அனல் பார்வை 02🔥

அனல் பார்வை 02🔥

தன் நண்பன் அறைந்த அறையில் கன்னத்தை பொத்திக் கொண்டு அக்னி அவனை அடிபட்ட பார்வை பார்க்க, ருத்ர மூர்த்தியாக நின்றிருந்தான் ராகவ்.

“என்னடா நினைச்சிக்கிட்டு இருக்க நீ? கொஞ்சமாச்சும் உனக்காக வாழுறவங்கள பத்தி யோசிச்சு பார்த்தியா? அடுத்தவங்கள விடு, என்னை பத்தி யோசிச்சு பார்த்தியா? அங்கிள்க்கு அப்றம் எனக்குன்னு இருக்குற ஒரே சொந்தம் நீ தான். ஏன்டா இப்படி முட்டாள் தனமா நடந்துக்குற?” என்ற ராகவ்வின் வார்த்தைகளில் அத்தனை வலி.

கலங்கிய கண்களுடன் தலை குனிந்தவாறு, “என்னை மன்னிச்சிரு ராகு, என்னால எதையும் அவ்வளவு சுலபமா மறக்க முடியல.” என்று அக்னி சொல்லி முடிக்கவில்லை. “ஷட் அப்! எதுவும் பேசாத” என்று கத்தினான் அவன்.

பின், தன்னை முயன்று ஆசுவாசப்படுத்தியவன், “ஆகு, ப்ளீஸ்டா இப்படி இருக்காதடா. ஒருவேள, இன்னைக்கு நான் வரல்லன்னா என்ன ஆகியிருக்கும்? என்னால நினைச்சி கூட பார்க்க முடியல. உனக்கு இப்படி இருக்க முடியலன்னா ஏதாச்சும் வெளில வேலைக்கு போ. உன் மனச திசைதிருப்ப நல்ல வாய்ப்பா இருக்கும்” என்று சொல்ல,

அடுத்தநொடி அவனை தாவி அணைத்து, “ராகு, நான் உன்னை கஷ்டப்படுத்துறதுக்கு என்னை எப்படி வேணா தண்டிச்சிக்கோ! ஆனா, வேலைக்கு மட்டும் போக சொல்லாத. எனக்கு பிடிக்கல. நான் இனி சமத்தா சாப்பிடுறேன்” என்று புலம்ப ஆரம்பித்தவனை ‘என்ன செய்தால் தகும்’ என்றிருந்தது ராகவ்விற்கு.

“டேய், உன்னையெல்லாம் திருத்தவே முடியாது. அதுவும் நீயெல்லாம்…” என்று சொல்லி ராகவ் நமட்டு சிரிப்பு சிரிக்க, அவன் வார்த்தைகளின் அர்த்தத்தை புரிந்துக் கொண்டவன் தன் நண்பனை பொய்யாக முறைத்து கோபமாக திருப்பிக் கொண்டான்.

எதேர்ச்சையாக திரும்பிய ராகவ், அங்கு அக்னி வரைந்திருந்த கிறுக்கல்  போலிருந்த ஓவியத்தை உற்று பார்த்தான். அதில் வரையப்பட்டிருந்த சின்னத்தை யோசனையாக பார்த்தவன், அக்னியின் பின்கழுத்திலிருந்த டாட்டூவை பார்த்துவிட்டு, “அக்னி, அது என்ன?” என்று புரியாமல் கேட்டான்.

‘அவன் எதை கேட்கிறான்?’ என்பதை புரிந்து கொண்ட அக்னி கண்களில் தீவிரத்துடன், “மனோவா ஓட சின்னம்” என்று சொல்ல, “அன்பிளீவபள் (Unbelievable)” என்று ராகவ் ஆச்சரியமாக சொன்னவாறு குளியலறைக்குள் புகுந்துக்கொண்டான்.

குளித்துவிட்டு வந்தவன் கட்டிலில் யோசனையாக அமர்ந்திருந்த அக்னியை பார்த்தவாறு, “யூ க்னோ வட் ஆகு, இன்னைக்கு ஷூட்டிங் செம்மையா இருந்திச்சி. அதுவும், இந்த மூவியோட கான்செப்ட் என்னன்னு சொல்லு, எல்-டேரேடோ த லொஸ்ட் சிட்டி ஆஃப் கோல்ட்” என்று அவனின் மனநிலையை மாற்றும் பொருட்டு சொல்ல,

அக்னியோ அதையெல்லாம் கண்டுக்காது, “ஜானு, எப்படி இருக்கா?” என்று கேட்டதில், வெளிப்படையாக தலையிலடித்துக் கொண்டான் அவன்.

