அன்பின் உறவே…4-2

அன்பின் உறவே…4-2

பிறந்தநாள் விழாவிற்கான அனைத்து அம்சங்களுடன் ரவீணாவின் வீடு களைகட்டி இருந்தது. க்ரீனிஷ்-க்ரே அனார்கலியில் ஃப்ளவர் பாட்ஸ் ஹேர் ஸ்டைலுடன் பிளாட்டின நகைகள் வரிசை கட்ட, அழகு நிலையத்தாரின் கைவண்ணத்தில் தேவதையாக மிளிர்ந்தாள் ரவீணா. நண்பர்கள், உறவினர்களோடு அக்கம்பக்கத்தினரும் விழாவிற்கு வருகை புரிந்திருக்க, மகிழ்ச்சி ஆராவாரத்துடன் விழா இனிதே துவங்கியது.

பிறந்தாநாள் கேக்கினை வெட்டிய ரவீணா, பெற்றோருக்கு தனித்தனியாக ஊட்டிவிட்டு அவர்களிடம் இருந்தும் வாங்கிக் கொண்டாள்.

அந்த நேரத்தில் தனது அன்பளிப்பாக மகளின் கைகளில் பல டாக்குமெண்டுகள் அடங்கிய ஃபைலினை திணித்தார் குருமூர்த்தி.

“என்ன டாடி இது?” புரியாமல் ரவீணா கேட்க,

“சுரா டெக்ஸ்டைல்ஸ் ஜூனியர் அட்மின் ஆபீசரா உன்னை அப்பாயிண்ட் பண்ணிருக்கேன். ரெண்டு மாசத்துல உன்னோட ஸ்டடீஸ் முடிஞ்சதும் வந்து ஜாயிண்ட் பண்ணிக்கலாம் வினுமா!” பெருமையுடன் கூறியவர்,

‘நான் கொடுத்த அங்கீகாரத்தை போல் உன்னால் கொடுக்க முடியுமா?’ உள்ளக்குள் பெருமை கொப்பளிக்க மிடுக்கான தோரணையுடன் சுகந்தியைப் பார்த்தார் குருமூர்த்தி.

“ப்பா… ஆல்ரெடி கேம்பஸ்ல நான் செலக்ட் ஆகிட்டேன். ப்ளேஸ்மெண்ட் மட்டும் தான் வரணும். அங்கே டூ இயர்ஸ் வொர்க் பண்ணிட்டு அப்பறமா நம்ம கன்சர்னுக்கு வர்றேனே…” ரவீணா தனது ஆசையை எடுத்துக் கூற, குருமூர்த்தி ஏற்றுக் கொள்ளவே இல்லை.

“பியூச்சர்ல நீதான் என் பிசினஸை ஃபுல்லா பார்த்துக்கப் போற… அப்டியிருக்க எக்ஸ்பீரியன்ஸுக்காக வெளியிடத்துக்கு போயி ஏன் வேலை பார்க்கணும்? அதை நம்ம இடத்துல இருந்தே செய்! அதுக்காக தான் உனக்கு ஜூனியர் போஸ்ட் கொடுத்திருக்கேன். இல்லன்னா டைரக்டா எம்.டி போஸ்ட் தான் கொடுத்திருப்பேன்” தீர்மானமாய் சொல்லிவிட, வந்திருப்பவர்களுக்கு அவரின் பெருந்தன்மையை பார்த்து அத்தனை ஆச்சரியம்.

இவரைப் போல் அக்கறையோடு பார்த்துச் செய்யும் தகப்பன் உண்டா என அனைவரும் பெருமை பேச, “சூப்பர் சான்ஸ்’டீ… சரின்னு சொல்லி ஒத்துக்கோ!” தோழிகளும் ரவீணாவை  ஏற்றி விடவே செய்தனர்.

தந்தையின் கோரிக்கையை ஏற்றே ஆகவேண்டிய நிர்பந்தத்தில் சிக்கிக் கொண்ட ரவீணா, அன்னையின் முகத்தைப் பார்க்க, அவரின் முகம் அத்தனை ரௌத்திரங்களை தாங்கி நின்றது.

மனைவியாக இந்த அவசரமும் அவசியமும் எதற்காக என கேள்வி கேட்டு கணவனின் ஏற்பாட்டினை தடை செய்யவும் முடியாமல், அன்னையாக இத்தனை பெரிய பாரம் இப்பொழுது உனக்கு வேண்டாமென்று மகளை தடுத்திடவும் வழியில்லாமல் மனத்திற்குள் தவித்தே போனார்.

