அன்பின் உறவே… 11

அன்பின் உறவே… 11

தன் முன்னால் தயக்கத்துடன் வந்து நின்ற மகனின் மனதை, பார்வையாலேயே படித்து முடித்தார் கருணாகரன்.

“என்னடி சரசு… அன்னைக்கு என்னமோ என் புள்ள திருந்திட்டான்னு வாய்கிழிய பேசின? அது உன்ன ஏமாத்துறதுக்கு செஞ்ச வேலை போல தெரியுதே! என்னவாம் துரைக்கு?” குத்தலாக கேட்டுக்கொண்டே போக, சரசு இடைமறித்தார்

“அவன் என்ன சொல்ல வர்றான்னு தெரியாமயே ஏன் பேசி முடிக்கிறீங்க? என்னனு தான் கேட்டு வைங்களேன்!”

“மொச புடிக்கிற நாய மூஞ்சிய பார்த்தா தெரியாதா? திரும்பவும் பழைய கேடியா காதலிய தேடிப் போகப்போறாரு உன் புத்திர சிகாமணி!” கருணாகரன் இளக்காரமாக சொல்லி முடிக்க ‘அப்படியா’ என பார்வையாலேயே கேட்டார் சரஸ்வதி.

“தெரிஞ்சே எதுக்கு குத்தி காமீக்கிறீங்க? சொந்தமா தொழில் தொடங்க ஏற்பாடு பண்ணத்தான் அன்னைக்கு வெளியூருக்கு போனேன். என்ன ஏதுன்னு சக்சஸ் ஆன பிறகு சொல்றேன்!” பட்டும்படாமலும் பிரஜன் பதிலைச் சொல்ல,

“அப்ப, நான் சொல்லி, நீ ஒரு இடத்துல வேலைக்கு போறியே… அத என்ன செய்யப் போற?” தந்தையின் கேள்வியில் கடுமையான அதிருப்தி தெரிந்தது.

“அதையும் சேர்த்து பார்க்கத்தான் போறேன்!” என்றவன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு,

“நான் எப்பவும் என் காதலை மறந்துட்டேன்; காதலியை மறந்துட்டேன்னு சொல்லவே இல்ல… இப்பவும் ரவீணாவ எனக்கு கட்டி வைங்கன்னு கேக்கத்தான் வந்திருக்கேன்!”  தீர்க்கமாகக் கூறி, பெற்றவர் முகம் பார்த்து நின்றான்.

“அதானே… நெருப்பில்லாம புகையாதே! துரை தனக்கொரு ஏற்பாட்டை பண்ணிட்டுதான் இங்கே வந்து நிக்கிறாரு… எனக்கு, இப்ப ஒரு பேச்சு, அப்ப ஒரு பேச்சுன்னு எல்லாம் இல்ல! எப்பவும் ஒரே பதில்தான். அந்த பொண்ணை உனக்கு கட்டி வைக்க மாட்டேன். அந்தப் பொண்ணா? இந்த வீட்டு மனுசங்களான்னு நீதான் முடிவு பண்ணிக்கணும்” கணீரென்ற குரலில் கருணாகரன் சொல்லி முடிக்க,

“அப்போ தாத்தா சொத்துல எனக்குரிய பங்கை குடுங்க… நான் என் வழியப் பார்த்துட்டு போறேன்!” சட்டென்று பதிலுக்கு குரலுயர்த்தினான் பிஸ்தா.

பெற்றவரின் முன் அதிகப்படியாக இவன் பேசியதில் அண்ணன்களுக்கும் பிடிக்காமல் போக, ‘நீ பேசுவது கொஞ்சமும் சரியில்லை’ என்ற கண்டனப் பார்வையை அவன் மீது தெறிக்க விட்டனர்.  

“என்னடா… ஷாக் டிரீட்மெண்ட் குடுக்கப் பாக்கறியா? நீ என்ன சொன்னாலும் என் முடிவு மாறாது. நான் பார்த்து பராமரிக்கலன்னா உனக்கு எங்கே இருந்து தாத்தா சொத்து வரப்போகுது? அதெல்லாம் சல்லிப்பைசா குடுக்க முடியாது, ஓடிப்போயிடு!” ஆங்காரமாய் முடிவைச் சொன்னார் தந்தை.

