அன்பின் உறவே… 12

அன்பின் உறவே… 12

மகள் தன்னை மீறி போய்விட்டாள் என்றதும் ருத்திரதாண்டவம் ஆடிவிட்டார் குருமூர்த்தி. மனம் அடங்கவில்லை அவருக்கு…

“நம்ப வச்சு கழுத்தறுத்துட்டா… அப்பனை அவமனாப்படுத்திட்டு ஓடிப் போயிட்டா உன் பொண்ணு! போலீஸ் செக்யூரிட்டி, கம்ப்ளைண்ட் எதுவும் பிரயோஜனமில்லாம போச்சு!” அவரது கர்ஜனையில் சுகந்தியின் வீடு யுத்தகளமாக காட்சியளித்தது.

அவள் வீட்டை விட்டுச் சென்ற ஒருமணி நேரமாக தணலாக கொட்டிய அவரின் துவேச வார்த்தைகளை வாயை மூடிக் கேட்டுக் கொண்டிருந்தனர் சுகந்தியும் அம்சவேணியும்…

“போனவள நினைச்சு கொந்தளிச்சுட்டு இருக்காம, அடுத்து ஆக வேண்டியதப் பாருங்க! எனக்கும் இப்படியொரு பேத்தி வேண்டவே வேண்டாம். நானும் அவளை தலைமுழுகிடுறேன்!” மருமகனின் கோபத்தை காணச் சகிக்காமல் பாட்டி அமைதிப்படுத்த முயல, அவரிடமும் தனது ஆவேசத்தை காண்பித்தார் குருமூர்த்தி.

“இது நல்லாயிருக்கே? உங்க வெட்டி வீராப்பை எல்லாம் நான் நம்பனுமா? பேத்திய மனசுக்கு பிடிச்சவனோட  அனுப்பி வைச்சுட்டு, இந்த பக்கம் எனக்கும் சமாதானம் பண்ணி நல்லவங்களாகப் பாக்கறீங்களா? ஒத்த பொண்ண, ரெண்டு பொம்பளைங்க சேர்ந்து வளர்த்த லட்சணம் சிரிப்பா சிரிக்குது” பாரபட்சம் பார்க்காமல் முதியவரிடமும் குருமூர்த்தி நெருப்பை அள்ளிக்கொட்ட, கொதித்துப் போனார் சுகந்தி.

“அம்மா… அவ ஒண்ணும் யாருக்கும் தெரியாம போகல… நம்ம கண்ணு முன்னாடி நேர்வழியில, அவளுக்கு பிடிச்சவனோட தான் போயிருக்கா! இதுக்கெல்லாம் காரணம் இவரோட அகம்பாவம் தான்…” மகளுக்கு வக்காலத்து வாங்கிப் பேசியவருக்கு, சுளீரென்ற கன்னத்து அறையை பரிசாக அளித்தார் குருமூர்த்தி.

“இந்தத் திமிருதான்டீ… இந்த வாயிதான்டீ… அவளுக்கும் தைரியம் சொல்லிக் கொடுத்துப் போக வைச்சிருக்கு. எல்லாமே பிளான் போட்டு பண்ணிட்டு, மகளுக்கு வக்காலத்து வாங்கிப் பேசுறியா?”

“…”

“என்னை தலைகுனிய வைச்சிட்டுப் போனவள அவ்வளவு ஈசியா விட்ருவேனா? பார்த்துட்டே இரு… உன் மகளும் உன்னை மாதிரியே வாழவெட்டியா வந்து நிக்கப்போறா… அவளை அப்படிக் கொண்டு வந்து நிக்க வைக்கிறேன்!” தன் உதிரத்தையே காவு வாங்கத் துடிக்கும் குருமூர்த்தியின் ரௌத்திர சம்பாஷனையைக் கேட்க முடியாமல் காதுகளைப் பொத்திக் கொண்டார் சுகந்தி.

“இதுதான்யா நீ! உன்னோட நிஜம் இதுதான்… பெத்த பொண்ணுக்கு கூட உன் மனசுல இடங்கொடுக்காத சுயநலப் பிண்டம் நீ!” கணவனைக் காறித்துப்பிய சுகந்தி,

“இப்ப புரியுதா’மா? ஏன் நான், இவரை ஒதுக்கு வைச்சேன்னு… இவரோட கெளரவத்துக்காக பெத்த பொண்ணையே பலி கொடுக்க நெனைக்கிறவரோட சுயரூபத்த இனிமேலாவது மனசுல பதிய வைச்சுக்கோ!” அடிவாங்கிய வலியுடன் அம்மாவிடம் பேச ஆரம்பித்து, குருமூர்த்தியை பார்வையாலேயே சுட்டுப் பொசுக்கினார்.

