அலைகடல்-28

IMG-20201101-WA0016-29c4945f

அலைகடல்-28

இரவெல்லாம் யோசித்ததில் ஆரவ்வைக் கொல்லவேண்டும் என்று முன்னர் யோசித்ததெல்லாம் முற்பிறவி போல் இருந்தது.

‘கொன்றால் என்ன… ஜெயிலில் தூக்கி போடுவார்கள் அவ்வளவுதானே’ என்று நினைத்தவள், கனவென்றாலும் கண்முன்னால் போலீஸ் கைது செய்ய வருகையில் இத்தனை வருடங்கள் தான் வாழ்ந்த தவ வாழ்க்கையே களங்கப்பட்டு போவதை நன்கு உணர்ந்தாள்.

இதற்காகவா அவள் போராடினாள்? இதற்காகவா உயிர் துறக்கும் கடைசி நொடியில் சுதாரித்து உயிரைப் பிடித்து வைத்தாள்?

நினைத்து நினைத்து ஆறவேயில்லை பூங்குழலிக்கு. மேலும் இந்த கனவினால் இன்னமும் அவளின் மனநிலை மோசமானதுதான் மிச்சம்.

‘என்ன நினைக்கிறேன் நான்… நம் ஆழ்மன எண்ணங்கள்தான் கனவாக வரும் என்பது உண்மையென்றால் அவனை நான் நம்பத்தொடங்குகிறேனா என்ன? இங்கிருந்து செல்ல மூன்று வாரங்கள் இருக்கையில் முதல் வாரத்திலே இவ்வளவு குழப்பமா என்றிருந்தது.

இதே சிந்தனையில் இருந்தவளுக்கு இப்போது புதிதாக ஒரு சந்தேகம். ‘மூன்று வாரத்தில் கேஸ் முடிந்துவிடுமா? குற்றவாளியை அதற்குள் கண்டுபிடித்துவிடுவானா? அப்படி பிடிக்கவில்லை என்றால் நேவிக்கு செல்ல முடியாது. அப்போது என் வேலை என்னாகும்?’ வரிசையாக விடையில்லா கேள்விகள் மனதில் முட்டி மோத, வீட்டில் இருக்கும் ஆபிஸ் அறை நோக்கி சென்றாள்.

அங்கே ஆரவ் ரித்தேஷிடம்தான் பேசிக்கொண்டிருந்தான். “இந்த லிஸ்ட்டையும் சந்தேக லிஸ்ட்ல சேர்த்துக்கோ. எதுக்கும் அர்ஜுனை கண்காணிச்சிட்டே இருங்க அவனை நம்பமுடியாது. யாரு என்னன்னு சின்னதாக துப்பு கிடைச்சாலும் நம்மாளுங்க கிட்ட சொல்லிரு ரித்தேஷ் அவங்க பார்த்துப்பாங்க” என்று கூறிக்கொண்டிருந்தவன் பூங்குழலி தலை அறைக்கு வெளியே தெரிந்ததும் நிறுத்தினான்.

கதவைத் தட்டி உள்ளே வந்தவள் இன்னொரு ஆடவனை பார்த்தாலும் யாரென்று தெரியாததால் நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.

“எப்போ இந்த கேஸை முடிப்பீங்க?” என்றவளை நேற்று பேட்டி கொடுத்த பின் இப்பொழுதுதான் நன்றாக பார்க்கிறான் ஆரவ். சோர்வு நீங்கியிருந்தாலும் குழப்பம் மட்டும் முகத்தில் தெளியவில்லை.

“எவன் பாம் வைத்தானோ அவன் மாட்டியதும் கேஸ் முடிஞ்சிரும் பூங்குழலி” என்றான் வேண்டுமென்றே.

“பச்… அமுதன் நான் சீரியஸா கேட்கிறேன். இன்னும் மூன்று வாரத்துல நான் நேவிக்கு போகணும் அதுக்குள்ள முடியலைன்னா என்ன பண்ணுவாங்கன்னே தெரியல” என்று டென்ஷனுடன் கூற,

அவள் செல்ல வேண்டும் என்று கூறியதில் அகம் மாறினாலும் முகம் மாறாமல் காத்தவன், “அதை இவங்ககிட்டயே கேளு… பை த வே ஹி இஸ் ரித்தேஷ், மை பிரைவேட் டீடெக்ட்டிவ் கம் யுவர் கொலீக் ரியாஸ் பிரதர்” என்று அறிமுகப்படுத்த, ரியாஸின் அண்ணன் என்பதால் சிறு புன்னகை புரிந்தவள், அவனின் பதிலுக்காக கேள்வியாக நோக்கினாள்.