“நீங்க குடுக்கலன்னா என்ன? என்னால கோர்ட்ல கேஸ் போட்டு வாங்கிக்க தெரியும்”

“டேய்!” கோரஸாக அண்ணன்கள் அதட்ட,

“அடப்பாவி… இதுக்காகவா உன்னை பாராட்டி, சீராட்டி வளத்தேன்?” சரஸ்வதி கண்ணீர் வடிக்க ஆரம்பித்தார்.

“என்னமும் செஞ்சுக்க… இப்போதைக்கு நீ வீட்டை விட்டு நடையக் கட்டு!” மகனிடம் கர்ஜித்தவர்,

“டேய் ராஜா! இந்த சின்னநாய வெளியே தள்ளிட்டு கேட்டை இழுத்துச் சாத்துடா….” ராஜேந்தரிடம் கூற,

“இல்லப்பா… அது வந்து… தம்பி!” என அவன் இழுக்க, 

“அவனுக்கு சப்போர்ட் பண்ணி, யார் பேசினாலும் அவங்களும் வீட்டை விட்டு வெளியே போயிடலாம்” தந்தை இறுதி முடிவாகச் சொல்லிவிட, அடிபட்ட புலியாய் வீட்டை விட்டு வெளியேறினான் பிஸ்தா.

**************************************************

கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய பிரஜேந்தர் செய்த வேலைகள் எல்லாம், கருணாகரனுக்கு தொல்லையாகவே முடிந்தன.

இவர்களின் வீட்டுத் தோட்டத்தின் பின்புறம் வேலையாட்கள் குடும்பத்துடன் தங்குவதற்கென தொகுப்பாக ஐந்து வீடுகள் கட்டப்பட்டிருந்தது. குடும்ப நபர்களின் வசதிகளை கருதி பெரும்பாலும் அங்கே வேலையாட்கள் குடித்தனம் செய்யாததால், எப்போதும் இரண்டு வீடுகள் காலியாகவே இருக்கும். அப்படி காலியாக உள்ள ஒருவீட்டில் சென்று பிரஜன் தங்கிக் கொண்டான்.  

முதலாளியின் மகன் வந்து தங்கும்போது அங்கிருந்த வேலையாட்களால் எதிர்ப்பினைக் காட்ட முடியவில்லை. விசயத்தை மட்டும் முதலாளியிடம் தெரிவித்து விட்டு அமைதியாகி விட்டனர். தவிர, வீட்டுப் பிரச்சனையும் லேசுபாசாய் வெளியே கசிய ஆரம்பித்திருக்க, அதுவே அவனுக்கு சாதகமாகப் போயிற்று.

அதையும் பார்த்து அதட்டல் போட்ட கருணாகரனிடம், “இங்கே இருந்தும் அவனை விரட்டி விட்டுட்டு, நம்ம குடும்ப ராமாயணத்தை ஊருக்கே தெரியப்படுத்த போறீங்களா? அது கௌரவமா உங்களுக்கு… கழுதை, இங்கயே ஒரு மூலையில இருந்து தொலைக்கட்டும்” கணவருக்கு சாதகமாகப் பேசி மகனை, தனது கண் பார்வைக்குள் வைத்துக் கொண்டார் சரஸ்வதி.

மிக எளிய முறையில் குடித்தனம் பண்ணும்படியாக வீட்டிற்கு தேவையான கட்டில், சேர் மற்றும் அத்தியாவசிய வகைகளை அம்பிகாவிடம் விவரங்கள் கேட்டு வாங்கிக் கொண்டான்.

ஒரேநாளில் கேஸ் அடுப்பும் சிலிண்டர் இணைப்பும் ராஜேந்தரின் புண்ணியத்தில் வந்துசேர, காபி போட்டுக் குடித்து, தனது நளபாகத்தை தொடங்கினான் பிரஜேந்தர். கையை சுட்டுக் கொண்ட வீரத்தழும்பும் தனிகுடித்தனத்தின் சிறப்புப் பரிசாக வந்து சேர்ந்தது.

