அனல் பார்வை 24🔥

“டேய் சாகு! என் மஹிக்கிட்ட கூட்டிட்டு போக சொன்னா ஏதோ ஃபேன்டஸி ஸ்டோரி சொல்லிக்கிட்டு இருக்க. விளையாடாத டா!” என்று அருவி அழும் குரலில் சொல்ல, ஒரு பெருமூச்சுவிட்டவன், “நான் சொல்றதை மொதல்ல கேளு! அப்றம் உனக்கே எல்லாம் புரியும்.” என்று சொல்லவும், அருவியுடன் சேர்ந்து இன்னொரு உருவமும் அவர்கள் பேசுவதை கேட்க தொடங்கியது.

“மாமா ஒரு எக்ஸ்ப்ளோர்க்கு என்னையும் அவர் கூட காட்டுக்கு கூட்டிட்டு போன சமயம் தான் ஆகுவ நான் மொதல்ல பார்த்தேன். அந்த ஆத்தோரத்துல மேல் சட்டையில்லாம மயங்கி விழுந்திருந்தான். மாமா அவன் ஏதோ காட்டுல வாழுற பழங்குடி மக்களை சேர்ந்தவன்னு நினைச்சிக்கிட்டார். நானும் தான் ஆனா, அவன் என்கிட்ட உண்மைய சொல்ற வரைக்கும்.

ஆரம்பத்துல ஏதோ அவன் அந்த தங்க நகரத்தை தேடி போய் அதுக்குள்ள மாட்டிக்கிட்டதா தான் சொன்னான். உலகத்தையே அறியாத ஒரு எக்ஸ்ப்ளோரர் ஆன்னு எனக்கே சந்தேகமா தான் இருந்திச்சி. ஆனா பாரேன், அவன் சொன்ன பொய்ய முட்டாள்தனமா நம்பியிருக்கேன்.” என்று ராகவ் பேசிக்கொண்டிருந்ததை குறிக்கிட்டவள்,

“என் மஹி யாரு, என்னன்னு கூட நான் கேக்கல. நான் அவன அவனுக்காக மட்டும் தான் காதலிக்கிறேன்.” என்று புன்னகையுடன் சொல்ல, அவளை உக்கிரமாக முறைத்தவன், “அதான், இப்போ இந்த நிலைமையில நிக்கிற.” என்று சொல்ல, இப்போது உக்கிரமாக முறைப்பது அருவியின் முறையாயிற்று.

“அவன பத்தின உண்மை எனக்கு தெரிஞ்சது உன் பிறந்தநாளைக்கு அப்றம் தான். அன்னைக்கு நைட் நீ குடிச்சி மட்டையானதும் உன்னை வீட்ல விட்டுட்டு வந்தவன் அப்போ தான் உன் அப்பாவ பத்தி சொன்னான். அதாவது, மிஸ்டர்.ஆதிகேஷவன் அவனோட நகரத்துல இருக்குறதா சொன்னான்.
அதாவது, அவனோட நகரமான எல் டேரேடோ ல இருக்குறதா சொன்னான்.” என்று ராகவ் சொல்ல, அருவியோ, “இம்போஸிபள்!” என்று முணுமுணுத்தாள்.

“உடனே அவன நாங்க அழைச்சிட்டு வந்த காட்டுக்கு போகனும்னு சொன்னான். எனக்கு ஒன்னுமே புரியல. நான் வரலன்னாலும் அவன் போயிருவேன்னு சொன்னதால அன்னைக்கு ராத்திரியே அவன கூட்டிட்டு பொகோட்டாவுக்கு வந்தேன். நாங்க பொகோட்டாவுக்கு போயிக்கிட்டு இருக்கும் தான் நீ கோல் பண்ண. ஆனா, அக்னி பக்கத்துல இருந்தும் உன்கிட்ட பேச முடியாதுன்னு சொன்னான்.

