அனல் 2

அனல் 2

கல்லூரியிலிருந்து வீடு நோக்கி கிளம்பிய மூவர் படை சிலபல கெஞ்சல் கொஞ்சல்கள் சமாதானப் படலம் சேட்டை அரட்டை என அவர்களின் தினசரி அடாவடித்தனங்களுடன் நடந்தவாறு கல்லூரிக்கு சற்று அருகில் அமைந்திருந்த மித்ரனின் வீட்டில் சென்று தஞ்சம் அடைந்தனர்.

 

மித்ரனின் இல்லம் கல்லூரியில் இருந்து சற்று அருகில் அமைந்திருந்தமையால் இவர்கள் மூவரும் கல்லூரி முடிந்தவுடன் சங்கமிக்கும் இடம் சங்கமித்ரனின் இல்லமே.

 

வழமை தவறாமல் அன்றும் மித்துமா அவரின் செல்ல வானர பிள்ளைகளுக்கு பசி தீர்க்கும் பொருட்டு உணவு பண்டங்களை சமைத்து வீட்டின் நடுக்கூடத்தில் வைத்துவிட்டு இவர்களுக்காக காத்திருந்தார்.

 

தெருமுனையில் வரும்பொழுதே அன்னையின் மீன் குழம்பு வாசம் மூக்கைத் துளைக்க, விவு மற்றும் மித்ரனை இடித்து தள்ளி விட்டு, தென்றல் அவர்களுக்கு முன் சென்று மித்ராவதியின் மடியில் தலை சாய்த்து கொண்டாள்.

 

தென்றல் தள்ளிய நொடியில் சற்று தள்ளாடிய மித்ரன் நிதானித்து பிறகு தென்றலை அர்ச்சித்தவாறு வீட்டிற்குள் நுழைந்தவன் அன்னையின் மற்றொரு பக்க மடியில் தலை சாய்த்து படுத்துக் கொண்டான்.

 

விவேகனோ அவனுக்கும் அந்த வீட்டிற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பது போல் அவன் தங்கியிருக்கும் அறையில் சென்று கதவை தாழிட்டுக் கொண்டான்.

 

அவன் எப்போதுமே அப்படிதான் அவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்பவன் அவனுக்கென எதையும் எதிர்பார்க்கவும் மாட்டான், அவர்களே கொடுத்தாலும் முடிந்த மட்டும் ஒதுங்கித்தான் செல்வான். 

 

அவனின் நடவடிக்கையைக் கண்ட மித்ராவதியின் முகம் வாடி போனது. எத்தனை நெருங்கினாலும் விலகி செல்லும் விவேகனின் குணம்  ஒரு நேரம் இல்லையென்றாலும் சில நேரங்களில் அவருக்கு வருத்தம் தான்.

 

அவரின் வருத்தம் சுமந்த முகத்தைக் காண முடியாத தென்றல், அன்னையை சமாதானம் செய்யுமாறு மித்ரனிடம் கண் ஜாடை காட்டி விட்டு விவேகனின் அறை நோக்கி சென்றாள். அறையின் அருகே அவள் சென்று நிற்கவும் கதவு  திறக்கவும் சரியாக இருந்தது.

 

கதவை திறந்து கொண்டு வெளியே வந்தவனின் கண்கள் தென்றலின் கண்களை நேருக்கு நேர் காண தயங்கின.

 

அவனின் நிலையை அறிந்தவளோ மித்ரனை திரும்பிப் பார்க்க, அவள் பார்வையின் அர்த்தம் புரிந்தவன். அவர்கள் வீட்டில் இருந்த இரண்டு அடி உயரமுள்ள மனை கட்டையைக் கொண்டு வந்து, தென்றலின் காலுக்கு அடியில் வைத்து விட்டு நகர்ந்து சென்று அன்னையின் அருகில் நின்று கொண்டான். நடக்கப்போகும் காமெடியை பார் என்பது போல்.

 

மித்ரன் நகர்ந்து சென்றதும் மனையின் மீது ஏறி நின்று கொண்டாள் தென்றல். இதனை கண்ட மித்ராவதியின் மனக்கலக்கம் தகர்ந்து வாயை பொத்திக்கொண்டு சிரிப்பை அடக்க மிகவும் சிரமப்பட்டார்.

