அனல் பார்வை 11🔥

அனல் பார்வை 11🔥

அருவியோ தன் முன் நின்றிருந்த ராகவ்வை

தள்ளிவிட்டு அவள் பாட்டிற்கு வீட்டுக்குள் நுழைய, ‘இவளுக்கு எம்புட்டு தைரியம்?’ என்று பல்லைக்கடித்த ராகவ், “ஏய்! யாரைக்கேட்டு நீ உள்ள வந்த?” என்று கேட்டுக் கொண்டே அவளின் அருகே வர, அதற்குள் அறையிலிருந்து ராகவ்வின் கத்தலை கேட்டு அடித்து பிடித்து வெளியே ஓடி வந்தான் அக்னி.

அவளோ அக்னியை பார்த்து மென்மையாக புன்னகைக்க, அவனுக்கும் அவளைப் பார்த்ததில் அத்தனை சந்தோஷம்!

“ஏய் ராங்கி! நான் உன்கிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கேன். உன்னையெல்லாம் யாரு இங்க வர சொன்னது?” என்று ராகவ் பேசிக்கொண்டே போக, அவனை சட்டை செய்யாத அருவி, “ஹோலா(ஹாய்) மஹி, என் கூட வெளில வர்றீயா?” என்று கேட்டாள்.

அக்னியோ திருதிருவென விழிக்க, “ஏய்! உன்னை எல்லாம் நம்பி என் ஃப்ரென்ட் அ அனுப்ப முடியாது. ஆமா… யாரு அந்த மஹி?” என்று பேசிய ராகவ்வின் வாயை பொத்திய அக்னி, “கொஞ்சம் இரு தீ” என்றுவிட்டு அவனை தரதரவென அறைக்குள் இழுத்துச் சென்றான்.

அறைக்குள் வந்ததும் தன் வாயிலிருந்த அவன் கையை தட்டிவிட்டு, “திஸ் இஸ் டூ மச் ஆகு, அவ எதுக்கு உன்னை வெளில கூப்பிடுறா?  என்னால இதை பொறுத்துக்கவே முடியல.” என்று பொறுமிய ராகவ்விற்கு தன்னையும் மீறி கோபம் கலந்த பொறாமை எழத்தான் செய்தது.

அக்னியோ அவனை பாவமாக பார்க்க,  ராகவ்வோ அவனை ஏகத்துக்கும் முறைத்துத் தள்ளினான்.

“ராகு, அந்த பொண்ணு கூட நான் வெளில போயிட்டு வரட்டா?” என்று அப்போதும் காரியத்திலே கண்ணாக அக்னி கேட்டதில் பொங்கியவன், “டேய்! அந்த பொண்ணு யாரு என்னன்னே உனக்கு தெரியல. குடிச்சிட்டு ரோட்டுல மட்டையாகி கிடக்குறா. இதுலேயே உனக்கு அவள பத்தி தெரிய வேணாமா?” என்று திட்டினான்.

“இல்லை ராகு, அவங்கள பார்க்கவே பாவமா இருக்கு. நேத்து அழுதாங்கல்ல… அப்போவே எனக்கு ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருந்திச்சி. நீ கவலைப்படாத! தீயே என்னை கூட்டிட்டு போய் வீட்டுக்கு கொண்டு வந்து விட்டுருவா.” என்று சொன்னவனை பார்த்த ராகவ் ஏதோ சிறுபிள்ளைக்கு பூச்சாண்டியை காட்டி பயமுறுத்துவது போல், “ஆகு, உனக்கொன்னு தெரியுமா? இப்படி தான் டா பாவமா நடிச்சி, கூட்டிட்டு போய் நம்ம கிட்னி திருடிருவாங்க. நீ வேற ஊருக்கு புதுசு…” என்று இழுத்து வைத்தான்.

அவனை முறைத்த அக்னி, “ராகு, அந்த பொண்ண பார்த்தா காசுக்கு கிட்னி திருடுற பொண்ணு மாதிரியா தெரியுது?” என்று கோபமாக கேட்க, அறையிலிருந்து ஹோலில் நின்றிருந்த அருவியை எட்டிப்பார்த்தான் ராகவ்.

அவளின் உடை, பாவனை, கலரிங் செய்யப்பட்ட குட்டை முடியை முகத்தை அஷ்டகோணலாக வைத்துக்கொண்டு பார்த்தவன், “சத்தியமா சொல்றேன் ஆகு, எனக்கு அப்படி தான் தெரியுது.” என்று சொல்ல, அவனோ தன் நண்பனை உக்கிரமாக பார்த்தான்.