பதிலுக்குபதில் செய்துவிடு என உள்மனம் உலுக்கி எடுத்தாலும் பெண்ணினத்தின் சுபாவம் கணவனுக்கெதிராக கைநீட்ட விருப்படவில்லை. 

“உன் முடிவை சொல்லியாச்சுல்ல… இதோட உனக்கும் இந்த வீட்டுக்கும் இருந்த சகவாசம் முடிஞ்சு போச்சு! பொண்ணை பகடைக்காயா உருட்டி விட்டே, என்னை தேளா கொட்டின பாவத்துக்கு இன்னும் நீ அனுபவிப்ப… உன்னோட தகப்பன் வேஷம் எப்படியெல்லாம் கிழியப்போகுதுன்னு நானும் பாக்கறேன்யா… இனி, நீ செத்தாலோ, நான் செத்தாலோ அநாதை பொணமா கூட மொகம் பார்த்துக்க வேணாம். இப்பவே நீ வெளியே போகலாம்” மூச்சு வாங்கிப் பேசிய மனைவியின் கை வெளிவாசலை காண்பிக்க, குருமூர்த்தி அந்த வீட்டிலிருந்து மொத்தமாக வெளிநடப்பு செய்தார்.

*******************************

திருமணப் பதிவோடு விருந்தையும் முடித்துக்கொண்டு பின்வாசல் வழியாக வீட்டிற்கு வந்த மணமக்களை அம்பிகா ஆரத்தி எடுத்து உள்ளே அனுப்பி வைத்தாள்.

“மாமா கோபத்துக்கு பயந்து, வீட்டு வேலைக்காரங்களை விட்டு ஆரத்தி எடுக்க வைச்சா, அது நம்ம குடும்பத்துக்கு தான் அசிங்கம் அத்தை. உங்க உத்தரவோட இந்த வீட்டு மருமகளா ஆரத்தி எடுத்து, உள்ளே அனுப்பிட்டு வந்திடுறேன். நாளபின்ன யாரும் நம்மள குத்தம் சொல்லிடக்கூடாது பாருங்க!”

மூத்த மருமகள் பேசிய நியாயம் மாமியாருக்கும் சரியென்று பட, இரண்டு மருமகள்களையும் கணவருக்கு தெரியாமல் கோவிலுக்கு அனுப்பி வைத்து, இப்பொழுது வரவேற்பையும் கொடுக்க அனுமதி அளித்திருந்தார் சரஸ்வதி.

அம்பிகா ஆரத்தி எடுக்க, மனம் முழுக்க குழப்பங்களையும் கேள்விகளையும் சுமந்தபடி, கணவனுடன் கைகோர்த்து  அந்த ஒண்டிக் குடித்தன வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தாள் ரவீணா.

குத்து விளக்கினை ஏற்றி, அங்கிருந்த சுவாமி படத்தின் முன் இருவரும் விழுந்து வணங்கினார்கள். ஊரறிய திருமணம் நடக்காமல் போனாலும் தங்கள் காதல் மீது கொண்ட நம்பிக்கையில் ஆரம்பித்த வாழ்க்கை செழிப்பாக அமைய வேண்டுமென்று மனம் இறைவனிடம் மன்றாடியது.

பிரதீபா, பால் பழம் கொடுத்து முடிக்கவும், ”இன்னைக்கே பால் காய்ச்சுடலாம் மச்சினரே! அப்ப தான், நாளையில இருந்து நீங்க புதுக்குடித்தனம் தொடங்க சரியா இருக்கும்”  அம்பிகா பேசியபடியே அதற்கான வேலைகளில் இறங்கினாள்.

பால் காய்ச்சி முடித்து, மதியம் கல்யாண விருந்தும் அந்த வீட்டில் அமர்க்களப்பட்டது. மளிகை, பாத்திரம் பண்டங்களை முன்தினம் இரண்டு அண்ணிகளும் சேர்ந்து வாங்கிக் கொண்டு வந்திருக்க, திருமண வாழ்க்கை மிக சுபிட்சமாகத் தொடங்கியது.

கல்யாணச் சந்தடிகள், விருந்து என ஒய்ந்து அண்ணிகள் பங்களாவிற்கு போனதும், முதன்முறை கணவன் மனைவியாக தனிமையில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

சிருங்காரச் சிரிப்பும் ரசனைப் பார்வையும் தொடுக்கும் திருமணநாளில், சிந்தைனையின் எல்லைகோடுகளில், முட்டிக்கொண்டு நிற்கும் புருவமுடிச்சுகளோடு இருவரின் பார்வையும் சந்தித்துக் கொண்டது. 

“என்னை, ஏன் இங்கே கூட்டிட்டு வந்த ப்ரஜூ? உங்க அம்மா, அப்பா எதுக்கு நம்ம கல்யாணத்துக்கு வரல?” உள்ளடங்கிய குரலில் கேள்விகளைத் தொடுத்தாள் ரவீணா.