 

மனையின் மீது ஏறி நின்றவளோ விவேகனின் முகத்தை ஒற்றை விரலால் நிமிர்த்தி அவன் கண்ணோடு கண் நோக்க அவனின் வாய்மொழி கூறாத அவனின் இத்தனை வருட மன வலியை அவனுடைய கண்ணின் சிவந்த நிறத்தை வைத்து உணர்ந்து கொண்டாள் அவனின் கண்மணி.

 

இருவரின் கண்களும் சிறிது நேரம் மௌன மொழி பேசிக் கொள்ள முதலில் மௌனம் கலைந்தது மித்ரனே,

 

“அடேய்… அடேய்… போதும்டா நீங்க காட்டுனா படம்! இதுக்கு மேல முடியாது. பசியில வயித்துக்குள்ள தென்றல் ஓடிட்டு இருக்கா வாடா சாப்பிடலாம்” என கூற,

 

அவன் கூறியதைக் கேட்ட தென்றல் இரண்டடி மனையிலிருந்து எகிறி குதித்து அவனை அடிக்க துரத்திக் கொண்டு வீட்டை சுற்றி சுற்றி ஓட,

 

இந்த இரண்டு ஜந்துக்களும் சேர்ந்து அந்த இடத்தில் குடிகொண்டிருந்த இறுக்கத்தை தளர செய்து சகஜ நிலைக்கு திருப்பியிருந்தனர்.

 

பிறகு நால்வரும் உணவருந்த அமர விவேகன் மித்ராவதிடம் பேசத் துவங்கினான்.

 

“மித்துமா ஐம் ரியலி வெரி சாரி உங்களுக்கே புரியும்னு நினைக்கிறேன்… இனிமே இப்படி நடக்காம இருக்க முயற்சி பண்றேன் என்ன மன்னிச்சிடுங்க மித்துமா.” என மனதார மன்னிப்பு கோரினான்.

 

“எனக்கு புரியுதுடா கண்ணா. உனக்கா மனசு வந்து நீ எப்போ என்னை மித்ரனோட அம்மாவா நினைக்காம‍, உன்னோட அம்மாவா ஏத்துக்க போறனு தெரில? ஆனா அது வரைக்கும் நான் காத்துகிட்டு இருப்பேன்.” என்று அவனின் மன்னிப்பையும் ஏற்றுக்கொண்டவர் அவரின் ஆசையையும் நாசுக்காக முன்வைத்தார்.

 

பிறகு மூவரும் சேர்ந்து மித்துமாவின் மீன் குழம்பை ஒரு பிடி பிடித்தனர். மூவரும் உண்டு முடித்த பின்னர் அன்னைக்கும் சாப்பாடு பரிமாறி ஆளுக்கு ஒரு வாய் என அவருக்கு ஊட்டிவிட்டு அவரையும் சாப்பிட வைத்த பின்னர்,

 

தென்றலை அவளின் வீட்டில் விட்டு வருவதற்காக கிளம்பினார்கள்.

 

மித்ரனின் வீட்டிலிருந்து தென்றலின் வீட்டிற்கு செல்ல இருபது நிமிடம் பேருந்தில் பயணிக்க வேண்டும்.

 

மித்துமாவிடம் விடைபெற்றுக்கொண்டு பேருந்து நிலையம் வந்தடைந்ததும், தென்றலின் தலையில் மீண்டும் கேரட் அல்வா வீசப்பட்டது அவளின் விவுவினால்.

 

“என்ன விவு சொல்ற? இங்கே இருந்து நான் தனியா போகணுமா வீட்டுக்கு. அதுவும் பஸ்ல. டைம் என்னன்னு பாத்தியா? ஆறு, ஆஃபிஸ், காலேஜ், ஸ்கூல் ஸ்பெஷல் கிளாஸ், எல்லாம் விடற டைம் இந்த டைம்ல லேடீஸ் ஸ்பெஷல் கூட வராது. இப்ப போய் என்னை தனியா போக சொன்னா எப்படி? எனக்கு தனியா போறதுன பயம். உனக்கு தெரியாதா டிக்கெட் கூட எனக்கு கேட்டு வாங்க தெரியாதே அதுக்கு கூட பயம் தான். அதுவுமில்லாமல பஸ்ஸ விட்டு இறங்கி நான் ரோடு கிராஸ் பண்ணும்போது சைக்கிள் இடிச்சு நான் செத்துட்டா என்ன பண்ணுவ?”