அடுத்ததாக குடிபோன வீட்டில் கதவு சரியில்லை, குழாய் ஒழுகுகிறது போன்ற பல குறைகளை ஆள் வைத்து சரிபார்த்துக் கொண்டவன், அதற்குண்டான பணத்தை தனது தந்தையிடம் வாங்கிக் கொள்ளச் சொன்னான். தனக்கான மேம்பட்ட வசதிகளை அந்த சின்ன வீட்டில் செய்து கொள்ளவும் தவறவில்லை.

“உங்க நிர்வாக அழகு இப்பதானே தெரியுது! வேலைக்காரங்க தங்குற வீடுதானேன்னு பாரபட்சம் பார்க்கிறவர், கிராமத்துல இருக்குற எங்க தாத்த சொத்தை என்ன மாதிரி பாரமரிப்பாரு?” குற்றம் குறைகளை அடுக்கிக்கொண்டே தோட்டத்தில் நின்று நர்த்தனமாடுபவனை அடக்க யாரும் முன்வரவில்லை.

“இனிமே இப்படித்தான்… தாத்தா சொத்துல இருந்து எனக்குரிய பங்கு வர்ற வரைக்கும் நான் இங்கேயிருந்து அசையப் போறதில்ல!” திமிராகப் பேசியவனை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் ஆத்திரம்தான் வந்தது தந்தைக்கு… அப்படிச் செய்தால் குடும்பமானம் சந்தி சிரித்து விடுமே என்று மெளனம் காத்தார் 

தனது பஜாஜ் வாகனத்தையும், “சொத்து கைக்கு வரும்போது கணக்கு பண்ணிக் கொள்ளலாம்” என்ற பதிலுடன் தன் குடியிருப்பிற்கு உருட்டிக்கொண்டு வந்து வைத்துக் கொண்டான். இவன் வருவதும் போவதும் பிஸ்தா பேலஸின் பின்கட்டு வழியாக மட்டுமே என்றாகிப் போனது.

உறங்குவதற்கு மட்டுமே வீட்டிற்கு வந்து, அமைதியுடன் நாட்களை கடத்தினாலும் பல வேலைகளை சத்தமில்லாமல் செய்து முடித்திருந்தான் பிரஜேந்தர். அதன் முதற்கட்டமாக சொற்ப எண்ணிக்கையில் தனது திருமணப் பத்திரிக்கையை தயாராக அடித்து வைத்துக் கொண்டது.

இப்பொழுதெல்லாம் மூன்று சகோதரர்களின் சந்திப்பும் ஹோட்டல், பார்க், கோவில் என வெளியிடங்களில் நடந்தது. வீட்டிற்கு தெரிந்து சந்தித்தால், இதற்கென இவர்களின் பெற்றோர் தனி பஞ்சாயத்தை கூட்டுவர் என்பதும் தெளிவான விஷயம். இந்த சந்திப்பு வீட்டு மருமகள்களுக்கு தெரிந்தாலும் தெரியாத பாவனையில் நடமாடினர்.

தந்தைக்கும் தம்பிக்கும் உள்ள பனிப்போரில் அண்ணன்கள் தேவையில்லாமல் மூக்கை நுழைக்க விரும்பவில்லை. என்றாவது ஒருநாள் இந்த பிரச்சனை நிச்சயம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு…

இந்த இடைவெளியில் குருமூர்த்தியும் மகளின் நிச்சயத்திற்கு நாள்குறித்து, பத்திரிக்கையும் அடித்து தினசரிகளிலும் விளம்பரப்படுத்தி இருந்தார். 

நிச்சயதேதியும், பிரஜேந்தர் திருமணத்திற்கென பத்திரிக்கை அடித்த தேதியும் ஒன்றாக இருந்தது.

“என்னடா பிஜு? ரெண்டு டேட்டும் ஒண்ணா இருக்கு… எதுவும் குழப்பமாகாது தானே…” ராஜேந்தர் சந்தேகத்துடன் கேட்க, 

“அவர் நிச்சயம் பண்ணின தேதியில கல்யாணத்தையே நடத்திடுவோம்னு நான்தான் ஃபிக்ஸ் பண்ணிட்டேன்! எப்படியும் நாள், நட்சத்திரம் பார்த்து அந்த ஆளு நாள் குறிச்சிருப்பாரு. நமக்கும் அய்யர்கிட்ட போற செலவு மிச்சம்தானே?” வெகு இலகுவாய் பேச,

“நீ நடத்து ராசா… ஆனா, இந்த திமிரும், அடாவடியும் எல்லா நேரமும் கைகொடுக்காது. எதுக்கும் கொஞ்சம் அடக்கியே வாசி!” ரவீந்தர் அறிவுறுத்தினான்.

