அன்பின் உறவே – 17
அன்பின் உறவே – 17
அன்பின் உறவே- 17
பிரஜேந்தரின் பார்வை வீச்சும் வேகப் பேச்சும் மனதிற்குள் மூண்டிருந்த கோபத்தை அணையுடைத்து வெளியேற்ற தயாராய் இருந்தது. மாமியாரின் வருகையையே சகித்துக்கொள்ள முடியாமல் இருந்தவன், இப்பொழுது அவரின் முன்னால் விசாரணையாளனாக நின்றது அத்தனை ஆவேசத்தை தந்தது.
“பேரும் தெரியல, ஊரும் தெரியல… உங்களைப் பத்தி தப்பா விமர்சனம் பண்ணி தினமும் ஒரு ஃபோன் வருது தம்பி” வெளிப்படையாக தனது ஆதங்கத்தை சொல்லத் தொடங்கினார் சுகந்தி.
“வீட்டு ஃபோன்ல வர்றதால எங்களால நம்பர் கண்டுபிடிக்க முடியல. யாரு என்னன்னு டெலிபோன் எக்ஸ்சேன்சுக்கு போயி விவரம் கேக்கறதுக்கு எங்க வீட்டுல பொறுப்பான ஆம்பளைங்க யாரும் இல்ல.
வயசான அம்மாவை வைச்சுட்டு ஒத்த ஆளா நான் வாழ்ந்துட்டு இருக்கேன். பொண்ணு வீட்டை விட்டுப் போன வேதனையை விட, யாரோ ஒருத்தர் தினமும் பேசி எங்களை குழப்ப பார்க்கறதுதான் ரொம்ப கவலையா இருக்கு. சமயத்துல அதெல்லாம் உண்மையா இருக்குமோன்னு மனசும் கணக்கு போட்டு பார்க்கச் சொல்லுது, இதுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போறீங்க?” மனதிற்குள் குமைந்து கொண்டிருந்ததை ஒரேடியாக கொட்டிவிட்டார் சுகந்தி.
அவரது பேச்சில் அங்கிருந்த அனைவருக்கும் ஒவ்வொரு வகையில் ஆத்திரம் கோபமெல்லாம் பற்றிக்கொண்டு வரத்தான் செய்தது. அவரவர் பார்வையில் நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தவர்களுக்கு பிறருடைய வேதனையோ குழப்பங்களோ பெரிதாகப் படவில்லை.
“இது நல்லா இருக்கே? யாரோ ஒருத்தன் தப்பா பேசுனா அதையே பிடிச்சு தொங்கிட்டு இருப்பீங்களா? இவன் முதாலாளியும் இப்படி ஒரு ஃபோன் வந்ததாலதான், என் பையனை வேலையை விட்டு தூக்கினதா சொன்னான். நாங்க என்ன அதையே கேட்டு கொடைஞ்சுட்டு இருக்கோமா?” காட்டமாக சரஸ்வதியும் பதிலளித்தார்.
பெரியவீட்டில் இவையெல்லாம் சர்வ சாதாரணமே எனும்படியாக சரசு நியாயத்தை பேச, திடுக்கிட்டுப் போனது பிரஜேந்தர் மட்டுமல்ல சுகந்தியும்தான்.
“இப்படியொரு விஷயம் எனக்கு தெரியாதேம்மா, உங்களுக்கு யார் சொன்னா?” அதிர்ச்சி விலகாமல் மகன் கேட்க,
“இதையெல்லாம் வெத்தலை பாக்கு வச்சா சொல்வாங்க? உன்னை வேலை விட்டு தூக்கினதுக்கு உன் ஆபீசுல காரணம் கேக்கப் போயிதான் இந்த விசயமே வெளிச்சத்துக்கு வந்தது” விளக்கிய சரஸ்வதியின் பேச்சில் காரம் குறையவில்லை.
வேலை பறிபோய் விட்டதென்றால் எப்படி சமாளிக்கிறார்கள், அத்துடன் இன்றைய செலவுகளையும் கூட அதிரிபுதிரியாக செய்கிறானே என்ற கலவையான யோசனையில் மேலும் குழம்பிப் போய் நின்றார் சுகந்தி. சுருக்கமாகச் சொல்லப்போனால் மகளின் வாழ்வை நினைத்து உள்ளுக்குள் பெரும் நடுக்கமே வந்திருந்தது அந்த அப்பாவி தாயிக்கு.
