அனல் பார்வை 06🔥

அனல் பார்வை 06🔥

மூன்று வருடங்களுக்கு முன்,

கொலம்பியாவின் மெடல்லின் நகரத்தில்,

கண்ணை பறிக்கக்கூடிய பல வடிவமைப்புக்களிலான கட்டிடங்கள் எழுப்பப்பட்டு, தொழிநுட்பத்தின் உச்சத்தில் இருக்கும் அந்நகரத்தின் வீதியோரங்களிலுள்ள கடைகளையும், அங்கிருக்கும் மக்களையும் கார் கண்ணாடி வழியாக பார்த்தவாறு அக்னி வர, அவனை அடிக்கடி ஓரக்கண்ணால் பார்த்தவாறு அமர்ந்திருந்தான் ராகவ்.

ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் அந்த அமைதியை கலைத்த ராகவ், “உனக்கு ஒன்னு தெரியுமா? நான் பிறந்தது இந்தியாவுல தமிழ்நாட்டுல தான். பட், வளர்ந்தது எல்லாம் இங்க தான். பத்து வயசா இருக்கும் போதே இங்க வந்துட்டேன். இந்த ஊர் உனக்கு பிடிச்சிருக்கா மிஸ்டர்…” என்று அக்னியின் பெயர் தெரியாது கேள்வியாக இழுக்க,

புருவத்தை சுருக்கி அவனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்த அக்னி, எதுவும் பேசாது முகத்தை திருப்பிக்கொள்ள, ‘க்கும்!’ என்று நொடிந்துக் கொண்டான் அவன்.

ராகவ்வின் சிறிய வீட்டின் முன் வண்டியை நிறுத்தவும் இறங்கியவன் ஓட்டுனரிடம் பயணத்திற்கான பணத்தை செலுத்திவிட்டு அக்னியை பார்க்க, அவனோ அசையாது அப்படியே அமர்ந்திருந்தான்.

‘ஸப்பாஹ்ஹ்…’ என்றவாறு ராகவ்வே கார்கதவை திறந்து அவனை இறங்க சொல்ல, சுற்றி முற்றி பார்த்தவாறே இறங்கிய அக்னி தன் முதல் அடியை அங்கு வைக்க, அவனவளோ அங்கிருந்த இரண்டு தெருக்கள் தள்ளியிருந்த ஒரு பப்பில் மூக்கு முட்ட குடித்து ஒருவரை சரமாரியாக திட்டிக்கொண்டிருந்தாள்.

‘பாப்கட்’ எனப்படும் குட்டையாக வெட்டப்பட்ட சிவப்பு கலரிங் செய்யப்பட்ட கேசம், காதில் அடுக்கடுக்காக குத்தியிருந்த கம்மல், கையில் கழுத்தில் என ஏகப்பட்ட டாட்டூஸ் என ‘அவள் தமிழ்பெண் தான்’ என்று சூடத்தில் அடித்து சத்தியம் செய்தாள் கூட யாரும் நம்ப மாட்டார்கள்.

தன் கையிலிருந்த மதுகுவளையை காலி செய்து, அதை ‘கணீர்’ எனும் சத்தத்தில் மேசையில் வைத்து, “வன் மோர்…” என்று அடுத்த சுற்றுக்கு தயாரானாள் தீ அருவி.

போதை உச்சத்தை தொடும் அளவிற்கு மது அருந்தியவள், எப்போதும் போல் தன் புலம்பலை ஆரம்பித்துவிட்டாள்.

“ஏய்… அவ யாரு எனக்கு சான்ஸ் கொடுக்க? டூ யூ க்னோ, வூ அம் ஐ? வருங்காலத்துல சினிமாத்துறையில கலக்கப்போற ஒரு ஹீரோயின். எனக்கு வாய்ப்பு கொடுன்னு நான் போய் கேட்டேனா என்ன? அதான் அவ புருஷன் தொலைஞ்சு போனதுக்கு நான் தான் காரணம்னு என்னை தலை முழுகிட்டாளே… நான் என்ன வேணா பண்ணிட்டு போறேன், எப்படி வேணா கெட்டு குட்டிச்சுவராட்டம் போறேன். என் வாழ்க்கையை முடிவு பண்ண அவ யாரு? இல்லை சொல்லு, அவ யாரு?”