மாமாக்கிட்ட பேசி காட்டுக்குள்ள போக அனுமதி வாங்கித்தர சொன்னோம். அவரும் அக்கி அவனோட கூட்டத்தை பார்க்க ஆசைப்படுறான்னு நினைச்சிக்கிட்டு பர்மிஷன் வாங்கி தந்தாரு.  அப்றம் சில ஆளுங்களோட காட்டுக்குள்ள போனோம்.

ஆனா, ஆத்துக்கு பக்கத்துக்கு வந்ததும் அவன் என்னை போக சொல்லிட்டான். அப்போ கூட என்னால அவன் சொன்னதை பாதி தான் நம்ப முடிஞ்சது. கூடவே, என்னால அவன தனியாவும் விட முடியல. பட், அவன் ரொம்ப பிடிவாதக்காரன்.

‘நீ போ! கண்டிப்பா நான் மெடல்லின்க்கு உன்னை தேடி வருவேன்’னு அவன் உறுதியா சொன்னதும் தான் நான் அங்கயிருந்து வந்தேன். அதுக்கப்றம் நீ அவன தேடி வந்த அன்னைக்கு நைட் தான் மெடல்லின்க்கு வந்தான். கூடவே, ஒரு அதிர்ச்சியோட…” என்று சொல்ல, அருவியோ “நீ சொல்றதை என்னால நம்பவே முடியல சாகு!” என்று உச்சகட்ட அதிர்ச்சியில் சொன்னாள்.

“எனக்கும் இதே மாதிரி தான் இருந்திச்சி அரு, இன்ஃபேக்ட் உன் அப்பாவ என் கண்ணு முன்னாடி அவன் கொண்டு வந்து நிறுத்துற வரைக்கும் என்னால எதையுமே முழுசா நம்ப முடியல.” என்று அவன் சொன்னதை கண்களை அகல விரித்து கேட்ட அருவி, “அப்போ… என் அப்பா நிஜமாவே அந்த நகரத்துல தான்… தட்ஸ் இம்போஸிபள். மஹி தான் என் அப்பாவ…” என்று வார்த்தைகள் அடைக்க கேட்டாள்.

“அவன் அந்த நகரத்தை சேர்ந்தவன்னு சொன்ன போது கூட அந்த நகரத்தை சேர்ந்த சாதரண மக்களை சேர்ந்தவன்னு தான் நினைச்சிக்கிட்டேன். ஆனா, அவன் தான் அந்த மக்களுக்கே தலைவன்னு சொன்னது நானே எதிர்ப்பார்க்காத ஒன்னு. அன்னைக்கு அக்னி தனியா தான் வந்தான்.

அங்க நடந்ததை அவன் சொல்லும் போது என்னால சத்தியமா எதையும் யூகிக்க முடியாத அளவுக்கு இருந்திச்சி. அவன் அன்னைக்கு என்கிட்ட சொன்னதை நான் உன்கிட்ட சொல்றேன். அன்னைக்கு என்னாச்சுன்னா…” என்றவனது நினைவுகள் அக்னி அன்று சொன்ன சம்பவத்தையே நினைவு கூர்ந்தது.

(ஸ்பானியன் மொழியிலான உரையாடல்கள் தமிழில்)

யாரும் அறியா அந்த ஒரு வழி மூலம் மனோவா நகரத்துக்குள் நுழைந்தவனை பார்த்ததும் அந்த நகரத்தை சேர்ந்த மக்களின் விழிகள் ஆச்சரியத்தில் விரிய, தங்களுக்குள்ளே குசுகுசுவென்று பேசிக் கொண்டனர்.

கூடவே, சில கண்கள் கோபப்பார்வையுடனும் பார்த்தன. மக்களுக்கு தலைமை தாங்கி வழிநடத்த வேண்டிய தலைவன் ஓடிச் சென்றதை அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

அடுத்த சில நிமிடங்களிலே அக்னி அரண்மனையிலுள்ள அந்த மண்டபத்தின் குற்றவாளி போல் நிறுத்தப்பட்டிருக்க, அவனெதிரே மண்டபத்திற்கு மேலிருந்த சிம்மாசனத்தில் கம்பீரமாக வீற்றிருந்தார் இப்போது அந்த மக்களுக்கு தலைவியாக இருப்பவர்! அக்னியின் அம்மா டார்சி.

