அன்பின் உறவே—-22

அன்பின் உறவே… 22

செழிப்பான சிவந்த நிறத்திலும், வாளிப்பான கோதுமை நிறத்திலும் சகோதரிகள் இருவரும் வேறுபட்டு நின்றிருந்தனர்.

குருமூர்த்தியின் உயரத்தை மட்டுமே ஒற்றுமையாக கொண்டு அவரவர் அன்னையின் முகஜாடையை வடிவாய் பெற்றிருந்தனர் பெண்கள்.

ஆராதனாவிற்கு அரணாக பிரஜேந்தர் முன்வந்து நிற்க, மௌனமாய் அவனை மனதிற்குள் தாளித்துக் கொண்டிருந்தாள் ரவீணா.

‘போன விஷயமென்ன, இப்ப நீ பண்ணிட்டு இருக்கறது என்ன? ஒழுங்கா இந்த பக்கம் வந்துடு’ கனன்ற பார்வையில் இவள் எச்சரிக்க கணவனோ, ‘கொஞ்சம் வெயிட் பண்ணு பிங்கி’ கெஞ்சல் பார்வையில் குளிரவைத்தான்.

திடுதிடுப்பென வந்து நின்றவளை இழுத்து வைத்து அறைந்து தள்ள வேண்டுமென்று பரபரத்த மனதை அடக்க பெரும்பாடுபட்டுப் போனாள் ரவீணா.

இவளின் கொதிநிலைக்கு தப்பாமல் ஆராதனாவும் திமிருடன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்க,

“உலகளந்த பெருமாளாட்டாம் இவள காப்பத்தறதுக்கு நீ முன்னாடி வந்து நின்னா, இவளை சும்மா விட்டுடுவோமா தம்பி?” அம்சவேணி பாட்டி பிரஜேந்தரின் மூக்குடைத்தார்.

“ஆளும் தோரணையும் பாரு! அப்பனுக்கு தப்பாம வந்து பொறந்திருக்கு” பாட்டியின் வர்ணனை குருமூர்த்தியையும் தாக்கிவிட, அவரால் பதில் பேச முடியவில்லை.

சகோதரிகள் இருவரும் ஒருவரையொருவர் பார்வையால் உரசிக் கொண்டிருந்த நேரத்தில், “ஏய் அனு, அவனை விட்டு இந்த பக்கம் வரப்போறியா இல்லையா?” உஷ்ணத்துடன் சிறியவளை குருமூர்த்தி அழைக்க, அவளோ முகம் திருப்பிக் கொண்டாள்.

“ஆராதனா… சொல்றது காதுல விழுதா இல்லையா?” மீண்டும் குருமூர்த்தி குரலை உயர்த்த. அவளோ அசைந்து கொடுக்கவில்லை.

“உன் பொண்ண, நீ, இன்னும் புரிஞ்சுக்கல மாமனாரே! சும்மா சவுண்டு விடாதே! இப்ப லேடீஸ் நீயா நானா டைம். உக்காந்து வேடிக்கை பாரு!” என்றவன்,

அவரை பிடித்து சோபாவில் அமரவைக்க, “ஏய்!” என்று எகிறிய குருமூர்த்தியை, “மூச்!” வாயில் விரலை வைத்து அடக்கினான் பிரஜேந்தர்.

பழக்கமில்லாதவர்களின் முன், மகள் பிடிவாதமாய் நிற்பதை பார்த்து அன்னலெட்சுமியின் உள்ளம் ஊமையாய் அழுது நின்றது.

“உன் பிடிவாதத்தை காமிக்க இது நேரமில்ல. எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேளு ராதாமா!” உத்தரவாக அன்னலெட்சுமி கூறிய நேரத்தில், அனைவரும் கேள்வியாய் அவளை நோக்கினர்.

இவளுக்கு இன்னும் எத்தனை பெயர்களோ என்ற பாவனையில் ரவீணா உதட்டை சுளிக்க, அதை புரிந்து கொண்டவனாய் பேசினான் பிரஜேந்தர்.

“உன் நேம் ரைமிங்ல அவ பேரும் முடியுதாம். உன்னை வினுன்னு கூப்பிடுற மாதிரி அவளை அனுன்னு கூப்பிடுறதும் இவளுக்கு பிடிக்காதாம். அதான் ராதான்னு இவளுக்கு இவளே பேரு வச்சுக்கிட்டாளாம். கரெக்டா?” அவளிடம் பிரஜன் கேட்க, மெத்தனமாகப் பார்த்தாள் ஆராதனா.

