அன்பின் உறவே – 20

அன்பின் உறவே- 20

இயற்கையின் குளிர்ச்சியும் இருளின் மிரட்சியும் இணைந்த மூணாறின் உள்ளடங்கிய பகுதி. சகல வசதிகளும் நிறைந்திருக்க அந்த வீட்டில் தனிமைப் பயம் மட்டுமே சூழ்ந்திருந்தது. 

தொலைக்காட்சித் திரையில் மனம் லயிக்காமல் உள்ளுக்குள் எதையோ அசைபோட்டபடி அமர்ந்திருந்தார் அன்னலட்சுமி.

மதுக்கரையை விட்டு மூணாறுக்கு வந்த ஒருமாதமாக ஒவ்வொரு நாளும் புரியாத புதிராகச் செல்கிறது இந்த அபலைக்கு.

வயதிற்கு வந்த மகளையும் மகனையும் விடுதியில் விட்டுவிட்டு, யாரையும் பார்க்க முடியாத இந்த அஞ்ஞாதவாசம் எதற்கென்று இவரின் புத்திக்கு இன்னமும் எட்டவில்லை.

ஏன் என்று கணவரிடம் கேள்வி கேட்டால் எப்பொழுதும் போல் முறைப்பும், சிடுசிடுப்புமே பதிலாக வந்து நின்றதில் விதியே என்று ஊமையாகிப் போனார்.

உதவிக்கென இருக்கும் பெண்மணியும் வேலை முடிந்து விட்டால் தன்வீட்டைப் பார்க்கப் போய் விடுவார். குடும்பஸ்திரியை தன்னுடன் கட்டிவைத்துக் கொள்ளும் கல்நெஞ்சமில்லா வெகுளிப் பெண்மணி.

இவரின் சுபாவமே கணவருக்கு பம்பர் பரிசாக அமைய, திருமணம் முடிந்த நாள்முதல் இதுநாள் வரையில் தனது சொல்லாலும் செயலாலும் மனைவியை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறார்.

இப்பொழுதும் கணவர் வருவதற்கு முன் கண்ணயர்ந்து விட்டால் அவரிடம் பேச்சு வாங்க நேரிடுமே என்ற மனக்கலக்கத்தோடு மனைவியின் கடமையுணர்ச்சியும் சேர்ந்துகொள்ள, நடுநிசி வரையில் தொலைக்காட்சியில் ஏதோ ஒரு திரைப்படத்தை ஓட விட்டுக் கொண்டிருந்தார் அன்னலட்சுமி.

பின்னிரவு ஒருமணியை தாண்டிய நேரம். கணவரும் வந்துவிட, மனைவியின் மூளை சுறுசுறுப்பானது. வீட்டிற்குள் நுழையும்போதே அவரின் நடையும் பாவனையும் கோபத்தில் எதிரொலிக்க, வழக்கம்போல் அது மனைவியின் தலையில் விடிந்தது.

“தோசை ஊத்தட்டுங்களாங்க?” மெதுவாகக் கேட்க,

“அப்படியே கொஞ்சம் விசத்தையும் கலந்து ஊத்தி குடு, மொத்தமா போயி சேர்றேன்” கர்ஜித்த கணவனின் கோபத்தில் தடுமாறிய அன்னலட்சுமி, அதிர்ந்து போகவில்லை. இதெல்லாம் தனக்கு பழகிப்போன ஒன்றென சகஜமாய் பதிலளித்தார்.

“ஏனுங், இப்படி வெடுக்குன்னு பேசிட்டு? நேரமே ஆகாரம் எடுக்காம வேல வேலன்னு அலைஞ்சா இப்படிதானுங் கோவம் வரும்” என்றவர் தன்போக்கில் சமையலைறையில் புகுந்து தோசை வார்க்கத் தொடங்கிவிட்டார்.

தனது அவசரத் தேவைகளை முடித்துக்கொண்டு வந்தமர்ந்த கணவரின் முகம் இன்னமும் கோபத்தில் சிவந்தேயிருக்க, தயக்கத்துடன் தட்டை வைத்து பரிமாறினார் அன்னலட்சுமி.

“உன் பொண்ணு இன்னைக்கு பேசினாளா?”

