அனல் பார்வை 07🔥

அனல் பார்வை 07🔥

வீதியோரங்களில் விற்கப்படும் உணவுப்பொருட்களையும், ஓவியங்களையும் வியப்பாக பார்த்தவாறு அக்னி நடந்துச் செல்ல, அதேநேரம் சில பேர் கையில் பதாதைகளை தாங்கிய வண்ணம் வீதியில் போராட்டம் செய்துக் கொண்டிருந்தனர்.

அந்த பதாதைகளில் எழுதியுள்ள ஆங்கில வார்த்தைகள் அவனுக்கு புரியவில்லை என்றாலும், தனக்கு பக்கத்தில் நின்றிருந்த சில ஸ்பானியர்களின் பேச்சு வார்த்தையை கேட்டவனுக்கு விடயம் புரிந்துவிட்டது. சட்டரீதியற்ற முறையில் அந்நாட்டுக்கு சொந்தமான விலங்குகள் வியாபாரத்துக்காக வெளிநாடுகளுக்கு விற்கப்படுவதை எதிர்த்தே அவர்கள் போராட்டம் செய்கிறார்கள் என்று…

அப்போது சரியாக வீதியோரத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு ஓவியம் அக்னியின் கண்ணுக்கு தென்பட்டது. அதை வாங்குவதற்காக ராகவ் வலுக்கட்டாயமாக தனக்கு செலவுக்கு கொடுத்த பணத்தை எடுத்தவன், அதை புரட்டி புரட்டி பார்த்துக் கொண்டிருக்க, சரியாக ஒரு பெண் அவன் கையில் வைத்திருந்த பணத்தை பிடுங்கி போராட்டம் நடந்துக் கொண்டிருந்த கூட்டத்தை நோக்கி ஓடினாள்.

பதறிய அக்னி, அவளை துரத்தி அவள் பின்னாலே ஓடி கூட்டத்திற்குள் நுழைய, அவன் கண்ணில் சிக்கினாள் அவள். வேகமாக அவளை நெருங்கியவன், அவளின் தோள் பற்றி தன்னை நோக்கி திருப்பி அவளின் சட்டை, காற்சட்டை பாக்கெட்டுக்களில் கையை விட்டு தன் பணத்தை தேடினான்.

அவனின் செய்கையில் அதிர்ந்த அருவி அவனை தள்ளிவிட்டு, அடுத்தகணம் அவன் கன்னத்திலே அறைந்து இருந்தாள்.

அக்னியின் பணத்தை திருடிச்சென்ற பெண்ணின் பின்புறதோற்றமும், அருவியின் பின்புறதோற்றமும் கிட்டதட்ட ஒரேபோல் இருந்ததே காரணம். கூட்டத்தின் நடுவில் தொண்டை கிழிய கத்திக் கொண்டிருந்த அருவியை தான் அந்த திருடி என்று தப்பாக புரிந்து, அவளிடம் அவ்வாறு நடந்துக்கொண்டு, அறையும் வாங்கிக் கொண்டான் அக்னி.

கன்னத்தை பொத்திக்கொண்டு அக்னி அவளை அதிர்ந்து நோக்க, அவனின் சட்டையை கொத்தாக பிடித்தவள், “ஹவ் டேர் யூ…” என்றவாறு அவனை எரிப்பது போல் பார்க்க, அங்கிருந்த மக்களோ போராட்டத்தை நிறுத்திவிட்டு அவர்களை வேடிக்கை பார்க்க தொடங்கினர்.

அக்னியோ அடக்கப்பட்ட கோபத்துடன் அமைதியாக நிற்க, “வூ த ஹெல் ஆர் யூ?” என்று உச்சகட்ட கோபத்தில் கத்தினாள் அருவி. தன் சட்டையிலிருந்த அவள் கையை உதறிவிட்டவன், அங்கிருந்து அவன் பாட்டிற்கு நகர போக, இதில் பிபி எகிறியது என்னவோ அவளுக்கு தான்.

‘என்னை கண்ட இடத்துல தொட்டது மட்டுமில்லாம இப்போ கண்டுக்காம அவன் பாட்டுக்கு போறான். எவ்வளவு திமிர்?’ என்று மனதில் நினைத்தவள், அவன் முன் வந்து வழிமறித்து நின்றவாறு, “எவ்வளவு தைரியம் உனக்கு? என்னையே தொட்டிருப்ப. உன்னை சும்மா விட மாட்டேன் டா. உன்னை…” என்று ஆங்கிலத்தில் ஆரம்பித்து கடைசி வசனத்தை தமிழில் சொன்னவாறு அவனை நெருங்க, அவளுக்கு தமிழ் தெரியும் என்பதை புரிந்துக் கொண்டான் அக்னி.

