அன்பிலார் – Yagnya

eiLJ1RT77652-14da6e02

1

 

“ஆரம்பிக்கலாமா!?” என்றவாறே அனைவரையும் ஓர் பார்வை பார்த்துவிட்டு அந்த பச்சை நிற போத்தலைச் சுற்ற முற்பட்டவனின் கை மற்றொருவனின் கையால் எதிர்பாரா தருணத்தில் நிறுத்தப்பட்டது. 

முதலாமவனின் விழிகளின் குழப்ப வீச்சுக்குத் தடுத்தவன் கேலிச் சிரிப்பொன்றை அர்த்தமாய் ஆரம்பித்துவிட்டு அவர்களுள் ஒருத்தியாய் ஓரத்தில் அமர்ந்திருந்தவளில்  ஓரவிழிப் பார்வையைத் தேக்கியபடி, 

 

“கேள்வியெல்லாம் பார்த்து கேளுங்கப்பா!! அதிசயமா விளையாட வந்த பச்சை மண்ணு நம்மள மாதிரி இல்ல” என்றவன் அந்த “நம்மள மாதிரி இல்ல”யில் கொடுத்த அழுத்தத்தில் மற்றனைவரிடத்திலும் சிரிப்பொலி. அவளைத் தவிர. அவனால் பச்சை மண்ணென்று குறிப்பிடப்பட்ட அவளைத் தவிர. 

சட்டென ஓர் விலகலுணர்வு உள்ளுக்குள். 

 

அவன் நம்மள மாதிரி இல்லை என்று எதைக் குறிப்பிட்டானென்று உணர முடிந்தது. அதற்குச் சிரிப்பதா அழுவதா இல்லை கடப்பதா என்றுதான் தெரியவில்லை.  ஒவ்வொரு முறையும் இவள் மனம் ஓட்ட விழையும்பொழுது வெட்டுவது இவர்கள்தானே. இப்பொழுது வெட்டியதுபோலவே.  

அவ்விலகல் உணர்வு அவள் விரல் நுனியைத் தீண்டுவதற்குள் நிகழ்பவையில் தடுக்கப்பட்டது. விளையாட்டைத் தொடங்கியிருந்தனர். 

ராட்டினமாய் சுற்றிய பச்சை போத்தல் அங்கிருந்த மற்றொருவனைச் சுட்டிக்காட்டியபடி சுருண்டுவிட்டது. 

 

“ஓ!!!!” என்ற ஆர்ப்பரிப்புடன் அவனிடம் கேட்டனர்.

 

 “Truth or dare!?” 

தீவிரமாய் சிந்திப்பதுபோலொரு பாவனை செய்துவிட்டு “Dare” என்று அவன் சிரிக்க இப்பொழுது அனைவரும் அவனுக்கு Dare கொடுக்க வேண்டியவளையே தீவிரமாய் கவனிக்கலாயினர். அவர்களிடத்தில் ஆர்வத்தின் சாயல் அபரிமிதமாய் இருந்தது. 

 

“இங்க இருக்கிற யாருக்கிட்டயாவது காதல் சொல்லனும்!” என்றதுதான் தாமதம் இப்பொழுது அனைவரிடத்திலும் உற்சாகம் உச்சத்தைத் தொட்டிருந்தது. கூடவே ஆர்வமும், விளையாட்டெனினும் அவன் யாரிடத்தில் சொல்லப் போகிறானென. எப்படிச் சொல்லப் போகிறானென.

 

அங்கிருந்த அனைவரையும் தன் நாடியைப் பிடித்தவாறே பார்வையிட்டவன் கடைசியில் இவளருகில் இருந்தவளைப் பார்த்து. 

 

“அங்க வரியா?” என்று அங்கிருந்த குட்டி விரிவுரை மேடையைச் சுட்டிக்காட்ட மறுபடியும் அதே “ஹோ!!” சத்தத்துடன் அவர்கள் மட்டுமின்றி அனைவரும் எழுந்து சென்றனர். 

 

இவள் மட்டும் நகரவில்லை. இவள் நகராததை யாரும் கண்டுகொள்ளவுமில்லை. இங்கு அமர்ந்திருந்தவள், அமர்ந்தவாறே கைகளை மட்டும் குறுக்காகக் கட்டிக்கொண்டு அவர்கள் அனைவரையும் வேடிக்கை பார்த்தாள். உள்ளுக்குள்ளே தாமாய் சிந்தனை பரவியது. 

 

‘நான் எப்படி காதல் சொல்லுவேன்?’ என 

மனதினுள் காட்சிப்படுத்த முயற்சி செய்தாள். 

 

அது ஏதோ ஒரு காட்டுப்பகுதிபோலும்.  அதுபோலத்தான் தெரிந்தது. கண்ணெதிரே நதியொன்று நல்லிசையாய் சலசலத்துக்கொண்டிருந்தது. பார்வையை மேலுயர்த்தினாள். பால் நிலாப் பொழிவு..  அருகில் இவளமர்ந்திருந்த அந்த குறுகலான மரப்படிக்களில் இவளுக்கு அடுத்தப்படியில் அவன். 

 

அவன் அக மென்மை அந்நிலவுக்குச் சவால் விட்டுக்கொண்டிருக்க பால் சிரிப்பொன்றுடன் இவளையே பார்த்திருந்தான் அவன். வழமை போல அச்சிரிப்பின் பால்மணம் அவள் மனம் தொட்டுத் தித்தித்தது. 

 

மெல்ல முறுவலித்தாள்… பின் 

 

“உனக்கொன்னு சொல்லவா?” என்று இவள் கேட்க அதே, முறுவல் மாறா முகத்துடன், “மறுபடியும் கவிதையா?” என்று வினவினான். அவன் விழிகளில் ஆர்வத்தைத் தேக்கியபடி. 

 

அதை உணர்ந்தவள் “ஆம்” என மேலும் கீழுமாய் தலையசைக்க அவனோ,

 

“இந்த தடவை எதைப்பத்தி?” 

 

“ம்ம்… நம்மளப்பத்தி!?” 

 

“வாஹ்!! சொல்லேன்…” அதே புன்னகை!! 

 

“ம்ம்” இப்பொழுது அவளிடமும். 

 

சொல்லத் தொடங்கினாள்…

 

“நீ நிலா நான் நதி

ஒட்டவியலாதென்றறிந்தும் 

உன்னொளியை என்னடியாழத்தில் 

நிரைக்கிறேன்…

எந்நாழம் தொடுமோ இந்நிலா நேசம்?”

 

அவனையே பதிலுக்காகப் பார்த்திருந்தாள். இட வலமாய் தலையசைத்தவன், “ஏன் இவ்ளோ சோகம்?” 

“பிடிக்கலையா?” சிறுபிள்ளையின் இதழ் பிதுக்கல் இவளிடம். 

 

“பிடிச்சிருக்கு!! ரொம்பவே!! ஆனா…”

 

“சரி அப்போ நீ சொல்லு” 

 

கள்ளச் சிரிப்பு இவளிடம்.

 

அவன்…

 

“நான் நிலவல்ல!!

நீ நதி நான் ஒளி

அந்த நிலாப் பொழியுமென நீ ஏக்கங்கொள்ளும் அன்பொளி.. 

அந்நிலவின் பிம்பம்.. 

இந்நதியின் நிலா.. 

நீ கரையில்லா நதி..

நான் நிரந்தரமில்லா ஒளி.. 

நாம் முடிவில்லா கனா…” 

 

வார்த்தைகளில் மாறும் இவள் வதனத்தில்தான் அவன் கவனம் முழுதும். இவன் முடித்த பொழுது இருவர் கண்களிலும் மெல்லிய ஈரம்…  அடர்ந்த நேசம்… 

 

தலையசைத்து நிகழுக்கு வந்தாள். 

‘கொஞ்சம் ட்ரமாட்டிக்கா இருக்கே…’ மனம் முழுதாய் மலரவில்லை! 

 

‘வேறெப்படி…’ 

இப்பொழுதும் அதே இடம்… அதே நதி… அதே நிலா… அதே பால் சிரிப்பு… அதே நேசம்… ஆனால் இம்முறை சற்று வேறாய் இருந்தது இவள். 

 

மெல்லிய முறுவலொன்றுடன் அவனைப் பார்க்க அவன் நேசவிழிகளால் அவள் மனம் நெய்தான். அதே பால் சிரிப்பும் பழுதற்ற மனமுமாய் அவன். 

