அன்பின் உறவே – 13

அன்பின் உறவே – 13

அன்பின் உறவே… 13

புதிய வாழ்க்கை… சுவாரசியங்களை அள்ளித்தரக் காத்திருக்கும் விடியலாக இருவருக்கும் அன்றைய பொழுது புலர்ந்திருந்தது. இல்லற பந்தத்தின் இரகசியத்தினை அறிந்ததின் நிறைவும், உள்ளத்தின் அன்பை உறவாக ஏற்றுக்கொண்ட களிப்பும் சேர்ந்து இருவருக்குள்ளும் சந்தோஷ ஆர்பரிப்பை அதீதமாக்கியிருந்தன.

இல்லறத்தில் அடியெடுத்து வைத்த புதிய மனைவியின் அசௌகரிய நிலையை மனதில் கொண்டே, காலைத் தேநீரோடு நூடுல்ஸையும் செய்து கொடுத்து, அவளை உற்சாகப்படுத்தி விட்டான் பிஸ்தா.

“நேத்துல இருந்து எனக்கு டேபிள் சர்வீஸ் பண்ணியே அசத்துறியே, மை டியர் பெட்டர் ஹாஃப்!” மலர்ந்த முகத்தில் கொஞ்சலைக் கொட்டி, கணவனை மெச்சிக் கொண்டாள் ரவீணா.

“உனக்கு பழக்கமாகுறவரை மட்டுமே இந்த சர்வீஸ் நடக்கும். அடுத்த வாரத்தில இருந்து அய்யாவோட வாய்ஸ் தான் உனக்கு சாசனமா இருக்கணும் மை டியர் பட்டர்பெட்” என்றவாறே அவளின் மேல் பார்வை மேய்ச்சலை தொடரவிட, பொய் முறைப்போடு முகம் திருப்பிக் கொண்டவள்,

“ரொம்பவே எதிர்பார்த்துட்டேன், போடா பிஸ்தா” உதட்டை பழித்துக் காட்டியதில் கிறங்கிப் போனான்.

“என் மாமியார் ரொம்ப தங்கமானவங்க…” மனைவியின் கன்னத்தை கிள்ளியெடுத்தவனின் உல்லாசப் பேச்சு தொடர,

“என்னடா சொல்ற? எங்கம்மா எதுக்கு இங்கே வந்தாங்க? அடிக்கடி உளறிக் கொட்டி என்னை ஃபிரீஸாகி நிக்க வைக்கிற” திடீரென்று மாமியார் புகழ் பாடியவனை புரியாமல் பார்த்தாள் ரவீணா.

“அதுவா பிங்கி… தண்ணிக்கு பதிலா பால், வெண்ணெயிலயே குளிப்பாட்டி உன்னை வளர்த்திருக்காங்களே… அதச் சொன்னேன் என் பட்டரு!” என்றவனின் கண்கள் மனைவியின் வெண்ணை நிறத்தை அளவெடுத்தது.

“மை பட்டர்பெட் லுக்கிங் வெரி ஹாட் அண்ட் கார்ஜிசியஸ்” தாபத்துடன் மோகப்பாட்டு பாட ஆரம்பித்தவனை,

“அடங்காம அழிச்சாட்டியம் பண்றியேடா பக்கி! உன்னோட பேச்சுக்கும் பார்வைக்கும் சென்சாரே கிடையாதா?” நாணமும் சிணுங்கலும் போட்டிபோட, முதுகில் சராமரியாக மொத்தத் தொடங்கி விட்டாள் ரவீணா.

இளஞ்ஜோடிகளின் அடாவடிகள் தொடர்ந்த சமயத்தில் வெளியே பலரின் பேச்சுக்களால் அமளிதுமளிப்பட்டது. சத்தம் கேட்டு இருவரும் வெளியில் வந்த நேரம், பங்களாவிற்குள் அம்பிகாவும் மாமியாரைத் தேடி ஓடினாள்.

காலையில் மார்க்கெட் செல்வதற்கென வெளியில் வந்தவள் அதே வேகத்தில் அரக்கப்பரக்க மீண்டும் வீட்டிற்குள் நுழைய,

“என்னடி பேயைக் கண்டவ மாதிரி ஓடி வர்றே?” என்றபடி தடுத்து நிறுத்தினார் சரஸ்வதி.