இதோ கொட்டிவிடுவேன் என்று இமையின் கரைகளில் கண்ணீர் நின்று கொண்டிருக்க, அதனைப் பார்த்து பிரஜேந்தருக்கு சலிப்பு தட்டியது

‘கல்யாணம் முடிஞ்சதும் சந்தோசமா என்னை பத்தி விசாரிப்பா… நான், இவளை கூட்டி வந்ததுக்கு தேங்க்ஸ் சொல்லுவான்னு பார்த்தா, பெருசுங்களை பத்தி கேட்டு இம்சை பண்றா!’ உள்ளுக்குள் முணுமுணுத்தவன் பதில் சொல்லாமல் நிற்க,

“நீ இங்கே தான் தங்கியிருக்கியா? எப்போ வீட்டை விட்டு வெளியே வந்த?” பீதியடைந்த குரலில் அடுத்த கேள்வியை தொடர்ந்தாள் மனைவி.

“எங்க வீட்டுல சம்மதிச்சு, நம்ம கல்யாணம் நடக்கணும்னா அது இந்த ஜென்மத்துல நடந்திருக்காது ரவீ! எங்க வீட்டுல காதலுக்கு சிவப்புகொடி காட்டி, வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னாங்க… நான், இங்கே வந்து தங்கிட்டேன்! இந்த வீட்டுலதான் நாம லைஃப் ஸ்டார்ட் பண்ணப் போறோம்” இலகுவாக சொல்லிக்கொண்டே போனவனின் வார்த்தைகள் பெண்ணிற்கு அளவில்லா அதிர்ச்சிகளை அளித்தன.

அவர்களின் புதிய வாழ்க்கையை நினைத்து அப்பட்டமான பயம் சூழ்ந்து கொண்டது ரவீணாவிற்கு. ‘என் வீட்டில் தான் எதிர்ப்பு என்றால், இவன் பெற்றோர் கூடவா? எனக்காக, என் மீது கொண்ட காதலுக்காக, வீட்டை விட்டும் வெளியேறி இருக்கிறானா… பெற்றோர்களின் ஆசீர்வாதம் இல்லாத இந்த திருமண வாழ்க்கை சந்தோசத்தையும் நிம்மதியையும் அள்ளிக் கொடுக்குமா?’ கணவனின் அன்பின் மீது கர்வம் கொண்ட அதே சமயம், அடுக்கடுக்கான கேள்விகள் மனைவியின் மனதில் புயலாக மையம் கொண்டன.

“வெயிட் பண்ணியிருக்கலாமே ப்ரஜூ?”

“உன்ன வேற ஒருத்தனுக்கு தாரை வார்த்துக் கொடுக்க உங்கப்பன் ரெடியாகாம இருந்திருந்தா, நீ சொன்னதை செஞ்சிருக்கலாம் பிங்கி!” என்றவன், மனைவியை அனுசரணையாகப் பார்த்து,

“உன்னை வீட்டை விட்டு வெளியே கூட்டிட்டு வந்துட்டா, பின்னாடியே வந்து அள்ளிட்டு போயிடுவான். அதுக்குதான் மேரேஜுக்கு பக்காவா ரெடி பண்ணிட்டு வந்து உன்ன கூப்பிட வந்தேன்!” தன்பக்க நியாயங்களை எடுத்துரைத்தவனை குற்றம் சொல்லத் தோன்றவில்லை.

ஆனாலும் நெருஞ்சி முள்ளாய் மனம் குத்தத் தொடங்கியது. அதன் வலி தாங்கமுடியாமல் கணவனை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி விட்டாள் ரவீணா.

“உனக்கு, உன்னோட ரோசம், வீம்பு, காதல்தான் முக்கியமா போச்சு… வீராப்பா நீ செஞ்ச காரியமெல்லாம் எனக்கு என்ன மாதிரியான பேரை வாங்கிக் கொடுக்குமுன்னு கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தியாடா?” கேட்டவளின் சன்னக் குரலில் ஆவேசம் கொப்பளிக்க, அவளின் சிவந்த கண்களும் அதற்கு சாட்சியாகின.

“உனக்கு என்ன கெட்டபேர் வந்திடப் போகுது? புரியல எனக்கு…” பிஸ்தா விளங்காமல் கேட்க,

“எந்த முகத்தை வச்சுகிட்டு, உன்னோட பேரண்ட்ஸ நான் ஏறெடுத்து பார்க்க முடியும்? அவங்க மகன் வீட்டை விட்டு வெளியேறினத்துக்கு காரணமே நான்தான்னு, என்னை பார்க்கிறப்ப எல்லாம் அவங்க மனசு கொதிச்சு போகுமே ப்ரஜூ! அதை எப்படி மாத்த முடியும்? என்னை இப்படியொரு பாவத்தை சுமக்க வைச்சுட்டியே…” பேச்சோடு பேச்சாக விசும்பலும் தொடர, கணவன் கொதிநிலைக்கே சென்றான்.

