அனல் பார்வை 23🔥

அன்று தன்னவன் தந்த காயத்திற்கு கூட அவனின் பேச்சை மீறி மதுவை நாடாதவள், இன்று பல நினைவுளின் தாக்கத்தில் அவனை காயப்படுத்தவென அவன் முன்னேயே மதுவை ஊற்றிக் குடித்துக்கொண்டிருந்தாள் அருவி.

முதலில் அவள் தன்னை அழைத்து தன் முன்னே செய்யும் காரியத்தில் அதிர்ந்த அக்னி, பின் அழுத்தமாகவே அவளையும், அவளின் கையிலிருந்த மதுக்குவளையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனின் பார்வையை உணர்ந்த அருவி, “ஹாஹாஹா…” என்று போதையில் பைத்தியம் போல் கத்தி சிரித்தவாறு, “அச்சோ மஹி பேபி! உனக்கு பிடிக்காதுல்ல… பட், ஐ அம் சோரிடா…” என்றவள் தன் இதயத்தை காட்டி, “இங்க பெயினிங், அதான்…” என்று சொல்ல, அவனுக்கோ கொஞ்சமும் கோபம் வரவில்லை மாறாக, தன்னவளை நினைத்து வேதனையாகத் தான் இருந்தது.

அங்கிருந்த ஒரு வேலையாளை அழைத்தவள், அவர்களின் காதில் ஏதோ சொல்லிவிட்டு அக்னியை பார்த்தவாறு அடுத்த மதுக்குவளையை அருந்த, ஒன்றும் புரியாத அக்னிக்கு அடுத்த ஐந்து நிமிடங்களில் தன் முன் தயார் செய்த ஓவியப் பலகையை பார்த்ததும் எல்லாமே புரிந்து போனது.

அதைப்பார்த்துவிட்டு அவளை அவன் கேள்வியாக நோக்க, கால் மேல் கால் போட்டு ஒரு கையில் மதுக்குவளையை சுழற்றியவாறு சோஃபாவில் சாய்ந்து அமர்ந்தவள், “என்னை அழகா ட்ரோ பண்ணு மஹி பேபி!” என்று சொல்லி சிரிக்க, அவனுக்கோ நிஜமாகவே ஆத்திரம் உச்சத்தை தொட்டது.

அக்னிக்கு அவனுடைய ஓவியங்கள் எந்தளவுக்கு முக்கியத்துவம் என்று அவளுக்கு தெரியும். அது அவனுடைய உணர்வுகளுடன் சம்மந்தப்பட்டது என்று அவன் சொல்லி கேட்டவள் அவள்!

“சீக்கிரம் மிஸ்டர், சொன்னது புரியல? என்னை வரைய சொன்னதா எனக்கு நியாபகம்.” என்று அவள் அதிகார தோரணையில் சொல்ல, அவளின் கண்களை நேருக்கு நேராக பார்த்தவன், “முடியாது.” என்று அழுத்தமாக சொன்னான்.

“ஆஹான்!” என்றவாறு எழுந்து நின்றவள், “ஏன் முடியாது?” என்று கேட்டுக்கொண்டே அவனை தள்ளாடியபடி நெருங்க, “அக்னி அதிகாரத்துக்கு கட்டுப்பட மாட்டான். ஓவியங்கள் என்னோட மனசோட சம்மந்தப்பட்டது. என் மனசுக்கு தோணினா மட்டும் தான் நான் தூரிகைய கையில எடுப்பேன்.” என்று இறுகிய குரலில் அவன் சொல்ல, அதில் வெண்டவள், “இப்போ நான் சொல்றதை நீ கேட்டு தான் ஆகனும். இல்லைன்னா…” என்று மிரட்ட, அவனோ சற்றும் மசியவில்லை.

“முடியாது.” என்று அவன் அப்போதும் அழுத்தமாக சொல்ல, மூச்சு காற்று படும் தூரத்திற்கு அவனை நெருங்கி நின்ற அருவி அவனின் ஷர்ட் கோலரை சரி செய்தவாறு மிதக்கும் கண்களுடன், “ஓஹோ! அப்போ சரி, அது வேணாம். பட், அதுக்கு பதிலாக கிஸ் மீ…” என்று சொல்ல, அதிர்ந்து விழித்தான் அவன்.

