அன்புடைய ஆதிக்கமே 25

அன்புடைய ஆதிக்கமே 25

அத்தியாயம் 25:

                 “அவங்கிட்ட எங்களுக்கு எதிரான எந்தெந்த ஆதாரம் இருக்கு?” என்று நிலைமையை தனது கையில் எடுத்துக்கொண்டு வசந்த் கேள்விக்கேட்டான்.

                  “அந்த மாலா இறந்தது தற்கொலை இல்லை கொலை அப்படின்றதுக்கான ப்ரூப். அப்புறம் என்னை மாதிரி அங்கே போன நிறைய பொண்ணுங்களோட தப்பான வீடியோஸ். இந்த கேஸ்ல யார்யார் சம்மந்தம் பட்டு இருக்காங்கன்னு அந்த யூனிவர்சிட்டி துணைத்தலைவரோட வாக்குமூலம்… அப்புறம் இங்கே காலேஜ்ல நடக்குற போதைமருந்து விற்பனை.” என்று பாரதி கூறிக்கொண்டிருக்கும் போதே அவளை மிகவும் பலமாக அறைந்தான் வசந்த்.

            அவனின் அறையை தாங்க முடியாமல் கட்டப்பட்டிருந்த நாற்காலியுடன் கீழே விழுந்தாள் பாரதி. மாறன் எதுவும் பேசவில்லை அமைதியாகவே இருந்தான்.

              பாரதியை மீண்டும் தூக்கி அமரவைத்த வசந்த் “எப்படி இதெல்லாம் கண்டுப்பிடிச்ச?”

               “என்னால பீஸ் கட்டாட்டி இன்டர்னல் எழுத அனுமதிக்க மாட்டாங்க அதனால ஒரு  ஒன் வீக் டைம் கொடுங்கன்னு பிரின்சிபால் கிட்ட கேட்க போயிருந்தேன். அங்கே தான் #### யுனிவர்சிட்டி தலைவர் வந்திருந்தார். அந்த ஆள் பார்வையே சரியில்லை. நான் அங்கே பர்மிசன் கேட்டுட்டு போனதுக்கு அப்புறம் சாயந்திரம் போல என் போனுக்கு பிரைவட் நம்பர்ல இருந்து போன் வந்துச்சு. அதுல பேசுன பொம்பளை முதல் ஏன் பீஸ் கட்ட முடியலை வீட்டில என்ன பிரச்சினைன்னு ரொம்ப அக்கறை இருக்க மாதிரி ஆரம்பிச்சு என் வீட்டு சூழ்நிலையை தெரிஞ்சுக்கிட்டு என்னோட கஷ்டத்துல இருந்து வெளிவர வழி சொல்லுறேன்னு சொல்லி ஒரே ஒரு நாள் மட்டும் அவங்க சொல்லுற வீட்டுக்கு போய் நைட் ஸ்டே பண்ணா போதும். இந்த செம் மட்டுமில்லாது அடுத்த எல்லா செம்க்கும் பீஸ் கட்டி, எல்லாத்துலயும் நல்ல மார்க் வாங்கவைச்சு ஏன் யுனிவர்சிட்டி ஃப்ரஸ்ட்டே வரவைக்குறேன்னு சொன்னாங்க. உடனே பதில் சொல்ல வேண்டாம். இரண்டு நாள் கழிச்சு சொல்லு. ஒக்கே அப்படின்னா ஆறுமணிப்போல புட்பால் கோர்ட் கிட்ட வந்து நிற்க சொன்னாங்க. அது என் மொபைல்ல ஆட்டோமெட்டிக் ரெக்கார்டு ஆன் பண்ணி இருந்ததுனால எல்லாமே ரெக்கார்ட் ஆயிருச்சு.”

                “இந்த ஜெயக்குமார் எப்ப சீன்குள்ள வந்தான்.?”