யார் என்ன பேசுவதென்ற தெரியாத அமைதியில் நேரங்கழிய, “சரியான சப்போர்ட் இல்லாம தனியாவே வாழுற பொம்பளைக்கு, எல்லாரையும் விட ஆயிரம் மடங்கு அதிகமான சந்தேகத்தோடதான் எல்லா விசயத்தையும் பார்க்கத் தோணும். உங்க பையனைப் பத்தின என்னோட கண்ணோட்டம் தப்பா இருந்தாலும், காரணமில்லாம நான் எதுவும் சொல்லலன்னு நினைக்கிறேன்” அமைதியான குரலில் சுகந்தி பேச, ரவீணா, தன்தாயை பரிதவிப்பாய் பார்த்தாள்.
எத்தனை நாட்களாக இந்த பாரத்தை தாங்கிக் கொண்டிருக்கிறாளோ என யோசிக்க, சுகந்தி பேசும் போதெல்லாம் பிரஜேந்தரை பற்றி ஓயாமல் அழுத்திக் கேட்டதும் நினைவிற்கு வந்தது.
“இந்த மாதிரி ஃபோன் வருது, இப்படியெல்லாம் பேசுறாங்கன்னு என்கிட்டே சொல்லியிருந்தா, நான், உனக்கு பதில் சொல்லியிருப்பேன்மா!” மெதுவான குரலில் சிதறாமல் ரவீணா பேச, அனைவரும் அவளை கேள்வியாய் பார்த்தார்கள்.
“நீ சொல்ற மாதிரி எனக்கும் கூட போனவாரம் ரெண்டு தடவை வாய்ஸ் மெசேஜ் வந்தது. மெசேஞ்சர்ல அனுப்பியிருந்தாங்க. பிரஜூவப் பத்தி தப்பு தப்பா பேசியிருந்தாங்க” என்றவள் மாமியாரைப் பார்க்க, அவரோ மருமகளை முறைத்தார்.
‘அய்யோ, பொதுவுல பேர் கூட சொல்லக்கூடாதோ, எப்படி இவரை சமாளிக்கப் போறேன்’ ரவீணா நாக்கை கடித்துக்கொள்ள, பிரஜேந்தர் அவளைப் பார்வையாலேயே எரித்தான்.
“என்னதான் நினைச்சிட்டு இருக்கீங்க எல்லாரும்? அம்மா ஆபீசுல போன் பண்ணிக் கேட்டதா சொல்றாங்க, நீயும் ராங் வாய்ஸ் மெசேஜ் வந்ததா சொல்றே… இதெல்லாம் என்கிட்டே சொல்லனும்ன்னு உனக்கு தோணலையா? என் சம்மந்தப்பட்ட விஷயத்தை அவ்வளவு அசால்ட்டா எடுத்துப்பியா நீ?” அனைவரின் முன்பும் மனைவியை அதட்டினான்.
“நீயே வொர்க் டென்ஷன்ல சுத்திட்டு இருக்கும்போது இதையும் சொல்லி உன்னை கஷ்டப்படுத்த விரும்பல ப்ரஜு! அதுவுமில்லாம நாம பயப்படுற அளவுக்கு இது அவ்வளவு வொர்தான விஷயமும் இல்ல. ஏன்னா அது ஃபேக் ஐடி” விளக்கமாக கூறினாள் ரவீணா.
“எதை வைச்சு உறுதியா சொல்ற? உனக்கு எப்படித் தெரியும் ரவீ?” பிரஜன் கேள்வி கேட்க,
“மெயில் ஐடி, யூசர் ஐடி எல்லாம் ஜென்ட்ஸ் நேம்ல இருக்கு. ஆனா, லேடீஸ் வாய்ஸ்ல மெசேஜ் வந்தது. மெசெஞ்சர் ப்ரோஃபைல் லாக் பண்ணியிருந்தாங்க… அதான், அவங்க டீடெயில்ஸ் கலெக்ட் பண்ண முடியல” ரவீணா மேலும் விளக்கம் கூற, அனைவருக்கும் புரியாத குழப்பமாக இருந்தது.