“சுத்த பைத்தியகாரத்தனம்!” ரவீணா முணுமுணுக்க,

“என் பேரு என் இஷ்டம்” பதிலடி கொடுத்தாள் ஆராதனா.

“நான் அனுப்பின டிடெக்டிவ் டீம் உன் சம்மந்தமான எல்லா விவரத்தையும் எனக்கு மெயில் பண்ணிட்டாங்க ஆராதனா!” பிரஜன் விளக்கம் கொடுக்க அலட்சியமாக கேட்டுக் கொண்ட ஆராதனா,

“என்னோட எல்லா விஷயத்திலயும் முகம் தெரியாத ஒருத்தரோட கம்பேர் பண்ணினா யாருக்குதான் பிடிக்கும்? அவமேல இருக்குற பாசத்துல என்னை, எத்தனையோ முறை வினுமா கூப்பிட்டு எரிச்சல்படுத்தி இருக்காரு!” என்றவள் வேண்டாவெறுப்புடன் குருமூர்த்தியை கைகாட்டினாள்.

“அது மட்டுமா? இந்த குடும்பத்து மேல இருக்குற கோபத்தை என் மேலயும் என் அம்மா மேலயும் காமிக்குறது எந்த வகையில நியாயம்? அதை நான் எதிர்த்து கேட்டா, அதுக்கும் அம்மாவுக்கு அடி உதை, திட்டு… எங்கே பாசத்தை கொட்டினாரோ அங்கேயே கோபத்தையும் கொட்டி தீர்த்துக்க வேண்டியது தானே! இவங்களுக்காக எங்க குடும்பம் நேர்ந்து விட்டுருக்கா?” கோபக்கணலுடன் உரமேறிய குரலில் தனக்கான நியாயத்தை எடுத்துரைத்துக் கொண்டிருந்தாள் ஆராதனா.

பொறியியல் இறுதியாண்டு படிக்கும் இருபத்தியோரு வயதுப் பெண்ணின் மனதில் இப்படியொரு சீற்றம் பொங்கியெழுமென யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அனைவரும் இமைக்க மறந்து அவளையே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, ரவீணாவின் பாட்டி அவளின் பேச்சிற்கு முட்டுக்கட்டையிட்டார்.  .

“நல்லா இருக்குடி பொண்ணே, உன் நியாயம். உங்கப்பா கோபத்தையும் துவேசத்தையும் காட்டினா, அவரை ஊர் முன்னாடி நிக்க வச்சு கேள்வி கேக்குறத விட்டுட்டு இப்பிடியா என் பேத்தி குடும்பத்துல கும்மியடிப்ப? நீ சொல்றதை சுயபுத்தி இருக்கறவன் எவனும் சரின்னு ஒத்துக்க மாட்டான். அப்பப்பா… என்னென்ன கதை கட்டுன நீ?” பாட்டி கண்டனங்களை தெரிவிக்க, அன்னலெட்சுமியின் தலை தன்னால் குனிந்து போனது.

‘கணவனால் சுகப்பட முடியவில்லை, பெற்ற மகளாலும் நிம்மதி இழந்து தவிக்க வேண்டுமா? இன்னும் யார் யாரிடம் என்னென்ன பேச்சுகளை வாங்க நேரிடுமோ’ மனப்பொருமலுடன் உள்ளுக்குள் புலம்பித் தவித்தார்.

“உங்கப்பா எங்ககிட்ட பாசமா இருந்ததை நீ கண்ணால பார்த்திருக்கியா ஆராதனா?” இறுகிய குரலில் சுகந்தி கேட்க, இல்லையென்று தலையசைத்தாள்.

“இதுதான்னு நிச்சயம் இல்லாத ஒன்ன நீயா முடிவு பண்ணிட்டு, அதுக்காக பழி வாங்குறது எந்த விதத்துல நியாயமாகும்? உன்னோட படிப்பும் உங்கம்மாவோட வளர்ப்பும் இதைதான் சொல்லிக் கொடுத்திருக்கா?” பொட்டில் அடித்தாற்போல சுகந்தி கேட்க, தலையிலடித்துக் கொண்ட அன்னலெட்சுமி,

“சின்னபொண்ணு விவரமில்லாம அவசரபட்டுட்டா, மன்னிச்சிடுங்க க்கா!” தழுதழுத்த குரலில் மன்னிப்பை வேண்டி நிற்க, முகம் சுளித்தார் சுகந்தி.

