அனல் பார்வை 18🔥

eiPC7EW46757-03499ed6

தற்போது தான் நடிக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்புக்களுக்காக பொகோட்டா வந்திருந்த அருவி, எப்போதும் போல் படக்குழுவினருடன் தங்காது பொகோட்டாவில் தான் வாங்கி இருந்த பங்களாவிலே தங்கி இருந்தாள். கூடவே அக்னியும்…

ஒரு வாரம் தொடர்ந்து படப்பிடிப்புக்கள் விறுவிறுப்பாக நடக்க, அன்று,

கைமுஷ்டியை இறுக்கி கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு தன்னெதிரே அமர்ந்திருப்பவளை முறைத்தவாறு அக்னி நின்றிருக்க, அருவியோ தனக்கு கொடுத்த காட்சியை கச்சிதமாக நடித்துக் கொடுத்துவிட்டு தன்னுடன் நடித்த சக நடிகருடன் தன்னவனை வெறுப்பேற்றுவதற்காக நெருக்கமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.

“மேனேஜர்…” என்று கத்திய அருவி, அக்னி முறைத்துக்கொண்டு வந்து நின்றதும் “சீக்கிரம் இரண்டு ஜூஸ் எடுத்துட்டு வா!” என்று சற்று அதிகாரத் தோரணையில் சொல்ல, ‘அதான் இதுக்குன்னு ஆளுங்க இருக்காங்கல்ல, அப்றம் எதுக்கு என்கிட்ட?’ என்று வாய்விட்டே புலம்பியவாறு சென்றவனின் புலம்பல்கள் அவள் காதுகளிலும் நன்றாகவே விழுந்தன.

வேண்டாவெறுப்பாக அக்னி கொண்டு வந்து கொடுத்து ஒரு ஓரமாக நின்றிருக்க, அவளோ தன்னுடன் பேசுபவன் எந்த நோக்கத்துடன் பேசுகிறான் என்பதை கூட புரியாது அவனுடன் குழைந்து குழைந்து பேசிக் கொண்டிருந்தாள். இல்லை இல்லை அக்னியை வெறுப்பேற்றவென நடித்துக் கொண்டிருந்தாள்.

சட்டென எழுந்தவள், “யாஹ் ஷுவர்” என்று அந்த நடிகனிடம் சொல்லிவிட்டு , “நான் இவர் கூட டின்னர்க்கு இவரோட கார்ல கிளம்புறேன். நீ ட்ரைவர் கூட எங்க கார் பின்னாடியே வா!” என்று அக்னியிடம் கேலியாக உரைத்துவிட்டு செல்ல, அவனுக்கோ கோபம் உச்சத்தை தொட்டது.

அவர்களுடைய கார் முன்னே செல்ல, ஓட்டுனரின் பக்கத்தில் அமர்ந்தவாறு தன் முன் சென்றுக் கொண்டிருந்த காரை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அக்னி.

அந்த கார் பல பணக்காரர்கள், தொழிலதிபர்கள், நடிகர் நடிகைகள் வருகை தரும் ஒரு ஹோட்டலின் முன் நிறுத்தப்பட, இறங்கிய அந்த வெள்ளைக்கார நடிகன் அருவியின் பக்கத்திலிருந்த கதவை திறந்துவிட, அவளோ முதலில் தன்னவனை தான் தேடினாள்.

அவனும் காரிலிருந்து இறங்கி அவளைத் தான் முறைத்தவாறு நின்றிருக்க, அது அவளுக்கு சற்று கிளியை ஏற்படுத்தினாலும் அதை முகத்தில் காட்டாது, “இங்கேயே நின்னுக்கிட்டு இரு!” என்று அக்னியிடம் ஏளனமாக சொல்லிவிட்டு சிரித்தவாறு அந்த நடிகருடன் உள்ளே நுழைய, காரின் கதவை கோபமாக உதைத்தான் அவன். சற்றும் அவனால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.