 

என ஏக வசனத்தில் பேசிக் கொண்டிருந்தவளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இருவரும்,

 

அவள் இறுதியாய் சொன்னதைக் கேட்டு சிரித்து விட்டனர். அவர்கள் மட்டும் இல்லாமல் அந்த பஸ் ஸ்டாப்பில் இருந்த அத்தனை பேரும் இவள் பேசியது கேட்டு சிரித்துவிட்டார்கள்.

 

அவளின் தலையில் செல்லமாய் தட்டிய மித்ரன், “ஏய் முட்டை போண்டா சைக்கிள் இடிச்சி நீ செத்துருவியா இது உனக்கே ஓவரா இல்லையா.” எனக் கூறி மேலும் சிரிக்க.

 

அவனின் வயிற்றில் வேகமாய் குத்தியவள், “யார பார்த்து முட்டை போண்டான்ன நீதாண்டா முட்டை கோஸ் போண்டா போடா டேய்.” என திட்டி விட்டு அவள் மீண்டும் அவளின் விவுவிடம் திரும்பி.

 

“விவு ப்ளீஸ் நீ வரலைன்னா அப்பாவ ஆச்சும் வந்து கூட்டிட்டு போக சொல்லு அதுவும் முடியாதா, இந்த முட்டைகோஸ் போண்டாவ கூட அனுப்பு.”

 

என எவ்வளவு கெஞ்சியும் அவளின் விவு அவளின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.

 

“உன் கிட்ட பேசவே மாட்டேன் போ” என கோபித்து கொண்டவளின் கண்கள் கலங்கி குளமாகி இருந்தன.

 

மித்ரன் அவளை கண்டு மனம் வருந்த “நான் போறேன்டா அவ கூட…”

 

என சொல்ல வாயெடுத்தவனின் வாயில் விவேகன் தன் பின் கை முட்டியால் ஒரு இடி இடிக்க மித்ரன் வாயை மூடிக்கொண்டான். 

 

‘இவளை பார்க்கக்கூடாது இல்லன்னா கண்ணாலேயே கெஞ்சி ஆள கவுத்திடுவா அப்புறம் இந்த இடி மாட்டிக்கிட்ட யார் அடி வாங்குறது? யப்பா இன்னா இடி’ என மனதில் நினைத்த மித்ரன் தென்றலின் முகத்தை காண்பதையும் தவிர்த்தான்.

 

சிறிது நேரத்தில் தென்றல் செல்ல வேண்டிய பேருந்து வர அவளின் கையைப் பற்றிய விவேகன், “நீ டிக்கெட் கேட்க வேண்டாம் இருவது ரூபாய மட்டும் கொடு அவரே டிக்கெட் கொடுத்துடுவார்” என கூறியவன் இருபது ரூபாய் தாளை அவள் கையில் திணித்தான்.

 

பேருந்து வரவும் விவேகன் அவளின் கையை பற்ற, கூட வரப் போகிறான் என மனம் மகிழ்ந்தவள் அவன் கையில் பணத்தை திணித்து வண்டியில் தூக்கிப் விடவும் மீண்டும் கண்கள் கலங்கி குளமாகின பயத்திலும் கோபத்திலும்.

 

அவளை முன் வழியில் ஏற்றிவிட்ட விவேகன் பஸ் கிளம்பியதும் ஓடி சென்று பின்பக்க வழியில் ஏறிக் கொண்டான். அவன் செய்த எதுவும் புரியாத மித்ரனும் அவனுடன் ஓடி வந்து ஏறிக் கொண்டான். சிறிது நேரம், ஓடி வந்ததினால் மூச்சு வாங்கியவன். “ஏன்டா இப்படி அவ கூட போறதுக்கு முன்னாடியே அவ கிட்ட சொல்லி இருக்கலாம்ல அழுகாம ஆச்சும் இருந்திருப்பா” என வருந்தினான்.

 

“பேசாம வாடா இப்போ நான் வேகமாக மூச்சு விட்டா கூட நான் பஸ்ல வரேன்னு கிராதகி கண்டுபிடிச்சிடுவா” என அவனை அடக்கினான் விவேகன்.

 

பிறகு இருவரும் பேசிக்கொள்ளாமல் தென்றலை கண்காணித்தவாறு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தனர்.