“அந்த ஐடி சுராஜிஎம்(suragm)-ங்கிற பேர்ல இருந்தது. எங்க அப்பாவோட ஈமெயில் ஐடி suragurumoorthy@…com-க்கு ரிலேட்டட் ஆன நேம் இது. அப்பா ரெண்டு மூணு பேஸ்புக் ஐடி, மெசெஞ்சர் ஐடி யூஸ் பண்றது எனக்கு நல்லாவே தெரியும். மத்தவங்க பேர் கெடுக்கணும்னு நினைக்கிறவங்க தான் இப்படி ஊருக்கே தெரியுற மாதிரி கேவலமான காரியம் பண்ணுவாங்க”
“என்னடீ சொல்ல வர்ற?” சுகந்தி பதறிப்போய் கேட்க,
“இதெல்லாம் அப்பாவோட வேலைன்னுதான்மா தோணுது. இவனை பழிவாங்கவும் என் மேல இருக்குற கோபத்தை தீர்த்துக்கவும்தான் இப்படிபட்ட கேவலமான வேலையெல்லாம் ஆள் வச்சு செய்யுறாருன்னு நினைக்கிறேன். உன்னோட சப்போர்ட்டும் எனக்கு கிடைக்காம இருக்கனும்கிறதுக்காக தான் உனக்கும் அடிக்கடி ஃபோன் பண்ணி குழப்பி விடுறாரு” நடப்பதெல்லாம் தனக்கு தெரியும் என்பதைப் போல் தெளிவாகப் பேசினாள் ரவீணா.
இக்கால தொழில் நுட்பமும், இளைஞர்களின் கூரிய அறிவும் எந்த ஒன்றையும் அவர்கள் எளிதாகக் கடந்துவிடவோ அல்லது ஏற்றுக் கொள்ளவோ ஏதுவாக அமைந்து விடுகிறது. அப்படிப்பட்ட கண்ணோட்டத்தில் மட்டுமே ரவீணா ஆராய்ந்து தெளிந்து தன் தாயிக்கு விளக்கங்கள் கூறிக் கொண்டிருந்தாள்.
ரவீணாவைப் பொறுத்தவரை சுகந்தி கூறியதெல்லாம் பெரிய விசயமே அல்ல. மாறாக தனக்குள்ளே அடைத்துக்கொண்டு வேண்டாத எண்ணங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார் என்ற திடத்தில் பேசினாள்.
கணவரின் சுபாவங்களை அறிந்து வைத்திருந்த சுகந்திக்கும் இப்படியும் கூட இருக்காலாமோ என்றே மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டது. ஆனாலும் அவரின் மனம் அத்தனை எளிதில் சமாதானமடையவில்லை.
சரஸ்வதியின் முன் நின்றவர், “நான் சொன்னது உண்மையோ பொய்யோ, அவ்வளவு ஏன் நான் பேசினது தப்பா கூட இருக்கலாம். அதை பெருசா எடுத்துக்க வேணாம். எனக்கு வேண்டியதெல்லாம் என் பொண்ணோட வாழ்க்கை எந்த குழப்பமும் இல்லாம சுமூகமா இருக்கணும். அதுக்கு என்ன செய்யனும்னு சொல்லுங்க, அதைச் செய்யத் தயாரா இருக்கேன்.
இவங்க கல்யாணத்துக்கு நான் சம்மதிக்கல தான். அதை மனசுல வைச்சுக்க வேணாம். பணம் கொடுத்து ஃபைசல் பண்ணுற மாதிரி ஏதாவது பிரச்சனையிருந்தா சொல்லுங்க. அதை என்னனு பார்த்து சரிபண்ணி வைச்சுடலாம். உங்க பையன்கிட்ட கொஞ்சம் எடுத்து சொல்லுங்க” கரகரத்து கூறியவர், உணர்ச்சிவசப்பட்டு கைகளையும் கூப்பிவிட, விரைந்து வந்து தடுத்த ரவீணா,
“என்னம்மா இது? நீ இவ்வளவு பீல் பண்ற அளவுக்கு ஒண்ணுமே இல்லம்மா” அன்னைக்கு சமாதானம் கூறினாள்.
