அலைகடல் – 27

IMG-20201101-WA0016-2a974b5f

இதுவரை – ஆரவ்வின் கார் வெடித்து சிதற, சரணடைந்த குற்றவாளி பூங்குழலியின் மீது குற்றம் சொல்ல, விசாரணைக்காக போலீஸ் வந்திருந்தது.

* இனி *

இன்ஸ்பெக்டர் வந்து கூறிய செய்தியில் ஸ்தம்பித்தாலும் சடுதியில் வெளிவந்தனர் கணவன் மனைவி இருவரும்.

“இன்ஸ்பெக்டர்…” என்று ஆரவ் தொடங்கும்முன் பூங்குழலி முந்திக்கொண்டாள்,

“அவங்க சொன்னா அது உண்மையாகிருமா? ஐ யம் த இந்தியன் நேவி ஆபிசர். நாட்டோட பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரவேண்டிய நானே இந்த மாதிரி மக்களுக்கு ஆபத்தான வேலையை செய்வேனா? என்ன இன்ஸ்பெக்டர் இது அவங்களை நல்லா விசாரிக்காம என்னை விசாரிக்க வரீங்க?” என்றாள் தோரணையாய்.

அவளுக்கே உரிய கம்பீரம், தன் மீது சுமத்தப்படும் தவறான குற்றசாற்றால் உண்டான தார்மீக கோபத்தில் பன்மடங்காய் அதிகரித்து பளிச்சிட்டது.

“மேம் நாங்க வேற வழி இல்லாமதான்” என்று அவர் சமாளிக்கத் தொடங்க,

“இன்ஸ்பெக்டர் நீங்க கொஞ்ச நேரம் ஆபிஸ் ரூம்ல வெயிட் பண்ணுங்க… நான் வரேன்” என்று குறுக்கிட்டான் ஆரவ்.

“எஸ் சார்” சல்யூட் அடித்து செல்பவரை பார்த்தவள், “என்ன என்னை போலிஸ்ல பிடிச்சிக் கொடுக்க போறியா? அதுக்கேன் அவரை வெயிட் பண்ண சொல்லணும்” என

அவளை ஒரு ஆராய்ச்சி பார்வை பார்த்தவன், “போலிஸ் ஸ்டேஷன் போக இவ்ளோ ஆர்வமா… நிஜமாவே என்னைக் கொல்ல நீதான் பாம் வச்சியா?” என்று சந்தேகமாய் கேட்க,

“உன்னை கொல்ல பாம் எதுக்கு… ஒரு பாட்டில் விசம் போதாது. தூக்க மாத்திரை கொடுத்தவளுக்கு இதை கொடுக்க எவ்ளோ நேரம் ஆகிற போகுது” என்றாள் நக்கலாய்.

“ஒஹ் அப்புறம் ஏன் மேடம் அதை பண்ணலை… இந்த தாலி செண்டிமெண்ட் ஏதாவது” என்றவனுக்கு அந்த நேரத்திலும் சிரிப்புவர, உதடுகள் சிரிப்பை அடக்கியதில் துடித்தது.

‘ஆமாம் ஏன் நான் அதைப் பண்ணலை… ஒருவேளை அவன் கூறியது போல்’ என்ற திக்கில் யோசனை சென்று திடுக்கிட்டு நின்றாள் பூங்குழலி.
அவளை அப்படியே யோசிக்க விட்டு, சென்னையின் புகழ் பெற்ற லாயரை அழைத்து ஜாமீனுக்கு ஏற்பாடு செய்தான் ஆரவ். அதில் தன் யோசனையை ஒதுக்கி வைத்தவளுக்கு அவன் தயவில் தப்பிப்பது போல் தோன்ற,

“நோ… என் பிரச்சனையை நானே பார்த்துக்கிறேன். நீங்க ஒன்றும் பண்ணத் தேவையில்லை” என்றுவிட்டு அலுவலக அறை பக்கம் நகர,

“பூங்குழலி ஸ்டாப் இட். உன்னாலதான் இத்தனை பிரச்சனையும் அதை நானும் ஒத்துக்குறேன் பட் இப்போ இது என் பிரச்சனையும் கூட, மேல மேல சிக்கல் ஆக்காம அமைதியா உட்காரு” என்று அவளை அடக்க,

“வாட்… என்னாலயா? அப்போ எதுக்கு என்னை காப்பாத்துற மாதிரி சீன் போடணும். நானே பார்த்துக்குறேன்” என்றாள் ரோஷமாய்.