என்று அருவி திட்டிக் கொண்டிருப்பது வேறுயாரையும் அல்ல, அவளின் அம்மா மோகனாவை தான்.

அவளின் புலம்பலை கேட்டுக்கொண்டே அவளுக்கு மது ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்த ஸ்யானியன் பேரருக்கு அவள் பேசும் தமிழ் சுத்தமாக புரியவில்லை என்றாலும், தினமும் கேட்கும் அதே புலம்பலை இன்றும் கேட்கும் அவனுக்கு அவளை பார்க்க பாவமாகத் தான் இருந்தது.

அவளும் போதையின் உச்சத்தில் மட்டையாகி அந்த மேசையின் மேலே கவிழ்ந்துவிட, ‘உஃப்ப்ப்…’ என்று பெருமூச்சுவிட்ட அந்த ஸ்பானியன், “அரு… அரு…” என்று எழுப்ப முயற்சித்தான். அவளோ அசையாது மயக்கத்தில் இருக்க, அடுத்தநொடி ஒரு எண்ணிற்கு தான் அழைப்பை எடுத்தான்.

இது தினமும் நடக்கும் கூத்து தான் என்று தெரிந்தாலும், ஏதோ அன்று தான் அவள் முதன் முதலில் மதுவை தொட்டது போல் அடுத்த பத்து நிமிடங்களிலே பதட்டத்துடன் உள்ளே வந்தான் தாரக்.

அவளை கைத்தாங்கலாக தாங்கிக்கொண்டு வெளியே வந்தவன், காரின் பின்சீட்டில் அவளை படுக்க வைத்து கடவுளை மானசீகமாக வேண்டிக் கொண்டான். அவனுக்கு தான் தெரியுமே, வீடு போய் சேரும் வரை அவள் விடாது புலம்பும் வார்த்தைகள்!

ஒவ்வொரு நாளும் அருவி பப்பிற்கு வருவதும், மட்டையாகுவதும், அவளை பார்த்துவிட்டு அந்த ஸ்பானியன் தாரக்கிற்கு அழைப்பதும், அவனும் முதல்தடவை நடப்பது போலவே ஓடிவந்து அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்வதும், தன் பெரியம்மாவின் கண்ணில் சிக்காமல் அவளை அவளின் அறையில் கொண்டு போய் சேர்ப்பதுமாக  இதுவே தினசரி வாடிக்கையாகிப் போனது.

அடுத்தநாள்,

‘இவன் பெயர் கூட நமக்கு தெரியல. எழுந்துட்டான்னா, இல்லையா? வீட்டுக்குள்ள வந்ததும் இந்த ரூம்க்குள்ள போனவன் தான், வெளியவே வரல்ல. ஒரு வார்த்தை கூட பேச மாட்டேங்குறானே…’ என்று ராகவ் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்க,

சரியாக அக்னியின் அறையிலிருந்து ‘ஆஆ…’ என்று கத்தும் சத்தம் கேட்க, பதறியேவிட்டான் அவன்.

அடித்துபிடித்து ஓடிய ராகவ், அறைக்கதவை தள்ளிக் கொண்டு, “என்னாச்சு?  என்னாச்சு?” என்று பதறியபடி உள்ளே சென்றான்.  அங்கு அக்னியோ ராகவ்வை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் ‘ஆஆ…’ என்று கத்த, ராகவ் தான் பயந்து சுவரோடு  ஒட்டிக்கொண்டு மிரட்சியாக அவனை பார்த்தான்.

சிலநொடிகள் இவ்வாறு தொண்டை கிழிய கத்தியவன், ஆழ்ந்த மூச்சுக்களை விட்டு ராகவ்வை அழுத்தமாக பார்த்தவாறு, “அக்னி” என்று சொல்ல, ராகவ்வோ ‘ஙே’ என புரியாமல் அவனை பார்த்தான்.

