அனல் பார்வை 03🔥

அடுத்த நாள்,

அன்று காலையிலேயே சேன்டா மோனிகா கடற்கரையில் படப்பிடிப்பு நடக்கவிருக்க, பல கேமராக்கள், உபகரணங்களுடன் ஆட்கள் அங்குமிங்கும் சுழன்று வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்த திரைப்படத்தின் கதாநாயகர்கள், கதாநாயகிகளுக்காக சில பேர் காத்திருக்க, வெட்ட வெளியில் எடுக்கப்படும் படப்பிடிப்பு என்பதால் பல ரசிகர்கள் சுற்றி இருந்து ஆர்வமாக பார்த்திருந்தனர். அதில் அக்னியும் உள்ளடக்கம் தான்.

சரியாக, அந்த பெரிய கருப்பு நிற பென்ஸ் காரில் வந்திறங்கினாள் அருவி. கேரேவனில் இவர்களின் ஆடை தொடக்கம் ஒப்பனை வரை எல்லாமே தயாராக இருக்க, விறுவிறுவென கேரேவனை நோக்கி சென்றவளை ரசிகர்கள் சூழாமல் இருப்பதற்காக  நான்கைந்து காவலர்கள் சுற்றி நின்றிருந்தனர்.

இதில் அக்னியோ ஆட்களுடன் பேசியவாறு சென்ற தன்னவளை எட்டி எட்டி பார்க்க முயற்சித்தான். காரிலிருந்து இறங்கும் போதே அவனை கவனித்திருந்தவள், அவன் மீது ஒரு தடவை அழுத்தமான ஒரு பார்வையை பதித்துவிட்டு, கண்டும் காணாதது போல் சென்றாள்.

கேரேவனிற்குள் அருவி நுழைந்ததும் விரக்தியாக புன்னகைத்துக் கொண்டவன், எடுக்கப்படும் காட்சிகளை பார்ப்பதற்கென இயக்குனருக்கு எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கேமராவின் பக்கத்தில் போய் நின்றுக் கொண்டான்.

அடுத்த ஒரு மணிநேரத்தில் தயாராகி, தான் பேச வேண்டிய வசனங்களை கேட்டவாறே அருவி நடந்து வர, திடீரென்று ஏற்பட்ட சலசலப்பில் நிமிர்ந்த அக்னி முதலில் அதிர்ந்து பின் சங்கடமாக தலையை திருப்பிக் கொண்டான். காரணம், அருவி அணிந்திருந்த ஆடை அப்படி!

பாதி கிழிந்தும் கிழியாததும் போலான அந்த ஆடை அவள் உடலமைப்பை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்ட, அக்னிக்கோ அவளை பார்ப்பதிலே ஒருவித சங்கடமாகத் தான் இருந்தது. அதை கண்டுக் கொண்டவள் ஏளனச் சிரிப்புடன் அந்த காட்சியை நடிக்க தயாராக நின்றுக் கொள்ள, அந்த காட்சி முத்த காட்சியாக போனது வேறு அக்னியின் கெட்ட நேரமாகிப் போனது.

அந்த திரைப்பட கதாநாயகனிடமும், அருவியிடமும் காட்சியை விபரித்துவிட்டு தனக்கான இருக்கையில் அமர்ந்த இயக்குனர், “ரெடி… டேக்… ஆக்ஷன்…” என்று மைக்கில் சொன்னதும், அடுத்தநொடி அந்த கதாநாயகன் அருவியின் இடையை வளைத்து பிடித்து, தன்னை நோக்கி இழுத்தான்.

அருவியை காதலாக பார்த்தவாறே இதழில் அவன் முத்தமிட செல்ல, அக்னிக்கோ கண்கள் கோபத்தில் கோவைப்பழம் போல் சிவந்தது.  அதை பார்க்க முடியாமல் தன்னையும், அருவியையும் பதட்டத்தோடு பார்த்துக் கொண்டிருந்த ராகவ்வை தான் முறைத்தான் அவன்.

ராகவ்விற்கு தான் தெரியுமே! இதற்கு முன் அருவி நடித்திருந்த ஒரு படத்தில் வந்த முத்தக் காட்சியை வீட்டிலிருந்து பார்த்த சமயம் உண்டான கோபத்தை அடக்க வழித்தெரியாது வீட்டிலிருந்த மொத்த பொருட்களையும் அக்னி தூக்கி போட்டு உடைத்தது.