“மஹி, கிஸ் மீ…” என்று அவள் கட்டளையாக சொல்ல, அவளின் தோளை பிடித்து தன்னை விட்டு தள்ளி நிறுத்திய அக்னி, “ஜானு, நீ இப்போ நிதானமா இல்லை. முதலில் இதை குடிக்கிறதை நிறுத்திட்டு போய் தூங்கு! நாளைக்கு பேசிக்கலாம்.” என்றுவிட்டு வெளியே செல்ல எத்தனிக்க, சொடக்கிட்டு அவனின் நடையை நிறுத்தியவள், “இது ஒன்னும் உனக்கு புதுசு இல்லையே மஹி. அப்போ எதுக்கு நடிக்கிற?” என்று வார்த்தைகளை கடித்து துப்பினாள்.

அதில் அவளை அடிபட்ட பார்வை பார்த்தவன், “ஆமா… ஆனா, நமக்குள்ள இருந்த உறவு கணவன், மனைவி பந்தத்துக்கு சமம். நான் உனக்கு கொடுக்குற ஒரு முத்தத்துலையும் என்னோட மொத்த காதலும் அடங்கி இருக்கும். அந்த முத்தத்தை அனுபவிக்கிற உன்னோட கண்கள்ல எனக்கான மொத்த காதலும் தெரியும். ஆனா, இப்போ உன்னோட வார்த்தையில அதிகாரம் மட்டும் தான் இருக்கு. காதல் இல்லை. நான் உனக்கு கொடுக்குற சின்ன முத்தமும் கடமைக்காக, கட்டளைக்கு கட்டுப்பட்டு இருக்க கூடாது.” என்று கடைசி வசனத்தை அழுத்தமாக சொல்லி முடித்தான்.

ஆனால், இதையெல்லாம் கேட்கும் நிலைமையிலா அவள் இருந்தாள்? அவளிருந்த போதைக்கு அவன் பேசியதில் பாதி தான் அவளுக்கு புரிந்தே இருக்கும்.

தான் புரிந்துக் கொண்டதையும் அலட்சியம் செய்தவள் தள்ளாடியபடி அவன் முன்னே வந்து நின்று, “இப்போ நீ என்ன கிஸ் பண்ண போறியா? இல்லையா?” என்று அதே புராணத்தை பாட, அவனுக்கு தான் ஆயாசமாக போய்விட்டது. கூடவே, அங்கிருந்த வேலைக்காரர்களும் இவர்களையே வேடிக்கை பார்க்க, அவனுக்கு தான் தன்னவள் நடந்துக் கொள்ளும் முறையில் சங்கடமாக இருந்தது.

“தீ, சொல்றதை புரிஞ்சிக்க! அப்றமா…” என்று அக்னி சொல்ல வந்ததை சொல்லி முடிக்கவில்லை, அவனின் ஷர்ட் கோலரை பற்றி அவனிதழில் அவள் அழுந்த முத்தமிட போக, சுதாகரித்து தன் முகத்தை திருப்பிக் கொண்டவன், அவளை தள்ளிவிட்டு அறைந்த அறையில் தரையிலே விழுந்துவிட்டாள் அருவி.

“அதான் சொல்றேன்ல, ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்குற? காதல் இல்லாம கொடுக்குற முத்தத்துக்கு வேறு பேர் தீ. என்னை காயப்படுத்துறதா நினைச்சி உன்னை நீயே அசிங்கப்படுத்திக்கிற. இதுக்கு மேல இந்த போதை வேண்டாம். முதல்ல போய் தூங்கு! நாம…” என்று ஆரம்பத்தில் கத்தலில் ஆரம்பித்து பின் அவளுக்கு புரிய வைக்க நிதானமாக அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, “ஷட் அப் யூ ப்ளடி *****…” என்ற அருவியின் சீறலில் அவளை அதிர்ந்து நோக்கினான் அவன்.