“உன் ஆளுக்கென்ன? ஷேமமா இருக்கா. என்னை பார்த்ததும் கண்டுபிடிச்சிட்டான்னு நினைக்கிறேன். செட்ல வச்சி எல்லார் முன்னாடியும் மூக்காலயே முறைச்சிக்கிட்டு இருந்தா.” என்று அவன் சலிப்பாக சொல்ல, “என்னை மன்னிச்சிரு ராகு, என்னால தானே…” என்று சோகமாக சொன்னான் அக்னி.

“நீ ஏன்டா இவ்வளவு வெகுளியா இருக்க? அப்படி எல்லாம் எதுவும் இல்லை. அப்போ நீ அதை பண்ணலன்னா இப்போ அவ இப்படி ஒரு நிலைமையில இருந்திருக்க மாட்டா. என்ட், மிஸ்டர்.ஆதிகேஷவன்” என்று ராகவ் அழுத்தி செல்ல,

சில நினைவுகள் நினைவலைகளில் சுழல, ‘ஏன் தான் போனேனோ?’ என்று இரண்டாயிரத்து இருபது தடவையாக நினைத்துக் கொண்டான் அக்னி.

“ஜானு என் மேல ரொம்ப கோபத்துல இருப்பால்ல?” என்று அவன் கேட்டதில் வாய்விட்டு சிரித்த ராகவ், “கன்ஃபோர்ம்! என்னையாச்சும் முறைச்சதோட விட்டா. நீயெல்லாம் அவ கையில சிக்கின சட்னி தான். அதுவும், அருவி பத்தி உனக்கே நல்லா தெரியும். மெடல்லின்ல குட்டி கேங் ஸ்டார் மாதிரி. இப்போ என்னை கண்டுட்டால்ல? ஐ திங், இப்போவே உன்னை பத்தி இன்ஃபோர்மேஷன் போயிருக்கும்” என்று சிரித்தவாறு சொன்னான்.

அதேசமயம்,

அந்த ஆளுயர கண்ணாடி முன் தன் ஆடையை கழற்றியவள், தன் கழுத்திற்கு கீழ் மார்பின் மேல் வரைந்திருந்த டாட்டூ முகத்தையே சிறிதுநேரம் பார்த்திருந்தாள். கண்ணீர் பலவீனம் என்று நினைத்திருப்பாள் போலும்!

முயன்ற வரை கண்ணீரை கட்டுப்படுத்தியவளின் இதழ்களோ கோபத்தில் துடிக்க, கண்களோ கோபத்தின் உச்சியில் கோவைப்பழம் போல்  சிவந்திருந்தன. அடுத்தகணம் தன் மனதில் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க, உடையை மாற்றி அந்த பெரிய மண்டபத்திற்குள் நுழைந்தாள் அவள்.

அந்த மண்டபத்தில் ஒரு பக்க சுவரையே ஆக்கிரமித்திருந்த அந்த புகைப்படத்தில் தன் கோபம் தீரும் அளவிற்கு அம்பு எய்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் அருவி.

ஒவ்வொரு அம்பும் அந்த புகைப்படத்திலுள்ள முகத்திரையை குத்திக் கிழித்தது. அதை பார்க்கும் போது ஒரு பக்கம் வேதனையிலிருந்து தன்னை ஆசுவாசப்படுத்த முடிந்தாலும், மறுபக்கம் அவனை உயிருக்கு மேல் காதலித்த அவளால் தன்னவனின் விம்பத்தை காயப்படுத்துவது கூட மனதின் ரணத்தை மேலும் அதிகரிப்பது போலிருந்தது.

களைத்து போய் தரையிலே மண்டியிட்டு அமர்ந்த அருவி, தனக்கெதிரே இருந்த அந்த புகைப்படத்தை பார்த்து, “மஹி…” என்று அந்த மண்டபமே அதிரும் வண்ணம் கத்தினாள்.

அடுத்தநாள்,

எப்போதும் போல் ராகவ் பரபரப்பாக தயாராகிக் கொண்டிருக்க, சட்டென தன் முன் அரவம் உணர்ந்து நிமிர்ந்து பார்த்தான்.