அக்னி எந்தளவு மென்மையோ அதை விட அதிகமாக அனலாக கொந்தளிப்பான் என்று அறிந்தே வைத்திருந்தான் அவன் நண்பன்.

இங்கு அருவியோ இந்த துறையில் இந்த மாதிரியான விடயங்கள் சகஜம் என்று நினைத்திருந்ததாலே இதற்கு முன்னரான படங்களில் வந்த முத்தக் காட்சிகளை மனதில் எந்தவித சலனமுமின்றி சாதாரண ஒரு வேலையாக செய்து முடித்திருந்தாள்.

ஆனால் இன்று, அவளால் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அந்த கதாநாயகன் முத்தமிட வரவும் அவனிடமிருந்து தடுமாறியபடி விலகியவள், ஓரக்கண்ணால் அக்னியை தான் பார்த்தாள்.

பக்கவாட்டாக முகத்தை திருப்பி, நரம்புகள் புடைத்து கிளம்ப, கை முஷ்டியை இறுக்கிப் பிடித்தவாறு அவனிருந்த தோற்றமே அவனின் கோபத்தின் அளவை பறைசாற்றியது.

இயக்குனரோ அவள் விலகியதில், “கட்… கட்…” என்று கத்தியவாறு அருவியின் அருகில் வந்து விசாரிக்க, அக்னியை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவள், ராகவ்வின் புறம் திரும்பி கண்களால் எச்சரிக்கையை விடுத்தாள்.

அவளின் கண்களில் தெரிந்த எச்சரிக்கையை புரிந்துக் கொண்டவன், அனுமதி கேட்டு தன் நண்பனை நோக்கி தான் ஓடினான். அவனருகில் வந்த ராகவ், அக்னியின் கையை இறுகப் பற்றிக்கொள்ள, அவனோ எதுவும் பேசாது மணலையே வேறித்தவாறு நின்றிருந்தான்.

அவனுடைய அமைதியே ராகவ்விற்கு ‘ஹப்பாடா!’ என்றிருக்க, அவனை இழுத்துக் கொண்டு வந்து தங்கள் படக்குழுவினருக்கு சொந்தமான வேனில் ஏற்றியவன், “ஆகு, இங்கேயே இரு. ஷூட்டிங் முடிஞ்சதும் சாப்பிட போகலாம்” என்றுவிட்டு செல்ல,  கோபத்தில் முகம் சிவந்து பற்களை கடித்தவண்ணம் அமர்ந்திருந்தான் அக்னி.

தன்னவன் சென்றதை கவனித்தவள், இயக்குனரிடம் தலையசைத்துவிட்டு காட்சியை கச்சிதமாக நடித்துக் கொடுத்தாள். அடுத்தடுத்தென்று அங்கு எடுக்கப்பட வேண்டிய காட்சிகளை எடுத்து முடியவும் களைப்பாக தனக்கான கேரேவனிற்குள் நுழைந்தாள் அவள்.

அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தவளின் இதழ்கள் அக்னியின் கோபத்தை பார்த்து கேலியாக வளைந்து, பின் ‘எல்லாமே போலி… வேஷம்…’ என்று எண்ணி விரக்தியாக சிரித்துக்கொண்டன.

இங்கு படக்குழுவினர் ஒன்றாக சேர்ந்து சாப்பிட, அங்கிருப்பவர்களுக்கு அக்னியை அறிமுகப்படுத்திய ராகவ், சற்று தள்ளி அவனை அழைத்து வந்து சாப்பிட அமர்ந்தான்.

அக்னியோ இறுகிய முகமாக அமர்ந்திருக்க, அவனின் உணர்வுகளை புரிந்துக்கொண்டவன், “ஆகு, சினிமாவுல இதெல்லாம் சகஜம். நான் உன்கிட்ட முன்னாடியே சொல்லியிருக்கேன். இதை அவங்களோட தொழிலா மட்டும் தான் பார்ப்பாங்க. இதெல்லாம் போய் பெருசா எடுத்துக்கிட்டு…” என்று சலிப்பாக நிறுத்த,

“எனக்கும் அவளுக்கும் இடையில என்ன உறவு இருக்குன்னு உனக்கு நல்லாவே தெரியும். அப்றம் எப்படி என்னால அமைதியா இருக்க முடியும்? நீ சொல்றது எனக்கு புரியுது. இந்த துறையில இதெல்லாம் சகஜம், தொழிலா மட்டும் தான் அதை பார்க்கனும். ஆனா, என்னால பொறுத்துக்க முடியல” என்ற அக்னி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அருவிக்கான கேரேவனை தான் பார்த்தான்.