அவன் காதோர கூந்தலை மிக மென்மையாய் ஒதுக்கியவாறே, “இந்த நிலா, நதி,வீடு… எல்லாமே நல்லாருக்குல?” என்றாள். 

 

“உனக்கு பிடிச்சிருக்குதானே?” 

 

“ம்ம் நிறையவே!” என்றவள் மெல்லிய குரலில் “உன்னையும்” என்றாள். 

 

“என்ன?” கேட்டும் மறு முறை கேட்டுவிட வேண்டுமென்ற பேராவல் அவனிடம். 

 

அவனை உணர்ந்தவளாய், “எனக்கு யாருமில்லாத ரோட்டுல நிலா வெளிச்சத்துல உன் கைப் பிடிச்சு நடக்கனும்னு ஆசை” என்றாள் அவன் காதோர கூந்தலுடன் விளையாடியவாறே. 

 

“நாளைக்கு போகலாமா?” என்றவன் கேட்டதும் அவன் விழி நோக்கியவள், “எனக்கு எப்பவுமே போகனும்… கடைசிவரை…” 

 

க்ர்ர்ர்ர்ர்…. 

 

அவ்வகுப்பறையிலிருந்த மணியடித்ததில் நிகழ்காலத்திற்கு வந்தவள் அப்பொழுது தான் கவனித்தாள், அவர்கள் இன்னமும் ஏதோ அங்கு நின்று பேசிக்கொண்டிருந்தனர். மெல்ல எழுந்தவள் பையைத் தூக்கிக்கொண்டு கேள்வியாய் நோக்கிய ஒருத்தியிடம் கிளம்புவதாகச் சொல்லிவிட்டு வெளியேறினாள். 

 

 

2

அவள் அறையினுள் நுழையும்பொழுதே அவள் விழிகளிரண்டும் அவனுக்காய் அலைபாய உள்ளே நுழைந்தவள் திரும்பாமல் கதவடைக்க அவள் நினைத்ததுபோலவே கதவு மறைவில்  நின்றிருந்தவன் அவளை பின்னாலிருந்து குட்டி துள்ளலுடன் அணைத்துக்கொண்டான். “உனக்காக எவ்வளவு நேரமா காத்துட்டிருக்கேன் தெரியுமா?” செல்ல சிணுங்கலுடன். 

 

“இன்னைக்கு நேரமாகும்னு சொன்னேனே…” என்று மொழிந்தாலும் அவள் இதழ்களிலும் சிறு புன்னகை. அவள் ஓரெட்டு எடுத்து வைக்க அவன் அணைப்பை உடைக்கவில்லை. அவனும் அவளுடனே அவளை பின்னிலிருந்து அணைத்தபடியே நடக்க, அங்கிருந்த நாற்காலி ஒன்றில் தனது பையைப் போட்டவள் அப்படியே ஒருக்களித்தவாறே படுக்கையில் விழுந்தாள். அவனும். சற்று நேர மௌனம் அவளிடம். பின்னிலிருந்து அணைத்திருந்ததால் அவள் முதுகுபுறமே அவனுக்குத் தெரிய சற்றிற்கெல்லாம் அவளிடம் இன்னும் நெருங்கி தலையை மட்டும் உயர்த்தி கன்னங்கள் மென்மையாய் ஸ்பரிசிக்க அவள் முகம் பார்க்க முயன்றான்.  

 

அவள் முகத்திலும் அதே மௌனம். 

 

“என்ன யோசிக்கிற?” என்றவனின் கேள்விக்குக் கொஞ்ச நேரத்திற்கு அவளிடம் எந்த பிரதிபலிப்பும் இருக்கவில்லை. ஆனால் அவன் அப்படியே, அவள் முகம் பார்த்துக்கொண்டே அமைதியாய் இருந்தான். சில கணங்கள் கழித்து தலையை லேசாய் திருப்பி அவன் முகம் பார்த்தவள் எழுந்தமர அவனும் தானும் அமர்ந்தவாறே அவளை கவனிகளானான். 

 

“ஒன்னுமில்லை… சும்மாதான்” என்றவள் அன்றைக்கு நடந்தது… “அவன்” அவளைப் பற்றி அப்படிச் சொன்னதென அனைத்தையும் கொட்டித் தீர்த்தாள். கவனித்துக்கொண்டிருந்த அவன் பதிலென எதுவும் வாய்மொழியாய் சொல்லவில்லை… அவளை மெல்ல அணைத்துக்கொண்டான். அதைவிட மென்மையாய் அவள் முதுகை நீவிக் கொடுத்தான். 

அவளுக்கு அது தேவையாய் இருந்தது. சொல்லப் போனால் அது மட்டும்தான் தேவையாய் இருந்தது. 

 

அவளுக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. இன்று “பச்சை மண்” என விளித்த இவன்… இவன் இப்படி விளித்ததற்கான காரணம் என எல்லாம் நினைவில் இருக்கின்றன…  

 

அது நடந்து சில மாதங்களிருக்கும். அதுவும் இதேபோலத்தான். ஏன், இதே விளையாட்டுதான் அன்றும் விளையாடினர். அவன்தான் இவளை விளையாட அழைத்தது. சொல்லப்போனால் அந்த கல்லூரியிலேயே அவள் ஓரளவு ஒட்டி பேசும் ஆள் அவனொருவன்தான். பேனாவை சுழட்டிவிட்டு காத்திருக்க அது சரியாய் இவளைச் சுட்டிக்காட்டியபடி நின்றது. இவளிடமும் இப்பொழுது அதே கேள்வி கேட்கப்பட்டது. 

 

“Truth or dare” என

 

இவள் “Truth” எனவும் சிறு குழப்பம் மற்றவரிடையே, என்ன கேட்கவென… 

பிறகு கேட்க வேண்டியவளுக்குக் கேள்வி கிடைத்துவிட  இவளிடம் கேட்டாள், “உன் க்ரஷ் யாரு? பிரபலம்னு இல்லாம…” 

இவளுக்குக் கேள்வி புரிந்தாலும் தெரியவில்லை. வெகு சிலரை… முகம், பெயரென எதையும் நினைவில் இல்லாத வெகு சிலர் அவளுக்கொரு நல்லுணர்வைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இவள் கேட்கும் ஈர்ப்பு… 

 

“அப்படி எதுவுமில்லயே…” என்று இவள் சொல்லிய மறுகணமே “ஓ…..” என்ற அதிருப்தியின் ஒலி பரவியது அங்கே… 

 

இதோ அவளை விளையாட அழைத்த அவனேதான், “நாங்கலாம் ஏதும் நினைச்சுக்க மாட்டோம்… சும்மா சொல்லு” என்றான். 

 

இவளுக்கு உண்மையில் என்னவோ போலானது. அவளுக்கு அப்படியொன்று இருந்திருந்தால் நிச்சயம் சொல்லியிருப்பாளே. அவளுக்குத்தான் அது என்னவென்றே தெரியவில்லையே… அதைச் சொன்னாலும் இவர்கள் யாரும் ஒத்துக்கொள்ளப் போவதில்லை… அவள் சொல்லப் போவதுமில்லை…  

 

“நம்பாட்டியும் அதான் உண்மை. என்னோடதெல்லாம் அஞ்சு ஸெக்கண்ட் க்ரஷ்… ” என்றுவிட அவளை நம்பாத பார்வை ஒன்று பார்த்தவன் இன்று அதை நினைவில் வைத்து அப்படிச் சொல்லியிருக்கிறான். 