கூடவே, அரசவையை சேர்ந்த சில அமைச்சர்கள், காவலர்கள் என அந்த மண்டபத்தில் சூழ்ந்து இருக்க, மொத்த பேருடைய பார்வையும் அதிருப்தியுடனே அக்னியை நோக்கின.

அக்னியோ தன் தவறை உணர்ந்து தலைகுனிந்தே நின்றிருக்க, அவனை அழுத்தமாக பார்த்த டார்சி, “அக்னி, ஒரு தலைவனா நீ உன் கடமையில தவறிட்ட. மக்களுக்கு நீ பதில் சொல்லியே ஆகனும்.” என்று காட்டமாக சொல்ல, தலைநிமிர்ந்து அவரை பார்த்தவன், “ஆதிகேஷவன் ஐயா இப்போ இங்க வரனும். அப்றம், நான் என்னோட விளக்கத்தை கொடுக்குறேன்.” என்று சொன்னான்.

அனைவரும் அவனை புரியாது பார்க்க, அவரோ அங்கிருந்த பாதுகாவலர்களிடம் பிறப்பித்த உத்தரவில் அடுத்த சில நொடிகளிலே அக்னியின் முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டார் ஆதிகேஷவன்.

“வாத்தியார் அ அழைச்சிட்டு வந்தாச்சி. இப்போ பேசு அக்னி!” என்று அழுத்தமாக சொன்னார் அவர். ஆம், ஆதிகேஷவன் அந்த நகரத்தில் சிறைப்பட்டதும் அங்கிருக்கும் மக்களுக்கு தன் உலக கல்வியை கற்பிப்பதில் நேரத்தை கழித்தார். அக்னி அழுத்தம் திருத்தமாக தமிழ் பேசுவதற்கு கூட இது தான் காரணம்.

அவரோ இத்தனைநாள் கழித்து அக்னியை பார்த்ததில், “அக்னி…” என்று அதிர்ச்சி கலந்த சந்தோஷத்துடன் அழைக்க, அவரைப் பார்த்து புன்னகையுடன், “நீங்க இங்க இருந்து போக வேண்டிய நேரம் வந்தாச்சி.” என்று அவன் சொல்ல, அவர் அதிர்ச்சியானாரோ, இல்லையோ? அங்கிருந்த எல்லாருமே அதிர்ந்துவிட்டனர்.

“அக்னி…” என்று ஆவேசமாக டார்சி கத்தவும், அவரை நிதானமாக திரும்பி பார்த்தவன், “அவர் இங்கயிருந்து போகட்டும் மமா(அம்மா).” என்று சொல்ல, அவரோ கோபத்தில் எழுந்து நின்றுவிட்டார்.

“இத்தனை நாளா நீ எங்கேயிருந்தன்னு  உன்னோட பதில சொல்லல்ல. இப்போ நம்ம நகரத்தோட சட்டதிட்டத்தை மறந்து நீ பேசிக்கிட்டு இருக்க அக்னி. என்ன நடக்குது இங்க?” என்று ஆவேசமாக அவர் கேட்க, “அவரோட மகள் அவருக்காக காத்துக்கிட்டு இருக்கா மமா. அவர் போகட்டும்.” என்று அக்னி சொல்லவும், ஆதிகேஷவனுடைய இதயம் நின்று துடித்தது.

“என் மகளா?” என்று ஆதிகேஷவன் அதிர்ந்து போய் கேட்க, “தீ அருவி உங்க மகள். தன்னோட அப்பாவுக்காக காத்துக்கிட்டு இருக்கா. அவளோட சந்தோஷத்தை பார்க்க நான் காத்துக்கிட்டு இருக்கேன்.” என்று அவன் சொல்ல, அவருக்கோ தலை கால் புரியவில்லை.

