அன்புடைய ஆதிக்கமே 14

அன்புடைய ஆதிக்கமே 14

அத்தியாயம் 14

        வேன் நின்றவுடன் முன்னாடி அமர்ந்திருந்த  சிலர் இறங்கியதும் இறங்கிய சுருதி தன் கண் முன் காட்சியளித்த வீட்டை பார்த்து அதிர்ந்தாள் என்று தான் சொல்லவேண்டும். அது அவர்களின் பழைய வீடு அதாவது இவர்களின் மூத்த தலைமுறை வாழ்ந்த வீடு…(ஆறாவது அத்தியாயத்தில் வருமே அந்த வீடு தான் அக்ராஹர வீடு.)

       தன் அருகில் ஒன்றுமே தெரியாத மாதிரி பம்மி கொண்டு நிற்கும் ஜெயக்குமாரை அடக்க முடியா கோபத்துடன் திரும்பி பார்த்தாள் சுருதி. நல்லவேளை சுருதிக்கு கோவம் வந்தால் ஹல்க் ஆக மாறும் மரபணுவை எந்த கூறுகெட்ட மருத்துவரும் அவள் உடம்பில் செலுத்தவில்லை. இருந்திருந்தால் இந்நேரத்துக்கு சுருதிக்கு வந்த கோவத்துக்கு ஹல்க் ஆக மாறி ஜெயக்குமாரை புரட்டி எடுத்திருப்பாள்…

                 ஜெயக்குமாரோ அவளை திரும்பி கூட பார்க்கவில்லை. அவள் கோவப்படுவதற்கும் நியாயங்கள் இருக்கிறது தான்….

          ஆனால் அவளை தன்னுடன் இறுக்கமாக  பிணைத்து தன் மனதை புரியவைக்க இதை விட்டால் வேறு வழி இல்லையே. இதே இது தன் வீட்டில் போய் இருந்தால் அவள் அத்தை மாமாவுடன் செல்லம் கொஞ்சிக்கொண்டு தன்னை ஒரு பொருட்டாக  கூட மதிக்கமாட்டாளே சண்டாளி. முன்பு எப்படியோ?ஆனால் இப்பொழுது சுருதி  தன்னை அலட்சியப்படுத்தினால் தன்னால் தாங்கி கொள்ள முடியுமென்று சத்தியமாக தோன்றவில்லை.

        அவனுக்கு ஒன்று நன்றாக தெரியும் அவளால் சாப்பிடாமல் கூட இருக்கமுடியும். ஆனால் பேசாமல் வாய்ப்பே இல்லை. அதனால் எப்படியும் தன்னுடன் பேசி…புரிந்து…தன்னை முழு மனதாக ஏற்று கொள்ளுவாள் என்றே நம்பினான்….அவன் அறியாத ஒன்று அவன் மனைவி யூகங்களுக்கு அப்பாற்பட்டவள் என்றும், இங்கு வந்ததால் தான் தான் அவதிப்பட போகிறோம் என்று அறியாதவனாக இருந்தான். 

அதனால் தான் தன் குடும்பத்தாரிடம் கேட்டு இங்கு வந்திருந்தான். இதெல்லாம் அவன் மனம் புரிவதற்கு முன்னமே… அவளை தான் நேசிக்கிறோம் என்று அறிவதற்கு முன்பே… இனிமேல் இது தான் தன் வாழ்க்கை…இதை எக்காலத்திலும் தன்னால் உடைய கூடாது என்று தனக்குள் ஒரு சபதமே எடுத்திருந்தான்.       இதெல்லாம் அவன் நினைத்து கொண்டிருக்கும் போதே அவர்களுக்கு ஆரத்தி சுற்றி வீட்டுக்குள் அழைத்து வந்திருந்தனர்…

         

          சுருதி அனைவரும் இருப்பதால் உதட்டை இழுத்து சிரிப்பது போல் வைத்துக்கொண்டு மிக மிக மெதுவாக ஜெயக்குமாரை திட்ட ஆரம்பித்திருந்தாள்…

