நிரலியின் புகைப்படத்தை பார்த்ததும் செய்வதறியாது நின்ற அபி , அடுத்த நொடியே அந்த இடத்தை விட்டு மறைந்தான்.
யாரும் பார்க்காத இடமாக பார்த்து மறைந்து நின்றவன் , அவினாஷிற்கு அழைப்பு விடுத்தான்.
“அவிஈஈஈஈஈஈஈஈஈஈ” என கத்த,
“எதுக்கு டா இப்படி கத்துற.? காது வலிக்குது பாரு எனக்கு ” என்று காதில் இரத்தம் வருகிறதா என ஒருமுறை பார்க்கவும் செய்தான்.
“டேய் !என்னால இந்த கம்பெனிக்கு வேலைக்கு போக முடியாது டா ” என்க
“ஏன்டா முடியாது.. “
“முடியாதுன்னா முடியாது தான் “
“டெள் மீ மேன், ஏன் முடியாதுன்னு .? ” என நக்கலாக கேட்க,
“உன்னோட வாய்ஸ்ல ஒரு நக்கல் தெரியுதே அவி. அப்போ உனக்கு விஷயம் தெரியுமா என்ன.? ” என கோபமாக கேட்க,
“என்ன ?என்ன விஷயம் ? எனக்கு எதுவும் தெரியாதே அபி.. அப்போ உனக்கு முன்னாடியே அந்த பொண்ணை தெரியுமா என்ன.?” என அவினாஷ் அவன் வாயாலே உண்மையை வாங்க பேச,
“ஹான்,அதெல்லாம் எனக்கு தெரியாது ” என வேகமாக பதில் வரவும் அவினாஷ் சத்தமாக சிரித்து விட்டான்.
“சரி உனக்கு அந்த பொண்ணை தெரியாமலே இருக்கட்டும். ஆனா நீ அங்க தான் வேலை பார்க்கணும் புரியுதா. அந்த கம்பெனி தான் இப்போதைக்கு நாராயணன் அப்பாவோட ஆப்போசிட் கம்பெனி டா ” என்க,
அவனின் புருவங்கள் இரண்டும் சிந்தனையின் அடிப்படையில் சுருங்கியது.
“உனக்காக தான் மச்சி இதை பண்றேன். எதையும் காலம் தாழ்த்தி செய்யாதே டா. நீ புரிஞ்சிப்பன்னு நினைக்கிறேன்” என்று அவி ஃபோனை வைத்து விட்டான்.
‘உனக்காக தான் மச்சி இதை பண்றேன் ‘ என்ற வாக்கியம் அவனை யோசிக்க வைத்தது.
அபிநந்தனுக்கு ஏனோ மனது உறுத்தியது ,தனது இரகசியம் ஏதோ ஒன்றை அவன் அறிந்துள்ளான் என்பது. ஆனால் அது என்ன விடயம் என்பது தான் புரியாமல் இருந்தது.
ஒரு வேலை நிரலியை பற்றி தெரிந்து இருக்குமோ.? அல்லது ப்ரணா அண்ணாவின் சத்தியம் பற்றி ஏதும் தெரிந்து இருக்குமோ.? என அவன் மனது பலவாறாக சிந்திக்க தொடங்கியது.
இத்தனை சிந்தைகளுக்கு நடுவிலும் அவன் முடிவு செய்து விட்டான் இங்கே வேலைப்பார்ப்பது என்று..
அதற்கு முழு காரணமும் நிரலி தான். அவனால் பாதிக்கப்பட்ட பலரில் அவளும் ஒருவளாகிற்றே..
இந்த மூன்று வருடத்தில் , நிரலி அவினாஷ் இசை என யாரை பற்றியும் அவன் மனம் சிந்திக்கவில்லை. அவனின் எண்ணம் முழுவதும் ப்ரணா அண்ணா மட்டுமே இருந்தான்.
அபிநந்தனை பொறுத்தவரை ப்ரணா அவன் உயிர் ஆவான். அவன் வாழ்க்கையை வண்ண மையம் ஆக்கியவன். அவன் இல்லையேல் தான் இப்படி இருந்திருப்போமா என்று கூட அவனுக்கு தெரியவில்லை.
தனக்கு இப்படி ஒரு அண்ணனை கொடுத்த கடவுளுக்கு ஒரு நன்றியை வைத்தவன் , நிரலியின் அறையை நோக்கி நடையிட்டான்.
