அனல் பார்வை 08🔥

அனல் பார்வை 08🔥

“வாட்! நிஜமாவே நீ அந்த தங்க நகரத்துக்கு போயிருக்கியா? அது தானே எல் டேரேடோ…?” என்று ராகவ் அதிர்ந்து கேட்க,

“போகல்ல, அவங்ககிட்ட மாட்டிக்கிட்டேன். அதுமட்டுமில்ல, அந்த நகரத்தோட பெயர் மனோவா” என்ற அக்னியை அதிர்ந்து பார்த்தான் அவன் நண்பன்.

“என்ன இழவோ…” என்று முணுமுணுத்த ராகவ், “அக்னி, தட்ஸ் இம்போஸிபள். அப்படி ஒரு நகரமே கிடையாது. என் மாமா ஒரு எக்ஸ்ப்ளோரர். அவரும் அதை பத்தின உண்மைய கண்டுபிடிக்க தான் இரண்டு வருஷமா முயற்சி பண்றாரு. பட், அதெல்லாம் உண்மை கிடையாது.” என்று மறுத்து உறுதியாக சொல்ல,

“பார்க்க முடியாதது எல்லாம் பொய்யாகாது ராகு. பல வருஷமா அந்த நகரத்துக்குள்ள இருந்தேன். நீ என்னை பார்த்த அன்னைக்கு தான் அங்க இருந்து வெளில வந்தேன். அவங்களோட ரகசியம் தெரிஞ்ச யாரையும் அவ்வளவு சீக்கிரம் வெளில விட மாட்டாங்க” அழுத்தமாக சொன்னான் அக்னி.

“ஓ கோட்! ஆகு, மொதல்ல நீ யாரு? ஒருவேள, நீ சொல்ற மாதிரி இதை பத்தின தேடல்ல போயி தான் நீயும் அவங்ககிட்ட மாட்டிக்கிட்டியா?” என்று படபடவென கேட்டவன் பின் ஏதோ யோசித்து, “ஆகு, நீயும் எக்ஸ்ப்ளோரர் தானா?” என்று சந்தேகமாக கேட்டான்.

உலகத்துல மறைஞ்சிருக்க புது புது விஷயங்களை தேடுவதும், மர்மங்களை கண்டறிவதுமே ஒரு எக்ஸ்ப்ளோரர் ஓட நோக்கமா இருக்கும். நானும் ஒரு எக்ஸ்ப்ளோரர் தான், உலகத்தை அறிய நினைக்கிற நீயும் ஒரு எக்ஸ்ப்ளோரர் தான்’ என்ற ஒருவரின் வார்த்தைகள் அக்னியின் காதுகளில் ஒலிக்க, சற்று நேரம் ஏதோ யோசித்தவன், நிமிர்ந்து ராகவ்வை அழுத்தமாக பார்த்தவாறு, “அப்படியே வச்சிக்கோ ராகு” என்று புன்சிரிப்புடன் சொன்னான்.

‘ஙே’ என முழித்துப் பார்த்த ராகவ் பின் ஏதோ யோசித்து, “ஆகு, உனக்கு சுத்தமா இங்லீஷ் தெரியாது. ஸ்பானிஷ் என்ட் தமிழ் நல்லாவே பேசுற. இங்க இருந்து ஸ்பானிஷ் பேசுறது ஆச்சரியம் கிடையாது. பட் தமிழ்…?” என்று கேள்வியாக இழுக்க,

அந்த ஒரு முகம் தான் அக்னியின் மனக்கண் முன் தோன்ற, அவனுடைய இதழ்கள் தானாகவே விரிந்தன.

“ஒரு நல்ல உள்ளத்துக்கிட்ட கத்துக்கிட்டேன் ராகு. இதுமட்டுமில்ல, இன்னும் நிறையவே…” என்று பெருமையாக சொன்னவாறு அக்னி எழுந்துச் செல்ல போக,

“ஆகு, நீ சொல்றதை வச்சி பார்த்தா அந்த நதிக்கு அந்த பக்கமா போனா அந்த நகரத்தை கண்டுடிக்கலாம். யூ க்னோ வட்? அதை மட்டும் கண்டுபிடிச்சிட்டா நம்ம நிலைமையே வேற… உனக்கு வழி தெரியும்னா நாம…” என்று ராகவ் உற்சாகமாக கூறியவாறு ஏதோ சொல்ல வர, பக்கத்திலிருந்த கண்ணாடி குவளையை சுவற்றில் விட்டெறிந்தான் அக்னி.

