளை மறைத்துக் கொண்டு நின்றான்.

 

விவேகன் எவ்வளவு கூறியும் மித்ரன் விளகிப்போவதாக தெரியவில்லை. தென்றலுக்கோ பயத்தில் வியர்க்கத் தொடங்கி கை, கால் நடுக்கம் அதிகரித்துவிட்டது.

 

பொறுமையாக பேசிக்கொண்டிருந்த விவேகன், அதற்கு மேல் முடியாமல் அவனை இழுத்து வலது புறம் தள்ளியவன் தென்றலை ஓங்கி ஒரு அறை அறைந்தான்.

 

இவை அனைத்தும் சில வினாடிகளிலேயே நடந்துவிட தமிழுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. 

 

விவேகன் அடித்த அடியில் இரண்டு அடி தூரம் சுழன்று சென்று விழுந்தவள் விழுந்த இடத்திலேயே மயங்கிப் போனாள்.

 

இதனைக் கண்ட மித்ரன், விவேகனை முறைத்தவாறு தென்றலின் அருகே சென்று அவளை உலுக்க, அவள் உடலில் எந்த அசைவும் தெரியவில்லை. பிறகு தமிழிடம் கைகாட்டி தண்ணீர் கொண்டுவர கூறினான். அவனும் தண்ணீர் கொண்டு வர, 

 

பிறகு அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து அவளை சுயநினைவுக்கு கொண்டு வந்தனர்.

 

தாயிடம் அடி வாங்கிய குழந்தை ஆறுதலுக்காக தாய் மடியை தேடுவது போலவே தென்றலும் அடித்த விவேகனிடமே சரணடைந்தாள்.

 

இதனைக் கண்ட மித்ரன், “இதுகளுக்கு வேற வேலையே இல்லை” என தலையில் அடித்துக்கொள்ள,

 

தமிழுக்கு கோபம், குழப்பம், பொறாமை என சொல்ல முடியாத பல உணர்வுகள் வந்து சென்றன.

 

பிறகு ஒரு அரைமணி நேரம் தென்றல், விவேகனிடம் மன்னிப்பு வேண்டி போராடிக் கொண்டிருக்க, அவன் சற்றும் அசைந்து கொடுக்கவில்லை. கல்லை விட மிகவும் கடினமாகவே நின்று இருந்தான்.

 

பேசி பேசி ஓய்ந்துபோன தென்றல் இதற்குமேல் முடியாது என அழுது அழுது சிவந்த அவள் கண்களைத் துடைத்தவாறு அந்த வீட்டை விட்டு வெளியேற,

 

அவளை பின்தொடர்ந்து மூவரும் வெளியேறிய நேரம்,  அந்த வீட்டின் உரிமையாளரான அந்த மீனவர் எங்கோ வெளியே சென்றிருந்தவர் இப்போது வீடு வந்து சேர அவரிடம் நன்றி கூறிக்கொண்டு நாள்வரும் அந்த இடத்தை காலி செய்தனர்.

 

பிறகு விவேகன் எதுவும் கூறாமல் வண்டியை ஸ்டார்ட் செய்ய,

தென்றலும் அமைதியாக அவன் பின்னால் ஏறிக் கொண்டாள். விவேகன் வண்டியின் ஆக்சிலரேட்டரை திருகி அதனை அலறவிட்ட அந்த ஸ்டைலிலே தெரிந்தது அவன் எந்த அளவிற்கு தன் மேல் கோபமாக இருக்கிறான் என.

 

அதற்கு மேல் தென்றல் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தோட அவர்களின் பயணம் அமைதியாக சென்று தென்றலின் வீட்டில் முடிவடைந்தது.

 

வண்டியில் வரும்போதுகூட விவேகன் அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.