“சொன்ன பதிலையே திரும்பவும் என்னைச் சொல்ல வைக்காதே! எல்லாம் உன் அப்பன் செஞ்ச சதியில தான் இப்ப, இங்கே வந்து நிக்குறோம்!” பல்லைக் கடித்து அலுத்துக் கொள்ள,

“வீட்டை விட்டு வெளியே வந்தவன் வேற இடத்துக்கு போகாம இங்கே ஏண்டா தங்கியிருக்கே? அது இன்னமும் கோபத்தை அதிகப்படுத்துமே உன் வீட்டுல உள்ளவங்களுக்கு…” மனைவியின் ஆற்றாமைக் கேள்விகள் முடிவுக்கு வரவில்லை.

“இத்தனை வருசமா வீட்டுக்குள்ளயே பொத்தி பொத்தி வளர்த்திட்டு, திடீர்னு வெளியே போகச் சொன்னா எங்கேன்னு நான் போறது? ஏரியாவுக்கு ஏரியா எங்கப்பா வீடு கட்டி வச்சிருக்காரா என்ன? வீடுன்னு போய் நின்ன உடனே அட்வான்சுன்னு ஒன்ன கேப்பான், அதுக்கெல்லாம் யாருகிட்ட போய் கையேந்துறது?

அதான், வெளியில போயி பிச்சை எடுக்குறதை விட வீட்டுக்குள்ள இருந்தே போராட்டம் பண்றதா முடிவு பண்ணேன். நான் அப்படி செய்யலன்னா நீயும் இந்நேரம் இங்கே இருந்திருக்க மாட்ட… அந்த சபரிக்கு மோதிரம் மாத்திட்டு அவனுக்கு சொந்தமாகியிருப்ப…” விளக்கம் கூறியவனின் குரலில் ஆவேசம் கட்டுக் கடங்காமல் வெளிப்பட, அவனது ரௌத்திரத்தில் ஊமையாகிப் போனாள் ரவீணா.

அவளறிந்த, இவளது காதலன் குறும்பன், அடாவடி, முன்கோபிதான்… இத்தனை ஆக்ரோசமானவன் அல்லன்… கணவனாக பதவியேற்றதும் தானாகவே வந்து சேர்ந்த அதிகாரம், மனைவியை ஆட்டுவித்தே தான் அடங்கும் போலிருக்கிறது.

‘என் தரப்பு நியாயத்தை சொல்லிவிட்டேன்… இனி உன்பாடு!’ என்ற பாவனையை மனைவியிடம் காண்பித்து விட்டு, அமைதியுடன் நகர்ந்து விட்டான் பிஸ்தா.

அடுத்து என்ன செய்வதென்று புரியாத ரவீணா, அமைதியாக ஜன்னலுக்கருகில் அமர்ந்து தோட்டத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்த வேளையில் சரஸ்வதியின் கூக்குரல் அங்கிருந்து கேட்டது.

“அருமை பெருமையா, செல்லம் கொடுத்து வளத்ததுக்கு பெரிய்ய்ய பெருமைய தேடிக் கொடுத்திட்டான். பெத்தவங்களை எதிர்த்து கல்யாணம் பண்ணினதோட நிக்காம, நம்ம தோட்டத்து வீட்டுக்கே கூட்டிட்டு வந்து குடித்தனமும் பண்ண ஆரம்பிச்சுட்டான் ராஸ்கல்! இவங்க ஜோடி போட்டுட்டு வாழுற அந்த கன்றாவிய பார்த்து, நான் நாக்கை பிடுங்கிட்டு சாகனும். அதுக்குதான் இப்படியெல்லாம் செய்யுறான்” அழுகையோடு சுடுசொற்களை சரஸ்வதி வாரியிறைக்க,

“என் வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பான்னு நினைச்சேன்! இப்படி சுடுதண்ணிய அள்ளி மூஞ்சியில கொட்டிட்டான். பெரிய இடத்து சம்மந்தம் தேடி வர்ற நேரத்துல இப்படியா ஒருத்தன் மடத்தனம் பண்ணுவான்?” கருணாகரனின் வார்த்தைகள் பல்லிடுக்கில் அறைபட்டே வந்தன.

“அந்த பொண்ணுக்காவது வெட்கம் வேணாமா? இவன் கூப்பிட்டான்னு ஓடி வந்திருக்காளே… நம்ம சாதிசனங்களுக்கு மத்தியில இனிமே எப்படி தலைநிமிர்ந்து நடப்பேன்?” சகட்டு மேனிக்கு புலம்பித் தீர்த்தார் சரஸ்வதி.

இவர்களின் ஒரு வார்த்தையை கூட விடாமல் ஸ்பஷ்டமாக உள்வாங்கிக் கொண்டிருந்த ரவீணாவின் உடலெல்லாம் ஆட்டம் கண்டது.