“நம்ம வீட்டுக்கு போலீஸ் வந்திருக்கு அத்தை… அனேகமா நம்ம பிஸ்தாவை தேடினு நினைக்கிறேன்” மருமகள் சொல்லவும் அவரின் மனம் பதட்டமடைந்து, தன்போக்கில் கணவரை அழைத்து விட்டார்.

“என்னங்க… சீக்கிரமா வெளியே வந்து என்னனு கேளுங்க” அலறலுடன் மனைவி அழைத்ததில், கையிலெடுத்து வைத்திருந்த காலைநேர மாத்திரையை தரையில் தவறவிட்ட கருணாகரன்,

‘இன்னைய அக்கபோர ஆரம்பிச்சுட்டாளா… இவ தொல்லைக்கு ஒரு அளவே இல்லையா?’ உள்ளுக்குள்  அலுத்துக்கொண்டே மனைவியைப் முறைப்புடன் பார்த்தார்.

“சின்னவனை தேடி போலீஸ் வந்திருக்காம், என்னான்னு பாருங்க” சரசு பதட்டத்துடன் சொல்ல,

“நேத்து ராத்திரி முழுக்க எனக்கிருக்கிறது ரெண்டு புள்ளைங்கதான்னு வசனம் பேசிட்டு, இப்ப எங்கிருந்து வந்தான் மூணாவது புள்ள? குடும்பத்த நெனைக்காம தன்னோட ஆசை, ரோசம், புண்ணாக்குன்னு ஆடுனா, போலீஸ் தேடி வராம ஆஸ்கார் குடுக்கவா தேடி வருவாங்க?

பொண்ண பெத்தவன் இவனோட ஆட்டத்துக்கெல்லாம் தலையாட்டிட்டு சும்மா விட்டுடுவானா? கம்ப்ளைண்ட் கொடுத்திருப்பான்… அதான், உன்னோட பிஜூ கண்ணாவை குண்டுகட்டா அள்ளிட்டுப் போக வந்திருப்பாங்க!” ஞானதிருஷ்டியில் கண்டவரைப் போல நெஞ்சை நிமிர்த்தினார் பெரியவர்.

“சொல்லிக் காமிக்கிற நேரமா இது? உங்ககிட்ட போய் சொன்னேன் பாருங்க…” கோபத்துடன் கணவனிடம் மல்லுக்கு நின்றவர்,

“கடைக்கு கிளம்பிப் போன என் மூத்த புள்ளைங்கள கூப்பிடு அம்பிகா! அவங்களாவது வந்து சின்னவனுக்கு என்ன பிரச்சனைன்னு விசாரிக்கட்டும்” மருமகளுக்கு கட்டளையிட்டார்.

“அதெல்லாம் முடியாது அத்தை! அவங்க திரும்பி வந்தா தொழிலை ஏன் விட்டுடுட்டு வந்தீங்கன்னு மாமா, அவங்களை நிக்க வச்சு கேள்வி கேப்பாரு… நம்ம சகவாசம் வேண்டாம்னு உதறித் தள்ளிட்டுப் போனவருக்காக, நாம ஏன் அல்லாடனும்? உங்களுக்கு அக்கறையிருந்தா நீங்களே போய் என்னனு கேளுங்க. வேலியில போறதை இழுத்து வீட்டுக்குள்ள விட்டுக்க, எங்களுக்கென்ன கிறுக்கா பிடிச்சிருக்கு?” சட்டென்று திமிராக பதிலுரைத்த மருமகளை அதிர்ந்து பார்த்தார் சரஸ்வதி.

“யாருடி வேலியில போறவன்? அவன் என் புள்ளடி… இந்த வீட்டுல அவன் இல்லன்னதும், அவனையே ஏறக்கட்டி பேசிடுவியா? உனக்கு வாய்கொழுப்பு அதிகமாயிடுச்சு… உன்னை அப்பறமா வெச்சுக்கறேன்!” என்றவர் விடுவிடுவென்று மகனின் குடியிருப்பிற்கு விரைந்தார்

அங்கே அவருக்கு திடீர் சம்பந்தியாகிப் போன குருமூர்த்தி வானளாவி உயர்ந்து நின்ற கட்டிடத்தை கண்களால் அளந்து கொண்டும், தற்போது மகள் தங்கியிருக்கும் குடியிருப்பினை பார்த்து கொண்டும் இகழ்ச்சியாக முகத்தை சுளித்தார். கேட்டில் நுழைந்ததும் செக்யூரிட்டியிடம் பிரஜேந்தரைப் பற்றி விசாரிக்க, அவனோ தோட்டத்து குடியிருப்பினை கைகாட்டியிருந்தான்.