அவ்வளவு நேரம் நடப்பதை சிலையென அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த வேந்தன் உயிர் பெற்று, “பூமா என்ன பண்ணுன நீ? அண்ணா அதுக்கு இவளை தேடி போலிஸ் வந்து என்ன என்னமோ சொல்லுது” என்றான் இருவரிடமும்.

“ஹான்… அதான் சொன்னாங்களே. ஐயா கார்ல பாம் வச்சது நான்தான். அதான் அரெஸ்ட் பண்ண வந்திருக்கு. கேக்குறான் பாரு கேள்வி” இருந்த மனநிலையில் தம்பியென்றும் பாராமல் எரிந்து விழுந்தாள் பூங்குழலி.

பொறுத்து பொறுத்து பார்த்தவன் அதற்குமேல் பொறுமையின்றி, “ஏய்… உன்னை அமைதியா இருக்க சொன்னேன்ல்ல… இன்னும் அவசரப்பட்டு எதையாச்சும் இழுத்து விடுறதை விடமாட்டியா நீ? அப்போதான் ஏதோ சின்ன பொண்ணு புரியாம பண்ணுறா போனா போகட்டும்ன்னு விட்டா, இன்னும் அப்படியே இருக்க. நீயெல்லாம் நேவி ஆபிசர்ன்னு நெஞ்சை நிமிர்த்தி சொல்லாத இடியட். என்னை கொல்ல பார்த்தியான்னு விசாரிப்பாங்க, நான் எதுவும் பண்ணலைன்னா எனக்கே உன் மேல சந்தேகம்ன்னு அர்த்தம் ஆகும். அப்புறம் என்ன ஸ்டேஷன்லயே கேஸ் முடியுறவரை இரு. இப்போ பீத்திட்டு இருக்கியே அந்த கேரியர்க்கே அது ஒரு ப்ளாக் மார்க்கா இருக்கட்டும். ஜஸ்ட் ஷட் யுவர் ப்ளடி மௌத்” என்றான் உட்சகட்ட ஆத்திரத்தில்.

அதில் அவள் அமைதியாக, வேந்தனோ ஆரவ்வின் விளக்கத்தில் விஷயம் பெரிதென்று உணர்ந்து கலக்கத்தில் அமர்ந்திருந்தான். வக்கீல் வந்ததும் ஜாமீன் கிடைத்து போலிஸ் செல்லும்வரை யாரும் எதையும் பேசவில்லை.

ரகசியமாக வைத்திருக்கும்படிதான் ஆரவ் சொன்னான். ஆனால் பத்திரிக்கை நிருபர்களுக்கு எங்கிருந்துதான் தகவல் கிடைக்குமோ அரசல் புரசலாக விஷயம் அறிந்து பூங்குழலிக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் இரு அணியாய் பிரிந்து மக்கள் அடித்துக்கொண்டிருக்க, அதை தீர்த்து வைக்கும் நிலைமைக்கும் தள்ளப்பட்டான் ஆரவ்.

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிற்கு மாலை ஏற்பாடு செய்த பிறகே நேரத்தை கவனிக்க, அதுவோ மதியம் நெருங்கிக்கொண்டிருந்தது. உணவு நேரம் தாண்டியும் அங்கு யாருக்கும் பசிக்கவே இல்லை.

வேந்தன் ஆரவ் பின்னோடு சுற்றிக்கொண்டிருக்க, ரித்தேஷிற்கு அழைத்து நடந்ததை கூறியவன், காரின் பாம் வைத்தவர்கள் யாரென முடிந்த மட்டும் விரைவாய் கண்டுபிடித்து தரச்சொன்னான்.

