அன்பின் உறவே – 19

அன்பின் உறவே – 19

“மதுக்கரையில ரெண்டுபேரை கேட்ச் பண்ணியிருக்கோம் பிரஜன். லொகேஷன் ஃபாலோ பண்ணி வந்ததுல, கால்ஸ் வந்த ரெண்டு நம்பரும் லோக்கல் பி.சி.ஓ நம்பரா இருக்கு. ரெண்டுநாளா நம்ம ஆட்களை அங்கேயே இருக்கச் சொல்லி பார்த்ததுல, உங்க மாமியார் வீட்டுக்கு ஃபோன் பண்றவங்களை கண்டுபிடிச்சுட்டோம்.

நெக்ஸ்ட் மூவ் என்னன்னு நீ சொல்றத வச்சு, உங்க ஆட்கள் மூலமாவோ அல்லது டிபார்ட்மெண்டுல கம்பிளைண்ட் ரெய்ஸ் பண்ணியோ அவங்களை வளைச்சு பிடிச்சுடலாம்” டிடெக்டிவ் நண்பன் ராஜூ விவரங்களை கூறி முடிக்க, பிரஜேந்தரின் முகம் கடினப்பட்டது.

ஒளிந்திருப்பவனின் ஊர் தெரிய வந்த பிறகு, இந்த இரண்டு நாட்களாக அந்த மர்மநபரைத் தேடும் பணி தீவிரமாகத் தொடங்கியது.

அறிவுப்பூர்வமான செயலாக அந்த நபர், ஊர் பொது தொலைபேசியில் இருந்து அழைத்திருப்பது தெரிந்ததும் அங்கேயே தங்கி விட்டனர் துப்பறியும் குழுவினர் .

அடுத்ததாக ரவீணாவிற்கு வரும் குறுஞ்செய்தியின் கணிணி உள்ளடக்க முகவரியை(system ip address) கண்காணித்ததில் அது கோவையில் உள்ள பிரபல மகளிர் கல்லூரியைக் காண்பித்தது.

நூற்றுக்கணக்கானோர் படிக்கும் கல்லூரியில் யாரை, எதன் அடிப்படையில் விசாரிக்கவென்ற குழப்பம் நீடிக்க, முதலில் தொலைபேசியில் பேசும் நபர்களின் மீது கவனம் வைத்ததில் வகையாக அவர்களும் மாட்டிக்கொண்டனர்.

இனி அவரவர் சொந்த விருப்பு, வெறுப்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்கிற தற்போதைய நிலையினை நண்பன் விளக்கி கொண்டிருக்க பிரஜேந்தரும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தான்.

“அந்த ஆளை ஒரு ரூம்ல போட்டு அடைச்சு வைக்கச் சொல்லு ராஜூ! அவனை கொஞ்சம் கவனிச்சிட்டு அப்புறமா என்ன செய்யுறதுன்னு யோசிப்போம். நான் உடனே அங்கே வர்றேன்” பல்லைக் கடித்தவாறே கூறிக்கொண்டே போக இடைமறித்தான் நண்பன்.

“நாம கேட்ச் பண்ணின ரெண்டுபேரும் காலேஜ் பொண்ணுங்க பிரஜன். நீ நினைக்கிற மாதிரி ஈசியா எதையும் செய்ய முடியாது. ஆதாரத்த கையில வச்சுட்டு பேசினாலே, நாம மிரட்டுறோம்னு போலீஸ்ல சொல்லி நம்ம கதையை கந்தலாக்கிடுவாங்க. கூடவே சோஷியல் மீடியாவும் சேர்ந்தா சொல்லவே வேண்டாம்.

சோ, கொஞ்சம் நிதானமாதான் இதை ஹாண்டில் பண்ணனும். சிஸ்டர் மூலமா லேடீஸ் போலீஸ் ஸ்டேசன்ல கம்பிளைன்ட் கொடுத்தா போதும், அங்கே உள்ளவங்க சரியான ட்ரீட்மென்ட் குடுத்துடுவாங்க” எதார்த்தத்தை ராஜூ எடுத்துக்கூற, பிரஜேந்தருக்கு ஆத்திரம் கூடிப்போனது.