         “என்னடா காலைல இருந்து எலி கலர்கலரா டிரஸ் போட்டுட்டு குறுக்க மறுக்க  ஓடுதேன்னு நினைச்சேன். இப்ப தானே புரியுது. அது காரணத்தோட தான் ஓடிருக்குனு… நான் கூட நம்ம அத்தை மகன் ரத்தினத்துக்கு திடிரென்று இந்த மாமா மகள் மாணிக்கத்து மேல பாசம் பொத்துக்கிட்டு வந்து வெளியே கொட்டுதோனு நினைச்சேன்.எல்லாமே நடிப்பு தான்.என்ன?உன் நடிப்புக்கு பக்கத்துல ஆஸ்கார் அவார்ட் வாங்குன Leonardo DiCaprio கூட கால் தூசு தான் போ. உன்னை பத்தி எல்லாம் தெரிஞ்ச நான் கூட நம்பிட்டேன் பாரேன்…எல்லாத்தையும் பொறுத்துக்குவேன் டா…ஆனா அழுத பாரு…அதை மட்டும் தாங்க முடில டா.”  என்று கோவமான முகத்துடனும் சிரித்த உதடுகளுடனும் கண்கள் தங்களை யாரும் கவனிக்கிறார்களா என்று அலைபாய்ந்து கொண்டும் ஒரே நேரத்தில் பல டாஸ்க்களை அசால்ட்டாக செய்துகொண்டு ஜெயக்குமாரை திட்டினாள் சுருதி.

       சுருதி பேச ஆரம்பித்தவுடன் சிரிப்புடன் தான் கேட்டு கொண்டிருந்தான் ஜெயக்குமார்.அவள் காலையில் இருந்து தான் நடந்துகொண்ட முறையை நடிப்பு என்று கூறியவுடன் பயங்கர கோவம் வந்துவிட்டது. அவளின் அருகில் இருந்தால் ஏதாவது சொல்லிவிடுவோம் என்று பயந்தவன் அவளை பார்த்து முறைத்து”நீ என்னை புரிஞ்சுக்கவே இல்லை பேபி மா.”என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு கூறிவிட்டு தன் சகோதரன் செல்வா அருகில் சென்று அமர்ந்தான்.

           ஜெயக்குமார் வந்தவுடன் அவ்வளவு நேரம் கைபேசியில் ஐக்கியமாகிருந்த செல்வா அவனை திரும்பி கூட பார்க்காமல் மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு எழுந்து சென்று விட்டான். சுருதியை பற்றிய நினைப்பில் இருந்ததால் ஜெயக்குமாரும் இதை கவனிக்கவில்லை…

 

     எழுந்து சென்ற செல்வாவுக்கோ பத்தி கொண்டு வந்தது. காலையில் இருந்து எப்படியெல்லாம் நடித்துவிட்டு இப்பொழுது சிறிது நேரம் கூட சுருதியின் அருகில் இல்லாமல் இப்படி தள்ளி வந்துவிட்டான் என்று…அவன் எழுந்து வந்தவுடன் சுருதியின் முகம் அடி வாங்கியதை போல் சுருங்கி விட்டதே…அதான் ஜெயக்குமார் அருகில் வந்து அமர்ந்தவுடன் எரிச்சலுடன் எழுந்து வந்தான்.

            சுருதி நடிப்பு என்று கூறியது ஜெயக்குமாரின் இதயத்தில் யாரோ சிறு சிறு முள்ளை எடுத்து குத்துவது போல் வலியை ஏற்படுத்தியது. அவள் தன் அன்பை புரிந்து கொள்ளவில்லையே என்று. எத்தனையோ தடவை தன் வார்த்தைகளால் அவளை காயப்படுத்திருக்கிறோம் என்றோ…இதனை நாளாக அவளுடனான திருமணத்தில் விருப்பம் இல்லாத மாதிரி நடந்துகொண்டிருந்தோம் என்று அவன் மறந்தே போயிருந்தான். இத்தனை நாட்கள் அப்படி நடந்து கொண்டு இப்பொழுது வந்து அன்பு என்று சொன்னால் யார் நம்புவார்கள்.

திருமணத்திற்க்கு முதல் நாள்….