அக்னியோ டிப்டாப்பாக தயாராகி அவன் முன் முழங்கை சட்டையை மடித்தவாறு நின்றிருக்க, அவனை இருபுருவங்களையும் உயர்த்தி கேள்வியாக பார்த்தவாறு, “எங்க கிளம்பிட்ட அக்னி?” என்று புரியாமல் கேட்டான் அவன்.

“உன் கூட தான் ராகு, ஷூட்டிங்க்கு…” என்று அசால்ட்டாக சொன்ன அக்னியை இடுப்பில் கை குற்றி முறைத்து பார்த்தவன், “திஸ் இஸ் டூ மச் ஆகு. என்னால உன்னை அங்கெல்லாம் கூட்டிட்டு போக முடியாது. என்ன தான் நீ சார்க்கு ஹெல்ப் பண்ணியிருந்தாலும், வெளியாளுங்கள அனுமதிக்க மாட்டாங்க”

ஆம்! சில மாதங்களுக்கு முன்  இந்த படத்திற்குரிய தயாரிப்பாளரின் மகள் கொலம்பியாவில் வைத்து சில காமுகன்களில் கையில் சிக்கிய போது அந்த பெண்ணை அவர்களிடமிருந்து மீட்டெடுத்ததே அக்னி தான். அதற்கு பிரதிஉபகாரமாக தானோ என்னவோ? ராகவ்விற்கு இந்த படத்தில் துணை ஒளிப்பதிவாளராக வாய்ப்பு கொடுத்ததும், அக்னியையும் தங்கள் குழுவுடனே லோஸ் ஏன்ஜல்ஸ்ஸிற்கு வர அனுமதித்ததும்.

ஆனாலும், அவர்களுக்கும் சில கட்டுப்பாடுகள் இருக்கும் அல்லவா? அதை தான் ராகவ் அக்னிக்கு புரிய வைக்க முயன்றான். ஆனால், அவன் கேட்டால் தானே!

“முடியவே முடியாது. நானும் வருவேன்” என்று சிறுபிள்ளை போல் அடம்பிடித்த அந்த வளர்ந்த குழந்தையை திட்ட கூட முடியவில்லை ராகவ்வால்.

இருவரும் சிறுவயதிலிருந்து நண்பர்கள் அல்ல. சொல்லப்போனால், நான்கு வருடத்திற்கு முன் தான் ராகவ் அக்னியை முதன் முதலில் சந்தித்ததே… பெற்றோர்கள் இல்லாது தாய்மாமன் கூடவே தனிமையில் வளர்ந்த ராகவ், அக்னியை ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்க, நண்பனுக்கு மேலான உறவாக தான் அவனை நினைத்தான்.

கிட்டதட்ட ராகவ்விற்கு அக்னி குழந்தை போல தான். அக்னியும் அப்படி தான். சின்ன சின்ன விடயங்களுக்கும் ராகவ்வை தான் எதிர்ப்பார்ப்பான். ராகவ்வும் அவனை தனிமையில் எங்கேயும் விடாது தன்னுடனே வைத்திருக்க, அக்னிக்கு எல்லாமுமாக மாறிப் போனான் அவன்.

“நீ எதுக்கு இப்படி சொல்றன்னு எனக்கு நல்லாவே தெரியும் ஆகு. பட், என்னால உன்னை கூட்டிட்டு போக முடியாது. அருவியால நீ ஹேர்ட் ஆகிருவன்னு எனக்கு பயமா இருக்கு. நீ வீட்லயே இருந்து ஓவியம் வரை! இல்லைன்னா, உனக்கு தான் மெழுகு பொம்மை செய்றதுல ஆர்வம் ஜாஸ்தியாச்சே… அதை பண்ணிக்கிட்டு இரு. அவ்வளவு தான்” என்று காட்டமாக உரைத்துவிட்டு ராகவ் தனது பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

ஆனால், வாசல் கதவு வரை தான் சென்றிருப்பான். மனது கேட்காது சற்று நின்று அக்னியை திரும்பிப் பார்க்க, உதட்டை பிதுக்கிக் கொண்டு நின்றிருந்தவனை பார்த்ததும் ‘அய்யோ’ என்றிருந்தது ராகவ்விற்கு.

அவனின் முக வாட்டத்தை பார்க்க முடியாமல், “சீக்கிரம் வா…” என்று கடுப்பாக சொல்லிவிட்டு அவன் முன்னே செல்ல, “ஹிஹிஹி…” என்று மொத்த பல் வரிசையையும் காட்டி சிரித்தவாறு அவன் பின்னாலே ஓடினான் அக்னி.

படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அக்னியை அழைத்து வந்த ராகவ், இந்த படத்துடன் சம்மந்தப்பட்ட சில முக்கியமான நபர்களிடம் நாக்கு தள்ள தள்ள ஆங்கிலத்தில் பேசி, போராடி தன் நண்பனை உள்ளே அழைத்து வர அனுமதி வாங்கினான். ஏனோ, அந்த தயாரிப்பாளரும் அக்னி மேல் கொண்டிருந்த மதிப்பில் சில பேச்சு வார்த்தைகளின் பின் சம்மதித்து விட்டார்.

ராகவ்விற்கு அப்போது தான் ‘ஹப்பாடா!’ என்றிருக்க, அக்னியோ தன்னவளின் வரவை எதிர்நோக்கி காத்திருந்தான். அவனை ஓர் இடத்தில் நிற்க வைத்த ராகவ், தன் வேலைகளை கவனிக்க சென்றிருக்க, அங்கிருந்த பல பேரின் கண்கள் அக்னியை தான் மொய்த்தன.

அவனின் குணத்திற்கு பொருத்தமே இல்லாத அவனின் ஆஜானுபாகுவான போர் வீரன்  போலான தோற்றம், பின்னால் குடும்பியிட்டும் அடங்காத அவனின் அடர்ந்த கேசம் என்பன பார்ப்போரை ரசிக்க வைக்க, அவனின் காந்தம் போலான கண்களில் ஈர்க்கப்படாதவர் எவருமில்லை எனலாம். 

முறுக்கிய மீசை, அடர்ந்த தாடி என பார்க்க ஒரு ஓவியன் போலான தோற்றத்தில், புடைத்து கிளம்பிய நரம்புகள் வெளியே தெரிய மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியவாறு அக்னி நின்றிருக்க, அந்த படத்திற்கான கதாநாயகனை விட இவன் தான் நாயகனோ? என்று நினைக்குமளவிற்கு இருந்தது அவனின் கம்பீர அழகு.

நாயகி தனக்கான அறையில் தயாராகிக் கொண்டிருப்பதாக சொன்ன அடுத்த சில நிமிடங்களிலே வந்தாள் இந்த கதையின் நாயகியும், இந்த திரைப்படத்தின் நாயகியுமான தீ அருவி.  கிட்டதட்ட மூன்று வருடங்கள் கழித்து அவளை நேரில் சந்திக்கின்றான்.

கண்கள் கலங்க, அவன் இதழ்களோ “ஜானு” என்று முணுமுணுத்தது. தான் பேச வேண்டிய வசனங்களை பார்த்தவாறு வந்தவளுக்கு ஏதோ உள்ளுணர்வு உந்த, அடுத்தகணம் அவளின் கண்கள் அவளையும் மீறி எதையோ தேடி அலைந்தன.

மன உந்துதலில் அவள் கண்களை சுழலவிட, அவளின் பார்வை வட்டத்தில் விழுந்தான் அக்னி. அவனை பார்த்தவளுக்கு முதலில் அதிர்ச்சி, பின் ஒருவித ஏக்கம், பின் வலியினால் உண்டான கோபம் என அவளின் முக பாவனைகள் மாறிக் கொண்டே சென்றன.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவளின் கண்களில் வந்து போன ஏக்கத்தில் உயிருடனே மரித்த உணர்வு.

வேதனை சுமந்த பார்வையுடன் அவன் அவளை பார்க்க, கோபத்தில் பற்களை நரநரவென கடித்தவள் தன்னை ஆசுவாசப்படுத்த படாத பாடுபட்டுத்தான் போனாள். முயன்று தன்னை கட்டுப்படுத்தி அந்த காட்சியை நடிக்க முயன்றவளுக்கு அதை இயல்பாக நடிக்க முடிந்தால் தானே!

அவளுடைய கண்கள் தானாகவே அக்னி இருக்கும் இடத்தை நோக்க, எப்போதும் ஒரே டேக்கில் நடித்து முடித்து பாராட்டு பெறும் நடிகை இன்று தடுமாறுவதில் ஒருசிலர் புரியாமல் பார்க்க, சில பேர் அவளருகில் சென்று நலம் விசாரித்தனர்.

“நோ… நோ… ஐ அம் ஓகே. ஐ அம் ரெடி…” என்று அவளுடைய உதடுகள் சொன்னாலும், அவளால் அந்த காதல் காட்சிகளை நடிக்கவே முடியவில்லை. மனம் ஏனென்று தெரியாது பிசைய, அந்த கதாநாயகனும் அவளின் கண்களில் எதையோ தேடி அது கிடைக்காது, பெருவிரலை தலைகீழாக காட்டி ‘இல்லை’ என்ற ரீதியில் தலையாட்டினான்.