“ச்சேய்… என்ன கன்றாவிடா இது? என்னைவிட சின்னவயசுப் பசங்க பக்கம் நான் எட்டிகூட பார்க்க மாட்டேன். இதுல பொண்ணா…” என பல்லை கடிக்க,

“பொண்ணு இல்ல பிஸ்தா சார், பொண்ணுங்க” கிண்டலோடு திருத்தினான் ராஜூ.

“உனக்கு நக்கலு?”

“ஹேய் பிஸ்தா, இப்படியெல்லாம் பொண்ணுங்க உன்னை பிளாக்மெயில் பண்ண குடுத்து வைச்சிருக்கணும் மச்சி!”

“சத்தம் போட்டு சொல்லாதேடா, என் பொண்டாட்டி கேட்ட இதுக்கும் சேர்த்தே என்னை பிழிஞ்செடுப்பா. ஏற்கனவே அன்லிமிடெட்ல போயிட்டு இருக்கு” சோகப்பாட்டு படித்தவன் அடுத்தநாளே மதுக்கரை செல்ல ஆயத்தமானான்.

“உன்னை வைச்சுதான் மூவ் பண்ணனுமாம் ரவீ! சோ, யாருக்கும் தெரியாம போயிட்டு வந்துடுவோம்” மனைவியை அழைக்க, அவளோ சுகந்தியிடம் தெரியபடுத்தி விட்டாள்.

“ஏன்டீ?” என முறைத்தவனிடம்,

“இன்கம்மிங் நம்பரை ட்ரெஸ் பண்ண லெட்டர் எழுதி, அம்மாகிட்ட சைன் வாங்கிட்டு போனதுல இருந்து என்ன ஆச்சுன்னு கேட்டு நச்சரிக்கிறாங்க… இந்த அளவுல இருக்குன்னு சொன்னா மனசு சமாதானமாவங்க ப்ரஜூ!” என்றவளை ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.

மனைவியின் எண்ணப்படியே சுகந்தியிடம் விஷயத்தை கூறிவிட்டு வர, அவரும் சற்று ஆறுதலடைந்தார். அம்சவேணி பாட்டியின் தொலைதூர சிந்தனையில் கோவை என்றதும் குருமூர்த்தியின் இரண்டாவது குடும்பத்தையே கணக்கிட்டது.

“அப்படியெல்லாம் இருக்காது பாட்டி! இப்படி செய்றதால அவங்களுக்கு என்ன லாபமிருக்கு? அதோட ரெண்டு குடும்பமும் இதுவரையில நேருலகூட பார்த்துகிட்டது இல்ல” ரவீணாவின் மறுப்பினை சுகந்தியும் ஒத்துக்கொள்ள, அப்பேச்சு அதோடு முடங்கியது. 

மகள் மருமகனை ஆசையுடன் உபசரித்த சுகந்தி, கோவைக்கு தனது காரில் சென்று வருமாறு வற்புறுத்தி சாவியை கையில் வைத்து அழுத்திவிட்டார்.

“நீ போனதுல இருந்து டிரைவரையும் நிறுத்திட்டேன் வினுமா! சும்மாவே நிக்கற வண்டி உங்களுக்காவது யூஸ் ஆகட்டும். பெட்ரோல் பங்க் கார்டுல இருக்குற பணம் கழியுற வரைக்குமாவது வண்டியை எடுத்து யூஸ் பண்ணுங்க” காரண காரியத்தோடு கூறித் திணிக்க, மறுப்பு சொல்ல முடியவில்லை.

பிரஜேந்தரின் அண்ணன்கள் உதவிக்கு வரவா என்று கேட்க, அங்குள்ள சூழ்நிலையை பொறுத்து அழைக்கின்றோம் எனக்கூறி கிளம்பிச் சென்றார்கள்.

தள்ளியும் நிற்காமல் ஒட்டவும் செய்யாமல் இருபக்க பெற்றோர்களோடு பேச ஆரம்பித்து இருந்தனர் இருவரும். ஒருநாளில் உண்டான குழப்பத்தில் விளைந்த நன்மை இது.