“நாலு பேரோட பழகி, வெளி உலகம் என்னான்னு தெரிஞ்சா தானே, நாளபின்ன தொழில்ல இருக்குற நெளிவு சுளிவுகளை எல்லாம் ஈஸியா சமாளிக்க முடியும். வியாபாரத்துலயே ஊறிப் போன நல்லவங்களுக்கு இதையெல்லாம் எடுத்துச் சொல்லனுமா? தானா தெரிய வேணாமா?” சத்தமாகவே முணுமுணுத்தார் சுகந்தி. அப்படி பேசி ஆறுதல் பட மட்டுமே முடிந்தது அவரால்.

அத்துடன் அந்தப் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அடுத்தடுத்து ரவீணாவின் தோழிகள் வாழ்த்து கூறி பரிசினைக் கொடுக்க முன்வர, அந்த பிரச்சனை  அப்படியே முடங்கிப் போயிற்று.

மகளுக்கென குருமூர்த்தி செய்வதை சுகந்தி இதுநாள் வரையிலும் தடுத்தது கிடையாது. அப்படி தடுக்க நினைத்திருந்தாலும் அது நடந்திருக்காது என்பது சுகந்தியே அறிந்த சேதிதான்.

ஒவ்வொரு விசயத்திலும் மகள் மீதான பாசம் என்பதை விட, அவளின் மீதான தனது ஆளுமையை காட்டுவதற்காகவே அதிகபட்ச முன்னேற்பாடுகளுடன் நடந்து கொள்வார் குருமூர்த்தி. மகளின் வளர்ச்சியில் தனது பங்களிப்பை அவரது கௌரவமாகவே கருதி வந்தார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

பள்ளியில் சேர்க்கும்போது ஆரம்பித்த இந்த திணிப்பு இப்போது வேலையென நீண்டு, நாளை மகளின் திருமணம் முடிவில் கூட நடக்கும் என்பதை நன்றாகவே அறிந்து வைத்திருந்தார் சுகந்தி. தந்தையின் முடிவிற்கு மாற்றுக் கருத்து கூற இயலாமல் எப்போதும் போல் ஒப்புதல் அளித்துவிட்டு விழாவில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள் ரவீணா.

விழாவிற்கு வந்த பாதி கூட்டம் கலைந்து போன நிலையில், தடாலடியாக பிரஜேந்தர் வந்து நிற்க, உடனிருந்த தோழிகள் சுட்டிக்காட்டிய பிறகுதான் அவனை பார்த்தாள்.

வந்தவர்களுடன் செல்ஃபி எடுக்கும் வைபத்தில் மிகவும் பிஸியாக இருந்தவள், தோழிகள் சொன்னதில் ஒருநொடி அசைவற்று அவனை பார்த்தாள்.

எப்படி என்னவென்று கூறி இவனை அறிமுகப்படுத்துவது என்றெல்லாம் அப்போதைக்கு அவள் நினைக்கவில்லை. வீட்டினளாக வந்தவனை வரவேற்று உபசரித்தாள்

“ஹேய் ப்ரஜூ… வாட் அ சார்பிரைஸ், கமான் மை பாய்!” என்றவள் உள்ளே அழைக்க, அவளைத் தொடர்ந்தவன்,

“ஜஸ்ட் உன்னைப் பார்க்கணும்னு டெலிபதி… அதான், சடனா வந்துட்டேன்” வசீகரப் புன்னகையுடன் சால்ஜாப்பு சொல்ல,

“காலையில தானே பார்த்து பேசினோம். அதுக்குள்ள என் நினைப்பு உன்னை, என் வீடு வரைக்கும் இழுத்துட்டு வந்திடுச்சா?” கிண்டலடித்துக் கொண்டே, அப்பா அம்மா பாட்டியிடம் தன் நண்பன் என்று பிரஜேந்தரை அறிமுகப்படுத்தினாள்.

“ஹலோ சார்…” என குருமூர்த்தியிடம் கைகுலுக்கிய பிரஜனும் முறையாக பெண்களிடம் வணக்கத்தை கூறி, தனது படிப்பு, வேலையோடு, இன்னார் வீட்டு பிள்ளை என்றும் சொல்லி முடிக்க பெரியவர்களுக்கும் அந்த நேரத்தில் எந்தவொரு நெருடலும் இல்லை.