 

அவளுக்கு நன்றாய் நினைவில் இருக்கிறது. அன்று அவள் சொன்னதை எவரும் நம்பவில்லை. அவளும் அதைப் பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை. ஏனெனில் எவருக்குப் புரியப்போகிறது… இத்தனை காலமும் அவள் அவளுடனே போராடிக்கொண்டிருப்பது… 

 

நினைவுகளிலிருந்து மீண்டவள் அடுத்தடுத்த வேலைகளில் மூழ்கிப்போனாள். சற்று நேரத்திலெல்லாம் அம்மாவும் தங்கையும் வந்துவிட மற்ற நேரம் அனைத்தும் அப்படியே கடந்தன… 

 

மணி இரவு பத்து இல்லை பத்தரை இருக்கக்கூடும். இவளுக்குத் தொண்டை வறண்டு கிடந்தது. நெஞ்சில் வேறு சாப்பிட்டது ஒரு மாதிரி இருந்தது. தண்ணீர் போத்தலைத் தேடினால் அது ஏற்கனவே வடிக்கப்பட்டிருந்தது. அதைத் தூக்கிக்கொண்டு தண்ணீர் பிடிக்கச் சென்றாள். அதற்குளெல்லாம் அடுக்களை விளக்கு அணைக்கப்பட்டிருந்தது. அது அவர்களது வழக்கம். விளக்கைப் போட்டுவிட்டு வாசலில் நின்றவாறே  பார்வையை நாலாபுறமும் சுழலவிட்டாள். அவள் பயந்ததுபோலவே சிலிண்டர் அருகில் பல்லியொன்று நின்றிருந்தது. இவள் தண்ணீர் பிடிக்கவேண்டுமெனில் அதைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். கிட்டத்தட்ட அந்த சிலிண்டருக்கு சில அடிகள் மட்டுமே தொலைவில் நின்றுதான் போத்தலை நிரப்ப நேரிடும். அது அவளால் முடியாது. வெளியே திரும்பியவள் அங்கிருந்தபடியே அம்மாவை அழைத்தாள். 

 

“ம்மா… தண்ணி வேணும்… இங்க பல்லி நிக்கிது” என்று இவள் சொல்லவும் 

 

“நான் இப்போதான் படுத்தேன்… உனக்கு மட்டுமா பல்லினா பயம்? எனக்கும் அதே பயந்தானே?” என்ற குரலில் சோர்வு. 

தங்கையை அழைத்துப் பார்த்தாள். அவளுக்குக் காதிலேயே விழவில்லைபோலும். 

திரும்பிப் போய்விடலாம்தான். ஆனால் இந்த நெஞ்சுவலியும் தொண்டை எரிச்சலும் நேரம் ஆக ஆகத் தண்ணீருக்காய் ஏங்கியது. அது மட்டுமின்றி இருவரின் மறுப்பிலும் அவள் மனம் ஏனோ  அடிபட்டுப்போனது. 

 

‘எனக்கு நான்தான் செய்யனும்’ என்று சொல்லிக்கொண்டவளின் பாதம் நகர மறுத்தது. இரண்டெட்டு உள்ளே வைப்பதும் பின் வெளியேறுவதுமாய் இருந்தவளுக்கு அழுகை வராதக்குறை. இதயம் வேறு தாறுமாறாய் எகிறியது. ஒருகட்டத்தில் எப்படியோ உள்ளே சென்றவள் ஒரு புறம்  தண்ணீரை நிரப்பியவாறே மறுபுறம் அந்த சிலிண்டர் பக்கத்தில் நின்றிருந்ததிலுமாக கவனம் பதிக்க முயன்றாள். மெல்ல மெல்லப் பார்வை வேறு மங்கலாகின… கால்களில் வலு குறைந்துகொண்டிருந்தது… உள்ளிருந்து உயிர் மெல்ல மெல்ல விலகுவது போலிருந்தது. வியர்க்கத் தொடங்கியது… மறுபுறம் உடம்பு சில்லெனச் சில்லிட்டது… தண்ணீரை நிரப்பியவள் விடுவிடுவென தன்தறைக்குள் நுழைந்துக் கொண்டாள். கால்கள் இருப்பதற்கான உணர்வே இல்லாமல் போக விடுவிடுவென மெத்தையிலேறி மடிந்தமர்ந்ததுதான் தாமதம். கண்களிலிருந்து சரசரவெனக் கண்ணீர் வழியத் தொடங்கியது. நெஞ்சு லேசாய் வலித்தது. இதயம் வெடித்துவிடுவதுபோல துடித்தது. மூச்சு விட வேறு சிரமமாய் இருக்க… உடல் மெல்ல நடுங்க தன்னைத்தானே நிதானப்படுத்த முயன்றாள். 

 

“என்னாச்சு?? என்னாச்சுடா? என்ன பண்ணுது?” என்று அவன் பதறியது… அவன் குரலென எல்லாம் ஏதோ தொலைதூரத்தில் கேட்பது போலிருந்தது. 

 

அவளது நடுக்கத்தைப் பார்த்துவிட்டு அவள் கையை தொட்டுப்பார்த்தவனுக்குப் புரிந்துவிட அவளை அப்படியே ஆதரவாய் அணைத்துக்கொண்டு தட்டிக்கொடுத்தவாறே, “ஒன்னுமில்ல… ஒன்னுமில்ல…” என்று மென்குரலில் அவள் செவியருகில் அவன் பேசிட… அவள் சாதாரணத்திற்குத் திரும்ப சில நிமிடங்கள் பிடித்தது. மெல்ல மெல்ல மூச்சு சீராக… அமர்ந்திருந்தவள் படுக்கையில் அப்படியே சரிந்தாள்.  

 

“எப்படிச் சொல்லுவேன் உனக்கு… என்னோட பயமும் உன்னோட பயமும் ஒன்னில்லைனு…” என்ற எண்ணமெழ அப்படியே விழி மூடிக்கொண்டாள். 

 

நள்ளிரவு… மணி ஒன்றையெல்லாம் எப்பொழுதோ தாண்டியிருக்கக்கூடும். எழுந்தமர்ந்தவள் பாட்டுக் கேட்கவென இயர்ஃபோன்ஸை காதில் மாட்டிக்கொண்டு சுவரில் சாய்ந்தமர்ந்துக் கொண்டாள்.  

 

யூட்யூபில் அத்தனையாய் பிரபலமாகியிராத ஆனால் அவளுக்கு அபிமானமான சில பாடல்களைத் தனியாக எடுத்து வைத்திருந்தாள். எப்பொழுதும் அதில் ஒன்றைக் கேட்கத் தொடங்கி பின் அதற்கடுத்து வேறென… இன்னொரு புது பாடலும் அவளதில் சேர்ந்துவிடும். அப்படிதான் அன்றும்.

 

 அவளது பாடல் தெரிவு எல்லாமே அப்படிதான். மனதில் யாரிடமும் சொல்ல முடியாது அடைத்துக்கிடக்கும் காயங்களைக் கீறி ஒற்றடமிடும் வகையிலான வரிகளைக் கொண்ட பாடல்கள். நாம் சொல்ல நினைத்து முடியாமல்… சொல்லத் தெரியாமல் தவிக்கும் உணர்வுகளை மற்றொருவர் வார்த்தைகளில் வடித்து இசையினில் இணைத்தால்…? அதே சமயம் மனதிற்கு இதமளித்தால்…? அப்படிப்பட்டவையில் ஒன்றைக் கேட்டுக்கொண்டிருக்கையில் கருத்து பிரிவில் முதலில் “ஹே!! இதை நீங்க வாசிக்கறீங்கனா உங்கட்ட ஒன்னு சொல்ல விரும்பறேன்… நீங்க ஸ்பெஷல்! நீங்க ஸ்ட்ராங்! இவ்வளவு தூரம் கடந்து வந்த வாரியர்! உங்களுக்கு என்னோட பெரிய ஹக்!!” என்ற கமெண்ட் ஈர்க்க அவள் அந்த கருத்து பிரிவைப் பார்க்கத்தொடங்கினாள். அத்தனை வலி… நம்பிக்கை… அன்பு… ஒரு கமெண்ட் உண்மையோ பொய்யோ, அதையெல்லாம் ஆராயாமல் அதற்கான ஆறுதல் வார்த்தைகள்… இது ஒன்றும் அவளுக்குப் புதிதல்ல… இதைப்போலப் பல இங்கும் கன்ஃபெஷன் பேஜ்களிலுமென்ன பார்த்திருக்கிறாள். 

 

அடையாளம் தெரியப்போவதில்லை என்றதும் மன வக்கிரங்கள் மட்டுமல்ல, காயா மனக்காயங்களும்கூட உடைப்பெடுக்கின்றன… 

 

அதையே வெறித்திருந்தவளுக்கு திடீரென ஒரு எண்ணம்…  

“நீ தூங்கலையா?” என்றவனிடம் மெல்ல முறுவலித்து அவன் மூக்கு நுனியில் முத்தமிட்டவள் ஃபோனை வைத்துவிட்டுப் படுத்தாள். வழமைபோல அவள் வலக்கரத்தை மட்டும் திறந்து நீட்டி வைத்துப் படுத்திருக்க… அவள் கை வளைவுக்குள் அடங்கியது அவனுலகம். 

 

“நாளைக்குச் சேலை கட்டிட்டு போனும்ல?” என்றவனின் சின்ன குரலுக்கு இவளது “ம்ம்ம்” பதிலானது. 