“இங்க இருக்குற எல்லாருமே நல்லவங்க கிடையாது ஆகு. அதுவும் நீ எங்கேயிருந்து வந்தேன்னு யாருக்காச்சும் தெரிஞ்சாலே ஆபத்து தான். ஒரு எக்ஸ்ப்ளோரர் ஆ உனக்கு இது நல்லாவே தெரியும். இதை எத்தனை தடவை உனக்கு புரிய வைக்கிறது?” என்று இறங்கிய குரலில் கேட்ட ராகவ், “ஆமா… அந்த பொண்ணு எதுக்கு உன்னை மஹின்னு கூப்பிடுறா?” என்று புரியாமல் கேட்டான்.

அதில் மென்மையாக சிரித்தவன், “தெரியல ராகு, ஆனா தீ அந்த பெயரால என்னை கூப்பிடும் போது அவளோட கண்ணுல ஒரு ஏக்கம் தெரியுது. கூடவே, இழந்ததை திரும்ப கிடைச்ச சந்தோஷம் தெரியுது. அதான், நானும் எதுவும் கேக்கல. ஆனாலும், நல்லா தான் இருக்கு. மஹி…” என்று அந்த பெயரை சொல்லி தன் முத்துப்பற்கள் தெரிய சிரித்தவாறு அருவியை நோக்கி அவன் செல்ல,

ராகவ் தான், ‘என்ன டா நடக்குது இங்க?’ என்ற ரீதியில் ‘ஙே’ என்று பார்த்தான்.

அருவியை நோக்கி வந்த அக்னி, அவள் தன்னை புருவத்தை சுருக்கி பார்ப்பதை உணர்ந்து, “ஹிஹிஹி… ஒன்னுஇல்லை” என்று அசடுவழிந்தவாறு சொல்லி, “சாப்பிட்டீங்களா?” என்று கேட்க, அவளுக்கோ அவன் கேட்டதில் அத்தனை சந்தோஷம்!

தன்னை மறந்து இமை சிமிட்டாது அருவி அவனை நோக்க, அக்னியோ அவளின் பார்வையில் கட்டுண்டு அவள் விழிகளையே பார்த்திருந்தான். மறுபடியும் அவன் மனதில் அதே சந்தேகம்!

இருவரும் ஒருவரையொருவர் பார்த்தவாறு இருக்க, ராகவ்விற்கு தான் கடுப்பாகி போனது. இருவரையும் மாறிமாறி பார்த்தவன், ‘ஹ்ர்ம்… ஹ்ர்ம்…’ என்று தொண்டையை செறும, நிகழ்காலத்திற்கு வந்த அருவி ஏதோ தீவிரமாக யோசித்துவிட்டு, “இல்லை மஹி, வெளில போய் சாப்பிட்டுக்கலாம்.” என்றுவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.

ராகவ்வோ எச்சரிக்கும் பார்வையோடு ‘போகாத!’ என்று தலையசைக்க, அக்னி அவன் பேச்சை கேட்டால் தானே! குடுகுடுவென அருவியின் பின்னால் ஓடினான் அவன். அருவி தன் ஸ்கூட்டியில் ஏறிக்கொள்ள, அக்னி அவள் பின்னால் ஏறி அமர்ந்துக் கொண்டான்.

அடுத்த ஐந்து நிமிடங்களில்

வண்டி அவள் எப்போதும் செல்லும் பாரின் முன்னால் நிற்க, வண்டியிலிருந்து இறங்கி அருவி உள்ளே செல்லவும், அந்த இடத்தை புரியாது பார்த்தவாறு அக்னியும் பாருக்குள் நுழைந்தான்.

ந்த பாரில் எப்போதும் போல் தனக்கான இடத்தில் அமர்ந்தவள், அவனையும் அமர சொல்லி கண்களால் சைகை செய்ய, அரைகுறை ஆடைகளுடன் போதையில் நடனமாடுபவர்களை முகத்தை அஷ்டகோணலாக வைத்து பார்த்தவாறே அவளெதிரே அமர்ந்தான் அக்னி.