           ஜெயக்குமாரை அலைபேசியில் அழைத்த அவனின் இரண்டாவது அத்தை அதாவது அவந்திகாவின் தாய் அனுசியா அவனை வீட்டுக்கு வருமாறு அழைத்தார்…

                 அவனும் அங்கு சென்றவுடன் அவனை வரவேற்று அமர செய்தவர் தான் அவனை இங்கு வரசொன்னதற்கான காரணத்தை கூறினார். கொஞ்ச நாட்கள் ஆகவே அவந்திகா முன்போல் இல்லை என்றும்…எதையோ மனதிற்குள் வைத்து மருகுவது போலவும் இருப்பதாக கூறினார்…

             “நீ தான் குமார் என்ன எதுன்னு கேட்டு சொல்லணும்? நானே போய் கேக்கலாம் தான் ஆனால் சொல்லமாட்டாளே டா…நீ கேட்டா கண்டிப்பா சொல்லுவா…என்னனு விசாரிச்சு சொல்லு…பெத்த மனசு படபடன்னு அடிச்சுக்குது…வயசு பிள்ளை இப்படி இருந்தால் பயமா இருக்கு குமாரு…என்கிட்டே கூட சொல்ல வேணாம்…நீயே பார்த்து முடிச்சு விடு…பாவம் அவள்…எதையும் வாய் திறந்து சொல்ல மாட்டா?”என்று கலங்க தயாராக இருக்கும் கண்களுடன் கூறினார்…

        அவனும் தான் கவனித்தானே முன்பெல்லாம் தன்னை நிமிர்ந்து பார்த்து பேச கூட பயப்படுபவள் இப்பொழுதெல்லாம் மிக சரளமாக பேசுகிறாளே. கண்களை எட்டாத ஒரு சிரிப்புடன்…

          அவன் அத்தையை சமாதானப்படுத்தியவன் அவந்திகா அறையை நோக்கி சென்றான்.அவன் அறையினுள் சென்ற போது அறை நிசப்தமாக இருந்தது. அவள் வரும் வரை இருப்போம் என்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவன் முன்பு மேஜையில் இருந்த திறந்து வைக்கப்பட்ட  ஒரு பழைய டைரி காற்றில் படபடத்து கொண்டிருந்தது.

 

        அதை முடி வைக்க கையில் எடுத்தவன் கண்களில் அவந்திகாவின் அழகான கையெழுத்தில் எழுதியிருந்த ஒரு கவிதை கண்ணில் பட்டது…

“உனக்கான தேடலை

உன் ஒற்றை புகைப்படத்தால்

எனக்குள் இட்டு

நிரப்பி கொண்டிருக்கிறேன் ஜெய்.”

இதை வாசித்தவுடனே ஜெயக்குமாரின் கைகள் நடுங்க ஆரம்பித்திருந்தது. அடுத்த பக்கத்தை திரும்பினான்.

 

“கைகட்டி வேடிக்கை பார்க்கும்

பிரியத்திற்காக கதறி அழுதுருக்கிறாயா…

கிடைக்கவே கிடைக்காது என்று தெரிந்த பின்பும்

தொலைந்ததை பைத்தியக்காரியை போல்

 தேடி இருக்குகிறாயா ஜெய்…

 கைகள் நடுங்க கண்கள் இருள

 உன்னை தேடிக்கொண்டிருக்கிறேன் ஜெய்…”

 

“உன் விழி பார்த்து பேசுவதென்பது

  என்றுமே எனக்கு வாய்க்க போவதில்லை தானே…

  அந்த விழிகள் அதனின் ஆதி பேரன்பின் ஊற்று

     எனக்கு இல்லையே ஜெய்…”

 

“உனக்காக வாழ்ந்து.உனக்காக இறப்பது என்பதை போல்.

   உன்னை நினைத்து வாழ்ந்து.

உன்னை நினைத்தே இறப்பது என்பது

அத்துணை எளிதாக இல்லையே.

ஏன் ஜெய்.”

 

“கண்களில் வழியும் பிரியத்தின்

கையாலாகாததனம்  செருப்பில் குத்திய

முள்ளை போன்று நிரடி கொண்டிருக்கிறது ஜெய்.”

  இதை வாசித்தவன் கண்டிப்பாக இது தானாக இருக்க கூடாது என்று வேண்டியவாறே அடுத்த பக்கம் திருப்பினான் .