“அநேகமா உன் ஃபிரண்ட்ஸ் சர்க்கிள்ள இருக்கிற பொண்ணுங்களோட வேலையாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்” காரினை ஒட்டியவாறே பிரஜன் கூற முறைத்துப் பார்த்த ரவீணா,

“என் ஃப்ரண்ட்ஸ் ஒன்னும் அவ்வளவு ரசனை கெட்டவங்க கிடையாது. ஐ திங்க் உன்னோட ரவுடியிசத்துல பாதிக்கப்பட்ட ஒரு அறிவாளி ஜீவன், இதையெல்லாம் செஞ்சு உன்னை சுத்தல்ல விடுதுன்னு நினைக்கிறேன்” குறையாத கிண்டலில் இறங்கினாள்.

“விட்டா என்னை கொலைகாரன் லிஸ்டுல சேர்த்துடுவ போல, கொஞ்சமே கொஞ்சம் பாவம் பாருடீ, நான் உன் புருசன்!”

“அது உனக்குத்தான் மறந்து போகுது போல, அதான் அடிக்கடி சொல்லிட்டு திரியுற”

“நீ ஏன் சொல்ல மாட்ட… ஒரு வேகத்துல நடந்த சின்ன தப்பை இன்னமும் பிடிச்சு தொங்கிட்டு இருக்க, இப்படி சொன்னாலாவது மறப்பியான்னு பார்க்கதான் அடிக்கடி செல்ஃப் டப்பா அடிக்கிறேன்” பாவமான பாவனையில் கூறியவனை பார்த்து பக்கென்று சிரித்து விட்டாள் ரவீணா.

“என் கோபத்துக்கு நிறைஞ்ச ஆயுசுடா! அவ்வளவு சீக்கிரம் குறையாது.”

“இந்த ஏழைக்கு வாழ்க்கை பிச்சை போடு தாயே! ரொம்பவே காய்ஞ்சு போயி கிடக்கேன், அப்புறம் இடம் பார்க்காம பாய்ஞ்சா சேதாரத்துக்கு நான் பொறுப்பெடுத்துக்க மாட்டேன்” பொய் எச்சரிக்கை எல்லாம் தூசியாக தட்டிவிட்டாள்.

“சோ, சிம்பிள்டா பிஸ்தா, விட்டது தொல்லைன்னு டிவோர்ஸ் குடுத்துட்டு போயிகிட்டே இருப்பேன். ஒழுங்கா ரோட்டை பார்த்து டிரைவ் பண்ணு மேன்… சும்மா அழுது வடியாதே” சிலபல தர்க்கங்கள், நக்கல், நையாண்டிகள் தொடர ஒரு வழியாக மதுக்கரை வந்தடைந்தனர் இருவரும்.

ராஜூ குறிப்பிட்டு சொன்ன அந்த இரு பெண்களையும் பிசிஓ சென்டரில் அழைத்து வைத்துக் கேட்க, இருவரும் பிடிகொடுத்து பேசவில்லை. வற்புறுத்திக் கேட்டதில் மிரட்டலாகவே பதில் வந்தது

“காலேஜ் பொண்ணுங்களை அவ்வளவு ஈசியா நினைச்சீங்களா சார்? டார்ச்சர் பண்றீங்கன்னு ஒரு ஸ்டேட்மெண்ட் போதும், போக்சோல உங்களை உள்ளே அனுப்பி, கூடவே உங்க வொய்ஃப் பேரையும் கோர்த்து விட்ருவோம்” கல்லூரிப் பெண்கள் எகத்தாளமாய் கூறியதில் அனைவருக்கும் பொறுமை பறந்து போனது.

நல்லதிற்கு காலமில்லை என்பதும் இதைத்தானோ என்றெண்ணியவர்கள் வேறு வழியின்றி அங்கிருந்த மகளிர் காவல் நிலையத்தில் ரவீணாவின் மூலம் புகார் கொடுத்தனர்.

