அன்பின் பெருவெளி 02

அன்பு 02

முதல் இரண்டு முறை கதவை தட்டிய பொழுது இசை திறக்காமல் போகவே கண்ணம்மாவுக்கு சிறிது பயம் எடுக்க தொடங்கியிருந்தது.

கடந்த இரண்டு வருடங்களில் , அவினாஷ் அல்லது இசையின் மாமா கதவை தட்டினால் தவிர வேறு யார் கதவை தட்டினாலும் அந்த கதவு திறக்கப்படாது.

இங்கே கண்ணம்மாவுமே கடந்த இரண்டு வருடங்களாக தான் இவ்வீட்டிற்கு வேலைக்கு வருகிறாள்.

பெரிதாக இவ்வீட்டை பற்றி அவளுக்கு தெரியாவிட்டிலும் , அரசல் புரசலாக மற்றவர்களிடம் வாய் கொடுத்து கேட்டு கொண்டார்.

அதில் தான் இசைப்பிரியா என்ற மகள் இருப்பதே தெரியவந்தது. வேலையாட்களுக்கு மேல் தளத்திற்கு செல்ல உரிமை இல்லை.

அதனாலே என்னவோ , அவினாஷ் கூறியதும் ஒரு வித பரபரப்புடனே மேலே சென்று இசைப்பிரியாவின் அறை கதவை தட்டினாள்.

கதவு திறக்கப்படாமல் போகவே , சிறிது பயம் தொற்றிக் கொள்ள ” இசைம்மா நான் கண்ணம்மா வந்துருக்கேன். கொஞ்சம் கதவை திறங்க மா” என இறைஞ்ச,

சிறிது நேரத்திலே கதவு மெல்லமாக திறக்கப்பட்டது.

கதவை திறந்து வெளியே வந்து நின்ற இசையை பார்த்த கண்ணம்மாவிற்கு நெஞ்சம் கசங்கியது.

ஹாலில் ஒருபுறத்தில் மாட்டப்பட்டிருந்த குடும்ப புகைப்படத்தில் சிரித்த முகமாய் அழகாய் நேர்த்தியாய் இருந்த பெண்ணா இவள் என்றதொரு தோற்றம் . அதுமட்டுமின்றி வெள்ளை நிற புடவை அணிந்து நெற்றியில் விபூதி மட்டுமே வைத்து விதவை போன்ற தோற்றத்தை கொண்டு இருந்தாள்.

“ம்மா,இது என்ன கோலம் ” என பதறிப்போனாள் வேலையாள்.

விரக்தியாய் சிரித்த இசை ,” புருஷனை இழந்த பொண்ணுங்க இப்படி தான் இருப்பாங்க கண்ணம்மா க்கா ” என்றாள் .

“ம்மா…” என நொடி பொழுதில் கண் கலங்கி போனது கண்ணம்மாவிற்கு..

“சொல்லுங்க க்கா , எதுக்கு கதவை தட்டுனீங்க.?” என கேள்வியாய் அவளை நோக்க ,

“அது வந்து மா , ஐயாக்கு காலைல ஹார்ட் அட்டாக் வந்துடுச்சாம் மா. இப்போ உங்களோட ஹாஸ்பிட்டலில் தான் ட்ரீட்மெண்ட் நடக்குதாம் மா அவினாஷ் தம்பி சொல்ல சென்னாங்க ” என்றதும்,

“சரிங்க கா , நான் பார்த்துக்கிறேன். வேற எதுவும் விஷயம் இருக்கா க்கா.?”

“இல்லை ம்மா ” என்றதும் உள்ளே சென்று கதவை அடைத்துவிட்டாள்.

தந்தையின் உடல்நிலையை எண்ணி மனம் கவலை கொண்டது என்னவோ உண்மையே. அதனாலே தன் கவலைகளை சிறிது நேரம் ஒதுக்கி வைத்து விட்டு தேவைக்கே அரிதாக மட்டுமே உபயோகப்படுத்திய மெபைலை எடுத்தவள் ‘அவினாஷ் அண்ணா’ என்ற எண்ணிற்கு டையல் செய்தாள்.

அவளுக்காக அவன் காத்திருந்தது போல், ஒரே ரிங்கிலே எடுத்து விட” குட்டி மா ” என்று கண்கள் கலங்க பாசமாக அழைத்தான்.