மகளை நடுத்தெருவில் நிற்க வைப்பேன் என சூளுரைத்தவர், காவல்துறையின் உதவியோடு செயல்படுத்த வந்திருந்தார் போலும். பிஸ்தாவின் வீட்டிற்கு வெளியில் நின்று கொண்டு உஷ்ணம் குறையாமல், உரத்த குரலில் மகளை வெளியே அழைத்து வசைபாடத் தொடங்கி விட்டார்.

“இந்த லட்சணமான இடத்துல குப்ப கொட்டத்தான் இவ்வளவு அவசரமா ஓடி வந்தியா? கல்யாணம் முடிஞ்சவங்கள இங்கே தங்க வைச்சதுலயே, இவனோட குடும்பலட்சணம் கிழிகிழின்னு கிழியுது. இந்த அரைவேக்காட்டு பயல உதறித் தள்ளிட்டு என்கூட வரப்போறியா இல்லையா?” குருமூர்த்தியின் ஆவேசபேச்சு பிஸ்தாவை கொதிப்படையச் செய்ய, அவனது கைகளை அழுத்திப் பிடித்தே அமைதியாக இருக்குமாறு கண்களால் கெஞ்சினாள் ரவீணா.

“என் குடும்ப பாலிடிக்ஸ் பேச உன் அப்பனுக்கு யாரு ரைட்ஸ் கொடுத்தா?” சீற்றமாய் முணுமுணுத்தவனின் கைகளை பலம் கொண்ட மட்டும் தன் கைகளுக்குள் பொதித்து வைத்துக்கொண்டாள்.  

“நீ போனதுல உன் பாட்டிக்கு பீபீ அதிகமாயி மயக்கமா கிடக்காங்க… உங்கம்மாவும் வெளியே தலைகாட்ட முடியாம உள்ளுக்குள்ள நொடிஞ்சு போயிட்டா…” நல்ல தகப்பனாக அழைப்பினை விடுத்தும் மகள் அசையவே இல்லை.

“பெத்தவங்கள சங்கடபடுத்தி வாழுற இந்த வாழ்க்கை உனக்கு நிலைக்கவே நிலைக்காது. எங்க சாபத்தை வாங்கிக் கட்டிகிட்டா மொத்தமா அழிஞ்சு போயிடுவ… உன்னை இங்கிருந்து தரதரன்னு இழுத்துட்டுப் போக என்னால முடியும்” மகளைத் தன்னுடன் அழைத்துச் செல்லும் முயற்சியில் கர்ஜித்துக் கொண்டிருந்தார் குருமூர்த்தி.

மாமனாரின் சாபங்களை தூசியாக தட்டிவிட்ட பிரஜேந்தர், உள்ளே சென்று தங்களின் திருமணப் பதிவிற்கான அனைத்து அத்தாட்சிகளையும் போலீசாரிடம் காண்பிக்க, குருமூர்த்தியை அடக்கியது காவல்துறை.

“அப்படியெல்லாம் பலவந்தபடுத்தி இழுத்துட்டுப் போகமுடியாது சார்! பொண்ணக் காணோம்னு புகார் கொடுத்தீங்க, அவங்க இருக்கற இடத்த தேடி கண்டுபிடிச்சு, உங்க முன்னாடி நிறுத்தியாச்சு.

எல்லா டாக்குமெண்ட்சும் கரெக்டா சப்மிட் பண்ணிதான் ரெஜிஸ்டர் மேரேஜ் நடந்திருக்கு… சட்டப்படி அவங்க திருமணம் செல்லுபடியாகும் ஒருவேளை உங்க மகளுக்கு உங்ககூட வர விருப்பமிருந்தா, அவங்களோட சுயமுடிவோட வரட்டும். நீங்க கட்டாயப்படுத்த முடியாது” மேலும் பல சட்டதிட்டங்களை சுட்டிக்காட்டி மணமக்களுக்கு ஆதரவாக பேசினார் காவல்துறை அதிகாரி.  

