அன்பின் உறவே … 10

அன்பின் உறவே… 10

“சம்பாத்தியம் பண்ணத் தெரியாதவனுக்கு, காதல் கல்யாணம் ஒருகேடா?” சரஸ்வதி, பிஸ்தாவை கடித்து குதற,

“பெத்தவங்க சம்மதமில்லாம எதுக்காக என் கழுத்துல தாலி கட்டுன ப்ரஜூ?” ரவீணா சண்டைக்கு நின்றாள்.

“ஓசியில திங்கற சோத்துக்கு, வாய் வந்தவாசி வரைக்கும் நீளுது…” சரசுவின் பதிலடியில்,

“உங்கம்மா மத்த மருமகளுங்களை மகாராணி மாதிரி தாங்குறாங்க… ஆனா, என்னை நாயை விடக் கேவலமா நடத்தறாங்க! நான் எதுக்காக இந்த வீட்டுல இருக்கணும்?” ரவீணா பெட்டியை கட்டிக்கொண்டு கிளம்பினாள்.

“உன்னை மாதிரி பார்டர் பாஸ்டு அவுட் ஸ்டுடன்ட் நான் இல்ல… யுனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டர், என்னோட படிப்புல வேலைக்குப் போய் எத்தனை ஆயிரங்களை வேணும்னாலும் சம்பாதிக்க முடியும். உனக்கும் சேர்த்து நானே உழைச்சுக் கொட்டுறேன்… நீ வீட்டுல இருந்து எனக்காக வடிச்சுக் கொட்டு! இனி இந்த வீட்டுல ஒரு சொட்டு தண்ணி கூட குடிக்கமாட்டேன்!” ரவீணாவின் அடுத்தடுத்த அதிரடித் தாக்குதல்கள் மேலும் தொடர விலுக்கென்று எழுந்தமர்ந்தான் பிஸ்தா.

கண்ணுக்கு முன் இருட்டு தெரிந்தது. ஊரெல்லாம் சுற்றிவிட்டு களைத்துப் போய் வீட்டிற்கு வந்தவனுக்கு மீண்டும் இரவு உறக்கம் கேள்விக்குறியாகிப் போயிருந்தது.

ஒருவேளை, தான் சொந்தக்காலில் நிற்கத் தகுதியற்றவனாகிப் போனால், ரவீணாவின் நிலைமை என்னவாக இருக்குமென சிந்திக்க ஆரம்பித்து அதன் தாக்கத்தில் வந்த கனவு இது.

‘ச்சே… எல்லாமே கனவா?’ தன்னைச் சூழ்ந்து நின்ற பிரச்சனைகளை பற்றி நினைத்துக் கொண்டே மொட்டைமாடியில் தலை சாய்த்ததில் என்னென்வோ குழப்பக் கனவுகள் உலுக்கி விட்டன.

‘அப்படியெல்லாம் பேசுவாளா என் ரவீணா? நான் இப்படியென்று தெரிந்து தானே காதலிக்கிறாள்… நடுவீட்டில் என்னை நிற்க வைத்து கேள்வி கேட்டு விடுவாளா?’ முதல்முறையாக பய உணர்வு பந்தாக மேலெழும்ப பிஸ்தாவிற்கு தூக்கிவாரிப் போட்டது.

‘அவளின் கேள்விகளுக்கு உன்னால் பதில் சொல்லி விட முடியுமா? அதற்கான தகுதி உன்னிடத்தில் இருக்கின்றதா?’ மனசாட்சியும் உலுக்கி கேட்டதில் மிரண்டு போனான்.

‘பயம் வந்துவிட்டதா உனக்கு?’ மீண்டும் மனசாட்சி விஸ்வரூபமெடுக்க இல்லையென்று வீம்பாக மறுத்தான்.

‘இல்லை… என் காதல் தோற்காது! என் ரவீணா அப்படிபட்டவள் அல்ல…’ காதலிக்காக வக்காலத்து வாங்கியது மனது.

என்னதான் காதலியை சமாதானம் செய்துவிட்டாலும் மனதின் ஓரத்தில் புரியாத சங்கடம் ஒன்று புதிதாய் முளைத்து அரித்துக் கொண்டே இருக்கின்றது.