அவன் அறைந்த கோபத்தில் டீபாயின் மேலிருந்த மொத்த மது போத்தல்கள், சுற்றி இருந்த மொத்தத்தையும் தரையில் தூக்கி போட்டு உடைத்தவள், “என்னை நெருங்க உனக்கு கசக்குதுல்ல… உன் ஜானுவ கிஸ் பண்ண உனக்கு பிடிக்கலல்ல… ஓஹோ! ஒருவேள, உன் புது கேர்ள் ஃப்ரென்ட் அ தவிர வேற பொண்ணை ஏறெடுத்தும் பார்க்க கூடாதுன்னு இருக்கியா? புரியுது… புரியுது… என்னை விட நல்லாவே உனக்கு கம்பனி கொடுக்குறாளா? இப்படி மயங்கி கிடக்குற.” என்று அடுத்தடுத்தென எல்லை மீறி பேசிவிட,

அடுத்தநொடி அவளின் குரல்வளையை இறுக்கிப் பிடித்த அக்னி, “எவ்வளவு தைரியம் டி உனக்கு…” என்று கண்கள் சிவக்க, நெற்றி நரம்புகள் புடைக்க உச்சகட்ட கோபத்தில் கேட்டவாறு அவளின் கழுத்தில் மேலும் மேலும் அழுத்தத்தை கூட்ட, அருவிக்கோ மூச்சுக்கு திணறி கண்கள் சொருக ஆரம்பித்துவிட்டது.

அங்கிருந்த வேலைக்காரர்கள் நடப்பது எதுவும் புரியாது, அவர்களை நெருங்கவும் பயந்து பதட்டமாக பார்க்க, அப்போதே தான் செய்யும் காரியம் உணர்ந்து, “ச்சீ…” என்றவாறு அவளை உதறித் தள்ளியவன், இடுப்பில் கை குற்றி தலையை அழுந்த கோதியவாறு திரும்பி நின்றுக் கொண்டான்.

வலியில் முகத்தை சுழித்து, கழுத்தை நீவி விட்டவாறு இறுமியவள்,  விரக்தியாக சிரித்து, “ஏன் டா விட்ட?  மனசால என்னை உயிரோட கொன்னுட்ட. இப்போவே என்னை முழுசா கொன்னுடு டா. நிஜமாவே என்னால முடியல. உன்னை அவ்வளவு காதலிக்கிறேன். அப்போவும் சரி… இப்போவும் சரி… உன்னை காயப்படுத்தவும் முடியல. உயிர்ப்பில்லாம உணர்வில்லாம பொணம் மாதிரி வாழ்ந்துகிட்டு இருக்கேன். நீயே என்னை கொன்னுடு! ப்ளீஸ்…” என்று அழ, அவனோ அவளின் முகத்தை கூட பார்க்க முடியாத குற்றவுணர்வில் தலைகுனிந்து நின்றிருந்தான்.

“யூ க்னோ வட் மஹி? நான் ரொம்ப அன்லக்கி. பிறந்ததும் அப்பா பாசம் இல்லை. கூடவே அம்மாவோட வெறுப்பு. ஃப்ரென்ட்ஸ் கிடையாது. கூட இருந்த மஹியும் என்னை விட்டு போயிட்டாங்க. இதெல்லாம் ஈடு செய்ற மாதிரி நீ கிடைச்ச. அதுக்கப்றம் நீயும் என்னை விட்டு போயிட்ட. சாக போனேன். அந்த கடவுளுக்கு கூட என்னை பிடிக்கல. என்னை அவர் பக்கத்துல எடுத்துக்காம திரும்ப உயிர் கொடுத்துட்டாரு. எல்லாமே இழந்தும் எனக்குன்னு ஒரு ஜீவன் எனக்குள்ள உருவாகிச்சி. என் மஹியோட இரத்தம். ஆனா, நானே அதை கொன்னுட்டேன். நானே என் பட்டுவ கொன்னுட்டேன்.” என்றுவிட்டு அவள் கதறியழ, அக்னிக்கோ உலகமே தலைகீழாக சுழல்வது போன்ற உணர்வு!