அவனும் வாசலில் காத்திருக்க, ஏனோ ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகம் போல் தோணியது அவனுக்கு! அடுத்த பதினைந்து நிமிடங்களில் வெளியே வந்தவளது முகம் கோபம், படபடப்பு, அருவருப்பு, குற்றவுணர்ச்சி என பல உணர்வுகளை தாங்கிய வண்ணம் இருக்க, அக்னியும் தன்னவளின் முகத்தை தான் கூர்ந்து நோக்கினான்.

“சீக்கிரம் வண்டியை எடு!” என்றுவிட்டு ஒருவித படபடப்புடன் வண்டியின் பின்சீட்டில் அருவி அமர்ந்துக் கொள்ள, அக்னியும் கோபமாகவே வந்து அவளருகில் அமர்ந்துக் கொண்டான். தன் பக்கத்தில் அமர்ந்திருந்தவனை ஒரு பார்வை பார்த்தவள், பற்களை நரநரவென கடித்த வண்ணம் முகத்தை திருப்பிக்கொள்ள, அவள் எதுவும் சொல்லாமல் இருந்ததே அக்னிக்கு போதுமாக இருந்தது.

“தீ என்னாச்சு? உன் முகம் ஏன் ஒரு மாதிரி இருக்கு?” என்று அவன் நேரடியாக கேட்டுவிட, அவளுக்கோ அந்த நடிகனுடன் உள்ளே சென்ற பிறகு நடந்தது தான் நியாபகத்திற்கு வந்தது.

அக்னியை வெறுப்பேற்றவென உள்ளே சென்றவளின் மனமோ தன்னவனை காயப்படுத்துவதில் ஒருவித வலியை தான் உணர்ந்தது. தன்னவனின் நினைவில் அடிக்கடி வாசலை பார்த்தவாறு அவள் இருக்க, அவளெதிரே அமர்ந்திருந்தவனது பார்வையோ வேறுவிதமாக மாறத் தொடங்கியது.

கூடவே, இத்தனை நாள் படப்பிடிப்புக்களின் போது யாருடனும் பேசாத, பழகாத ஒரு முண்ணனி நடிகை தன்னிடம் நெருக்கத்தை காட்டுகிறாள் என்ற தைரியம்!

தன்னவனை வெறுப்பேற்றவே செய்தாளே தவிர அவன் பேசுவதை கேட்பதில் அத்தனை எரிச்சலாக இருந்தது அருவிக்கு! ‘இவன் வேற நொய் நொய்யுன்னு…’ என்று புலம்பியவாறு, ‘எப்போதடா உணவை முடித்து வெளியேற?’ என்று அவள் இருக்க, அதற்குள் அவள் கைகளுடன் தன் கைகளை கோர்த்துக்கொண்டான் அவன்.

அதில் சற்று அதிர்ந்தவள் அவனிடமிருந்து சங்கடமாக தன் கையை உருவ போக, விடாது அவள் கையை இறுகப்பற்றியவன் அவளின் பின்புற கரத்தில் முத்தமிட்டு அவளின் இதழை நெருங்க, அவளுக்கோ அருவருப்பு மட்டுமே…

தன்னவன் மேல் கோபம் இருந்தாலும் அவனையே உயிருக்கு உயிராக நேசிப்பவள் அவள்! திரைப்படத்தில் முத்தமிடும் காட்சிகளை கடமைக்கென சாதாரணமாக நடித்துக் கொடுத்தாலும் அதை வெறும் நடிப்பாக மட்டுமே பார்த்தவளுக்கு இவன் உணர்வுகளுக்கு மத்தியில் முத்தமிட வருவதை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.

அடுத்தநொடி அவனை தள்ளிவிட்ட அருவிக்கு கோபத்தில் முகம் சிவந்து விட்டது. உடலில் ஏதோ கம்பளி பூச்சு ஊருவது போல் அருவருப்பாக அவளுக்கு இருக்க, அங்கிருந்து விறுவிறுவென வெளியேறி விட்டாள்.