“புதுசா எந்தவொரு ஒட்டோ, உறவோ எங்களுக்கு வேணாம். உங்க வலிக்கு மருந்தை எடுத்துக்காம இன்னொருத்தனுக்கு வலிய கொடுக்குற முட்டாள் தனத்துக்கு மன்னிப்பு அத்தனை ஈசியா கிடைக்காது” சுகந்தி ஆணித்தரமாக பேச, பிரஜேந்தருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

நிதானம் தவறிய செயலாக மட்டுமே ஆராதனாவின் பழி வாங்கலை மேலோட்டமாய் பார்த்தவன், சுகந்தியின் தரப்பினை யோசிக்கவும் மறந்து போனான்.

அறிமுகமில்லாமல் சமூக வலைதளங்களில் நட்பு பாராட்டுவதைப் போன்றே மிரட்டல்களும் சகஜமாகிப் போன காலகட்டம் இது. இந்தச் சூழ்நிலையில் வாழும் இளைஞனான பிரஜேந்தருக்கு, ஆராதனா செய்த மடத்தனத்தை தீவிர மனோபாவத்துடன் சிந்திக்கத் தெரியவில்லை.

சுகந்தியின் அழுத்தமும் ரவீணாவின் கோபமும் அவனை யோசிக்க வைக்க, ஆராதனா அலட்டிக் கொள்ளாமல் பேசினாள்.

“நான் மன்னிப்பு கேக்கவே இல்லையே! மனஉளைச்சல் குடுத்தேன், மிரட்டினேன்னு கேஸ் போட்டு உள்ளே தள்ளுவீங்களா? தாராளமா பண்ணுங்க. அதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன். வருசக்கணக்கா நாங்க அனுபவிச்ச வேதனைக்கு ஈடா கொஞ்ச நாளாவது நீங்களும் உங்க பொண்ணும் அனுபவிக்கனும்னு நினைச்சேன்.

உங்க பேரை சொல்லியே ஒவ்வொரு தடவையும் எங்களுக்கு தண்டனை கொடுக்குறவருக்கு உங்க மூலமா பிரச்சனை குடுக்க முடிவு பண்ணேன். யாருடைய சப்போர்ட்டும் இல்லாம எங்கம்மா தவிச்சு நின்ன மாதிரி உங்களையும் நிக்க வச்சுட்டேன்!” வெற்றிப்புன்னகையுடன் தனது விளக்கத்தை கூறினாள் ஆராதனா. 

“என்னை சைக்கோ, பைத்தியம்னு சொல்லிட்டாலும் ஜஸ்ட் ஐ டோன்ட் கேர். நாங்க அனுபவிச்ச இத்தனை வருட கஷ்டத்துக்கு கிடைச்ச சின்ன சந்தோசமா இதை பாக்கறேன்.

நான் நினைச்சதுல பாதிதான் நடந்தது. பரவால்ல இருக்கட்டும். நீங்க கண்டுபிடிக்கலன்னாலும் கொஞ்சநாள் கழிச்சு நானே உங்க முன்னாடி குற்றவாளியா வந்து நின்னுருப்பேன். பட், உங்க மாப்பிள்ளை முந்திக்கிட்டார்” பெருமூச்சுடன் முடிக்க, அன்னலெட்சுமி மகளை சராமாரியாக அறைந்து விட்டே ஓய்ந்தார்.

“அப்படி என்ன குரூர புத்தி உனக்கு, யார் சொல்லி இதையெல்லாம் பண்ற?” கண்ணீருடன் கேட்க, 

“என்ற அப்பாவுக்கு தப்பாம ஒரு புள்ளையாவது இருக்க வேணாமா ம்மா? இவரோட பொண்ணு ஓடிப்போனதுக்கு என்னை தாரை வார்த்துக் குடுக்க நினைச்சாரே, அதை சும்மா விடச் சொல்றியா?” ஆராதனா பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்து துப்ப,

“இதென்ன புதுக்கதை? அவர பழி வாங்கறதா சொல்லி எங்களை கஷ்டபடுத்தி இருக்க… இப்ப புதுசா வேற ஒரு கதைய சொல்ற! நீ நிஜமாவே பைத்தியம் தானா?” சந்தேகத்துடன் கேட்டாள் ரவீணா.

“வாங்கின கடனுக்கு வட்டி கட்ட முடியாமதான், உன்னை பெரிய குடும்பத்துல பிடிச்சு குடுத்து அவர் கடனை எல்லாம் அடைக்க ஏற்பாடு பண்ணியிருந்தாரு இந்த பெரிய மனுசர். நீ போனதும் உன் இடத்துல என்னை கொண்டு வர்றேன்னு சொல்ல, அந்த மாப்பிள்ளை ஒத்துக்கல. அதோட நானும் சம்மதிக்காம இருக்கப் போயி என்னை ஹாஸ்டல்ல புடிச்சு போட்டாரு!” ஆராதனா தன்தரப்பினை எடுத்துக் கூற,

“ஓஹ், இந்த ரீசனுக்கு தான் நீ, என் குடும்பத்துல புகுந்து  குழப்பம் உண்டு பண்ணியிருக்கிறதா சொல்ற, நிச்சயமா நீ அந்த கேஸ் தான்!” இளக்காரமாக கூறினாள் ரவீணா.