‘அடேய் பிஸ்தா! காதலையும், காதலியையும் சந்தேகப்படுவது மகாபாவம்’ நல்ல ஆசானாகவும் மாறி மனசாட்சி போதிக்க,

‘ஏன் சந்தேகப்படக்கூடாது? உன் அம்மாவ கூடத்தான் அசைக்க முடியாத சப்போர்ட்டுன்னு நினைச்சே… தப்புன்னு அவங்களே கவுத்துட்டாங்க! அதேமாதிரி ரவீணாவும் உன்னை கவுக்கமாட்டான்னு என்ன நிச்சயம்?’ சளைக்காமல் கவுண்டர் கொடுத்தது மனது.

“அங்க சுத்தி, இங்க சுத்தி கடைசியில காதலியையே சந்தேகப்பட வெச்சுட்டாங்களேடா!” தலையில் கைவைத்துக் கொண்டு அமர்ந்தான் பிஸ்தா. எத்தனை எத்தனையோ அலைகழிப்புகள் மனதிற்குள்… அதை அடக்கும் விதம் எப்படியென்று தெரியவில்லை அவனுக்கு.

‘எங்க வீட்டுல இருக்கவே பிடிக்கல ப்ரஜூ’ காணொளியில் அழுது கரைந்த ரவீணாவின் வேதனை, அவனது உயிரையே கரைத்து விட்டிருந்தது..

‘சொந்தமாக ஒரு வீடு இருந்திருந்தால் அவளை அள்ளிக்கொண்டு வந்திருக்கலாம். சமயம் பார்த்து, அயர்ன்லேடியும் நாட்டாமையும் சேர்ந்து வீட்டில் இடமில்லை; சொத்தில் பங்கில்லையென்று சொல்லி பயமுறுத்தித் தொலைத்து விட்டார்கள்’ தனது தர்மசங்கடமான நிலையை எண்ணி பிரஜனின் மனம் புலம்பித் தவித்தது.

அன்றைய நடுநிசி நிலவுடன் சோககீதம் பாடிக் கொண்டிருக்கும் வேளையில், அழுத்தமான காலடியோசை கேட்டுத் திரும்ப, அங்கே நின்றவன் ரவீந்தர். தம்பியின் மீது அக்கறை கொண்டவனாய்,

“என்னடா பிஸ்தா? இன்னும் எத்தனை நாளைக்கு இந்த உண்ணாவிரதமும் மொட்டைமாடி வாசமும்? வெறும் வயித்தோட படுக்கக்கூடாது. ஏதாவது கொண்டு வரச் சொல்லட்டுமா?”

“ம்ப்ச்… வேணா’ண்னே…. மனசுல சங்கடம் குவிஞ்சு கெடக்கும் போது, வயித்துக்கு என்ன கேடு வந்தது? பட்டினியா கிடக்கட்டும்” சுரத்தில்லாமல் பேசும் தம்பியை ‘ஐயோ பாவமே’ எனப் பார்த்தான் அண்ணன்.

“காதலிச்சா சங்கடம் வரும்னு தெரிஞ்சுதானே கோதாவுல இறங்குன… எந்த காலத்துல, இந்தக் காதலை வீடும் சமூகமும் பொக்கே கொடுத்து இன்வைட் பண்ணியிருக்கு?

நீ இப்படி பட்டினி கெடந்தா, எல்லா பிரச்சனையும் சரியாகிடுமா? ஏதாவது சாப்பிடு! அப்புறம் விலாவரியா பேசுவோம். வயித்துல இருந்தா தான் மூளையும் பளிச்சுன்னு வேல செய்யும்” கரிசனத்துடன் ரவீந்தர் சொல்ல, வீட்டில் தனக்கு கிடைத்த சொற்ப அன்பையும் மறுக்க மனமில்லாதவனாய் தலையாட்டினான் பிஸ்தா.

அடுத்த இரண்டு நிமிடத்தில் அம்பிகா உணவுடன் வர, அண்ணனுக்கும் தம்பிக்கும் அன்றைய நிலாச்சோறு அமிர்தமாக இறங்கியது.

ரவீணாவின் வீட்டில் நடந்ததையும், குருமூர்த்தியின் காவல்நிலைய படையெடுப்பையும் மேலோட்டமாக சொல்லிவிட்டான் தம்பி. எக்காரணம் கொண்டும் தனது அத்துமீறலை போட்டுடைக்கவில்லை. இவனது பேச்சிற்கு இடையில் அங்கே வந்து சேர்ந்த ராஜேந்தரும்,

“நானும் கேள்விப்பட்டேன்’டா பிஜூ! அந்த ஆளுக்கு என்ன நெஞ்சழுத்தம் இருந்தா நம்ம குடும்பத்து மேலே கம்ப்ளைண்ட் கொடுத்திருப்பான். அவன சும்மா விடக்கூடாது” எகிறி நிற்க, பெரியவன், இரண்டு பேரையும் அடக்கி வைத்தான்.