அவனின் முகபாவனைகளை பார்த்து இருபக்கமும் தலையாட்டி சிரித்தவள், “என்ன மிஸ்டர்.மஹி இதுக்கு முன்னாடி இந்த மாதிரி இடத்துக்கு வந்ததே கிடையாதா? இல்லை, நீங்க ட்ரிங் பண்ணதே கிடையாதா?” என்று கேலியாக கேட்க, “எனக்கு இதெல்லாம் பிடிக்கல.” என்று அவன் சொன்னதில் இரு புருவங்களையும் உயர்த்தி அவனை வியப்பாக பார்த்தாள் அவள்.

இதழ் விரித்து சிரித்தவள்,

தனக்கு எப்போதும் மது ஊற்றிக்கொடுக்கும் பேரரை பார்த்து தலையசைக்க, அவனும் இரண்டு கண்ணாடி குவளைகளில் மதுவை ஊற்றிக் கொடுத்தான்.

ஒன்றை அக்னியின் புறம் தள்ளிய அருவி, அதை குடிக்குமாறு சொல்ல, அவனோ அங்கு போதையில் தள்ளாடியபடி ஆடிக் கொண்டிருந்தவர்களை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து,  “என்னையே மறக்க செய்ற இந்த போதை எனக்கு தேவையில்லை.” என்று சொன்னான்.

அவளோ தன் கையிலிருந்த மதுக்குவளையை சுழற்றியவாறு, “நீ நல்லாவே தமிழ் பேசுற. பட், தமிழ் பையன் கிடையாது. ஸ்பானியன் மாதிரி தான் இருக்க. பட், இங்க இருக்குறவங்க மாதிரி நீ கிடையாது. ரொம்ப வித்தியாசமா இருக்க.” என்று சொல்ல, அவளின் கையிலிருந்த குவளையை ஒரு பார்வை பார்த்த அக்னி, “இந்த போதைக்கு அடிமையாகுறது தப்பில்லையா தீ?” என்று தான் கேட்டான்.

தன் கையிலிருந்த மதுக்குவளையை பார்த்து விரக்தியாக சிரித்தவள்,

“மனசுல தேங்கியிருக்க சில  கவலைகளை மறக்க ஐ நீட் திஸ் மஹி…” என்று சொல்ல,  அவளை கூர்மையாக பார்த்த அக்னி, “தற்காலிக கவலைய மறக்க நிரந்தரமா இந்த போதைக்கு அடிமையாகுறது பல பேருக்கு புரியலன்னு நினைக்கிறேன்.” என்று சொல்லி சிரித்தான்.

 

கண்களை சுருக்கி அவனை மேலிருந்து கீழ் பார்த்து, “ரொம்ப கருத்தா பேசுற. உன்னை மாதிரி ஒருத்தனை இப்போ தான் பார்க்குறேன்.” என்று சொன்னவளுக்கு நிஜமாகவே அக்னியின் செயல்கள் புதிதாக தான் தெரிந்தது.

பிறந்ததிலிருந்து இந்த கலாச்சாரத்தில் வளர்ந்தவளுக்கு இதெல்லாம் சகஜமாக தெரிய, இந்த மாதிரியான சமூகத்தில் இந்த போதையை நாடாத ஒருவனை அவளால் வியப்பாக தான் பார்க்க முடிந்தது. ஏனோ கையில் வைத்திருந்த குவளையிலிருந்து இரு மிடறு அருந்தியவளுக்கு அதற்கு மேல் அதை நாட தோணவில்லை.

மனதுக்கு என்றும் இல்லாத இதமாக இருக்க, தற்போது இந்த போதை தேவையில்லை என்று நினைத்தாளோ, என்னவோ? மதுக்குவளையை மேசையில் வைத்தவள் அதற்கான பணத்தை மட்டும் செலுத்திவிட்டு, “போகலாமா?” என்று கேட்டாள்.

அக்னியோ சாதாரணமாக எழுந்து அவளின் பின்னால் சென்றான் என்றால், எப்போதும் அருவிக்கு மதுக்குவளையை ஊற்றிக்கொடுக்கும் அந்த ஸ்பானியன் பேரருக்கு தான் அதிர்ச்சியில் நெஞ்சு வலியே வந்துவிட்டது. அவனுக்கு தான் அவளைப் பற்றி தெரியுமல்லவா!

தான் ஒருத்தியின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்துகிறோம் என்று தெரியாது அவன் இருக்க, ஒருவனுடைய அருகாமை தன் காயங்களுக்கு மருந்தாகுவது புரியாது இவள் இருந்தாள்.