 

விவேகனையும் மித்ரனையும் வாய்க்குள் நுழையும் வார்த்தை, நுழையாத வார்த்தை என கண்ட வார்த்தையிலும் திட்டியவாறு பேருந்தில் ஏறிய தென்றலின் கெட்ட நேரம் பேருந்தில் அமர இடம் கிடைக்கவில்லை. மேலும் பயந்தவள் பெண்கள் இருக்கையில் இரு பெண்கள் பூ கட்டிக் கொண்டிருக்க அவர்களின் அருகில் சென்று நின்று கொண்டாள்.

 

பிறகு விவேகன் கூறியவாறு கண்டக்டரிடம் ரூபாய் தாளை நீட்டியவுடன் அவரும் அவள் செல்ல வேண்டிய இடத்திற்கு டிக்கெட்டை கிழித்து கொடுத்தார்.

 

‘ஆக பக்கி முன்னாடியே பிளான் பண்ணி தான் நம்மல தனியா அனுப்பியிருக்கான்’ என மனதில் நினைத்தவள் மேலும் விவேகனை மட்டும் நான்கு நல்ல வார்த்தைகள் கூறி அர்ச்சித்தாள்.

 

இவர்கள் பேருந்தில் ஏறிய முதல் ஐந்து நிமிடம் எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக சென்றது அந்த பயணம்.

 

அதற்கு அடுத்து வந்த நிமிடங்கள் தென்றலுக்கு சோதனை காலமாக அமைந்தது.

 

தென்றலுக்கு பின் பொது இருக்கையின் அருகில் நின்றிருந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆடவர் தென்றலிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். தென்றலுக்கு பயத்தில் கை கால்கள் நடுங்க தலையை சுற்றிக் கொண்டு வந்தது,

 

“டேய் அவன…” என பாய்ந்துக் கொண்டு சென்ற மித்ரனை தடுத்த விவேகன், 

 

“அவ என்னதான் செய்யறா பார்க்கலாம்” என்றவனுக்கும் உள்ளே கொதிக்கத்தான் செய்தது. அதே சமயம் எந்நேரமும் இவளை ஒருவர் பாதுகாத்துக் கொண்டே இருக்க முடியாதே அவளே பழகட்டும் என இரும்பாக நின்றுக்கொண்டான்.

 

சிறிது நேரத்திற்கு மேல் பயம் தென்றலை முழுவதும் ஆட்கொள்ள, 

 

சில மாதங்களுக்கு முன் அவள் வாழ்க்கையில் நடந்த பெரும் சிக்கலின் போது, ‘உன்னோட பயம் தான் உனக்கு பலம், பலவீனம் இரண்டுமே அதை நீ எங்க எப்படி பயன்படுத்துறியோ அதை பொறுத்துதான் உன்னோட பலம் பலவீனம் இரண்டுமே உன்னால தீர்மானிக்கப்படும்’ என்ற அவளின் விவுவின் வார்த்தைகள் மூளையில் மின்னலென வெட்டின.

 

சற்று தன்னை திடப்படுத்திக் கொண்டவள், ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டுக்கொண்டு, “அங்கிள் தள்ளி நில்லுங்க” என எச்சரிக்க.

 

அந்த ஆடவர், “ஏம்மா கோபப்படுற உனக்குலாம்‌ வயசுப்பையன் இடிச்சா இனிக்கும் என்ன மாதிரி வயசானவன் இடிச்சா கசக்குமா?” என கேட்க.

 

தென்றலின் பயம் காற்றோடு காற்றாக பறந்தது.

 

அந்த ஆளின் சட்டையை கொத்தாக பிடித்து, “யார பார்த்து என்ன சொன்னயா?” என பளார் பளார் என நாலு சாத்து சாத்தியவள், 

 

“உன் வீட்டு பொம்பளைங்கல கூட்டிட்டு வந்து நிக்க வச்சு இப்படி இடிச்சிட்டு நில்லு. அவங்கள எந்த வார்த்தை சொல்லி வேணும்னாலும் திட்டு ஆனால் என்னை அந்த வார்த்தை சொல்றதுக்கான தகுதியோ, அருகதையோ, உரிமையோ உனக்கு இல்லை. இன்னொரு முறை உன்னை நான் இந்த பஸ்ல பார்த்தேன் அடுத்த வார்த்தை பேசுறதுக்கு உனக்கு நாக்கு இல்லாம பண்ணிடுவேன்” என சத்தமாக கத்தியவள்.