“ஸ்டுடன்ட்ஸ் மேல குடுக்கற கம்பிளைன்டை அவ்வளவு ஈசியா வாங்க மாட்டோம் சார்! உங்களுக்கு எதிரா கேஸ் திரும்பினா உங்களுக்குதான் பிரச்சனையாகும். எங்களுக்கும் நிறைய இஸ்யூஸ் வரும்” பெண் காவலதிகாரியின் அறிவுரையில் நடந்தவைகள் அனைத்தும் ஆதாரத்துடன் கூறப்பட, சரியென்று புகாரை வாங்கிக் கொண்டனர்.

இதற்கே அன்றையநாளின் மாலைப் பொழுது முடிந்திருக்க மறுநாள் காலையிலேயே அந்த பெண்களின் வீட்டிற்கு ஆள் அனுப்பி, பெற்றோருடன் சந்தேகப்படும் பெண்கள் காவல்நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

அப்பொழுதும் அப்பெண்கள் தங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லையென்றே சாதித்தனரே ஒழிய, சற்றும் பின்னடையவில்லை.

இக்கால இளைஞர்களின் தைரியம், நிமிர்வினை அர்த்தமில்லாத வீம்பில் செயல்படுத்திக் கொண்டிருந்தனர் அந்தக் கல்லூரி மாணவிகள்.

பொறுமையிழந்த பெண் அதிகாரிகளும் இனி அகிம்சைக்கு இடமில்லை என்ற முடிவில், தங்களின் தொழில்மொழியோடு விசாரணையை துவக்கினர்.

“நடந்த உண்மையை சொல்லலன்னா, உங்க காண்டாக்ட் சரியில்லன்னு நீங்க படிக்கிற காலேஜ் பிரின்சிபால்கிட்ட விசயத்தை சொல்லி நோட்டீஸ் போர்டுல உங்க பேரை போட்டோவோட ஒட்டி வைப்போம். உங்க செமஸ்டர் ரிசல்ட், கேம்பஸ் இண்டர்வியூஸ் எல்லாமே கேள்விக்குறி ஆகிடும். ப்யூச்சர் ஸ்பாயில் ஆகும்.

அப்ப உங்களைக் காப்பாத்த யாரும் வரமாட்டாங்க. உங்களை மட்டுமே நம்பியிருக்குற பேரண்ட்ஸ் முன்னாடி கெட்டபேரோட நிக்கிறதுதான் மிஞ்சும்” நயமான, கோபமான, ரௌத்திரத்தை தாங்கிய காவல்துறையின் பேச்சுக்கள் அப்பெண்களின் அடிவயிற்றை கலக்கியதில் ஒருவரையொருவர் பார்த்து கொண்டு உண்மையை கூறிவிடுவதாக ஒப்புக்கொண்டனர்.

“இது… வந்து” வார்த்தைகளை தொடரமுடியாமல் ஒருத்தி முழுங்க,

“ஜஸ்ட் ஒரு பெட்டிங் கேம் மேடம்” தடாலடியாக போட்டுடைத்தாள் இன்னொருத்தி.

“என்னது பெட் கட்டி விளையாடுனிங்களா? அறிவிருக்கா உங்களுக்கு… என்ன நடந்தது தெளிவா சொல்லு” காவல் அதிகாரி அதட்டல் போட, தானாய் வந்து விழுந்தன உண்மைகள்.

“எங்க க்ளோஸ் ஃபிரண்டுங்க மேடம், ஸ்கூல்ல இருந்தே ஒன்னாவே இருப்போம். காலேஜ் லைஃப்லதான் எங்களை விட்டு அவ தனியா போயிட்டா… லீவுநாள்ல கான்ஃபரன்ஸ் கால் இல்லன்னா நேருல மீட் பண்ணி பேசுவோம்.

அப்படி ஒருநாள் மீட் பண்றப்போ எப்படியோ டிவோர்ஸ் பத்தின பேச்சு வந்தது. வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ற லவ்வர்ஸ்-குள்ள நிறைய மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் இருக்கும். அதான் நிறைய டிவோர்ஸ் நடக்குதுன்னு நாங்க ரெண்டுபேரும் பேசப்போக அப்படியெல்லாம் இல்லன்னு அவ மறுத்துப் பேசினா.