வீடு போய் சேரும் வரை அவளின் பதிலுக்காக காத்திருந்த அக்னி தன் பொறுமையை இழந்து விட, அவளும் அவனின் பொறுமையை நன்றாகவே சோதித்துப் பார்த்தாள்.

போர்டிகாவில் காரை நிறுத்தியதும் இறங்கியவள், வேகமாக உள்ளே சென்று அறைக்குள் நுழைய எத்தனிக்க, அக்னியோ அவளின் பின்னாலே ஓடியவன் அவளின் முழங்கையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தான்.

அவளோ அவன் மார்பின் மீது வந்து மோதி நிற்கவும், “தீ, என்னாச்சுன்னு கேட்டேன்.” என்று அழுத்தமாக அவள் கண்களை பார்த்தவாறு அவன் கேட்க, கனல் கக்கும் விழிகளுடன் அவனை நோக்கியவள், கோபமாக அவனின் மார்பில் கைவைத்து தள்ளிவிட்டாள்.

“நீ யாரு டா என்னை கேள்வி கேக்க? எனக்கு கீழ எனக்காக வேலை பார்க்குற உனக்கு என்னை கேள்வி கேக்க என்ன டா தகுதி இருக்கு? யூ ப்ளடி ****… துரோகி டா நீ! நீ மட்டும் என் கூட இருந்திருந்தா எவன் டா என்னை நெருங்கியிருக்க முடியும்? ச்சீ… என் முன்னாடி வராத!” என்று கத்திவிட்டு அறைக்குள் சென்று கதவை அறைந்து சாத்தினாள் அருவி.

இவனுக்கு தான் ஒன்றுமே புரியவில்லை. ‘நான் யாரா? நிஜமாவே நான் உனக்கு யாருமே இல்லையா ஜானு?’ என்று தனக்குள்ளே கேட்டவாறு இவன் புலம்ப, அறைக்குள் இருந்தவளோ கதவை சாத்தி அதன் மேலே சாய்ந்த வண்ணம் அழுதுக் கொண்டிருந்தாள்.

அவளுடைய விசும்பல் சத்தம் இவனுக்கும் கேட்க, கதவை நெருங்கியவன் அங்கேயே மண்டியிட்டு அமர்ந்து “ஜானு…” என்று முணுமுணுத்தவாறு கதவின் மேல் வருடினான். அவன் நினைவுகளோ தன்னவளுக்கு தான் யாரென்ற உரிமையை உணர்ந்த அந்த தருணங்களை மீட்டியது.

அன்று காதலை சொல்லிவிட்டு சென்றவள் அடுத்து தன் அம்மாவின் அலுவலக வாசலில் தான் நின்றிருந்தாள். அந்த உயர்ந்த கண்ணாடியிலான கட்டிடத்தை அண்ணார்ந்து பார்த்தவள், சலிப்பாக தலையாட்டியவாறு உள்ளே சென்று வரவேற்பரையில் இருந்த பெண்ணிடம் விடயத்தை கூறினாள்.

அந்த பெண்ணும் தன் முதலாளியிடம் பேசி மறுமுனையில் சொல்லப்பட்ட பதிலில் அடுத்தநொடி முழு மரியாதையுடன் மோகனாவின் அறை இருக்கும் திசையை சொன்னாள்.

இதழில் உறைந்த புன்னகையுடன் மோகனாவின் அறைக்குள் நுழைந்தவள், இருக்கையில் அமர்ந்து முதல் தடவை தன் அம்மாவை புன்னகையுடன் நோக்க, அவருக்கும் அவளின் புன்னகையில் இதழ் தானாக விரிந்தது. ஆனால், அவளின் புன்னகைக்கான காரணம் தான் தெரியவில்லை.

“அரு, இங்க நீ…” என்று அவர் முடிக்கவில்லை, “ஐ லவ் மஹி.” என்ற அவளின் பதிலில் சட்டென்று நிமிர்ந்து, “வாட்?! கம் அகைன்?” என்று திரும்ப கேட்டார் மோகனா.