                  “அவர் எங்க சார். எவ்வளவு ட்ரை பண்ணியும் என்னால பீஸ் கட்ட முடியலை. எங்க அப்பாக்கு ரொம்ப முடியாம போயிட்டு. என் தங்கச்சிக்கு திடிர்ன்னு ஆக்ஸிடென்ட் வேற ஆயிருச்சு. அதுக்கும் பணம் வேனும்னு ஒரு சூழ்நிலை. வேற வழியில்லாம நான் இந்த மாதிரி பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டு புட்பால் கோர்ட்டுகிட்ட அன்னைக்கு சாயந்தரம் நின்னுக்கிட்டு இருந்தேன். ”

                  வரும் அழுகையை கட்டுபடுத்திக்கொண்டு தான் செய்ய இருக்கும் காரியம் எப்படிப்பட்டது என்பதை உணர்ந்தவளது இதயம் தாறுமாறாக துடிக்க தலையை குனிந்தவாறு அமர்ந்திருந்தாள் பாரதி.

            அவள் முன்பு ஒரு கால் தெரிய தலையை நிமிர்ந்து பார்த்தவளுக்கு எதிரில் நின்றிருந்த ஜெயக்குமாரை பார்த்து ஐயோ என்றாகி விட்டிருந்தது.

               “ஏய் இங்கே என்ன பண்ற? காலையில கிளாஸ்க்கு வராம இப்ப இங்கே உக்காந்து இருக்க?” என்று கேட்க, பாரதிக்கோ வாயைகூட திறக்க முடியவில்லை அழுகை தான் வந்தது.

       அழுதவளை பார்த்து அதிர்ந்துவிட்ட ஜெயக்குமார் “ஹே ஹே அழுகாதே… வா வா.. முதல் நீ…” என்று அவளை கொஞ்சதூரம் தள்ளியிருக்கும் தண்ணீர் வைத்திருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றவன் அவளுக்கு ஒரு குவளையில் தண்ணீரை பிடித்து கொடுத்து முகத்தை கழுவ சொன்னான். அவள் கழுவியதும் மீண்டும் இன்னொரு முறை தண்ணீரை நிரப்பி கொடுத்தவன் அவளை குடிக்க சொன்னான்.

              பாரதி குடித்துவிட்டு சமநிலைக்கு வந்தவுடன் என்னாயிற்று என்று விசாரித்தான். அளவுக்கடந்த மன அழுத்தத்தில் இருந்த காரணத்தினாலோ என்னவோ அவள் அனைத்தையும் அவனிடம் கூறினாள்.

           அதை கேட்டுக்கொண்டவன் அந்த பெண்மணி பேசிய ஆடியோ இருக்கா என்று கேட்க, அதை கேட்டவனுக்கு இந்த குரல் மிகவும் பழகிய குரலாக இருந்தது. அதை மனதில் குறித்துக்கொண்டவன் அவர்கள் ஆறுமணிக்கு வர சொல்லிருப்பதையும் இவள் ஐந்துமணிக்கே வந்துவிட்டதையும் உணர்ந்தான். எல்லாம் நல்லதற்கே என்று நினைத்துக்கொண்டவன் “அவங்க வந்து பேசுனா எல்லாத்துக்கும் சரின்னு சொல்லு. எங்க வரனும் எல்லாத்தையும் கேட்டு வைச்சுக்கோ. ஆனால் அவங்ககிட்ட ஒரு நாள் மட்டும் டைம் கேளு நாளைக்கு வரேன்னு சொல்லு. அடுத்து என்ன பண்ணனும்னு நான் சொல்லுறேன். சரியா. பயப்படாதே. நான் இருக்கேன்.”

               “இப்ப நீங்க போயிருவீங்களா?”

                 “ஆமாம் மா. இவ்வளவு பெரிய விசயத்தை பண்றவங்க ரொம்ப ஜாக்கிரதையா இருப்பாங்க. தேவையில்லாம அவங்களுக்கு சந்தேகம் வரவைக்க வேணாம். உன்னை எதுவும் பண்ண மாட்டாங்க. நான் காலேஜ்க்கு வெளிய இருக்க கடையில தான் இருப்பேன். 6.15 வரை டைம். அதுக்குள்ள நீ வெளிய வராட்டி நான் உள்ளே வந்துருவேன்.”

          “அப்படி அவர் சொன்ன மாதிரி பண்ணேன். அடுத்து என்ன பண்ணனும்னு அவர்கிட்ட கேட்டேன். மறுநாள் காலையில ஹாஸ்பிட்டலுக்கு மாறுவேசத்துல வந்த ஜெ.கே சார் எங்கிட்ட ஒரு ஊசியும், சட்டை பட்டனுல இருக்க கேமராவும் கொடுத்தார்.”