“இல்லங்… தம்பி மட்டும் பேசினாங்க. அவனும் அக்கா பேசலன்னு வெசனபட்டான். ஏதும் விஷயம் சொல்லணும்ங்களா? இந்த சாக்குல அந்த கழுதையை பார்த்து, நாலு போடு போட்டு வரேனுங்” பேச்சுவாக்கில் மகளை கடிந்து கொண்டார் அன்னலட்சுமி.

கணவரின் மனதை நிறைத்து விட்டோம் என்றெண்ணியவரின் உள்ளமும் மகளை சந்திக்க வேண்டுமென்ற ஆசையில் வேகமெடுத்தது. அவளை நேரில் பார்த்து ஒரு மாதத்திற்கும் மேலாகி விட்டதே!

“போயேன்! நீ போனா, உன்ற பின்னாடியே என்னையும், உம் புள்ளையையும் சேர்த்து உள்ள தள்ள ஒரு கூட்டமே ரெடியா இருக்கு. எப்படி வசதி, பொண்ண போயி பாக்கறியா?” சத்தமில்லாத வெடிகுண்டு ஒன்றை வைக்க, அன்னலட்சுமியின் மனம் ஆட்டங் கண்டது.

வழக்கமான வசைமொழி, சிடுசிடுப்பு என இல்லாமல் கணவர் அழுத்தமாய் கேட்ட கேள்வியில் உறைந்தே போனாள் மனைவி.

“உன்ற மவ என்ன காரியம் பண்ணியிருக்கா தெரியுமா? ஊரே காறித் துப்புதுடீ! கழுத்தை நெறிக்கற கடங்காரனுக்கு பதில் சொல்வேனா, இல்ல உன் பொண்ணுக்காக போலீஸ் ஸ்டேஷன் அலைவேனா?” பல்லைக்கடித்து காறித் துப்பிய கேள்வியில் அன்னலெட்சுமி சிலையாகிப் போனார்.

அவரின் காதினுள் மகளுக்காக காவல்நிலையம் வரை செல்ல வேண்டுமென கர்ஜித்த கணவரின் குரலே ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.

“போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போற அளவுக்கு அப்படி என்ன தப்பு பண்ணினாங்க அவ?”

“அடுத்தவன் குடும்பத்துல குழப்பத்த உண்டு பண்ணப் பார்த்தா மெச்சி மெடல் குடுப்பாங்களா? அதுவும் பெரிய இடத்துல குழப்படி பண்ணி, இவளுக்கு என்ன லாபம் வரப்போகுது? எவன் வாழ்ந்தா என்ன, செத்தா என்ன, இவளை யாருடீ இல்லாத வம்பையெல்லாம் இழுத்து வைக்கச் சொல்றா?” மகளை கடித்து துப்பியவரின் பேச்சில் அடுத்து வந்ததெல்லாம் கேட்கக் கூசிப்போகும் வார்த்தைகள்.

“வார்த்தையை அளந்து பேசுங்கங்க… அவ நம்ம பொண்ணு! இதை அடிக்கடி நான் ஞாபகப்படுத்த வேண்டியிருக்கு. அவளுக்கு என்ன நெலமையோ எதுல சிக்கியிருக்காளோ? எந்த ஆகாவலி, என்ற புள்ளையோட மனசை கலைச்சு போட்டுச்சோ…” மனைவி அழுகையில் அரற்ற ஆரம்பிக்க, தட்டை விசிறியடித்து ஆவேசத்தில் வெடித்தார் கணவர்.

“கையில ஆதாரத்தோட சுத்துறான் டீ! தன் குடும்பத்துல குதிச்சு கும்மியடிச்சவள அவ்வளவு ஈசியா விடமாட்டான் அந்த அடாவடி. நாளைக்கு என்கூட நீயும் வர்ற… நான் மட்டும் போயி கூப்பிட்டா உன்ற பொண்ணு அசையமாட்டா. எப்படியாவது பேசி அவளை என்கிட்டே கொண்டு வந்து சேர்க்கறது உன்ற பொறுப்பு.