அவனின் புரியாத பாவனையில் தன் நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு நின்றவன், “மீ நொம்ப்ரே எஸ் அக்னி(என்னுடைய பெயர் அக்னி)” என்று சொல்ல, அவனுடைய ஆளுமையான குரலில் வியந்து தான் போனான் அவன்.

ஆனாலும் வாய்விட்டே, “ஓஹோ! இவன் ஸ்பானிஷ் ஆ? தமிழ் தெரியாது போல… அதான் நாம பேசுறது புரியாம இருந்திருக்கான்” என்று அவன் முணுமுணுக்க, “எனக்கு தமிழ் தெரியும்” என்ற அக்னியின் குரலில் திடுக்கிட்டு விட்டான் ராகவ்.

ராகவ் அவனை உற்றுப்பார்க்க, ‘ஆஆ…’ என்று அக்னி மீண்டும் கத்த ஆரம்பித்ததில் மிரண்டு போனவன், “பைத்தியமா இவன்…?” என்று புலம்பியவாறு தனது அறைக்கு ஓடியே விட்டான்.

இங்கு அருவியின் வீட்டில்,

தொலைப்பேசியை நோண்டியவாறு அறையிலிருந்து வெளியே வந்த அருவி, தனதறைக்கு எதிரே இருந்த அறை திறக்கும் சத்தத்தில் மீண்டும் தன் அறைக்குள் ஓடி ஒழிந்துவிட்டாள்.

அடுத்த சில நொடிகள் கழித்து கதவை திறந்தவள் கதவிடுக்கின் வழியே தலையை மட்டும் வெளியே போட்டு எட்டிப்பார்க்க, அவளின் அறை வாசலிலிருந்து வாயைப் பொத்தி சிரித்துக் கொண்டிருந்தான் தாரக்.

அவனை முறைத்தவாறு வெளியே வந்து நின்றவள், “எங்க உன் பெரியம்மா? போயிட்டாங்களா?” என்று கேட்க, “அவங்க போய் பத்து நிமிஷம் ஆகுது” என்று சிரிப்புடன் சொன்ன தாரக், “ஏன் இப்படி பண்ற அரு? பெரியம்மா தான் அப்படி நடந்துக்குறாங்கன்னா நீயும் இப்படி இருக்கனுமா? கொஞ்சம் விட்டுக்கொடுத்து போகலாம்ல? அதுவும், உனக்கு தான் நல்ல வாய்ப்பு…” என்று புரிய வைக்க முயல, அவனை இடைவெட்டினாள் அருவி.

“ஷட் அப் யூ இடியட்! நான் அவங்க முன்னாடி வந்தாலே அந்த நாள் அவங்களுக்கு விளங்காம போயிரும் என்கிற அளவுக்கு பயப்படுவாங்க. அவங்ககிட்ட நான் என் சுயமரியாதைய இழக்கனுமா? நெவெர்! ஏன் இதையே போய் த க்ரேட் டிஸைனர் மிஸஸ்.மோகனா ஆதிகேஷவன்கிட்ட சொல்லு, உன்னை முறைச்சே நிலத்துல புதைச்சிருவாங்க” என்று திட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் அவள்.

‘உஃப்ப்ப்…’ என்று பெருமூச்சுவிட்ட தாரக்கிற்கு இருவரின் நடுவிலிருந்து சிக்கித்தவிப்பதே வேலையாகிப் போனது. நினைவு வரும் முன்னேயே தாய்தந்தையை இழந்தவன் தன் பெரியம்மாவிடமே வளர, அவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இன்றுவரை தன் அக்காவும், பெரியம்மாவும் பேசி என்ன? இருவரும் நேருக்கு நேர் பார்த்ததை கூட அவன் பார்த்ததில்லை.

ஆடை வடிவமைப்பு துறையில் மோகனாவின் ஏ.கே ஃபெஷன் டிஸைனிங் நிறுவனம் தான் அமெரிக்காவில் முண்ணனியில் திகழ்கின்றது. தனது கணவரின் மறைவுக்கு பிறகு அவர் தனக்காக உருவாக்கித் தந்த நிறுவனம் அதனை அசுர வேகத்தில் உச்சத்திற்கு கொண்டு வந்து, தற்போது திரையுலக பல பிரபலங்களுக்கு ஆடை வடிவமைப்பு செய்யும் அளவிற்கு அவருடைய நிறுவனம் வளர்ச்சியடைந்துள்ளது.