அதேநேரம்,நிரலியின் அறையில் அவளின் வரவேற்ப்பாளர் சிறு பயத்துடனே அவள் முன்பு நின்று கொண்டிருந்தாள்.
அவள் மனமோ ,’இந்த ஹேன்சம் எங்க போய் தொலைஞ்சாருன்னு தெரியலையே’ என நினைத்தபடி நின்றிருந்தாள் அவள்…
“என்ன இன்னும் அந்த புது ஜாயினி வந்து என்கிட்ட லெட்டர் கொடுக்கலை ” என அவள் முன் நின்ற ரிசப்ஷனிஸ்டினிடம் கத்த,
“மேம் நான் லெட்டர் கொடுத்து அனுப்பியே பத்து நிமிஷத்துக்கு மேல ஆச்சி மேம் .ஆனா ஏன் இன்னும் வரலைன்னு தான் எனக்கு தெரியலை” என பவ்யமாக சொல்ல,
“ஏது,இங்க நாலு மாடியில வழி தெரியாம போக போகுதா”என கண்டன பார்வை பார்த்த நிரலி ,
“உன்னால எனக்கு பத்து நிமிஷம் வீணா போனது தான் மிச்சம் ” என சிடுசிடுத்தவளை கண்டு எதுவும் பேசாது அமைதியாக நின்றாள் அந்த பெண்.
“என்ன அமைதியா நிக்கிற ,அந்த பேர்சன் யாருன்னு பார்த்து வேலைக்கு வேணாம்னு சொல்லிடு . இப்படி பட்ட இரெகுலர் பேர்சன்ஸ் யாரும் இந்த கம்பெனிக்கு தேவையில்லை ” என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே ,
“எக்ஸ் க்யூஸ் மீ மேம் ,மே ஐ கமின் ” என நாகரிகமாக கதவை தட்ட,
” எஸ் கமின் ” என்ற நிரலி தன் வேலையை பார்த்த படி இருந்தாள்.
உள்ளே வந்துக் கொண்டிருந்தவனை இமைக்காமல் பார்த்தாள் அந்த பெண்.
‘ஏன் சார் இவ்வளவு லேட் ‘ என கண்ணாலே அந்த பெண் கேட்டிட,
அது எதுவும் தெரியாமல்,ஏதோ முக்கியமான ஃபைலை பார்த்த படி இருந்த நிரலியிடம் ” மேடம் ” என்று அந்த லெட்டரை நீட்டினான் அபி.
தனக்கு முன் யாரோ பேப்பரை நீட்டுவது புரிந்து நிமிர்ந்து பார்க்க , அங்கே ஆறடியில் கோதுமை நிறத்தில் ,அடர்ந்த புருவங்கள் கொண்டு பார்க்கவே அழகனாய் இருந்த ஆண்மகனை பார்த்து புருவம் சுருக்கினாள் நிரலி.
“யார் நீ.?”
“மேம் , இவர் தான் அந்த புது ஜாயினி ” என அந்த பெண்ணிடமிருந்து பதில் வரவும் அவளை முறைத்து பார்த்தாள்.
“நீ என்ன இவனோட டப்பிங் ஆர்டிஸ்டோ ,சார் கிட்ட கேட்டா மேடம் ஆன்சர் பண்றீங்க ” என சீற,
அந்த லெட்டரை பிடுங்கிய நிரலி , அதை அவன் முன்னாடியே கிழித்து ” உன்ன மாதிரி பஞ்ச்வாலிட்டி இல்லாத ஆளுங்களை எல்லாம் நாங்க எங்க ஆஃபிஸ் கேட்டை கூட தொடவிடுறது கிடையாது “என அதை அவன் மீதே தூக்கி எறிந்தாள்.
“கெட் லாஸ்ட் ” என இருவரையும் பார்த்து கத்த,
எதுவும் பேசாது “சாரி மேம் ” என்று திரும்பி நடக்க தொடங்கினான் அபிநந்தன்.
நிரலி கிழித்த பேப்பரில் ஒரு துண்டு சீட்டு அவள் கண்ணில் தென்பட , அதை பார்த்தவள் உடனே சொடக்கிட்டாள்.
அவளை திரும்பி பார்த்த அபியிடம் “ஹலோ மிஸ்டர் உன்னோட பேர் என்ன.?” என்று புருவம் உயர்த்த,
கன்னக்குழி தெரிய அழகாய் அடுத்தவரின் மனதை கொள்ளை கொள்ளும் விதமாக சிரித்த அபி” அபிநந்தன் ” என்றான்.