“இதுக்கப்றம் இப்படி பேசின… உன் தலைய நான் அறுத்துருவேன் ராகு” என்ற அக்னியின் குரலில் ஸ்தம்பித்து நின்றுவிட்டான் அவன்.

“எல்லா தேடல்களும் பாதுகாப்பானது இல்லை. அதுவும், மனோவா பத்தின தேடல் ரொம்ப ஆபத்து. ஒன்னு உன்னை கொன்னுடுவாங்க. இல்லை, அவங்களோட கைதியா வச்சிருப்பாங்க. மர்மமா இருக்குற நிறைய விஷயங்கள் மனுஷங்களுக்கு பயந்து தான் தன்னை வெளிப்படுத்தாம இருக்குதோ என்னவோ?” என்றுவிட்டு சற்று நிறுத்தியவன்,

“அனுபவத்துல சொல்றேன். அதை கண்டுபிடிக்கனும், போகனும்னு கனவுல கூட நினைக்காத” என்று இறுகிய குரலில், இறுகிய முகமாக சொல்ல, அக்னியின் இந்த தோற்றம் ராகவ்விற்கு புதிது தான்.

இத்தனை நாள் தனக்கு வெகுளியாக தெரிந்தவனின் இந்த தோற்றத்தில் ராகவிற்கே உள்ளுக்குள் சற்று குளிர் பரவத் தான் செய்தது.

அருவியின் வீட்டில்,

மாடிப்படிகளில் துள்ளிக் குதித்து இறங்கி வந்த அருவி, சோஃபாவில் பல காகிதங்கள், பத்திரிகைகளை புரட்டி புரட்டி பார்த்துக் கொண்டிருந்த தாரக்கை புரியாது பார்த்தவாறு வந்தமர்ந்தாள்.

‘இவன் என்னதை இம்புட்டு தீவிரமா பார்த்துக்கிட்டு இருக்கான்?’ என்று யோசித்தவாறு அவனின் கையிலிருந்த காகிதத்தை அவள் எட்டிப் பார்க்க, அடுத்தநொடி அவளின் முகம் இறுகிப் போனது.

அவளின் இதழ்கள், “எல் டேரேடோ” என்று முணுமுணுக்க, கோபத்தில் அவளின் பால்நிற முகம் சிவந்து போயிருந்தது.

அரவம் உணர்ந்து திரும்பி பார்த்த தாரக், அருவியின் முகம் கோபத்தில் சிவந்திருப்பதை பார்த்து சற்று பதறத் தான் செய்தான். அவளின் கைகளை பிடித்தவன் அதில் அழுத்தம் கொடுக்க, கண்களை மூடி திறந்து தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள் அருவி.

“அப்பா பத்தி ஏதாச்சும் தகவல் கிடைச்சதா?” என்று எப்போதும் கேட்கும் அதே கேள்வியை அவள் கேட்க, ‘இல்லை’ என்ற ரீதியில் தலையசைத்த தாரக், “அவர பத்தி தெரியல. ஆனா, எல் டேரேடோ பத்தி நிறையவே தகவல் கிடைச்சிருக்கு. ஐ திங் இது உனக்கு ரொம்பவே யூஸ் ஆகும். ஐ மீன்… பெரியப்பாவ கண்டுபிடிக்க…” என்று சொல்ல, அவளும் அந்த காகிதங்களை புருவத்தை நெறித்தவாறு பார்த்தாள்.

“பெரியப்பா இப்போ அந்த நகரத்துக்குள்ள இருக்காருன்னு நீ வேணா நம்பாம இருக்கலாம். ஆனா, எனக்கு நம்பிக்கை இருக்கு. ஏன்னா, கிட்டதட்ட ஐநூறு வருஷத்துக்கு முன்னாடி ஜோ என் மார்டினெஸ்னு ஒருத்தர் இதே தங்க நகரத்துக்குள்ள மாட்டிக்கிட்டு வெளில வந்திருக்காரு.

அவர் இறக்கும் போது கூட அதை பத்தி சொல்லியிருக்காரு. அந்த ஒரு வார்த்தைய நம்பியே அதுக்கப்றம் நிறைய பேர் அதை தேடி அலைஞ்சிருக்காங்க” என்று தாரக் சொல்லி முடிக்கவில்லை. அதை குறிக்கிட்டாள் அவள்.