தனது அராஜகம் கைகொடுக்காமல் போனதில் குருமூர்த்தியின் கண்கள் வந்துவிடுமாறு மகளிடம் கெஞ்ச, கணவனின் கரத்தை இறுகப் பற்றிக்கொண்டு மரக்கட்டையாக நின்றாள் ரவீணா.

கருணாகரனைத் தவிர பிஸ்தா இல்லத்தின் பெண்கள் அனைவரும் தோட்டத்தில் நின்றுகொண்டு நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். பெரியவர் பின்னடைந்து அமைதியானதில் குருமூர்த்தியும் வரம்பற்ற பேச்சில் ஆடித் தீர்த்துக் கொண்டிருந்தார். 

“மானத்தை வாங்கிட்ட நாயே… மகளே மகளேன்னு மார்ல போட்டு வளத்ததுக்கு நன்றியா என்னைத் தலைகுனிய வெச்சுட்ட… பெத்தவங்க, தூக்கி வளர்த்தவங்க எல்லோரையும் விட்டுட்டு அப்படியென்ன காதல் வேண்டியிருக்கு?

பார்க்கறதுக்கு பொறுக்கி மாதிரி இருக்கான், இவனை நம்பி வந்திருக்க. சோத்துக்கு வழியில்லாம, என்னைக்காவது ஒருநாள் நடுத்தெருவுல உன்னை நிறுத்தி பிச்சையெடுக்க வைக்கப்போறானா இல்லையான்னு பாரு! நம்ம குடும்பத்தை பொறுத்தவரை உன்னை தலைமுழுகிட்டோம். நீ செத்தாலும் ஒருத்தரும் இனி எட்டிப்பார்க்க மாட்டோம்” மண்ணை வாரித் தூற்றிக் கொண்டிருந்த தந்தையை கண்ணீர் மல்கப் பார்த்தாள் ரவீணா.

தந்தை மீதான பாசம் உள்ளுக்குள் அடைந்து கிடந்தாலும் உருகிக் கிடக்கவில்லை அவளுக்கு. தனது பகுமானத்தை காண்பிக்கவென்றே காட்சிப்பொருளாக தன்னை நிற்க வைத்து வசைபாடியதிலேயே மகளின் மனம் வெறுத்து விட்டது. புகுந்த வீட்டினரின் முன்னிலையில் தலைகுனிந்து நிற்கும் அவலநிலை வேறு தணலாய் கொதிக்க வைத்தது அவளுக்கு.

நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சரசுவிற்கு, குருமூர்த்தியின் பேச்சில் உள்ளம் கொந்தளிக்கத் தொடங்கிவிட, 

“என் புள்ளய பார்த்து பொறுக்கி மாதிரி இருக்கான்னு சொல்றானே அந்தாளு… நல்லா இருப்பானா அவன்? வெளங்காமப் போவான். பொண்ண பெத்தவனாட்டமா  பேசுறான்… அவன் கடையில இருக்கிற துணியெல்லாம் பத்தி எரிஞ்சு நாசமா போகட்டும்.

என் மகன், தன்னை நம்பி வந்தவளை நடுத்தெருவுல நிறுத்துவானாமா! என்னவொரு அபாண்டம்? நம்ம குடும்பத்து ஆம்பளைங்களுக்கு அப்படியொரு கெட்டபுத்தி கிடையவே கிடையாது” படபடவென்று புலம்பித் தள்ள, கேட்டுக்கொண்ட அனைவரும் அமைதியாகவே நின்றனர்.

“மிஸ்டர் குருமூர்த்தி! இதெல்லாம் ஆசை அறுபது, மோகம் முப்பதுன்னு தொண்ணூறு நாள்ல எண்டு கார்டு போடுற கேசுங்க… கொஞ்சநாள் பொறுமையா இருங்க, உங்களை தேடி, உங்க பொண்ணு தானா வருவாங்க” ஆறுதல் கூறிய காவலதிகாரி, குருமூர்த்தியுடன் நடையை கட்ட, எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றிய கதையாகிப் போனது சரஸ்வதிக்கு.   