என்ன செய்யணும், ஏது செய்யணும்னு சொல்ல ஒரு ஆளை கைகாட்டி விடுறேன். அவன் என்ன சொல்றானோ அதுபடி கேட்டு நடந்தா பிரச்சனை சுலபமா முடிய வாய்ப்பிருக்கு.

அப்படியில்லாம எதிர்த்து பேசி முரண்டு பிடிச்சா, அவ என் பொண்ணே இல்லன்னு ஊருக்கு முன்னாடி தலை முழுகிடுவேன். அப்புறம் அசிங்கம் உனக்குத்தான்” ரௌத்திரமூர்த்தியாக கர்ஜித்து ஒய்ந்த கணவரின் வார்த்தைகள், மனைவியை உயிரோடு கொன்று போட்டது.   

கணவரின் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாமல் விடிந்தும் விடியாத பொழுதில் கோவையில் மகளின் விடுதிக்கு கணவருடன் சென்றிறங்கினார் அன்னலட்சுமி.

தன்னை சந்திக்க தாயோடு தந்தையும் வந்த செய்தியறிந்த மகளும் அவர்களை பார்க்க வராமல் காத்திருக்க வைத்தாள். கண்ணெதிரே வராமல் எங்கோ இருந்து விடுதியின் தொலைபேசியில் அன்னையை அழைத்துப் பேசினாள் மகள்.

“என்ன விஷயங்கம்மா, இந்த விடியகாத்தால வந்து நிக்கிறிங்க?” மகளின் குரலில் அவளின் நலத்தை அறிந்துகொண்ட அன்னைக்கு, தன்னெதிரே வந்து நிற்காமல் பேசியது, கோபத்தை வரவழைத்தது.

“முன்னாடி வந்து பேசாம இதென்னடீ வெளயாட்டு? நானும் அப்பாவும் உனக்காக கீழே காத்திட்டு இருக்கோம், வெரசா புறப்பட்டு வா கண்ணு! அப்பா உன்ற வார்டன்கிட்ட உன்னை கூட்டிப் போறதுக்கு பேசிட்டாரு” பதட்டத்துடன் உத்தரவிட்ட தாயின் குரலே மகளுக்கு நிலைமை சரியில்லயென்று உணர்த்தி விட்டது.

“ம்மா… உங்க இஷ்டத்துக்கு என்னால கிளம்பி வரமுடியாது. அடுத்த வாரம் பிராக்டிகல்ஸ் ஸ்டார்ட் ஆகிடும். இன்னும் ரெக்கார்ட் வொர்க் முடிக்கல…” மேற்கொண்டு தனது நிலைமையை கூறத் தொடங்கியவளின் பேச்சில் இடையிட்ட அன்னலட்சுமி,

“எந்த வேலையா இருந்தாலும் அம்மாகூட தங்கியிருந்து முடிக்கலாம் அம்மிணி. சாக்கு போக்கு சொல்றத விட்டு போட்டு உடனே கிளம்பி வா கண்ணு!” மகளை வேகப்படுத்தினார்.

“உங்க அவசரத்துக்கெல்லாம் என்னால வரமுடியாதுங்கம்மா!”

“அப்பா கூப்பிடுறாரு கண்ணு, அடம்பிடிக்காதே!”

“அவர்தானே ஹாஸ்டலை விட்டு வெளியே காலெடுத்து வைக்க கூடாதுன்னு சொல்லிட்டு போனாரு, இப்ப என்னவாம்? அவர் மாதிரி நேரத்துக்கு பேச்ச மாத்திக்கிற பழக்கம் எனக்கில்லங்கம்மா!

நான் வரமாட்டேன். நான் வராம நீங்களும் போகமாட்டேன்னு நின்னா, இங்கேயே ஒரு ரூம் எடுத்து தங்கிக்கோங்க… நல்லா ரெஸ்ட் எடுங்ம்மா!” படபட பேச்சில் அன்னைக்கும் ஆணையிட்டு பேச்சை முடித்துவிட்டாள் மகள்.

மகளின் பிடிவாதத்தை வார்டனிடம் கூற, “படிக்கிற புள்ளைய ஏன் அலைய விடுறீங்க? அவ மனசு போலவே இங்கேயே இருக்கட்டுங்க சார்! நீங்க கிளம்புங்க” தன்னுடைய மாணவிக்கு பரிந்து கொண்டு அவரும் பேசிவிட, வேறு வழியில்லாமல் திரும்பி வந்தனர்.