“ஐ லவ் மஹி.. என்னால அவன விட்டு எங்கேயும் வர முடியாது.” என்று அருவி அழுத்தமாக சொல்ல, “மஹி…?” என்று சொன்னவாறு யோசித்த மோகனா, “அந்த பையனா?” என்று சந்தேகமாக கேட்டார்.

அவளும் புன்னகையுடன் தலையசைக்க, “அந்த பையனோட பெயர் என்ன?” என்று அவர் கேட்டதும் தான், இதுவரை தன்னவனுடைய பெயரே தனக்கு தெரியாது என்று உணர்ந்தாள் அருவி. ‘அய்யோ தீ! இப்படியா இருப்ப? அவனோட ஒரிஜின் நேம் கூட உனக்கு தெரியல்லையே…அந்த சாகு கூட ஏதோ சொல்லி கூப்பிடுவானே…’ என்று மானசீகமாக புலம்பியவாறு, “ஏதோ ஆகு…” என்று அவள் தடுமாற, மோகனாவோ வாய்விட்டு சிரித்து விட்டார்.

“பெயர் கூட தெரியாம காதலா?” என்று கேட்டு சிரித்தவர், “சரி அந்த பையனோட ஃபேபிமி பேக்ரவுண்ட், எங்க வேலை பார்க்குறான்? இதுல ஏதாச்சும் தெரியுமா?” என்று கேட்க, முதலில் திருதிருவென விழித்தவள் பின், “எனக்கு அது தேவையில்லை. நான் அமெரிக்காவுக்கு வர மாட்டேன். அதை சொல்ல தான் வந்தேன்.” என்று ஒருவித தயக்கமாக சொல்லி முடித்தாள்.

“என் ஆதியோட கண்ணுல நான் பார்த்த அதே காதல அன்னைக்கு அந்த பையனோட கண்ணுல பார்த்தேன் உன் மேல… எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. லோஸ் ஏன்ஜல்ஸ்க்கு போய் அடுத்த ஒரு வாரத்துல மெடல்லின்க்கு வந்துடுவேன். அதுக்கப்றம் இதை பத்தி பேசிக்கலாம். பட், அதுக்குள்ள அந்த பையன பத்தி முழுசா தெரிஞ்சிக்க!” என்றுவிட்டு அவர் வேலையில் மூழ்க, தன்னை அவர் கட்டாயப்படுத்தாமல் இருந்ததே அவளுக்கு நிம்மதியாக இருந்தது.

புன்னகையுடன் அங்கிருந்து வெளியேறியவளுக்கு முதல் முறை உணரும் காதல் உணர்வில் அத்தனை சுகமாக இருந்தது. அது கூடவே ஒரு பொறுப்பும்! தன் அப்பாவை உடனே கண்டுபிடிக்க வேண்டுமென்று…  மோகனா தன்னுடைய கணவரை பற்றி பேசும் போது அவர் கண்களில் தெரிந்த ஏக்கம், வலியை உணரத்தான் செய்தாள் அருவி.

அடுத்தநாள்,

அக்னியோ திருதிருவென விழித்தவாறு உட்கார்ந்திருக்க, ராகவ்வோ தீவிர முகபாவனையுடன் அவனெதிரே அமர்ந்திருந்தான்.

“ஆகு, நான் சொல்றதை உன் குட்டி மூளைல நல்லா ஏத்திக்க! இது தமிழ் சினிமால ரொம்ப பழசு தான் ஆனா, உனக்கு புதுசு. காதல்னா ரோஜா பூ மாதிரி. வெளியில இருந்து பார்க்க அழகா தான் இருக்கும். ஆனா, அதை பறிக்கும் போது தான் அதுல இருக்க முட்கள் தெரியும். நான் என்ன சொல்ல வரேன்னு புரியுதா?” என்று ராகவ் ஆர்வமாக கேட்க,

உதட்டை பிதுக்கி புரியாது முழித்தவன், “புரியல ராகு…” என்று சொல்ல, வெளிப்படையாக தலையிலடித்துக் கொண்டான் அவன்.