 

 

3

 

“இது எப்படி இருக்கு?” என்று வினவியவளுக்கு முகம் கொள்ளா புன்னகையொன்றுடன், 

 

“வாவ்!! செமையா இருக்கு இந்த ஸாஃப்ட் ப்ளூ கலர் சேலை உனக்கு…” என்றவனின் குரலிலிருந்த ஆர்வத்தில் அவன் முன்னுச்சி முடியை ஒரு “அப்படியா?” உடன் களைத்துவிட்டவள் பையில் தேவையானவற்றை எடுத்து வைக்கலானாள்.  

 

காலையிலேயே மற்ற வேலைகளை அனைத்தையும் விறுவிறுவென முடித்துவிட்டு இவளுக்குச் சேலை கட்டுவதில் சற்று உதவிவிட்டென வேலைக்குக் கிளம்பிய அம்மா கிளம்பும் முன் பல முறை “அழகா இருக்க!!” -களையும், தனது ஃபோனில் சில கோணங்களில் அவளையும் பதிந்தபின்னரே கிளம்பியிருந்தாள். இன்னும் பத்து நிமிடத்தில் இவளும் கிளம்பியாக வேண்டும். அதற்கான ஏற்பாடுகள்தான் போய்க்கொண்டிருந்தது. 

 

மறக்காமல் ஐடிக்கார்டை எடுத்து வைத்துக்கொண்டவள் அவனிடம் ஒரு வரேனுடன் கதவடைத்துவிட்டுக் கிளம்பிவிட்டாள்.  

 

அன்று அவர்கள் கல்லூரியில் Ethnic wear… வகுப்புகளென எதுவும் நடக்கப்போவதில்லை… பொதுவாக இதுபோன்ற எந்த விடயத்திலும் இந்த மூன்று வருடத்தில் பெரிதாய் அவள் கலந்துகொண்டதில்லை. ஆனால் முதல் முறையாய் வரத் தோன்றியது. வந்துவிட்டாள். 

“ஹே!! அழகா இருக்க!!” என்று வகுப்பினுள் நுழையும்பொழுதே உற்சாகக் குரலெழுப்பியவளுக்கு விரியப் புன்னகைத்து “நீ ரொம்பவே!!” என்றவள் அவளது வழமையான இடத்தில் சென்று அமர்ந்துகொண்டாள். அவ்வப்பொழுது யாராவது ஒரு பேராசிரியர் வந்து எட்டிப்பார்த்துவிட்டு சென்றதோடு சரி… இல்லாவிட்டால் வரும் ஆசிரியர்களும் ஏதேனும் கலகலத்துக்கொண்டிருக்கவென நேரம் இலகுவாகவே கழிந்தது. அனைவரும் சேர்ந்து படமெடுத்துக்கொண்டார்கள்.  சிலர் பாட்டுப் பாடினர். சிலர் விளையாடினர். நேரம் கடந்தது. 

 

இடைவேளை மணியடிக்கக் கழிவறைக்கு எழுந்து சென்றாள் இவள். சேலையை அங்கிருந்த கண்ணாடியில் ஒருமுறை பார்த்துவிட்டு இவள் சரி செய்துகொண்டிருக்கவும் அவளருகில் இருந்த கழிவறையை உள்ளே ஆளிருப்பதை அறியாமல் ஒருத்தி திறந்துவிட்டு, பிறகு அறிந்து பதறி “சாரி!! சாரி!!” எனத் தடுமாறுவதும் அதற்கு அந்தப்பக்கம் கதவு சட்டென அடைபடுவதுமாய் சில கணங்களே நடந்த அந்த நிகழ்வை முழுதாய் கவனித்துவிட்டவளின் மனம் விருட்டெனப் பின்னோக்கி சரிந்தது. 

 

பல வருடங்களுக்கு முன் இதே போலொரு சம்பவம் அவளுக்கும் நடந்திருக்கிறது. பள்ளிக்காலத்தில். அந்த வருடத்தின் கடைசி நாளன்று. இவளும் இதே போலத்தான் உள்ளே ஆளிருப்பது தெரியாமல் கதவைத் திறந்துவிட்டாள். அந்த கதவு வேறு ஏற்கனவே சரியான நிலையில் இல்லாது இருந்ததால் சுலபத்தில் திறந்துகொள்ள. சில கணங்களே ஆனாலும் அதை இவள் கவனித்துவிட்டாள். இவளுக்கு அது உரைக்கும் முன்பே இவளைக் கடந்து சென்ற ஒருத்தி இவளை இடித்துத் தள்ளிவிட, அதில் தெளிந்தவள் இடித்தவள் உரைத்த மன்னிப்பிற்குத் தலையை வேகமாய் ஆட்டிவிட்டு அதே பதட்டத்துடன் திரும்ப அதற்குள் கதவு அடைக்கப்பட்டிருந்தது. 

 

சில கணங்களே ஆனாலும் அதை இவள் பார்த்தாள்! இல்லை அது இவளது கற்பனையா? அப்படியிருக்க வாய்ப்பில்லை என்றது அவளுள் ஏதோ ஒன்று. அதே சமயம் அதற்குச் சாத்தியமில்ல என்றது இன்னொரு புறம். அதற்குக் காரணம் அந்த அறையினுள் இருந்தவள். அவள் இவளின் வகுப்புதான். எப்பொழுதும் சிரித்த முகமாய், மற்றவரையும் வயிறு வலிக்கச் சிரிக்க வைப்பவள் அவள்! அவளைப் பார்த்தாளே அனைவர் முகத்திலும் புன்னகை ஒட்டிக்கொள்ளும். அப்படியொரு புன்னகை அவளது புன்னகை!! அப்படிப்பட்ட அவளின் உட்தொடையில்தான் அந்த வெட்டுக்காயங்கள் இருந்தன… இவள் அதைப் பார்த்தாள்! அது நிச்சயம் தற்செயலாய் ஏற்பட்டதல்ல என்பது வரிசையாய் சிவந்து நின்ற தடங்களே சொல்லின… பல மாதங்களாய் அது நடக்கிறதென… எங்குக் கையில் கிழித்தால் தெரிந்துவிடுமோ… பதில் சொல்ல வேண்டிவருமோவென இது நடந்திருக்கிறதென்பதை புரிந்துகொள்ள முடியாதளவில்லை இவளுக்கு. சிலர் முடியை வெட்டுவதில்கூட வித்தியாசம் இருக்கிறதென்பதை உணர்ந்திருந்தவளுக்கு இதைப் புரியாமலா போகும்?… நன்றாய் புரிந்தது இது self harming என… அவளுக்கு உதவி தேவை என… ஆனால் அவளா இப்படி? எப்பொழுதும் சிரித்த முகமாய் வலம் வருபவளுக்கு இப்படியொரு பக்கமிருக்குமென யாரேனும் நினைத்திருப்பரா? மற்றவர்களை வயிறு வலிக்கச் சிரிக்க வைத்தவளுக்கு உள்ளுக்குள் வலித்துக்கொண்டே இருந்திருக்கின்றதென்று யாருக்குத்தான் தோன்றியிருக்கும்? 

 

எண்ணங்கள் அத்தன்பாட்டில் ஓடிக்கொண்டிருந்தது. இவள் அப்படியே அசையாமல் நின்றிருக்க வெளியில் வந்தவளோ அவளது ட்ரேட்மார்க் புன்னகையுடன் இவள் தோள்தட்டி ” அது பரவால்ல! நீ தெரியாமத்தானே பண்ண… அது மட்டுமில்லாம டோர் சரியில்ல… ஹாப்பி ஹாலிடேஸ்!!” என்று சென்றுவிட்டாள். அவளுக்கு இவள் கவனித்துவிட்டது தெரிந்திருக்கவில்லை.