“வாழ்க்கையையும் உறவுகளையும் தெரிஞ்சே இழந்துட்டு வாழுறதோட வலி உனக்கு தெரியாதுடீ. என்னோட இந்த நிலைமை உனக்கும் வரக்கூடாதுன்னுதான் நான் தவிக்கிறேன். அது மத்தவங்க கண்ணுக்கு தப்பாவும், ஏளனமாவும் தெரிஞ்சா பரவாயில்ல… எனக்கு, என் பொண்ணு நல்லா இருக்கணும்” என்றவர் உடைந்து அழ ஆரம்பிக்க நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் ரவீணா.
கோபத்தில் எகிறிக் கொண்டிருந்த சரஸ்வதிக்கும், உக்கிரமாய் பார்த்துக் கொண்டிருந்த பிரஜேந்தருக்கும் இத்தனை ஏன், அங்கே நின்றிருந்த கருணாகரன், அம்பிகா, பிரதீபா என அனைவருக்கும் வாயடைத்துப் போன நிலைமைதான். அம்பிகா தண்ணீர் குடிக்க வைத்து ஆற்றுப்படுத்த, சற்றே அமைதியாக அமர்ந்தார் சுகந்தி.
“வேலையில்லன்னு சொல்றாங்களே… எப்படி சமாளிக்கிறீங்க? பேசமா எங்கூட வந்துருங்களேன்” மகளிடம் கூறிய சுகந்தி,
சரஸ்வதியை பார்த்து, “என்கூட பொண்ணையும் மாப்பிள்ளையும் அனுப்பி வைங்க சம்மந்தியம்மா” எனக் கோரிக்கை வைக்க,
“எங்க வீட்டுக்கே உங்க மாப்பிள்ளை இன்னும் வரக்காணோம். துரை அத்தனை கௌரவம் பார்க்கிறார். நீங்க கூப்பிட்டதும் வந்தா, சந்தோசமா கூட்டிட்டு போங்க” வீராப்பு குறையாமல் ஒப்புதல் அளித்தார் சரஸ்வதி.
‘நீ போய் விடுவாயா, அதையும் தான் பார்க்கிறேன்’ என்கிற பாவனையில்தான் இருந்தது அவரின் பேச்சு.
“யார் வீட்டுக்கும் அன்னக்காவடியா, போக்கிடம் கிடைக்காம போயி தங்கணும்னு எனக்கொன்னும் தலையெழுத்தில்ல…” அன்றொரு நாள் நக்கலுடன் பேசிய குருமூர்த்தியின் பேச்சிற்கு இன்று சுகந்தியிடம் பதிலளித்து திருப்திபட்டுக் கொண்டான் பிரஜேந்தர்.
“எனக்கும் சுயமா சம்பாதிக்க தெரியும். அதைவிட பொண்டாட்டிய புரிஞ்சு, அவளை விட்டுக்கொடுக்காம வாழவும் தெரியும். உங்க விசாரணை முடிஞ்சதுன்னா சொல்லுங்க, நான் கிளம்புறேன்” விரைப்புடன் சொன்னவனை பார்த்து முகத்தை சுளித்தார் கருணாகரன்.
“பெரியவங்களை எப்போ நீ மதிக்க கத்துக்கப் போற? அவங்க எதுக்கு சொல்றாங்க, ஏன் சொல்றங்கன்னு தெரிஞ்சுக்கற அளவுக்கு நிதானமோ பக்குவமோ இன்னும் உனக்கு வரல. எங்களை விடு, பெத்த பொண்ணை மட்டுமே நம்பிட்டு இருக்குற இவங்களுக்காக நீ, உன்னை மாத்திட்டுதான் ஆகணும் பிரஜன். புத்தியோட நடந்துக்கோ, அதுக்கு பிறகு உன் இஷ்டம்” கண்டிப்புடன் கூறியவர்,
“உன்னை தைரியமானவனா, தன்னம்பிக்கை உள்ளவனா வளர்த்த எங்களை தலைகுனிய வைச்சுடாதே!” வருத்தத்துடன் பேசி முடிக்க, பிரஜேந்தருக்கு பெரும் தலைகுனிவாகிப் போனது.
ஆறுதலாக பல சமாதனப் பேச்சுக்களை அனைவரிடமும் பேசியதில் தெளிவடைந்த சுகந்தி ஒரு வழியாக விடைபெற்று கிளம்பினார். அப்பொழுதும் நேரடியாகவே பிரஜேந்தரை தன்னுடன் வரும்படி அழைத்துப் பார்த்தார்தான், அவன்தான் அசையவில்லை.