அதில் நடந்ததை அறிந்த வேந்தன், “பூமா இன்னும் கோபமாதான் இருக்காளா ண்ணா? நீங்க லவ் பண்றதை இன்னும் சொல்லலையா?” என்று வினவ, பதிலின்றி மறுப்பாய் தலையாட்டினான் ஆரவ்.

“நான் வேணா போய் சொல்லட்டுமா?” என

“வேந்தா ஏன் அவசரப்படுற? இப்போ சூழ்நிலை சரியில்லை இந்த கேஸ் முடியட்டும் நானே பார்த்துக்குறேன். போய் உங்க அக்காவை சமாதனப்படுத்து. கடுகடுன்னு உக்காந்துட்டு இருப்பா” என்றான் புன்னகையுடன்.

அவனின் சிரிப்பை பார்த்தவன், “உங்களுக்கு பூமா மேல கோபமே வரலையா?” என்று ஆச்சிரியமாய் கேட்க

“அதெப்படி வராம இருக்கும். முதல பயங்கர கோபம்தான். ஆனா இன்னொன்னு யோசிக்கணும். இப்போ நான் உயிரோட இருக்குறதுக்கும் அவதானே காரணம் அண்ட் சுத்தி நெருங்கிய எதிரிய வேற காட்டிக்கொடுத்திருக்கா அதனால எனக்கு நல்லது பண்ணினவ மேல எதுக்கு இன்னும் கோபப்படனும்” என்ற ஆரவ்வின் பதில் கேள்வியில் வாயடைத்துப்போனான் பூவேந்தன்.

தனது அறையில் ஆரவ் கூறியது போல் கடுகடுவென்ற முகத்துடன் படுக்கையில் அமர்ந்திருந்தவளின் எதிரில் அமைதியாய் அவள் முகம் பார்த்தவாறு அமர்ந்திருந்தான் பூவேந்தன்.

என்னமோ தெரியவில்லை… மனம் அமைதியை இழந்து கோபம் எரிச்சல்களின் கூடாரமாக மாறிக்கொண்டிருப்பது போல் தோன்றியது பூங்குழலிக்கு.

ஐந்து நிமிடம் கண்டுக்கொள்ளாமல் இருந்தவள் அதற்குமேல் முடியாமல், “என்னடா வேணும் உனக்கு” என்று அடிப்பதுபோல் வினவ,

“எதுக்கு பூமா இவ்ளோ கோபம்?” என்றான் இவன். இன்று பார்த்த இருவரின் முகமும் முற்றிலும் புதிது. இருவரின் கோபத்தையும் கண்டு முழி பிதுங்கியது என்னமோ இவன்தான்.

ஆரவ் கோபத்தில் கத்துவதையும் இன்றுதான் கண்டான் அதேபோல் தமக்கையும் முன்பு கோபம் வந்தால் அமைதியாக இருப்பாளே தவிர இப்படி எடுத்தெறிந்து எல்லாம் பேசமாட்டாள். கொஞ்சம் கொஞ்சமாய் பூங்குழலியின் இத்தனை வருட மாற்றத்தை உணர்ந்துக்கொண்டிருந்தான் அவன்.

“பச் உனக்கு புரியாது விடு” என்று சலிப்பாய் வந்தது குரல்.

“எனக்கா புரியாது? எல்லாம் புரியும்…வண்டியை பஞ்சர் பண்ணின அந்த எவளோ ஒருத்தி நீதானே?” என

தெரிந்துவிட்டதா என்பதுபோல் பார்த்தவள், “ஆமா அதுகென்ன இப்போ” என்றாள் அதே தொனியில்.