 

இதோ, இப்பொழுதும் அவள் இவள் தோளைத் தட்டி சென்றது என்னவோ இப்பொழுது நடந்ததைப் போல இருக்கிறது. ஒருவேளை அது இன்றாய் இருந்திருந்தால் இவள் தோளைத்தட்டிய அவள் கரத்தை இறுகப் பற்றி ஒரு முறை அணைத்திருக்கக்கூடும்… அவளிடம் மனத் தடைகளை உடைத்து பேசியிருக்கக்கூடும்… ஆனால் அன்று இது எதுவுமே இவளுக்குத் தோன்றவில்லை… அவள் இவள் பார்வையிலிருந்து மறையும் வரையுமே… சற்று நேரங்கழித்தே உணர்வு பெற்றவள் அவளைத் தேடிச்செல்ல அவளோ எப்பொழுதோ கிளம்பியிருந்தாள். அதற்குப் பின் அவளை இவள் பார்க்கவேயில்லை. ஆம்! பார்க்கவேயில்லை. விடுமுறை முடிந்து வந்தபொழுது அவள் வேறு பள்ளிக்கு மாறிவிட்டதாய் மட்டும் தகவல் வந்தது… கொஞ்ச நாளில் அவள் இறந்துவிட்டதாகவும்… தற்கொலை செய்துகொண்டதாகவும்… ஏனென யாருக்குமே…ஏன் அவள் வீட்டிலிருப்பவருக்கே தெரிந்திருக்கவில்லை எனவும் இருவர் பேசிக்கொண்டதைக் கேட்க நேர்கையில் இவளில் ஒரு பங்கைப் பறிகொடுத்த உணர்வு… ஆயாசமாய் இருந்தது… தெரிந்தும் இவளால் எதுவுமே செய்ய இயலவில்லை என்று நினைக்கும்பொழுது இன்னும் வலித்தது.  

 

அவள் நிச்சயம் உதவிக்காய் அழுதிருப்பாள்!! யாரேனும் அவளை அவளிடம் இருந்தே காப்பாற்றுவாரென எதிர்பார்த்திருப்பாள்… எந்தவொரு தராசுமின்றி அவளுக்குச் செவி கொடுப்பாரென எதிர்பார்த்திருப்பாள்… ஏன்? எதற்கென கேட்காமல் அணைத்து ஆறுதலாய் இருக்க ஒருவர் வரமாட்டாரா என ஏங்கியிருப்பாள்… அவள் நிச்சயம் வாழ ஆசைப்பட்டிருப்பாள்… ஆம்! வாழத்தான் ஆசைப்பட்டிருப்பாள்… சாக நினைத்திருக்கமாட்டாள்… வலியையும் பிரச்சனைகளையும் முடித்துக்கொள்ள முடியாமல் அவளையே முடித்துக்கொண்டிருப்பாள்… சிரிக்கச் சிரிக்க பேசி தன்னை தன் சிரிப்புக்கடியிலேயே மறைத்துக்கொண்ட ஒவ்வொரு நொடியும் யாரேனும் “தன்னை” கண்டுகொள்ள மாட்டாரா? என்றே ஏங்கியிருப்பாள்…  அவள் உண்மையிலேயே போய்விட்டாளா? நிஜமாகவே போதுமிந்த வலியும் வாழ்வுமென அனைத்தையும் நிறுத்திவிட்டாளா? இத்தேனைக்காலம் அவளைப் பிடித்து வைத்திருந்த அந்த ஒற்றை நூலும் அறுந்துபோனதா?  

 

எங்கோ கடந்துவந்த ஞாபகம் “நான் இன்னும் உயிரோடா இருக்கிறேனா அது என் நாய்க்குட்டிக்காகத்தான். என்னை அவ வீடு முழுக்க தேடி தோத்துப்போறத நான் விரும்பல…” என்றது நினைவில் வந்து பிசைந்தது…  இது மரணத்தின் மீதான ஈர்ப்பில்லை… வாழ்க்கையின் மீதான வெறுப்பு… பிடிப்பின்மை… முயன்று சோர்ந்த வலி… 

 

“எக்ஸ்க்யூஸ் மீ” என்ற குரலில் நிகழ்காலத்திற்கு வந்தவள் ஒரு சாரியுடன் நகர்ந்து வழிவிட்டாள். 

 

சற்று நேரத்திலெல்லாம் கிளம்பியும் விட்டாள். நாளையிலிருந்து சாதாரண வகுப்புகள் தொடங்குகின்றன… வீட்டிற்கு வந்தவள் சேலையைக் களைந்துவிட்டு அதற்கான ஆயத்தங்களைச் செய்யலானாள். அதை முடித்து நிமிரவும் தினப்படி வேலைகளும், பேச்சுக்களுமென அந்த நாள் இரவை அடைந்தது. 

 

படுக்கையில் விழுந்தவளுக்கு நேற்று பார்த்தது நினைவு வர எழுந்துச்சென்று கணினித் திரைக்கு உயிரூட்டி பிறகு எண்ணங்களை உயிர்ப்பித்தாள். 

 

ஆம்! அவள் ஒரு எழுத்தாளர். அவ்வப்பொழுது சில இரவுகளைச் சேமிப்பவள்… நேற்று ஏதோ ஒரு போட்டி அறிவிப்பைக் கடந்து வந்தவளுக்கு திடீரென ஒரெண்ணம்… போட்டியில் கலந்துகொள்ள அல்ல… ஆனால் எழுத… எழுத வேண்டியதை எழுதிவிட வேண்டுமென்ற ஒரு உந்துதல்… தொடங்கினாள்… 

 

 

4

 

நான் அம்மு… 

நான் அம்மு. எனக்கு இப்போ வயசு பத்து. அப்பா ஒரு ஹீரோ. ஆமா! எல்லாரையும் மாதிரி எனக்கும் என் அப்பாவ அவ்வளோ பிடிக்கும். எந்தளவுன்னா அவருக்காக எதை வேணா செய்யறளவு?… எனக்கு பிடிச்ச செருப்ப நல்லாயில்லனு சொல்லிட்டு எனக்குப் பிடிக்காத ஒன்ன காட்டி இதை வாங்குவோம்னு சொன்னா அது பிடிக்காட்டியும் ‘ம்ம்’னு தலையாட்டிட்டு அது எப்பவாவது பிடிச்சுப்போகும்னு நம்பறளவு அவர பிடிக்கும். ஆனா… ஆனா அவருக்குத்தான் என்னைப் பிடிக்கவே மாட்டேங்குது! ஏன்னே தெரியலை நான் எவ்வளோ முயற்சி செஞ்சும் அவருக்கு என்ன பிடிக்கவே மாட்டேக்கு… எனக்கு அவர் பக்கத்திலேயே…ஒட்டிக்கிட்டே… இருக்கனும்னு இஷ்டம்… ஆனா நான் ஆசையா போய் அவர் பக்கத்துல நின்னாலே என்ன தள்ளிவிட்றுவாரு… “சருவிக்கிட்டே நிக்காத!!” னு அவர் தள்ளிவிடும்போதெல்லாம் சட்டுனு உள்ளுக்குள்ளே என்னவோ உடையும்…. அழுகை அழுகையா வரும்… ஆனா அப்படியொரு வீம்பு… யார் முன்னாடியும் மனசு வலிக்கெல்லாம் அழுததில்லை… அதனாலையோ என்னவோ நான் தனியா  அழுததுலாம் யாருக்கும் தெரியாமலே போயிடுச்சு… “என்ன ஏன் அப்பாவுக்கு பிடிக்கல?” “ஒருவேளை நான் ரொம்ப அசிங்கமா இருக்கேனா?” “எனக்கு எதுலையுமே டேலண்ட் இல்லைங்கறதாலையா?” ” நான் அதிஷ்ட்டமில்லைனா?” “ஒருவேளை நான் எதாவது தப்பு செஞ்சிட்டேனா?” “என்னை ஏன் யாருக்குமே பிடிக்க மாட்டேங்குது?” “எனக்கு மட்டும் ஏன் ஃப்ரெண்ட்ஸே இல்லை?” “உனக்கு என்ன பிடிக்கவே பிடிக்காதாப்பா?” “நான் என்ன செஞ்சா நீ என்ன திரும்பிப் பார்ப்ப??” “ஏன் கடவுளே என்ன மட்டும் இப்படி படைச்ச?…என்னை யாருக்குமே பிடிக்கல தெரியுமா? என்னையும் மத்தவங்களுக்கு பிடிக்கறா மாதிரி படைச்சிருக்கலாமே… எனக்குக் கஷ்டமா இருக்குபா… பேசாம என்ன உன்கூடவே கூப்பிட்டுக்கோயேன்…ப்ளீஸ்…” னு நான் படுக்கையோட ஓரத்துல வாய மூடிட்டு செவுத்த பார்த்து எத்தனையோ நாள் அழுது ஓஞ்சி கண்ண துடைச்சிட்டு தூங்கிருக்கேன்… ஆனா ஒரு தடவைகூட அந்த கடவுள் நான் சொன்னதை கேட்கவேயில்லை… நானும் சொல்றத நிறுத்தவேயில்லை… 

அம்மா…? தெரியலை…. 