அந்த பெயரில் அவள் கண்கள் இரண்டும் சிவப்பேறி விட ஒரு நொடியேனும் தனக்குள்ளே யோசித்தவள் , தனது வரவேற்பாளரை நோக்கி ” சீக்கிரம் இவருக்கான இன்னொரு ஜாயினி லெட்டரை டைப் பண்ணி எனக்கு மெயில் பண்ணு” என்றாள் அவசர அவசரமாக.
அதில் சிரித்த படி இருந்த அபியின் இதழ்கள் மேலும் விரிந்தது.
அதனை கண்டு நிரலியும் தான் சிரித்தாள் .ஆனால் அதில் ‘ உன்னை வைத்து என் ஆத்திரத்தை தீர்த்து கொள்ள போகிறேன் ‘ என்ற உள்ளர்த்தம் இருந்தது.
அந்த பெண் வரவேற்பாளர் , வேகமாக அவள் இடத்திற்கு சென்று அவனுக்கான ஜாயினிங் லெட்டரை டைப் செய்தாள்.
வெளியே இருந்த இருக்கையில் அமர்ந்த படி , தன் மொபைலில் தங்கை ஏற்றி வைத்திருந்த கேண்டி க்ரஷை விளையாட தொடங்கினான்.
அடுத்த பதினைந்து நிமிடத்திலே அவனுக்கான ஜாயினிங் லெட்டர் ரெடியாகி விட,
அதனை பெற்றுக் கொண்ட அபி , அவளிடம் கொடுத்து கையொப்பம் வாங்கியவன் , அவளை பார்த்து புன்னகைத்த படியே வெளியேறிவிட்டான்.
அன்றைய தினம் முழுவதும் ஏனோ ஒரு வித பரவசத்துடனே சுற்றி திரிந்தான் அபிநந்தன்.
வேலை கிடைத்த மகிழ்ச்சியில் தன் குடும்பத்தோடும் அவினாஷோடும் வெளியே சென்று மதிய உணவை முடித்து கொண்டவன் , அவினாஷை அனுப்பி விட்டு இருவரோடும் சென்னையை சுற்றி பார்க்க சென்றான்.
அன்றைய இரவு ஒரு விதமான குதுகளத்தோடே அவர்கள் மூவருக்கும் சென்றது.
அடுத்த நாள் சீக்கிரமே எழுந்த அபிநந்தன் , காலையிலே மாடியில் நடைபயிற்சி மேற்கொள்ள தொடங்கினான்.
மனதளவில் மட்டுமல்லாமல் உடலளவிலும் தன்னை பலப்படுத்திக் கொள்ள நினைத்தான்.
அடுத்த ஒரு மணி நேரத்தை தன் உடற்பயிற்சிக்காக செலவிட்டவன் , முதல் நாள் ஆஃபிஸிற்கு கிளம்ப ஆயத்தமானான்.
அபி இங்கே வந்ததும் அறிந்து கொண்டான் ,அவர்களின் இரண்டு கோடி டென்டர் கைவிட்டு போய்விட்டது என்று.. அதை கொண்டே ஆட்டத்தை ஆரம்பிக்க நினைத்தான் .
அவனது வேலை இங்கே தான் என்று முடிவெடுத்துடன் ” AN Constructions ” நிறுவனத்தை பற்றி அறிந்து கொண்டான்.
இது நிரலி தன் சொந்த காலில் நின்று சுயமாக தொடங்கிய தொழில் . அதுவும் யாரின் உதவியும் இல்லாமல் அவளே சிறிதாக தொடங்கி , குட்டி குட்டி ப்ராஜெக்ட்களை செய்தவள், அடுத்த ஒரு வருடத்திலே அவளின் வளர்ச்சியை கண்டு பெரிய பெரிய நிறுவனம் முதற்கொண்டு அவளிடம் வேலையை கொடுத்தனர்.
அதை தொடர்ந்து தன் தந்தையோடே பாட்னர்ஷிப் வைத்தவள் , இப்போது அவளின் சாம்ப்ராஜியத்தில் விருட்சமாக வளர்ந்து நிற்கின்றாள்.
சவுந்தர்யாவிடம் கை விட்டு போன ப்ராஜெக்ட் தான் இப்போது நிரலி கையில் எடுத்திருக்கும் ப்ராஜெக்ட்.
அவளின் கண்காணிப்பில் தான் அங்கே கன்ஸ்ட்ரக்ஷன் ஒர்க் தொடங்கியிருந்தது.