அதேநேரம் அவளும் தன் கையிலிருந்த தங்க நிற கைக்காப்பை வருடியவாறு ஜன்னல் வழியே அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் தன்னவளை காண படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு செல்பவன், படப்பிடிப்பை கவனிப்பானோ, இல்லையோ? தன்னவளையே இமைக்காது பார்த்திருப்பான். அவளோ தன்னவனின் பார்வையை உணர்ந்தாலும் அவனை ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டாள்.

சில படப்பிடிப்புகள் லோஸ் ஏன்ஜல்ஸ்ஸின் பல இடங்களில் எடுத்து முடிக்கப்பட்டு, இந்த படத்தின் கருவான தங்க நகரத்திற்காக அந்த படக்குழுவினர் இயற்கை வளங்கள் சூழ்ந்த ஏன்ஜல்ஸ் நேஷனல் ஃபோரஸ்ட் இடத்தை தெரிவு செய்திருந்தனர்.

அந்த இடத்தில் அடுத்தடுத்தென்று படப்பிடிப்புகள் தொடர்ந்து நடக்க, அதன் இயற்கை எழிலில் லயித்துப் போனான் அக்னி என்று தான் சொல்ல வேண்டும்.

கடந்த நான்கு வருடங்களாக தொழிநுட்பத்தின் உச்சத்தை தொட்ட நகரத்திலேயே ராகவ்வுடன் இருந்தவனுக்கு இந்த மாதிரியான இயற்கை வனப்புக்களை பார்ப்பது அரிதாகித் தான் போனது. இன்று படப்பிடிப்புக்காக படக்குழுவினர் இந்த மாதிரியான ஒரு இடத்தை தெரிவு செய்ததில் அவனுக்கு ஒரே குஷி தான்.

ஆனால், அக்னியை ஒவ்வொரு படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அழைத்து வருவதற்காக ஒவ்வொருவரிடமும் அனுமதி வாங்கி, கெஞ்சி, கூத்தாடுவதில் ராகவ் தான் நொந்து போனான்.

அன்று,

அந்த தங்க நகரத்தில் தன் பதவியை ஏற்க வேண்டிய தலைவி ஒரு கட்டத்தில் தன் காதலை தியாகம் செய்து, பதவியை ஏற்பது போலான ஒரு காட்சி பல உபகரணங்களின் மத்தியில் படமாக்கப்பட்டது.

அதை உணர்ச்சி துடைத்த முகத்துடன் அக்னி பார்த்துக் கொண்டிருந்தான் என்றால், அருவியோ ஒருவித எரிச்சலில் பல்லை கடித்துக் கொண்டாள்.

அந்த தங்க நகரத்தின் தலைவியாக அந்த காட்சியை நடித்த அருவியின் நடிப்பில் மின்ன வேண்டிய  நிமிர்வு, மிடுக்கு என்பவை அவளிடத்தில் பொதிந்திருந்தமை கண்டு வியந்து போனான் அவளவன்.

அக்னியின் இதழ்கள் உறைந்த புன்னகையுடன் விரிந்து இருக்க, ‘ஓஹோ! இதுக்கு பேர் தான் கோ இன்சிடென்ட் ஆ?’ என்று இருவரையும் மாறி மாறி பார்த்தவாறு ஆச்சரியப்பட்டுக் கொண்டான் ராகவ்.

அந்த காட்சியை நடித்துவிட்டு களைப்பாக அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவளுக்கு அவளின் மேலாளர் குளிர்பானத்தை கொண்டு வந்து கொடுக்க, எப்போதும்  போல் ஒரு தூணில் சாய்ந்தவாறு அவளையே பார்த்தவாறு நின்றிருந்தான் அக்னி.