 

 

நான் அம்மு. இப்ப எனக்கு வயசு பன்னிரண்டு. அப்பா ஒரு வில்லன். ஆமா! அவர் நிச்சயமா ஒரு வில்லன்… இல்ல அதுக்கும் மேல… நான் ஹீரோவா பார்த்த மனுஷன் மனுஷனாக்கூட இல்லனு தெரியும்போது அப்படி வலிக்குது உள்ளுக்குள்ள… நான் யாரோட அன்புக்கும் அரவணைப்புக்கும் ஏங்கித் தவிச்சேனோ அது எனக்கு என்னைக்குமே கிடைக்கப் போறதில்லை… ஆனா அதுக்காக இப்போ நான் கொஞ்சம்கூட வருத்தப்படலை… மனசு விட்டுப்போச்சு… நான் ஹீரோவா பார்த்த மனுஷன்… அவன் மனைவிய மனைவியா…இல்லை… மனுஷியாக்கூட நடத்தலைனு புரியும்போது எதுலையோ ஏமாந்துப்போன வலி… 

 

அம்மா… இத்தனை நாளும் என் கண்முன்னையே அடியும் மிதியும் அவமானமுமா கழிச்சிருக்கா… என் கண் முன்னாடியே குடிச்சிட்டு வந்தும்.. இல்லை குடிக்க காசு கேட்டும்னு அவ உயிர கொஞ்சம் கொஞ்சமா குடிச்சிருக்கான்… நானும் பார்த்துட்டே இருந்துருக்கேன்… ஆனா மனசுல எதுவுமே பதியலையோ? இல்லை பதிஞ்சும் அதை நான் கண்டுக்கலையோ? அவ ரா பகலா சம்பாதிச்சு கொண்டு வந்தத குடியும் ஆடம்பரமுமா செலவு செஞ்சவன் அவளுக்கு ஒருவேளை சாப்பாடும் நிம்மதியான தூக்கத்தையும்கூட விட்டு வைக்கலை… அவ நினைச்சிருந்தா எல்லாத்தையும் விட்டு ஓடியிருக்கலாம்… ஆனா அவ அப்படி பண்ணலை… அவ இருந்தா… எனக்காக அவ இருந்தா… எங்க நானும் நாளைக்கு ஏதோ ஒரு குடிகாரனுக்கு சம்பாதிச்சு கொட்டவேண்டி வந்துருமோனு இருந்தா… இப்பவும் அதே கடவுள்… ஆனா வேற மனு… மொதல்ல எல்லா வீட்டை மாதிரி எங்க வீட்லையும் எல்லாரும் சேர்ந்து சந்தோஷமா இருக்கனும்னு வேண்டினேன்… இன்னுமும் ஒரு நப்பாசை ஒட்டிக்கிட்டு கிடந்ததோ? இப்போதான் புரியுது… இது முழுசா உடைஞ்ச கண்ணாடி மாளிகைனு…  “கடவுளே…இது என்னைக்காவது மாறுமா? எனக்கு குற்ற உணர்ச்சி கொல்லுது… ஒருவேளை நான் கொஞ்சம் முன்னாடியே சுதாரிச்சிருந்தா… அவ பக்கத்துலயாச்சும் நின்னுருப்பேன்ல… நான் அவனுக்கு நல்ல பொண்ணாகனும்னு நினைச்சு அம்மாவுக்கு ரொம்ப மோசமான மகளாகிட்டேன்ல? நான்லாம் மனுஷியே கிடையாதுல? எப்படி நான் இவ்வளோ பண்ணதுக்கு அப்பறமும் அம்மாவுக்கு என்ன இவ்வளோ பிடிக்குது?? எப்படி அவளால என்னை ஏத்துக்க முடியுது?” 

 

அம்மா இப்படிதான் இருப்பாளா? அம்மா இப்படிதான் பேசுவாளா? அம்மாவுக்கு இதெல்லாம் பிடிக்குமானு ஒவ்வொரு நாளும் அம்மாக்கிட்ட நெருங்க நெருங்கதான் தெரியுது… நான் என் அவகிட்டயிருந்து எவ்வளவு தள்ளியிருந்துருக்கேனு… 

 

அம்மா என்னை பிறந்ததுல இருந்து பாக்கறா… ஆனா நான் அவள இப்போதான் பாக்கறேன்… 

 

 

நான் அம்மு. இப்போ எனக்கு வயசு பதினைஞ்சு. அம்மா ஒரு சூப்பர்ஹீரோ. ஆமா! சூப்பர்ஹீரோவேதான். போன வருஷம் ஒரு ஆக்ஸிடெண்ட்ல அவன் போய்ட்டான். அத்தனைக்காலம் அவனால அனுபவிச்ச வலினாலையோ என்னவோ அவன் போனது வலிக்கவேயில்ல. ஒருத்தரோட இன்மை கூட வாழ்ந்தவங்களுக்கு  நிம்மதியுணர்வ குடுக்குதுனா அந்தாள் எப்படிப்பட்ட நரகத்த காமிச்சிருக்கனும்?… நாங்க வீடுகூட மாத்திட்டோம். புது ஊரு. புது வீடு. புது வாழ்க்கை. ஆனா அம்மாவோட ஓட்டம் மட்டும் நின்னபாடில்லை! ஆமா… அப்போ அவனுக்காக ஓடினா இப்போ எனக்காக ஓடறா… எனக்கு ஒரு நல்ல வாழ்க்கைய குடுத்தறனும்னு இந்த ஓட்டம்… பாக்கறதுக்கு வலிக்குது கொஞ்சம்… பிள்ளைங்கள பாத்துக்கறது பெத்தவங்க கடமைதான்! ஆனா அவ பட்டதை பார்த்ததுனாலையோ என்னவோ இதை அவ கடமைனு என்னால தேத்திக்க முடியலை… எனக்காக ரொம்பவே மெனக்கெடறாளோனு தோணுது… பயமாவும் இருக்கு… இருந்திருந்து இப்போதான் அம்மாகூட இருக்கேன்… எங்க இது பறிபோயிடுமோனு ஒரு பயம் எப்பவும் உள்ளுக்குள்ள இருந்துக்கிட்டே இருக்கு… முன்ன யாருக்குமே என்னை பிடிக்கலைனு கடவுள்ட்ட அழுதேன்னா இப்போ பிடிச்சிருக்குனு அழறேன்… இதையும் என்கிட்ட இருந்து பிடுங்கிறாதப்பானு அழறேன்… பயம் கழுத்துவரை வந்து தொண்டைய அடைச்சிக்குது… என்னால அவ இல்லாத ஒரு வாழ்க்கைய நினைச்சுக்கூட பார்க்க முடியல… அதனாலையோ என்னவோ ஒருநாள்கூட நான் அவளைவிட்டு எங்கயும் நகர்றது இல்லை… பயம்!! அந்த ஒரு நாள்ல என் உலகம் புரண்டுருமோன்ற பயம்!! இவளுக்கு என்னை உண்மையாவே பிடிச்சிருக்குனு நினைக்கும்போது பயம் கூடுதே தவிர ஒரு இஞ்ச்கூட குறைய மாட்டேக்கு… எனக்கு அவ கைய பிடிச்சு நடக்கறதுனா அவ்வளோ இஷ்டம்… ஒரு விதத்துல அவள என் கைலயே பிடிச்சு வச்சு பயத்தை குறைக்க நினைச்சேன்கூட சொல்லலாம்… அவ கை சூடு இதமா இருக்க இருக்க… ஒரு நிம்மதி… ஒரு நம்பிக்கை… ஆனா அம்மா என்னை அவ கைய பிடிக்க விடமாட்டா… அவளுக்கு எங்க நான் அடுத்தவங்களை சார்ந்தவளா ஆகிடுவேனோனு பயம்… அவளுக்கு நான் சுயமா இருக்கனும்னு ஆசை… இதை அவ வாய் திறந்து சொல்லாட்டியும் எனக்கு புரிஞ்சது… அந்தளவு வலிக்கல… ஆனா மனசு இதத்தை தேடுது… அழுது புரளுது… ஆனா சொல்லத்தான் தோணலை… சொன்னாக்கூட என்ன பதில் வரும்? “நான் எங்க போயிடப்போறேன்? கடைசிவரை உன்கூடத்தான் இருப்பேன்” மாதிரி பதில் வரும்… என் பயமே அந்த ‘கடைசிவரை’ தானே!! சொல்லப்போனா… “என்னை அம்மாவுக்கும் பிடிக்காம போயிருமோனு” பயமா இருக்கு…  அடிக்கடி சண்டை வரும்போதெல்லாம் அப்படியொரு பயம்… எங்க அவளும் என்னை வெறுத்துருவாளோனு… ஆனா அதெல்லாம் அஞ்சு நிமிஷத்துல  திருப்பி பேசறப்ப பறந்துருது… 