“மாப்பிளையா வரப் பிடிக்கலன்னா, மகனா வாங்க தம்பி!” சுகந்தி வருந்தி அழைத்தும், இவன் கல்லாய் சமைந்து நிற்க, ரவீணாவின் மனம் கோபத்தில் கொதிக்கத் தொடங்கியது.
‘இன்னும் எப்படி எல்லாம் என் அம்மாவை இவன் உதாசீனப்படுத்துவான்’ என்றே மனதிற்குள் குமையத் தொடங்கினாள் ரவீணா.
சுகந்தி சென்றதும் மனைவியை உடனிழுத்துக் கொண்டு வீட்டிற்கும் வந்து சேர்ந்த பிரஜன், தடாலடியாக அவளின் கையை உதறிவிட, முற்றிலும் உடைந்து போனாள் ரவீணா,
“ஏன்டா இப்படி பிஹேவ் பண்றே? உன் மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்க…” உள்மனதில் கோபங்கள் அளவில்லாமல் இருந்தாலும் பொறுமையுடனே கேட்டாள்.
“இந்தக் கேள்விய நான் கேக்கணும்டி… உன் இஷ்டத்துக்கு இருக்க, உங்க எல்லாருக்கும் அவ்வளவு ஈசியாகிட்டானா நானு?” அவனது உஷ்ணத்தில் சற்றே பின்னடைந்தவள்,
“என்ன சொல்ல வர்ற, புரியல?”
“என்னை கேக்காம, எப்படி நீ உங்கம்மாவை கூப்பிடலாம்? அதை என்கிட்டே சொல்லவும் இல்ல… அந்த வாய்ஸ் மெசேஜ் அதையும் என்கிட்டே சொல்லாம மறைச்சிருக்க, என் முகத்துல இளிச்சவாயன்னு ஒட்டியிருக்கா?” காறி உமிழாத குறையாக கடிந்து கொள்ள, ரவீணா அதிர்ந்து நின்றதென்னவோ ஒருநொடிதான்.
“என் அம்மாவ கூப்பிட, நான் ஏன் உன்ன கேக்கணும்? அந்த வாய்ஸ் மெசஜூக்கு நான் அவ்வளவு இம்பார்ட்டன்ஸ் குடுக்கல, ஏன்னு அதுக்கான ரீசனும் சொல்லிட்டேன். இதுல எங்கேயிருந்து உனக்கு கௌரவக் குறைச்சல் வந்ததுன்னு புரியல?” அமைதியாக அழுத்தத்துடன் பதிலளித்தாள்.
“இது என் வீடு… என்ன செய்யணும்னாலும் என்கிட்ட ஒருவார்த்தை கேட்டுட்டு செய்யணும். முக்கியம் இருக்கோ இல்லையோ எந்தவொரு விஷயத்தையும் என்கிட்ட மறைக்காம சொல்லணும்-ங்கிற பேஸிக் சென்ஸ் கூட உனக்கு தெரியாதா? இல்ல எனக்கும் இம்பார்ட்டன்ஸ் குடுக்காம இருக்கியா?” ஒவ்வொன்றையும் கணவன் உத்தரவாகக் கூற, ரவீணாவிற்கு சலித்துப் போனது.
“ம்ப்ச்… திரும்ப திரும்ப ஒரே கேள்வியை கேக்காதேடா! இன்னும் ரெண்டு தடவ தொடர்ந்து அந்த வாய்ஸ் கால் வந்து டார்ச்சர் பண்ணியிருந்தா உன்கிட்ட சொல்ற முடிவோடதான் இருந்தேன். அதுக்குள்ள வெளியே தெரிஞ்சு போச்சு”
“இதை நம்பச் சொல்றியா… தெனமும் உன்கிட்ட பேசுற உங்கம்மா, அந்த ஃபோன் வர்ற விஷயத்தை உனக்கு சொல்லாம இருந்திருக்க மாட்டாங்க. அவங்க சொல்றதும் உனக்கு வந்த மெசேஜும் உண்மையா இருக்கான்னு வேவு பார்த்து, எல்லார் முன்னாடியும் என்னை குற்றவாளியா நிக்க வைக்கத்தான் நீ அமைதியா இருந்திருக்க… அதுக்காத்தான் என்கிட்டே இருந்து மறைச்சிருக்க… அதுதானே உண்மை?” அடுக்கடுக்காய் குற்றங்களை மனைவியின் மீது ஏற்றி வைத்து பேச, பொங்கி வந்த ஆங்காரத்தில் கணவனின் சட்டையை பிடித்து உலுக்கி விட்டாள் ரவீணா.