ஒரு நொடியில் அந்த அழைப்பில் அவளது கடந்த காலம் கண் முன்னே தோன்றி மறைந்து , விழி ஓரத்தில் கண்ணீரை உற்பத்தி எடுத்தது.

எத்தனை சந்தோஷமான காலங்கள் அது. இசை, அவினாஷ், அவள் அண்ணா என மூவரும் சேர்ந்து இருந்த நாட்கள் எல்லாம் அவள் நினைவு வந்து கசப்பான புன்னகையை உதிர்க்க செய்தது.

“சொல்லுங்க” என்று மொட்டையாக சொன்னாள் இசைப்பிரியா.

“இசை மா, அப்பாக்கு அட்டாக் வந்திருக்கு .ஏதோ ஹார்ட்ல ப்ளாக் இருக்குன்னு சொல்லி இருக்காங்க . உன்னால இங்க வர முடியுமா “என பரிதவிப்புடன் கேட்க,

“சில், அவருக்கு எதுவும் ஆகாது. அங்க இருக்கிற சீஃப் டாக்டர்ஸ் எல்லாம் நல்ல படியா அவரை காப்பாதிடுவாங்க. டோண்ட் வொரி அவர் சீக்கிரமே எழுந்து வந்துடுவாரு ” என்று தமையனாக இருக்கும் அவினாஷிற்கு ஆறுதல் அளித்தாள்.

“அவனுக்கு தெரியுமா..?”

” யாருக்கு குட்டி மா.?” என‌ எல்லாம் அறிந்தும் அறியாதது போல் அவினாஷ் கேட்க ,

“அதான், எங்க உசுரை கொஞ்சம் கொஞ்சமா எடுக்கிற உங்க உயிர் நண்பனுக்கு தான் “

“இ..இல்..ல தெ..ரி..யாது ” என திக்கி திணறி சொல்ல,

“ரொம்பவே சந்தோஷமா இருக்கு இதை கேட்கவே. பேருக்கு தான் இந்த குட்டி மா எல்லாம் இல்லையா. உயிர் நண்பனுக்கு விஷயத்தை சொல்லிட்டு தான் இங்க என்கிட்டயே சொல்றீங்க அப்படிதானே அண்ணா.?” என பொறுமையாகவே கேட்டாலும் வார்த்தையில் அத்தனை அழுத்தம் இருந்தது.

“அப்படிலாம் இல்ல குட்டி மா. உனக்கு அவனை பத்தி தெரியாதா என்ன” என நண்பனுக்காக பரிந்து பேச,

“தெரியலையே. தெரிஞ்சிருந்தா நான் என்னோட காதலை சேர்க்க சொல்லி அவன் கிட்ட போய் நின்னிருக்க மாட்டேன். இப்டி ஒரு நிலைமையும் எனக்கு வந்திருக்காது.அவனால… அவனால மட்டும் தான் என்னோட வாழ்க்கை இப்படி ஆனதே .அவனை நான் சும்மாவே விட மாட்டேன். என் வாழ்க்கையை என்கிட்ட இருந்து பறிச்ச அவனை நான் சும்மாவே விட மாட்டேன் ” என்று சொன்னவளின் கண்கள் இரண்டும் சிவப்பேறியது.

“குட்டி மா ” என தவிப்போடு அவன் அழைக்க,

“வச்சிடுங்க அண்ணா .நான் யாரோ தானே , அதுனால நீங்க என்ன வேணாலும் பேசலாம். இதுவே உங்க தங்கச்சி வாழ்க்கைல இப்டி நடந்து இருந்தா,அப்பவும் நீங்க இப்படி தான் இருப்பீங்களா ” என்றவள் பட்டென்று போனை வைத்து விட்டு அதனை தூக்கி விட்டெரிந்தாள்.

அவள் தூக்கி போடவும் நேராக அவள் சுவற்றில் மாட்டியிருந்த ஒரு புகைப்படத்தில் பட்டு, புகைப்படத்தோடு கீழே விழுந்தது.

அதில் அவள் அதிகளவு பாசம் வைத்தும் அதே அளவு வெறுக்கும் ஒரு நபர் கன்னக்குழி தெரிய அழகாய் அவளை நோக்கி சிரித்து கொண்டிருந்தது.

இங்கே மருத்துவமனையில்…

இரவு ஏழு மணி

கிட்டத்தட்ட நான்கு மணி நேரங்களுக்கு மேல் நாராயணனுக்கு ஆப்ரேஷன் நடக்க , அங்கிருந்த அனைவரும் தவிப்போடு அமர்ந்திருந்தனர்.