“உள்ளே கூட்டிட்டு போயி கேக், கூல்டிரிங்ஸ் குடு வினுமா!” குருமூர்த்தியின் உத்தரவில் அவனைத் தோழிகளிடம் அழைத்துச் சென்றாள் ரவீணா. 

சுற்றியிருந்த கோபிகைகளின் நடுவே கிருஷ்ணனாய் அவன் நிற்க, பல கேள்விகள் பல விதமாய் தொடுக்கப்பட்டன. பார்வையிலும் பழக்கத்திலும் தங்கள் வசமிழக்க வைத்தவனை விட்டு பெண்களின் கூட்டம் இம்மியளவும் அசையவில்லை.

இளைஞர் பட்டாளத்தின் ஆராவாரமே பெரியவர்களையும் அவர்களின் புறம் திரும்பிப் பார்க்க வைக்க, குருமூர்த்தி, சுகந்தியின் கண்கள் நடப்பதை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கியது.

தோழிகளின் கேள்விகள் அனைத்திற்கும் அசராமல் பதிலளித்தவன், பழச்சாறை கொண்டு வந்து கொடுத்த ரவீணாவிடம் தனது கிஃப்ட் பார்சலை கொடுக்க, தோழிகள் அனைவரும் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.

“காலையில நான் கேட்டேன்னு வாங்கிட்டு வந்தியா ப்ரஜூ?”

“நேத்தே வாங்கிட்டேன் பிங்கி… மார்னிங் கொடுக்க மறந்துட்டேன்”

“யூ நாட்டி! எல்லாமே உனக்கு விளையாட்டா போச்சு!”

“ஓஹ்… கமான் பிங்கி… கிஃப்ட் ஓபன் பண்ணிப் பாரு!” அவளை அவசரப்படுத்தினான் பிரஜேந்தர்.

“இன்னும் யாரோட கிஃப்டும் பிரிச்சுப் பார்க்கல’டா! இப்ப உன்னோடது மட்டும் ஓபன் பண்ணினா நமக்குள்ள இருக்குற சம்திங் அவுட்டாகிடும். பங்சன் முடிஞ்சதும் ஃபர்ஸ்ட் உன் கிஃப்ட் ஓபன் பண்ணிப் பார்த்துட்டு கால் பண்றேனே ப்ளீஸ்!” சூழ்நிலையை அறிந்து பிரித்துப் பார்க்க தயங்கினாள் ரவீணா.

கிசுகிசுத்த மகளின் முகபாவனையில் குருமூர்த்தியின் பார்வையும் கூர்மையாக, புருவம் சுருக்கி இருவரையும் ஊடுருவி கவனிக்கத் தொடங்கினார்.

“நீ பிரிச்சு பார்க்கும்போது உன்னோட எக்ஸ்ப்ரசன்ஸ் எப்படி இருக்குன்னு நான் பார்க்கணும். கமான், பிரிச்சுப் பாரு! ஐயாவோட செலக்சன் பார்த்து அசந்து நின்னுடுவ…” பெருமை பேசினாலும் ரவீணா தயங்கியே நிற்க, பிரஜன் ஆர்வக்கோளாறில் அந்தப் பார்சலை பிரித்து விட்டான்.

மிக அழகான சிறிய வைரக்கற்கள் பதித்த தங்க பென்டண்டை பார்த்ததும் ரவீனாவின் கண்கள் அதிசயித்து அடங்க, தோழிகளின் கவனமும் நகையின் மேல் விழுந்தது.

“சோ எக்ஸ்பென்சிவ்!”

“லவ்லி செலக்சன்!”

“உன் கலருக்கு செம்ம மாட்ச் ஆகும் வினு!” வரிசையாக தோழிகள் கூட்டம் சிலாகித்துச் சொல்ல, நகை வசீகரமானதாய் இருந்தாலும் அதை கைகளில் வாங்கிக் கொள்ள அத்தனை தயக்கம் வந்திருந்தது பெண்ணிற்கு.