 

அங்கு வெள்ளை வேட்டி சட்டையில் முகம் முழுவதும் புன்னைகையாக அவந்திகாவின் தோளில் கை போட்டு நின்றுகொண்டிருந்தான் ஜெய். இது சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு குடும்ப விழாவில் எடுத்தது. அப்புகைப்படத்தில் ஜெயக்குமாரின் ஒரு புறத்தில் செல்வாவும்.மறு புறத்தில் அவந்திகாவும் நிக்க எடுத்தது. அதில் செல்வாவை வெட்டி விட்டு இருவர் மட்டும் இருப்பதாக ஒட்டியிருந்தாள்.அதற்கு கீழ் எழுதியிருந்த கவிதை

 

“யாரோ போல் கடப்பது என்பது

அத்தனை எளிதாக இல்லையே ஜெய்..

ஒரு கொடும் கொலையை..வன்புணர்வை

கடப்பது போல் ஏன் இருக்கிறது ஜெய்.”(இந்த கவிதைகள் எனக்கு பிடித்த  முகநூலில் நான்  follow செய்பவர்  ஒருவரின் ஸ்டைல்.ஆனால் அவங்க கவிதைகள் இல்லை.)

அவன் படித்து கொண்டிருக்கும் போதே யாரோ வரும் சத்தம் கேட்டது சட்டென்று அந்த டைரியை எடுத்தவன் கைக்குள் வைத்து கொண்டு விடுவிடுவென்று அவந்திகா வீட்டை விட்டு வெளியேறி இருந்தான்.

 

அவன் வெளியேறிய சில நொடிகளில் தோட்டத்தில் இருந்து தன் அறைக்குள் வந்த அவந்திகா கையில் வைத்திருந்த மருதாணியை காய வைக்க மின்விசிறி போட்டு அமர்ந்தாள்.அவளை கேக்காமலே அவள் கண்கள் தன்னால் கலங்க ஆரம்பித்தன.கலங்கிய கண்களுடன் மின்விசிறியை வெறித்து நோக்கியவாறு அமர்ந்திருந்தாள்…

        ஜெயக்குமாரை அவளுக்கு பிடிக்கும்..ஏன் பிடிக்கும்?எதுக்கு பிடிக்கும்? என்று கேட்டால் தெரியாது. ஆனால் அவனை பிடிக்கும்.அவனின் ஆளுமை,அந்த குரல்,அவன் ஒவ்வொரு தடவை பேசும் போதும் தொண்டை குழியில் ஏறி இறங்கும் ஆதாமின் ஆப்பிள் என்று அவனை அணுஅணுவாக ரசித்திருக்கிறாள். இதெல்லாம் இல்ல விட்டால் கூட அவனை பிடிக்கும்.

              சுருதி பல வருட வேண்டுதலுக்கு பின் பிறந்தவள் என்பதால் அனைவருக்குமே அவள் செல்லம் தான்.அதிலும் அவள் துடுக்கு தனம்,வாய் திறமை என அனைத்தும் சேர்ந்து சிறுவயதில் இருந்தே அனைவரையும் கவர்வாள்.அவந்திகாவோ யாரிடமும் போகாமல் அமைதியாகவே இருப்பாள்.புதிதாக பார்ப்பவர்கள் கூட இவர்கள் இரண்டு பேர் இருந்தாலும் கொள்ளை சிரிப்புடன் இருக்கும் சுருதியை தான் கொஞ்சுவர். இதெல்லாம் சேர்ந்தோ என்னவோ சுருதி வளர வளர

மிகுந்த சேட்டை கார பெண்ணாக வந்தாள்..ஆனால் அவந்திகாவோ மிக அமைதியாக இருப்பாள்.அதனால் தானோ என்னவோ தன்னை வம்பிழுக்கும் சுருதியை விட, அமைதியாக இருக்கும் அவந்திகாவை கொண்டாடினான் ஜெயக்குமார். அவளை மிக நன்றாக பார்த்து கொண்டான். சில நேரங்களில் செல்வாவும் சுருதியும் சேர்ந்து இவளை அடித்து அழுக வைத்தபோது இருவரையும் ஓட ஓட விரட்டி விரட்டி அடித்திருக்கிறான். அவனின் அந்த முக்கியத்துவம் தான் அவந்திகாவிற்கு அவன் மேல் விருப்பு வர காரணமாக இருந்தது என்று சொல்ல வேண்டும்…