“அறிவுகெட்டவனே… என்ன பேசுறேன்னு தெரிஞ்சுதான் பேசுறியா? உன் மேல மலையளவு நம்பிக்கை வச்சு நான் உறுதியா இருந்தா, அதை இப்படிதான் தப்பா பார்ப்பியா? உன்னை நம்பி ஒண்ணுமே இல்லாம வந்ததுக்காக, என்னை எப்படியும் கேள்வி கேட்டு நிக்க வைக்கலாம்னு நீதான் ஈசியா நினைச்சுட்ட… ரொம்ப பேசிட்ட ப்ரஜூ! நான், உன் கூட வாழ வந்திருக்கேன். உனக்கு அடிமையா இருக்க வரல…” கடுப்புடன் இவள் பதில் பேச ஆரம்பிக்க, இவனுக்கும் பற்றிக் கொண்டு வந்தது.
அதிலும் உட்காருவதற்கும் கூட இடமில்லாமல் சுகந்தி கொண்டு வந்த பொருட்கள் அனைத்தும் வீட்டிற்குள் பரப்பி வைக்கப்பட்டிருக்க, முன்னிலும் விட அதிகமாய் வெகுண்டான் பிரஜேந்தர்.
“இப்ப, நீ பஞ்சாயத்தை ஆரம்பிக்க நினைக்கிறியா? ஒழுங்கா வாயை மூடிட்டு கொஞ்சநேரம் அமைதியா இரு! மொதல்ல இந்த கருமத்தை எல்லாம் என் கண்ணுல படாம ஒளிச்சு வை!” கத்திக்கொண்டே காலால் அங்கிருந்த டிராலியை உதைத்தான்.
“என் அம்மா எனக்கு வாங்கிட்டு வந்ததை எதுக்காக ஒளிச்சு வைக்கணும்? உனக்கு பிடிக்கலன்னா நீ தொடாம இரு. என்னையும் சேர்த்து தடுக்க உனக்கு யாரு அதிகாரம் கொடுத்தா?” கோபத்தில் வெடித்த மனைவியின் பேச்சு கணவனை ஆழமாய் பதம் பார்த்தது.
“அப்படி என்னடா தப்பு பண்ணினாங்க எங்கம்மா… அவங்க வயசுக்கு கூட மரியாதை குடுக்க மாட்டியா நீ? நான் எங்கம்மா கூட பேசினா அப்படி முறைச்சு பார்க்கிற… எல்லை மீறி போயிட்டு இருக்க ப்ரஜூ!”
“நான், உன் புருஷன்டீ! என்னை விட உன்மேல யாருக்கு அதிக உரிமையிருக்கு” என்றவனை பூச்சி புழுவினை பார்ப்பது போல் உதட்டை சுளித்துப் பார்த்தாள் ரவீணா.
“இதப்பார்… இந்த உரிமை, புருசன்னு ஆதிகாலத்து சம்பிராதயம் எல்லாம் பேசி கடுப்பை கிளப்பாதே! நம்ம லவ் சக்சஸ் ஆகணும்னு தான், வீட்டை விட்டு வந்து உன்னை கல்யாணம் பண்ணிகிட்டேனே ஒழிய, என் பிறந்த வீட்டு உறவுகளை வெட்டி விட்டுட்டு வரல.
உனக்கு எந்த உறவும் தேவையில்லாம இருக்கலாம். ஆனா, எனக்கு நம்ம ரெண்டு குடும்பத்து உறவுகளும் வேணும். சொத்துக்கு பணத்துக்கு ஆசைப்பட்டு பேசுறேன்னு நீ மட்டமா நினைச்சாலும் சரி, உன்னை மதிக்காம பேசுறேன்னு நீயா முடிவு பண்ணிகிட்டாலும் சரி, அதுக்கு நான் பொறுப்பில்ல…” நிதானமாக பேசி தனது எதிர்ப்பினை காட்டினாள்.