வேகமாக திரும்பி தன்னவளை நெருங்கியவன் அவளின் தோளை பற்றி தன்னை நோக்கி இழுத்து, “என்னை சொல்ற தீ? எனக்கு நிஜமாவே புரியல. அன்னைக்கு கூட நான் ஒரு உயிர கொன்னேன்னு சொன்ன. சொல்லு தீ! எனக்கு பயமா இருக்கு. தெளிவா சொல்லு!” என்று பதட்டமாக கேட்க,

அவனை அனல் கக்கும் விழிகளுடன் நோக்கியவள் அவனின் மார்பில் கை வைத்து தள்ளி, “என்ன டா தெளிவா சொல்லனும்? நமக்குள்ள என்ன உறவுன்னு உனக்கு தெரியாதா என்ன? நம்ம உறவுக்கான பரிசு. நம்மளோட குழந்தை மஹி…” என்றுவிட்டு அப்படியே தரையில் மண்டியிட்டு அமர்ந்து தன் வயிற்றை இரு கைகளாலும் கட்டிக்கொண்டு, “ஒரு மாசமே ஆனாலும் அது என் குழந்தை. உன்னால… உன் மேல இருந்த கோபத்துல நான் என் பட்டுவ கொன்னுட்டேன். என்னை நான் காயப்படுத்துறதா நினைச்சி என் குழந்தைய நானே கொன்னுட்டேன்.” என்று அழ, அக்னியோ ஸ்தம்பித்து நின்றுவிட்டான்.

விஷம் அருந்தியும் தன்னவள் உயிருக்கு எதுவும் ஆகவில்லை என்பதை நினைத்து சந்தோஷப்படுவதா? தன் குழந்தை அழிய தானே காரணமாகி போனதை நினைத்து கதறுவதா? என்று அவனுக்கு புரியவே இல்லை. கண்களிலிருந்து கன்னத்தினூடே வழிந்த கண்ணீர் தரையை தொட, அதை துடைக்க கூட மனமின்றி நின்றிருந்தான் அவன்.

“ஏன் மஹி என்னை விட்டு போன? அன்னைக்கு கூட அதை சொல்ல தான் டா உன்னை தேடி வந்தேன். நாம மட்டும் பிரியாம இருந்திருந்தா நம்ம குழந்தை உயிரோட இருந்திருக்கும்ல?நான், நீ, நம்ம குழந்தைன்னு ஹேப்பியா இருந்திருக்கலாம். இப்போ என் குழந்தைக்கு இரண்டு வயசு இருந்திருக்கும். ச்சே! உன் மேல வச்சிருந்த கண்மூடித்தனமா காதல் என் குழந்தைய பத்தி மறக்கடிச்சிட்டு. ஏன் இப்படி பண்ண மஹி? ஏன் டா?” என்று கேட்டவாறு அருவி கதறியழ,

அவளின் ஒவ்வொரு வார்த்தைகளையும் கேட்டவனுக்கு தன் மேல அத்தனை வெறுப்பு உருவானது. தன்னவளையே சற்று நேரம் வெறித்துப் பார்த்தவனது முகம் இறுகிப்போய் இருக்க, கண்களை அழுந்த மூடி ஏதோ யோசித்தவன் பட்டென்று கண்களை திறந்து, “என்னை மன்னிச்சிடு தீ!” என்றுவிட்டு அங்கிருந்து விறுவிறுவென வெளியேறினான்.

“மஹி…” என்று நிமிர்ந்தவளின் கண்களுக்கு வாசற்கதவை தாண்டி செல்லும் தன்னவனின் முதுகுப்புறம் மட்டுமே கண்ணீர் வழியே மங்கலாகத் தெரிந்தது. ‘மறுபடியும் என்னை விட்டு போறியா மஹி?’ என்று மானசீகமாக கேட்டவளுக்கு கண்களில் கண்ணீர் மட்டும் விடாமல் வழிந்தது.

நான்கு நாட்கள் கழித்து,

“டேய் என்னை விடுங்க டா! நான் அவள சும்மா விட மாட்டேன். ஹவ் டேர் இஷ் ஷீ? என்னை கடத்தி வைக்கிற அளவுக்கு உங்க ஹீரோயினுக்கு தைரியம் வந்திருச்சா? இப்போ வர சொல்லு டா பார்க்கலாம். ஏய் அருவி! ராங்கி! வெளில வா டி!” என்று அந்த பெரிய வாசற்கதவை தாண்ட முயன்றவாறு ராகவ் கத்த, அங்கிருந்த காவலர்களோ அவனின் கத்தலை அடக்க படாதபாடு பட்டுக்கொண்டிருந்தனர்.