“எதுக்காக இப்படி நடுங்கிட்டு இருக்கே?” மனைவியின் தோள்பிடித்து தன்பக்கம் திருப்பினான் பிரஜேந்தர்.

“ரொம்ப பயமா இருக்கு ப்ரஜூ! பெத்தவங்களோட வயித்தெரிச்சல் பலிக்கும்னு சொல்வாங்கடா!” தேம்பியபடி தோளில் சாய்ந்து கொண்டவளை தட்டிக் கொடுத்து ஆறுதல்படுத்தினான் பிரஜேந்தர்.

“பெத்தவங்கள பகைச்சிட்டு வாழப்போற வாழ்க்கையில போராட்டங்கள் வரத்தான் செய்யும். எல்லாப் பக்கமும் கொஞ்சநாளைக்கு இப்படிபட்ட பேச்செல்லாம் கேட்டுதான் ஆகணும். என்ன நடந்தாலும் தாங்கிக்க வேண்டியதுதான் ரவீ!” மனைவிக்கு புரிய வைக்க, அவள் கண்களில் கரகரவென்று கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது

“இவன் சம்பாதிச்சு கிழிக்கிற அழகுக்கு கல்யாணம் ஒண்ணுதான் கேடு! அந்த சிமெண்டு கட்டடத்துல எத்தனை நாள் குடித்தனம் பண்ணிக் கிழிக்கிறான்னு பார்க்கலாம்” கருணாகரன் விடாமல் கர்ஜனை செய்ய, தலையிலடித்துக் கொண்டு கண்ணீர் விட்டார் சரஸ்வதி.

மாமனார், மாமியாரின் சாபங்களுக்கு தடை சொல்ல முடியாமல் மருமகள்கள் இருவரும் மௌனமாக நின்றனர்.

“அவன் தலையில, அவனே மண்ணை அள்ளிப் போட்டுகிட்டா நாம என்ன செய்ய முடியும்?” நேரத்திற்கேற்றபடி சங்கு ஊதினான் ராஜேந்தர்.

பெரியவருக்கு தங்களின் மேல் சந்தேகம் வராமல் இருப்பதற்காக, மகன்களும் மருமகள்களும் அவரின் புகைச்சலுக்கு சாமரம் வீச ஆரம்பித்திருந்தனர். 

“நாம எதுக்காக வருத்தப்படனும்? அவனோட பிடிவாதத்துக்கு அவன் நின்னா, நாமளும் அப்படியே நின்னு காட்டுவோம். நம்மை தலைகுனிய வச்சவனுக்கு புத்தி வரணும். உங்களை மதிக்காதவனுக்காக ஒப்பாரி வெச்சு உடம்பை வருத்திக்காதீங்கம்மா…” அன்னைக்கு ஆறுதல் கூறி, உள்ளே அழைத்துச் சென்றான் ரவீந்தர்.

“எல்லாம் அந்தப் பொண்ணோட அப்பாவால வந்த பிரச்சனை. போலீசு, கேசுன்னு போயி எல்லார் நிம்மதியையும் காவு வாங்கிட்டாரு!” அம்பிகாவிடம் தன் சினத்தை வெளிப்படுத்தினாள் பிரதீபா.

“வாழுறதுக்கு வீடு இருந்தா போதுமா? குடும்பம் நடத்த, டம்பமா ஊர் சுத்த, இவரோட சொற்ப வருமானம் எப்படி காணும்? அவசரத்துக்கு ப்ரெண்ட்ஸ் பணம் கொடுத்து ஹெல்ப் பண்ணியிருப்பாங்க! அந்தத் திமிருல மச்சினரு ஆட்டம் போடுறாரு! கையில இருக்கிற காசு தீர்ந்ததும் அம்மா, அப்பான்னு உங்க கால்லதானே வந்து விழணும். ஒட்டு மொத்தமா அப்ப பார்த்துக்கலாம் மாமா!” அம்பிகா சற்று அதிகமாகவே ஊதிக் கொளுத்திப் போட அமைதியாக உள்ளே சென்றார் கருணாகரன்.

*****************************************

கதிரவன் தன் பயணத்தை முடித்துக் கொண்ட முன்னிரவுப் பொழுது… இருளடைந்து விட்ட தோட்டத்தை, சோகமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மனைவியிடம் தேநீர் கோப்பையை கொண்டுவந்து கொடுத்தான் பிரஜேந்தர். 