 

  தன் வீட்டுக்கு வந்த ஜெய்குமார்க்கோ இன்னும் கைகள் நடுங்கி கொண்டிருந்தது. அவந்திகாவை ஒருபோதும் தன்னால் அப்படி நினைத்து பார்க்கவே முடியாது. எங்கு தவறு விட்டோம்  என்று தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான். சிறிது நேரத்தில் ஒரு முடிவுக்கு வந்தவன் ‘இது தனக்கு தெரியும் என்று அவளுக்கு தெரிய வேண்டாம்.எப்போதும் போல் பேசுவோம்.அவளை நினைத்து பாவமாக தான் இருக்கிறது ஆனால் தன்னால் என்ன செய்ய முடியும்?’ என்று நினைத்தவன் அந்த டைரியை தன் வாட் ரோப்பில் சட்டைகளுக்கு அடியில் வைத்து பூட்டினான்…

    சிறிது நேரத்தில் மண்டபத்துக்கு அனைவரும் கிளம்பி சென்றனர்…அவனின் பார்வை முழுவதும் அவந்திகாவின் மேல் தான் இருந்தது.முயன்று தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு சிரிப்பதை போல் முகத்தை வைத்திருக்கிறாள் என்று முதல் பார்வையிலே தெரிந்தது…

    கல்யாணத்திற்கே உரிய கேலி கிண்டலுடன் கல்யாணமண்டபம் களை கட்டி இருந்தாலும் அதில் எதிலும் கலந்து கொள்ளாமல் ஜெயக்குமார் தனியாக அமர்ந்திருந்தான்.அவனுக்கு நிறைய யோசிக்க வேண்டி இருந்தது.அவந்திகாவை எப்படி இதில் இருந்து வெளியே கொண்டுவருவது என்று. அதில் தனக்கு அவள் தன்னை காதலிப்பது தெரியும் என்பது போலவும் காட்டி கொள்ள கூடாது. யாரிடமும் சொல்லவும் முடியாது என்று இவ்வாறு அவன் நினைத்து கொண்டிருந்த போது தான் அவன் பார்வை வட்டத்தில் நண்பர்களின் கேலி கிண்டலால் வராத  வெட்கத்தை வர வைக்க போராடி கொண்டிருந்த சுருதி விழுந்தாள்…

       அவளை பார்த்தவுடன் அனைத்தும் பின்னுக்கு போக உடனே அவளுக்கு ஒரு குறுஞ்செய்தியை தட்டி விட்டிருந்தான்.அதை அனைவரும் பார்த்து இன்னும் ஒட்டவும் கடுப்பான சுருதியின் முகத்தை பார்த்து சிரித்தவாறு அவந்திகாவின்  பிரச்சனைக்கு நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எழுந்து சென்றான்…

  இரவு 12  மணியாகியும் தூக்கம் வராததால் மாடிக்கு வந்தான் ஜெயக்குமார்.அவனுக்கு முன்பே அங்கு வேறு யாரோ அமர்ந்திருந்தனர்.பின்னாடி இருந்து பார்த்த ஜெயகுமாரிற்கு யார் என்று அடையாளம் தெரியவில்லை..ஆனால் காற்றில் ஆடிய நீளமுடியின் உபயத்தால் அது பெண் என்று மட்டும் தெரிந்தது…

        அருகில் அருகில் செல்ல செல்ல தான் தெரிந்தது அது அவந்திகா என்று.இவனின் காலடி ஓசையில் திரும்பி பார்த்தவள் ஜெயக்குமாரை அங்கு எதிர்பார்காத காரணத்தினால் கண்ணீர் வடியும் கண்களை கூட துடைக்காமல் அதிர்ச்சியில் எழுந்து நின்றாள்…

      ஜெயக்குமார் அதிர்ந்து விட்டான்.  இந்த பெண் என்ன இந்த நேரத்தில் இப்படி அழுதுகொண்டிருக்கிறாள் என்று சிறிது கோவம் கூட வந்தது…

