அனல் பார்வை 13🔥

அனல் பார்வை 13🔥

தன் கையிலிருந்த தேநீரில் ஒரு மிடறு அருந்தியவள் தன்னெதிரே நின்றிருந்தவனை ஒரு பார்வை பார்த்து, “குட்…” என்றுவிட்டு எழுந்து நடைப்பயிற்சிக்காக வெளியே செல்ல, இதுவரை இழுத்துப்பிடித்திருந்த மூச்சை வெளியே விட்டவாறு அவள் பின்னாலே சென்றான் அக்னி.

அவள் ஓடும் வேகத்திற்கு கஷ்டப்பட்டு பொறுமையாக, மெதுவாக இவன் ஓட, ஒரு அரைமணி நேரம் நடைப்பயிற்சி செய்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தவாறு, “சீக்கிரம் ப்ரெக்ஃபாஸ்ட் ரெடி பண்ணு!” என்றுவிட்டு அறைக்குள் நுழைய போனவள், “நான் ராகுவ பார்க்கனும்.” என்ற அக்னியின் குரலில் அவனை திரும்பிப் பார்த்தாள்.

அவனோ அவளின் பதிலை எதிர்ப்பார்த்து அவள் முகத்தையே ஆர்வமாக பார்க்க, “அவன் இங்க இல்லை.” என்ற அவளின் பதிலில் திடுக்கிட்ட அக்னி, “எங்க ராகு?” என்று பதட்டமாக கேட்டான்.

“ஆங்… சும்மா தானே இருக்கான். அதான், உடல் உறுப்பு தானம் பண்ண அவன் உடல எடுத்துக்க சொல்லிட்டேன். இனி அவன் தொல்லை ஒழிஞ்சது.” என்று தன்னவனை சீண்ட எண்ணி வேண்டுமென்று அலட்சியமாக கூறியவாறு அவள் செல்ல எத்தனிக்க, அக்னிக்கோ கோபம் உச்சத்தை தொட்டது.

“ராகு விஷயத்துல எனக்கு பொறுமை ரொம்பவே கம்மி தீ… என் மேல இருக்குற கோபத்தை என்கிட்ட மட்டும் காட்டு. அவனை காயப்படுத்த, அவனை பத்தி பேச உனக்கு உரிமை கிடையாது. என்னை காயப்படுத்த நீ அவன பயன்படுத்துறன்னு மட்டும் எனக்கு தெரிஞ்சது வோய் ஆ மாட்டார்டே(நான் உன்னை கொன்றுவிடுவேன்).” என்று கடைசி வசனத்தை ஸ்பானியன் மொழியில் கர்ஜித்து மிரட்டினான் அக்னி.

ஆனால், அவனின் வார்த்தைகளை கேட்கும் போது அவள் கண்களில் தெரிந்த வலி அவனுக்கு புரியாமல் விட்டது போலும்!

“உன் ஃப்ரென்ட் இப்போ மெடல்லின்ல ஒரு பெஸ்ட் ஹோஸ்பிடல்ல இருக்கான். ட்ரீட்மென்ட் நடந்துக்கிட்டு இருக்கு. நேத்து ராத்திரியே அவன பாதுகாப்பா அங்க அனுப்பி விட்டுட்டேன். ஹீ இஸ் சேஃப்.” என்று இறுகிய குரலில் சொல்லிவிட்டு தனதறைக்குள் சென்று அவள் கதவடைத்துக் கொள்ள, அப்போது தான் தன் மடத்தனத்தை நொந்துக் கொண்டான் அவன்.

மெடல்லினில், அந்த மருத்துவ அறையில்,

கஷ்டப்பட்டு கண்களை திறந்து கருமணிகளை அங்குமிங்கும் சுழற்றி பார்த்தான் ராகவ்.