“மிஸ்டர்.ஆதி கேஷவன் என்ன அந்தளவுக்கு முட்டாளா?” என்று கேலியாக கேட்ட அருவி, ‘மேல சொல்லு’ என்ற ரீதியில் பார்க்க, இருபக்கமும் சலிப்பாக தலையாட்டிக் கொண்டான் அவன்.

“அந்த காலத்துல பல மன்னர்கள் கூட தேடி அலைஞ்சிருக்காங்கன்னு சொல்லியிருக்காங்க. சில பூர்வகுடி மக்கள் கூட… இன்ஃபேக்ட், எக்ஸ்ப்ளோரர் வால்டர் கூட இதை பத்தின தேடல்ல போய் அவரோட மகன இழந்திருக்காரு. ஒருபக்கம் அந்த நகரத்து மக்கள் கொன்னதா சொல்றாங்க. இன்னொரு பக்கம் ஸ்பானியர்கள் தான் கொன்னதா சொல்றாங்க. ஆனா…” என்று தாரக் இழுக்க,

“அவங்க சொல்லியிருக்காங்க,  இவங்க சொல்லியிருக்காங்க. இதை மட்டும் தான் நீ சொல்ற. பட், இது உண்மைன்னு எந்த சரியான ஆதாரமும் இல்லை. என்னை பொருத்தவரைக்கும் இந்த தேடல்ல ஒன்னு இறந்து போறாங்க. இல்லைன்னா, அதை தேடி தேடியே பைத்தியம் ஆகுறாங்க.” என்று கேலித் தொனியில் சொல்லி முடித்தாள்.

“அரு, பெரியப்பா அதுக்காக தான் தன்னோட வாழ்க்கையையே அர்ப்பணிச்சாரு. இப்போ வரை அவர் இறந்துட்டாருன்னு சொன்னாலும், அவரோட உடல காட்டுல கண்டுபிடிக்கவே முடியல. அதேமாதிரி இத்தனை வருஷம் ஆகியும் அவர் திரும்பி வர்றாதப்போவே உன்னால புரிஞ்சிக்க முடியல்லையா? கண்டிப்பா அந்த நகரத்துக்குள்ள தான் பெரியப்பா இருக்கனும்” என்று தாரக் சொல்ல,

“புல் ஷீட்! இங்க பாரு, அப்பா அதை தேடி போனதால தான் அதை பத்தின தகவல் கேட்டேன். ஏன்னா, அப்போ தான் என்னால அவர தேட முடியும். அவர கண்டுபிடிக்க தான் உன் பெரியம்மா கூட நானும் இங்க வர வேண்டியதா போச்சு” என்று சலிப்பாக சொன்னாள் அருவி.

“ஏதாச்சும் சினிமா சான்ஸ் கிடைச்சதா அரு? நீ மறுபடியும் லோஸ் ஏன்ஜல்ஸ்க்கு போனதும் சினிமால ட்ரை பண்ணி பார்க்கலாம்ல? அதுவும், நீ இப்படி அங்க இங்கன்னு கொஞ்ச பணத்துக்கு வேலை பார்க்குறது பெரியம்மாவுக்கு சுத்தமா பிடிக்கல” என்று அவன் சொல்ல,

“ஐ டோன்ட் கெயார். அவங்க பணம் எனக்கு தேவையில்ல. ஒருபக்கம் மிஸ்டர்.ஆதிகேஷவன தேடிக்கிட்டே, சினிமாவுல எனக்கு ஏதாச்சும் வாய்ப்பு கிடைக்குமான்னு பார்த்துகிட்டு இருக்கேன். இன்னொரு பக்கம் என் பணத்தேவைய தீர்த்துக்க கிடைக்குற வேலைய பார்க்குறேன்” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளின் தொலைப்பேசி அலறியது.

அழைப்பை ஏற்றவள் மறுமுனையில் சொன்ன செய்தியில் கைப்பேசியை நழுவ விட்டு, அடுத்தகணம் அடித்து பிடித்து அந்த வைத்தியசாலையை நோக்கி ஓடினாள்.

அங்கு உயிரற்ற உடலாக மஹிமா இருக்க, “மஹி…” என்று அவருடைய உடலை பார்த்து அழுது கரைந்தவளை  பார்த்த எல்லாருக்குமே கண்கள் கலங்கிவிட்டது.