“என்னை மன்னிச்சிடுங்க” என்று அக்னி தமிழில் மன்னிப்பு கேட்டதில் முதலில் அதிர்ந்தாலும், பின் “ஓஹோ! தமிழ் தெரியுமா? எதுக்குடா என்னை தொட்ட?” என்று கத்தினாள் அவள்.

“நீ என்னோட பணத்தை திருடிடன்னு நினைச்சேன்” என்றவன் அவளின் தோளை பற்றி சற்று தள்ளி நிறுத்திவிட்டு அவளை கடந்துப் போக எத்தனிக்க, “ஓஹோ! அப்போ என்னை ச்செக் பண்ணதும் நான் திருடலன்னு புரிஞ்சிக்கிட்ட” என்று அருவி சண்டைக்கோழியாய் சீறினாள்.

அப்போதும் அவளை நிதானமாக ஏறிட்டவன், “இல்லைங்க, உங்க கண்ணுல பொய் தெரியல. இதுவே நீங்க திருடியிருந்தா உங்க கண்ணுல இருக்குற தடுமாற்றமே உங்கள காட்டிக் கொடுத்துரும்” என்றுவிட்டு விறுவிறுவென முன்னே நடக்க,

‘என்ன இவன்? நாம பேசிக்கிட்டு இருக்கோம். கொஞ்சம் கூட மதிக்காம போறான்’ என்று கடுப்பான நினைத்தவள், “பட், அதுக்காக எல்லாம் உன்னை விட முடியாது. என்னை தொட்டதுக்கு உன்னை என்ன பண்றேன் பாரு…” என்று அவனை நோக்கி கத்தியவாறு வேலியில் போகும் ஓணானை வேட்டியில் விட்ட கதையாக அவனை நெருங்கி,  அவனின் தோள் பற்றி இழுக்க,

திரும்பியவன் அவளை தன்னிடமிருந்து தள்ளியதில் சில அடிகள் பின்னோக்கி சென்று தரையில் விழுந்தாள் அவள்.

“ஓ ஷீட்!” என்று இடுப்பை பிடித்துக் கொண்டு அருவி நிமிர, அங்கு அக்னி இருந்தால் தானே! அவன் தான் அவளை தள்ளிவிட்ட மறுநிமிடமே அங்கிருந்து மின்னல் வேகத்தில் ஓடி விட்டானே!

“இடியட்! உன்னை விட மாட்டேன் டா. என்னை தொட்டது மட்டுமில்லாம என்னை தள்ளி வேற விட்டுடல்ல… உன்னை மறுபடியும் பார்த்தேன், அவ்வளவு தான் நீ… ஆஆஆ….” என்று உச்சஸ்தானியில் இல்லாத அவனை வறுத்தெடுத்தவாறு கோபத்தில் நிலத்தில் அடித்துக் கொண்டாள் அருவி.

இங்கு வீட்டிற்கு ஓடி வந்த அக்னி, வாசற்கதவை தாழிட்டு அதன் மேலே சாய்ந்து மூச்சு வாங்கியவாறு நின்றான்.

கதவை திறக்கும் சத்தத்தில் அறையிலிருந்து வெளியே வந்த ராகவ், “என்னாச்சு ஆகு?” என்று அவனின் சிவந்திருந்த கன்னத்தை பார்த்து பதறியபடி கேட்க, “அங்க ஒரு பொண்ணு நீ கொடுத்த பணத்தை திருடிட்டா, ஒரு பொண்ணு என்னை அடிச்சிட்டா” என்று அக்னி அரைகுறையாக சொன்ன கதையில் அதிர்ந்துவிட்டான் ராகவ்.

“என்ன அடிச்சிட்டாளா?! ஓ கோட்! இதுக்கு தான் அக்னி உன்னை வெளில தனியா போக வேணாம்னு சொன்னேன். ஆமா… ஒரு பொண்ணு பணத்தை திருடினா சரி… இன்னொரு பொண்ணு எதுக்கு உன்னை அடிச்சா?” என்று ராகவ் சந்தேகமாக கேட்க, திருதிருவென விழித்தவாறு நின்றான் அவன்.

அவனை கூர்மையாக பார்த்தவன், “என்ன பண்ண அக்னி?” என்று முறைப்புடன் கேட்க, “நான் எதுவுமே பண்ணல ராகு, அந்த பொண்ணு தான் என்னை சும்மா…” என்று பொய் சொன்னவன், முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டு திருட்டு முழி முழித்தான்.