சரியாக அந்நேரம் அங்கிருந்த பாதுகாவலன் ஒருவனுக்கு அழைப்பு வர, அதை ஏற்று காதில் வைத்தவன் மறுமுனையில் சொன்ன செய்தியில் ராகவ்வை வீட்டிற்குள் செல்ல அனுமதிக்க, தனது கசங்கிய சட்டையை அவனை முறைத்தவாறு தேய்த்து விட்ட ராகவ், “அந்த பயம் இருக்கட்டும்.” என்று ஒரு வசனத்தை வேறு சொல்லிவிட்டு வேகமாக உள்ளே சென்றான்.

“ஹேய் ராங்கி! எங்கடி இருக்க?” என்று கத்தியவாறு உள்ளே சென்றவன், ஹோலில் அவளை காணாது ஒவ்வொரு அறையாக திறந்துப் பார்க்க, அவனின் முன்னே வந்து நின்ற ஒரு வேலையாள் அருவி இருக்கும் அறைக்கு அவனை அழைத்துச் சென்றார்.

அறையை வேகமாக தள்ளிக்கொண்டு, “ரா…” என்று கோபமாக அவளை அழைத்தவாறு உள்ளே சென்றவனது வார்த்தைகள் அப்படியே நின்றன. அடுத்தநொடி கோபத்தில் அவனின் முகம் சிவக்க, “உன்னெல்லாம்… உன்னெல்லாம்… திருத்தவே முடியாது. குடிகாரி! குடிகாரி!” என்று ராகவ் திட்ட, போதையில் மிதக்கும் கண்களுடன் அவனை ஏறிட்டு பார்த்தவள், “சாகு…” என்றழைத்தவாறு கதறியழ, அவனோ அவளை உக்கிரமாக முறைத்துக்கொண்டு நின்றிருந்தான்.

அந்த அறை முழுக்க மது போத்தல்கள் குவிந்திருக்க, தன் கையிலிருந்த மது போத்தலை தரையில் வைத்து தள்ளாடியபடி எழுந்து நின்றவள், “சாகு, அவன் மறுபடியும் என்னை விட்டு போயிட்டான் டா…” என்று குளறியபடி அவனை நெருங்க, “ஸ்டாப்! பக்கத்துல வராத! நானே உன்னை கொன்னுடுவேன். எங்கடி என் அக்னி?” என்று காட்டமாக அவன் கேட்க, அவளோ அழுகையை நிறுத்தி புருவத்தை நெறித்தவாறு, “யாரு அக்னி?” என்று ஒரு கேள்வியை கேட்டு வைக்க, ராகவ் தான் அதிர்ந்துவிட்டான்.

“ஏய்! என்ன கேள்வி டி இது? என்னை பார்த்தா கேனயன் மாதிரி தெரியுதா? அக்னி யாருன்னு கேக்குற. அப்போ உன் மஹியோட ஒரிஜின் நேம் அக்னின்னு கூட உனக்கு தெரியாதா? கருமம்! கருமம்!” என்று அவன் திட்ட, மறுபடியும் உதட்டை பிதுக்கி ஓவென்று அழுதவள், “அதான் அவன் அடிக்கடி அக்னி அதை பண்ண மாட்டான், அக்னி இதை பண்ண மாட்டான்னு சொல்வானா? இது கூட புரியாம இருந்திருக்கேனே… என் ஆளோட பெயர் கூட எனக்கு தெரியல.” என்றுவிட்டு ஒப்பாரி வைக்க, ராகவ்விற்கோ தலைவலியே வந்துவிட்டது.