இதை எல்லாம் அறிந்து கொண்டவனுக்கு தெரியவில்லை ,அவள் யாரோட பெண் என்று..
முதல் நாள் வேலை என்பதால் சீக்கிரமாகவே ஆஃபிஸ் வந்த அபியை கண்ணெடுக்காமல் பார்த்தாள் அந்த பெண்.
அவளை பார்த்து புன்னகையுடன் ” குட் மார்னிங் ” சொன்னவன் தனக்கான இடம் எது என்று அவளிடம் கேட்க,
“மேடம் ரூம்ல தான் உங்களுக்கான அறை இருக்கு ” என்று பதில் தந்தவள் அவனுக்கான டேகை நீட்டினாள்.
” தேங்க் யூ ” என அதை வாங்கி கொண்டவன் மேல் தளம் நோக்கி நடையிட்டான்.
நேற்று மாதிரியே தான் , இன்றும் அந்த புகைபடத்தை கண்டான். நேற்று போல் அதிர்ச்சியாகமல் அவளது வளர்ச்சியை எண்ணி பூரித்து போனான்.
அவளது பிஏ என்று வேலைக்கு சேர்ந்து விட்டாலும் , என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்திருக்க , அப்போது தான் கதவை திறந்து உள்ளே வந்த நிரலி அவனை பார்த்து “என்னோட ரூம்க்கு வாங்க ” என்று விட்டு அவளது அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
அவள் உள்ளே சென்ற சிறிது நேரத்திலே ஒரு நோட் பேடுடன் உள்ளே சென்றவன் , அன்றைய நாளில் செய்ய வேண்டிய வேலையை அவள் அடுக்க அவனும் அதை எல்லாம் நோட் செய்து கொண்டான்.
“உங்களோட பையோ டேட்டா பார்த்தேன். நீங்க சிவில் இன்ஜினியரிங் படிச்சிருக்கீங்க .அப்புறம் ஏன் இந்த பிஏ வேலைக்கு ஜாயின் பண்ணி இருக்கீங்க ” என நிரலி தன் வேலையை பார்த்தவாறே அவனிடம் கேட்க,
அவனோ எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கவும் , நிமிர்ந்து பார்த்த நிரலி புருவம் சுருக்கி,
“என்ன கேள்வி கேட்டா பதில் சொல்ல தெரியாதா உங்களுக்கு.?”
“கேள்வி எனக்கானதுன்னு போது , நீங்க என்னைய பார்த்து கேட்டா மட்டும் தான் பதில் சொல்ல முடியும் மேம். லேப்டாப் பார்த்து கேட்டாலாம் சொல்ல முடியாது ” என சாதாரணமாக சொல்ல,
“என்ன ஆண் என்கிற திமிரா “
“இதுல திமிரு எங்க இருந்து வந்துச்சி சொல்லுங்க. பிடிக்குதோ பிடிக்கிலையோ சக மனுஷனுக்கு கொடுக்க வேண்டிய மரியாதைய கொடுக்கிறதுல எந்த ஒரு தப்பும் இல்லையே மேம் ” என்றவன்
“சிவில் இன்ஜினியரிங் படிச்சிருந்தா ,அந்த வேலைக்கு தான் போகனும்னு இல்லையே. எந்த வேலையா இருந்தா என்ன அதுக்கு உண்மையா இருந்தா போதும் மேம் “
“என்ன பாய்ன்டா பேசுறதா நினைப்போ ” என்றவளின் முகம் கடுகடுத்தது.
அவளுக்கு இவனின் பேச்செல்லாம் அவனை ஞாபகப்படுத்தியது போலவே இருந்தது.
“நீங்க சொன்னதை எல்லாம் நோட் பண்ணிட்டேன் மேம் .இப்போ போய் என்னோட வேலையை பார்க்கலாம்னு நினைக்கிறேன் ” என்று அவ்விடத்தை விட்டு வெளியேறினான் அபிநந்தன்.
போகும் அவனையே வெறித்து பார்த்தவளுக்கு , அவன் மீது கோபமாக வந்தது. தன்னை எதிர்த்து ஒருவன் அதுவும் தனக்கு கீழ் வேலை செய்பவன் பேசியதை அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை.
அந்த கோபத்தை நிரலி வேலையில் தான் காட்டினாள்.