“அதுக்கு என்னவா… அதனால எவ்ளோ பெரிய ஆபத்துல அண்ணா சிக்கப் பார்த்தாங்க பார்த்தல்ல? நியாயப்படி உன் மேலதான் அண்ணா கோபப்படனும் ஆனா இங்க தலைகீழல்ல இருக்கு”

“நியாயம்… ஹான்! நான்தான் பாம் வைக்கவே இல்லையே அதானே கோபப்படுறேன். என் தரப்பை சொல்லவே விடாம ஜாமீன் வாங்கினா என்ன அர்த்தம்? நீ வேணா பார்த்துட்டே இரு. இப்போ உங்க அண்ணனை பத்தி தெரியாது என்னை போலிஸ் இழுத்துட்டு போகும்ல்ல அப்போ” எனும்போதே அறைவாயிலில் அரவம் கேட்க, அங்கு நின்றிருந்த ஆரவ்வைப் பார்த்து சொல்ல வந்ததை நிறுத்தினாள் பூங்குழலி.

“வேந்தா உன் மாஸ்டர்க்கு கால் பண்ணி ஒரு வார்த்தை சொல்லிரு. இன்னைக்கு எங்கேயும் போக வேண்டாம்… ஒருநாள் ப்ராக்டிஸ்தானே வீட்டுலயே பண்ணிக்கோ” என்று அவனை கீழே அனுப்பியவன் அவள் முன்னே கைக்கட்டி நின்று,

“மேடம் அப்போ என்ன சொல்லிட்டு இருந்தீங்க… திரும்ப சொல்லுங்க” என

“கேட்டுட்டுதானே வந்தீங்க? அப்புறம் ஏன் கேட்காத மாதிரி கேள்வி கேட்கணும்” என்றாள் இவள் எங்கோ பார்த்துக்கொண்டு.

“ஹ்ம்ம்… கேட்டேன் கேட்டேன்… இந்த மாதிரி நீ பேசும்போதுதான் அறிவுன்னு ஒன்னு இருக்கா இல்லை இருக்குற மாதிரி நடிக்குறியான்னு சந்தேகமா வரும் பூங்குழலி” என்றவாறு அருகில் அமர்ந்தான் ஆரவ்.

அவனின் கூற்றில் முறைத்தவளிடம் விளையாடிப் பார்க்க தோன்ற, “உண்மையைச் சொல்லு… நாம மட்டும் இவனை தூங்க வைக்காம விட்டிருந்தா போய் சேர்ந்திருப்பான்… தப்பு பண்ணிட்டோம்ன்னு நினைச்சுதானே கோபமா இருக்க?” என்று சீண்டலாக வினவ,

இப்படி ஒரு கோணத்தை நினைத்தும் பாராதவளோ அவனைப் பார்த்து விழித்தாள். ‘நிறைய நிறைய தான் நினைக்காததை எல்லாம் சொல்கிறான். ஆனால் நான் அப்படிதானே நினைக்க வேண்டும் ஏன் நினைக்கவில்லை… முழுக்க அவனை தொந்தரவு செய்ய யோசித்ததில் உயிரை எடுப்பதை மறந்துதான் விட்டேனோ’ என்ற ரீதியில் சிந்திக்க,

“என்ன அமைதியாகிட்ட? பயப்படாத ஜெயிலுக்கு எல்லாம் அனுப்பமாட்டேன். அப்படி அனுப்பனும் என்றால் இப்போவே அனுப்பிருப்பேன்” என்று அவளுக்கு புரிய வைக்கப்பார்க்க,

“யாருக்கு தெரியும். அங்கே போய் நான் எதாச்சும் சொல்லிருவேன்னு பயந்து கூட ஜாமீன் வாங்கிருக்கலாம்” என்றாள் இவள் நம்பாத குரலில்.

‘இதை நான் யோசிக்கவே இல்லையே!’ என்று இப்போது விழிப்பது ஆரவ் முறையானது. கூடவே தன்னை பற்றி தப்பாகவே யோசிக்கும் அவளை நினைத்து சிரிப்பதா அழுவதா என்று தெரியாத நிலை.