வெளியில் சென்றிருந்த மஹிமா வீதியை கடக்கும் போது எதிர்பாராது வாகனம் மோதி அந்த இடத்திலே உயிரை விட்டிருக்க, அவருடைய தொலைப்பேசியில் அவசர எண்ணில் அருவியின் எண் இருந்ததால் உடனே அருவிக்கு தகவலை சொல்லியிருந்தனர்.

விடயம் கேள்விப்பட்டு பதட்டத்துடன் வந்த மோகனாவுக்கு கூட மஹிமாவின் சடலத்தை பார்த்ததும் அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது. அதை கட்டுப்படுத்திக்கொண்டு இருந்தவருக்கு சில நினைவுகளும் மனக்கண் முன் ஓடியது.

ஆதிகேஷவன் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே அமெரிக்காவில் தான். மோகனாவோ கிராமத்தில் பிறந்து, வளர்ந்து கல்லூரி படிப்பிற்காக நகரத்தில் வந்து படித்துக் கொண்டு இருந்தவர். ஆதிகேஷவன் மோகனாவை திருமணம் செய்து லோஸ் ஏன்ஜல்ஸ்ஸிற்கு அழைத்து வந்த போது அவருக்கு உதவியாக அமர்த்தப்பட்டவர் தான் மஹிமா.

அந்த சமயம் கணவனை இழந்து விதவையாக இருந்த மஹிமாவுக்கு இவர்கள் செய்த உதவி அலப்பறியது. ஆதிகேஷவன் இறந்த செய்தி கேள்விப்பட்ட போது மோகனா அப்போது தான் அருவியை பெற்றெடுத்திருக்க, குழந்தையின் முகத்தை கூட பார்க்காது ஒதுக்கி வைப்பவரையும், அந்த பிஞ்சு குழந்தையையும் பார்த்து பார்த்து கவனித்தது அவர் தான்.

அருவியின் ஒவ்வொரு தேவைக்கும் மஹிமா வேண்டும். காலையில் அவளுக்கு ஆடை தெரிவு செய்வதிலிருந்து, இரவு குடிக்கும் பால் வரை ஒவ்வொன்றுக்கும் அவரையே அவள் நாட, இன்று தன் வளர்ப்பு தாயின் இறப்பை ஏற்றுக் கொள்ள முடியாது கதறியழுதுக் கொண்டிருந்தாள் அந்த பாவை.

“மஹி, ஏன் இப்படி இருக்க? உனக்கு ஒன்னு இல்ல. நான் என்னை விட்டு உன்னை போக மாட்டேன். ப்ளீஸ், என்னை பாரு! இனி நான் சமத்தா வீட்ல இருப்பேன். நீ சொல்ற ஒவ்வொன்னையும் கேட்டு நடந்துப்பேன். இனி ஸ்மோக் பண்ண மாட்டேன். ட்ரிங்க் பண்ண மாட்டேன். நைட் சீக்கிரம் வந்துருவேன். ப்ளீஸ், என் கூட இரு…

எனக்குன்னு பாசம் காட்ட நீ மட்டும் தான் இருக்க. நீயும் என்னை விட்டு போயிராத. அம்மா, அப்பா பாசம் எதுவுமே தெரியாத எனக்கு உன் பாசத்தை அள்ளி கொடுத்துட்டு இப்படி பாதியிலே விட்டு போகாத” என்று அருவி அந்த அறையே அதிரும் வண்ணம் கதறி அழ, தாரக் தான் அவளை தேற்ற ஆறுதலாக அணைத்துக் கொண்டான்.

மோகனாவோ இறந்து கிடந்த மஹிமாவின் உடலை கண்கலங்க பார்த்திருந்தவர், தன் மகளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து அடுத்து ஆக வேண்டிய காரியங்களை  செய்ய தயாரானார். மஹிமாவுக்கு சொந்தங்கள் என்று யாரும் இல்லாததால் இவர்களே அவருக்கான இறுதிக் கிரியைகளை செய்ய, நடை பிணம் போல் திரிய ஆரம்பித்துவிட்டாள் அருவி.

கிடைத்த பாசமும் தற்போது இல்லாது, ‘சாப்பிட்டியா?’ என்று கேட்க கூட ஆளில்லாத வாழ்க்கை. அவருடைய இறப்பு இவளை மொத்தமாக நிலைகுலைய செய்திருக்க, கவலையை மறக்க எப்போதும் போல் மதுவை நாட ஆரம்பித்துவிட்டாள் அவள்.