“ஒரு தலைவனாக போறவன் நீயே இப்படி பண்றது நியாயமா அக்னி? உன்கிட்ட இருந்து இப்படி ஒரு செயல நான் எதிர்ப்பார்க்கவே இல்லை.” என்று சொன்ன டார்சி தலைகுனிந்து நின்றிருந்த தன் மகனையே சற்று நேரம் அழுத்தமாக பார்த்துவிட்டு, “சரி… இவர அவரோட நாட்டுக்கே அனுப்பி விடுறோம். ஆனா, அது நீ தலைவனா பதவி ஏத்துக்கிட்டதுக்கு அப்றம் தான். சடங்கு முடிஞ்சு பதவி ஏற்றதும் நீயே அவரை நகரத்துலயிருந்து அனுப்பி விடு!” என்று தன் முடிவாக சொன்னார்.

அக்னியோ அப்போதும் தலை நிமிரவில்லை. தவறு செய்துவிட்ட குழந்தையாகத் தான் நின்றிருந்தான். தாய் அறியா சூல் உண்டா என்ன? அவனை ஆழ்ந்து நோக்கியவர், “அப்போ, உன் மனசுக்குள்ள வேறு ஏதோ இருக்கு. சபையில வெளிப்படையா பேசு அக்னி!” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்க,

முயன்று தைரியத்தை வரவழைத்து நிமிர்ந்தவன் ஆதிகேஷவன் புறம் திரும்பி, “என்னை மன்னிச்சிடுங்க! உங்க பொண்ண நான் ரொம்ப காதலிக்கிறேன். அவளும் தான். தீயோட சந்தோஷத்துக்காக தான் உங்கள இங்கயிருந்து அழைச்சிட்டு போக வந்தேன். என் ஜானுவோட சந்தோஷம் தான் முக்கியம்.” என்று சொல்ல, சபையிலுள்ள மொத்த பேருமே ஸ்தம்பித்து நின்றுவிட்டனர்.

முதலில் அதிர்ச்சியை காட்டிய டார்சியின் முகம் பின் புன்னகையுடன் நோக்க, அவனுக்கே அது ஆச்சரியமாகத் தான் இருந்தது. இதழ் முழுக்க புன்னகையுடனே, “ஓஹோ! அப்போ வெளியுலகத்தை சேர்ந்த பொண்ணு நம்ம நாட்டு மக்களுக்கு ஒரு தலைவியா இருக்க போறா. ம்ம் சரி… அது ஒன்னும் பிரச்சினை கிடையாது. அந்த பொண்ணு பெயரென்ன அக்னி?” என்று அவர் சாதாரணமாக கேட்க,

தன்னவளின் நினைவில் புன்னகையுடன், “தீ அருவி…” என்று சொன்னான் அக்னி.

அதை தலையசைப்புடன் கேட்டவரின் முகம் சட்டென இறுக, அடுத்தநொடி அவர் பிறப்பித்த கட்டளையால் ஆதிகேஷவனை சுற்றி ஈட்டியை சுமந்த வீரர்கள் அவரை குறி வைத்து நின்றிருக்க, “மமா…” என்று அதிர்ந்துவிட்டான் அக்னி.

“என் சொந்த பையனோட விருப்பத்தை விட என் மக்களோட நலன் தான் எனக்கு முக்கியம். அவங்கள வழிநடத்த ஒரு நல்ல தலைவன் வேணும். அந்த இடத்துல என் பையன் இருக்கனும்னு நினைக்கிறேன்.” என்று அவர் அழுத்தமாக சொல்ல,

அவரை அடிபட்ட பார்வை பார்த்தவன், “மமா, எனக்கு இந்த பதவியில விருப்பம் இல்லை மா, நான் தீய ரொம்ப நேசிக்கிறேன். அவளோட வாழனும்னு ஆசைப்படுறேன். அவளோட அப்பா உயிரோட இருக்குறதா அவ நம்புறா. அந்த நம்பிக்கைக்கு உயிர் கொடுக்கனும்னு நினைக்கிறேன். எனக்கு இது வேணாம்.” என்று சொல்ல, அவருக்கோ பொறுப்பாக இருக்க வேண்டிய தன் மகன் இப்படி பேசுவதில் அத்தனை ஆத்திரம்!