“மொதல்ல என் அக்னி எங்கன்னு சொல்லு!” என்று ராகவ் கடுப்பாக கேட்க, தரையில் வைத்திருந்த மது போத்தலை எடுத்து சுவரில் விட்டெறிந்தவள், “அவன் மனசுல என்ன டா நினைச்சிக்கிட்டு இருக்கான். பொசுக்கு பொசுக்குன்னு புருஷனோட கோவிச்சிக்கிட்டு அம்மா வீட்டுக்கு போற பொண்ணுங்க  மாதிரி நடந்துக்குறான். உன்னை காரணமா வச்சி அவன என் பக்கத்துல வச்சிக்கிட்டா மறுபடியும் என்னை விட்டு போயிட்டான். அவன் மட்டும் என் முன்னாடி வரட்டும். அவன…” என்று அடிப்பது போல் கைகளை அங்குமிங்கும் அசைத்தவள், ராகவ்வின், “ஒன்னும் பிடுங்க முடியாது.” என்ற வார்த்தைகளில் அவனை முறைத்துப் பார்த்தாள்.

அவளை அலட்சியமாக பார்த்தவன், “என்ன முறைக்கிற? என்னை கடத்தி வச்சு தான் நீ இத்தனையும் பண்ணேன்னு அவனுக்கு தெரிஞ்சாலே உன்னை கொன்னுடுவான்.” என்று சொல்ல, அவளோ பாவமாக அவனை ஏறிட்டு பார்த்தாள்.

“அவன் போனதுக்கு அப்றம் தான் என்னை ரிலீஸ் பண்ணனும்னு தோணிச்சா உனக்கு? அந்த டொக்டெர் நீதான் பண்ண சொன்னேன்னு சொன்னப்போவே அவன பொழந்திருப்பேன். உன் கதைய முடிச்சிட்டு அவன அப்றம் பார்த்துக்கலாம்னு தான் உன்னை தேடி பொகோட்டாவுக்கு வந்தேன்.” என்று சொன்னவனுக்கு ஏதோ தோன்ற, அவன் மனமோ ‘அதுவா இருக்குமோ?’ என்று வேகமாக யோசித்தது.

அருவியோ உதட்டை பிதுக்கியவாறு, “என் மஹி எனக்கு வேணும் சாகு! இனிமேலும் என்னால முடியாது. அவன் எனக்கு சொந்தமானவன். யாருக்காகவும் நான் மஹிய விட்டுக்கொடுக்க மாட்டேன். நான் அவன் கூட சேரனும்னா அது நீயில்லாம முடியாது. சீக்கிரம் வா! பொகோட்டால தானே அவன் அம்மா வீடு இருக்கு. போய் பேசலாம். கண்டிப்பா அவன் அங்க தான் போயிருக்கனும். என்னை என் மஹி பக்கத்துல கூட்டிட்டு போ சாகு!” என்று அருவி குளறியபடி கெஞ்ச,

நிமிர்ந்து அவளை அழுத்தமாக பார்த்த ராகவ், “ஆமா அரு, அவன் அவனோட வீட்டுக்கு தான் போயிருக்கான். ஆனா, அது பொகோட்டாவுல கிடையாது.” என்று சொல்ல, அவளோ புரியாது அவனை பார்த்தாள்.

“புரியலயா ராங்கி? உன் அப்பாவோட தேடல் அதான் ‘எல் டேரேடோ த லொஸ் சிட்டி ஆஃப் கொல்ட்’ அதான் அவனோட உலகம். என்ட், அக்னி யாருன்னு நினைச்ச ராங்கி? அந்த நகரத்தோட சொந்தக்காரன். அதாவது, அந்த மக்களோட ஒரே தலைவன்.” என்று ராகவ் அழுத்தமாக சொல்ல,

“வாட்?!” என்று அதிர்ந்து கேட்டவாறு தொப்பென்று கதிரையில் அமர்ந்தவளுக்கு அடுத்து ராகவ் மூன்று வருடத்திற்கு முன் நடந்ததை சொன்னதை கேட்டு மொத்த போதையும் இறங்கிய உணர்வு!

“என் ஆளுக்கிட்ட கூட்டிட்டு போக சொன்னா ஏதோ ஃபேன்டஸி ஸ்டோரி சொல்லிக்கிட்டு இருக்க?” என்றவாறு அருவி அவனை அதிர்ந்து பார்க்க, கூடவே இன்னொரு உருவமும் ராகவ் சொல்வதை காதுகளை தீட்டி கேட்டுக் கொண்டிருந்தது.

ஷேஹா ஸகி