‘இவனை நம்பலாமா? வேணாமா?’ என்று மனதிற்குள்ளேயே பட்டிமன்றம் நடத்தியவாறு மேலும் எதுவும் பேசாது ராகவ் அங்கிருந்து நகர, தன் அறைக்குள் வந்து ‘உஃப்ப்ப்…’ என்று பெருமூச்சுவிட்ட அக்னி, தான் வரைந்து வைத்திருந்த ஓவியத்தை பார்த்தான்.

அந்த ஓவியத்தில் உள்ள கண்களை பார்க்கும் போது இன்று தன்னை கோபத்துடன் நோக்கிய அவளின் கண்களை பார்ப்பது போலவே இருந்தது அவனுக்கு. ‘அந்த எரிக்கும் கண்களில் காதல் நிரம்பி வழிந்தால் எப்படி இருக்குமோ’ அப்படி ஒரு உணர்வுடன் இவன் அந்த கண்களை வரைந்திருந்தான்.

அந்த கண்களை லேசாக வருடிய அக்னிக்கு தான் வரைந்த, தன்னை கோபத்துடன் நோக்கிய அருவியின் கண்களை எங்கேயோ பார்த்த உணர்வை தோற்றுவிக்க, அதை அவனால் சரியாக புரிந்துக்கொள்ள தான் முடியவில்லை.

ஒரு வாரம் கழிந்த நிலையில்,

“ஆகு, இந்த ஊர்ல இருக்குறதுலயே இது தான் பெரிய மால். செம்மயா இருக்கு” என்று சொன்னவாறு அங்கிருந்த படிக்கட்டு மின்தூக்கியில் ராகவ் ஏறப் போக, அக்னியோ ஏறாது நின்றுக் கொண்டான்.

“என்னாச்சு அக்னி? நீ என்ன சின்னக்குழந்தையா? வா… அதான் நான் இருக்கேனே…” என்று ராகவ் அவனை இழுக்க, “என்னால முடியாது,  என்னை விடு ராகு” என்ற அக்னியை இழுப்பது என்ன? ஒரு இன்ச் கூட நகர்த்த முடியவில்லை ராகவ்வால்.

கொஞ்சி, மிரட்டி, அதட்டி, உருட்டி என  ராகவ் அக்னியிடம் மன்றாடிக் கொண்டிருக்க, அவனோ ‘வர முடியாது’ என அலுச்சாட்டியம் செய்துக் கொண்டிருந்தான்.

அதேநேரம் சரியாக கையில் டின் குளிர்பானத்தை குடித்தவாறு அழைப்பொன்றை பேசிக் கொண்டு வந்தவளின் கண்களில் வேறு சிக்கிக்கொண்டான் அவன்.

அவனை உற்றுப்பார்த்த அருவி, சரியாக அவனை அடையாளங் கண்டுக்கொள்ள, அடுத்தநொடி ‘வசமா சிக்கிட்டான்’ என்று மனதில் கருவியவாறு ஷர்ட் கையை மடித்து ஏற்றி விட்டவாறு அக்னியை நோக்கி விரைந்தாள்.

“ராகு, நான் விழுந்துருவேன். என்னால முடியாது. வீட்டுக்கு போகலாம் வா…” என்று அக்னி அடம்பிடிக்க, சட்டென்று தன் முகத்தில் விசிறியடித்த குளிர்பானத்தில் திடுக்கிட்டு போய்விட்டான். அக்னியின் முகத்தில் தன் கையில் வைத்திருந்த குளிர்பானத்தை அருவி ஊற்றிருக்க, அவளின் செயலில் ராகவ் அதிர்ந்து விட்டான்.

“யூ இடியட்…” என்றவாறு அருவியை அடிப்பது போல் ராகவ் செல்ல, முகத்திலிருந்த குளிர்பானத்தை ஒரு கையால் துடைத்தவாறு, மறுகையால் ராகவ்வின் கையை பிடித்துக்கொண்ட அக்னி அப்போது தான் அவளை பார்த்தான்.

பார்த்ததும் அதிர்ந்தவன் ராகவ்வை பார்த்துவிட்டு திருதிருவென விழிக்க, “என்னடா? என்னை என்னன்னு நினைச்ச? நீ ஓடிட்டா நான் விட்டுருவேனா… தொலைச்சிருவேன்” என்று அருவி ஒற்றை விரலை நீட்டி மிரட்ட, ராகவ்வோ தன் நண்பனை தான் புரியாது பார்த்தான்.