“மொதல்ல இவனோட காதல் விவகாரத்த சரி பண்ணிட்டு, அவரை கவனிப்போம் ராஜா!” என ஆரம்பித்த ரவீந்தர்,

பிஸ்தாவின் புறம் திரும்பி, “இந்த விசயத்துல நிச்சயமா இருவீட்டார் சம்மதமும் கிடைக்கப் போறதில்ல… அதுக்காக உன் காதலை மறந்துடுன்னு நான் சொல்ல மாட்டேன்! அந்த பொண்ணுகிட்ட ஏதோ ஒண்ணு பிடிக்கப் போயி தானே, நீ அவள மனசுல ஏத்துகிட்டே…” அழுத்தமாக கேட்க, ஆமென்று தலையசைத்தான் பிஸ்தா.

“நாங்களும் இந்த சூழ்நிலையை கடந்து வந்தவங்க தான்டா! அம்பிகாவை தவிர வேற யாரையும் கட்டிக்கிறியான்னு என்னைக் கேட்டிருந்தா, என்னாலயும் முடிஞ்சிருக்காது!

அதே மாதிரி பிரதீபாவை விலக்கி வைக்க மனசில்லாம தான் ராஜாவோட காதல், கல்யாணத்துல முடிஞ்சது.  உனக்கும் அப்படிதான்! ரவீணாவோட கடைசி செமஸ்டர் முடியட்டும். அதுக்குள்ள நீயும் ரெண்டு வீட்டு சம்மதமும் கிடைக்கலன்னா என்ன செய்யலாமுன்னு முடிவெடு!” ரவீந்தர் தைரியம் கொடுக்க,

“அந்த குருமூர்த்தி ஒண்ணும், அவ்வளவு சீக்கிரத்துல அல்வாத்துண்டு மாதிரி பொண்ணை யாருக்கும் தூக்கி குடுத்திடமாட்டான். தொழில், சொத்துபத்துன்னு எல்லாம் பார்த்து அங்கே மாப்பிள்ளை அமையுறதுக்குள்ள நாம பக்காவா ப்ளான் பண்ணிடலாம்” ராஜேந்தர் நம்பிக்கை அளிக்க,

“நானும் ரவுடிதாங்கிற மாதிரியே பேசுறீங்களே பிரதர்ஸ்!” ஷோபையாய் கிண்டலடித்தான் பிஸ்தா.

“காலர நிமிர்த்திட்டு திரிஞ்சா தான் ரவுடியா சின்னவனே? நம்ம எல்லாருக்குள்ளேயும் எல்லாமே அடங்கிக் கிடக்கு. தேவைப்படும்போது வெளியே வரும். உன்மேல, உன் முதலாளிக்கு நம்பிக்கை வர்ற மாதிரி, உத்தியோகத்துல கவனமா இருக்கப் பாரு! உன் தொழில்ல முன்னேற இன்னும் ஏதாவது வழியிருந்தா அதையும் ட்ரை பண்ணு!

உன்னைப் பத்தின நம்ம நாட்டாமையோட கணிப்பும் மாறனும்டா… இல்லன்னா, நாளைக்கு உனக்குப் பொண்டாட்டியா வர்றவளே உன்னை கேலி பேசற மாதிரி ஆகிடும். சொல்றது புரிஞ்சதா?” அமைதியாக ரவீந்தர் கேட்க, நன்றாகவே புரிந்ததென்று தலையாட்டி வைத்தான்.

இத்தனை நேரம் இவன் கண்ட கனவும் அதன் பாதிப்புதானே! மேலும் பல யோசனைகளைக் கூறிய சகோதரர்கள், உத்வேகத்தையும் ஆறுதலையும் அளித்து விட்டுச் செல்ல, அவனுக்குள் யானைபாலம் வந்தது.

தன் கவலையை பகிர்ந்து கொள்ளவும் தோள்கொடுக்கவும் சகோதரர்கள் இருக்கிறார்கள் என்ற நினைவே அவனை உற்சாகப்படுத்தியது. ஆனால், முயற்சிகளை முன்னெடுக்கும் முறைமைகள் தான் எப்படி, எங்கே ஆரம்பிப்பதென்று அவனுக்குத் தெரியவில்லை.