“நீ ரொம்ப யோசிக்குற பூங்குழலி… அவ்ளோதான் சொல்ல முடியும். கார்ல பாம் வச்சது நீயில்லைன்னு உறுதியா எனக்கு தெரியும். தேவையில்லாம உன்னை சிக்க வைத்து எனக்கென்ன கிடைக்கப்போகுது சொல்லு. மோர் ஓவர்… நான் குடும்ப வாழ்கையில தோத்தவனா அடையாளம் காட்டப்படுவேன். தேவையா அது? எங்கேயும் தோற்க்காதவன்… தோற்கப்பிடிக்காதவன் இந்த ஆரவ்… அமுதன்” என்றான் இரண்டிற்கும் இடைவெளி விட்டு ஆழமான பார்வை மற்றும் குரலுடன். என்னை ஜெயிக்க வையேன் என்ற அபிலாசை மறைமுகமாய் அதில் இருந்ததோ?

அதை புரிந்துக்கொள்ளாமல், “சோ ஜாமீன் எடுத்தது கூட உங்க கவுரவத்துக்காகதான் இல்லையா… இதே நான் நிஜமாவே நான் கார்ல பாம் வச்சிருந்தாலும் இப்படி காப்பாத்த முடியுமா?” என்று புருவம் உயர்த்தி கேட்க,

“சத்தியமா காப்பாத்திருப்பேன்” அவளின் கையை சத்தியம் செய்வதுபோல் பிடித்தவன், அவள் இழுக்கவும் விடாமல் இறுக பற்றினான்.

“கார்ல பாம் வைத்தால் மட்டும் இல்லை நேருக்கு நேர் நின்று கத்தியால இங்க குத்தியிருந்தாலும் கூட” சொல்லிக்கொண்டே இருவரின் கைகளையும் தன் நெஞ்சில் வைத்து அடக்கியவன், அவளின் கண்களை நேர்க்கொண்டு பார்த்தவாறு, “நான் உயிரோட இருந்தா கண்டிப்பா உன்னை காப்பாத்துவேன்” என்று முடிக்க,

அவனின் சீரான இதயத்துடிப்பானது அங்கிருந்து அதிர்வாய் உருமாறி பூங்குழலியின் கரங்கள் வாயிலாக அவளின் உடல் முழுக்க பரவியது.

மின்னல் கொஞ்சம் காந்தம் கொஞ்சம் சேர்ந்து இப்போது
கண்கள் ஆச்சா கண்கள் ஆச்சா
தீயப் போல நீயும் வந்தா தீக்குளிப்பதே
சொர்க்கம் ஆகும் சொர்க்கம் ஆகும்.

முழுபலத்துடன் சட்டென்று கையை இழுத்து எழுந்தவள், “எந்த படத்தோட டையலாக் இது? இங்க யாரும் உங்க நடிப்பை பார்க்க விரும்பலை நான்சென்ஸ்” என்று படபடத்து அவசரமாய் குளியலறை சென்று தாளிட்டாள்.

ஆரவ்வோ பூங்குழலியின் வார்த்தைகளால் பாதிக்கப்படாதவனாக ஒருநொடி என்றாலும் தன் பேசினால் அவளின் கைகளில் தோன்றிய அதிர்வை உள்வாங்கியவாறு அவளை பார்வையால் தொடர்ந்தவன் அவள் இப்போதைக்கு தான் செல்லாமல் வெளியே வரமாட்டாள் என்றெண்ணியவாறு கீழிறங்கிச் சென்றான்.

உள்ளே இன்னமும் படபடத்துக் கொண்டிருந்த உடலையும் நெஞ்சையும் நடுங்கிய கைக்கொண்டு நீவியவள் பின் முகத்தில் நீரடித்து கழுவினாள்.

‘ஏன் இப்படி வித்தியாசமாய் நடக்கிறான்? பொய் என்றாலும் கூட அந்த குரல்… பார்வை… அவ்வளவு தத்ரூபமாக நடிக்குமா?’ முதன்முதலாக ஆரவ் குறித்த கண்மூடித்தனமான எண்ணத்தில் குழப்பத்தை தத்தெடுத்தது பூங்குழலியின் மனம்.