கிராமத்தில் பிறந்து, வளர்ந்ததாளோ என்னவோ? மூடநம்பிக்கைகளில் சற்று நம்பிக்கை கொண்டவர் அவர். திருமணத்திற்கு பிறகு தன் கணவருடன் அமெரிக்காவிற்கு வந்து குடியேறினாலும், ஏனோ அவரின் இந்த நம்பிக்கையே அவரை தன் மகளிடமிருந்து தள்ளி வைத்தது.

தனக்கு ஏற்பட்ட ஒரு இழப்பிற்கு பெற்ற மகளே காரணம் என்று ஒதுக்கி வைத்தவர், அருவியை பார்க்க என்ன? பேச கூட மாட்டார்.

அருவியும் ஆரம்பத்தில் அவரின் பாசத்திற்காக ஏங்கியவள், தன் சிறுவயதில் நடந்த ஒரு சம்பவத்திற்கு பிறகு அவர் முன் செல்வதையே தவிர்த்துக்கொண்டாள்.

லோஸ் ஏன்ஜல்ஸ்ஸிலே தனது நிறுவனத்தை நடத்திய மோகனா, ஒரு வருடத்திற்கு முன் தான் புது கிளை ஆரம்பிப்பது தொடர்பாக கொலம்பியாவிற்கு வர, கூடவே அருவியும் தன் நோக்கத்திற்காக அவர் பின்னாலே கொலம்பியாவிற்கு வந்துவிட்டாள். ஆங்கிலம், தமிழ் மொழிகளை மட்டுமே அறிந்திருந்த அவளுக்கு ஸ்பானிஸ் மொழி என்னவோ அரைகுறை தான்.

என்ன தான் இந்த கலாச்சாரத்தில் பிறந்து, வளர்ந்திருந்தாலும் தமிழ்நாட்டு உணவுகளின் மீது இருந்த பிரியத்தில் ‘மஹிமா’ என்ற பெண்மணியை அவர் தன் வீட்டில் வேலைக்கு வைத்திருக்க, அருவியை வளர்த்தது கூட அந்த பெண்மணி தான். அருவி இத்தனை அழகாக தமிழ் பேசுவதற்கு காரணம் கூட அவளின் இந்த மஹி தான்.

“மஹி…” என்று அழைத்துக் கொண்டு உணவு மேசையில் வந்து அருவி அமர, அரக்க பறக்க ஓடி வந்து அவளுக்கு உணவு பரிமாறியவரை முறைத்துப் பார்த்தாள் அவள்.

“எத்தனை தடவை சொல்லியிருக்கேன், பொறுமையா வாங்கன்னு…” என்று உரிமையாக கடிந்துக் கொண்டவாறு அருவி சாப்பிட ஆரம்பிக்க,

“அருவிமா, ஏன் மோகனாம்மா உங்களுக்கு வாங்கி கொடுத்த வாய்ப்பை வேணாம்னு சொன்னீங்க? அவங்க உங்க கூட பேசலன்னாலும் உங்களுக்காக தான் அந்த பெரிய டயரெக்டர்கிட்ட பேசி அந்த வாய்ப்பை எடுத்துக் கொடுத்திருக்காங்க” என்று பேசிக் கொண்டே சென்றவர் அருவி முறைத்த முறைப்பில் கப்பென்று வாயை மூடிக் கொண்டார்.

“உனக்கு தெரியாதா மஹி? நான் பிறந்ததிலிருந்து ஒருதடவை கூட அவங்க என்கிட்ட பாசமா பேசினதில்லை. அப்போ எதுக்கு இதெல்லாம்? யாரோட ரெகமென்டேஷன்லயும் எனக்கு எந்த வாய்ப்பும் வேணாம். என் திறமைக்கு கிடைக்குறது மட்டும் தான் எனக்கு நிரந்தரமா இருக்கும்” என்றவள் தன் அம்மா தன்னை கடந்து சென்றதை உணர்ந்தே கடைசி வசனத்தை சற்று சத்தமாகவே முணுமுணுத்தாள்.