“பொண்ணை எப்படிடா வீட்டுக்கு தெரியாம வெளியே கூட்டிட்டு வரப்போற… அதபத்தி யோசிச்சியா?” ராஜேந்தரின் கேள்வி.

“வீட்டுக்கு தெரியாம வர்றதை எல்லாம் அவ விரும்பமாட்டா… நான், அவர் வீட்டு வாசப்படிய மிதிக்ககூடாதுன்னு, என்மேல கம்பிளைண்ட் பண்ணாருல்ல… நானே போயி கூட்டிட்டு வரப்போறேன்!” வீராப்புடன் பேசிய தம்பியிடம்,

“அந்த பொண்ணுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டியாடா?” ரவீந்தர் கேட்க,

“இந்த தேதியில வர்றேன்னு இப்பவரைக்கும் தெரியப்படுத்தல… ஆனா, எப்படியாவது வர்றேன்னு சொல்லியிருக்கேன்! நான் மேரேஜுக்கு அரேன்ஞ் பண்ணியிருக்கிறதும் அவளுக்கு தெரியாது. ஸ்வீட் சர்பிரைஸ் குடுக்கப் போறேன்!” பதட்டமில்லாமல் கூறினான் பிஸ்தா.

“வேலு ஸ்டீல்ஸ் வீட்டுப் பேரன்தான் மாப்பிள்ளையா? ரொம்ப பெரிய இடமாத்தான் பார்த்து பிடிச்சிருக்காரு உன் மாமனார்!” தினசரியை பார்த்துக் கொண்டே ராஜேந்தர் கேட்க,

“எப்படி வளைச்சு போட்டாரோ தெரியலையே? உன் லவ் மேட்டர்ல இவங்களையும் நாம பகைச்சுக்கணுமா?” யோசனையில் ஆழ்ந்தான் ரவீந்தர்.

“அப்படியெல்லாம் நடக்காது’ண்ணே! நான் மாப்பிள்ளையை பார்த்து பேசுறேன்…” சகோதரர்களை சமாதானப்படுத்திய பிரஜேந்தர், அடுத்தநாளே மாப்பிள்ளையை, அவனது இடத்திற்கே சென்று சந்தித்தான்.

சபரீஷ் சரவணவேல்… ரவீணாவிற்காக, குருமூர்த்தி நிச்சயம் செய்த மாப்பிள்ளை. வெளிநாட்டில் படிப்பை முடித்துவிட்டு சமீப நாட்களாக தொழிலில் கவனம் செலுத்த ஆரம்பித்திருந்தான். பிரஜேந்தர் தங்களது நிறுவனத்தின் பெயரைச் சொல்லி தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.

“வெரி கிளாட் டூ மீட் யூ!” கைகுலுக்கலில் தொடங்கிய அவர்களின் சம்பாஷனையில், அலங்கார வார்த்தைகள் ஏதுமின்றி தனது காதல் கதையினை கூறி முடித்திருந்தான் பிஸ்தா.

“என் கையில எதுவுமே இல்ல மிஸ்டர் பிரஜன்! மோர்எவர் எனக்கும், ஒருத்தன் காதலிச்ச பொண்ண மேரேஜ் பண்ணிக்கிறதுல கொஞ்சமும் இஷ்டமில்ல… சோ, யூ ப்ரோசீட் அஸ் யுவர் விஷ்!” கோபமோ பதட்டமோ இல்லாமல் வெளிப்படையாக சபரீஷ் பேச, மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு, தனது திட்டத்தையும் விளக்கி முடித்தான்.