“என்ன ரவீ? அவதான் எமோஷனலா பேசிட்டு இருக்கான்னா நீயும் சேர்ந்து பேசுவியா?” பிரஜன் மனைவியை அமைதிப்படுத்த முயல,

“இதுதான் சார், இந்த கரிசனம்தான் சார், உங்களை பார்த்து பொறாமைபட வைக்குது. உங்க இடத்துல வேற யாரவது இருந்திருந்தா இந்நேரம் இவளை விட்டுட்டு ஓடியிருப்பான்” ரவீணாவை கைகாட்டி ஆராதனா நக்கலடிக்க,

“நீ வாய மூடமாட்டா!” அவளையும் கடிந்து கொண்டான் பிரஜேந்தர்.

கணவனின் பேச்சும் ஆராதனாவின் பார்வையும் மனைவியான ரவீணாவை கொதிநிலைக்கே இழுத்துச் செல்ல, “பண்ற தப்பை எல்லாம் பண்ணிட்டு விளக்கம் குடுக்கிறியா நீ?” அழுத்தமாக கேட்க,

“இதப்பார் ரவீணா! என்னால உன்னோட மேரேஜ் லைப் ஒன்னும் முடிஞ்சு போகலையே? பின்ன, எதுக்கு இவ்வளவு சீன் போடுற! தண்டன வாங்கி குடு, அதுக்கெல்லாம் நான் ரெடியா இருக்கேன்” அலட்டலுடன் கூறிய ஆராதனா,

பிரஜனிடம், “பிஸ்தா சார், நீங்க கேஸ் ஃபைல் பண்ணின ஸ்டேஷன்ல ரிப்போர்ட் பண்ணுங்க. இன்னாரோட பொண்ணு இந்த காரணத்துக்காக, இந்த கேவலமான காரியத்த செஞ்சான்னு மீடியாக்கும் மெசேஜ் குடுங்க. அடுத்து என்ன நடக்கணுமோ நடக்கட்டும்” சகஜமாய் சொல்லிக்கொண்டே போனவளை சப்பென்று அறைந்திருந்தாள் ரவீணா.

“பனிஷ்மென்ட் கேட்டு வாங்குற அளவுக்கு பெரிய மனுசியாடி நீ! நான்தான் உனக்கு தண்டனை கொடுக்கணும். கொடுக்கவா?” முகமும் கண்களும் கோபத்தில் சிவக்க, அத்தனை ஆவேசத்துடன் கேட்டாள் ரவீணா.

“கொடேன்! யாரு வேணாம்னு சொன்னா… ஒன்னுமே இல்லாததுக்கு எப்படியெல்லாம் எகிறிக் குதிக்கிற?” தோள் குலுக்கிக் கொண்ட ஆராதனா, “எப்படி இவளை சாமளிக்கிறீங்க பிஸ்தா சார்?” கிண்டல் செய்யவும் தவறவில்லை.

“என் வீட்டுல நடக்கற எல்லாமே உனக்கு தெரிய வந்திருக்கு அது எப்படி? அதனால நான் என்னென்ன பாடுபட்டேன்னு உனக்கு தெரியுமா?” அன்றொரு நாள் தாலி பெருக்கும் விசேசத்தை குறிப்பிட்டு ஆராதனா அலைபேசியில் பேசியதை நினைவு கூர்ந்தாள் ரவீணா.

“அது… என் ஃபிரின்டோட அக்கா அந்த டெய்லரிங் பிரான்சுல வொர்க் பண்ணினா. அவ மூலமா உன் வீட்டுல நடக்குறத அப்பப்போ கேட்டுத் தெரிஞ்சுகிட்டேன்” இலகுவாக ஆராதனா கூற,

“இதுக்கும் பேமன்ட் பேசுனியா?” கடுகடுத்த ரவீணாவின் கேள்வியில் ஆமென்று அவளும் தலையசைக்க, ‘கருமம்டா!’ என தலையிலடித்துக் கொண்டான் பிரஜேந்தர்.

அத்தனை அருவெறுப்பான பார்வையை சுகந்தியும் பாட்டியும் ஆராதனா மீது படரவிட, அன்னலெட்சுமிக்கு அப்பொழுதே பூமியோடு புதைந்து விடமாட்டோமா என்றிருந்தது.