 

அதே சமயம் வண்டியை மிகவும் பொறுமையாக ஓட்டினான். அவன் சென்ற அனைத்து சாலைகளும் ஒரு வழி சாலை ஆகையால் எதிரில் வந்த வாகனங்கள் இவளை பயமுறுத்துவதற்கு வாய்ப்பில்லை. எவ்வளவு கோபத்திலும் தன் நண்பன் தன் மீது கொண்ட அக்கறையை எண்ணி நெகிழ்ந்துபோனாள் தென்றல்.

 

பிறகு அந்த சூழ்நிலையில் தர்ம சங்கடமாக உணர்ந்த தமிழ் அனைவரிடமும் கூறி கொண்டு அவன் வீட்டிற்கு கிளம்பி விட,

 

காலையில் கலகலப்பாக சென்ற பிள்ளைகள் மாலை வீடு வந்து சேர்கையில் சோர்வாகவும் அதே சமயம் ஒருவர் முகத்தை ஒருவர் ஏறிட்டு கூட காணாமல் இருப்பதை உணர்ந்த தேவகி, மித்ரனை தனியாக அழைத்து என்ன நடந்தது என கேட்க.

 

மித்ரன் நடந்த எல்லாவற்றையும் ஒரு வார்த்தைகூட பிசிறு தட்டாமல் அனைத்தையும்  ஒப்புவித்து விட, தன் மகளை அடித்த விவேகனின் மீது கோபம் கொள்ளாமல் அந்த தாயோ தன் மகனை கஷ்டப்படுத்திய மகளின் மீது கோபம் கொண்டார்.

 

மித்ரனை தனியே அழைத்துக் கொண்டு சென்ற தேவகி, வேகமாக  வருவதை கண்டு என்ன நடந்திருக்கும் என்று யூகித்த விவேகன், அவரை தடுத்து நிறுத்தி, “அவள எதுவும் சொல்லாத டார்லிங், தப்பு என் மேலதான் அவள நான் தான்  கவனிக்காம விட்டுட்டேன். நீங்க மட்டும் அவள எதுனா சொன்னிங்கனா அதுக்கப்புறம் நான் வீட்டுக்கு வரவே மாட்டேன், உங்க கூட பேச மாட்டேன்” என்றான்.

 

அதற்கு மேல் அவரால் ஒன்றும் செய்ய இயலவில்லை தென்றலை ஒரு முறை முறைத்துவிட்டு சமையலறைக்குள் புகுந்து கொண்டார்.

 

அவரை பின்தொடர்ந்து சமையலறைக்குச் சென்ற மித்ரன், “எங்கம்மா வந்ததிலிருந்து பார்க்கிறேன் அந்த குட்டி சாத்தான காணோம்” என்க. 

 

“நீங்க போன கொஞ்ச நேரத்துல ஃப்ரண்டு வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு போனா, இன்னும் திரும்பி வரல டா மித்ரா, பக்கத்துத் தெருதான்  நீ கொஞ்சம் போய் பார்த்துட்டு வா” என்க.

 

அக்ஷாவை தேடி கிளம்பினான் மித்ரன்.

 

“எங்க டா போற” என்ற விவேகனின் கேள்வி மித்ரன் செவியில் விழாதவாறு சென்று விட்டான்.

 

‘திமிர் பிடிச்சவன் ரெண்டுத்துக்கும் செல்லம் கொடுத்து கொடுத்து நானே இதுங்கள கெடுத்து வெச்சுட்டேன். இனிமே இதுங்கள கொஞ்சம் அடிச்சி வளர்த்தா  தான் சரியா வரும்’ என தன் மனதில் நினைத்துக்கொண்டான் விவேகன்.

 

அவனாகவே சற்று நேரத்தில் கோபம் தணிந்து தன்னிடம் பேசி விடுவான் என நினைத்துக் கொண்டு இருந்த தென்றலுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

 

பிறகு பொறுமையாக எழுந்து அவன் அருகில் வந்து அமர்ந்தவள், அவன் இடையை அணைத்தவாறு அவன் மடியில் படுத்துக்கொண்டு அழுது கரைந்தாள். பிறகு தன்னைத் தானே  தேற்றிக் கொண்டு எழுந்து அறைக்கு சென்று விட்டாள். எவ்வளவு கெஞ்சியும் விவேகன் மனம் இரங்கவே இல்லை.