“படிச்சவன் பாட்டைக் கெடுத்த கதையால்ல இருக்கு. என் புள்ள வாழ்க்கையை பத்தி பேச, இந்த காக்கிசட்டைக்கு யாரு அதிகாரம் கொடுத்தா? என் புள்ளை என்ன போக்கத்தவனாட்டம் ஊர் மேயுற பயன்னு நினைச்சுட்டாங்களா?” மாமியார் பொங்கிய பொங்கலில் இரண்டு மருமகள்களும் குலவை சத்தம் எழுப்பினர்.

“அத்தை சொல்றதைப் பார்த்தா, அந்த ஜோடி பிரியவே கூடாதுன்னு ஆசீர்வாதம் பண்ணற மாதிரியல்ல இருக்கு” அம்பிகாவின் காதில் பிரதீபா கடிக்க,

“ஏன்? அவங்களைப் பிரிச்சு வைக்க நீ எதுவும் பிளான் பண்றியா?” அம்பிகா கேட்க,

“எதைச் சொன்னாலும் இந்த வீட்டுல பொல்லாப்பு தான்” என்றுவிட்டு முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டாள் பிரதீபா.

“ச்சே… சரியான கல்நெஞ்சன் போல அந்தப் பொண்ணோட அப்பன். பெத்த பொண்ணுக்கு இப்டியா சாபத்தை அள்ளி விடுவான்? என்ன கெட்டகாலம் அவங்களைப் பிடிக்கப் போகுதோ! இனிமே எப்படி சந்தோசமா குடும்பம் நடத்தி வாழ்க்கையில ஜெயிக்க போறாரு நம்ம பிஸ்தா? நெஞ்சுல அடிச்சுட்டு அழுதே, நீங்க அமைதியாகிட்டீங்க அத்தை. எல்லாருக்கும் உங்க நல்ல மனசு வருமா?” அம்பிகா அங்கலாய்த்து முடிக்க, சரஸ்வதிக்கு திக்கென்றது.

“இதப் பாருங்க… உங்க ரெண்டு மருமகளுகளையும் வாயை மூடிகிட்டு அமைதியா இருக்கச் சொல்லுங்க. ஆயிரம் இருந்தாலும் அவன் இந்த வீட்டு வாரிசு. அவனில்லாத நேரத்தில அவனை பத்தி இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்குற வாயை இழுத்து வச்சு தைச்சுடுவேன்… சொல்லி வைங்க!” வீட்டிற்குள் நுழைந்ததும் கோபக்கனலை கணவரிடம் இறக்கிவைத்தார் சரசு.

“மச்சினருக்கு ஏன் பிஸ்தானு பேர் வந்ததுன்னு இப்பதானே தெரியுது. பெரியவங்களே அப்படிதானே பேசுறாங்க!” முகத்தை நொடித்துக் கொண்டு பிரதீபாவுடன் உள்ளே சென்றாள் அம்பிகா.

“பார்த்தீங்களா ஊமக்குசும்ப? கொழுப்பு கூடிபோச்சு இவளுகளுக்கு” மீண்டும் கணவரிடம் பாய்ந்து,

“கடவுளே! ஏனோதானோன்னு இருந்தாலும் என் புள்ளைக்கு எந்த கெட்டதும் அண்டிடக்கூடாது. அவனுக்கு நிம்மதியான வாழ்க்கையை குடு பெருமாளே!” பாசத்தில் புலம்பிய தாயை செய்வதறியாமல் பார்த்தார் கருணாகரன்.

******************************************

காவலதுறையுடன் வந்த தந்தையின் பேச்சில் மனம் புண்ணாகிவிட, மடை திறந்த வெள்ளமாக கண்ணீரைக் கொட்டிக் கொண்டிருந்தாள் ரவீணா.

இந்தப் பெண்களுக்கு எங்கிருந்து தான் கண்ணீர் இப்படி நிற்காமல் கொட்டுகிறதோ என்று சலிப்பாக இருந்தது பிரஜேந்தருக்கு. காதலுக்காக, கணவனுக்காக, தந்தையை விரோதித்துக் கொண்டவளின் நிலை, அவனுக்கும் நன்றாகவே புரிய ஆறுதலாக மனைவியை அணைத்துக்கொண்டான்.

அந்த அணைப்பில் பாரமிறக்கி வைக்க நினைத்தவள் மேலும் வெடித்து அழுகையில் அரற்ற, அதிர்ச்சியுடன் பார்த்தான் பிரஜேந்தர். அவனுக்கு இந்தச் சூழ்நிலை முற்றிலும் புதிது.

