அன்பின் உறவே – 24

அன்பின் உறவே… 24

நாட்கள் அதன்போக்கில் நகர ஆரம்பிக்க, ரவீணா புகுந்த வீட்டில் சகஜமாய் உறவாடத் தொடங்கியிருந்தாள். மாமியாரின் அதட்டல் உருட்டல் எல்லாம் அவளுக்கு பழைய பஞ்சாங்கமாகிப் போனது.

மாமியாரின் சுபாவமே இப்படித்தான் என இவளின் ஓரகத்திகள் புரிய வைத்திருக்க, இவளின் பேச்சும் பழக்கமும் அளவோடு அதே சமயத்தில் பற்றுதலோடு இருக்கும். இவள் வேண்டி நின்றது சுற்றம் சூழ்ந்திருக்கும் உறவுகளைத் தானே. அவை தானாக வரும்போது விட்டுக் கொடுக்காமல் ஒட்டிக் கொண்டாள்.

இவளுக்கு எதிர்பதமாய் இவளின் கணவன் இன்னமும் தனது வீராப்பினை விட்டபாடில்லை. ‘என்னையா வீட்டை விட்டு வெளியேற்றினாய்? வாழ்ந்து காட்டுகிறேன் பார்!” என எந்நேரமும் முறுக்கி கொண்டு திரிந்தான். 

சுகந்தியும் வீட்டு மாப்பிள்ளையை கொண்டாடிக் கொள்ள, பிஸ்தாவின் அலப்பறை தங்குதடையின்றி வெற்றிக்கொடி நாட்டியது. அவ்வப்பொழுது அலைபேசியில் விசாரிக்கும் அன்னலெட்சுமியின் அன்பும், மாப்பிள்ளையின் மீதான மரியாதையும் சேர்ந்து இன்னும் அவனை ஏற்றி வைத்தது.

கணவனது அலட்டலில் பெரிதும் அல்லாடிப் போனது ரவீணா மட்டுமே. வீட்டோடு வந்து தங்கி விடச் சொல்லும் சரஸ்வதியின் ஜாடைமாடையான அழைப்பை எடுத்துக் கூறினாலும் அவன் செவி சாய்க்கவில்லை. 

‘என் அருமை, என் பெற்றோருக்கு தெரியவில்லை. நான் யாரென்று நிரூபித்து விட்டு பேசுகிறேன்’ இந்த வீராப்பு வசனங்கள் மட்டுமே எப்போதும் அவனிடத்தில் வெளிப்படும்.

நான்கு மாதங்களுக்கு பிறகு, செறிவூட்டப்பட்டு வாங்கிய சிப்பிகளில் இருந்து முத்து சாகுபடி செய்யப்பட்டது. ஏமாற்றத்தை கொடுக்காமல் முத்துகள் நன்றாக வளர்ச்சியை கண்டிருந்தன.

‘பிரவீஸ் போர்டல்ஸ்’ என்ற வலைதளத்தை ஆரம்பித்து அதில் முத்து சாகுபடி மற்றும் விற்பனையை தொடங்கினான் பிரஜேந்தர். நேரடி விற்பனை, சிறிய அளவிலான அறுவடையில் ஒரு வாரத்திலேயே விற்பனையை முடித்து அதிக லாபங்களை கண்டது ‘பிரவீஸ் பேர்ல்ஸ்’.

அதனுடன் வெள்ளி அணிகலன்களின் ஆர்டர்களை இணையம் மூலமாகவே பெற்று நம்பிக்கையான முறையில் பயனாளர்களுக்கு அனுப்பியும் வர, தொழில் எதிர்பார்த்ததை விட வெகு வேகமாக சூடு பிடித்தது.

பிரஜேந்தரின் யோசனைகளும் அதனை நடைமுறைப்படுத்திய அவனது நண்பர்களின் கூட்டணியுமே தொழிலை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல மிகவும் உறுதுணையாக நின்றது.

இந்த வெற்றியை கொண்டாடவென தேனிலவு பயணத்தை பிரஜன் ஏற்பாடு செய்ய, மிகப் பெரிய முட்டுக்கட்டை விழுந்தது. அந்த சமயத்தில்  நாள் தள்ளிப்போய் ரவீணா கருவுற்றிருக்க, இருவரின் அம்மாக்களும் அமர்களப்படுத்தி விட்டனர்.

அதிலும் சரஸ்வதி அம்மையார், “என் பேர பிள்ள என் வீட்டுலதான் வளரணும். ஒன்னுமே இல்லாத சிமிண்டு கட்டடத்துல வளர அவனுக்கென்ன தலையெழுத்தா?” சிலிர்த்துக் கொண்டவர் மருமகளை தனதருகிலேயே இருத்திக் கொண்டார்.