கருகிய தோட்டத்தையும், சேதமாகிய வீட்டின் முன்புறத்தையும் அதீத பாதுகாப்புடன் சரிப்படுத்திக்கொண்டிருந்தனர் பலர்.

சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் அதைப் பற்றி ஆரவ் கலந்து பேச அலுவலகம் சென்று பார்க்க வேண்டியிருந்தது.
அங்கேயே பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கும் ஏற்பாடு செய்து முடிக்க, ரித்தேஷிடம் இருந்து காரில் பாம் வைத்தது அர்ஜுன் அல்ல ஆனால் அவனிற்கு தெரியுமோ என்று சந்தேகமாக இருக்கிறதென்றும் மற்ற எதிரிகளைக் கண்காணிப்பதாகவும் செய்தி கிடைத்து ஆரவ்வை தீவிர யோசனையில் ஆழ்த்தியது.

முதலமைச்சர் அலுவலக கட்டிடத்தின் உள்ளே பத்திரிக்கையாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்திருக்க, தன் முன் இருந்த பல மைக்குகளின் முன் பேசிக்கொண்டிருந்தான் ஆரவ்.

“அனைத்து தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது முதற்கண் வணக்கங்கள். என் மீதான கொலை முயற்சியில் அதிர்ஷ்டவசமாக தப்பி உங்களின் முன் நிற்கிறேன் என்பதை இன்னுமே என்னால் நம்ப முடியவில்லை. உங்களின் பிரியமும் பாசமும்தான் என்னைக் காலனிடம் இருந்து காப்பாற்றியது என்று சொல்வேன். அதற்கு என் இதயங்கனிந்த நன்றிகள். நானும் என் மனைவியும் வேறு வேறு இல்லை… தவறான புரிதல்களால் அவங்களை நீங்கள் இனியும் குற்றம்சாற்ற மாட்டீர்கள் என்று நம்புகிறேன். காவல்துறை உண்மையான குற்றவாளியை வலைவீசி தேடி வருகின்றனர். அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க உங்களோடு நானுமே காத்துக்கொண்டிருக்கிறேன்” தெளிவாகக் கூறி தன் நீண்ட உரையை முடித்தான் ஆரவ்.

அதன் பின் கேள்வி நேரம் தொடங்க, “சார் நீங்க சொன்னதெல்லாமே சரிதான்… ஆனாலும் உங்க மனைவி குற்றவாளியா இருக்க வாய்ப்பிருக்குன்னு முந்தின நாள் பஞ்சர் செய்ததை வைத்து ஒரு சதவீத மக்கள் நம்புறாங்க… அவங்களுக்கு நீங்க என்ன பதில் சொல்றீங்க?” என

அழகாய் சிரித்தவன் கேள்வி கேட்டவன் வயதில் சிறிவனாய் இருக்கவும், “உங்களுக்கு கல்யாணம் ஆச்சா?” என்று வினவ,

“எஸ் சார்… ரெண்டு வருஷத்துக்கு முன்ன ஆச்சு”

“ஓகே பைன்… லவ் ஆர் அரேஞ் மேரேஜ்?”

அனைவரும் இவர்களின் உரையாடல்களை சுவாரசியமாக பார்க்க, வீட்டிலிருந்த பூங்குழலி, எதற்கு இதையெல்லாம் விசாரிக்குறான் என்று புரியாமல் தொலைகாட்சியில் பார்வையை பதித்திருந்தாள்.

அருகில் வேந்தனோ, “இருக்கு… இன்னைக்கு தரமான ஒரு சம்பவம் இருக்கு” ஆரவ்வின் முந்தைய பேட்டியின் அனுபவத்தில் அசீரிரி போல் சொல்ல

“என்னடா… சண்டை போட போறாங்களா?” என்றாள் இவள்.

“இல்லை பாரு பாரு…” என்றான் இளையவன்.