        தொண்டையை செறுமிய ஜெயக்குமார் பேசவருவதற்குள் “என்ன அத்தான் இந்த நேரத்துல?”என்று திரும்பி கண்ணீரை துடைத்தவாறு கேட்டாள் அவந்திகா…

         “நீ இங்கே என்ன பண்ற அவந்தி?”என்று கேட்டவன் அவள் தோளை தொட்டு திருப்பி தன்னை பார்க்குமாறு நிப்பாட்டியவன் “உன் கூட கொஞ்சம் பேசணும்..உட்காரு….”என்று அந்த மொட்டை மாடியில்  இருந்த திண்டில் அமரச்சொன்னவன் அவளுக்கு அருகில் தானும் அமர்ந்தான்…

        “அவந்தி நீ எதுக்கு அழுகுற?என்ன பிரச்னை எல்லாம் எனக்கு தெரியும்.இது எப்போவுமே சரிவராது.இதை நினைச்சு   நீ  அழுகுறது வேஸ்ட்.”என்று அவள் கண்களை பார்த்து கூறினான் ஜெயக்குமார்…

     அவனுக்கு தெரியும் என்பதில் அதிர்ந்து விழித்த அவந்தி”ஏஏஏஏ ப்படி ?”என்று குரல் நடுங்க கேட்டாள்…

     இன்று நடந்த அனைத்தையும் கூறியவன் அவள் கண்களை நோ

க்கி “உன் குமார் அத்தான் நான் இருக்கேன். உனக்கு என்ன தோணுதோ எல்லாம் என்கிட்டே சொல்லு…அழுகணுமா அழு…உன் மனசுக்குள்ள  நினைச்சுருக்க  ஜெய்யா  இல்லாம சின்னவயசுல உன்னை சுருதியோ செல்வாவோ அடிச்ச என்கிட்டே சொல்லுவில அது மாதிரி சொல்லு. இந்த அழுகை புலம்பல் எல்லாம் இன்னையோட முடியனும்….”என்று அவள் கலங்கிய கண்களை அழுத்தமாக  பார்த்தவாறு கூறினான் ஜெயக்குமார்.

   அவளுக்கும் அது தான் தேவை பட்டிருக்கும் போல….அவனின் தோளில் சாய்ந்து கண்ணீர் வடித்தவாறு கூற ஆரம்பித்தாள்…

     “ரொம்ப வலிக்குது அத்தான்.என் ஜெய் எனக்கு இல்லனு நினைக்குறப்போ இங்கே ரொம்ப வலிக்குது அத்தான்.”என்று தனது இதயம் இருக்கும் இடத்தில கை வைத்து கூறியவள்

        “என்ன பண்றதுனு தெரில அத்தான்? நான் அழுகுறது தப்புனு மூளைக்கு தெரியுது அத்தான் .இந்த மனசுக்கு தெரிலையே.நான் அழுகுறதுனால சுருதி வாழ்க்கைல எதுவும் பிரச்னை வருமோனு பயமா இருக்கு அத்தான்.அவ பாவம் தானே..என் அக்கா கல்யாணம் பண்ணிக்க போறவரே நான் நினைச்சு அழுகுறது பெரிய பாவம் தானே அத்தான்? எனக்கே என்னை நினைச்ச அசிங்கமா இருக்கு அத்தான்.”என்று கூறியவள் தேம்பி தேம்பி அழுக ஆரம்பித்தாள்.

          அவளை சிறிதாக அணைத்தவாறு இருந்தான் ஜெயக்குமார்.

     “சில நேரம் தோணும் அத்தான். என் ஜெய்கிட்ட முதலே நான் காதலிக்கிற விஷயத்தை சொல்லி இருந்தா கண்டிப்பா ஏத்துக்கிட்டு இருப்பங்களோனு.”என்று கூறியவள் இன்னும் அழுதாள்.அவள் சொன்ன அந்த வார்த்தை மட்டும் ஜெயக்குமாரின் மனதில் நின்று விட்டது.

           “அழுகாதே அவந்தி.இதை பத்தி மறந்திரு.இது வெளியே தெரிஞ்சா உனக்கும் எனக்கும் பிரச்சனை தான்…போதும் அழுகையை நிப்பாட்டு…”என்று அவள் தலையை வருடியவாறு கூறிக்கொண்டிருந்தான் ஜெயக்குமார்.