“ரெஃப்ரஷ் பண்ணிட்டு வா பிங்கி! ஷாப்பிங் போயிட்டு உனக்குத் தேவையானத வாங்கிட்டு வந்துடுவோம்!” என அழைக்க, வேண்டாமென மறுத்தவளின் கன்னங்களில் பல்வழித் தடங்களாக கண்ணீர்க் கறைகள்…

“ம்ப்ச்… எனக்கு ஒன்னும் வேணாம் ப்ரஜூ! மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு”

“அடியே! சோகப்பாட்டு பாடுனது போதும். துப்பட்டா கூட இல்லாம நீ வந்தது, உனக்கு ஞாபகமிருக்கா இல்லையா? சீக்கிரம் கிளம்பி வா! உனக்கு நாலுசெட் சல்வார், எக்ஸ்ட்ராஸ் எல்லாம் வாங்கிட்டு வந்துடுவோம்” அதிரடியாக உத்தரவு போட, இளித்துக்கொண்டே தலையைச் சொறிந்தாள் ரவீணா.

“மறந்தே போயிட்டேன் பாரேன்! ச்சோ ஸ்வீட் ஹப்பி’டா நீ! ஆமா, இதுக்கெல்லாம் பணம் எப்படி? சம்பளம் வாங்கின அன்னைக்கே மொத்த பணத்தையும் கரைக்கிற ஆளாச்சே நீ?”

“என்னடீ பொண்டாட்டி பவரை காமிக்கிறியா?”

“அச்சோ, அப்படியில்லடா… சம்பாத்தியம் பண்ணத் தெரியாதவன்னு உங்கப்பா கிண்டல் பண்ணினாரே! அதான், எப்படி சமாளிக்கிறியோன்னு தெரிஞ்சுக்க கேட்டேன்!”

“காதலிக்கும் போது எந்தக் கவலையும் தெரியமாட்டேங்குது. அதுவே கல்யாணம் ஆனதும் எல்லாப் பிரச்சனையும் பூதாகாரமா தெரியுது. உன்னைக் கஷ்டப்படுத்தாம எப்படியாவது செலவுகளை சாமளிக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன்!” ஆசுவாசமாய் சொன்னதில் மனம் குளிர்ந்தாள்.

“எனக்காக இன்னும் என்னென்ன விட்டுக் கொடுக்கப் போற ப்ரஜூ?” அன்பொழுக கேட்டவளின் கண்களில் மீண்டும் மடை திறந்துவிட, தலையில் கைவைத்துக் கொண்டான் பிஸ்தா. இன்னும் எவ்வளவு நேரம்தான் இந்த அழுகை முகத்தைப் பார்ப்பது…

“கல்யாணம் முடிச்சு இங்கே வந்ததுல இருந்து, கண்ணீரும் கம்பலையுமா நிக்கறே! இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு மறுபடியும் குற்றால அருவி கொட்டுது உனக்கு? நீ பண்ணுற அலம்பல்ல கல்யாணம் முடிச்ச சந்தோசமே காணாமப் போயிடும் போல…” கணவன் கடிக்க ஆரம்பிக்க, மனைவியின் முகம் கூம்பிப் போனது. 

“ரொம்ப எமோசனல் ஆகாதே பொண்டாட்டி! வீட்டுச் செலவுக்கு வெறும் பத்தாயிரம் மட்டுமே கொடுத்து உன்னை கஷ்டப்படுத்தப் போறேன்! இப்பவும் ஷாப்பிங் பண்ண பெரிய மால், ஷோரூம் எல்லாம் போகப் போறதில்ல… ஃப்ரண்டு ஒருத்தன் சின்னதா துணிக்கடை வச்சுருக்கான். மொத்தமா வாங்கினா டிஸ்கவுன்ட் தர்றேன்னு சொல்லியிருக்கான்! இப்போதைக்கு அவ்வளவுதான் என்னால முடியும்” அதட்டலுடன் ஆரம்பித்து சோர்ந்த குரலில் முடித்தான்.

“அதில்லடா… எதுக்கு செலவு பண்ணறோமுன்னு தெரியாமயே கைநிறைய பணத்தை வெச்சு செலவு பண்றவன் நீ! யாருக்குமே அடங்காமத் திமிரா திரிஞ்ச உனக்கு, என்னால மட்டுமே எல்லாமே தலைகீழா மாறிப்போறத நினைச்சா என் மனசே தாங்கல…” விசும்பலோடு அவன் தோளில் தஞ்சமடைந்தாள் ரவீணா.

“அடச்சே… இதுக்குதான் அழுதியா? லைஃப்ல அப்ஸ் அண்ட் டௌன்ஸ் யாருக்குதான் இல்ல… கொஞ்சநாள் போனா எல்லாம் சரியாகிடும். இட் மீன்ஸ் உனக்கும் இதெல்லாம் பழகிப் போயிரும். இப்ப நீ கண்ணீரைக் கொட்டி இன்னொரு டாம் ஓபன் பண்ண ஏற்பாடு பண்ணாம, நல்லபொண்ணா கிளம்பி வர்றியா? இல்ல நானே போயிட்டு வந்திடவா?” எந்த ஒன்றையும் இலகுவாகக் கையாளும் கணவனை அதிசயமாகப் பார்த்தாள் மனைவி.