அந்த நேரம் பார்த்து அவினாஷின் தந்தை வாசுதேவன் வருகை தந்தார்.

அவரை கண்டதும் அவினாஷிற்கு அத்தனை பலம்.

“அவி , இப்போ நாராயணனுக்கு எப்படி இருக்கு டா .?”

“இன்னும் டாக்டர்ஸ் எதுவும் சொல்லலை பா. ஆப்ரேஷன் நடக்குது , அது முடிஞ்சா தான் அவருக்கு எப்படி இருக்குன்னு தெரியும் ” என்றான் .

“எல்லாம் சரியாகிடும் டா‌ . ஆமா இசை எங்க அவளை காணோம்.?” என்று கண்களால் தேட,

” வரலை பா ” என்றான் அமைதியான குரலில்..

அவனுக்கு அவள் கடைசியாக கேட்ட கேள்வி , அவனை சுக்கு நூறாக உடைய வைத்தது.

அவளுக்கு தெரியாதா தான் அவள் மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தோம் என்று. எப்படி அவளால் இவ்வாறு கூற முடிந்தது. என்னோட பாசத்தை ஒரே நொடியில் நடிப்பு என்பது போல் சொல்லி விட்டாலே . எப்படி இருந்த தங்கள் வாழ்க்கை இப்படி மாறியதன் காரணம் ஏனோ என புரியாமலும், அவள் பேசியதை நினைத்தும் மனதுக்குள்ளே வெதும்பி கொண்டிருந்தான் அவினாஷ்.

அதற்குள் டாக்டர்ஸ் அனைவரும் வெளிவந்து விட , தன் கவலைகளை ஒதுக்கி வைத்து விட்டு , நேராக டாக்டரை நோக்கி சென்றவன் “அவரை ஒன்னுமில்லை தானே.?” என்க

“எஸ் , ஹீ இஸ் ஔட் ஆஃப் டேஞ்சர் நவ். இன்னும் கொஞ்ச நேரத்துல அவரை ஐசீயூக்கு மாத்திடுவோம். அப்புறம் அவரை டிஸ்டர்ப் பண்ணாம போய் பாருங்க ” என்று விட்டு நகர்ந்தார்.

அப்போது தன் சிந்தனையில் இருந்து கலைந்த சவுந்தர்யா அவினாஷிடம் வந்து ,” இப்போ அவருக்கு எப்படி இருக்கு.?” என்க

“காப்பாத்திட்டாங்க ஆண்டி. இன்னும் கொஞ்ச நேரத்துல நாம அவரை போய் பார்க்கலாம்னு டாக்டர்ஸ் சொல்லிட்டு போயிருக்காங்க ” என்றான்.

“அப்போ சரி , நான் போய் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வரேன். காலைல இருந்து இங்கேயே இருக்கேன்னா அதான். அதுவும் இல்லாமல் எனக்கு வேற ஹாஸ்பிடல் ஸ்மெல் பிடிக்காது ” என்று சொல்லி நகர்ந்து விட்டார் சவுந்தர்யா.

சவுந்தர்யா சொன்னதை கேட்டு முகம் சுளித்தார்கள் இருவரும்..

பின் நண்பனுக்கு சொல்ல வேண்டும் என்று ஞாபகத்தில் வரவே அவனுக்கு அழைத்தான்.

“அந்தாளு உயிரு திரும்பி வந்துருக்குமே ” என ஏளனமாக கேட்ட நண்பனிடம் தன் கோபத்தை கூட காட்ட முடியவில்லை.

“ஆமாம் டா. அவரு செஞ்ச ஏதோ ஒரு நல்லது தான் இன்னைக்கு அவரை காப்பாத்தி இருக்கு ” என்றான்.

“ஹாஹாஹாஹா ” என சத்தமாக சிரித்தவன் ,”இந்த வருஷத்தோட பெஸ்ட் காமெடி இது தான் டா. நீ சூரி ,சந்தானத்தை விட நல்லா காமெடி பண்ற மச்சான். வேணும்னா சினிமால ட்ரை பண்ணி பாரு , உன்னோட காமெடி சென்ஸ்க்கு கிடைக்க சான்ஸ் இருக்கு ” என சிரிக்காமல் சொல்ல,

” என்ன நக்கலா ” என்று கேட்டவனின் குரலும் அவனின் இந்த பேச்சில் மனம் சிறிது இளகியது.