               “அது என்ன ஊசி?”

               “அது எதுவோ உண்மையை சொல்ல வைக்குற ஊசியாம். அவங்க சொன்ன இடத்துக்கு போனப்ப அன்னைக்கு பிரின்ஸ்பால் ரூம்ல பார்த்த அந்த ஆள் இருந்தாரு. அவரை கட்டிப்பிடிக்கிற மாதிரி போய் இந்த ஊசியை போட்டுட்டேன். அப்புறம் அவர்கிட்ட பேசலாம்னு சொல்லி எல்லாத்தையும் கேட்டு உண்மையை கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன். அப்புறம் எப்படியோ ஜெ.கே சார் அந்த ரூம்குள்ள வந்துட்டாரு. பின்னாடி இருந்து அவருக்கு மயக்க மருந்து கொடுத்து மயக்கமாகிட்டு அந்த வீடு முழுக்க தேடுனோம். அப்ப தான் அந்த மாலா பொண்ணோட போன் கிடைச்சது. அது ஆன் பண்ண முடியாம இருந்தது. அப்புறம் இன்னும் நிறைய பொண்ணுங்களோட வீடியோ கிடைச்சது. அப்புறம் நாங்க ரெண்டு பேரும் யாருக்கும் தெரியாம வெளிய வந்துட்டோம். ஆனால் மறுநாள் செய்தில அந்த ஆள் மாரடைப்பால இறந்து போயிட்டதா செய்தி வந்தது.” என்று பாரதி சொல்லி முடிக்க வசந்துக்கு அவ்வளவு கோவம் வந்தது.

                தன்னை அடக்கி கொண்டவன் சுருதியிடம் “உன் புருசனை எங்கே?” என்று கேட்க, அவளோ பல யோசனைகளில் இருந்தாள்.

            தனது கணவனா, தனது சுயநலவாதி நொண்டிக்குமாரா இப்படி அவளால் நம்பவே முடியவில்லை.

            அவளது கண்டுக்கொள்ளாத தன்மையில் கோவம் வரப்பெற்ற வசந்த் பாரதியை மீண்டும் ஒரு அடி அடித்தான். அதில் சுயவுணர்வு வரப்பெற்ற சுருதி “சென்னைக்கு போறேன்னு சொல்லிட்டு நேத்தே போயிட்டான்.” என்று கூற, அவன் பாரதியை பார்த்தான்.

           “எங்கிட்டயும் அதான் சொன்னாரு. அவர் முதல் வேலைப்பார்த்த காலேஜ்ல வர சொல்லிருந்தாங்கன்னு சொன்னாரு.” என்று அழுகையுடனே கூற,

               “பொய் சொல்லாதே டி. உண்மையை சொல்லு. அவன் எங்கே போயிருக்கான். யாரு இந்த ஆடியோ ரிலீஸ் பண்ணது.” என்று வசந்த் கேட்க,

               “சத்தியமா நான் இல்லை சார். அவரும் இதைப்பத்தி யார்கிட்டயும் சொல்லாதே. நான் போயிட்டு வந்து பார்த்துக்கிறேன்னு சொன்னாரு…” என்று பாரதி கூற, மாறனுக்கு எதுவோ புரிவது போன்று இருந்தது.

                  இனி தான் சரியாக காய் நகர்த்த வேண்டும் இல்லாவிடில் சுருதிக்கு ஆபத்து என்றுணர்ந்தவன் வேகமாக தனது சட்டைபையிலிருந்து அலைப்பேசியை எடுத்து #### குறிப்பிடாமுடியா கெட்ட வார்த்தையில் பதிந்திருந்த ஜெயக்குமாரின் அலைப்பேசி எண்ணுக்கு அழைத்தான் மாறன்.

       அழைப்பு சென்ற அடுத்த நொடி அழைப்பை எடுத்திருந்தான் ஜெயக்குமார்.

           “ஹலோ… யாரு?”

           “ஹாஹாஹா… எல்லாம் தெரிஞ்சும் நடிக்குறீயே குமார்… நடிக்குறீயே…” என்க.

             “யாரு நீங்க? உங்களுக்கு என்ன வேணும்?”