மகளின் மேலுள்ள கோபத்தை கணவர், தனது வழக்கமாக மனைவியிடம் காண்பித்து அவரை கடித்து குதறி வைக்க, பாராயணம் கேட்பது போல அமைதியாக காதில் வாங்கிக்கொண்டார் அன்னலட்சுமி. 

அவருடைய பயமெல்லாம் இரவு, கணவரின் வாய்மொழியாக கேட்ட சேதிகள் உண்மையாக இருக்குமோ என்று கலங்கிக் கொண்டிருந்தது.

மகளும் அவரின் கேள்விகளுக்கு பிடிகொடுக்காமல் பேசியும் தன்முன்னர் வராமல் இருந்ததிலும் அன்னையின் மனம் மேலும் பீதியடையத் தொடங்கியது.

எந்தவித பாதிப்பும், பழிசொல்லும் இல்லாமல் மகளை காப்பது எவ்வாறு என்றே மனம் சிந்திக்கத் தொடங்க, கணவரின் யோசனைப்படியே நடக்க முடிவெடுத்தார். இல்லையென்றாலும் கணவரின் முடிவே இறுதியாக இருக்கும் இவரைப் பொறுத்த மட்டிலும். இது அப்பாவிப் பெண்களுக்கே உண்டான சாபக்கேடு.

தன்பின்னால் நாய்குட்டியாக வந்த மனைவியை சேலத்தில் பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்தார் கணவர். மனைவியின் அலைபேசியில், அழைப்பு வந்தால்(incoming calls) மட்டுமே பேசிக்கொள்ளும் வசதியை செய்து வைத்தவர், அறையிலுள்ள தொலைபேசியிலும் அதே முறையை செய்து முடித்தார்.

தன்னைத் தவிர வேறு யாரிடமும் பேசக்கூடாது, வெளியே தலைநீட்டியும் பார்க்ககூடாது போன்ற அதிகபட்ச எச்சரிக்கையுடன் ஹோட்டல் அறையில் அன்னலட்சுமியை தனியாக  விட்டுவிட்டுச் சென்றவர் இரவு நேரமாகியும் வரவில்லை.

கணவரின் வருகையை எதிர்பார்த்திருந்த நேரத்தில் மகனின் அழைப்பு வர தனது கலக்கங்களை கவலைகளை எல்லாம் அவனிடம் கொட்ட ஆரம்பித்தார் அன்னலட்சுமி.

“எனக்கு ரொம்ப பயமாயிருக்கு கண்ணு! உன்ற அப்பாவும் என்ன நடந்ததுன்னு முழுசா சொல்லாம, என்னை முறைச்சிட்டு திரியுறாரு. அந்த கழுதையும் என்றகூட போக்கு காட்டி வெளையாடுது!”

இரவு மணி ஒன்பதை நெருங்கிய நேரம், அம்மாவும் மகனும் தங்களின் தினப்படி பேச்சில் மூழ்கியிருந்தனர். விடுதியில் தங்கியிருக்கும் மகனுடன் தினந்தோறும் இந்நேரத்தில் பேசிவிடுவார் அன்னலட்சுமி. அம்மாவிற்கு தப்பாமல் காத்திருந்து ஆசையுடன் பேசுவான் மகன் ஆரின்பன்.

“சாப்பிட்டியா கண்ணு? பிடிக்குதோ இல்லையோ வயித்துக்கு எடுத்துக்கணும் கண்ணு… நாக்கு ருசிக்கலன்னு பட்டினி கெடந்தா அம்மாக்கு கோவம் வரும் பார்த்துக்கோ!” செல்லமாய் கண்டித்தவரின் குரலில் இருந்ததெல்லாம் கனிவும் வாஞ்சையும் மட்டுமே.

பள்ளி இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவன் ஆரின்பன். பதினோராம் வகுப்பில் நுழைந்த பொழுது தந்தையின் தொழிலை முன்னிட்டு கோவையை விட்டு மதுக்கரைக்கு இடம்பெயரும் நிலை ஏற்பட, அன்னையின் பிடிவாதத்தில் ஆரம்பித்தது விடுதிவாசம்.