“பேச்சை நிறுத்து ரவீ… உன்னைப் போலத்தான் நானும் என் குடும்பத்தையும், சொத்து சுகத்தையும் விட்டுட்டு வந்திருக்கேன். அதை மனசுல வைச்சாவது நான் சொல்றதை நீ கேட்க மாட்டியா?”
“உனக்கு அடிமையா, ஒரு வேலைக்காரியா நான் இருக்கனுன்னு நீ எதிர்பார்க்கிற… அப்படியிருக்க என்னால முடியாதுடா”
“என்னடீ உளறிட்டு இருக்க?”
“என்னை சந்தோசமா வச்சுக்க நீ கஷ்டப்படுறேன்னு சொல்ற மாதிரிதான், என்னோட கஷ்டத்தை நான் வெளியே சொல்லாம இருக்கேன். எனக்கு வீட்டு வேலையெல்லாம் செஞ்சு பழக்கமே இல்லை. ஆனாலும் இப்ப ஒரு வேலைக்காரி மாதிரி எல்லாமே செய்றேன். எதையுமே உன்கிட்ட ஒரு குறையா இதுவரைக்கும் நான் சொன்னதே இல்ல” வருத்தத்துடன் மனதில் தோன்றியதை எல்லாம் அவள் உளறிக் கொட்ட, மனைவியின் பேச்சு செல்லும் திசை புரியாமல் திகைப்பில் ஆழ்ந்தான்.
“நான் உளறல… உண்மையைச் சொல்றேன். உனக்கு எந்தளவுக்கு உரிமையிருக்கோ அதே அளவு உரிமை நம்ம வீட்டுல எனக்கும் இருக்கு, இருக்கணும். ஆனா, நீ, உன்னோட தேவைக்கு மட்டுமே என்னை இழுத்துக்கற… பகல்ல வீட்டு வேலைகளுக்கு மட்டுமில்ல, ராத்திரியில…” என்றவள் கட்டிலை பார்க்க, கணவனின் கை மனைவியின் கன்னத்தில் இடியாய் இறங்கியது.
கணவனின் அதிரடியில் இவள் ஸ்தம்பித்து கன்னத்தை பிடித்துக் கொண்டு நிற்க, அவனோ தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள படாதபாடு பட்டான்.
நிமிடத்தில் என்ன பேச்சு பேசி விட்டாள். தன் காதலை, அன்பை ஆராதிப்பதாய் நினைத்து இவளிடம் அதீதமாய் ஒட்டி உறவாடியதை இப்படியும் கொச்சைபடுத்திவிட முடியுமா? நினைக்க நினைக்க மனம் ஆறவில்லை அவனுக்கு.
ஒருவேளை இவள் சொல்வதைப் போலதான், நானும் நடந்து கொள்கிறேனோ என எண்ணத் தோன்றியது அவனுக்கு. இதோ இப்போதும் தனது ஆளுமையை காண்பிக்க, பெண்ணென்றும் பாராமல் கையை நீட்டி விட்டான். நல்ல ஆண்மகன் செய்யும் வேலையா இது?
அதிலும் உனக்காகவே என் சுகமும் துக்கமும் என பிதற்றிக் கொண்டிருப்பவன் செய்யக்கூடிய செயலா இது என்று தன் கையை சுவற்றில் குத்தி தன்னை வலிக்க வைத்துக் கொண்டான். ஏனோ தன்னைத்தானே கேவலமானவனாய் சித்தரித்துக் கொண்டான்.
இவளுடன் தான் கொண்ட தாம்பத்தியத்தில் தனது அன்பையும் அரவணைப்பையும் அவளுக்கு உணர்த்தவில்லையா? எங்கே தோற்றுப்போனது தன் காதல்? எங்கே தவறிப்போனேன் நான்? பிரஜனின் சுயத்தை உரசிச்சென்ற கேள்விகள் அனைத்தும் அவனை மேலும் ரௌத்திரம் கொள்ள வைத்தது.
இந்த மனநிலையில் வீட்டில் இருந்தால் மனைவியை இன்னும் காயப்படுத்தி விடுவாய் என உள்மனம் எச்சரிக்க விரைந்து வீட்டை விட்டு வெளியேறினான் பிரஜேந்தர்.