நல்ல புரிதலோட வாழுற எத்தனையோ லவ்வர்ஸ் இருக்காங்கன்னு கொஞ்சம் எமோஷனலா பேச ஆரம்பிச்சா. ஏனோ அந்த விஷயத்தை அவ ஈஸியா எடுத்துக்கல. அவ சொன்னத ஃப்ரூப் பண்றதுக்காக புதுசா கல்யாணம் பண்ணின ஒரு ஜோடியை டெஸ்ட் பண்ணுவோம்ன்னு அவதான் இந்த பெட்டிங் கேமை ஆரம்பிச்சு வைச்சா” ஒருத்தி நிறுத்த,

“பைத்தியக்காரத்தனமா இருக்கு நீங்க சொல்றது” அதிகாரி கண்டிக்க, அனைவரும் கடுகடுப்புடன் நின்றனர். பிரஜேந்தர் தன்னை அடக்கிக்கொள்ள பெரும்பாடுபட்டான்.   

“இல்லங்க மேடம்! நாங்க உண்மையைத்தான் சொல்றோம். அப்படி நாங்க குடுக்குற டார்ச்சர்ல புதுசா கல்யாணம் பண்ணின ஜோடி பிரிஞ்சுட்டா, தோல்வியை ஒத்துகிட்டு எங்க ரெண்டு பேருக்கும் ஆளுக்கு ஒருலட்சரூபா குடுக்கறதா பிராமிஸ் பண்ணியிருக்கா மேடம்!” அவசரமாய் கூறி முடிக்க, அருகிலிருந்த அந்த பெண்ணின் தாயார், மகளின் முதுகில் மொத்தினார்.

“அட நிறுத்துங்கமா! சரியா சொல்லி முடிக்கட்டும், அப்புறம் வைச்சுக்கோங்க” காவல் அதிகாரி கண்டிக்க,

“பணத்தாசையில அவளோட பெட்டிங் கேமுக்கு நாங்களும் சரின்னு ஒத்துகிட்டோம். அவ சொல்பேச்சை நாங்க கேட்டாதான் இந்த பெட்டிங் சேலன்ஞ் நடத்த முடியும்னு சொல்லி எங்ககிட்ட ஹெல்ப் கேட்டா” அடிவாங்கிய வலியுடன் தொடர்ந்தாள் ஒருத்தி.

“என்ன ஹெல்ப்?”

“அது, அவ ரெக்கார்டு பண்ணி குடுக்கற வாய்ஸ் மெசேஜை, அவ சொல்ற நம்பருக்கு ஃபோன் பண்ணி ஓட வைக்கணும். எதிர்பக்கம் என்ன கேட்டாலும் பதில் சொல்லக்கூடாதுன்னு சொல்லி, செய்யச் சொன்னா!”

“தன்னோட தேவைக்கு அவ சொன்னா, நீங்களும் யோசிக்காம செஞ்சுடுவீங்களா?” கேட்ட பிரஜேந்தருக்கு பொறுமை பறந்தது.

“வெளியே இருக்குற எஸ்டிடி பூத்ல இருந்துதானே பண்ணச் சொல்றான்னு சரின்னு தலையாட்டிட்டோம். தினமும் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் அவ குடுக்குற வாய்ஸ் ரெக்கார்டை அந்த நம்பருக்கு போட்டு கேக்க வைக்கணும்.

இது வரைக்கும் மூணு வாய்ஸ் ரெகார்ட் பண்ணி குடுத்திருக்கா. அந்த பக்கம் கேக்கறவங்களுக்கு சந்தேகம் வராத அளவுக்கு ஒரு மெசேஜ் மாத்தி இன்னொரு மெசேஜ்ன்னு போடச் சொல்லுவா… அப்படிதான் இப்ப வரைக்கும் பண்ணிட்டு வர்றோம்” இருவரும் பயத்துடனே கூறி முடிக்க, பெற்றோர்களின் வசைமொழிகளும், அடிகளும் அப்பெண்களை நன்றாக பதம் பார்த்தது.

“எங்க வீட்டுல நடக்கிற பங்ஷன் வரைக்கும் அவளுக்கு தெரியுதே, அது எப்படி?” ரவீணா கேட்க, அதற்கு தெரியாதென்று கையை விரித்தனர்.