“போடாங்கு… லவ்னா சரக்கு மாதிரிடா. குடிக்கும் போது உலகத்தையே மறந்துருவோம். ஆனா, அது உடல்நலத்திற்கு மட்டுமில்ல மனநலத்திற்கும் கேடு. சொல்லப்போனா, இந்த காதலே போதையிலிருந்து தெளிஞ்சதும் வர்ற ஹேங்கோவர் மாதிரி டா. இதை உன் மரமண்டையில ஏத்திக்க! அவ எல்லாம் உன்னை விட பெரிய சைக்கோ…” என்று திட்ட, சரியாக “மஹி பேபி…” என்று கத்தியவாறு கதவை திறந்துக் கொண்டு வந்தாள் அருவி.

அக்னியோ ஆர்வமாக அவளை பார்க்க, தன்னவனை பார்த்து புன்னகைத்தவள் ராகவ்வை பார்த்து முறைத்துவிட்டு, “மஹி, போகலாமா? இன்னைக்கு உன்னை நான் ஒரு ஸ்பெஷலான இடத்துக்கு கூட்டிட்டு போக போறேன்.” என்று சொல்ல, அவள் முன் வந்து நின்ற ராகவ், “அவன் எங்கேயும் வர மாட்டான்.” என்று கோபமாக சொன்னான்.

அவளோ தலையை சரித்து, ‘அப்படியா?’ என்ற ரீதியில் ஒற்றை புருவத்தை உயர்த்தி அக்னியை பார்க்க, “இல்லை ஜானு, நகரு ராகு!” என்று தன் நண்பனை ஒரு தள்ளு தள்ளிவிட்டு அருவியின் பக்கத்தில் போய் அக்னி நின்றுக்கொள்ள, ‘தில்வாலே புச்டே னே சா… ஓ….’ என்ற பிண்ணனி பாடல் தான் ராகவ்விற்கு பின்னால் ஓடியது.

ராகவ்வின் வயிற்றெரிச்சலை சிறப்பாக  வாங்கிக்கொண்டு அக்னியை அழைத்து வந்த அருவி, வண்டியில் அமர்ந்து தன்னவனை வண்டியின் சைட் கண்ணாடி வழியாக பார்க்க, அவனும் ஹெல்மெட்டை போட்டு கண்ணாடியில் தெரிந்த தன்னவளின் முகத்தை தான் காதலோடு பார்த்தான்.

வண்டியை செலுத்தியவள் நேராக கொண்டு சென்று நிறுத்தியது என்னவோ அந்த அழகிய பூங்காவுக்கு தான். உள்ளே அழைத்துச் சென்ற அருவி, “மஹி, என் கூட வா! அதோ பாரு என்னோட புது ஃப்ரென்ட்ஸ்…” என்றவாறு ஒரு திசையை காட்ட, அந்த திசையை அவன் பார்க்கும் முன்னே எங்கிருந்தோ ஓடி வந்த சில சிறுவர்கள் அவளை தாவி அணைத்துக் கொள்ள, அக்னி பார்த்த திசையில் புன்னகையுடன் வந்தனர் சில முதியோர்கள்.

அவர்கள் அனாதை கிடையாது. உறவுகள் இருந்தும் இல்லாதது போன்று…

“மஹி, இவங்கெல்லாம் என் ஃப்ரென்ட்ஸ். எல்லாருக்குமே வீடு, குடும்பம் இருக்கு. பாசம் காட்ட உறவுகள் கூட இருக்கு. அந்த பாசத்தை இவங்கிட்ட காட்ட தான் அந்த உறவுகளுக்கு நேரம் இல்லை.” என்று அருவி சொல்ல, அக்னியும் தன் தோளை பிடித்து தொங்க முயற்சி செய்துக் கொண்டிருந்த குழந்தைகளை தான் விழி அகலாது பார்த்திருந்தான்.