             இந்த வார்த்தை சொல்லிக்கொண்டிருக்கும் போது தான் மேல வந்த செல்வா இதை மட்டும் கேட்டவாறு கீழே இறங்கி சென்றான்.

            அவள் கண்களை துடைத்து கொண்டு நிமிர்த்ததும் “நீ எப்ப சொல்லி இருந்தாலும் நான் இதுக்கு சரி சொல்லிருக்கமாட்டேன்.நீ என் மாமா பொண்ணு.என் தங்கச்சி மாதிரி.உன் கூட ஒன்னும் மண்ணும் வாழ்ந்த என்னால எப்படி உன்னை  என் மனைவியை நினைச்சு பார்க்க முடியும்?  “என்று கூறியவுடன் “எப்படி சுருதிய மட்டும் உன்னால நினைச்சுப்பார்க்க முடியுது? “என்று அவந்தி கேட்டாலோ என்னவோ அவனின் மனசாட்சி கேட்டது.அப்பொழுது தான் அவனுக்கும் புரிந்தது.

    அவந்திகாவை அனுப்பி வைத்தவன் மனசாட்சியின் கேள்விக்கான பதிலை  மனதினுள் தேட ஆரம்பித்தான்.

உடல் சரியில்லாத மாமா கேட்டவுடன் தான் ஒத்துக்கொண்டோம் என்று அதுக்கு பதில் சொன்னவுடன் அவனின் மனசாட்சி வேதாளமாக மாறி அடுத்த கேள்வியை கேட்டது “இதே இது அவந்திகாவை கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னா பண்ணிக்குவியா?”என்று சரியாக அவனின் நாடி பிடித்து கேட்டது…

               கண்டிப்பாக முடியாது என்று கூறியவன் தனக்கும் சுருதிக்கும் இடையை உள்ள உறவை முதன்முதலாக சரியான பாதையில் சிந்திக்க ஆரம்பித்தான்.அதில் அவனுக்கு கிடைத்த விடை…சிறு வயதில் இருந்தே அவளை விரும்பி இருக்கிறோம் என்பது தான்….

         இப்பொழுது தான் அனைத்தும் விளங்கியது.சுருதி பத்தாம் வகுப்பு படிக்கும் போது கூட படித்த ஒரு பையன் லவ் லெட்டர் கொடுத்தான் என்று தெரிந்தவுடன் அடங்க முடியா கோவம் வந்து அந்த பையனை அடித்தது.இதே போல் அவந்தி வந்து சொன்னபோது பாக்கியராஜ் படமான இன்று போய் நாளை வா படத்தில் வரும் ஒரு டயலாக் சொன்னதும்…சுருதியை வேறு ஒருவனுடன் பார்த்ததும் தன் ரத்தம் துடித்ததும் அவனை அடிக்கும் அளவு வெறி வந்ததும்….அவனால் சுருதி துன்பப்பட்ட போது துடித்தற்கான காரணமும் இப்பொழுது புரிந்தது.அவளை காயப்படுத்தி அவளை நினைத்து ஏங்கும் தன் நெஞ்சிற்கு சமாதானம் சொல்லியதும் இப்பொழுது விளங்கியது.

   

தற்பொழுது….

        இதையெல்லாம் ஜெயக்குமார் நினைத்து முடிப்பதற்குள் எல்லாம் முடிந்து சொந்த பந்தங்கள் சென்றிருந்தனர்.வீட்டு சின்ன வாண்டுகள்…  செல்வா…அவந்திகா என்று அனைவரையும் வீட்டுக்கு அனுப்பியிருந்தனர்….

         சுருதிக்கு மீண்டும் லைட்டாக மேக்கப் போட்டு விட்டுவிட்டு அடுத்து அனைவரும் இருவரிடமும் சொல்லி கொண்டு கிளம்பினர்.அவர்கள் எப்பொழுது டா கிளம்புவார்கள் என்று காத்திருந்தவள் போல பட பட பட்டாசாக பொரிய ஆரம்பித்திருந்தாள்…

        “அப்டியே பெரிசா டயலாக் அடிச்சு விட்டுட்டு போனா உன்னை விட்ருவேனு பார்த்தியா.”என்று உக்கிரமாக கூறியவள்…