“ஒரு தலைவனோட முக்கிய இயல்பே அவனோட தனிப்பட்ட விருப்பத்தை தாண்டி அவனோட மக்களை பத்தி யோசிக்கனும். இப்போ உன் அப்பா இருந்திருந்தா உன்னை நினைச்சி ரொம்ப வருத்தப்பட்டிருப்பார் அக்னி.” என்று அவர் சொல்ல, அவனுக்கோ அத்தனை குற்றவுணர்ச்சியாக இருந்தது.

“உன் விருப்பப்படி அவர விட்டுரலாம். நீ உன் தனிப்பட்ட விருப்பத்தை விடுத்து இந்த மக்களுக்கு தலைவனாகு!” என்று டார்சி அழுத்தமாக சொன்னதும், மனதில் சுருக்கென்று ஒரு வலி தைக்க, “இதுக்கு நான் ஒத்துக்குறேன் மா. இப்போ, இவர என் கூட அனுப்புங்க. நான் ஜானு முன்னாடி இவர கொண்டு போய் நிறுத்தனும்.” என்று நிதானமாக சொன்னான் அக்னி.

“நான் ஏற்கனவே சொன்ன மாதிரி தான். நீ பதவிய ஏற்றதுக்கு அப்றம் இவர நீயே அனுப்பி விட்டுரலாம்.” என்று அவர் சொன்னதில் ஒரு பெருமூச்சுவிட்டவன், “சரி… ஆனா, நான் இப்போ போயாகனும். தீயால நான் இல்லாம இருக்க முடியாது. அவளுக்கு என்னோட நிலையை புரிய வச்சிட்டு திரும்பி வந்துருவேன்.” என்றான் உறுதியாக.

“மறுபடியும் அதே வெளியுலகத்துக்கு போக போற. உன்னை நம்பலாமா?” என்று அவர் அழுத்தமாக கேட்க, “திரும்பி வருவேன்.” என்ற அக்னியின் வார்த்தைகளில் அத்தனை உறுதி!

“சரி, இன்னும் பத்து நாள்ல சடங்கு நடந்து நீ பதவி ஏத்துக்கனும். நீ வரலன்னா…” என்று இழுத்த டார்சி, “பதினொராவது நாள் இவர் சிறைச்சேதம் செய்யப்படுவார். இவர் இறக்க நீதான் காரணம்னு உன் காதலிக்கு தெரிஞ்சா உன்னை ஏத்துப்பாளா அக்னி? யோசிச்சு நடந்துக்க!” என்று கேலியாக சொல்ல, அக்னிக்கு தான் தூக்கி வாரிப்போட்டது.

‘ஏன் தான் வந்தோம்?’ என்று நினைத்து தன்னைத் தானே கடிந்துக் கொண்டவனுக்கு நிஜமாகவே தன்னவளை விட்டு பிரிவதை நினைக்கையில் உயிருடன் மரித்த உணர்வு!

நடந்ததை சொல்லி முடித்த ராகவ், “நீ அவன தேடி வந்த அன்னைக்கு ராத்திரி வீட்டுக்கு வந்தான். உன் அப்பாவ உன் முன்னாடி கொண்டு வந்து நிறுத்த அவனோட காதலை விட்டுக் கொடுக்கனும்னு சொன்னான்.” என்று சொல்ல,  தலையை இரு கைகளாலும் தாங்கி அமர்ந்திருந்த அருவி, “என்னால நம்பவும் முடியல. நம்பாம இருக்கவும் முடியல.” என்று வலி நிறைந்த குரலில் சொன்னாள்.