‘இப்போ நான் எங்க இருக்கேன்? இரண்டு நாள்லயே கண்ண திறந்தவனை ஏதோ கோமா பேஷன்ட் ரேன்ஜ்க்கு இத்தனை மெஷின் நடுவுல ஏன் டா படுக்க வச்சிருக்கீங்க? இவனுங்க கிட்னாப் பண்ற அளவுக்கு நாம ஒன்னும் அவ்வளவு வர்த்து கிடையாதே… அச்சோ! ஒருவேள உள்ள இருக்குற நம்ம பார்ட்ஸ் அ திருடுற கும்பலா இருக்குமோ?’ என்று தாறுமாறாக யோசித்தவன்,

“டேய்! என்னை விடுங்க டா! என் ஆகுக்கு மட்டும் தெரிஞ்சது உங்களையெல்லாம் பிரிச்சி மேஞ்சிடுவான். டேய் ஆகு! எங்க டா இருக்க?” என்று வாய்விட்டே புலம்பி கதற,

இங்கு அருவியின் வீட்டு சமையலறையில் அவன் ஆகுவோ, “டேய் ராகு! நீ மட்டும் எழுந்து வா! நான் அடிக்கிற அடியில மறுபடியும் நீ கோமாவுக்கே போயிருவ. அந்த சனியன குடிச்சி என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுட்டியே…” என்று புலம்பியவாறு வராத தோசையை கஷ்டப்பட்டு ஊற்றிக்கொண்டிருந்தான்.

அந்தோ பரிதாபம்! அந்த தோசை தோசை போன்று வந்தால் தானே! அதுவோ பிய்ந்து கருகி போய் வர, இவனுக்கு பொறுமை காற்றில் பறந்து போனது தான் மிச்சம்.

சரியாக அதேநேரம் அருவியும் தயாராகி உணவு மேசைக்கு வர, செய்து வைத்ததை எடுத்துக்கொண்டு விறுவிறுவென சென்றவன்,  மேசையில் அதை வைத்துவிட்டு திருதிருவென விழித்துக் கொண்டு நின்றான்.

அவனின் திருட்டு முழியை கவனிக்காது, “ப்ரெக்ஃபாஸ்ட் ரெடியா?” என்று கேட்டவாறு உணவு மேசையில் அமர்ந்து பாத்திரத்தை திறந்தவளுக்கு தூக்கி வாரிப்போட்டது. அந்த பிய்ந்து, கருகியிருந்த தோசைத்துண்டை கையில் எடுத்தவள், “என்ன இது?” என்று அதிர்ச்சி கலந்த கோபத்துடன் கேட்டாள்.

“ஹிஹிஹி… டோச.” என்ற அக்னியின் பதிலில், “வாட்?!” என்று கத்திவிட்டாள் அருவி.

இருந்தாலும் ஏதோ ஒரு ஆர்வத்தில் சட்னியை தொட்டு இரண்டு வாய் சாப்பிட்டவள் மூன்றாவது வாய் சாப்பிடும் போதே குமட்ட ஆரம்பிக்க, கழிவறையை நோக்கி ஓடியவளை பார்த்த அங்கிருப்பவர்களுக்கு பாவமாக இருக்க, அக்னியோ, “ஆத்தீ…” என்று மிரண்டு விட்டான்.

சாப்பிட்ட இரண்டு துண்டுகளோடு சேர்த்து அதிகமாகவே வாந்தி எடுத்தவள், வெளியே வந்து அக்னியை முறைத்தவாறு நிற்க, “என்னாச்சு ஜானு?” என்று எதுவுமே தெரியாதது போல் பாவமாக கேட்டான் அக்னி.

ஒற்றை புருவத்தை உயர்த்தி அவனை உக்கிரமாக முறைத்தவள், “நீ தோசைய டோசன்னு சொல்லும் போதே நான் சுதாகரிச்சிருக்கனும்.” என்று சொல்ல, “ஹிஹிஹி…” என்று அசடுவழிந்தன் அடுத்து அவள் சொன்னதில் விழிவிரித்து விட்டான்.

“பட், இதுக்கு தண்டனை இருக்கு.” என்று அவள் சொன்னதும் தான் தாமதம், விழிவிரித்த அக்னி ‘அடுத்து என்ன?’ என்ற ரீதியில் அவளை பார்த்தான்.

“இங்க மூனு ஃப்ளோர் இருக்கு. ஒரு மாடியில ஐந்து ரூம் இருக்கு. இன்னும் ஒருமணி நேரத்துல வீடு சுத்தமா இருக்கனும். அதுவும் ஒத்த ஆளா நீ தான் பண்ணனும்… நீ மட்டும்.” என்றவள், “சீக்கிரம் வேலைய முடிச்சிடு! நாளைக்கு மெடல்லின்க்கு கிளம்புறோம். நீதான் என் ட்ரெஸ் அ பேக் பண்ணனும்.” என்று சாதாரணமாக சொல்ல, ‘அய்யோ!’ என்று பதறிவிட்டான் அவன்.