 

அருவியோ அதையெல்லாம் கண்டுக்காது மீண்டும் அக்னி இருந்த இடத்தையே நோட்டம் விட்டாள். ஆனால், அக்னி அங்கு இல்லாது போக, தன்னை மீறி கண்களை சுழலவிட்டு அங்குமிங்கும் தேடியவள் பின்னரே தான் செய்யும் காரியத்தை உணர்ந்து தன்னை தானே நொந்துக் கொண்டாள்.

தன் தொழிலின் புறம் தன் கவனத்தை செலுத்தி ஒரே டேக்கில் அந்த காட்சியை அவள் நடித்து முடிக்க, அங்கிருந்தவர்களுக்கு அப்போது தான் ‘ஹப்பாடா!’ என்றிருந்தது. முண்ணனி நடிகையான அவளை திட்டுவதிலும் அவர்களுக்கு ஒரு தயக்கம்!

நடித்து முடிக்க வேண்டிய காட்சிகளை நடித்து கொடுத்து விறுவிறுவென தன் அறைக்குள் நுழைய போனவள், பின்னாலே வந்த தன் மேலாளரை முறைத்து பார்த்து, “யூ இடியட்! ப்ளீஸ் லீவ் மீ அலோன்” என்று ஆக்ரோஷமாக கத்திவிட்டு செல்ல, அந்த மேலாளரும், அங்கிருந்தவர்களும் தான் அவளின் கோபத்தில் எச்சிலை விழுங்கிக் கொண்டனர்.

இது ஒன்றும் முதல்தடவை அல்ல. காட்சிகளை நடிக்கும் போது பல உணர்வுகளை தன் முகத்தில் பிரதிபலிப்பவள், மற்ற நேரங்களில் இறுகிய முகமாகவே இருப்பாள். அவளுடன் நடிக்கும் நாயகர்கள் கூட அவளின் எட்ட நிறுத்தும் பார்வையில் அவளை நெருங்குவதில் சற்று தயங்க தான் செய்வர்.

அந்த துரோகத்திற்கு பிறகு தன் கனவை அடைந்திருந்தாலும், மனதில் வெறுமை படர, சிரிப்பையே தொலைத்திருந்தாள் அந்த நடிகை.

ஒப்பனை அறைக்குள் நுழைந்தவளின் மனம் தீம்பிழம்பாக கொதித்தாலும், அவனை பார்த்ததும் அவன் பக்கம் சாய துடிக்கும் தன் மனதை அடக்க தெரியாது தலையை தாங்கிக் கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டாள்.

ஏன்டா ஏன் மறுபடியும் என் எதிர்ல வந்து நிக்கிற? உன்னை என் உயிரா காதலிச்சதை தவிர நான் என்ன டா தப்பு பண்ணேன்? எங்க உன் மேல இருக்குற கோபத்துல உன்னையே காயப்படுத்திருவேனோன்னு பயத்துல தானே டா எனக்குள்ள நானே இறுகிப் போயிருக்கேன்.’ என்று தனக்குள்ளே புலம்பியவளின் கண்களில் கண்ணீர் தான் இல்லை.

ஆனால்,

அங்கிருந்து வெளியே வந்தவனின் கண்களோ கண்ணீரிலே நிரம்பியிருந்தது. மனம் முழுக்க வலிகள் நிறைந்திருக்க, ஒரு தூணில் சாய்ந்து நின்றுக் கொண்டவன், தனக்கு எதிரே விளம்பர பதாகையிலிருந்த தன்னவளின் புகைப்படத்தையே கன்னத்தில் கண்ணீர் கோடுகள் ஓட, கண்களில் காதல் மிதக்க பார்த்துக் கொண்டிருந்தான்.

இருவரின் உணர்வுகளையும் சரியாக புரிந்துக் கொண்டது என்னவோ ராகவ் தான். இருவரும் நேருக்கு நேர் பார்க்கும் போது ஒருநொடி பொழுதில் அருவியின் கண்களில் தோன்றிய காதலையும், ஏக்கம் கலந்த அக்னியின் பார்வையையும் கணடுக் கொண்டவனுக்கு தன் நண்பர்களை நினைத்து வேதனையாக தான் இருந்தது.

 

-ஷேஹா ஸகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!