‘இத்தனை களேபரங்களும் உன்னால், உன் ஒருவனின் அராஜகத்தால் மட்டுமே’ என்கிற குற்றசாட்டும் பார்வையை மனைவிகளிடமிருந்து பாரபட்சமின்றி எதிர்கொண்டார் குருமூர்த்தி.

“எப்படி, யாரால என் வீட்டு விஷயம் வெளியே போகுதுன்னு தெரியாம என்னால அந்த வீட்டுல நிம்மதியா மூச்சு கூட விடமுடியல… இத்தனை ஏன்? அவசரத்துக்கும் குளிக்கவும் போற பாத்ரூமுக்கு போகக்கூட அவ்வளவு பயமா இருந்தது எனக்கு. இதையெல்லாம் நீயும் அனுபவிக்கனும்னு நான் சொன்னா நீ சரின்னு ஒத்துப்பியா?” அனல் கக்கும் பார்வையில் ரவீணா கேட்க, விக்கித்து போனாள் ஆராதனா.

இவள் சாதாரண விளையாட்டு என்று நினைத்திருக்க, அதை அனுபவித்தவளோ அத்தனை எளிதில்லை என்று சாதிக்கிறாளே! அனுபவம் என்றைக்கும் உயிரையே உறைய வைக்கும் அல்லவா? திகைத்து விழித்து வார்த்தையின்றி நின்றாள் ஆராதனா. அவளின் அலட்டலும் அலட்சியமும் வெகுவேகமாய் விடைப் பெற்றுப் போயிருந்தது.

“சீரியஸா எடுத்துக்காதேன்னு நான்தான் சொன்னேனே பிங்கி, ஏன்டீ இவ்வளவு கஷ்ட்டபட்ட?” பிரஜன் ஆறுதலாய் தோளணைத்து கொள்ள, அவளும் சாய்ந்து கொண்டாள். அந்த நேரத்து தேவையாக கணவனின் ஆதரவு தேவைப்பட இடம், பொருள் பார்க்காமல் கொடியாய் பற்றிக் கொண்டாள் ரவீணா.

“உன்மேல நம்பிக்கை இல்லாம இல்ல ப்ரஜூ! ஆனா, ஒரு பொண்ணா என்னால அந்த சிட்சுவேசனை அவ்வளவு ஈசியா ஸ்கிப் பண்ண முடியல. இவ்வளவு ஏன், என்னோட பயத்தை எல்லாம் உன்மேல கோபமா இறக்கி வைச்சு உன்னையும் தள்ளியே நிறுத்தி வைச்சேன்” தன் நிலைமையை கூறிக்கொண்டே வந்தவளின் கோபமும் அழுகையாக வெடித்தது.

“நமக்குள்ள இருக்குற புனிதமான உறவே தப்பான வீடியோவா வந்துடுமோன்னு நிமிசத்துக்கு நிமிஷம் பயந்து செத்துட்டு இருந்தேன்டா! அதுக்கு தான் என்னோட விரலை தொடவும் உன்னை, நான் அனுமதிக்கல… ரொம்ப, ரொம்ப சாரி டா ப்ரஜூ! நமக்குள்ள இருக்குற நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட விஷயம் இது. பொய்யா கூட என்னால சகஜமா நம்ம வீட்டுல இருக்க முடியல” வெடித்து கதறியவளை பார்க்கப் பார்க்க ஆராதனாவிற்கு தான்செய்த காரியத்தின் வீரியம் புரிந்தது.

“அழாத ரவீமா! உன் நெலம நல்லாவே புரியுது. சாரி சொல்ற அளவுக்கா நீயும் நானும் இருக்கோம். இப்படின்னு உடைச்சு பேசியிருந்தா இவ்வளவுக்கு உன்னை தவிக்க விட்டுருக்க மாட்டேன்டீ! அப்பவே வீட்டை காலி பண்ணியிருக்கலாமே?” பிரஜன் கனிவுடன் கேட்க,

“எப்படி சொல்றது ப்ரஜூ? பிசினெஸ், ஃபினான்ஸ்னு ஏற்கனவே நீ ரொம்ப ஸ்ட்ரெஸ்ல ஓடிட்டு இருக்க. நானும் என் பங்குக்கு ஏத்தி வைக்க வேணாம்னு சொல்லாம இருந்துட்டேன்!” அழுகையுடன் கூறியவளின் மீது முன்னிலும் விட அதிகமாய் காதல் பெருகியது பிரஜேந்தருக்கு. 