இப்பொழுதும் அம்மாவின் செல்ல கண்டிப்பிற்கு சரியென்று தலையசைத்தவன்,

“நீங்க சாப்பிட்டீங்ளாமா? நாங்க பக்கத்துல இல்லன்னு நீங்களும் அரைகுறையா சாப்பிட்டு வைக்காதீங்க. அப்புறம் உங்களை பார்த்த ஜோருல, நான் உங்கள தூக்கி சுத்தும்போது முடியல கண்ணு, கீழே இறக்கி விடுன்னு கெஞ்சக்கூடாது” செல்ல மிரட்டலை விடுத்த ஆரின்பனுக்கு அன்னை என்றால் அத்தனை பிரியம்.

அதற்காக அப்பாவை பிடிக்காது என்றெல்லாம் கூற முடியாது. அம்மாவின் ஆசைக்காக அப்பாவிடம் பேசுவான் அவ்வளவே! கானல்நீராகிப் போன உறவுகளில் இவனின் அப்பா முதன்மையானவர். அதற்குமேல் அந்த உறவிற்கு மகுடம் சூட்டி அழகுபார்க்க விரும்பமாட்டான்.

“அப்பா எப்போ வர்றேன்னு சொன்னாருங்ம்மா?” அக்கறையுடன் ஆரின்பன் கேட்க,

“இருக்குற குழப்பத்துல எப்போ வருவாங்கன்னு தெரியல கண்ணு! எனக்கும் இங்கே படபடன்னு வருது”

“அவர் பத்திரமா வருவாரு! நீங்க போயி தூங்குங்ம்மா”

“இல்ல கண்ணு, அவர் வாராப்போ தூங்கிட்டுருந்தா சத்தம் போடுவாரு! ரூமுல டிவி இருக்கு. அதை பார்த்து போட்டு உக்காந்தா பொழுது ஓடிரும்”

“நீங்க ஏன்மா இப்படி இருக்கீங்க?” ஆதங்கமாய் மகன் கேட்க,

“எப்படி இருக்கேன் கண்ணு?” அறியாமையில் பதில்கேள்வி கேட்டார் தாய்.

“உங்ககூட பேச என்னால முடியாதுங்ம்மா, அதுக்கெல்லாம் என்ற அக்காதான் சரியா வருவாளாக்கும்” தமக்கையின் பெருமையை மார்தட்டி கூறிக்கொண்டான் ஆரின்பன்.

“அந்த ரவுசு புடிச்ச கழுதைய பத்தி என்றகிட்ட பேசாத கண்ணு! நேருல போனா, எங்களை வந்து பார்க்காம ஃபோன் போட்டு பேசுறா அந்த அம்மிணி”

“அவளுக்கு அப்பாவும் வந்து நின்னது தெரிஞ்சுபோச்சு போலங்ம்மா, அதான் உங்கட்ட கண்ணாமூச்சி ஆடிட்டாங்!”

“நான் என்ன வெளையாட்டு பொம்மையா கண்ணு? ஆளாளுக்கு உருட்டி வெளையாட… உன்ற அப்பாவும் என்ன ஏதுன்னு சொல்லாம இங்கே கொண்டு வந்து போட்டாரு என்னைய…”

“ஹாஹா… என்ற அம்மா அம்புட்டு வெகுளியா இருக்காங்ம்மா. அதான் எல்லாரும் உங்களை சுத்தி விளையாடுறாங்க.” இலகுவாகச் சொன்னவனின் குரல் திடீரென்று இறுக்கத்துடன் வெளிவந்தது.

“எனக்கும் அப்பா பண்றது கொஞ்சங்கூட பிடிக்கலங்ம்மா. அவரோட இஷ்டத்துக்கு எல்லாரும் ஆடனும்னு எதிர்பார்த்தா எப்படிங்ம்மா? இதை நான் வெளியே சொல்றதில்ல, அக்கா  எதிர்த்து பேசிப் போடுறா!”