“இதப் போடும் போதெல்லாம் என் நினைப்பு உனக்கு வந்துகிட்டே இருக்கணும்” காதினில் பிரஜன் கிசுகிசுக்க, பெருமையுடன் பார்த்தவள்,

“இல்லேன்னா மட்டும் உன் நினைப்பு எனக்கு இல்லாமத்தான் இருக்குதா? ஆனாலும் இந்த ஜுவல் இப்ப வேண்டாமே! டாடி, ப்ரதர் ஆர் ஹஸ்பெண்ட் தவிர வேற யாரும் ஒரு பெண்ணுக்கு இந்த மாதிரி காஸ்ட்லி கிஃப்ட் எடுத்துக் கொடுக்க கூடாதுன்னு எங்க வீட்டுல சொல்லுவாங்க” வெகுவாய் தயங்கினாள் ரவீணா.

“ஓ… அப்ப நான் யாருடி? லவ் பண்ணிட்டு பாதியில கழட்டி விடலாம்னு நினைக்கிறியா? உனக்கு புருசனா வரப்போறவன் நாந்தான்னு நம்பிக்கையோட இருந்தேனே… ஆளை மாத்திடுவ போல இருக்கே?” பார்வையில் ஏக்கத்தை தேக்கிக்கொண்டே புலம்பி விட,

“ச்சே…என்ன பேச்சு இது இடியட்? உனக்காக வாங்கிக்கறேன்!” அவனை சமாதனப்படுத்தவென நகையை வாங்கிக் கொள்ள,

“இப்பவே போட்டுக்கோ பிங்கி!” பிடிவாதம் பிடித்தான் பிரஜேந்தர்.

“அச்சோ… நேரம் காலம் புரியாம விளையாடாதே’டா! அப்பறமா உனக்கு போட்டுக் காமிக்கறேன்” மறுத்தவளை கண்டுகொள்ளாமல் தோழிகளிடம் சிபாரிசுக்கு சென்றான். தான் நினைப்பது நடந்தே ஆகவேண்டும் என்கிற பிடிவாதம் அவனை ஆட்டி வைத்தது.

“கேர்ள்ஸ்… உங்க ஃப்ரண்ட் இந்த ஜுவல் போட்டுக்க சொன்னா, இப்ப முடியாதுன்னு சொல்றா… யாரவது வந்து இதை போட்டு விடுங்க!” என்றவன் சொன்னதோடு நிற்காமல், நகையின் கொக்கியை கழட்டி அவளின் கழுத்திற்கு அருகே கொண்டு செல்ல, ரவீணா சுதாரித்து கைகளில் வாங்கி கழுத்தில் மாட்டிக் கொண்டாள்.

வைரநகையின் பளபளப்பில் ரவீணாவின் ரோஜாக் கன்னங்கள் முன்னிலும் அதிகமாய் சிவந்துபோக, காதலியின் அழகில் பிரஜேந்தர் பித்து பிடித்தவனாகிப் போனான்.

“வாவ்… மை பிங்கி சோ கியூட்… யு லுக் ப்ரெட்டி அஸ் ஐ இமாஜின். லவ் யூ சோ மச் டாலி!” கிறுகிறுத்துப் போனவனாய் தன் காதல் பெண்ணை கண்களால் கபளீகரம் செய்யத் தொடங்கினான்.

பிரஜேந்தரின் பார்வை மாறுபாட்டை கண்ட ரவீணா, “அடேய் தடியா… ஓவரா வழிஞ்சு காட்டிக் கொடுத்துடாதே!” பல்லிடுக்கில் எச்சரிக்க, கேட்பானா அவன்? தன்போக்கில் பார்வை மேய்ச்சலை தொடர, பாட்டியின் சத்தம் அவனை திசை திருப்பியது.

“ராசாத்தி… இன்னும் யாரெல்லாம் சாப்பிடனுமோ அவங்களை தோட்டத்துக்கு அனுப்பி வை!” அம்சவேணி துரிதப்படுத்த, அதையே பற்றிக் கொண்டு, “பிங்கி… நீயும் நானும் சேர்ந்து சாப்பிடலாம், கமான்!” என்றவன் ரவீணாவின் பதிலை எதிர்பாராமல் தோட்டத்திற்கு வலுக்கட்டாயமாகத் தள்ளிக்கொண்டு சென்றான்.

அவனது அடாவடிச் செயலை தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த குருமூர்த்தியும் சற்று இடைவெளி விட்டே அவர்களைத் தொடர, காதல் ஜோடிகளுக்கு அது தெரியாமல் போனது.