“போடீ லூசு! எதை எப்போ சொல்லனும்ன்னு தெரியல உனக்கு” பொய் கோபத்துடன் பிரஜன் கடிந்து கொள்ள,

“உன் சகவாசத்துல என் மூளை இவ்வளவு தான்டா யோசிக்குது” குறும்பில் இறங்கினாள் ரவீணா.

“நான் என்ன செத்தா போயிட்டேன்? என்கிட்டே உன் பிரச்சனைய சொல்லி இருக்கலாமே வினுமா? நான் ஹெல்ப் பண்ணியிருக்க மாட்டேனா?” சுகந்தியும் கோபத்துடன் கேட்க,

“இப்படி ஹெல்ப் கேக்கிறதெல்லாம் இவனுக்கு பிடிக்காதுமா! துரை ரொம்பவே ஈகோ பாப்பான். இவங்கப்பா அம்மா கூட நான் பேசுறதையே முறைச்சு பார்த்து வைக்கிற ஆளு, நீ சொல்றதுக்கு தலையாட்டிட்டு நிக்குமா?” மனபாரம் இறக்கியவளாய் நொடித்துக் கொள்ள,

“நாலுபேரு முன்னாடி சொல்லி காமிச்சுட்ட, உன் ஆசை தீர்ந்துச்சா டீ!” கணவனாக முகம் சுளித்தான் பிரஜன்.

இன்னலிலும் இவர்களின் அன்னியோன்யத்தில் அனைவரும் விழி விரித்து நிற்க, ஆராதனாவிற்குள் பொறாமையுடன் குற்ற உணர்வும் எட்டிப் பார்த்தது.

‘இப்படியொரு காதலன் கணவனாக அமைய உண்மையில் இவள் கொடுத்து வைத்தவள்தான்’ பெருமூச்சு கொண்ட ஆராதனாவின் மனது தனது பெற்றோரின் வாழ்வை எண்ணி வருத்தப்பட்டது.

அதே வேளையில் இத்தனை நேசத்துடன் இழைபவர்களை பிரிக்க நினைத்த தனது மடத்தனத்தை நினைத்து தனக்குதானே ஆயிரமல்ல லட்சம் கொட்டுகளை பரிசளித்துக் கொண்டாள்.

என்ன செய்து, எப்படிச் சொல்லி இந்த பாவத்தை கரையேற்றுவது என சிந்தனைக்குள் உழன்றவளை நிகழ்விற்கு அழைத்து வந்தது ஆராதனாவின் அலைபேசி.

பள்ளி முடிந்தவுடன் தம்பி ஆரின்பன் தமக்கைக்கு அழைத்திருந்தான். அவனுக்கு இங்கே நடக்கும் எந்த விசயமும் தெரியாதல்லவா? பாலகனிலிருந்து இளைஞனுக்கு தாவும் பதின்வயது சிறுவனிடம் எதையும் பகிர்ந்து கொள்ளமாட்டாள் ஆராதனா. அவனுக்கு எப்போதும் இவள் பாசமுள்ள தமக்கை மட்டுமே.

இப்பொழுதும் அழைப்பை எற்றவளாய், “சொல்லுடா பூரி இன்னைக்கு ஸ்கூல் முடிஞ்சதா?” குரலை சகஜமாக்கிக் கொண்டு பேச,

“ம்ம்… டுடே கோட்டா ஓவர், ஓவர் அதிரசம் அக்கா. உனக்கு அங்கே எப்படி, இன்னைக்கும் அதே இழுவை வாத்தி கிளாஸ் தானா?”

“அதையெல்லாம் தூசியா தட்டி விட்டுட்டு வெளியே வந்துட்டேன்டா பூரிகண்ணா!”

“என்ன ஓவரா குழையுற, எங்கே இருக்க நீ? அம்மா வேற உன்ற மேல கோவமா இருக்காங்க, என்ன பண்ணி வைச்ச க்கா!” தம்பியின் அடுத்தடுத்த கேள்வியில் அன்னலெட்சுமியை கோபத்துடன் பார்த்தாள் ஆராதனா

மகளின் கேள்வியை உணர்ந்தவராய், “நான் கூப்பிட்டும் நீ வராத விஷயத்தை மட்டும்ந்தான் சொல்லியிருக்கேன்” மெதுவாக கிசுகிசுக்க மேற்கொண்டு பேசத் தொடங்கினாள் ஆராதனா.

“அதெல்லாம் உன்ற அம்மாவ சமாதனபடுத்தனமுன்னு வந்தாச்சு இன்பன் சார்! அவங்ககிட்டயே குடுக்குறேன் பேசிக்கோ!” என்றவள் அலைபேசியை அம்மாவிடம் திணிக்க,

“சாப்பிட்டியா கண்ணு?” அன்னலெட்சுமியின் வாஞ்சையான  விசாரிப்பில் குருமூர்த்திக்கு பொறுமை பறந்து போனது.