நிச்சயதார்த்த தினத்தின் காலைபொழுது ஆறுமணி… அதாவது பிரஜேந்தர் முடிவு செய்த திருமணநாளின் காலை வேளையில் சபரீஷ், குருமூர்த்தியின் வீட்டிற்கு அழையா விருந்தாளியாக போய் நிற்க, சற்றே பதட்டப்பட்டாலும் வாய் நிறைய வரவேற்றார் குருமூர்த்தி.

“வாங்க… வாங்க மாப்பிள்ளை! என்ன இந்த நேரத்துல? ஃபோன்ல சொல்லியிருந்தா, நானே வந்திருப்பேனே!” கூழைக் கும்பிடு போடாத குறைதான். பெரிய இடத்து சம்மந்தம் ஆயிற்றே…

“என் ஃப்ரண்டு ஒருத்தன், உங்களை பார்க்கனும்னு சொன்னான். அதான், அவனை இங்கே வரச் சொல்லிட்டு, உங்ககிட்ட இன்ரடியூஸ் பண்ண நான் வந்திருக்கேன்!” ஆசுவாசமாய் சொல்லி அமர்ந்த ஐந்து நிமிட இடைவெளியில் பிரஜன் அங்கே வர, அன்றைய கலவரங்கள் ஆரம்பமாகின.

“இவன் எதுக்கு இங்கே வந்திருக்கான்?” முணுமுணுத்த குருமூர்த்தி,

பிரஜன், சபரீஷின் அருகில் வந்து நிற்கவும், “இவன் என்ன சொன்னாலும் நம்பாதீங்க மாப்ள! என் பொண்ணு மேல எந்த தப்பும் இல்ல” படபடப்புடன் உளறிக்கொண்டே, தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்.  

“வந்தவர்கிட்ட என்ன ஏதுன்னு கூட கேட்காம, நீங்க உளறிக் கொட்டுறதுலயே, இவர் சொல்ல வந்த விசயம் உண்மைதான்னு புரியுது. உங்க பொண்ணை பத்தி அபாண்டமா பேச எனக்கு மட்டும் ஆசையா என்ன? ஆனா, பாருங்க சார்… கோவில்ல மாலை மாத்திட்டு வந்து நிக்கற  பொண்ணை, எப்படி நான் கல்யாணம் பண்ணிக்கிறது?” சத்தமில்லாமல் வெடிகுண்டு ஒன்றை சபரீஷ் தூக்கிபோட, குருமூர்த்தியின் உடல் லேசாக நடுங்கத் தொடங்கியது

“ஆதாரம், இதோ இருக்கே!” பிரஜன் கையிலுள்ள அலைபேசியை வாங்கி அதிலிருந்த காணொளியை ஓட விட, தெளிவாக காட்சிகள் நகர ஆரம்பித்தன.

அதில், ரவீணாவின் பிறந்த நாளன்று இருவரும் அதிகாலையில் கோவிலுக்குள் சென்றது முதல், அங்கிருந்த இறைவன் சந்நிதானத்தில், அர்ச்சனை செய்து மாலை மாற்றிக் கொண்டது வரை தெள்ளத் தெளிவாக படமாகியிருந்தது.

அர்ச்சகர் மாலை எடுத்துக் கொடுக்க, இருவருமே மாலை மாற்றிக்கொண்டு, ஒருவருக்கொருவர் விபூதி குங்குமம் இட்டுக்கொண்ட காட்சியும், அதே கோலத்தில் கோவில் பிரகாரத்தை சுற்றி முடித்ததும் தெளிவாகப் படம் பிடிக்கப் பட்டிருந்தது. காணொளிக் காட்சிகள் புகைப்படங்களாகவும் அவரின் முன் வைக்கப்பட்டது.  

“ஏதோ கிராஃபிக்ஸ் செஞ்சு இவன் விளையாடுறான்…. இதை நம்பாதீங்க!” குருமூர்த்தி கத்த,

“கோவில்ல இருக்கிற சிசிடிவி கேமரா பொய் சொல்லாது மிஸ்டர்… இன்னைய தேதிக்கு பத்திரிக்கையும் அடிச்சு அதே கோவில்ல கல்யாணமும் நடத்த பெர்மிஷனும் வாங்கியிருக்காங்க இவங்க பிரதர்ஸ்… அதுக்குண்டான ரெசிப்டு காபி கூட என்கிட்டே காமிச்சுட்டாரு மிஸ்டர் பிரஜன். இன்னும் எந்த முகத்தை வைச்சுட்டு உங்க பொண்ணை எனக்கு கட்டிக் கொடுக்கப் போறீங்க?” சபரீஷ் வார்த்தைகளால் விளாசத் தொடங்க, வாயடைத்து நின்றார் குருமூர்த்தி.