“அப்புறம் என்ன டா , பாவம் மட்டுமே சுமக்குற ஒருத்தர் எப்படி டா நல்லது செஞ்சிருக்க முடியும் ” என்றவனின் குரலில் சினம் இருந்தது.

” சரி டா , நான் இன்னும் வீட்டுக்கு போகலை. உன்னோட பதிலை கேட்டுட்டு போகலாம்னு இருந்தேன். இன்னேரம் என் தங்கச்சி அம்மாவை ஒரு வழி பண்ணிக்கிட்டு இருப்பா . நான் வச்சிடுறேன் ” என்று கூறி வைக்க போகும் நேரம்,

” நம்பர் சேஞ்ச் பண்ணிடாத அபி ” என்றதும் சினம் எல்லாம் மறந்து நண்பனின் பாசத்தில் இதழ்கள் இரண்டும் தானாக ‘சரி ‘ என்றது.

அவன் சொன்னது போலவே ,அங்கே பத்துக்கு பத்துக்கு என இருந்த அந்த சிறிய வீட்டையே உண்டு இல்லாமல் செய்து கொண்டு இருந்தாள் அவனின் செல்ல தங்கையான தாரணி தேவி.

“ம்மா!அண்ணா எங்க மா? அவன் ஏன் இன்னும் வீட்டுக்கு வரலை ” என அன்னையை பிடித்து கேட்டு கொண்டு இருந்தாள்.

“வருவான் டி. கொஞ்சம் பொறுமையா தான் இரேன் ” என மகளை அடக்க முயன்றார் சரோஜினி.

” ம்மா , அது எப்படி பொறுமையா இருக்க முடியும். அவன் என்னோட செல்ல அண்ணன் மா. அவனுக்கு வேற உலகமே தெரியாது. கொஞ்சம் பயந்த சுபாவம் வேற ” என்க

அதில் சத்தமாக சிரித்தவர் ,” யாரு உங்க னொண்ணனுக்கு உலகம் தெரியாது அப்படி தானே. அவன் ஊரையே வித்துட்டு வந்துடுவான். அவனால தான் ஊருக்கே ஆபாத்து ” என்க

அன்னையை பார்த்து மகள் முறைக்க முடிந்தளவுக்கு முறைத்து வைத்தவள் ,” இப்படிலாம் பேசுனா , சோத்துல பக்கத்து வீட்டு தாத்தா யூஸ் பண்ற மூக்கு பொடியை போட்டுவேன் பாத்துக்கோங்க ” என மிரட்டல் விட்டாள் மகள்.

“அடி போடி , உனக்கே நான் தான் சோறு போட கிச்சன் வரைக்கும் போகனும். என்னைக்காவது நீ அந்த பக்கம் போயிருப்பியா ?”

” ஹான், அது ரெஸ்ட்ரிக்டட் ஏரியா அதாவது தடை விதிக்கப்பட்ட பகுதி பாஸ். அங்க எல்லாம் என்ன மாதிரி குட்டி பசங்க எல்லாம் போக கூடாதாம் ” என முட்ட கண்ணை விரித்து சொல்ல,

” யாரு சொன்னதாம் நீங்க சின்ன பிள்ளைன்னு.?”

” எல்லாம் இந்த அறிவாளி மிஸ். தாரணி தேவி அம்மையாரே தான் ” என்றாள் பெருமை பொங்க.

“ஓடிடு ஒழுங்கா , இருபது கழுதை வயசாகுது உனக்கு, நீ சின்ன பொண்ணா எடு அந்த தொடப்ப கட்டையை “

” மம்மி , நீ ரொம்பவே பேட் வேர்ட் பேசுற. உன்கூட அண்ணனை பேச வேண்டாம்னு சொல்லனும். இல்ல நீ அண்ணனையும் கெடுத்துடுவ ” என அன்னையை சீண்டி சிறு பிள்ளைப் போல் விளையாட,

” இதெல்லாம் உன்கூட சேர்ந்தா தான் நடக்கும் டி ” என அவரும் மகளை சீண்டினார்.

“ம்ஹும்” என முகத்தை திருப்பியவள், வெளியே இருந்த திண்ணையில் அமர்ந்து தன் அண்ணன் வருகிறானா என முட்ட கண்ணை மேலும் மேலும் விரித்து பார்த்தாள்.