“லவ் மேரேஜ்தான் சார்” என்று அவன் கூறவும்

“பைன்… வெரி பைன்… அப்போ நான் கேட்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க. கல்யாணம் ஆன அடுத்த நாளே உங்க மனைவியை கண்டுக்க முடியாத அளவு வேலை நெட்டி முறிக்குதுன்னா அவங்க என்ன பண்ணுவாங்க?” என்றதும் கேட்டிருந்த அனைவர் உதடுகளிலும் புன்னகை.

“சார்… கோபப்படுவாங்க ஆனா சொன்னா புரிஞ்சிப்பாங்க சார்” என்றான் அவசரமாய்

“ஹாஹா… அப்படின்னா யூ ஆர் லக்கி ஆனா எல்லாரும் அப்படி இருக்கமாட்டாங்க… சில பேர் வேலைக்கு போகும் முன்னாடி ஏகப்பட்ட கலாட்டா பண்ணுவாங்க. அந்த சில பேர்ல என் மனைவியும் ஒருத்தங்க” சிரித்துக்கொண்டே சொன்னான் ஆரவ்.
கேட்டிருந்த பூங்குழலிக்கு உச்சிக்கு ஏறியது கோபம். கூடவே சங்கடமும்.

‘தான் செய்தது எதற்கு… அதையே சில பல வார்த்தைகள் திரித்து இவன் கூறுவது என்ன? அனைவரும் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்?’ என்ற சங்கோஜத்தில் தலையில் கைவைத்து பாதி முகத்தை மறைத்தவள் அருகில் சத்தமாக சிரித்துக்கொண்டிருந்த வேந்தனை அடித்து ரிமோட்டை வாங்கி தொலைக்காட்சியை அணைத்துவிட்டாள்.

“ஹாஹா… பூமா சத்தமில்லாம அண்ணா உன்னை கலாய்ச்சி விட்டுட்டாங்க ஹாஹா” என்று ஆரவ் கூறியதையும் பூங்குழலி முகபாவத்தையும் நினைத்து விழுந்து புரண்டு சிரிப்பவனை ஒன்றும் சொல்ல முடியாமல் அவனின் வாயை இரு கைகளாலும் பொத்தினாள் பூங்குழலி.

அங்கோ இன்னும் முடியவில்லை, “சார்ர்… இப்படி பப்ளிக்கா சொன்னா மேடம்ம்…” என்று மற்றொரு பெண் நிருபர் இழுக்க,

“கண்டிப்பா இதுக்கொரு கலாட்டா இருக்கும். என்ன பண்றது நீங்க கேட்குற கேள்வி என் தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமா இருக்கே… பதில் சொல்லைன்னா அவங்களுக்கு என்ன தோணுதோ அதை எடுத்துப்பாங்களே! ஆப்கோர்ஸ் இது என்மேல இருக்குற அக்கறைதான் என்றாலும் நான் முன்னமே சொல்லிட்டேன் ஐ பிலிவ் ஹெர் அண்ட் ஆல்சோ ஐ அம் இன் லவ் வித் ஹெர்” என்றான் அழுத்தம் திருத்தமாய்.

மேலும், “இதுக்கு மேல இந்த விஷயத்துல அவங்களை இழுக்க மாட்டீங்கன்னு நம்புறேன். அதற்காக முன்கூட்டியே உங்ககிட்ட நன்றியும் சொல்லி இந்த சந்திப்பை முடிக்குறேன்” இரு கை குவித்து நன்றி வணக்கம் சொல்லி எழுந்து நின்றான் ஆரவ்.

இரவில் வீட்டினுள் நுழைந்ததில் இருந்து ஆரவ்வின் கண்கள் மனைவியைத் தேட, கண்ணில் பட்டதென்னவோ வழக்கம்போல் பூவேந்தன்தான்.

பூங்குழலியின் பிரதிபலிப்பை அவன் வாயிலாக அறிந்தவனுக்கு தான் காதல் கூறியதை அவள் கேட்கவில்லை என்று சுணங்கினாலும், ‘கேட்டால் மட்டும் உடனே நம்பிவிடவா போகிறாள்?” என்று மனம் கேட்ட கேள்வியில் பெருமூச்சு வந்தது.