“கொஞ்சம் அடக்கியே வாசி சரசு! மூனு மருமகப் பொண்ணுங்க கூட்டணி வச்சு உன்னை அட்டாக் பண்ணினா நீ காணாம போயிடுவ!” கருணாகரனின் எச்சரிக்கையை தூசியாக தட்டிவிட்டார் சரஸ்வதி.

“என்னமும் பண்ணிட்டு போகட்டும். எனக்கு என் வீட்டு வாரிசுதான் முக்கியம். பிரதிபாவ (ரெண்டாவது மருமகள்) அவ இஷ்டப்படி விட்டுத்தான் ஆரம்பத்துலயே கரு கலைஞ்சு போயிடுச்சு! ரெண்டு வருசமாகியும் இன்னமும் புள்ள தங்கல…” தனது ஆதங்கத்தை வெளியில் கொட்ட, ரவீணா, மாமியாரின் அரவணைப்பில் பாந்தமாய் அடங்கிப் போனாள்.

“தாத்தா சொத்து பேரனுக்கு சேரணும்னு நீ சட்டம் பேசுற மாதிரி, இந்த வீட்டு பேரப்பிள்ளையும் இந்த தாத்தா வீட்டுலதான் வளரணும்” சரஸ்வதியின் கெடுபிடி சட்டத்தை உடைக்க முடியாமல் பிஸ்தா விழி பிதுங்கி நின்றான்.

அதட்டி உருட்டி மனைவியை இவன் பக்கம் இழுத்துக் கொள்ளலாம் என்றாலும் அவளது மசக்கை அதை செய்ய விடவில்லை. மனைவி, குழந்தை, அன்பான கூட்டு குடும்பம் என்றெல்லாம் வரும்போது, தனது திமிர் தெனாவெட்டு எல்லாம் காணாமல் போய் திண்டாடி விட்டான் பிஸ்தா.

அயர்ன்லேடியும் நாட்டாமையும் இவனது அலும்புகளை எல்லாம் தூக்கி குப்பையாய்  தூர எறிந்து விட, இவனுமே பங்களாவிற்கும் சிமிண்டு கட்டிடத்திற்கும் நடந்து ஒய்ந்தான்.

தொழில் சம்மந்தமான நடைமுறைகளை சிந்திக்க, அங்கு அமர்ந்தால் மட்டுமே உருப்படியான யோசனைகள் வர, அத்தனை எளிதில் அந்த பழக்கத்தை விட்டுவிடவில்லை.

சுகந்தியும் பெரிய வீட்டின் அந்தஸ்திற்கு குறையாமல் ரவீணாவிற்கு சீர்வரிசைகள் செய்து பெருமைபடுத்தி விட, பெண்ணின் புகுந்த வீட்டு மனிதர்கள் சம்மந்தி அம்மாளிடம் நட்புறவு பாராட்டினர்.

***

பிஸ்தா ஜுவல்லர்ஸ் நிர்வாகத்தின் சில பொறுப்புகள் பிரஜேந்தரை வந்து சேர, ரவீணாவின் உதவியுடன் சிரமேற்கொண்டு செய்தான். இவனது தொழில் வளர்சிகள், விரிவாக்கங்களில் கருணாகரன் எந்தவித தலையீடும் செய்யவில்லை. தனியாளாக நின்று வேற்றிப்படியை ஏற முயற்ச்சிக்கிறான் என தந்தையாக பெருமிதத்துடன் உள்ளுக்குள் மகிழ்ந்து போனார்.

இரண்டு தலைமுறைகளுக்கு பிறகு, பிஸ்தா பேலஸின் செல்ல இளவரசியாக, பிரஜேந்தர்- ரவீணாவின் மகளாக சாஸ்வி பிறந்தாள். வரமாக வந்த தேவதைக்கு தனது அன்னையின் பெயரையே பிரஜேந்தர் சூட்டி மகிழ சரஸ்வதி அம்மாளுக்கு பெருமை பிடிபடவில்லை.

ஆனால் அதுவே சமயத்தில் அவரை நொந்து போகவும் வைத்தது. ‘சச்சுமா… சச்சுகுட்டி’ என பேத்தியை கருணாகரன் கொஞ்சும் போதெல்லாம் சரஸ்வதி ஆர்வக்கோளாறில் எட்டிப்பார்த்து விடுவார்.

“உன்னை யாரும் கூப்பிடல கெழவி? போயி உன் வேலையைப் பாரு!” கணவரின் விரட்டலில்,

“நான் கெழவின்னா இவர் யாராம்?” கோபத்தில் கண்ணை உருட்டுவார் சரஸ்வதி.

“என் அம்மாவே இப்போதான் பூக்குட்டியா பிறந்து வந்திருக்கா! அவ வளர்ந்தபுறம் தான்டீ நானே வளர ஆரம்பிக்கணும். அந்தநேரம் எனக்கேத்த சின்ன பொண்ணா கல்யாணத்துக்கு பாரு, அதுவரைக்கும் ரெஸ்ட் எடு கெழவி!” கேலியில் வாரிவிட்டே மனைவியை வெறுப்பேற்றுவார் கருணாகரன்.