 

வண்டியை நிறுத்த கூறிவிட்டு அந்த கூட்டத்திலும் அவனை இழுத்துச் சென்று பேருந்தின் மேல் படியில் இருந்து கீழே தள்ளி விட்டு ஒற்றை விரல் நீட்டி தீ பார்வை பார்த்தவள் அவனை எச்சரித்து விட்டு மீண்டும் அவள் இடத்திற்கு வரவும் பேருந்து கிளம்பியது.

 

பேருந்து கிளம்பியதும் மித்ரனும் விவேகனும் பேருந்தில் இருந்து இறங்கி அந்த ஆடவனை துரத்திச் சென்றனர். அந்த ஆடவரை ஓடி சென்று பிடித்த விவேகன் அவரை போட்டு அடி வெளுத்து விட இதற்கு மேல் போனால் அசம்பாவிதம் ஆகிவிடும், ஏற்கெனவே அப்படி ஒரு அனுபவமும் இருப்பதினால் பயந்துபோன மித்ரன் அவனை அழைத்துச் சென்று ஒரு டீ கடையில் தண்ணீர் வாங்கிக் கொடுத்து சற்று நிதான படுத்திக் கொண்டிருந்தான்.

 

இம்முறை ஏனோ அந்த பேருந்தும் அதில் இருந்த கூட்டமும் அவளைப்‌ பயமுறுத்தவில்லை. அவளுக்கே அதிர்ச்சி ‘தான்தானா இது!’ என.

 

அவளிற்கு நெருக்கமானவர்கள் உடனிருப்பதுப் போன்ற ஒரு தெம்பு வந்தது. அப்படியும் விவேகன் ஒரு வேளை பேருந்தில் இருக்கிறானோ எனத் தேடிப் பார்த்தாள். ஆனால் அவன் இல்லை. மன பிரம்மை என நினைத்துக் கொண்டாள்.

 

பேருந்தில் நின்றிருந்த தென்றலிடம் அருகில் பூ கட்டிக் கொண்டிருந்த பெண்கள், “நல்ல வேலை பண்ணமா இவன மாதிரி பொறுக்கி எல்லாம் இப்படித்தான் பண்ணனும்” எனக் கூற தென்றலுக்கு இறங்கிய கோபம் மேலும் ஏறியது.

 

“ஏன் ம்மா அந்த ஆளு என்னை பண்ண எல்லாம் சிலுமிஷத்தையும் நீங்களும் பாத்துட்டுதான இருந்தீங்க என் இடத்துல உங்க பொண்ணோ இல்ல அந்த ஆளு இடத்துல உங்க புருஷனோ இல்ல அண்ணன் தம்பியோ இருந்தா இப்படித்தான் அமுக்குனி மாதிரி உட்கார்ந்துகிட்டு பூ கட்டிகிட்டு பூ விலை ஏரி போச்சுன்னு பேசிகிட்டு வருவீங்களா? அப்போ எப்படி மூடிட்டு இருந்தீர்களோ இப்பவும் அதே மாதிரி மூடிட்டு இருங்க எனக்கு அட்வைஸ் பண்ற வேளை உங்களுக்கு வேண்டாம்” என அவர்களையும் ஒரு பிடி பிடித்தவள்.

 

வேறு இடத்திற்கு சென்று நின்று கொண்டாள்.

 

தனது நிறுத்தம் வர பேருந்தில் இருந்து இறங்கிய தென்றல், அவளை இப்படி தனியாக தவிக்கவிட்டு விட்டார்கள் என்று அவளின் விவு மற்றும் முட்டை கோஸ் போண்டாவின் மீது கோபமான முகத்துடன் சாலையை கடக்க நின்று கொண்டிருந்தாள்.

 

இங்கு, தண்ணீர் குடுத்து நண்பனை சாந்தப்படுத்திய பிறகு,

 

டீக்கடை பெஞ்சில் இருவரும் அமர்ந்தனர்.

 

மித்ரன் தோள் மீது கை போட்டு கொண்டு வாகாக அமர்ந்துகொண்ட விவேகன்,

 

“மித்ரா டார்லிங்க்கு ஃபோன் பண்ணு” என கூற,

 

“ஏன்டா?” என கேட்டவாறே அவர்களின் தேவகி டார்லிங்கிற்கு டையல் செய்தான் மித்ரன்.