“என்னங்க டீ! ஆளாளுக்கு நாட்டாமை பண்ணிட்டு இருக்கீங்க? ஏய் வினு, இப்ப கம்ப்ளைன்ட வாபஸ் வாங்கப் போறியா இல்லையா?” ரவீணாவிடம் வெடித்த குருமூர்த்தி, அன்னலெட்சுமியிடம் திரும்பி,

“ஆத்தாளும் மகளும் ஒழுங்கு மரியாதையா மன்னிப்பு கேட்டுட்டு இடத்தை காலி பண்ணிடுங்க. இனிமேட்டு அவன் கூப்பிட்டான், இவன் கூப்பிட்டான்னு வெளியே வந்தா கால, கையை உடைச்சுடுவேன்! என் பேரை கெடுக்க நினைச்சா நீங்கதான் அசிங்கப்பட்டு நிப்பீங்க!” உச்சஸ்தாதியில் ஆவேசமாகப் பேச, அதிர்ந்து நின்றதென்னவோ ரவீணாதான்.

இத்தனை கோபத்தை இவ்வளவு அருவெறுப்பான பேச்சுகளை இதுநாள் வரையில் தந்தையின் வாய்மொழியாக கேட்டதில்லை. பாசாங்குதான் என்றாலும் தந்தையின் அன்பில் முழுதாய் நனைந்தவள் ரவீணா.

வளர்ந்ததும் விவரங்களை அறிந்த பின்னரே தந்தையை ஒதுக்கி வைத்தாள். அதற்கு முன்னர் எல்லாம் தந்தையின் செல்ல இளவரசியாக அவர் தோளில் சவாரி செய்தவளாயிற்றே! அந்த பாசம் எப்பொழுதும் விட்டகுறை தொட்ட குறையாக இருக்க, இன்று அதுவும் சறுக்கி அதாள பாதாளத்தில் விழுந்தது.

குருமூர்த்தியின் கர்ஜனையில் அலைபேசியில் இருந்தே தந்தையின் குரலை கண்டுகொண்ட ஆரின்பனோ நிலைமை சரியில்லையோ என கணித்துக் கொண்டான்.

இவன் தந்தை வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் கோபங்களும் உதாசீனப் பேச்சுகளும் மட்டுமே கேட்கும். அவனுக்குமே அதில் பெரும் வருத்தம் முட்டிக்கொண்டு நிற்கும்.

“அப்பாவும் இருக்காரா ம்மா, எல்லாரும் எங்கே இருக்கீங்க?” மகனது கேள்வியில் பதில் சொல்ல திணறிப் போனார் அன்னலெட்சுமி. லேசுபாசாக தெரிந்திருந்தாலும் நேருக்கு நேராக இதுவரை மகனிடத்தில் சுகந்தியின் குடும்பத்தை பற்றி கூறியதில்லை.

“அது வந்து கண்ணு… நமக்கு வேண்டியவங்க வீட்டுல இருக்கோம். நான் அப்புறமா பேசட்டா?” எனக் கேட்க, “சரிம்மா!” என அவனும் பேச்சினை முடித்துக் கொண்டான்.

குருமூர்த்தியின் ஆவேசப்பேச்சில் உச்சு கொட்டிய பிரஜேந்தர், “பார்த்தியா திரும்பவும் ஆரம்பிக்கிறியே! உனக்கு அமைதியா இருக்கவே தெரியாதா? அந்த சபரீஷ் உன்மேல  மானநஷ்ட வழக்கு போட்டு உன்னை வலைவீசி தேடிட்டு இருக்கான். உன்கிட்ட வசூல் பண்ணாம விடமாட்டான். நீ அவனுக்கு செட்டில் பண்ணாம தண்ணி காட்டுனா, நீ கம்பி எண்ணப் போறது உறுதி” தெனாவெட்டாக பிரஜேந்தர் அடுக்கிக்கொண்டே போக குருமூர்த்தியின் லட்சணம் பட்டவர்த்தனமாய் பளிச்சிட்டது.

வருடக்கணக்காக வாங்கி வைத்திருந்த கடன் சுமைகள் கழுத்தை நெறிக்க ஆரம்பித்து, நீதிமன்றம் வரையில் சென்று அவகாசம் பெற்று வைத்திருந்தார் குருமூர்த்தி. இவரது இந்த இக்கட்டிற்கு காரணம், இவர் ரவீணாவிற்கு நிச்சயம் செய்து வைத்த மாப்பிள்ளையான சபரீஷ் சரவணவேலின் அதிரடிகளே!