“எந்த போதிமரம்டா உனக்கு இப்பேற்பட்ட ஞானத்தை எல்லாம் அள்ளிக் குடுக்குது? என்னையும் அங்கே கூட்டிட்டுப் போயிருந்தா, இன்னும் தெளிவான ஒருத்தனை லைஃப் பார்ட்னரா நானும் சூஸ் பண்ணி இருப்பேன்ல…” வெகுநேரம் கழித்து சின்னச் சிரிப்புடன் தன்னை வாரிவிடுபவளை ஆசையாகப் பார்த்தான் பிரஜேந்தர்.

“கொஞ்சம் நல்லவனா மாறிடக்கூடாதே… நம்மையும் போட்டுத் தாக்க ரெடி ஆகிடுவீங்களே! எல்லாம் நட்டநடு ராத்திரியில உன்னை நினைச்சு நட்சத்திரங்களை எண்ணினதாலே வந்த புத்தி இது… உன்னோட க்வஸ்டீன் பேப்பர இன்னும் ஹெவியா ரெடி பண்ணிவை! நான் கடைக்கு போயிட்டு வந்திடுறேன்!” என்றவன் விலகிப் போக,

“நான் இல்லாம எப்படி, என் ட்ரெஸ் வாங்குவ நீ?”

“மேரேஜ் பிளவுஸ்க்கே ஆவரேஜ் அளவு பார்த்து வாங்குன எனக்கு சல்வார் வாங்குறதா கஷ்டம்?” புருவத்தை ஏற்றி இறக்கி அவன் கேட்க, இவளுக்கு உடலெங்கும் கூசிப்போனது.

அத்தனை கச்சிதமாய் பொருந்தியிருந்த தனது சேலையும், ரவிக்கையைம் பார்க்க பார்க்க வெட்க முகமுடி போட்டது பெண்ணின் உள்ளம்.

“அடப்பாவி! உன் அண்ணிங்க எடுத்திருப்பாங்கன்னு நினைச்சேனேடா! போச்சு… போச்சு! என்னென்ன நினைச்சாங்களோ அவங்க… மானம் போகுது எனக்கு… படுபாவி!” பொய் கோபத்துடன் அடிக்க வர,

“குத்துமதிப்பா ஒரு அளவுல எடுத்தது தப்பா போச்சா? இனிமே விசுவல் டச்சிங் தான்… கண் பார்க்க, கை வேலை செய்ய… …….. ………” மையல் பார்வையில் மேற்கொண்டு பேசிய பேச்சுக்களை எல்லாம் சென்சாரில் கத்திரிக்க முடியாமல் காதுகளை அடைத்துக் கொண்டாள் மனைவி.

**************************************

“நீ ரொம்ப சிரமப்பட வேணாம் பிங்கி… உன் கையும் உடம்பும் புண்ணாகாம எல்லா வேலையும் ஈசியா செஞ்சுடலாம்”

தம்பதியராக கடைக்கு சென்ற நேரத்தில் புதுக் குடித்தன பயத்தை போக்கும் விதமாக உற்சாகமாக வார்த்தையாடிக் கொண்டே வந்தனர்.

“அடப்போடா… என் கர்ஷிப்பை கூட எங்கம்மாதான் துவைச்சி தருவாங்க… தோசையில ஆப்பிரிக்காவுக்கும்  ஆஸ்திரேலியாவுக்கும் லோகேசன் பிக்ஸ் பண்ணியே மாவை வேஸ்ட் பண்ணிடுவேன்! என்கிட்டே எதையும் எதிர்பார்க்காதே மை பாய்!”

“மிக்ஸி, வாஷிங்மெஷின், ஏர்கூலர், ஹீட்டர், கட்டில்ன்னு கொஞ்சம் அதிகமாவே உனக்காக யோசிச்சு திங்க்ஸ் வாங்கி வைச்சுருக்கேன்! டேக் இட் ஈஸியா பாமிலி ரன் பண்ணிடலாம். நானும் என்னால முடிஞ்சா ஹெல்ப் பண்றேன் சரியா?”

அடிக்க அடிக்க அம்மியும் நகர்வதைப் போல் மனைவியின் சமையல் வராது என்ற எண்ணத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வெற்றியும் கண்டான் பிரஜேந்தர். அன்றைய இரவு உணவையும் வெளியில் முடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

அதுவரையிலும் பேசிப்பேசியே அவளின் மனதை குளிர வைத்தவன், வீட்டிற்கு வந்ததும் கணவனாக தனது காதல் சேட்டையை ஆரம்பித்து விட்டான்.