 

“எனக்கு இந்த வாழ்க்கையே போதும்பா!! நான் எப்படியாவது அவள நல்லா பாத்துக்கறேன்… வேற எதுவுமே வேணாம்… அதை மட்டும் பிடுங்கிறாத ப்ளீஸ்…”னு தினம்தினம் கடவுள்கிட்ட பேரம் பேசிட்டிருக்கேன்… 

 

 

நான் அம்மு. இப்போ எனக்கு வயசு இருபது. அம்மா பாவம். ஆமா! அம்மா ரொம்ப ரொம்ப பாவம். ஏன்னா? என்னாலதான். என்னோட இந்த குட்டி தலைக்குள்ள நடக்கற யுத்தத்தாலதான். அம்மாவும் எல்லா பெத்தவங்கள மாதிரிதான் ஆனா கொஞ்சம் வித்தியாசம்…தனக்குக் கிடைக்காத நம்பிக்கை எல்லாத்தையும் தன் பிள்ளைக்கு குடுக்கனும்னு நினைக்கறா… ஆமா! நான் எதுலையாவது மாட்டிக்கிட்டாலோ இல்லை தப்பே பண்ணிருந்தாலும்கூட அம்மா இருக்கா! அவ என்னை நம்புவா! அது போதும் எனக்குன்ற தைரியத்தை இத்தனை வருஷத்துல குடுத்துருக்கா… என் வாழ்க்கைல முடிவ நான்தான் எடுக்கனும்! அது சரியா இருந்தாலும் சரி தப்பா போனாலும்  சரி நேருக்கு நேரா நின்னு சமாளிச்சிரனும்னு சொல்லுவா… அடுத்தவங்க பேச்சுக்கு பயந்து எனக்கு பிடிச்சதை விட்றக்கூடாதுனு சொல்லுவா… “அப்படியே சறுக்கி விழுந்தாதான் என்ன? மயிரா போச்சுனு தட்டிவிட்டுட்டு போவியா… உயிர் இருக்கறவரை வாழ்ந்து பார்த்துடனும்!! நம்ம வாழ்க்கை நமக்கானது… விட்றக்கூடாது”னு சொல்லுவா… கெட்ட வார்த்தையே பேசாத அம்மா இப்படியெல்லாம் பேசும்போது பாக்க அவ்ளோ அழகா இருக்கும்… அவ குரல்ல அவ்ளோ தைரியம் இருக்கும். நான் பார்த்து வியக்கற ஒரே சூப்பர்ஹீரோ அவதான்! அவ மட்டும்தான்! அப்படிப்பட்ட அவளையே கலங்க வைச்சிடறேன் அப்பப்போ… ஆமா… நான் வேணும்னு எதுவுமே பண்றதில்லை… வளர வளரதான் புரியுது… இதை அவகிட்ட சொல்லியே ஆகனும்னு… எனக்கு வலிக்குதுனு சொல்ல நினைச்சு ஆரம்பிச்சு கடைசில அவளுக்கு வலிக்க வைச்சிடறேன்… அவ வலில கோவத்துல கத்தறப்போ அது சண்டையாதான் முடியுதே தவிர நான் சொல்ல வந்தது வெளில வரதேயில்லை. திறக்கவேபடாத அறையொன்னு எல்லார்கிட்டயும் இருக்குமே… அந்த அறையோட கதவைத்தான் நான் திறக்க முயற்சி செய்றேன்… ஏன்னா என்னால முடியல… அந்த அறை வெடிச்சு சிதறதுக்குள்ள திறந்துடனும்னு நினைக்கறேன்… ஆனா அது அதைவிட கஷ்டமாயிருக்கு. என்கிட்ட இருந்து என்னையே எப்படியாவது காப்பாத்திக்கனும்னு நினைக்கறேன்… 

 

இத்தனைகாலம் வலிக்குதுனு வெளில சொல்லாம இருக்கறவரைக்கும்கூட இவ்வளோ  வலிக்கல… இப்போ சொல்லனும்னு நினைச்சு தைரியத்தை சேர்த்துக்கிட்டு முயற்சி செஞ்சும் முடியலைன்றப்போ… என்னவோ “என்னை காப்பாத்துங்க!!”னு கதறியும் யாரும் திரும்பி பார்க்காத மாதிரி வலிக்குது.  

 

என்னால எனக்காகவே வாழறேனு சொல்றவகிட்டப்போய் “எனக்கு இந்த வாழ்க்கைப் பிடிக்கல… வாழப் பிடிக்கல”னு நிச்சயமா சொல்ல முடியாது… அந்தளவு தைரியம் எனக்கில்லை! வரவும் வராது!  ஏன் தெரியுமா? அவதான் முதல் முறையா என்ன பார்த்து “நீ மட்டும்தான் என்னை பாசமா பாத்துக்கற”னு சொன்னா… “நீ கூட வந்து நின்னா இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்கா ஃபீலாகும்”னு சொன்னா… இதெல்லாம் சாதாரணமா பேசும்போது அவ சொன்ன வார்த்தைகள்தான்… ஆனா அதை அம்மா உணர்ந்து சொன்னா… அவ பொய் சொல்லல… என்னால உணர முடிஞ்சது… அது இன்னும் வலிக்குது!! என் உலகத்துல அவ எப்படி ஹீரோவோ அதேபோல அவ உலகத்துல நான் ரொம்ப ஸ்ட்ராங்கானவளா இருக்கேன்றத நினைக்கும்போது… அழறதா சிரிக்கறதானு தெரியல… “உன் முடிவுலாம் சில நேரம் என்னைவிட தெளிவுனு” சொல்லும்போது உள்ள லேசா சுருக்குனு இருக்கும்… “எனக்கு தெளிவு வேணாம்… எதுவும் தெரியாத சின்னப்பிள்ளையா கொஞ்ச நேரமாவது இருக்கனும்னு… 

 

ஆனா சொல்லத்தான் முடியல… முடியலைன்றதவிட தெரியலை… எனக்கே நான் எப்படி உணர்றேனு தெரியலைன்றப்போ மத்தவங்களுக்கு எப்படி புரியவைப்பேன்? 

 

தற்கொலை எண்ணம்…? வந்ததேயில்லைனு பொய் சொல்ல மாட்டேன்… வாழ்க்கைல எல்லாருக்கும் ஒரு முறையாவது வந்துருக்கும்ல? எனக்கும் வந்துருக்கு… சாகனும்னு இல்லை!! அப்போவே செத்துருக்கலாம்னு… ஏன்னா எனக்கு அந்தளவு தைரியம் என்னைக்குமே வராது! அது என் வலிய என் அம்மாக்கிட்ட நிரந்தரமா குடுத்துட்டு போற மாதிரி… என்னால அந்த முடிவ என்னைக்குமே எடுக்க முடியாது… என்னைக்குமே… ஏன்னா நான் போய்ட்டா… ‘நான் போய்ட்டன்னு’ சொல்லி சாஞ்சு அழக்கூட அம்மாவுக்கு ஒரு தோளிருக்காதே! 

 

எங்க என் தோளுல சாஞ்சுக்கிறவகிட்ட சொன்னா அடுத்து வலிச்சாலும் சொல்லாம போயிருவாளோனு பயப்படற நான் ஒரேடியா அதை இல்லாம ஆக்கிடுவேனா? 