சந்தோஷம் கோபம் வருத்தம் என எதுவாக இருந்தாலும் அதை அவள் யாரிடமும் பகரிந்து கொள்வதில்லை. அதை எல்லாத்தையும் வேலையில் காட்ட துவங்கியிருந்தாள். அவளின் இந்த தீரா உழைப்பு தான் அவளின் இந்த வளர்ச்சிக்கு காரணம்.
அடுத்தடுத்து வந்த நாட்களில் நிரலிக்கு வேலைகள் தலைக்கு மேல் இருக்கவும் அபிநந்தனிடம் வாய் கொடுக்கவில்லை.
அவனின் மீது அவளுக்கு நம்பிக்கை இருந்ததோ என்னவோ , அவனின் பொறுப்பில் அந்த இரண்டு கோடி ப்ராஜெக்டை கொடுத்திருந்தாள் நிரலி.
அவனும் அதை சிறப்புற செய்து கொடுக்க வேண்டும் என்று அதில் கவனத்தை வைத்திருந்தான்.
இங்கே தாரணி வீட்டிலே அடைந்து கிடப்பதால், அவளுக்கு போர் அடிக்க தன் அத்தான்களிடம் பேசலாம் என்று முதலில் விக்ரமனிற்கு அழைப்பு விடுத்தாள்.
சிறிது நேரத்திலேயே எடுத்த விக்ரமன் ,” தாரணி குட்டி எப்படி இருக்கீங்க.? அங்க போனதுல இருந்து ஒரு போன் கூட பண்ணலை நீ ” என செல்லமாக கோபித்து கொள்ள,
“அச்சோ அத்து 1, எனக்கு இங்க நிறைய வேலை இருந்ததா அதான் உங்க கிட்டலாம் பேச முடியாம போய்டுச்சி ” என்க,
“ஹோ! அப்படி என்ன மேடம் வேலை பார்த்தீங்க.?”
“அதுவா அத்து 1 , காலையில எழுந்து சாப்பிட்டு தூங்கி, மதியம் சாப்பிட்டு திரும்ப தூங்கி எழுந்து டீவி பார்த்து நைட் அண்ணா கூட பேசிய படியே சாப்பிட்டு தூங்குறதுன்னு, பெரிய வேலையா பாக்குறேன் அத்து ” என ஏதோ பெரிய வேலை செய்தது போல் சொல்ல,
” ப்பா , என்னோட செல்ல குட்டி எவ்வளோ பெரிய வேலை எல்லாம் செய்றாங்க ” என பெருமையாய் கூறியவன் அடுத்த சில மணித்துளிகள் அவளோட மொக்கை போட்டான்.
அந்த நேரம் பார்த்து தன் வேலையை முடித்துவிட்டு சரோஜினியை பார்க்கலாம் என்று வந்த அவினாஷ் கண்ணில் அத்தான் அத்தான் என்று கொஞ்சி பேசும் தாரணியே முதலில் கண்ணில் பட்டாள்.
எப்போதும் தன்னை கண்டதும் சீண்டி பேசுபவள் , இன்று தன்னை கண்டுக்காது ஃபோனில் கதைப்பவளை கண்டு ஏனோ அவனுக்கு கோபம் வந்தது.
‘இங்க ஒரு ஆள் வந்திருக்கிறது கூட தெரியாம அப்படி என்ன தான் அத்தான் அத்தானு கொஞ்சி பேசுவாளோ ” என உள்ளுக்குள் அவளை திட்டியவன் வெளியே தாரணியை பொசுக்குவது போல் பார்த்து வைத்தான்.
“அத்தான் , இங்க சகுனம் சரியில்லை. ஒரு நிமிஷம் இருங்க நான் உள்ள வந்திடுறேன் ” என அவனை ஒரு பொருட்டாக கூட மதியாமல் உள்ளே சென்றாள்.
‘நான் வந்தது இந்த குட்ட வாத்துக்கு சகுனம் சரியில்லாத நேரமா ‘ என முணுமுணுத்தவன் சரோவை பார்க்க உள்ளே சென்றான்.
அதன் பின் தாரணியை மறந்த அவினாஷ் சரோஜினியுடன் அமர்ந்து கதையளக்க , அதை உள்ளுக்குள் இருந்து பார்த்த தாரணிக்கு கோபம் பொங்கியது.
“சீக்கிரமாவே இவனை க்ளோஸ் பண்ணனும் போலையே ” என நினைத்து கொண்டு அடுத்த வேலையை தொடர்ந்தாள்…
For discounts in the shop section, please contact mspublications1@gmail.com Dismiss