 

“நீ போடுடா மீதி எல்லாம் அப்புறம் சொல்றேன்.” என கூறிய விவேகன் இருவருக்கும் பால் வாங்கி வர டீ மாஸ்டரிடம் சென்றான்.

 

மித்ரன் டயல் செய்யவும் எதிர்ப்புறம் அழைப்பு ஏற்கப்பட்டது.

 

அழைப்பு ஏற்கப்பட்டதும், “ஹாய் டார்லிங்.” என கூற வந்த மித்ரனை இடைமறித்தது அக்ஷாவின் குரல்.

 

“ஏன்டா தடிமாட்டு பயலே, உனக்கு எல்லாம் ஃபோன் பண்ண ஒரு நேரங்காலமே இல்லையா? நானே இப்பதான் இந்த தேவகி கையில‌ கால்ல விழுந்து அழுது புரண்டு ஆர்ப்பாட்டம் பண்ணி குழிப்பணியாரம் செய்ய கிச்சன் பக்கம் அனுப்பிவச்சேன். பணியாரம் செய்றதுக்கு முன்னாடியே மூக்கு வேர்த்துடுச்சா உனக்கு? அதுக்குள்ளே ஃபோன் பண்ணி என் பணியாரத்துக்கு ஆப்பு வைக்க வந்துட்ட.” என அக்ஷா கூப்பாடு போட்டுக் கொண்டிருக்க.

 

மித்ரன் என்ன கூறுவது என தெரியாமல் பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்தான்.

 

இருவருக்கும் பால் வாங்கிக் கொண்டு வந்த விவேகன் மித்ரனின் முழியை வைத்து நடப்பவற்றை ஓரளவுக்கு யூகித்தவன் அவனிடம் ஒரு பால் கிளாசை கொடுத்து விட்டு ஃபோனை வாங்கி பேசினான்.

 

“அக்ஷா குட்டி.” என இவன் அழைக்கவும் எதிர்ப்புறம் வெடித்துக் கொண்டிருந்த சரவெடி சற்று அமைதியானது.

 

“விவேக் அண்ணா முதல்லயே நீ பேசி இருக்க வேண்டியதுதானே எதுக்கு அந்த பன்னிக்கிட்ட எல்லாம் ஃபோன் பண்ண சொல்ற” என சலித்துக் கொண்டாள்.

 

“சரிடா குட்டிமா இனி நானே பண்ணுறேன். டார்லிங் கிட்ட ஃபோனை குடு இப்போ கொஞ்சம் அவசரம்.” என கூறி முடிக்கும் முன்பே எதிர்ப்புறமிருந்து தேவகியின் குரல், “சொல்லு டார்லிங்” என ஒலித்தது.

 

அக்ஷாவை மனதில் ‘ஸ்மார்ட்’ என நினைத்தவன்.

 

“டார்லிங் இப்போ நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோங்க இப்போ நான் ஃபோன வச்ச கொஞ்ச நேரத்துல வீட்ல தென்றல் புயலா வீச போறா. நீங்க என்னவோ ஏதோன்னு பயப்பட வேண்டாம். அவ சாப்பிடவும் மாட்டா நைட்கும் சேர்த்து மித்ரன் வீட்டுல நல்லா சாப்டா சோ நீங்க அத நெனச்சி கவலைப்படாம இருங்க. நான் காலையில வரேன் பாய் டார்லிங்” என்று அழைப்பை துண்டித்தான்.

 

தேவகியும் அக்ஷாவும் எதுவும் புரியாமல் தலையை பிய்த்துக் கொண்டு இருக்க.

 

ஒரு தென்றல் புயலாகி வருதே…

 

என்னும் பாடல் வரியை நினைவு கூறும் வகையில் தென்றல் புயலென வீட்டினுள் நுழைந்தவள் அவள் கைப் பையை தூக்கி எறிந்து விட்டு அவளின் அறைக்கு சென்று கதவை தாழிடாமல் மூடிக் கொண்டாள்.

 

நீண்ட பெருமூச்சு ஒன்றை இழுத்துவிட்ட தேவகி ‘புயல் கரையைக் கடந்து அதன் எல்லையை அடைந்தது’ என மித்ரன் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியவர் இளைய மகளுக்காக பணியாரம் செய்ய துவங்கினார்.

 

மித்ரனின் அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்த விவேகன் தேவகி அனுப்பிய குறுஞ்செய்தியை பார்த்தவுடன் இதழில் இளநகை படர்ந்தது.