“தாலி கட்டுனா தான் கல்யாணம் முடிஞ்சதா அர்த்தம்னு நீங்க பாயிண்டா சொன்னாலும், எங்க குடும்பத்துல இப்படிப்பட்ட பொண்ணை ஏத்துக்க மாட்டாங்க…” வார்த்தைகள் இறுக்கத்துடன் வந்தன.

பிரச்சனை பிரஜேந்தர் மூலம் வருமென்று குருமூர்த்தி எதிர்பார்த்தார் தான். ஆனால், இப்படி நேர் அதிரடியாக மாப்பிள்ளையின் வாய்வழியாக வெளிப்படுமென்று அவர் நினைக்கவே இல்லை. தவிர, கோவிலில் மாலை மாற்றிக் கொண்ட விசயமும் இப்பொழுது தானே இவருக்கும் தெரிய வருகிறது. பல யோசனையில் உழன்றவருக்கு மேற்கொண்டு என்ன பேசுவதென்றே மறந்து போனது.

இத்தனை நேர பேச்சுச் சத்தம் கேட்டு அம்மா, பாட்டி, பேத்தி என மூவரும் வெளியே வந்திருந்தனர். நடப்பவை எதுவும் புரியாதபோதும் பிரஜேந்தர் தன்னை அழைத்து செல்ல வந்திருக்கிறான் என்பது மட்டுமே தெள்ளத் தெளிவாக விளங்கிப்போக ரவீணாவின் முகம் அந்த நிமிடமே மலர்ந்து போனது.

இதனை தவறாமல் கவனத்தில் கொண்ட சபரீஷ், “இதுக்கும் மேல அதட்டி, உருட்டி உங்க பொண்ணை சம்மதிக்க வைச்சாலும், இந்த நிச்சயத்துக்கு நான் சம்மதிக்க மாட்டேன்…” என்றவன் பிரஜனின் புறம் திரும்பி,

“என்னோட தலையீடு, இனி இங்கே இருக்காது பிரதர்!” என முடித்தான்.

பின், குரோதம் கொப்பளிக்க, “பணம், அந்தஸ்து ஆசையில எங்க குடும்பத்துல சம்மந்தம் பண்ணி எங்களை ஏமாத்த பார்த்திருக்கீங்க! இதுக்கான லாப நஷ்டங்களை சந்திக்க தயாரா இருங்க மிஸ்டர்!” அழுத்தத்துடன் வெளிப்பட்ட சபரீஷின் பேச்சு, குருமூர்த்தியை கதிகலங்க வைத்தது.

அவ்வளவு தான்… அனைத்தும் ஒய்ந்து போனதைப் போன்ற அமைதி நிலவ, பிரஜேந்தர் பேச ஆரம்பித்தான்.

“உங்களை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கனும்னு எங்களுக்கு ஆசையில்ல… அதுக்காக, எங்க ஆசையையும் விட்டுக் கொடுக்க நாங்க தயாரா இல்ல… ரவீணாவ என்ன பயமுறுத்தி வச்சிருந்தாலும் அது, இந்த நேரத்தில நடக்காது.

உங்க வீட்டுலயோ, எங்களுக்கோ எந்தவொரு அசம்பாவிதம் நடந்தாலும், உங்கமேல ஆக்சன் எடுக்க சொல்லி, நானும் சபரீஷும் போலீஸ்ல லெட்டர் எழுதி குடுத்திருக்கோம். எங்களுக்கும் டிபார்மெண்ட் ஆளுங்களை தெரியும் சார்! சோ… உங்க ஆசையை எல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு அமைதியா, உங்க பொண்ணை என்னோட அனுப்பி வைங்க!” வெற்றிப் புன்னகையுடன் கூறிவிட்டு,

ரவீணாவைப் பார்த்து, “எந்த திங்க்ஸும எடுத்துக்காதே ரவீ!  அப்படியே என்கூட வர்றதுக்கு உனக்கு ஓகே தானே!” அழைத்தவனின் குரலில் கர்வமும் காதலும் போட்டிபோட, மந்திரித்த கோழியாக தலையை ஆட்டிகொண்டு அவனருகில் அருகில் வந்து நின்றாள். நடப்பவைகள் அனைத்தும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருக்க, எதை, எப்படி கேட்கவென்று அவளுக்கும் புரியவில்லை.