சிரித்த முகத்துடன் வலம் வரும் ரவீணாவைத் தான் இதுவரையில் பார்த்திருக்கான். நேற்றிலிருந்து தொட்டாசிணுங்கியாக அழுகையில் கரைபவளை கற்பனையாக கூட அவன் நினைத்ததில்லை.  

தப்பான விடையுடன் மல்லுகட்டும் அப்பாவி மாணவனாக தவித்தவனுக்கு, மனைவியின் கண்ணீரை எப்படி நிறுத்துவதென்று தெரியவில்லை. 

ஒருநிமிடம் யோசித்தவன், “கிளம்பு ரவீ! உங்க வீட்டுக்கு போகலாம்” அதிரடியாக கூற, அழுகை கலந்த அதிர்ச்சியுடன் பார்த்தாள் மனைவி.  

“கோபத்துல நாலு இல்ல நாப்பது அடி, அடிச்சாலும் இந்த பிஸ்தா தாங்கிடுவான். ஆனா, இப்படியொரு அழுமூஞ்சி சுந்தரிய பாக்கற சக்தியும் பொறுமையும் சத்தியமா எனக்கில்ல…

உன்னை சந்தோசமா வாழ வைச்சு அழகு பாக்கனும்னு நெனைக்கிற என்கிட்ட, இப்படி கண்ணீர் கடலை தொறந்துவிட்டா, நான் என்னத்துக்கு ஆவேன்? உன்னை அழைச்சிட்டுப் போய் உங்கம்மா வீட்டுல விட்டுட்டு நானும் எங்கம்மா கால்ல தாயே சரணம்னு போயி விழுறேன், கெளம்பு நீ!” கணவன் கோபத்தில் கத்த ஆரம்பிக்க, அழுகையோடு வாயையும் மூடிக் கொண்டாள் மனைவி.

நடந்த களேபரத்தில் அன்றைய நாளின் நளபாகம் மறந்து போய்விட, மிகத் தாமதமாகவே தனது மொபைலில் உணவை ஆர்டர் செய்திருந்தாள் ரவீணா. பிரித்து வைக்கப்பட்டிருந்த உணவுப் பொட்டலங்களையும் கணவனின் முகத்தையுமே மாறிமாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.

காலையில் ஆரம்பித்த கோப போராட்டத்தை இன்னமும் வீரியம் குறையாமல் கொண்டாடிக் கொண்டிருக்கிறான். வெளியிலிருந்து தருவித்த உணவையும் சாப்பிட மாட்டேன் என்று பிடிவாதமாக அமர்ந்திருந்த கணவனை என்ன செய்வதென்று புரியாமல் பார்த்தாள் ரவீணா.

எத்தனை அழகாக ஆரம்பித்த நாள், தனது தந்தையின் வரவால் கசந்து விட்டதே! அந்தநேரம் முதற்கொண்டு இவனுமே கூண்டில் நிற்க வைக்காத குறையாக குற்றப்பாட்டு பாடியே கடுப்பேற்றுகிறானே என மனதிற்குள் குமைந்தாள்

“கூல்டவுன் ப்ரஜூ, ப்ளீஸ்… இப்படியே கோபத்துல இருந்தா எதுவும் மாறப்போகுதா? உன்னோட கோபம் நமக்குள்ள பிரச்சனைய உண்டு பண்ணிடுமோன்னு பயமா இருக்குடா” கரகரத்த குரலில் கூறியவளை முறைத்துப் பார்த்தான் பிரஜேந்தர்.

“மூச்சு விடுற மாதிரி, அழுது வடிஞ்சிட்டே இருந்தா எனக்கும் உன்னோட வாழவே தோணாது ரவீ!” சலிப்புடன் வருத்தப்பட்டுக் கொள்ள,

“இனிமே அழமாட்டேன்னு சொல்லிட்டேன்ல டா” என்றவள் மீண்டும் கண்ணீரில் கரைய,

“இத கூட கண்ணுல டேம் கட்டிட்டு தான் சொல்ற… தேர்தல் வாக்குறுதிய விட மோசமா இருக்குடீ, நீ சொல்றதும் செய்றதும்” முறுக்கிக்கொண்டவனின் பேச்சில் மனைவிக்கும் கோபம் துளிர்விட்டது.