 

அவ குழந்தை மாதிரி… யாராவது பொய் சொல்லி கடன் கேட்டா…ஏமாறமாட்டா!! ஆனா உண்மை தெரிஞ்சும் தூக்கி குடுத்துருவா… வலிய அனுபவிச்சவங்களுக்குதானே வலி புரியும்? அவளை எப்படி விட்டுட்டு போவேன்!?  எனக்கு வாழனும்!! நிம்மதியா… சந்தோஷமா வாழனும்!! இதுவரை பட்டதெல்லாத்துக்கும் சேர்த்துவச்சு வாழனும்!! ஆனா முடியல… என் தலைக்குள்ள இருக்கற குரல் ஒத்துழைக்க மாட்டேங்குது… நல்லா சிரிச்சு பேசிட்டிருக்கேன் சட்டுனு மாறிடறேன்… சிடுசிடுனு… அடக்கமாட்டாம கோவம்… இல்லைன்னா ராத்திரி முழுக்க விட்டத்தை வெறிச்சுக்கிட்டே மனசு மரத்துப்போய் படுத்துருக்கேன்… அப்போல்லாம் அழுகையாவது வந்து எதையாவது உணர மாட்டோமானு இருக்கும்… இப்போல்லாம் அடிக்கடி சண்டை… நான் வலிக்குது வலிக்குதுனு சொல்ல நினைக்கறேனே தவிர என்ன எப்படினு சொல்ல தெரியல… அவளும் பாவம் எவ்வளவுதான் தாங்குவா? மனுஷிதானே… நான் சொல்ல வரது எனக்கே புரியல… இதுல அவளுக்கு புரியனும்னு எதிர்ப்பார்க்கறது.. நியாயமில்லைதானே… என் முயற்சியெல்லாம் கடைசில “சாம்பார் தண்ணியாகிடுச்சு… பசிக்குது… நான் பேசினத நீ கவனிக்கல” மாதிரி சில்லறை சண்டைகளுக்கு அடியில மறைஞ்சு போயிடுது… 

 

அப்படிதான் நேத்தும் ஆச்சு… பெரிய சண்டை… ஏற்கனவே விளிம்பில நிக்கறேன் அம்மாவுக்கு தெரியாதுதான்… இருந்தும் அவ பேசினத ஏத்துக்கவே முடியல… ஒடனே ஓடிப்போய் அவளையே கட்டிப்பிடிச்சிக்கிட்டு அழனும்போல இருந்தது… முடியல… என்னனு கேட்டா? என்ன சொல்லுவேன்?… சொல்லதான் தெரியுமா?… அமைதியா ரூமுக்கு போய் டேபிளுக்கு பக்கத்துல கீழ உக்காந்துக்கிட்டேன்… அவன் பதறி பக்கத்துல வரப் பார்த்தான்… “வராத!! பக்கத்துல வராத!!” னு மனசுக்குள்ள கத்தினேன்… “ஏன்??”னு கண்ணுல கலக்கத்தோட பார்த்தான்… “ஏன்னா… ஏன்னா… நீ பக்கத்துல வந்தா நான் ஒடைஞ்சிடுவேன்”னு சொல்லும்போதே உடைஞ்சு கண்ணீர் கொட்டுச்சு… ஆதரவாய் அணைச்சு தட்டிக்கொடுத்தான். 

 

அவன் யாருனு சொல்லலையே… அவன் என் வலியில பிறந்தவன்… எனக்கு வலிக்கும்போதெல்லாம் வருவான்… வந்து இதோ… இதே மாதிரி ஆதரவாய் தட்டிக்கொடுப்பான்… நான் குழப்பத்துல இருக்கும்போது தீர்வு சொல்லுவான்… நான் சாவ பத்தி பேசினா அவன் வாழ்க்கைய பத்தி பேசுவான்… அவன்… நான்… என்னோட இன்னொரு பகுதி… எனக்கே எனக்கான பகுதி… என்னைய காப்பாத்திக்க நானே உருவாக்கின பகுதி… அன்பை மட்டுமே குடுக்க உருவானவன்… கதகதப்பானவன்… 

 

இன்னும் எத்தனைக்காலம் இதுனு தெரியல… பிரச்சனை இருக்குனு புரியுது… தீர்வு காணனும்னு புரியுது… ஆனா முடியலை…  சிலர் இதை வாழ்க்கைல ஒரு ஃபேஸ்னு சொல்லும்போது அவங்கட்ட எப்படி சொல்லுவேன் இந்த “ஒரு ஃபேஸ்லதான்” நான் கிட்டத்தட்ட பதினைஞ்சு வருஷமா இருக்கேனு… அதிகமா யோசிக்காதேனு சொல்றவங்ககிட்ட எப்படி சொல்றது அது என் கைல இல்லைனு அது மட்டுமில்லாம நான் யோசிக்கல… இது உண்மையாவே நான் அனுபவிச்சிட்டிருக்கேனு… எதனால? ஏன்னு? காரணம் கேக்கறவங்கட்ட எப்படி சொல்றது எனக்கே என்னை தெரியலைனு…  இதெல்லாம்விட யாருக்கிட்டப்போய் சொல்றது வாழறதுக்காக ஒவ்வொரு நொடியும் சாகறா மாதிரி இருக்குனு… 

 

இவ்வளவு வலிக்கும்னு தெரிஞ்சிருந்தா நாம யாரும் பொறந்துருக்கவே மாட்டோம்ல…

 

“இதை சத்தமா வெளில சொல்றளவு தைரியத்தை எனக்கு குடுப்பா!! ப்ளீஸ்…” 

“என்ன பண்ற?” என்று பின்னிருந்து அணைத்து அவள் தோள்பட்டையில் தாடையைப் பதித்துக் கேட்டவனிடம்  “ம்ம்” என்றவள் அந்த டாக்யூமெண்ட்டை கவனமாய் ஸேவ் செய்துவிட்டு அவன் கன்னத்தில் கை வைத்து அவனதில் கன்னம் பதித்தவள் பிறகு எழுந்துகொண்டவளாக “கதை எழுதிட்டிருந்தேன்…” என்றாள் சோம்பல் முறித்தவாரே… மணியைப் பார்த்தாள் அது மூன்றையெல்லாம் எப்பொழுதோ தாண்டியிருந்தது. இப்பொழுது படுத்தால்தான் இனி காலையில் ஒன்பதரைக்குள்ளெல்லாம் கிளம்ப இயலும். படுக்கையை நோக்கி நகர்ந்தவளையே ஆர்வமாய் பார்த்தபடி பின்தொடர்ந்தவன் “என்ன கதை?” என்க  மெத்தையில் விழுந்தவள் விட்டத்தை வெறித்துவிட்டு அவனை ஒரு முறை பார்த்து “நம்ம கதை” என்றவள் பிறகு “எனக்குத் தூக்கம் வருது…” என்றிட, 

 

வழமைபோல அவன், அவள் கை வளைவில் அழகாய் உறங்கி கரைந்துபோனான். அவள் விட்டத்தையே வெறித்திருந்தாள்… ஒற்றை நீல விடிவிளக்கு மட்டும் மந்தமாய் ஒளிர்ந்துகொண்டிருந்த அவ்வறையின் மெல்லிருள் நிறைந்த விட்டத்தையே இலக்கற்று வெறித்திருந்தாள்… நொடிகள் நிமிடங்கள் ஆகின… நிமிடங்கள் சில மணி நேரங்களையும் கடந்தன… மெல்லெழும்பியது அவளுள் ஓர் அழகிய கனவு…? கற்பனை…? ஆழ்மன ஏக்கம்…? இன்னதென்று சொல்ல தெரியாதொன்று…  

 

அது ஏதோ ஒரு கடற்கரை போலும்… சுற்றி ஆளரவமென மனித தடம் துளியுமில்லை… மங்கிய வெள்ளை நிற கடலலை கரைதொட்டு மீண்டென விளையாடிக்கொண்டிருந்தது என்னவோ… தளைகளை ஒவ்வொரு முறையும் உடைக்க முயன்று தோற்பதுபோல் இருந்தது. சற்றே சுளீரென… அவளுக்கு அவளையே உணர்த்துமளவிலான வெயில் பரவிக்கிடந்தது. அவள் அதே கடலலையின் நிறத்தை ஒத்த மங்கிய வெள்ளை நிற உடையில் ஓடிக்கொண்டிருந்தாள்… ஆனால் சிறு மாற்றம்… அலையை போலல்லாது இவள் முகம் கொள்ளா அமைதியும் சிறு புன்னகையுமாய், அவ்வப்பொழுது பின்னால் திரும்பியும்… பளீர் வானையும் பார்த்துக்கொண்டே பத்து வயதுக் குழந்தையாய் ஓடிக்கொண்டிருந்தாள்… ஆம்! பத்து வயது குழந்தையாய்தான் ஓடிக்கொண்டிருந்தாள்… 

 

பெருமூச்சொன்று எழும்பியது அவளிடமிருந்து.

 

நீண்ட நேரத்திற்குப் பிறகு, மெல்ல உறங்கிப்போனாள்…