அவன் பார்வையை உணர்ந்துக் கொண்ட அருவி, தனக்குள் ஒரு திட்டத்தை தீட்டி கேலியாக இதழை வளைத்தாள். நிமிர்ந்து அவனை ஏளனமாக பார்த்தவாறு தன் கையிலிருந்த குளிர்பானத்தை அவள் கீழே  போட்டு உடைக்க, அந்த சத்தத்தில் மொத்த பேருமே அத்திசையை நோக்கி திரும்பினர்.

இது போன்ற வேலைகளுக்கென நியமிக்கப்பட்டவர்கள் அவசர அவசரமாக அதை சுத்தம் செய்ய ஓடி வர, அவர்களை கை நீட்டி தடுத்தவள், அக்னியை ஒரு விரலால் சுட்டிக் காட்டி, உடைந்திருந்த கண்ணாடி துண்டுகளை கண்களால் காட்டினாள்.

அக்னியோ முதலில் அதிர்ந்து பின் புன்னகையுடன் அவளை நோக்கி செல்ல, அருவியின் இச்செயலில் அங்கிருந்த படக்குழுவினர் அதிர்ந்தாலும் கண்டும் காணாதது போலிருந்தனர். ஆனால், ராகவ் தான் பொங்கி விட்டான்.

அக்னியின் அருகே வேகமாக வந்து அவனின் கையை இறுக்கிப் பிடித்த ராகவ், அருவியை முறைத்தவாறு ‘வேண்டாம்’ என்று தலையாட்ட, அவனின் பிடியிலிருந்து கையை உதறினான் அவன்.

“மூனு வருஷத்துக்கு அப்றம் என் ஜானு ஒன்னு பண்ண சொல்லியிருக்கா. ப்ளீஸ் ராகு…” என்றுவிட்டு விறுவிறுவென அக்னி செல்ல, ராகவ்விற்கு தான் ‘அய்யோ… அய்யோ…’ என்று எங்கேயாவது போய் முட்டிக் கொள்ளலாம் போலிருந்தது.

உடைந்த கண்ணாடி துண்டுகளின் அருகில் வந்தவன், அதை எந்தவித முகச் சுழிப்புமின்றி சுத்தம் செய்ய, இத்தனை நேரம் ‘அவனை காயப்படுத்தி விட்டோம்’ என்ற வெற்றிக் களிப்பில் விரிந்திருந்த அருவியின் இதழ்கள் தன்னவனின் இதழில் கண்ட புன்னகையை பார்த்ததும் சுருங்கி கொண்டது.

அவனோ நிமிர்ந்து அவளை பார்த்து ஒற்றை கண்ணை சிமிட்டி புன்னகைக்க, அதில் பற்களை நரநரவென கோபத்தில் கடித்தவள், அவனை எரிக்கும் பார்வை பார்த்தவாறு கேரேவனுக்குள் புகுந்துக் கொண்டாள்.

அவளின் விசித்திர செய்கையில் சிலர் புரியாமல் பார்த்தார்கள் என்றால், அக்னியோ உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.

“உன் ஆளு ரொம்ப தான். பெரிய ஹீரோயின்னு நினைப்பு! எவ்வளவு தைரியம் இருந்தா என் கண்ணு முன்னாடியே உன்னை இந்த மாதிரி வேலை வாங்குவா?” என்று ராகவ் கோபத்தில் கத்த,

“அவ குழந்தை மாதிரி ராகு. பாசத்துக்காக ரொம்ப ஏங்குறா. என்னை காயப்படுத்தனும்னு சின்னபுள்ள தனமா நடந்துக்குறா. கிட்டதட்ட அவளோட மனநிலை ஒரு குட்டி குழந்தையோட மனநிலையோட ஒத்திருக்கு. அவளை நான் ரொம்ப காயப்படுத்திட்டேன். என் ஜானுவ பத்தி உனக்கு தெரியாதா என்ன?”

என்று மென்மையாக புன்னகைத்தவாறு சொன்னவனின் குரலில் காதல் அருவி அப்பட்டமாக வழிந்து ஓட, அவனின் பேச்சை கேட்ட ராகவ்விற்கு தான் சிரிப்பதா? அழுவதா? என்றே தெரியவில்லை.

 

-ஷேஹா ஸகி