ராகவ்வின் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தியவள், “சீ யூ மஹி…” என்றுவிட்டு செல்ல, அவனோ இதழில் உறைந்த புன்னகையுடன் போகும் அவளையே பார்த்திருந்தான். இதுவரை தான் அனுபவித்திராத உணர்வு! 

வெட்கச்சிரிப்புடன் வீட்டுக்குள் நுழைந்தவனுக்கு, அங்கு முகத்தை உம்மென்று வைத்தவாறு இருந்த ராகவ்வை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

இரண்டு நாட்கள் கழித்து,

“ராகு, இந்த இடம் ரொம்ப அழகா இருக்குல்ல?” என்று சுற்றி முற்றி கண்களை விரித்து பார்த்தவாறு அக்னி அந்த ஹோட்டலுக்குள் நுழைய, ராகவ்வும் புன்னகையுடன் ஒரு மேசையில் அமர்ந்து தன் நண்பனை தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டான்.

“ஆகு, இங்க சாப்பாடு ரொம்ப சூப்பரா இருக்கும். எல்லாம் இந்தியன் ஃபுட்ஸ் தான். உனக்கு என்ன வேணுமோ வாங்கி சாப்பிடு! எனக்கு வேலை கிடைச்ச சந்தோஷத்துக்கு நீ என்ன கேட்டாலும் வாங்கி தருவேன்.” என்று ராகவ் உற்சாகமாக சொல்ல, “போ ராகு, அந்த சீரியல் போறதுக்கான நேரமாச்சு. போயும் போயும் நீ இன்னைக்கு தான் வெளில கூட்டிட்டு வருவியா?” என்று அக்னி உதட்டை பிதுக்கியவாறு சொன்னான்.

அவனை முறைத்தவன், “வர வர நீ ரொம்ப மோசம் ஆகு. எப்போ பார்த்தாலும் டிவி சீரியல் பார்க்குறதுலயே இருக்க. என் கூட வேலைக்கு வர சொன்னா ‘முடியாது. வீட்ல தான் இருப்பேன்’னு சொல்ற.” என்று திட்ட, அவனோ அதையெல்லாம் காதிலே வாங்கிக் கொள்ளவே  இல்லை.

ராகவ் திட்டும் போது மட்டும் அக்னி அவனை கண்டுக்கொள்ளவே மட்டான். அதை அறிந்தாலும் விடாது அவனுக்கு நாக்கு தள்ள தள்ள திட்டித் தீர்ப்பான் அவன் நண்பன்.

அப்போது சரியாக, “ஹோலா…” என்ற குரலில் இருவருமே நிமிர்ந்து பார்க்க, ஹோட்டல் சீருடையில் தன் முன் நின்றிருந்த அருவியை பார்த்து ராகவ்வின் முகம் கடுகடுவென மாறியது என்றால், அக்னியோ தன் மொத்த பற்களும் தெரிய ‘ஹிஹிஹி…’ என்று இழித்து வைத்தான்.

“ஹாய் மிஸ்டர்ஸ், ஆர்டர் ப்ளீஸ்…” என்று அருவி கையில் ஒரு சிறிய நோட்டை வைத்துக்கொண்டு புன்னகையுடன் கேட்க, “ஓஹோ! நீ இங்க தான் வேலை பார்க்குறியா?” என்று கேட்டான் ராகவ்.

“பார்த்தா எப்படி தெரியுது?” என்று அவனை முறைத்துக்கொண்டு கேட்டவள், “நீ சொல்லு மஹி, உனக்கு என்ன வேணும்?” என்று அக்னியை பார்த்து புன்னகையுடன் கேட்டாள்.

“எனக்கு…” என்று இழுத்தவாறு அக்னி ராகவ்வை பார்க்க, அவனோ அருவியை முறைத்தாவாறு இருவருக்குமான உணவுகளை சொன்னான்.

“ஆமா… உன் பெயர் என்ன?” என்று அவள் ராகவ்வை பார்த்து கேட்க, “ஹெலோ மரியாதை… மரியாதை…” என்று பல்லைக்கடித்துக் கொண்டு சொன்னவன் அக்னியை ஒரு பார்வை பார்த்து, “என் பேரு ரஜினிகாந்த்” என்று அழுத்தி சொல்ல, அருவியோ அவனை ஏற இறங்க பார்த்து அக்னியிடம், “உன் ஃப்ரென்டுக்கு ரொம்ப தான் குசும்பு.” என்றுவிட்டு நகர்ந்தாள்.