” தாரணி உள்ள வந்து இரு அவன் வரட்டும் ” என்க,

“அதெல்லாம் முடியாது போ. நான் அவனுக்காக காத்திருப்பேன் ” என சரோஜினியிடம் மறுத்து பேசிவிட்டு திரும்பி ஒரு வழி பாதையை நோக்க , அங்கே அவள் அண்ணன் அபிநந்தன் நடந்து வந்து கொண்டிருந்தான்.

” அய்ய்! அண்ணா வந்தாச்சி ” என கத்திய படியே அவனை நோக்கி ஓடினாள்.

மூச்சு வாங்க ஓடி வந்தவள் ,” ஏன்னா இவ்வளோ லேட்டு‌.?” என்றவளின் அன்பை கண்டு கண் கலங்கி போனது.

“அம்மு! எதுக்கு இவ்வளவு வேகமா ஓடி வர? இப்போ பாரு மூச்சு வாங்குது உனக்கு ” என தன் பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்ட,

அதை வாங்கி குடித்த படியே ,” நீ இன்னும் பதில் சொல்லலையே னா ?” என்றாள்.

“அண்ணாக்கு கொஞ்சமே கொஞ்சமா அதிக வேலை கொடுத்திட்டாங்க மா ” என்று தங்கையை செல்லம் கொஞ்ச,

” சிவா ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரத்தை ஓட்டுனது போதும் . உள்ள வாங்க ” என்று உள்ளே இருந்து குரல் கொடுத்தார் சரோஜினி..

” பொறாமை அண்ணா இந்த மம்மிக்கு . நாம வேணா இந்த மம்மியை டிவேர்ஸ் பண்ணிட்டு , வேற எதாவது நல்ல மம்மியா கொண்டு வருவோமா .? “

“எப்படி என் ஐடியா ப்ரதர் ” என ஆட்காட்டி விரலால் தலையில் இரண்டு தட்டு தட்டி கேட்க,

“சகிக்கலை” என்ற பதிலோடு “இன்னைக்கு உங்க ரெண்டு பேருக்கும் சோறு கிடையாது. எந்த அம்மா சோறு போடுறேன்னு கூப்பிடுறாங்களோ அங்க போய் சாப்பிடுங்க ” என விரட்டி விட,

“வா அண்ணா , நாம போய் ஒரு நல்ல இடத்துல போய் சோறு சாப்பிடலாம் ” என்றதும் தான் அண்ணன் கை விரித்து வந்திருப்பதை பார்த்து பாசமாக இருந்த தங்கை தன் முட்டை கண்ணை காட்டி தமையனை உறுத்து விழித்தாள்.

“அம்மு ,என்ன டா ஆச்சி.? ” என்க

“நான் கேட்டது எங்க மிஸ்டர் தாரணிஸ் ப்ரதர்.?” என்று கட்டை விரலை நீட்டி கேட்க,

காலையில் நடந்த பிரச்சனையில் தங்கை என்ன கேட்டால் என்பதே மறந்து போக , தங்கையின் முன் தவிப்பாய் நின்றான்.

“இதோ நீ கேட்டது ” என அபிக்கு பின்னாலிருந்து குரல் வரவும் இருவருமே திரும்பி பார்த்தனர்.

அங்கே சாருக்கேஷோடு அவள் அக்கா நிவேதா மற்றும் அவள் கணவன் விக்ரமனோடு குட்டி இளவரசன் ப்ரசன்னா நின்றிருந்தனர்.

“அவ்வ்! அத்து 1 அண்ட் அத்து 2 ” என இரட்டிப்பு மகிழ்ச்சியை காட்டியவள் சாருக்கேஷ் கையில் இருந்த பாவ் பாஜியை வாங்கி கொண்டு உள்ளே சென்று அதை பத்திர படுத்தியவள், வெளியே வந்து இரண்டு அத்தான்களையும் சிறு பிள்ளை போல் கொஞ்சி தீர்த்தாள்.

அவளுக்கு போட்டியாக ப்ரசன்னாவும் தன் மாமானை கொஞ்சோ கொஞ்சு என கொஞ்சி தீர்த்து விட்டான்.

நிவேதா குடும்பத்தினரின் வருகையால் , அந்த இரவு பொழுது கவலைகள் இன்றி சந்தோஷமாக கழிந்தது அந்த குடும்பத்திற்கு.