“ப்ளீஸ்டா! இன்னைக்கு வேண்டாம், ஒருவாரம் போகட்டும்” மனைவி கூச்சத்துடன் ஒதுங்கிக் கொள்ள,

“ஐயே… மூஞ்சி ஏன் அப்படிப் போகுது பிங்கி? எதுக்கு இந்த கேவலமான எக்ஸ்ப்ரஷன் கொடுத்து என்னை காண்டாக்குற?“

“மனசு ஒருமாதிரியா இருக்குடா! வீட்டு நினைப்பா இருக்கு… அம்மா என்ன பண்றாங்களோ தெரியல” அடுக்கடுக்காய் இவள் முகாரி பாட, இவனுக்கு கடுப்பாகிப் போனது.

“ஏற்கனேவே நிறைய பிரச்சனைய தூக்கி சுமந்திட்டு சுத்துறேன்! அதோட உன் குடும்ப பிரச்சனையும் உள்ளே போட்டுக்க எனக்கு தெம்பில்ல பிங்கி! நீ என்ன சொன்னாலும் நான் பச்சாதாபம் பார்க்கறதா இல்ல…” விடாக்கண்டனாக மனைவியின் மனதை கரைக்க ஆரம்பித்தான்.

“நீதானே, நல்ல ஹப்பின்னு எனக்கு சர்டிஃபிகேட் கொடுத்த… அதே மாதிரி நான், உனக்கு குடுக்க வேணாமா? நல்ல புருஷன் பொண்டாட்டிக்கு அழகு எது தெரியுமா?” மிக முக்கிய கேள்வியாக இவன் கேட்க, தெரியாமல் முழித்தாள் மனைவி.

“லவ் அன்ட் லஸ்ட் ரெண்டு பேருக்கும் ஒரே வேவ் லென்ந்த்ல இருக்குறது தான் நல்ல கப்பில்ஸுக்கு அழகு. இப்ப என்னோட வேவ் லென்ந்துக்கு ஈக்குவலா உன் மூடை சேன்ஞ் பண்ணிப்பியாம். நானும் உனக்கு பெஸ்டி சர்டிபிகேட் குடுப்பேனாம்” தாபத்துடன் பேசியவனை, இவள் பார்வையாலேயே எரிக்க அவனது கிறுகிறுத்த பேச்சும் தொடர்ந்தது.

மேலும் மேலும் சினத்தால் சிவந்தவளை காதல் பேசியே சிவக்க வைத்தான்…

முடியாதென முறுக்கிக் கொண்டவளிடம் சில்மிச முறுவலில் முத்தெடுக்க ஆரம்பித்தான்…

சரசம் பேசியே உல்லாசத்திற்கு தாவியவனின் சீண்டல்களும் தீண்டல்களும் பெண்ணவளின் அகமும் புறமும் முற்றும் முழுதாய் சிவந்து போனது.

“அடங்காத செல்ஃபிஷ் மாடே…. நெனைச்சத நடத்திக்கறடா நீ!” பொய்க்கோபத்தில் சிலுப்பிக் கொண்டவளின் சம்மதத்தை விழி வழியே படித்து, ஆசையுடன் மனைவி முகம் பார்த்து நிற்க, வெட்கப் புன்னகை சிந்தி தனது தடையை அவளே அகற்றினாள்.

மனைவியின் ஆசைப்பார்வையில், கணவனின் மோக நரம்புகள் முறுக்கேற, தடைகற்களாய் இருந்த யாவும் அவர்களின் அங்கம் விலகிச் சென்றன.

மங்கையின் சிணுங்கலில் சிணுங்கி, வலியில் தேற்றியவன் மென்மையுடன் பயணத்தை தொடர்ந்தான். தனது ஆசைகளை அவளுக்கும் கடத்தி, மனைவியை மீட்டிட சிருங்கார ஆலிங்கனம் அங்கே கொஞ்சிக் கூத்தாடியது.

இரவின் ஆலாபனைகளாக ரகசிய பேச்சும், சன்னச் சிரிப்பும் மட்டுமே இசைத்தன. இருவரின் அன்பிற்கான உறவின் பிணைப்பில் ஊடலோடு கூடலும் சுகமே!!

ஆடைக்குள் வைத்த அழகினை எடுத்தேன்
ஆசைக்குள் வைத்து உனக்கென கொடுத்தேன்
இதமாகத்தான் பதமாகத்தான்
எனை தீண்டு தாகம் தணியும்

ஓடைக்குள் வந்த மலரினை பறித்தேன்
ஓசைகளின்றி மணிமுத்தம் பதித்தேன்
பழச்சாறையும் இளநீரையும்
பரிமாற வேண்டும் தினமும்

அந்திப்பகல் வந்ததொரு
இன்ப மயக்கம்
அஞ்சுவிரல் பட்ட இடம் மெல்ல சிலிர்க்கும்

எங்கெங்கே தொட்டாலும்
அம்மம்மா உற்சாகம்
அங்கங்கே உண்டாகும் வா!