“சரிதான் போடா… உன்னை சமாதானப்படுத்த வந்தேன் பாரு என்னைச் சொல்லணும். கோபத்தை பிடிச்சு தொங்கிகிட்டே ரெண்டுபேரும் இப்படியே பட்டினி கிடப்போம். எனக்கு மட்டுமில்ல உனக்குமே பசி தாங்கிப் பழக்கமில்ல”  என்றவளின் பார்வை உணவில் பதிந்து மீண்டது.

யாருக்கு என்ன என்றெல்லாம் பாராமல் இந்த வயிறு மட்டும் சின்சியர் சின்னதம்பியாக தன் வேலையை கச்சிதமாக செய்து தொலைக்கிறதே என தன் குறைவயிற்றை குறை கூறிக் கொண்டாள்.

“உனக்கு, உங்கப்பா வந்துட்டு போனதுல மனக்கஷ்டம்னா, எனக்கும் எங்க வீட்டாளுங்கள நெனைச்சு வருத்தம். அதுக்காக நானும் உன்னை மாதிரி எதுவும் செய்யாம கண்ணை கசக்கிட்டு உக்காந்திடவா? அழுது தீர்த்தா பசி அடங்கிப் போயிடுமா?” காட்டமாக கேட்டவனின் பார்வை, ‘நீ, நம் குடும்பத்தை மறந்துவிட்டாய்’ என குற்றம் சாட்டியது.

“என்ன நடந்தாலும் மனசுல வைச்சுக்காம வேலைய பார்க்கனும்னு சொல்றியா? அவ்ளோ பக்குவம் எனக்கில்லடா… நான் இப்படிதான்!” முடிவில்லா தர்க்கத்திற்கு மனைவி வழிவகுக்க பொங்கி விட்டான் கணவன்.

“உங்கப்பா வந்து சத்தம் போட்ட நேரம், எங்க வீட்டுல இருந்து யாராவது என் சப்போர்ட்டுக்கு வந்தாங்களா? என்னனு அவரை கேள்வி தான் கேட்டாங்களா? உன் பிரச்சனைய நீதான் தீர்த்துக்கனும்னு ஒதுங்கிட்டாங்கள்ள… எனக்கு மட்டும் அந்த வலி வேதனை எல்லாம் இல்லையா?

இதெல்லாம் வெளியில சொல்லாம, எல்லா சோதனையையும் வேதனையையும் உனக்காக மட்டுமே தாங்கிட்டு இருக்கேன். நீ என்னடான்னா உலகத்துல உனக்கு மட்டும்தான் கஷ்டங்கிற மாதிரி ஃபீல் பண்ணிட்டு இருக்க… இந்த பீலிங்க்ஸ் புடலங்கா எல்லாம் நமக்கும் இருக்கு தங்கம்” மூச்சு விடாமல் பேசிவிட்டு, கோபத்துடன் முகத்தி திருப்பிக் கொண்டவனின் பாவனையில், மனைவியின் முகத்தில் மெல்லிய புன்னகை மலர்ந்தது.

அவனை மேலும் நெருங்கி அமர்ந்தவள், “சாரிடா ப்ரஜூ! என்னோட பீலிங்க்ஸ்ல குடும்பத்த நினைச்சு பார்க்காம இருந்தது தப்புதான். இனிமே பூகம்பமே வந்தாலும் சோறு பொங்கற வேலைய மறக்காம செய்யுறேன். இப்ப இருக்கறதை சாப்பிடுவோமா? கொஞ்சம் மலையிறங்கு சாமி… ரொம்பவும் பசிக்குதுடா” வயிற்றை பிடித்து கெஞ்ச பக்கென்று சிரித்து விட்டான் பிரஜேந்தர்.

“உன்னை கிச்சன் கில்லாடியாக்க நான் ட்ரை பண்ணினா, நீ என்னை ஜோக்கரா மாத்தி வைக்கிறடீ! இன்னைக்கு ப்ரோக்ராம் எல்லாமே சொதப்பல்…”

“நாளைக்கு இதுக்கும் சேர்த்து காம்பன்செட் பண்ணிப்போம் மைபாய்!” என்றவள் அவனது தோளில் தலைசாய்த்துக் கொள்ள,

“ம்ம்… இது என் பொண்டாட்டிக்கு அழகு” என்றவன் பார்சலில் உள்ள உணவை எடுத்து அவளுக்கு ஊட்டிவிட, அவளும் பதிலுக்கு அதையே செய்ய இல்லற வாழ்க்கையின் இனிமை அங்கே ஆரம்பமானது.