காதலும் தாபமும் போட்டிபோட தனிமை வேண்டி நின்றவனின் மனது, சுற்றிலும் நோட்டம் பார்க்கத் தொடங்கியது. தோட்டத்தில் தொலைவாய் இருந்த இருட்டில் காதலியை வம்படியாக தள்ளிச் சென்றவன்,

“என்னை பைத்தியமாக்குறடி இன்னைக்கு…” உணர்ச்சி வேகத்தில் உளறிக் கொட்டிவிட்டு அவளிதழை தன்வசப்படுத்திக் கொண்டான்.

“என்னடா பண்ற…” ரவீணாவின் வார்த்தை முழுமை பெறாமல் அவன் உதடுகளில் முடங்கிக் கொள்ள, திமிறத் தொடங்கியவளின் இடையை அழுத்தியே பெண்ணை தன் கட்டுக்குள் கொண்டு வந்தான் பிரஜேந்தர்.

மூச்சுக்குப் போராடியவள் தன் பலத்தில் அவனிலிருந்து விடுபட்டு, “அறிவுகெட்டவனே! எங்கே வந்து என்ன பண்ணிட்டு இருக்க? இப்பவே வெளியே போயிடு… ஒரு செகண்ட் கூட இங்கே நிற்காதே!” இறங்கிய குரலில் முறைப்புடன் கடிந்து கொண்டவளை கவனத்தில் கொள்ளவே இல்லை பிரஜேந்தர்.

“ரொம்ப பிகு பண்ணாதேடி!” ஆசை மிகுதியில் பிதற்றியவன், கன்னத்தில் முத்தம் பதிக்கும் வேளையில், அவன் நெஞ்சில் கை வைத்து பின்னுக்கு தள்ளி விட்டார் குருமூர்த்தி.

இவர்களை மெதுவாகப் பின்தொடர்ந்து வந்தவருக்கு  இருவரின் நிலையினைப் பார்த்து, அதிர்ச்சியோடு கோபமும் சேர்ந்து கொதிப்படைய செய்ய, “கொழுப்பெடுத்த நாயே! என் வீட்டுக்கே வந்து என் எதிருலேயே என் பொண்ணைத் தொடுவியா?” திடீரென தள்ளி விடப்பட்டதில் தடுமாறி நின்ற பிரஜனின் சட்டையை பிடித்து கர்ஜிக்க, இருவரின் இடையில் புகுந்த ரவீணா,

“அப்பா அவசரப்படாதீங்க!” என தடுக்கவர, குறையாத ஆங்காரத்துடன் ஓங்கியவரின் கை, மகளின் கன்னத்தில் பதிந்து மீண்டது. தவறு இருவரின் மீதும்தான் என்றே முடிவு செய்து கொண்டார் குருமூர்த்தி.   

“திமிரெடுத்தவளே! எதுக்கும் உன்னை கண்டிக்காம செல்லம் கொஞ்சியே வளர்த்தது, இப்படி உன் இஷ்டத்துக்கு பழகி ஊர் மேயிறதுக்கா? வெட்டிச் சாய்ச்சுடுவேன்!” சிவப்பேறிய கண்களுடன் ரௌத்திர மூர்த்தியாகி மகளை வன்மையாக கடிந்து கொண்டார்.

குருமூர்த்தியின் கோபக்குரலில் அனைவரும் அங்கே எட்டிப் பார்த்து விட, இருவருக்கும் பெரும் தலைகுனிவாகிப் போனது. நொடிநேரக் கலவரம் அனைவரையும் ஸ்தம்பிக்க வைக்க, சூழ்நிலைய அமைதியாக்க சுகந்தி, மகளை தனியே அழைத்துக் கொண்டு ஒதுங்கினார்.

நடந்ததை ஓரளவு ஊகித்திருந்த அவரால் கணவனைப் போல அனைவரின் முன்பும் மகளை விசாரித்து தலைகுனிய வைக்க விரும்பவில்லை. இவரின் பின்னோடு சென்ற பிரஜேந்தரும் தன்னை சுதாரித்துக் கொண்டு அடிவாங்கிய ரவீணாவை ஆறுதல்படுத்த முன்வர, சுகந்தி, மகளை தன் கைவளைவில் நிறுத்திக் கொண்டார்.