 

அவன் நகைப்பை கண்ட மித்ரன் ‘என்ன?’ என ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க விவேகன் குறுஞ்செய்தியை காட்டினான். அதை பார்த்த மித்ரனும் சிரித்துவிட இருவரும் சேர்ந்து காலி கிளாசை டீ கடையில் வைத்து விட்டு வீடு நோக்கி புறப்பட்டனர்.

 

மித்ரனின் வீடு வந்து சேர்ந்தவர்கள் சிறிது நேரம் உரையாடிவிட்டு இரவு உணவை முடித்துக் கொண்டு படுக்கை அறைக்கு சென்றனர்.

 

படுக்கையில் படுத்தவாறு விவேகன் புறம் புரண்டு படுத்த மித்ரன்,

 

“டேய் இப்போ ஆச்சும் சொல்லுடா அவளை அழ வெச்சி தனியா அனுப்பிட்டு அப்புறம் அவளுக்கே தெரியாம அவளை ஏன்டா ஃபாலோ பண்ண? ப்ளீஸ் இப்போவே சொல்லு இல்லன்னா எனக்கு மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு” என புலம்பித் தள்ளிய தன் நண்பனை கண்டு விவேகன் தலையில் அடித்துக் கொண்டான்.

 

“இது கூடவாடா உனக்கு புரியாது மரமண்டை” என அவனின் தலையில் கொட்டியவன்.

 

“எத்தனை நாளைக்கு தான் நீயோ இல்ல நானோ அவளுக்கு பாதுகாப்பாவே இருக்க முடியும். வாழ்க்கைய கஷ்டமா இருந்தாலும் அவளே கத்துக்கட்டும் இனி. நாம தூர நிப்போம் கூடவே வேண்டாம். அதான் அவளுக்கு நல்லது.” என்றவன் படுத்து விட்டான். மித்ரனுக்கும் அதுவே சரியென பட்டது. 

 

பிறகு அனைவரும் நித்ரா தேவியின் ஆளுகைக்கு உட்பட்டு உறங்கிப் போயினர்.

 

மறுநாள் காலை தென்றலின் வீட்டு அழைப்பு மணி ஒலிக்க கதவை திறந்த அக்ஷா மித்ரனையும் விவேகனையும் கண்டு சிரித்தவள், அவர்களுடன் வந்த மூன்றாம் அவனை புரியாத பார்வை பார்க்க.

 

“இது தமிழ் எங்க புது ஃப்ரெண்டு குட்டிமா உள்ள கூட்டிட்டுவா” என கூறிய விவேகன் வீட்டினுள் செல்ல அக்ஷா தமிழை மட்டும் பார்த்து சிரித்து, “உள்ள வாங்க” என அழைத்து விட்டு மித்ரனை பார்த்து ஒழுங்கு காட்டி விட்டு சென்று விட்டாள்.

 

தமிழும் விவேகனும் தேவகியிடம் பேசியவாறு வீட்டின் வரவேற்பறையில் அமர மித்ரனையும் அக்ஷாவையும் தென்றலை எழுப்பி கூட்டி வருமாறு பணித்தான் விவேகன்.

 

அவன் கூறிய வேலையை செய்யவே மாட்டேன் என அடம் பிடித்த மித்ரனை அதட்டி உருட்டி அழைத்து சென்றாள் அக்ஷா.

 

பிறகு விவேகன் தமிழை தேவகியிடம் அறிமுகப்படுத்தி வைத்தான்.

 

தென்றலின் படுக்கை அறைக்கு சென்ற மித்ரன் அவள் காதின் அருகே குனிந்து காட்டுக்கத்தல் கத்தியும் சிறு அசைவு கூட இல்லை தென்றலிடம்.

 

‘ஒருவேளை செத்துடளா’ என பயந்தவன் ‘மூச்சிருக்கா’ என பரிசோதிக்க,

 

மூச்சு சீராக வந்து கொண்டிருந்தது பிறகு அவளின் முகத்தில் தண்ணீர் தெளித்தால் அக்ஷா.

 

போர்வையை கொண்டு முகத்தை துடைத்தவள் புரண்டு வேறு பக்கம் படுத்து கொண்டாள்.