“ரொம்ப அழகா இருக்காங்கல்ல இந்த குட்டி பசங்க? ஆனா, இவங்க பேரன்ட்ஸ் பணம், வேலைன்னு ஒரு மிஷன் மாதிரியான வாழ்க்கைய வாழ்றாங்க. வாழ்க்கையில எதையோ தேடி கொடுக்க வேண்டிய பாசத்தை கொடுக்காம ஓடிக்கிட்டு இருக்காங்க.” என்றவள் தன்னவனை நெருங்கி,

“மஹி, நம்ம குழந்தைக்கு இப்படி ஒரு ஏக்கத்தை கொடுக்கவே மாட்டேன். என்னோட தனிப்பட்ட விருப்பத்தால உனக்கோ, நம்ம குழந்தைக்கோ சின்ன வருத்தம் உண்டானாலும் அதை உங்களுக்காக விடவும் நான் தயங்க மாட்டேன்.” என்று சொல்ல, அக்னியொ வியந்து போய் அவளை பார்த்தான்.

அவனுக்கு தான் தெரியும் அல்லவா! அவள் அவளின் கனவை நேசிக்கும் அளவு!

அவனோ அவளையே இமைக்காது பார்த்திருக்க, “ஒரு தடவை சொல்லலாம்ல?” என்று அருவி கேட்டதில், புரியாது ஒற்றை புருவத்தை உயர்த்தி ‘என்ன?’ என்ற தோரணையில் கேட்டான் அக்னி.

“அதான் என்னை காதலிக்கிறேன்னு… என்னை காதலிக்கிறல்ல மஹி?” என்று சற்று அழுத்தமாக அவள் கேட்டாலும், இதுவரை பதில் சொல்லாத அக்னியின் மௌனத்தில் ஒரு படபடப்பு இருக்கத்தான் செய்தது அவளுக்கு.

மென்மையாக புன்னகைத்தவன் அவளின் கன்னத்தை தாங்கி நெற்றியில் அழுந்த முத்தமிட்டு, “ஐ லவ் யூ ஜானு.” என்று ஸ்பானிஷ் மொழியில் தன் காதலை சொல்ல, முதலில் கண்களை சுருக்கி அதன் அர்த்தத்தை யோசித்தவள், பின் புரிந்தவளாக வாயெல்லாம் பல்லாக தன்னவனை தாவி அணைத்திருந்தாள்.

வீட்டுக்கு வந்த அக்னி ஒருவித வெட்கத்துடன் ராகவ்வின் முன் நிற்க, “என்ன என்னைக்கும் இல்லாம இன்னைக்கு இந்த எலி அம்மிக்கல்லு ஆட்டுது?” என்று நீட்டி முழக்கி கேட்டு அக்னியை கூர்மையாக பார்த்தான் அவன் நண்பன்.

ராகவ்வின் நல்ல காலமோ என்னவோ? அதன் அர்த்தம் புரியாவிட்டாலும் அதை தோண்டி துருவி கேட்டாது, “நானும் லவ் பண்றேன் ராகு.” என்று வெட்கப்பட்டவாறே அக்னி சொல்ல,

உதட்டை சுழித்து அவனை உக்கிரமாக முறைத்தவன், “பேஷ்… பேஷ்… நல்லா இருக்கு. உங்க வீட்டம்மா காலையில குளிச்சி உங்களுக்கு கோஃபி கொடுப்பாங்களோ, இல்லையோ? தினமும் ராத்திரி உங்க கூட சேர்ந்து ஒரு கட்டிங் போட்டுருவாங்க. ரொம்ப பெருமையா இருக்கு ஃப்ரென்ட்…” என்று கேலிக் குரலில் சொல்லி சிரிக்க,

தன்னவளை கேலி செய்ததில், “ராகு உன்னை…” என்றவாறு அவனை துரத்தி துரத்தி அடி வெளுத்தான் அக்னி.

ஷேஹா ஸகி