பெண்ணின் காதல் விஷயத்தை மறைத்து வைத்து திருமணத்திற்கு பேசியது, அதனை ஊராரின் பார்வையில் பகிரங்கப்படுத்தியதை எல்லாம் குற்றப்படுத்தி மானநஷ்ட வழக்கினை தொடர்ந்திருந்தான் சபரீஷ். 

இவன் தொடுத்த வழக்கு வெளியே கசிய ஆரம்பிக்க, குருமூர்த்திக்கு கடன் கொடுத்த வள்ளல்கள் முழித்துக் கொண்டனர். அவர்களும் ஒன்றாகச் சேர்த்து கிடுக்கிப்பிடியாக கடன்தொகையை கேட்டு நெறித்ததில் தலைமறைவு நாடகம் நடத்தி, முன்ஜாமீன் வாங்கிக் கொண்டு அவகாசம் பெற்றிருக்கிறார்.

இவரது கால அவகாசத்தை ஏற்றுக் கொள்ளாத சபரீஷ் தனக்கான இழப்பீட்டினை உடனே முடிக்குமாறு கழுத்தில் கத்தியை வைக்க, குருமூர்த்திக்கு காலில் சுடுதண்ணீர் ஊற்றிக் கொள்ளாத குறைதான். 

இந்த விவரங்களை பிரஜேந்தர் வெளியில் போட்டுடைக்க அகப்பட்ட கள்ளனாய் நொடிந்து போய் அமர்ந்து விட்டார் குருமூர்த்தி.

“எல்லாமே கை மீறிப் போயிடுச்சு! என்ன செய்யப்போறேன், எப்படி கடனை அடைக்க போறேன், இவனுக்கு என்ன பதில் சொல்லப் போறேன்?” குருமூர்த்தி புலம்பித் தவித்து நிற்க, அவரை பாவம் பார்க்கும் எண்ணமெல்லாம் அங்கிருந்த யாருக்குமே இல்லை.

“இத்தன நேரத்துக்கு நீ இருக்குற இடம் சபரிக்கு தெரியாம இருக்குமா மாமனாரே? நான் ஃபோன் அடிச்சா போதும் உன்னை வந்து அள்ளிட்டு போயிடுவாங்க! இப்ப என்ன செய்யப் போற?” பிரஜேந்தர் கேட்க, திருதிருத்து விழித்தார் குருமூர்த்தி.

தன் பார்வையால் உதவிக்கு யாரும் வரமாட்டார்களா என ஏக்கத்துடன் கேட்டவரை பார்த்து ‘அய்யோ’ என உச்சு கொட்டினர் அனைவரும். அன்னலெட்சுமி நினைத்தாலும் உதவ முடியாது.

அத்தனை கோடிக்கணக்கான கடனை அடைக்க வேண்டுமென்றால் இவரது சொத்துக்களை விற்றால் மட்டுமே முடியும். அதுவும் பிள்ளைகளின் திருமணத்திற்கு பிறகு அவர்களின் சம்மத்தத்தோடு மட்டுமே சாத்தியப்படும் என்றான பிறகு எப்படி உதவுவது? ஆக, இவரின் அடுத்த பயணம் மோசடி பேர்வழி என்ற பட்டத்துடன் சிறைவாசம் என்றே சாஸ்வதமானது.

நிலைகொள்ளாமல் தவித்தவரின் சிந்தனையில் என்ன உதித்ததோ சட்டென்று எழுந்து வீட்டை விட்டு வெளியேறினார் குருமூர்த்தி.

தனது மானமே சந்தி சிரிக்கப் போகும் நேரத்தில் மகளென்ன, மனைவியென்ன, குடும்பமென்ன என நினைத்து விட்டாரோ என்னவோ! குடும்ப பொறுப்புக்களை துறந்தவராய் மறந்தவராய் யாருடைய அழைப்பையும் ஏற்காமல் வேகமாக தன்போக்கில் பயணப்பட்டு விட்டார் குருமூர்த்தி.

இனி அவர் திரும்பி வருவதும் திருந்தி வாழ்வதும் குடும்பத்தார் அவரை ஏற்றுக் கொள்வதையும் காலத்தின் கைகளில் ஒப்படைத்து விடுவோம் நண்பர்களே!

தந்தையின் நடவடிக்கையிலும், தனது மடத்தனத்திலும் தன்னையே நிந்தித்துப் கொண்டவளாய் ஆராதனா குற்ற உணர்வில் அமைதியாக நிற்க, ரவீணாவை சமாதனம் செய்பவனாக பிரஜேந்தர் அவளை தாங்கிக் கொண்டு நின்றான்.