 

‘இவ என்ன சரியான கும்பகர்ணியா இருப்பா போல’ என நினைத்த மித்ரனின் மூளையில் ஒரு யோசனை பொறி தட்ட உடனே அதனை செயல்படுத்த துவங்கினான்.

 

தென்றலின் படுக்கை அறைக்கும் சமையல் அறைக்கும் நடுவில் நின்றவன், “டார்லிங் அவ எழுந்துகிற மாதிரி தெரியல அவ பங்கு டீயும் பட்டர் பிஸ்கட்டையும் எனக்கு கொடுத்துடு” என பொறுமையாக கூற,

 

போர்வையை வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தவள், படுக்கை அறையில் இருந்து ஓடி வந்தாள், இடையில் நின்று கொண்டிருந்த மித்ரனையும் கவனியாது இடித்து தள்ளியவள், கிச்சன் செல்ஃபில் இருந்த பட்டர் பிஸ்கெட் டப்பாவை அவளுடன் எடுத்துக்கொண்டு வரவேற்பறை வந்தவள் விவேகனை பார்த்து முகத்தைத் திருப்பிக்கொண்டு தேவகியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

 

‘சரியான பட்டர் பிஸ்கெட் பைத்தியம்’ என மனதில் நினைத்த விவேகன் அவளின் செய்கையை கண்டு உள்ளார சிரித்துக் கொண்டான்.

 

தென்றல் மின்னலென ஓடி வந்த வேகத்தில் இடித்துத் தள்ளவும் கீழே விழுந்த மித்ரன் ஒரு கையால் இடுப்பை பிடித்துக்கொண்டு காலை தாங்கி தாங்கி நடந்துவர அவ்வளவு நேரம் சிரிப்பை கட்டுப் படுத்திக் கொண்டிருந்த தமிழ் மித்ரனை கண்டதும் இதற்குமேல் முடியாது என சத்தமாக சிரித்து விட.

 

அப்போதுதான் தென்றல் அவனை கவனித்தாள். ‘யார் இந்த புது வரவு’ என மனதில் நினைத்தவள். அவன் அருகில் வந்து அமர்ந்த மித்ரனை நோக்க அவன் தமிழை கைகாட்டி, “இவன் தான் தமிழ்” என அவளிடமும் அவள் தென்றலென அவனிடமும் இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தான்.

 

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சினேகமாக புன்னகைத்துக் கொண்டனர். ஆனால் ஏனோ தென்றலுக்கு அவனை முதல் முறைப்‌ பார்ப்பது போல் தோன்றவில்லை, பிறகு விவேகன் சொன்னது நினைவு வந்தது அவனும் அதே கல்லூரி என்பது அதனால் அவளின் உள்ளுணர்வை அடக்கி வைத்து விட்டாள்.

 

பிறகு அனைவரும் சேர்ந்து தேனீர் அருந்திக் கொண்டிருக்க விவேகன் தென்றலை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன் பார்வையின் தாக்கம் பொறுக்காமல் அவனை நிமிர்ந்து பார்த்தாள் தென்றல்.

 

சில நொடிகள் இருவர் பார்வையும் வழக்கம்போல் மௌனராகம் பேச,

 

பிறகு இருவர் இதழும் சேர்ந்து உச்சரித்தது…

 

“ஆர் யூ ஓகே பேபி” என.

 

பிறகு இருவரும் சிரித்து விட தென்றல் எழுந்து சென்று விவேகன் தோள் சாய்ந்தவாறு அமர்ந்து கொண்டாள்.

 

மித்ரன், “உன்ன தனியா விட்டதுக்கு அவன் உன்ன ஓகேவா ன்னு கேட்டான் அது சரி. நீ ஏன் லாஜிக்கே இல்லாம அவனை ஓகேவா ன்னு கேட்கிற ஒண்ணுமே புரியலையே?” என அவன் சந்தேகத்தை கேட்க.

 

அவன் கேள்வியை கேட்டு சிரித்த தென்றல் பதில் கூறுமுன் விவேகன் அவன் வாய்மொழி கொண்டே தென்றலின் மனதில் உள்ளதை வார்த்தைகளில் திரையிட.

 

தென்றல் விவேகனை தவிர்த்து அங்கிருந்த மற்ற நால்வரும் இவர்களின் உறவின் ஆழத்தையும் ஆத்மார்த்தத்தையும் எண்ணி பெருமிதம் கொண்டனர்.

 

தென்றல் பேசும்…