தங்கள் வீட்டு பூக்குட்டியை தன் மடியை விட்டு இறக்காமல் அத்தனை பாந்தமாய் பார்த்துக் கொண்டார் பெரியவர். சுகந்தியும் தன் பங்கிற்கு பேத்தியை  சீராட்டி தாலாட்டி மகிழ்ந்தார்.  

பூக்குட்டியின் அழுகையில் மொத்தமாய் கலங்கிப் போய்விடுவான் தந்தையான பிரஜேந்தர். மகனை பங்களாவிற்குள் வரவைக்க பூக்குட்டியின் அழுகை  வசதியான சாவியாகிப் போனது அயர்ன்லேடிக்கு.

தனது சிறிய வீட்டில் அமர்ந்து மடிக்கணினி இயக்கி கொண்டிருந்தவனை அலைபேசி அழைக்க, “சொல்லு பிங்கி” பிரஜன் கேட்டதும், வந்த பதில் என்னவோ மகளின் அழுகைதான்.

“பூக்குட்டி… குட்டிமா ஏன்டா அழறா?” பதறியவாறே இவன் பங்களாவிற்குள் ஓடிவர, அங்கே பாட்டியின் மடியில் பொக்கை வாய் திறந்து சிரித்துக் கொண்டிருந்தது பூக்குட்டி.

குழந்தையின் அழுகையை பதிவு செய்து வைத்தே கணவனை அழைத்திருந்தாள் ரவீணா. ‘அயர்ன்லேடியின் வில்லத்தனத்திற்கு நீயும் கூட்டா?’ மனைவியை கோபப்பார்வை பார்த்தவன் மழலையின் சிரிப்பினில் மதி மயங்கி நின்றான்.

“வாடா பிஸ்தா? உன் பொண்ணோட அழுகையில ரத்தம் சூடேறிப் போகுதா? நீ வராத நேரமெல்லாம் இப்படிதானே நாங்களும் பதறிட்டு கிடந்தோம். என்ன வீராப்பு, என்ன பேச்சு, கொஞ்சமா நீ ஆட்டம் காட்டின?” சரஸ்வதி வக்கனையாய் சொல்லிக் காண்பித்தார்.

“என் புள்ளைய அழ வைச்சு எனக்கு பாடம் எடுக்கறது தான்  இப்ப முக்கியமா போச்சா தாயே! அதட்டி உருட்டி புள்ளைய ஒழுங்கா வளக்க தெரியாத நீ, என்னை குறை சொல்ல வந்துட்டியா?”  தன்மீது எய்த அம்பை, திருப்பி விட்டு அன்னையின் வாயை அடைத்தான் பிரஜேந்தர்.

“என் பொண்ணை நான் வளத்துக்கறேன்! நீ தூரமா இருந்து வேடிக்கை பாரு போதும்” அலட்டலுடன் மகளை தூக்கிக் கொண்டு அவனது சிமெண்டு கட்டிடத்திற்குள் நுழைய இப்பொழுது உண்மையாகவே குழந்தை அழுதது.

பிஸ்தாவின் அலம்பலுக்கு தப்பாமல் பிறந்திருந்தாள்  பூக்குட்டி. எப்பொழுது இந்த கட்டிடத்திற்கு அழைத்து வந்தாலும் தனது வசதியின்மையை தெரியப்படுத்தும் விதமாக அழ ஆரம்பித்து விடுவாள்.

தோட்டத்தை சுற்றிக் காண்பிக்க வேண்டும் அல்லது பங்களாவிற்குள் சொகுசாக இருக்கவேண்டும். சுருங்கச் சொன்னால் லிட்டில் அயர்ன் லேடியாக இருந்தாள் அவனின் செல்லமகள்.

“என்னடா சின்னவனே! போன ஜோருல திரும்பி வந்துட்ட… என் பேத்தி உன்னை இங்கே கூட்டிட்டு வந்துட்டாளா இல்ல உனக்கு வச்சுக்க தெரியலையா?” சரஸ்வதி நக்கலில் இறங்க, உடன் அவனது அண்ணன்களின் குடும்பமும் ஒன்று கூடி சிரித்தது.

“இதுக்கெல்லாம் உங்க அண்ணன்கிட்ட ஆலோசனை கேக்கிறதில்லையா மச்சினரே? அவர்தான் அனுபவஸ்தர் ஆச்சே!” நமட்டுச் சிரிப்பில் அம்பிகா பேச,

“நம்ம மலரும் நினைவுகள் இப்ப தேவையா அம்பி!” கடுகடுத்தபடியே மனைவியை உள்ளே அழைத்துச் சென்றான் ரவீந்தர்.  