இத்தனை நாட்கள் காதலின் அவஸ்தையில் தவித்தவளுக்கு இளைப்பாருதலாக அவனது அருகாமை அமைய, எவ்வித  கூச்சலும் குழப்பமும் இல்லாமல், அம்மாவிடமும் பாட்டியிடமும் கண்களால் விடை பெற்றுக்கொண்டு காதலனுடன் வெளியேறினாள் ரவீணா.

இவர்களின் பின்னோடு வந்த சபரீஷிடம், “ரொம்ப தாங்க்ஸ் சபரி… நீங்களும் கல்யாணத்துக்கு வாங்க!” பிரஜன் அழைப்பினை விடுக்க,

“இல்ல பிரஜன்… வேற ஒரு நல்ல சந்தர்ப்பத்துல நாம மீட் பண்ணுவோம். விஸ் யூ ஹாப்பி மேரீடு லைஃப்!” வாழ்த்தினை கூறி நாசூக்காக விலகிச் சென்றான் சபரீஷ் சரவணவேல்.

**************************************************

“மச்சினர் பேரு வச்ச மாதிரியே பொண்ணும் ரோஜாபூவாட்டம் அம்சமா இருக்கா…” கோவிலின் பின்புற மண்டபத்தில் அவசரமாக மணப்பெண் அலங்காரம் நடந்து கொண்டிருக்க, பிரதீபா கமெண்ட் அடித்துக் கொண்டிருந்தாள்.

எந்தவித மறுப்பும் சொல்லாமல் காதலனுடன் கைகோர்த்து வந்தவ ரவீணாவை, அம்பிகாவும் பிரதீபாவும் சேர்ந்து கிண்டலடித்து சகஜமாக்க, வெட்கப் புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது அவளுக்கு.

“ஏதேது… பொண்ணை பார்த்து இன்னும் ஒருமணி நேரம் கூட ஆகல… அதுக்குள்ள பார்வையெல்லாம் அந்த பக்கம் திரும்புது. ரசகுல்லா மாதிரி இருக்குற நீயே இவளைப் பார்த்து வழியும்போது, நம்ம பிஸ்தா அசந்து விழுந்ததுல தப்பே இல்ல…” அம்பிகா கேலியுடன் நொடித்துக் கொள்ள, இயல்பாகப் படரும் திருமணப் பெண்ணின் நாணமும், சந்தோசமும் ரவீணாவின் சிவந்த முகத்தை மேலும் அழகாக்கியது.   

ஆடம்பரமில்லாத அரக்குநிற பட்டுபுடையும் மிதமான அலங்காரமும் மிளிர, மணமேடைக்கு வந்தமர்ந்தவளை இமைதட்டிப் பார்த்த பிரஜேந்தர்,

“ரோஜாப் பூந்தோட்டம் பூத்து குலுங்குதுன்னு உன்னை பார்த்து தான் சொன்னாங்களா பிங்கி?” வழமையான சீண்டலுடன் பேசி அவளை சிரிக்க வைக்க, அந்த அழகான தருணத்தில் மாங்கல்ய தாரணம் நடைபெற்று, காதலில் கனிந்தவர்கள் கல்யாண பந்தத்தில் கட்டுண்டனர்.

இருபக்கத்து பெரியவர்களாக ரவீந்தரும், ராஜேந்தரும் தங்களின் மனைவிகளுடன் சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்றி, திருமணத்தை பதிவும் செய்து, பொறுப்பாக முன்னின்று நடத்தி அனைத்து வேலைகளையும் சுபமாக முடித்தனர்.  

மணமக்களுக்கு வாழ்த்தினை தெரிவிப்போம் நண்பர்களே!!!