“ம்க்கும்… அந்த அம்மிணிக்கு நீ ஒருத்தன் போதுஞ்சாமி! இதை கேட்டா, சும்மாவே சாமியாடிட்டு இருக்கிறவ, கையில வேப்பிலை குடுத்த கணக்கா ஜிங்ஜிங்ன்னு குதிப்பா… கொஞ்சமும் பயமில்லா எல்லார்ட்டயும் எகிறிட்டு நிக்குது கழுதை!” மகளை பற்றிய பேச்சில் அடங்கியிருந்த கோபம் உடனே துளிர்த்துக் கொண்டது அன்னைக்கு.

“பொம்பள புள்ள தைரியமா இருக்குறதும் நல்லதுதானேங்ம்மா. நம்ம அம்மணி அப்படியில்லன்னா அப்பா மாதிரியான ஆளுங்களை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம். எனக்கும் இவரோட நடவடிக்கையில சந்தேகம்தானுங்ம்மா”

“நம்ம அப்பா கண்ணு! நீயும் இப்படி சொல்லலாமா?”

“அட போங்கம்மா, நீங்க எப்ப நாங்க சொல்றது சரின்னு சொல்லியிருக்கீங்க? நான் நாளைக்கு பேசுறேன்” அலுப்புடன் மகன் அழைப்பினை முடித்துக்கொள்ள, மீண்டும் தனிமை அவரை சூழ்ந்து கொண்டது.

************************

பிரஜேந்தரின் எண்ணப்படி துரிதமாக எடுத்த அடுத்த கட்ட நடவடிக்கைகள் எல்லாம் சுபமாகவே முடிந்து கொண்டிருந்தது. மதுக்கரை ஊரையே அலசி புரட்டிப் போட்டிருந்தனர் ராஜூவின் துப்பறியும் குழுவினர்.

அதற்கு கைமேல் பலனாக ஆராதனாவின் வரலாறு பிரஜேந்தரின் கையில் தவழ்ந்து கொண்டிருந்தது. அவளது வீட்டை சுற்றி ரோந்து பார்த்தபோது, அவளின் தந்தையின் ஆட்களும் அதேபணியினை மேற்கொண்டிருப்பது தெரியவர, விசாரணைகள் தீவிரமாகிப் போயின.

பிரஜேந்தரின் அடுத்தகட்ட முயற்சிகள் எல்லாம் அவளது தந்தைக்கு தப்பாமல் சென்று சேருவதும் மிகவும் வசதியாகிப் போனது. ஒருபெண்ணை மட்டுமே குறிவைத்து துப்பறிய முயன்றதில் அவளது தந்தையின் சுயரூபங்களும் வெளிவரத் தொடங்கின.

இதற்கிடையில் சுகந்தியின் தொலைபேசியில் வழக்கமாக பேசும் பெண் குரலுக்கு பதிலாக ஆண்குரல் ஒலித்து, அடுத்த பீதியைக் கிளப்பியது.

“உங்க பொண்ணு ரவீணா கொடுத்த போலீஸ் குடுத்த கம்பிளையின்ட வாபஸ் வாங்கச் சொல்லுங்க மேடம். தப்பு எங்க பொண்ணு பேருலதான். இனிமே இப்படி நடக்காம பார்த்துக்கறோம். எல்லாத்தையும் சரி பண்றோம். இந்த பிரச்னையை பெருசாக்காம பெரிய மனசு பண்ணி விட்டுடுங்க” கெஞ்சலாகவும் தீர்மானமாகவும் இரு நாட்களில் அந்த ஆண்குரல் பலமுறை பேசியிருக்க, மகளிடம் தெரியபடுத்தினார் சுகந்தி.

“அதெப்படி விடமுடியும்? அந்த பொண்ணு பண்ணின காரியத்தால எவ்வளவு பிரச்சனை, குழப்பம். அட்லீஸ்ட் அவ எதுக்காக செஞ்சான்னு தெரிஞ்சுக்காவாவது அவளை நேருல பார்த்தே ஆகணும்மா. கம்பிளைண்ட் புராசஸ் நடக்கிறபடி நடக்கட்டும். அவ கூட பேசின பிறகு முடிவு பண்ணுவோம்” உறுதியான முடிவில் ரவீணாவும் கூறிவிட, நடப்பதை வேடிக்கை பார்ப்போமென்று அமைதியானார் சுகந்தி.