“அயர்ன் லேடிய பகைச்சுகிறத விடமாட்டியாடா நீ?” ராஜேந்தர் கிசுகிசுக்க,

“அவர் விட்டாலும் உங்கம்மா வாய் சும்மா இருக்காது” முணுமுணுத்துக் கொண்டே குழந்தையை வாங்கிச் சென்றாள் பிரதீபா.

ஒவ்வொருவரின் நக்கலும் பிஸ்தாவை சூடேற்றி விட, “உன்னை மாதிரியே என் பொண்ணை வளர்க்க நினைச்சா, அது கனவுலயும் நடக்காது. நான் இங்கே இருந்தா தானே இதெல்லாம் பார்க்கணும். இதுக்கு ஒரு முடிவெடுக்குறேன். எங்கே அவ?” வீறுகொண்டு எழுந்தவனாய் மனைவியை தேடிச் சென்றான்.

“போன மாசம் ரெஜிஸ்ட்ரேஷன் முடிச்ச பிளாட்டுல உடனே குடிபோறோம். சீக்கிரம் எல்லாம் எடுத்துவை!” கறாராய் இவன் அறிவிக்க,

“ம்ம்… அப்புறம்?” அலட்டிக்கொள்ளாமல் கணவனைப் பார்த்தாள் ரவீணா.

“என்னடீ நான் என்ன கதையா சொல்றேன்? அப்பறம் நொப்பறம்ன்னு கேட்டுட்டு இருக்க?” உஷ்ணத்தில் கத்த. காதினைப் பொத்திக் கொண்டாள் ரவீணா.

“உனக்கும் அத்தைக்கும் வேற வேலையே இல்லடா! வாரத்துல மூனுநாள் ரெண்டு பெரும் நீயா நானா ரேஞ்சுல சண்டை போடுறதும், நீ மூட்டை கட்டச் சொல்றதும் கேட்டுக் கேட்டு சலிச்சுப் போச்சு!

தொழில்ல சூரப்புலியா இருந்துட்டு வீட்டுல மட்டும் ஊறின புளியாட்டாம் ஏன்டா கோமாளித்தனம் பண்ற?” சலிப்புடனே கணவனின் சிறுபிள்ளை தனத்தை சுட்டிக் காட்டினாள் ரவீணா.

“நீ என்னதான் குட்டிக்கரணம் அடிச்சாலும் இந்த வீட்டுல உன்னை தனியா விடமாட்டாங்க! நீயும் உன் அம்மாவை விட்டுட்டு இருக்கவும் போறதில்ல.

பின்ன எதுக்காக இந்த கோபம், ஆவேசம் எல்லாம்? போதும் அடங்குடா! உன் பிள்ளைக்கு அப்பனா அவளை தோட்டத்துக்கு கூட்டிட்டு போயி வேடிக்கை காட்டு!” நொடித்துக் கொண்டே நகன்றவளை பார்த்து தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான் பிஸ்தா.  

‘இவள் சொல்வதும் சரிதானே. குடும்பத்தாரை விட்டு பிரியாமல் இருக்க வேண்டுமென்று நினைத்ததால் மட்டுமே, தோட்டத்து வீட்டில் பெற்றோரின் கண்ணெதிரிலேயே தங்கியது.

வெட்டி வீராப்பாக எத்தனையோ ஆவேசப் பேச்சுக்கள் எழுந்தாலும் குடும்பத்தினரை விட்டு விலகியிருப்பது என்பது பிஸ்தாவிற்கு கொடுமையான விஷத்தை முழுங்கியதற்கு சமானம்.

காதல் எத்தனை முக்கியமோ அதே போன்று தனது  குடும்பத்தினரோடு ஒட்டி உறவாடுவதும் பிஸ்தாவிற்கு மிகமிக முக்கியம். இவனது உயிர்நாடியே இவனது குடும்பம் மட்டுமே! அதில் மனைவியும் மகளும் அழகிய பூங்கொத்தாய் மலர்ந்திருக்கின்றனர்.  

இது போன்ற அன்பான உறவுகளின் மத்தியில் வாழும் வாழ்க்கை என்றென்றைக்கும் சீரும் சிறப்புமாக இருக்கும் என்பதற்கு இவனது வாழ்க்கையே சாட்சி.

இத்தகைய வாழ்வியலை அனுபவப் பூர்வமாக வாழ்ந்து உணர்தலே பேரன்பிற்கு தரும் வெகுமானம். அந்த அழகான வெகுமதியே பிரஜேந்தரின் வாழ்க்கையை இன்னமும் அழகாக்கும், உறவுகளை பலப்படுத்தும்  என்னும் நம்பிக்கையில் வாழ்த்தி விடைபெறுவோம் நண்பர்களே!!