மன அமைதியற்ற உறக்கம் தொடர, மீண்டும் பல குழப்பமான சிந்தனைகள் கனவுகள் என நீண்டு, அன்றைய இரவுத் தூக்கமும் பறிபோனது.

மறுநாள் காலை உணவு நேரத்தில் தனது பயணப்பொதியுடன் பிரஜேந்தர் வந்து நிற்க, கேள்வியாய் மனைவியை நோக்கினார் கருணாகரன்.

“வேலை விசயமா நாலுநாள் ஊருக்கு போறேன். உடனே, நான் இந்த வீட்டை விட்டுப் போறதா யாரும் சந்தோஷப்பட்டுக்க வேணாம். அந்த ஐடியா எல்லாம் எனக்கில்ல…” தெனாவெட்டுடன் பொத்தம் பொதுவாக கூறிவிட்டு மகன் நடையைக் கட்ட,

“வீடில்ல, சொத்தில்லன்னு சொன்னதும் பய வழிக்கு வர்றான் போலயே… இந்த நாலுநாள் ட்ரிப்புக்கு யாரோட பர்சை கொள்ளையடிச்சான், உன்புள்ள?” எள்ளலாக மனைவியிடம் கேட்டார் கருணாகரன்.

“அவன் திருந்திட்டான்னு சந்தோசப்படுறதை விட்டுட்டு இப்போ இந்த நக்கல் பேச்சு தேவையா? என்னமோ ஒவ்வொரு தடவையும் நீங்க குடுத்து விடுற மாதிரிதானே சளிச்சுக்கறீங்க? எப்பவும் போல எந்த அக்கவுண்ட்ல இருந்து பணத்தை எடுப்பானோ அதுல இருந்து தான் இந்த தடவையும் எடுத்திருப்பான். இதுல என்ன புலன் விசாரணை வேண்டிகிடக்கு?” நொடித்துக் கொண்டார் சரஸ்வதி.

விடிந்ததுமே கீழே வந்து அம்மாவின் கைபேசியை வாங்கியவன், அவரின் வங்கிக்கணக்கிலிருந்து இரண்டு லட்சத்தை தனது வங்கிக்கணக்கிற்கு மாற்றிக்கொண்டு,

“ஏன், எதுக்குன்னு கேட்டு விசாரணை கமிஷன் வைக்காதே தாயே! இனாமா கொடுக்க நினைச்சா இதுக்குண்டான கணக்கை ஒருவாரம் கழிச்சு தர்றேன்! இல்லன்னா, எனக்கு கடனா குடுத்ததா கணக்கெழுதி வைச்சுக்கோ! ஒருவருஷம் கழிச்சு பணமா திருப்பி தர்றேன்!” பூடகமாய் கூறிவிட்டு வேலைமுடிந்ததென சென்று விட்டான் பிஸ்தா.

சரஸ்வதிக்கு நினைவு தெரிந்து, தனது பிள்ளை மிகப் பொறுப்பானவனாக இன்றுதான் பதில் சொல்லிச் சென்றதாய் பூரித்துப் போனார். அந்த மகிழ்ச்சியில் திளைத்து கொண்டிருந்தவருக்கு கணவரின் பேச்சு பாவக்காய் கசப்பாக முகம் சுளிக்க வைக்க, தவப்புதல்வனுக்கு உடனே வக்காலத்து வாங்கி விட்டார் சரஸ்வதி அம்மையார்.

********************************

இங்கே ரவீணாவின் வீட்டிலும் முடிவில்லா போராட்டம் தான். அவளின் உறக்கமும் களவுபோய் எதையும் ஜீரணிக்க முடியாத அவல நிலையில் தவித்துக் கொண்டிருந்தாள். கல்யாணம், மண்டபம் என அன்றாடம் உரையாடும் தந்தையின் அலைபேசிப் பேச்சு அவளை தணலில் நிற்க வைத்தது.

வழக்கமாக வாரநாட்களில் கோவைக்கு சென்றுவிடும் குருமூர்த்தி, இங்கேயே தங்கிவிட்டது வேறு வீட்டில் பல்வேறு சங்கடங்களைக் கொடுத்தது. ஏனோ, எல்லாமே திடுதிப்பென்று நடப்பதைப் போன்றதொரு மாயத்தோற்றம்  அனைவருக்கும்…

திருமணப் பேச்சு வார்த்தையை உறுதி செய்து கொள்ளவென வீட்டில் அவசரப்பட, இன்னும் பரிட்சை முடியவில்லையென்று ஆரம்பித்தவளை பார்வையாலேயே சுட்டுப் பொசுக்கி விட்டார் தந்தை. அவரின் தாளத்திற்கு தப்பாமல் அன்னையும் ஜால்ரா தட்ட, இவளின் பேச்செல்லாம் கிணற்றில் போட்ட கல்லாகிப் போனது.