அவளோ அவனின் அதிர்ச்சியெல்லாம் கண்டுக்காது மொத்த வேலைக்காரர்களையும் ஹோலில் வந்து நிற்க சொல்லிவிட்டு, அவனை மட்டும் சுத்தம் செய்ய சொல்லி கட்டளையிட்டு உணவு மேசையில் அமர்ந்துக் கொண்டாள்.

பாவம் போல் முகத்தை வைத்த அக்னி, ஹோலை சுத்தம் செய்ய ஆரம்பிக்க, ஆரம்பத்தில் சலிப்பாக செய்தாலும் போக போக அருவி வாங்கி வைத்திருந்த கலைநயப் பொருட்களை விருப்பத்துடனே சுத்தம் செய்ய ஆரம்பித்தான். ஆனால், இங்கோ ஆப்பிள் பழத்தை சாப்பிட்டவாறு அவனை எட்டி எட்டிப் பார்த்த அருவிக்கோ அவனின் புன்னகையை பார்த்து கடுப்பாகிப் போனது.

அவனை காயப்படுத்த சொல்லி மூளை கட்டளையிட, அவன் முன் சென்று நின்றவள், “ஆமா… உன் கேர்ள் ஃப்ரென்ட் இப்போ எப்படி இருக்கா?” என்று ஏளனப் புன்னகையுடன் கேட்டாள். அவளின் குரலில் சட்டென திரும்பியவன், அவளின் கேள்வியில் ஒரு நிமிடம் புரியாது விழித்து பின் புரிந்தவனாக இதழில் மென்னகையை படர விட்டான்.

“என் உயிருக்கென்ன? ரொம்பவே நல்லா இருக்கா.” என்றுவிட்டு அக்னி மீண்டும் தன் வேலையை தொடர, அவனின் பதிலில் எரிச்சலானவளுக்கு அவன் செய்த துரோகம் வேறு நினைவில் வந்து தொலைந்தது.

“துரோகி…” என்று வாய்விட்டே சத்தமாக சொன்ன அருவி, “ஆமா ஆமா… ஒரு மனச சுக்கு நூறா உடைச்சி, ஒரு உயிர கொன்னு உருவான காதல் நல்லா தான் இருக்கும்.” என்று வார்த்தைகளை கடித்து துப்ப, ‘ஒரு உயிர கொன்னு’ என்ற வார்த்தையின் அர்த்தம் புரியாது அவளை புருவத்தை நெறித்து பார்த்தான் அக்னி.

“என் பின்னாடி வா!” என்றுவிட்டு அருவி தனதறையை நோக்கிச் செல்ல, அவள் சொன்னதையே யோசித்தவாறு அவளின் பின்னே சென்றவன் அடுத்து அவள் செய்ய சொன்ன காரியத்தில் முகம் கறுத்து தான் போனான்.

தன் வார்ட்ரோபிலிருந்த மொத்த காலணிகளையும் தரையில் போட்டவள், “இது மொத்தத்தையும் உன் கையால துடைச்சி க்ளீன் பண்ணி வை!” என்று தனக்கு உண்டாக காயத்திற்கு அவனின் காயத்தை மருந்தாக உபயோகிக்க நினைத்தாள்.

அவள் காலணிகளை சுத்தம் செய்ய சொன்னதில் ஒருநிமிடம் அவளை அவன் அதிர்ந்து நோக்க, அவனின் முகப்பாவனையில் திருப்தியுற்றவள் ஏளனமாக புன்னகைத்துக் கொண்டாள்.

“ஓ மஹி! என்னாச்சு என் செருப்ப தொடுறது உனக்கென்ன அத்தனை அவமானமா? அச்சோ பாவம்!” என்று கேலியாக அவள் பேச, ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை சமன்படுத்தியவன், “இந்த வேலைய நான் பண்ணலன்னா யாரோ ஒருத்தர் பண்ண தான் போறாங்க. வாங்குற சம்பளத்துக்கு சொல்ற வேலைய பண்றது ஒன்னும் அவமானம் கிடையாது. நான் உன்கிட்ட பணம் வாங்கியிருக்கேன்.