பின் ஏதோ யோசித்தவளாக சட்டென நிமிர்ந்து, “அப்போ அந்த பொண்ண கிஸ் பண்ணிக்கிட்டு இருந்தது அதெல்லாம் என்ன? அவன நான் அவ்வளவு நம்பினேன். அவனே ஒத்துக்கிட்டதுக்கு அப்றம் தான் எனக்கு நம்பிக்கையே போச்சு சாகு.” என்று அருவி அழ,

திருதிருவென விழித்தவன், “அது வந்து அரு, அன்னைக்கு அவன் அந்த நகரத்துல இருந்து திரும்பி வந்ததும் ஒருதடவை நீ அவன வந்து பார்த்துட்டு போன. அதுக்கப்றம் உன்கிட்ட சொல்லி புரிய வைக்க முடியும்னு அவனுக்கு தோணல. உன்னை நேருக்கு நேரா பார்க்க சங்கடப்பட்டு வீட்டுக்குள்ள இருந்துக்கிட்டே இல்லைன்னு சொல்ல சொன்னான். பட், ஒரு கட்டத்துக்கு மேல என்னால பொறுத்துக்க முடியாம ‘இன்னும் எத்தனை நாளைக்கு தான் அருவியோட வாழ்க்கையில விளையாட போற’னு கோபமா கத்திட்டேன்.

அதுக்கப்றம் உன்னை அவன விட்டு விலக வைக்கனும் ஆனா, என்ன பண்றதுன்னு தெரியல அப்படின்னு ஒரே அழுகை. அப்போ தான் நான் அந்த ஐடியாவ கொடுத்தேன்.” என்று சொல்ல, அவளோ அவனை புருவத்தை சுருக்கி முறைத்துப் பார்த்தாள்.

அதில் சற்று மிரண்டவன், “அய்யய்யோ! அரு, அது என் ஃப்ரென்ட் தான். ஜஸ்ட், அவன் கூட நெருக்கமா இருக்குற மாதிரி அவ நடிச்சா நீ அவன வெறுத்து போயிடுவன்னு சொன்னேன். ஆனா… அந்த சிறுக்கி அக்னிய பார்த்ததும் நடிக்கிறதை சாக்கா வச்சி நிஜமாவே கிஸ் பண்ணிட்டா.” என்று சொல்ல, அருவியோ சுற்றி முற்றி எதையோ தேடியவாறு, “எவ்வளவு தைரியம் டா உனக்கு? உன்னை…” என்று ஆவேசமாக கத்த ஆரம்பித்தாள்.

“ஏய்! ஏய்! என்னை போட்டுத் தள்ளிட்டா நீ அக்னி பக்கத்துல கூட போக முடியாது. ஐயாவோட மவுசு அப்படி!” என்று கோலரை தூக்கிவிட்டு அவளை அவன் கெத்தாக ஒரு பார்வை பார்க்க, ‘ச்சே!’ என்று சலித்தவள், “அந்த ஒரு காரணம்… அந்த ஒரு காரணத்துக்காக தான் உன்னை உயிரோட விட்டு வச்சிருக்கேன். யூ…” என்று ஆரம்பித்து அடுத்தடுத்தென்று கெட்ட வார்த்தைகளில் திட்ட ஆரம்பிக்க, ராகவ்வோ அதை கேட்க முடியாது “ஆத்தீ…” என்று காதுகளை மூடிக் கொண்டான்.

அவனை திட்டி முடித்து களைத்துப்போய் அமர்ந்தவள், “எனக்காக என்னையே விட்டுக் கொடுத்துட்டான் இடியட்!” என்று தன்னவனை நினைத்து திட்ட, அவள் முன் மண்டியிட்டு அமர்ந்த ராகவ், “அரு, எனக்கு இப்போ வரைக்கும் ஒன்னு மட்டும் புரியல. அவன் பதவி ஏற்றதுக்கு அப்றம் தான் உன் அப்பாவ விடுறதா சொன்னாங்க. நான் கூட அவன் உன் அப்பாவ கூட்டிட்டு வர்றதா மனோவாக்கு போகும் போது மறுபடியும் அக்னிய பார்க்க முடியாதுன்னு தான் நினைச்சேன். ஆனா, உன் அப்பாவோட அவனும் வந்தான். எவ்வளவு கேட்டும் என்ன நடந்திச்சின்னு அவன் எந்த பதிலும் சொல்லல்ல. மிஸ்டர்.ஆதிகேஷவன் கூட…” என்று யோசனையோடு சொன்னான்.