 

இங்கு அக்ஷாவைத் தேடி சென்ற மித்ரன் அவர்கள் தெருவை கடந்து சிறிது தூரம் சென்றிருந்த நிலையில் அக்ஷா அழுதுகொண்டே முன்னடக்க அவளை பின் தொடர்ந்து வந்து கொண்டு இருந்தான் தமிழின் சகோதரன் அபிநவ்.

 

அக்ஷா அழுது கொண்டே வருவதை கண்ட மித்ரன் அவர்கள் அருகில் விரைந்து செல்ல அவனை கண்ட அக்ஷா, “மித்ரா அண்ணா”  என அழைத்தவாறு அவனை தாவி அணைத்துக்கொண்டு மேலும் கேவிக்கேவி அழ தொடங்கி விட்டாள்.

 

அவள் அழுது கொண்டு வரவும் அவளை அபிநவ் பின்தொடர்ந்து வரவும் அபிநவை  தவறாக நினைத்துக் கொண்ட மித்ரன், சிறிதும் யோசிக்காமல் அபிநவின் கன்னத்தில் மாறி மாறி அறைய நடப்பது எதுவும் புரியாமல் நின்றிருந்தாள் அக்ஷா.

 

மித்ரனின் அடி அதிகரிப்பதை உணர்ந்தே அவனை தடுத்து நிறுத்தியவள், “லூசாடா நீ, நான் அவன் தான் என்னை அழ வச்சானு சொல்லாமல் எதுக்கு இப்ப நீ அடிக்கிற” என அழுகையை கட்டுப்படுத்திக் கேட்க,

 

அபிநவ் அடிவாங்கிய கன்னத்தை தேய்த்தவாறே ‘ஆமா எல்லாம் அடிச்சு முடிச்சதுக்கு அப்புறம் சொல்லு இத ஆரம்பிக்கும்போதே சொன்னா என்ன கேடு’ என மனதில் நினைத்துக்கொண்டே அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொள்ள,

 

“அப்போ என்னதான் டா  நடந்துச்சு எதுக்கு நடுரோட்டில் இப்படி அழுதுட்டு  வர?” என மித்ரன் அக்ஷாவிடம் பொறுமையாக வினவினான்.

 

பிறகு தன் தோழி வீட்டில் இருந்து ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்த போது ரோட் சைட் ரோமியோஸ் தன்னை கேலி செய்ததாகவும், அவர்களிடம் சண்டையிட்ட அபிநவை தன்னுடன் சேர்த்து வைத்து இழிவாக பேசியதாக கூறி அவள் மேலும் அழதுவங்க,

 

அவளை சமாதான படுத்தியவன் அபினவ் இடம் மன்னிப்பும் நன்றியும் கூறிவிட்டு இதற்கு மேல் தான் பார்த்துக் கொள்வதாக கூறியவன், அவனிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு வீடு நோக்கி வந்து கொண்டிருக்க, இப்போது நடந்த எதையும் விவேகனிடம் கூற வேண்டாம் என்ற மித்ரன் கடற்கரையில் நடந்தவற்றை சுருக்கமாக கூறி முடிக்க வீடு வந்து சேர்ந்தனர்.

 

அக்ஷா, விவேகனிடம் சிறு சிரிப்புடன் குளியலறை புகுந்து கொண்டாள்.

 

பிறகு விவேகன், தேவகியிடம் கூறி கொண்டு வீட்டிற்கு கிளம்ப மித்ரனும் அவனை பின் தொடர்ந்தான்.

 

தான் தென்றலிடம் பேசாமல் மித்ரன் தன்னுடன் பேச மாட்டான் என்று உணர்ந்த விவேகனும் எதுவும் பேசவில்லை.

 

இவர்களின் இந்த மௌனம் அவர்களின் குடும்பங்களையும் சேர்த்து பாதித்தது.

 

 

(தொடரும்)