அக்னியோ அவன் புறம் சற்றும் பார்வையை திருப்பாது வேறு எங்கோ பார்ப்பது போல் பாவனை செய்ய, அவனை முறைத்துப் பார்த்தவன், “என்ன பண்ண அக்னி? இந்த பொண்ணு ஏன் உன்கிட்ட இப்படி நடந்துக்குறா?” என்று அழுத்தமாக கேட்டான்.

கேலியாக இதழை வளைத்த அருவி, “ஓஹோ! சார் சொல்லல்லயா? உன் ஃப்ரென்டா இவன்? அன்னைக்கு என்னை திருடின்னு நினைச்சி கண்ட கண்ட இடத்துல தொட்டது மட்டுமில்லாம, என்னை தள்ளி விட்டுட்டு ஓடிட்டான் இடியட்” என்று பல்லைக்கடித்துக் கொண்டு சொல்ல,

ராகவ்வோ இடுப்பில் கைக்குற்றி அவனை முறைக்க, “இல்ல ராகு, அவங்க பொய் சொல்றாங்க. அந்த திருட்டுப்பொண்ணு போல இவங்க இருந்தாங்களா! அதான் என் பணம் இருக்கான்னு பார்த்தேன். அதுக்கப்றம் மன்னிப்பு கேட்டும் போக விடாம வழிமறிச்சி பிரச்சனை பண்ணாங்க. என் தோள் மேல வச்ச கைய நான் எடுத்து தான் விட்டேன். அவங்க தூரமா போய் விழுந்துட்டாங்க” என்று அக்னி மனப்பாடம் செய்ததை ஒப்பிப்பது போல் படபடவென ஒப்பித்தான்.

“அது தான் உங்க ஊருல கைய எடுத்து விடுறதா?” என்று ஒருவித ராகத்தில் இழுத்து கேட்ட அருவி, ஒற்றை விரலை நீட்டி மிரட்டுவது போல் ஆட்டிவிட்டு திரும்பி நடக்க போக, எதிர்பாராது கால்தடுக்கி கீழே விழப்போனாள்.

மின்னல் வேகத்தில் அவளை தாங்கிபிடித்த அக்னி, ஒரு வாரமாக தன் மனதை அரித்த கேள்விகளுக்கு அவளின் கண்களில் விடையை தேடினான். முதலில் அதிர்ந்தவள், பின் அவனிடமிருந்து துள்ளிக் குதித்து விலகி அவனை முறைத்தவாறு அங்கிருந்து நகர, ராகவ்வோ தன் நண்பனை தான் கூர்மையாக பார்த்திருந்தான்.

“சோரி ராகு, என்னால தான் பிரச்சனை ஆகிட்டு. நான் தான் தப்பு பண்ணேன்” என்ற அக்னி “இதுக்கு பனிஷ்மென்ட் வேணாமா?” என்ற ராகவ்வின் குரலில், “பனிஷ்மென்ட்னா என்ன?” என்று ஒரு கேள்வியை கேட்டு வைத்தான்.

தலையிலடித்துக் கொண்டவன் அக்னியின் கையை பிடித்து, “நீ பண்ண தப்புக்கு தண்டனை. இப்போ நீ என்கூட இதுல வர்ற” என்றவாறு அவனை பிடித்து இழுக்க, “முடியாது…” என்று மீண்டும் அதே பல்லவியை பாட ஆரம்பித்து அந்த இடத்தையே ஒருவழி செய்துவிட்டான் அக்னி.

அடுத்த வந்த நாட்கள் அக்னியும், அருவியும் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு அமையமே இல்லை. அப்படி சொல்வதை விட, ‘அருவி தன்னை பார்த்துவிடுவாளோ?’ என்று வீட்டை விட்டு வெளியவே செல்லவில்லை நம் ஹீரோ என்று சொல்லலாம்.

இவ்வாறு சில நாட்கள் கழிந்து,

“வாட்! நீ அந்த தங்க நகரத்துக்கு போயிருக்கியா? த எல்-டேரேடோ…” என்று ராகவ் அதிர்ச்சியாக கேட்க,

“போகல்ல, அவங்ககிட்ட மாட்டிக்கிட்டேன். ஆனா, அந்த நகரத்தோட பெயரு மனாஓ” என்ற அக்னியை குறையாத அதிர்ச்சியுடன் பார்த்திருந்தான் அவன் நண்பன்.

ஷேஹா ஸகி✌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!