“பெரிய வீட்டுப் பையன்னு பெருமையா சொன்னா போதுமா? பொண்ணுங்ககிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரிய வேணாம்? உங்க வீட்டுல சொல்லிக் கொடுத்த மரியாதை, கௌரவமெல்லாம் இதுதானா?” என கொந்தளித்தவர், மகளிடமும் தனது கோபத்தை காட்டி,

“எப்ப இருந்து’டீ இவ்வளவு கொழுப்பெடுத்து அலைய ஆரம்பிச்ச? சொந்த வீட்டுலயே தனியா போயி கும்மாளம் அடிக்கிற அளவுக்கு தறிகெட்டுப் போயிட்டியா?” உலுக்கி எடுத்தார் சுகந்தி.

“சாரி ஆண்ட்டி! தப்பு எம்மேல தான்… அவளை ஒன்னும் சொல்லாதீங்க!” முயன்று வரவழைத்த அமைதியுடன் சமாதானமாக பிரஜன் பேச,

“ஒரு ஆம்பள இழுத்துட்டுப் போனா, இவ புத்தி புல்லு மேய போயிருந்துச்சா? இந்த கண்றாவிக்கு சப்போர்ட் வேற வருதோ?” விடாமல் சுகந்தி எகிற,

“ஒரு வேகத்துல பொது இடம்னு பாக்காம எல்லை மீறினது நான்தான்… திரும்பவும் சொல்றேன், அவளை ஒன்னும் சொல்லாதீங்க!” பிரஜேந்தர் தன்னை விளக்க முற்பட, அவன் பேச்சு அங்கே எடுபடவில்லை.

“பொது இடமா இல்லாம இருந்திருந்தா இதுக்கும் மேல நடத்தி முடிச்சிருப்பியோ?” கேட்டபடியே அங்கு வந்த குருமூர்த்தியின் தீப்பார்வை காதலர்களோடு மனைவியையும் சேர்த்தே சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருந்தது.

‘நீ வளர்த்த லட்சணத்தைப் பார்!’ என இக்கட்டிலும் மனைவியை பார்வையால் குறை சொல்லத் தவறவில்லை குருமூர்த்தி.

“இட்ஸ் டூ மச் டாடி… உங்க இஷ்டத்துக்கு பேசாதீங்க! உங்க பொண்ணு மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?” கனன்ற கோபத்தில் ரவீணாவும் பேச,

“தப்பா பேசாதீங்க சார்! நான் அப்படிப்பட்ட ஆள் இல்ல… ரவீணாவும் நானும் ஒருத்தரையொருத்தர் விரும்புறோம்.  என்னோட மனைவியா வரப்போறவங்கிற நெனைப்புல  உரிமை எடுத்துக்கிட்டேன். இது என்னையும் அறியாம நடந்த விஷயம். எங்களை நம்புங்க…” தீர்க்கமாக பிரஜேந்தர் பேசப்பேச ரவீணா அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

சுகந்தி சொல்வது போல் பிரஜேந்தர் வம்படியாக அழைத்துச் செல்லும்போதே அவனை தடுத்து எச்சரித்திருந்தால் இத்தனை களேபரத்திற்கு அவசியமே இல்லை. நடந்ததில் இவளின் பங்கும் சரிசமமாக இருந்த போதிலும் தவறினை தன்மீது மட்டுமே எனக்கூறி குற்றவாளியாக நிற்பவனைப் பார்க்கையில் அவனது நேசத்தின் வலிமையை உணர முடிந்தது.

அவசரமும் அடாவடியும் ஒன்றாக அவனை ஆட்டிப் படைத்தாலும் நல்லதொரு காதலனாய் உறுதியாய் நின்றான் பிரஜேந்தர். எந்தவொரு இடத்திலும் தன்னை விட்டுக் கொடுக்கவோ, தலைகுனிய வைக்கவோ விடமாட்டேன் என்று அடிக்கடி சொல்லும் அவனது பேச்சு வெறும் கண்துடைப்பு அல்ல, உண்மையான காதலின், அவளின் மீதான அன்பின் எதிரோலியே எனத் தெளிவாக ரவீணாவிற்கு புரியத்தான் செய்தது.

ஆனால், இவனின் அவசரமும் மடமையும் சேர்ந்து இருவருக்குமே தலைகுனிவை ஏற்படுத்தி விட்டிருக்க, இன்றைய நிகழ்வை நியாயப்படுத்திப் பார்க்கவும் முன்வரவில்லை காதல் கொண்ட பெண்மனம்.  