              “குட். உனக்கு நான் யாருன்னு தெரியாதுல. எல்லாம் நீ பிளான் பண்ண மாதிரி தானே நடக்குது குமார். உனக்கு என்ன வேணும்?”

                “நீ உன் அப்பன் எல்லாரும் ஜெயிலுக்குள்ள போய் களி தின்னனும் மாறா… ”

                 “ஹா ஹா ஹா… மிகப்பெரிய ஆசை தான். இப்ப எங்கே இருக்க குமார்? உன்னோட ஜிபிஎஸ் எதுவும் ஒர்க் ஆகலையோ… ஐயோ பாவம். ”           

                 ஆம் பாரதிக்கே தெரியாமல் அவளது கைகடிகாரத்தில் பொருத்திருந்த டிராக்கிங்க் டிவைஸ் தன்னுடைய பணியை செய்யவில்லை. இவள் ஒடி வந்ததில் எங்கோ விழுந்திருந்தது. அதனால் தான் அவளை கண்டுபிடிக்க முடியாமல் திண்டாடிக்கொண்டிருந்தான் ஜெயக்குமார். அந்த நேரம் இந்த மாறன் அழைத்திருக்கிறான்.

                “குமார் உன் பொண்டாட்டியை நாங்க தூக்கிட்டு வந்ததும் உனக்கு தெரியும் போலயே. அதோடு இலவச இணைப்பாக உன் தம்பி, அப்புறம் இன்னொரு அரேபியன் குதிரை, இரண்டு வாண்டு பசங்க அப்படின்னு எல்லாரும் உன் மிசனுக்காக உயிரைக் கொடுக்க எங்களை தேடி வந்திருக்காங்க குமார். ஹவ் ஸ்வீட் ஆப் யுவர் பேமிலி…”

          இதுவும் குமாருக்கு தெரியும். சிறிது நேரத்துக்கு முன்பு தான் அவனது மாமன் சுருதியின் தகப்பனார் முத்துவேல் இவனுக்கு அழைத்து கூறியிருந்தார்.

                 “பொய் சொல்லாதே மாறா…”

                  “ஏன்ன குமார்? நான் எப்பயும் மாற்றான் வீட்டு மல்லிகை மேலே ஆசைப்பட்டதே இல்லை. ஆனால் இந்த மல்லிகை ரொம்ப வாசம் தூக்குது. ”

                 “வேணாம் மாறா. உனக்கும் அங்கே நடக்குற எதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு எனக்கு தெரியும். ஆனாலும் நீ பண்ற போதைமருந்து கடத்தலுக்கு நீ உள்ளே தான் போய் ஆகனும். இதுக்கு என்ன தண்டனை தெரியும்ல?”

                   “ஹா ஹா ஹா… குமார் நான் இந்த தொழிலில் கரை கண்டவன் எனக்கு எல்லாம் தெரியும். உனக்கே தெரியும் இந்த கேஸ் நிக்காதுன்னு. நாங்க தான் குற்றவாளின்னு நிரூபிக்குறதுக்கு உங்கிட்ட போதுமான ஆதாரம் இல்லை குமார். இருந்தும் நீ தேவையில்லாம விளையாடுற.” என்று மாறன் பேசிக்கொண்டிருக்கும் போதே அவனது அலைப்பேசியை அவனிடமிருந்து பறித்து தூக்கி விசிறியடித்திருந்தான் வசந்த்.

           “மாறா நீ பண்றது முட்டாள் தனம் மாறா. இவளுக்காக உங்க அப்பா, நான் ஏன் உன் வாழ்க்கையை கூட பலி கொடுக்க துடிக்கிறியா மாறா. வெறும் அந்த வினிதா அண்ட் நேத்து செத்து போனவனோட முடிய வேண்டிய கேஸை கேவலம் இவளை காப்பாத்த வந்து உன்னையும் இதுல இன்வால்வ் ஆக்கி இப்ப அவங்கிட்ட எல்லா உண்மையும் சொல்லிட்டு இருக்க முட்டாள்.” என்று பேசிக்கொண்டே மாறனை விட்டு பின்னே தள்ளிச் சென்றான்.