ரவீணா, பிரஜேந்தர் உடன் வந்திருந்த ராஜூவும் இவர்களின் மேல் அருவெறுப்பான பார்வையை படரவிட, கூனிக் குறுகிக் போயினர் பெண்கள்.

“இப்ப நீங்க வசமா மாட்டியிருக்கீங்களே, இது தெரிஞ்சா உங்க ஃப்ரண்ட் உங்களை காப்பாத்த வருவாளா?” காவலதிகாரி தனது விசாரிப்பினை தொடர்ந்தார்.

“அவளால உடனே வரமுடியாதுங்க மேடம். அவ காலேஜ் ஹாஸ்டல்ல தங்கியிருக்கா. அவங்க அப்பா இல்லன்னா அம்மா மட்டும்தான் போயி கூட்டிட்டு வர முடியும்.”

“ஒ… இப்ப இவங்க உங்கமேல கம்பிளைன்ட் குடுத்திருக்காங்க… சப்போஸ் உங்க ஃபிரண்ட் இவங்களுக்கு எதிரா கேஸ் ஃபைல் பண்ணினா நீங்க அப்ருவரா மாறி அவளுக்கு எதிரா சாட்சி சொல்ல வருவீங்களா?” அதிகாரி கேட்க, தயங்கியே நின்றனர்.

“உங்களுக்கு ரெண்டு ஆப்ஷன் இருக்கு. ஒன்னு உங்க ஃபிரண்ட் இங்கே வந்து விளக்கம் சொல்லி, உங்களை காப்பாத்த வரணும். இல்லன்னா நீங்க அப்ரூவரா மாறி இவங்க பக்கம் சாட்சி சொல்லணும். உங்க எதிர்காலமா, இல்ல ஃபிரிண்ட்ஷிப்பான்னு நல்லா யோசிங்க… அப்புறம் உங்க இஷ்டம்” அதிகாரியின் எச்சரிக்கை அவர்களை வெகுவாக கலவரப்படுத்தியது.

அதிர்ச்சியும் பயமும் ஒரே நேரத்தில் பெண்களை தாக்கிவிட தங்களின் நண்பியை வரவழைக்க முடிவெடுத்தனர். அலைபேசியில் அவளை அழைக்க அதுவோ அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

அப்பொழுதுதான் ஞாபகம் வந்தவர்களாய், “அவ ரூம் மேட்  மொபைலைத்தான் யூஸ் பண்ணுவா மேடம். ஏன்னா அவகிட்ட மொபைல் இல்ல… அதுவும் பத்து நாளைக்கு ஒருதடவதான் எங்ககூட பேசுவா” அப்பாவியாக விளக்கம் கூறியதில், இது வேறா என்று சலித்துப் போனது அனைவருக்கும்.

“சரி, அவங்க வீட்டு அட்ரஸ், அவ படிக்கிற காலேஜ், என்ன டிபார்ட்மெண்ட், எந்த ஹாஸ்டல்னு எல்லா விவரமும் எழுதிக் குடுங்க நாங்க பார்த்துக்கறோம்” அதிகாரி யோசனையை முன்வைக்க அதற்கும் தடங்கல் வந்தது.

“இப்ப ஒரு மாசமா அவங்க குடும்பம் இந்த ஊருல இல்லங்க மேடம். எங்கேயோ வெளியூர்ல அவங்க அப்பாவுக்கு வேலை மாறிப் போயிடுச்சுன்னு குடும்பத்தோட அங்கே போயிட்டாங்க”

“எந்த ஊருக்கு போயிருக்காங்க?”

“அது தெரியலங்க மேடம்” முழித்தபடியே கைகளை விரிக்க, அனைவருக்கும் கட்டுக் கடங்காத கோபம் ஏறியது.

“எவடி அந்த கேடுகெட்டவ, எங்களுக்கும் தெரியாம…” என பெற்றோரில் ஒருவர் கேட்க,

“நமக்கு தெரிஞ்சவங்கதான்மா! பெரிய வீட்டுப் பொண்ணு ஆராதனா” ஒருவழியாக நண்பியின் பெயரைக் கூற, அவளா இப்படி என்ற பாவனையே பெற்றோர்களிடத்தில் தோன்றியது.