“அப்போ, அப்பாவுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு. ஆனா, என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல்ல. ஏன் அவருக்கு எல்லாமே தெரியும்னு ஒரு பார்வை கூட பார்த்திருக்க மாட்டாரு.” என்று வேதனையாக அருவி சொல்ல,

“ஒருவேள, அக்னிக்கிட்ட பண்ண சத்தியத்தை காப்பாத்துறதுக்காக கூட சொல்லாம இருந்திருக்கலாம். அக்னி உன் அப்பாவ கூட்டிட்டு வந்ததும் நாங்க உன்னை தேடி வந்தோம். அப்போ நீ லோஸ் ஏன்ஜல்ஸ் போயிட்டதா சொன்னாங்க. அதுக்கப்றம், உன் அப்பாவ மட்டும் உன் வீட்டுக்கு அனுப்புறதுக்காக ஏற்பாடு பண்ணேன். ஆகு என் கூடவே இருக்கப்போறதா சொன்னான். ஒருதடவை உன்கிட்ட பேசி புரிய வைக்கலாம்னு சொன்னதுக்கு வேணாம்னு சொல்லிட்டான்.” என்று சொன்னான் ராகவ்.

“எனக்கு தெரியும் என் மஹிய பத்தி. அப்போ கூட நான் என் கனவை அடையனும்னு தான் விலகி இருந்திருப்பான். ச்சே! நடந்தது தெரியாம விஷத்தை குடிச்சி என் குழந்தைய கொன்னு…” என்றுவிட்டு அவள் முகத்தை மூடி அழ, அதிர்ந்த ராகவ், “ஹேய்! என்னடி சொல்ற?” என்று பதறியபடி கேட்டான்.

“ஆமா சாகு! நீ மாமா ஆகின. ஆனா அதுக்குள்ள…” என்று மறுபடியும் அவள் ஓவென்று அழ, “அடப்பாவிகளா! நான் இன்னும் அப்பாவே ஆகல்லையே… அதுக்குள்ள உங்க குழந்தைக்கு மாமா ஆக்கிட்டீங்களே!” என்று அதிர்ந்து கேட்டவன், “என்ன வேலை பார்த்து வச்சிருக்கான் அந்த கேடிப்பயல்!” என்று தன் நண்பனை வறுக்க தவறவில்லை.

“சாகு, எனக்கு என் மஹிய பார்க்கனும். ஏதாச்சும் பண்ணு டா!” என்று அருவி ஏக்கம் நிறைந்த பார்வையுடன் கேட்க, சற்று யோசித்தவன், “அந்த காட்டுக்குள்ள போக பர்மிஷன் வாங்கனும் அரு. ஒரு குறிப்பிட்ட தூரம் தான் யாருக்கும் போக முடியும். நான் ஆகுவ முதல் தடவை பார்த்த அந்த ஆற்றை தாண்டி போக அனுமதி கிடையாது. பட், சில ரிசேர்ச்சர்ஸ் என்ட் எக்ஸ்ப்ளோரர்ஸ்க்கு மட்டும் தான் அந்த ஆற்றை தாண்டி போக அனுமதி கொடுத்திருக்காங்க.

என்ட், இதுவரைக்கும் அந்த நகரம் எங்க இருக்குன்னு யாருக்குமே தெரியாது. அந்த நகரத்தை கண்டுபிடிக்கனும்னு அந்த ஆற்றை தாண்டி போறவங்க ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு அப்றம் காணாம போயிடுறாங்க. நம்மளோட தேடலும் அதே தான். ஆகுவ கண்டுபிடிச்சிரலாம்.” என்று உறுதியாக சொன்னான்.

“அப்போ இந்த பயணத்துல நானும் உங்க கூட வர்ற ரெடி…” என்ற தாரக்கின் குரலில் இருவருமே அதிர்ந்து திரும்பி பார்த்தனர்.

ஷேஹா ஸகி