இங்கே நடப்பதை தனது அன்பனிடத்தில் சொல்வதற்கும் முடியவில்லை. அலைபேசியும் அவளின் கையை விட்டு ஏற்கனவே நழுவியிருந்தது. இவளைப் பார்க்க வந்த தோழிகளுடனும் பேசவிடாமல் தடுத்து விட்டார் சுகந்தி. கிட்டத்தட்ட சிறையில் இருக்கும் நிலைமைதான் அவளுக்கு…

உச்சகட்டமாக நகை, புடவை என திருமணத்திற்கு வாங்கிக் குவிக்க ஆரம்பித்திருக்க, வீறுகொண்டு அனைத்தையும் தள்ளிவிட்டு கோபத்தை தணித்துக் கொண்டாள். இறுதி செமஸ்டர் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இதையெல்லாம் பார்த்து படிப்பிலும் கவனம் சிதறிப் போனது ரவீணாவிற்கு…

***********************************************

ஒருவாரத்திற்கு பிறகு, வெளியூருக்கு சென்ற பிரஜேந்தர் நேராக, பிஸ்தா ஜுவல்லர்ஸில் அமர்ந்திருந்த தனது அண்ணன்களின் முன்னால் வந்து நின்றான்.

“என்னடா பிஜூ? எங்கே போன… ஒரு ஃபோன் இல்ல, மெசேஜ், ஸ்டேடஸ்னு எதுவுமில்ல… என்ன விசயமா போன?” களைத்து ஓய்ந்த முகத்துடன் இருந்த தம்பியைப் பார்த்து பாசமாகக் கேட்டான் ரவீந்தர்.

“ராஜா அண்ணனையும் கூட்டிட்டு ஆபீஸ் ரூமுக்கு வா’ண்ணா! கொஞ்சம் பேசனும்” கூறிவிட்டு சென்றவனின் பேச்சினைக் கேட்க, அலுவலக அறைக்கு வந்து நின்றனர் சகோதரர்கள் இருவரும்.

“ரெண்டு புராஜெக்ட் எடுத்திருக்கே’ண்ணா… அதுக்கு ஐம்பது லட்சம் வேணும்” இளையவன் அதிரடியாகக் கேட்டதில் இருவருக்கும் மயக்கம் வராத குறைதான்.

“கொடுத்து வச்சவன் மாதிரியே கேக்கறியே’டா பயலே!” ரவீந்தர் ஆரம்பிக்க

“நம்ம மாதாஜிகிட்ட தானே இந்த பிட்டை எல்லாம் போடுவ… புதுசா என்ன நம்மகிட்ட வந்திருக்க?” ராஜேந்தர் தொடர்ந்தான்.

“அது அந்தகாலம்… இப்ப பிஸ்தா உருப்படப்போற காலம். சோ, எதிர்கேள்வி கேட்காம பணத்த ஏற்பாடு பண்ணிக் கொடுங்க!” அதிகாரமாய் கேட்க,

“பிஸ்தான்னு பேரு வைச்சாலும் வைச்சோம், பணிவா  கேக்குறத கூட ஆர்டர் போடுற ரேஞ்சுலயே கேட்டுத் தொலைக்கிறான்” ராஜேந்தர் அங்கலாய்த்து முடித்தான்.

“நடக்குற விசயமா பேசுடா சின்னவனே! அவ்வளவு பணமெல்லாம் அப்பாவுக்கு தெரியாம கொடுக்க முடியாது. ஃபர்ஸ்ட் உன்னோட புராஜெக்டுக்கு கொட்டேஷன் ரெடி பண்ணு! அதைக்காட்டி வேண்ணா அப்பாகிட்ட இருந்து வாங்கித் தர்றேன், அதுவும் கடனா… இல்லன்னா, லோன் ட்ரை பண்ணுவோம்” முடிவாக ரவீந்தர் கூற, தம்பியின் முகத்தில் அதிருப்தி ரேகை படர்ந்தது.