அவனுக்கு வேண்டியதெல்லாம் ஒன்றுதான். அவள் தன்னை விரும்பாவிட்டாலும் பரவாயில்லை நம்பவேண்டும்… தன் காதலை நம்பவேண்டும் அதை மட்டும் இப்போதைக்கு உணர்ந்து யோசிக்க ஆரம்பித்தாலே போதும்!

அதன்பிறகு அவள் அவனைக்குறித்து எந்த முடிவெடுத்தாலும் ஏற்றுக்கொள்வான். வாழ யோசித்தாலும் சரி பிரிவை நாடினாலும் சரி. ஆனாலும் அவனுக்கு ஓர் நம்பிக்கை… நூற்றில் தொன்னூறு சதவீதம் பிரிய வாய்ப்பே இல்லை என்று. பார்ப்போம் நம்பிக்கை நிஜமாகுமா என்று.

“எங்கேடா உன்னோட பூமா” என்றவனிடம்

“அவ கீழ வரவே இல்லைண்ணா… மேலேயே சாப்பிட்டு படுத்துட்டா” என்றான் இளையவன்.

“சரி பத்து நிமிஷத்துல குளிச்சிட்டு வரேன்” என்றுவிட்டு இரண்டிரண்டு படியாய் தாவி மாடிக்கு ஏறினான் ஆரவ்.

இருளாக இருந்த தங்களின் அறையைக் கண்டு, ‘நிஜமாவே தூங்கிவிட்டாளோ?’ என்றெண்ணி இரவு விளக்கை போட, அவளின் இடத்தில் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தாள் பூங்குழலி. முகம் சற்று சோர்ந்திருந்தது… முந்தின இரவின் உறக்கமின்மை, இன்றைய மனதின் அலைக்கழிப்பு எல்லாம் சேர்ந்து அடித்துப்போட்டாற் போல் உறங்க வைத்திருந்தது அவளை.

சத்தமின்றி குளித்து, உண்டு வந்து ஆரவ்வும் படுத்துவிட,

நள்ளிரவில் ஆழ்ந்து சயனித்திருந்த பெண்ணவளின் மூளையில் கனவொன்று உதயமாகி, சற்று நேரத்தில் எல்லாம் அவை காட்சிகளாக ஓட ஆரம்பித்தது.

தன் முன்னே நின்றிருந்த ஆரவ்வின் நெஞ்சில் கூர்மையான பளபளக்கும் கத்தியை மொத்தமாக இறக்கினாள் அவள். அதில் கைகள் முழுதும் சூடான செங்குருதியால் நனைய, வலியில் துடித்து கீழே விழுந்தான் ஆரவ்.

சரியாக அந்த நேரம் போலீஸ் நுழைந்து அவளைக் கைது செய்ய, கீழே சுயநினைவை இழக்கும் கடைசி நொடியிலும், “அவள் என்னைக் குத்தவில்லை” என்றவாறு ஆரவ் மயக்கத்திற்கு செல்ல, கனவு அறுந்து விழ, திடுக்கிட்டு விழித்தெழுந்தாள் பூங்குழலி.

மத்தளமென அதிர்ந்து கொண்டிருந்த இதயத்தோடும் பெரிய பெரிய மூச்சோடும் எழுந்து, அருகில் படுத்திருந்த ஆரவ்வை கவனிக்க, ஏசி காற்றையும் மீறி வியர்த்து வழிந்தது அவளின் மொத்த தேகமும்.

தன் வார்த்தைகள் மூலமாக பெண்ணின் தூக்கத்தை கெடுத்து, மனதின் ஓரத்தை உரசிச் சென்றவன் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருக்க, ஓரத்தை விட்டுக்கொடுத்தவளோ அதை உணராமல் கனவின் தாக்கத்தில் உறக்கமின்றி தவித்திருந்தாள் இரவு முழுவதும்!

அலைகடல் ஆர்ப்பரிக்கும்…

 

 

 

 

error: Content is protected !!