“கௌரவமான குடும்பமாச்சே டீ! அவங்க அப்பா அவ்வளவு கடுசா இருப்பாரே, அவங்க பொண்ணா இந்த ரவுசு பண்ணி வச்சிருக்கு?” திகைப்பு மாறாமல் கேட்டார் ஒரு பெண்ணின் அம்மா.

“அவங்க வீட்டுல அவங்கப்பா அப்படி இருக்குறதால, அவ மனசு ரொம்ப அழுத்தமா இருக்குன்னு புலம்புனாம்மா! கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகனும், மைண்ட் டைவர்ட் பண்ணனும்னு சொல்லித்தான் அவ இதை ஆரம்பிச்சா. நாங்களும் விளையாட்டுக்குதானேன்னு சரின்னு தலையாட்டிட்டோம்”

“அந்த நேரத்துல உங்களால பாதிக்கப்படுறவங்க, உங்க முன்னாடி வந்து நிப்பாங்கன்னு நினைக்கலையா?” அதிகாரி கேட்க

“இப்படி ஏதாவது பிரச்சனை வந்தா, எனக்கு தெரியாம இருக்காது. நான் அவங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்னு அவ சொல்லப்போயிதான் நாங்க ஒத்துக்கிட்டோம் மேடம்”

திரும்பிய பக்கமெல்லாம் தனக்கானதை மட்டுமே நிறைவேற்றிக் கொண்ட பெண்ணின் குள்ளநரித்தனத்தை என்னவென்று சொல்ல? முடிவில் ஆராதனா பெற்றோரின் அலைபேசி எண்ணை வாங்கி அழைக்க, அதுவும் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது.

“வீட்டுல ஆள் இல்ல, இவ கூடவும் பேச முடியாது, ஹாஸ்டலுக்கு போயி பார்த்துடலாமா?” பிரஜேந்தர்  யோசனையை முன் வைக்க,

“அவங்க காலேஜ் ஹாஸ்டலுக்கு அவ்வளவு சீக்கிரமா போக முடியாதுங்க சார். முன்னாடியே விசிட்டர்ஸ் லிஸ்டுல மென்சன் பண்ணியிருக்கணும், இல்லன்னா அவளோட பேரண்ட்ஸ் காலேஜூக்கு ஃபோன் பண்ணிச் சொல்லணும். அப்போதான் அவளை பார்க்க வார்டன் பெர்மிஷன் குடுப்பாங்க” மாணவிகளின் விளக்கத்தில் எங்கு போய் முட்டிக் கொள்வதென்று எவருக்கும் புரியவில்லை.

மகளிர் காவல் அதிகாரியின் துணையோடு ஆராதனாவை சென்று பாப்போம் என்று முடிவெடுக்கப்பட, அதை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தார் காவல் அதிகாரி.

“இந்த வாரம் ஃபுல்லா ஊர்வலம், மாநாடுன்னு நிறைய வேலை இருக்கு சார். புரடக்ஷன் டுயூட்டியே எங்களுக்கு சரியா இருக்கும். அடுத்த வாரம் போயி விசாரிச்சுட்டு வந்துருவோம்!” தங்களின் நிலையை எடுத்துக் கூற, சரியென்று அரைகுறை மனதோடு இருவரும் சம்மதித்தனர்.

“நீங்க புகார் குடுத்த தொண்ணூறு நாள்ல நாங்க விசாரிச்சு கேசை முடிச்சாகணும். அதனால அடுத்த வாரம் கண்டிப்பா போயிடலாம்” தைரியமளித்த அதிகாரி மாணவிகளைப் பார்த்து,

“அந்த பொண்ணுகிட்ட நீங்க இங்கே வந்த விஷயம், விசாரணை நடந்துகிட்டிருக்குன்னு எதுவும் சொல்லிக்க வேணாம். எப்பவும் போல பேசுங்க. விசாரணைக்கு கூப்பிட்டா வந்துட்டு போகணும்” என்று அறிவுறுத்தினார்.