“ஆமா… அது யாரு ராகு?” என்று அக்னி புரியாமல் கேட்க, “அடப்பாவி! தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் டா அவரு. சும்மா சொல்லி பார்த்தேன். ஏதோ விஷகிருமிய பார்க்குற மாதிரி என்னை பார்த்துட்டு போறா. “என்று ராகவ் சலித்துக் கொள்ள, அவனோ வெளிப்படையாக தலையிலடித்துக் கொண்டான்.

அடுத்த பத்து நிமிடங்களில் உணவுகள் மேசையில் கொண்டு வந்து வைக்கப்பட, “தீ, நீயும் உட்காரு! சேர்ந்து சாப்பிடலாம்.” என்று சொன்ன அக்னியை பார்த்து வாய்விட்டு சிரித்தவள், “எனக்கு வேலை இருக்கு. நான் அப்றமா…” என்று ஏதோ சொல்ல வந்து சட்டென நிறுத்தினாள்.

இருவருமே அவளை கேள்வியாக நோக்க, அவளின் பார்வையோ அங்கு ஹோட்டலுக்குள் நுழையும் ஒருவரை வெறித்தவாறு இருந்தது. அவளின் பார்வை சென்ற திசையை பார்த்த அக்னிக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஆனால், ஹோட்டலுக்குள் நுழைந்த மோகனாவை பார்த்த ராகவ், “ஆமா… இது மிஸஸ்.மோகனா தானே? லோஸ் ஏன்ஜல்ஸ்ல ரொம்ப பெரிய டிஸைனர். அவங்கள நீ ஏன் மூக்கால முறைச்சிக்கிட்டு இருக்க?” என்று கேட்க, அருவிக்கு தான் கோபத்தில் முகம் சிவந்து போனது.

அவளின் கையை பிடித்து அழுத்திய அக்னி, அவளின் பார்வை தன் மீது படிந்ததும் கண்களால் ‘என்ன?’ என்று கேட்க, “அவங்க தான் என்னை பெத்தவங்க” என்றுவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டாள் அவள்.

ராகவ்வோ அவளை விழிவிரித்து பார்த்து, “ரியலி? அவங்க எவ்வளவு பெரிய பிஸ்னஸ் வுமன்! பட் நீ… நம்ப முடியல்லையே…” என்று சந்தேகமாக இழுக்க, உள்ளே நுழைந்த மோகனா கூட தன் மகளை தான் எரிக்கும் பார்வை கொண்டு பார்த்திருந்தார். இத்தனை பெரிய தொழிலதிபரின் மகள் ஹோட்டலில் வேலை பார்ப்பது அவருக்கும் அவமானம் தானே!

அவர் இவளை முறைக்க, அவருடைய மகள் என்று நிரூபிக்கும் விதமாக அருவியும் அவரின் பார்வை தாங்கி எதிர்ப்பார்வை பார்க்க, முகத்தை திருப்பிக்கொண்டவர் வியாபாரம் தொடர்பாக தான் சந்திக்க வந்த வாடிக்கையாளரை பார்ப்பதற்காக ஹோட்டலில் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்துக் கொண்டார்.

“தீ, அவங்க உன் அம்மாவா?” என்று அக்னி கேட்க, “ஏய்! அதான் என்னை பெத்தவங்கன்னு சொன்னேனே… அப்றம் எதுக்கு கேக்குற? எனக்கு அம்மா எல்லாம் கிடையாது.” என்று இருக்கும் கோபத்தை அக்னியிடம் கொட்டிவிட்டு விறுவிறுவென அவள் சென்றுவிட ‘இது உனக்கு தேவையா?’ என்ற ரீதியில் அக்னியை ஒரு பார்வை பார்த்தான் ராகவ்.

“உரிமை இருக்குற இடத்துல தான் கோபப்பட முடியும் ராகு.” என்று அக்னி ஒரு வசனத்தை சொல்ல, “சீரியல் பார்த்து ரொம்ப கெட்டு போயிட்ட ஆகு.” என்று பொறுமிய ராகவ்விற்கு ‘தன் நண்பனை என்ன செய்தால் தகும்?’ என்று இருந்தது.

-ஷேஹா ஸகி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!