அதனால எனக்கு இதுல எந்த ஆட்சேபனையும் இல்லை. அதுவும், மனசுக்கு ரொம்ப பிடிச்சவங்களோட பொருளை தொடுறதை அவமானமா நான் நினைக்கல.” என்று சொல்லி தரையில் சம்மணமிட்டு அமர்ந்து, காலணிகளை சுத்தம் செய்ய ஆரம்பிக்க, இப்போது அதிர்ந்தது என்னவோ அருவி தான்.

‘அவன் இதை எதிர்த்து பேசுவான். மேலும் அவனை காயப்படுத்தலாம்’ என்று இவள் ஒரு திட்டத்தை தீட்டியிருக்க, அவனோ ‘எடுத்த பணத்திற்கு வேலை செய்கிறேன் பேர்வழி’யென்று சொன்னதை செய்ய முனைந்ததை சற்றும் அவள் எதிர்ப்பார்க்கவில்லை.

அதுவும் கோபத்தை தாண்டி அவளுக்குள் சுருக்கென்று ஒருவலி தோன்ற, விறுவிறுவென அங்கிருந்து அவள் வெளியேறிய அடுத்த சில நொடிகளிலே அந்த வேலை வேறொருவரின் கைக்கு மாறியிருந்தது. அவனை காயப்படுத்த  முடியாது அவள் திணற, அவளவனும் அதை உணர்ந்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.

அடுத்தநாள் அதிகாலை,

விமானத்தில் தன் பக்கத்து இருக்கையில் கண்களை மூடி சாய்ந்திருந்தவனை பக்கவாட்டாக திரும்பிப் பார்த்தவள், தன்னவனையே இமை சிமிட்டாது பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘எல்லாத்தையும் இழந்துட்டேன்னு நான் நினைச்சிக்கிட்டு இருந்தப்போ, என் வாழ்க்கைக்குள்ள வந்து என் மொத்த சந்தோஷத்தையும் மீட்டு தந்த. அப்றம் ஏன் டா அப்படி ஒரு காரியத்தை பண்ண? என் கனவை அடைஞ்சும் நான் சந்தோஷமா இல்லையே… உன்னை காயப்படுத்தவும் முடியாம, உன் மேல உண்டாகுற கோபத்தை கட்டுப்படுத்தவும் முடியாம திணறிக்கிட்டு இருக்கேன் டா’

என்று இத்தனை நேரம் மானசீகமாக பேசியவள் தன்னை மீறி, “லவ் யூ மஹி…” என்று சற்று சத்தமாகவே முணுமுணுத்துவிட்டு முகத்தை திருப்பிக்கொள்ள, கண்களை திறந்தவனது இதழ்களோ, “லவ் யூ ஜானு…” என்று முணுமுணுத்தது.

கூடவே அவனின் நினைவுகள் இதே வார்த்தையை தன்னவள் தனக்கு முதன் முதலில் சொன்ன அந்த நினைவுகளுக்கு சென்றது.

தன் மனதின் பாரத்தை தன்னவனிடம் கொட்டியதாலோ, என்னவோ முயன்ற வரை மதுவை நாடுவதை முற்றாக தவிர்த்தவள், அவனுடனே நேரத்தை செலவழிக்க ஆரம்பித்தாள். அவனுடைய அருகாமை அவளுடைய அத்தனை காயத்துக்கும் மருந்தாக போனது என்னவோ உண்மை தான்.

அன்று,

இடுப்பில் ஒரு வெள்ளை துண்டை மட்டும் கட்டிக்கொண்டு தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த குத்துப்பாடலுக்கு ஹோலில் நடனமாடியவாறு இருந்த ராகவ், சட்டென்று கதவை திறந்துக்கொண்டு, “ஹோலா…” என்று கத்திக்கொண்டு வந்த அருவியையும், தாரக்கையும் பார்த்து பதறியேவிட்டான்.

அறைக்குள் ஓடியவன் அங்கிருந்தபடியே, “அடுத்தவன் வீட்டுக்குள்ள வரும் போது கதவை தட்டிட்டு வரனும் என்கிற பேசிக் மேன்னர்ஸ் கூட தெரியல்லையா உனக்கு? இதுல இந்த திமிருக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.” என்று திட்ட, ராகவ்வின் சத்தத்தில் தன் அறையிலிருந்து ஹோலை எட்டிப் பார்த்தான் அக்னி.