“லோன் புராசஸ் எல்லாம் டைம் எடுக்கும்’ண்ணா… ஹாட்கேஸ் வேணும் எனக்கு. நீ கேக்குற கொட்டேஷன் ரெடி பண்ண நான் வேலைய ஆரம்பிக்கணும். ஃப்ரண்ட்ஸ் பத்துபேர் சேர்ந்து செய்யப் போறோம். நீ கொடுக்குற பணம் கொஞ்சங்கூட குறையாம உங்களுக்கு வந்து சேரும். இன்ட்ரெஸ்டுக்கு பதிலா ரெண்டு பேருக்கும் குவாட்டர்லி புராஃபிட்ல இருந்து டூ பெர்சன்ட் கமிசன் குடுக்க முடிவு பண்ணியிருக்கோம்” வரிசையாக அவனது திட்டங்களை விளக்கிக் கொண்டே போக, அசந்து போனார்கள் அண்ணன்கள்.

“டேய் பிஸ்தா… இதெல்லாம் உனக்கு ஒத்து வருமா? எங்கேயும் தப்பாகாம செய்யமுடியுமா?” பெரியவன் கேட்க,

“அண்ணா… முதுகுவலிக்க வேலை பார்க்கணும்னா தான் நான் சோம்பேறி… மத்தபடி மூளைக்கு வேலை குடுக்கிறதுல நான் எப்பவும் சுறுசுறுப்பு தான். ரெண்டு வருஷம் பாண்ட் எழுதிட்டு பணத்தை குடுங்க… என்மேல நீங்க நம்பிக்கை வச்சாதானே வெளியாளுங்க என்னை நம்புவாங்க! என்ன ராஜாண்ணா நான் சொல்றதும் கரெக்ட் தானே?” உறுதியுடன் பேசியவன், வழக்கம்போல் சின்ன அண்ணனை துணைக்கழைத்துக் கொள்ள, அவனும் ஆமாமென்று ஒப்புதலளித்தான்.

தம்பியின் வேகமும் அவனது திட்டங்களும் சகோதரர்களுக்குமே நல்ல அபிப்ராயத்தை தர, கடை கணக்கில் இருவருக்கும் சொந்தமான பங்கிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தனர்.

தனித்தனியாக பங்கு சந்தையில் முதலீடு செய்யவென தந்தையிடம் காரணம் கூறப்பட்டது. தம்பிக்கு பணம் கொடுத்த விஷயம் அவருக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டனர்.

இரண்டு நாட்களில் பணம் கைக்கு வந்து சேர, மூன்று லட்சத்தை தனியாக எடுத்து வைத்தான் பிரஜேந்தர்.

“இது எதுக்குடா பிஜூ?” – ராஜேந்தர்,

“என்னோட சொந்த செலவுக்கு…” பிஸ்தா,

“என்னடா சொல்ற?” – ரவீந்தர்.

“தனிவீடு பார்க்கணும்… வீட்டுக்கு தேவையான திங்க்ஸ் வாங்கிப் போடணும்… முக்கியமா என் கல்யாணச் செலவும் இதுல அடக்கம்…” சொல்லிக்கொண்டே சென்றவனின் முதுகை மொத்தி எடுத்து விட்டனர் சகோதரர்கள்.

“அறிவுகெட்டவனே! ரெண்டு வீட்டுலயும் போய் பேசாமா எதுக்கு இந்த முடிவு எடுத்த?” கோபமுடன் ரவீந்தர் கத்த,

“தனியாப் போயி, நம்ம குடும்பத்தை தலைகுனிய வைக்கப் போறியா’டா படுபாவி!” ராஜேந்தரும் சளிக்காமல் திட்டத் தொடங்கினான்

“வெயிட் பிரதர்ஸ்… ஏற்கனவே ரவீணா வீட்டுல கல்யாண வேலையெல்லாம் ஸ்டார்ட் ஆகிடுச்சுனு அவ ஃப்ரண்ட்ஸ் மூலமா எனக்கு நியூஸ் வந்துடுச்சு! எப்படியும் அந்த குருமூர்த்தி சம்மதம் சொல்லாம ஏழரையை கூட்டுவாரு! இந்தப் பக்கமும் நம்ம அப்பா அம்மா எதுக்கும் சளைச்சவங்க கிடையாது. அதான், இந்த அவசர முடிவு!”

‘ஒருதடவ பேசிப் பார்க்க்கலாம்டா பிஜூ!” அண்ணன்களின் பல அறிவுரைகள் மூளையில் ஏற, கடைசி முயற்சியாக மீண்டும் தனது காதலுக்கு சம்மதம் கேட்டு அப்பாவிடம் நின்றான் பிரஜேந்தர்.