தொடர்ந்த நாட்களில் தனது தாய் தந்தையை வெறுப்பேற்றவென தோட்டத்தில் எந்நேரமும் மனைவியுடன் உலா வர ஆரம்பித்தான் பிஸ்தா. மாலை நேரத்தில் ரவீந்தரின் பிள்ளைகளுடன் கூட்டணி வைத்து வாலிபால், பாட்மிட்டன் விளையாடியும், இன்னபிற அட்டூழியங்களை செய்தும் பெற்றவர்களின் கோபத்தை மேலும் சம்பாதித்துக் கொண்டான்.

“இந்த வேண்டாத வேலையெல்லாம் பார்க்கத்தான் ஒருவாரம் வேலைக்கு லீவெடுத்தியா ப்ரஜூ? நீ செய்றது எனக்கு சுத்தமா பிடிக்கல… அமைதியா ஒதுங்கியே இருப்போம் இல்லன்னா, வேற வீட்டுக்கு போயிடுவோம்”

“வீடு மாத்துறதுக்கு இன்னும் நேரமிருக்கு… நான் லீவு போட்டது உனக்கு இந்த வீடு வேலையெல்லாம் பழக்கபடுத்த தான்டீ. என்னை எப்போதான் புரிஞ்சுக்கப் போறியோ நீ?”

“இப்ப மட்டும் என்னவாம்… நீ கீ கொடுத்தா ஆடுற பொம்மை மாதிரி தானே நான் இருக்கேன்! போதும், போதும்… நீ, எனக்கு பாடம் எடுத்தது. ஒழுங்கா வேலைக்கு போயி எனக்கு நிம்மதி குடு. உன் தொல்லை ஒழியட்டும்” கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக மனைவி உத்தரவிட்டதில் அடுத்தநாளே வேலைக்கு சென்றான் பிரஜேந்தர்.

வேலைக்கு சென்ற இரண்டு மணி நேரத்தில் வீட்டிற்கு திரும்பியவன் கோபத்தை அடக்க பெரும் பாடுபட்டே ஒய்ந்தான்.

“என்ன பிர்ஜூ? இவ்வளவு சீக்கிரமா திரும்பிட்ட… வேற சைட்டுக்கு போகனுமா?” தேநீருடன் வந்த மனைவி கேட்க,

“வேற வேலைக்கு தான் போகணும் ரவீ! என்னை வர வேணாம்னு சீனியர் என்ஜினியரோட ஆர்டர். வேல்யூ ரீசன் இல்லாம தூக்கிட்டாங்க பரதேசிப் பசங்க!” பிரஜன் பல்லைக்கடிக்க, ரவீணா யோசனையில் ஆழ்ந்தாள்.

கணவன் கூறுவதைப் பார்த்தால் இந்த வேலையிழப்பிற்கு தந்தை காரணமாக இருக்கலாமென்று எண்ணியது. அத்தனை வசவுகளை அல்லவா அள்ளித் தெளித்திருந்தார் பெண்ணை பெற்றவர்.

தான் நினைத்ததை அவனிடம் கூறியும் விட, “இதுக்கு காரணம் உங்கப்பா இல்லடா… எங்கப்பா தான். என்னோட கேரக்டர் சரியில்ல, குடும்பத்துக்கு இணக்கமா இல்லன்னு சொல்லியே வேலையை விட்டு தூக்க வச்சிட்டாரு. அவரை பகைச்சுக்க முடியாம நிர்வாகம் என்னை வெளியே அனுப்பிடுச்சு” சோர்வாக சொன்னவனை பாவமாகப் பார்த்தாள் மனைவி.

குடும்பத்திற்கு ஆதாரமான வேலையே இல்லையென்றான பிறகு என்ன செய்வது, எப்படி வாழ்வதென தலைவேதனையுடன் மனதிற்குள் புலம்பித் தவிக்க ஆரம்பித்தாள் ரவீணா.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!