“ஜானு…” என்ற அவனின் மெல்லிய குரலில் திரும்பியவள், “ஹோலா மஹி…” என்று சிரிப்புடன் சொல்ல,  புன்னகையுடன் தலையசைத்த அக்னி தாரக்கையும் பார்த்து புன்னகைத்தான். ஆனால், தாரக்கின் பார்வையோ ஆராய்ச்சியாக அவன் மீது படிந்து மீண்டது.

உடை மாற்றி வெளியே வந்த ராகவ், “உனக்கெல்லாம் வேற வேலை இல்லையா? எப்போ பாரு என் வீட்டையே சுத்திக்கிட்டு இருக்க.” என்று கடுப்படிக்க, காதில் சிறுவிரலை இட்டு குடைந்தவள், “ஷட் அப் சாகு!” என்றவாறு அங்கிருந்த ஓவியங்களை பார்த்து கண்களை அகல விரித்தாள்.

ஒரு சுவர் பூராக தான் வரைந்த ஓவியங்களை அவன் தொங்க விட்டிருக்க, அதைப் பார்த்த அருவி அங்கு சுவரில் மாட்டியிருந்த ஒரு ஜோடி கண்களின் ஓவியத்தை ஆராய்ச்சியாக பார்த்தாள்.

‘இந்த கண்ணு நம்ம கண்ணு மாதிரியே இருக்கே…’ என்று அவள் அதை கூர்மையாக பார்க்க, சுதாகரித்த அக்னி சட்டென அவளின் தலையை திருப்பி அங்கு வரிசையாக வைத்திருந்த மெழுகு பொம்மைகளை காட்டி, “இது எப்படி இருக்கு தீ?” என்று கேட்டான்.

“வாவ்! இதெல்லாம் எங்க வாங்கின? அப்படியே தத்ரூபமா இருக்கு.” என்று அந்த மெழுகு பொம்மைகளை தொட்டு தொட்டு ஆசையாக அவள் பார்க்க, “இந்த ட்ரோவிங்ஸ்ஸும் சரி, அந்த மெழுகு பொம்மைகளையும் சரி எல்லாமே இவன் பண்ணது தான். என் ஆகு திறமை அப்படி!” என்று சிலாகித்துக் கொண்டான் ராகவ்.

இரு புருவங்களையும் உயர்த்தி, “ரியலி?” என்றவாறு ஆச்சரியமாக அருவி அவனை பார்க்க, அவனோ வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டான். சரியாக அதேநேரம் தொலைக்காட்சியில் ஒரு செய்தி ஒளிபரப்பாக நால்வரின் கவனமும் அதனை நோக்கிச் சென்றது.

“உலகின் மர்மமான தங்க நகரத்தை பற்றிய ஆய்வுப்பணங்கள் செய்த ஆய்வாளர்களால் அந்த நகரம் இருப்பதற்கான சில ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடக்க, அரசாங்கத்துடன் ஏ.எஸ் நிறுவனம் இணைந்து புதிதாக கட்டவிருக்கும் கட்டிடத்திற்காக காட்டை அழிப்பதை எதிர்த்து கொலம்பியாவில் சில நகரங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.”

என்று ஸ்பானியன் மொழியில் அந்த செய்தி ஒளிபரப்பாக, “இந்த போராட்டத்தை எல்லாம் கவர்ன்மென்ட் ஒரு பொருட்டாகவே மதிக்கல.” என்று சலிப்பாக சொன்னான் தாரக்.

“இவனுங்கள திருத்தவே முடியாது.” என்று அருவி கோபமாக சொல்ல, இறுகிய முகமாக நின்றிருந்த அக்னியோ விரக்தியாக சிரித்தவாறு, “ஒருவேள, வளங்களை திருடுற இந்த மனித குலத்திலிருந்து தன்னை பாதுகாக்க தான் இயற்கையோட சில மர்மங்கள் இன்னும் மர்மமாவே இருக்குதோ என்னவோ?” என்று சொன்னான்.

அவனை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்த தாரக், “இஃப் யூ டோன்ட் மைன்ட், உங்க பின்கழுத்துல இருக்குற டாட்டூ சின்னத்தோட அர்த்தம் என்னன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?” என்று கேட்க, அருவியும் அக்னியின் டாட்டூவை உற்றுப்பார்க்க, ராகவ்வோ, ‘இந்த டாட்டூவ பத்தி இவன் எதுக்கு கேக்குறான்?’ என்ற ரீதியில் புரியாமல்  பார்த்தான்.

ஷேஹா ஸகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!