பெரியவர்களிடம் இவர்களின் நேசத்தை எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கும் அளவிற்கு சந்தர்ப்பமும் சூழ்நிலையும் இடம்தரவில்லை. தங்களின் மீது நம்பிக்கை வைக்கச் சொன்ன பிரஜேந்தரை எள்ளலாக பார்த்த குருமூர்த்தி,

“உன்னை தப்பா பேசவேணாம், நம்புங்கன்னு சொல்றவன், மொதல்ல உன்னோட காதல் கதையை உங்க வீட்டுல சொல்லி சம்மதம் வாங்கிட்டு வா… அப்பறமா உன்மேல நல்ல அபிப்பிராயம் வருதா இல்லையான்னு சொல்றேன்” முகத்தில் அடித்தாற்போல பேச,

“என்னோட விருப்பத்துக்கு மாறா எங்க வீட்டுல எதுவும் நடக்காது. ஒரு வாரத்துல எங்க வீட்டுல பேசி, பேரண்ட்ஸ கூட்டிட்டு வர்றேன்” தன்மையாகவே கூறினான் பிரஜேந்தர்.

“பார்க்கலாம்… இனம், பணம் அந்தஸ்து தாண்டி உங்க குடும்பம் இறங்கி வர்றது கனவுல கூட நடக்காது” குருமூர்த்தி உறுதியற்று கூற,

“அப்படி அவங்க சம்மதம் கெடைக்காம போனாலும் உங்க பொண்ணை நான் கைவிட மாட்டேன். இது பிராமிஸ்” பிரஜேந்தர் சத்தியம் கொடுக்க, அதற்கும் இடக்கான பார்வையையே பதிலாகத் தந்தார்.

“எப்படி? உன் வீட்டு மனுசங்க, வீடு, சொத்து சுகத்தை விட்டுட்டு, அன்னாடங்காய்ச்சியா, அன்னக்காவடியா வீட்டோட மாப்பிளையா வந்து உக்காருவ… உனக்கு, நாங்க வரவேற்பு கொடுத்து பாதபூஜை செய்யணுமா? ஆசை ஆசையா பொண்ண வளர்த்து, அவ பேருல சொத்து பத்தையும் சேர்த்து வைச்சா, நோகாம காதல்ங்கிற பேருல அள்ளிட்டு போக வந்துடுவீங்களே!” குரோதமும் எகத்தாளமும் ஒன்றுசேர குத்திக் காட்டிப் பேசியவர், அவர்களின் காதலை கால்களில் போட்டு மிதிக்கவும் செய்தார்.

தன்னை நம்ப மறுக்கும் குருமூர்த்தியின் பேச்சில் பிரஜேந்தருக்கு தலைசுற்றிப் போனது. இதற்கு மேல் தர்க்கம் செய்ய விரும்பாமல்,

“உங்ககூட நீயா நானான்னு போட்டி போட்டு பேச விரும்பல சார்… கூடிய சீக்கிரம் எங்க வீட்டுல பேசி பெத்தவங்க சம்மதத்தோட வர்றேன். அதுவரை சினிமா வில்லன் மாதிரி தப்பான எந்த முடிவும் எடுக்காம எனக்காக கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!” முடிவாகக் கூறியவன்,

ரவீணாவை பார்த்து, “சாரி’டா பிங்கி! நான் அசால்ட்டா செஞ்சது இவ்வளவு பெரிய பிரச்சனையா மாறும்னு நான் நினைக்கேவே இல்ல. சீக்கிரம் குட்நியூசோட வர்றேன்!” நிதானமான குரலில் கூறி விடைபெற, அவன் மீது உண்டான கோபத்தில் பார்வையால் எரித்தாள் ரவீணா.

அனைவரின் முன்பும் தலைகுனிய வைத்தவனை அவளும் மன்னிக்கத் தயாராயில்லை. அதைச் சொல்லி அவனை தவிர்க்கவும் மனம் வரவில்லை. இவர்களின் ரகசியம் பகிரங்கமாக மேடையேற்றபட்டதில் இழுத்துப் பிடித்த பொறுமையுடன் மௌனமாகவே அவனை வழியனுப்பினாள்.   

பலவித எண்ணங்களில் உழன்ற பிரஜேந்தரும் குழப்பத்துடனேயே வீட்டிற்குள் நுழைய, அங்கே அவனுக்கான மற்றுமொரு பஞ்சாயத்து சொம்பும் ஆலமரமும் இல்லாமல் கூடியிருந்தது.