ஆராதனாவின் பெற்றோர் தற்சமயம் மூணாறில் வசிப்பதும், கோவை கல்லூரியில் பெற்றோர் வந்து மகளைப் பார்த்து சென்றதும், தற்போது அவர்கள் ஹோட்டலில் தங்கியிருப்பதும் வரை பிரஜேந்தருக்கு செய்தியாக எட்டியிருந்தது.

இதையெல்லாம் ரவீணாவிடம் கூறினால் அவள் எப்படி எடுத்துக் கொள்வாளோ என்ற கவலையும், அதனால் ஏற்படப்போகும் தர்க்கங்களும் பிரச்சனைகளும் அவனின் முன்னே வரிசை கட்டி நிற்க, தலைசுற்றிப் போனான்.

மனைவிக்காக அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்பவனுக்கு கைகளை கட்டிக்கொண்டு பொறுமையோடு கையாளும் முறைதான் சரியென்று பட, தனது கோபத்தை அடக்கிக் கொள்ள பெரும்பாடுபட்டான்.

விசாரணை எந்த அளவில் உள்ளது, யார் அந்தப் பெண்ணென்று தெரிந்ததா போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை மனைவி கேட்கும் போது சிரித்துக் கொண்டே மழுப்பலாக பதில்கூற ஆரம்பிக்க, ரவீணாவும் கண்டுகொண்டாள்.

“என்னமோ நீ சரியில்லன்னு என் உள்மனசு சொல்லிட்டே இருக்கு ப்ரஜூ! நாம நெனச்சத விட பிரச்சனை பெருசா போயிட்டு இருக்கா?” பார்வையாலேயே தன்னை எடைபோடும் மனைவியை தூக்கி சுற்ற வேண்டுமென பரபரத்த மனதை அடக்கிகொண்டான் பிரஜன்.

“ச்சோ ஸ்வீட்ரா, மை பட்டர்குட்டி! அப்படியெல்லாம் ஒரு பிரச்சன புண்ணாக்கும் இல்லடா. ஜஸ்ட் அலைஞ்சுட்டே இருக்கேனா… அந்த டயர்டு அப்படியே முகத்துல தெரியுது. மை பிங்கி லிப்ஸ் பிஸ்தா கன்னத்தை பிங்கியாக்கினா எல்லாம் சரியா போயிடும். தட்ஸ் ஆல்” காதலாய் மயக்கியே மனைவியை அழகாக சமாளித்தான்.

யாருக்கும் பாதகம் வராமல் இதற்கு முடிவு கட்ட வேண்டுமென்று நினைத்தவன், நேரடியாகவே ஆராதனாவின் தந்தையை சந்திக்க சென்றான். ஆனால் அவரோ யாரும் தன்னை எளிதில் சந்திக்க முடியாதவாறு அத்தனை கெடுபிடிகளை இடையில் வைத்திருந்தார்.

இறுதியாக பிரஜேந்தரிடம் சிக்கியது அன்னலட்சுமியின் அலைபேசி எண். அதை வைத்தே காய் நகர்த்த ஆரம்பித்தான்.

இரண்டு நாட்களாக ஹோட்டல் அறையில் அடைந்து கிடந்த அன்னலட்சுமியின் அலைபேசியில் பிரஜேந்தர் தன்னை முறையாக அறிமுகப்படுத்திக் கொண்டு, தன்னைக் குறிவைத்தே ஆராதனா செய்த தில்லுமுல்லுகளை வெளிப்படையாகவே கூறிவிட்டான்.

அதோடு சுகந்தியின் மன உளைச்சலையும் அதனால் ரவீணாவிற்கும் தனக்கும் ஏற்பட்ட பிணக்கையும் மேம்போக்காக கூறி, ஆராதனா வருகையின் அவசியத்தை உணரவைத்தான்.

மகளென்று வரும்போது கணவரின் கெடுபிடிகள் எல்லாம் தூரமாகிப் போனது அன்னைக்கு. தனது முயற்சியாக பிரஜேந்தரை நம்பிப் பார்ப்போமே என்று காணொளி அழைப்பில்(videocall) அவனுடன் மீண்டும் மீண்டும் அழைக்க சொல்லி பேசினார்.