                “உன் காலை ட்ரேஸ் பண்ணி வரப்போறாங்க மாறா. இவ உயிரை காப்பாத்த தானே நீ இவ்ளோ பண்ணிட்டு இருக்க என்ன? இவளையே போட்டுட்டா…” என்று வெறிப்பிடித்தவன் போன்று கத்திய வசந்த் தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்த பிஸ்டலை எடுத்து அவளை சுட ஆரம்பித்தான். நொடி நேரத்தில் நடக்கவிருக்கும் செயலை யூகித்தவன் சட்டென்று அவளுக்கு அரணாக நிற்க குண்டு அவனது தோள்பட்டையில் பாய்ந்தது.

         வசந்த் இத்தகைய செயலை எதிர்பார்க்கவில்லை போலும் சட்டென்று துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு கீழேவிழ இருக்கும் மாறனை தாங்கி பிடித்திருந்தான்.

                 “டேய். என்னடா பண்ணிட்ட?” என்று அழும்குரலில் கேட்க, அதற்கு சத்தமாக சிரித்த மாறன் “நடிக்காதே வசந்த் உனக்கு தெரியும் இவளை சுடப் போனா நான் இடையில வந்து விழுவேன்னு. யூ நீயூ இட். ஐ க்நோ…” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே அந்த இடத்தை போலீசார் சுற்றி வளைத்திருந்தனர்.

               வசந்த் எது நடக்ககூடாது என்று நினைத்திருந்தானோ அதுவே நடந்து விட்டது. எல்லாம் எல்லாமே மொத்த சாம்ராஜ்யத்தையும் இந்த ஒருத்தி தரைமட்டமாக்கிவிட்டாள் அவனுக்கு இன்னும் ஆத்திரம் தான் வந்தது. இதெல்லாம் மாறனின் தந்தைக்கு தெரிந்தால் அவர் பெயர் வெளியே வராமல் இருப்பதற்கு இருவரையும் கொல்ல கூட துணிவார். எனெனில் மாறன் அவருக்கு சொந்த பிள்ளை கிடையாது. அவரது அண்ணனின் மகன் தான். மாறனின் தாய் தந்தையர் ஒரு விபத்தில் இறந்துவிட அவர்களது சொத்துக்கு ஆசைப்பட்டு மாறனே வளர்த்தவராயிற்றே. மாறனை பொறுத்தவரை பாசமான தந்தை ஆனால் அவரது உண்மை முகம் வேறல்லவா.

                மாறன் நல்லவன் தான். அப்படிப்பட்ட நல்லவன் என்றாவது ஒருநாள் தன்னை குற்றவாளி கூண்டில் நிறுத்திவிடுவான் என்றே அவனையும் இந்த தீய செயல்கள் என்னும் படுகுழியில் தள்ளியவராயிற்றே. அப்படிப்பட்டவர் அவரது ஆட்சிக்கும் புகழுக்கும் பங்கம் வரும் என்று அறிந்தால் சும்மா விடுவாரா? முதலில் தாங்கள் இருவரும். பிறகு இந்த சுருதி அவளது கணவன் அப்புறம் இந்த பெண் என்று அனைவரது கதையும் முடித்து கேஸே ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவாரே.

          “நீ இவ்வளவு பண்ணி என்ன பிரயோசனம் மாறா? உங்க அப்பா நம்மளையும் கொன்னுட்டு உன் சுருதி அவ புருசன் எல்லாரையும் கொன்னுடுவாறே மாறா?” என்று அவனது இரத்தம் வழிந்த தோள்பட்டையை பிடித்தவாறு கேட்க, அதற்கு சிரித்த மாறன் “வெயிட் அண்ட் சீ” என்று கண்ணடித்தவனுக்கு அதிக இரத்தப்போக்கால் கண்கள் மூடிக்கொள்ள போக, அந்த நொடி வேகமாக அவ்விடத்தை நெருங்கினான் ஜெயக்குமார்.

          இவர்கள் இருவரையும் பார்த்துக்கொள்ளுமாறு தனக்கு பின்னால் வந்த காவல்துறையினருக்கு கண்ஜாடை காட்டிவிட்டு சுருதியை நெருங்கினான். அவளது கட்டுகளை அவிழ்த்துவிட்டவன் தன்னுடன் அணைத்துக்கொண்டான். அந்த காட்சியை தனது உதட்டில் உறைந்த சிரிப்புடன் பார்த்தவாறு கண்களை மூடினான் மாறன்.

 

ஆதிக்கம் தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!