மோகனாவுக்கும் தன் மகளின் வார்த்தைகள் காதில் விழுந்தாலும், கண்டும் காணாதது போல் வெளியே சென்றார்.

“அருவிமா, நேத்து ராத்திரி ரொம்ப அதிகமா குடிச்சிட்டீங்க. அம்மாவுக்கு கூட தெரியும். அதனால இன்னைக்காச்சும்…” என்று மஹிமா தயக்கமாக இழுக்க, சாப்பிட்டுவிட்டு எழுந்தவள், “ஐ வில் ட்ரை” என்று அவரின் கன்னத்தை கிள்ளிவிட்டு செல்ல, அவளை பரிதாபமாக பாத்தார் அவர்.

அடுத்த இரண்டு மாதங்கள் கழிந்த நிலையில்,

அன்று,

‘இவன் சுவருல ஏதேதோ படம் கிறுக்கி வைக்கிறானேன்னு ட்ரோவிங் போர்ட் வாங்கி கொடுத்தா, வீடு பூரா ஏதேதோ  வரைஞ்சி இப்படி சுவத்துல தொங்க விட்டிருக்கானே… கேட்டாலும் வாயில இருந்து ஒரு வார்த்தைய கூட வாங்க முடியாது. இன்னைக்கு இரண்டுல ஒன்னு பார்த்தாகனும்’  என்று அக்னியை மனதில் திட்டியவாறு அவனின் அறைக்குள் கோபமாக நுழைந்தான் ராகவ்.

உள்ளே சென்றவன் அங்கு அக்னி கண்ணை துணியால் கட்டிக்கொண்டு வரைந்துக் கொண்டிருந்த ஓவியத்தை பார்த்து வாயை பிளந்துவிட்டான். அந்த ஓவியத்திலிருந்த கண்களின் அழகு அப்படி! அத்தனை தத்ரூபமாக இருந்தது.

ராகவ்வின் வியப்பு கூட அந்த ஓவியத்தின் அழகினாளா? இல்லை… அதை கண்ணை கட்டிக்கொண்டு வரைந்த அந்த ஓவியனின் திறமையாளா? என்று அவன் தான் அறிவான்.

“வாவ்…!” என்று முணுமுணுத்தவாறு ராகவ் அதை வியந்து பார்த்துக் கொண்டிருக்க, கண்ணை கட்டியிருந்த துணியை அகற்றிய அக்னி தன் நண்பனை புன்னகையுடன் பார்த்தான்.

“நான் வெளில கிளம்புறேன் ராகு” என்று அக்னி சொல்ல, அவனின் தன்னை நோக்கிய அழைப்பிலும், முதல் முறை அவன் தன்னுடன் பேசியதிலும் கண்களை அகல விரித்தான் ராகவ்.

“ஓஹோ! உனக்கு சிரிக்க கூட தெரியுமா?” என்று கேலியாக கேட்டவன், “வேணாம் அக்னி, வீட்ல இரு! இது உனக்கு புது இடம்ல? நாளைக்கு நானே உன்னை வெளில கூட்டிட்டு போறேன்” என்று புரிய வைக்க, “இல்லை, நான் போகனும்” என்று அடம்பிடித்த அக்னியின் பிடிவாதத்திற்கு முன் ராகவ்வின் வார்த்தைகள் காற்றில் தான் பறந்தன.

அக்னி தயாராகி வெளியே எத்தனிக்க, “அக்னி” என்ற ராகவ்வின் அழைப்பில் சற்று நின்று திரும்பி அவனை கேள்வியாக பார்த்தான்.

“இந்த கண்ணு யாரோடது?” என்று ராகவ் சந்தேகமாக கேட்க, “தெரியல, இன்னைக்கு என்னோட கனவுல வந்திச்சு. என்னை பாதிச்ச கண்கள். அதான், ஆழ்மனசுல பதிஞ்ச கண்கள என் நிறங்களால வெளில கொண்டு வந்தேன்” என்ற அக்னியின் பார்வை அந்த கண்களில் அழுத்தமாக பதிந்தன.

ஷேஹா ஸகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!