அன்னலட்சுமியின் சம்மதத்துடன் கோவை கல்லூரி விடுதிக்கு சென்ற பிரஜேந்தர், முதலில் விடுதி வார்டனிடம் அன்னலட்சுமியின் சார்பாக வந்திருப்பதை தெளிவுபடுத்தி விட்டு, தனது அலைபேசியின் காணொளி அழைப்பில் இருவரையும் பேசவைத்தான்.

தேர்வு நடக்கும் நேரம், ஆராதனாவை அனுப்பி வைக்க முடியாதென்று வார்டன் கூற,

“அவ வந்தே ஆகவேண்டிய அவசரம் மேடம். ஒரேயொரு நாள் மட்டும் அனுப்பி வைங்க” அன்னலட்சுமியின் கெஞ்சலில் சரியென்று சம்மதித்தவர், ஆராதனாவை கீழே அழைத்தார்.

“உங்கம்மா பேசினாங்க ஆராதனா… ஒருநாள்ல உன்னை அனுப்பி வைக்கிறதா சொல்லியிருக்காங்க. இந்த தம்பி கூட புறப்பட்டு போ!” என்றபடி பிரஜேந்தரை கைகாட்ட இருவரும் நேரடியாக சந்தித்துக் கொண்டனர்.

நொடிநேரம் திகைத்து நின்றவள் தனக்கு இவனுடன் செல்வதில் இஷ்டமில்லையென்று வார்டனிடம் முரண்டு பிடிக்க, மீண்டும் அன்னலட்சுமியை காணொளி அழைப்பில் அழைத்து விட்டான் பிரஜேந்தர்.

“இம்புட்டு பிடிவாதம் கூடாதுடீ! யோசிக்காம புறப்பட்டு வா, நீ பண்ணி வைச்சிருக்கிற சிக்கலை தீர்த்துவைச்சுட்டு போ!”

“முடியாதுங் ம்மா! என்னால பிரச்சனைன்னு சொல்றவங்க சந்தோசமாத்தானே இருக்காங்க! நான் வந்து தீர்த்து வைக்கிற அளவுக்கு அங்கே என்ன இருக்குங் ம்மா?” எகத்தாளத்துடன் தன் எதிரில் நிற்பவனை ஓரக்கண்ணால் பார்த்தவாறே பேச, தன் கை முஷ்டியை இறுக்கி கோபத்தை அடக்கிக் கொண்டான் பிரஜேந்தர்.

மகளின் பதிலில் அன்னலட்சுமிக்கும் கோபமேறிவிட, “நீ இப்ப கிளம்பி வரலன்னா, நானே ஊருக்கு முன்னாடி நின்னு நீ என் பொண்ணே இல்லன்னு சொல்லிடுவேன். உன்ற அப்பா சொல்ற வரைக்கும் நான் காத்திட்டு இருக்க மாட்டேன்” என வெகுண்டு பேசியவர்,

“அடுத்தவங்க குடும்பத்த சீண்டு முடிக்கிறதே பெரிய பாவம் கண்ணு! இதுல நீ நம்ம குடும்பத்துக்கே…” மேற்கொண்டு பேசமுடியாமல் அழுகை முட்டிக் கொண்டுவர, அழைப்பை நிறுத்தி விட்டார் அன்னலட்சுமி.

அன்னையின் அதட்டலும் அழுகையும் மகளை தடுமாற வைத்த நேரத்தில், மிதப்பாய் அவளைப் பார்த்து சிரித்தான் பிரஜேந்தர்.

“நான்தான் நீ புகழ்ந்து தள்ளிய பிஸ்தா! உன்னோட சாக்லேட்பாய் கூட கிளம்ப ரெடியா மிஸ்.ஆராதனா குருமூர்த்தி?” நக்கலுடன் அவன் கேட்டதில் இவளின் பார்வை கொந்தளித்துப் போனது.

தன்தந்தையின் பெயருடன் தன்பெயரை அழுத்தி உரைத்த பிரஜேந்தரை முறைத்துக்கொண்டே வேறு வழியின்றி அவனுடன் சேலத்திற்கு பயணமானாள் ஆராதனா.