ஒரு வாரம் கழிந்த நிலையில்,

“ஆகு, வேணாம் சொன்னா கேளு! எனக்கு என் பைக் ரொம்ப பிடிக்கும். உன்னை நம்பியெல்லாம் கொடுக்க முடியாது” என்று ராகவ் அடம்பிடிக்க,

“முடியாது, எனக்கு இதை ஓட்டிப்பார்த்தே ஆகனும். நீதான் எனக்கு இரண்டு நாளா கத்து கொடுத்தல்ல, இப்போ நான் தனியா இதை ஓட்டிப் பார்க்குறேன்” என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்து விட்டான் அக்னி.

“இரண்டு நாள் கத்து கொடுத்தேன் தான். கத்துக் கொடுத்ததுல ஏதாச்சும் ஒன்னாவது உன் சின்ன மூளைல ஏறிச்சா? அதுவும் இல்லை. எனக்கு தான் நாக்கு தள்ளிருச்சி. எனக்கு புரிஞ்சி போச்சி. அன்னைக்கு நீ கீழே விழுந்தப்போவே நான் சுதாகரிச்சிருக்கனும், உன் தலைல அடிபட்டதால நீ பைத்தியமாகிட்டன்னு… முதல்ல நீ வீட்டுக்குள்ள வா…” என்று ராகவ் திட்ட,
அக்னியோ கோபமாக முறைத்துவிட்டு அந்த வண்டியை நோக்கி சென்றான்.

அடுத்தநொடி ஓடிச்சென்று அவனை பிடித்துக் கொண்டான் ராகவ். அவனுக்கு தெரியாதா அவனின் நண்பனை பற்றி! கொஞ்ச நாட்களே ஆனாலும் அக்னியின் கோபம், பிடிவாதத்தை நன்கு அறிந்தே வைத்திருந்தான் அவன்.

“டேய்… டேய்… டேய்… இது உனக்கே அநியாயமா இல்லையா? இப்போ நீ செய்ய போற நல்ல காரியம் எனக்கு நல்லாவே தெரியும். வாங்கி ஒரு வாரம் கூட ஆகல டா. அதுக்குள்ள அதை பிரிச்சி மேய்க்கலாம்னு இருக்கியா?” என்று திட்டியவன் ஒரு பெருமூச்சுவிட்டு,

“சரி, வண்டியை தரேன். ஆனா, நம்ம வீட்டை சுத்தி தான் நீ ஓட்டி பழகனும். ரொம்ப தூரம் போக கூடாது. அதுவும், நைட் ஆகிருச்சி. சீக்கிரம் இதை வச்சி விளையாடிட்டு ச்சே… ச்சே… இதை ஓட்டி பார்த்துட்டு நீயும் பத்திரமா வந்து, என் வண்டியையும் பத்திரமா கொண்டு வர்ற!” என்று பல்லைகடித்துக் கொண்டு சொன்னான்.

“ஹிஹிஹி…” என்று இழித்த வைத்த அக்னி, இரண்டு நாட்ளாக கற்றுக் கொண்டதை வைத்து தட்டுத்தடுமாறி அந்த சீரான பாதையில் ஓட்டிச் செல்ல, திடீரென தன் வண்டிக்கு நடுவே வந்து விழுந்த உருவத்தை பார்த்து அலறிவிட்டான்.

‘அய்யோ! யாரு இது? நான் இவங்க மேல வண்டிய மோதிட்டேனா? அப்போ நான் கொலை பண்ணிட்டேனா? கடவுளே! இங்க தப்பு பண்ணா கழுத்துல கயித்த கட்டி தொங்க விட்டுருவாங்கன்னு ராகு சொன்னானே… அக்னி என்ன காரியம் பண்ணிட்ட?’ என்று வண்டியில் அமர்ந்தவாறு தனக்குத்தானே புலம்பிக் கொண்டிருந்தவனுக்கு அப்போது தான் கீழே விழுந்து கிடந்த அந்த உருவத்தை பற்றி மண்டையில் உரைத்தது.

வண்டியை நிறுத்த தெரியாது அப்படியே கீழே போட்டவன், மல்லாக்காக கவிழ்ந்து கிடந்த அந்த உருவத்தை திருப்பி முகத்தை பார்த்தான். அடுத்தநொடி, “அச்சச்சோ! இந்த பொண்ணா?” என்று அதிர்ந்துவிட்டான் அக்னி. அவன் கையில் கிடந்தது சாட்சாத் அருவியே தான்.

 

ஷேஹா ஸகி✌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!