         “உன் முட்டை கண்ணை வைச்சு நல்லா பாரு டா.எவ்வளவு பெரிய வீடுன்னு இதை கூட்டி பெருக்கவே ஒரு நாள் ஆகும் போல டா.அதை கூட விடு.ஒரு வாசல் இருந்தாலே காலைல எந்திரிச்சு கூட்டி கோலம் போடுறது பெருசு.ஆனால் இங்கே ரெண்டும் வாசல்.பத்தாததுக்கு பின்னாடி நிறைய இடம் வேற கிடக்கு. இதுக்காகவே தினமும் 4  மணிக்கு எந்திருக்கணும். ஒரு நாள் வாசல் தெளிச்சு கோலம் போடாட்டி கூட எதிர்த்தவீடு மாமி நம்ம முட்டா பிசு குடும்பத்துக்கிட்ட போட்டு குடுத்து திட்டு வாங்க வைப்பாங்க டா.”என்று மூச்சு வாங்க கூறியவள் அருகில் இருந்த பானையில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்தவளுக்கு அப்பொழுது தான் இன்னொன்றும் ஞாபகம் வந்தது….இன்னும் அதிக கோவத்திற்கு சென்றவள்

“டேய் இங்கே மோட்டார் இல்லை தானே? உப்பு தண்ணி நல்ல தண்ணீர் ரெண்டுமே வெளியே கார்பொரேஷன் குழாய்ல தானே பிடிக்கணும்.”என்று அவனை முறைத்தவாறு கூறினாள்….

    ஜெயக்குமாரோ இவள் என்ன இவ்வளவு பேக்கப் சொல்கிறாள் என்று அவளை ஆ என்று நோக்கினான்.இதெல்லாம் தனக்கு ஞாபகம் வரவில்லையே….என்று அவளை பார்த்தான்.அவள் இருக்கிற கோவத்திற்கு இதையெல்லாம் தான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று சொன்னால் அவ்வளவு தான் ஆணாதிக்கம் ,பெமினிசம் என்று பேச ஆரம்பித்து விடுவாள் என்று நினைத்தவன் கோவத்தை குறைக்கும் விதமாக “இதெல்லாம் நாம சின்ன வயசுல அம்மாச்சி இருக்கும் போது பண்ணது தானே.உனக்கு கூட ரொம்ப பிடிக்குமே தண்ணி எடுக்க….குடம் தூக்குறேனு மேல் எல்லாம் தண்ணியை ஊத்தி விளையாடுவியே பேபி மா ….அதான்….”என்று பல்லை இளித்தவாறு கூறினான்…..

  இதை சொல்லாமல் இருந்திருக்க வேண்டும் என்று ஜெயக்குமார் நினைக்கும் அளவிற்கு கழுவி ஊத்த ஆரம்பித்தாள் சுருதி

    “நீ எல்லாம் நிஜமா படிச்சு தான் பட்டம் வாங்குன?இல்லை பிட் அடிச்சா?டேய் அது அறியாத வயசு டா…விளையாண்டேன்…இப்பயும் அப்படி விளையாட முடியுமா?அது மட்டும் இல்லாம தண்ணி தூக்கியே பல வருஷம் ஆச்சு டா…டேப்பை திருகிவிட்டா தண்ணீர் பிடிச்சு பழகியாச்சு டா. “என்று கூறி இடைவேளை விட்டவள் “இது தான் உடம்புக்கு நல்லது அது இதுனு கதை விட்ட கொன்றுவேன் ராஸ்கல்…”என்று தன்னை தொட்டு தாலி கட்டிய கணவன் என்று கூட பாவம் பார்க்காமல் தாளித்து கொண்டிருந்தாள்…

          அதோடு நிற்பாட்டினாலும் பரவாயில்லை இன்னும் ஏதோ ஏதோ சொல்லி திட்டினாள்.பொறுத்து பொறுத்து பார்த்த ஜெயக்குமார் இதற்கு மேல் விட்டால் திட்டி கொண்டே இருப்பாள் என்று நினைத்தவன் அவன் இருந்த இடத்தில இருந்து எழுந்து  சுருதியை நோக்கி சென்றான்.

 

   

 

 

 

 

ஆதிக்கம் தொடரும்….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!