“வயசுப் பொண்ணுங்க அடிக்கடி இங்கே வந்துட்டு போனா, ஊருல நாலுபேர் நாலுவிதமா பேச ஆரம்பிச்சுடுவாங்க மேடம்” பெண்ணின் அன்னை ஒருவர் தயக்கத்துடன் கூற,

“எங்களுக்கும் தெரியும்மா! அவசியம் இருந்தா மட்டுமே வரச் சொல்லுவோம். மத்தபடி மொபைல்ல பேசி முடிச்சிடுவோம்” விளக்கத்துடன் அவர்களை அனுப்பி வைக்க, இவர்களும் புறப்பட்டு வந்தனர்.  

வரும் வழியெங்கும் இன்னதென்று புரியாத ஒருவித அழுத்தமும் யோசனையும் இருவரையும் வாட்டி வதைக்க இவர்களின் பயணம் மௌனத்தை மட்டுமே சுமந்து சென்றது.

“உன்னை சந்தேகபடுறேன்னு என்னை தப்பா நினைக்காதே ப்ரஜூ! உண்மையை சொல்லு, கொஞ்சம் ஞாபகப்படுத்தியும் பாரு… யாராவது ஒரு பொண்ணு உன்னை லவ் பண்றேன்னு சொல்லி, நீ ஹார்ஷா பேசி அவளை ரிஜெக்ட் பண்ணியிருக்கியா? என் சைடுல யாருமில்ல, ஐ’யாம் கிளியர். எனக்கு என்னமோ விசயம் கொஞ்சம் சீரியஸா போற மாதிரி இருக்கு” பயத்துடன் கேட்ட ரவீணாவின் மனதில், புதிதாய் முளைத்த பற்பல எண்ணங்களின் தாக்கங்கள். அவற்றின் பேரலை அவளின் சுயத்தையே சிதற வைத்தது.  

“உன் பயம் எனக்கு புரியுதுடா! எனக்கு அப்படி யாரும் இல்ல, என்னோட சைட், கிரஷ், என்னோட லவ் எல்லாமே நீ மட்டும்தான். மை மதர் ப்ராமிஸ்” பிரஜன் உணர்ச்சிவசப்பட,

“இல்லடா, லட்ச ரூபாய பெட் அமௌன்டா குடுக்குறேன்னு சொல்லியிருக்கான்னா அவளோட எய்ம் என்னன்னு என்னால கெஸ் பண்ண முடியுது. நம்மை டார்கெட் பண்ணி பிரிக்கிறதுதான் அவளோட தேவை, சந்தோசம்னா… நம்மளால அவளுக்கு அப்படியென்ன கஷ்டம் வந்திருக்கும்? எதுவும் புரியல ப்ரஜூ” குழப்பமும் சோர்வும் அழுத்தி, கணவனின் தோளில் சாய, அவனும் ஆறுதலாய் அனைத்துக் கொண்டான்.

“ஸ்டேஷன்ல இருந்து கூப்பிடுற வரை வெயிட் பண்ண வேணாம் ரவீ! அவங்க பேரன்ட்ஸ் நம்பர், அட்ரஸ் இருக்கு. டிடெக்டிவ்ல சொல்லி நம்பரை ட்ரெஸ் பண்ணி, அட்ரஸ்ல போயும் விசாரிக்க சொல்வோம். தனியா போயி நிதானமா பேசினா விஷயம் என்னன்னு தெளிவா தெரிய வந்துரும். அவங்க பக்கம் நியாயம் இருந்தா, கம்பிளைன்டையும் வாபஸ் வாங்கிட்டு ஏதாவது ஹெல்ப் பண்ணுவோம். நீ எதையும் மனசுல போட்டு குழப்பிக்காதே!” யோசனையை கூறி மனைவியை அமைதிபடுத்த, அவளுக்கும் சரியென்று பட்டது.

அடுத்தநாளே ஆராதனாவை பற்றிய விவரங்களை சேகரிக்க ஆரம்பித்து, அவர்களின் பெற்றோர்களை சந்திக்க முயற்சி செய்ய, அந்தக் குடும்பமே வெளியில் வராமல் இவர்களுக்கு போக்கு காட்டியது.