“மேம் நாங்க முழு மூச்சா கண்டுபிடிச்சிட்டுதான் இருக்கோம்… அதிகபட்சம் ஒரு வாரம் அதுக்குள்ள முடிச்சிருவோம்” என்று விளக்க, தலையசைத்து கேட்டுக்கொண்டாள். அதன்பின் அவன் விடைபெற்று கிளம்ப,

“அப்புறம் மேடம் இங்கிருந்து கிளம்புறவரை ஏடாகூடமா எதையும் பண்ணி இன்னும் இழுத்துவிடாம கம்முன்னு இருந்தா பத்திரமா நேவிக்கு போய் கடலை தாராளமா தாங்கலாம்” என்றான் குரலில் நக்கலை தேக்கி,

என்ன சொல்ல முடியும் இவளால்! ஒரு சின்ன விஷயம். அது இவ்வளவு பெரிதாக மாறி அவளையே இறுக்கும் என்று எதிர்பார்த்தாளா என்ன? அப்படி இறுக்கியதால் அல்லவா இவனின் கேலியை எல்லாம் கேட்கும் நிலைக்கு வந்திருக்கிறாள்.

‘போடாங்’ என்று சொல்லி வீட்டை விட்டே செல்ல ஒரு நிமிடம் ஆகாது. அவளுக்கும் கழுத்தளவு ஆசைதான். ஆனால் வேந்தனுக்காக பார்ப்பது போய் இப்போது தனக்காகவும் பார்க்கவேண்டி இருக்கிறதே. இப்போது நாம் சென்றால் இவனே தன்னை கொலைகாரி என்று கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!

“நேத்து நீ அளந்து விட்ட பிறகும் எதையாவது செஞ்சி வைக்க எனக்கென்ன பைத்தியமா” என்றவாறு பூங்குழலி விருட்டென்று வெளியேற,

‘உனக்கு பைத்தியம்ன்னு எவனாவது சொல்வானா உன்னை காதலிச்ச என்னை வேணா சொல்லலாம்’ என்று மனதோடு சொல்லிக்கொண்டான் ஆரவ்.

வெளியே வந்தவள் நடன வகுப்பிற்கு தயாராகி வந்த வேந்தனை பார்த்து, “எங்கேடா கிளம்பிட்ட?” என

“போகும்போது எங்கே போறன்னு கேட்காத பூமா” என்றான் அவன்.

“ஒஹ் சரி கேட்கலை நீயே சொல்லிட்டு போ” என்றவளை நெருங்கி பின்னால் தள்ளியவன்,

“என்ன காமெடியா பேசுறதா நினைப்பா? கழுதை கெட்டா குட்டி சுவரு… நான் எங்கே போவேன் என் டான்ஸ் கிளாஸ விட்டா” அவளின் தோளில் மேல் கைபோட்டவாறு செல்லம் கொஞ்சிச் சொல்ல,

இதைப் பார்த்துக்கொண்டே வந்த ஆரவ், “இவன் ஒருத்தன்… அப்போ அப்போ கடுப்பைக் கிளப்பிட்டு” என்று வழக்கம் போல் மனதுள் முணுமுணுத்தான்.

பூங்குழலி, “அதெல்லாம் வேண்டாம்… ஒரு வாரம் வீட்டில் இரு அப்புறமா போடா” என

“பூமாஆஆ ஒரு வாரமெல்லாம் இங்க ஈ ஓட்ட முடியாது. நேத்து நடந்த களேபரத்துல வேற வழி இல்லாம எடுத்தேன்… இந்த போட்டி எனக்கு மட்டும் இல்ல எங்க டான்ஸ் கிளாஸ்க்கே முக்கியம். அண்ணா தேவையான செக்யூரிட்டி போட்டுதான் அனுப்புறாங்க கேட்டுப்பார்” என்றவாறு ஆரவ்வை கைகாட்டினான் வேந்தன்.

பூங்குழலி, “சொன்னா கேளு… எனக்கென்னமோ மனசே சரியில்லை” எனவும் ஆண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

‘இதுக்கேவா! அப்போ முன்னாடி நடந்த முயற்சியெல்லாம் சொன்னால் என்ன சொல்வாள்?’ என்பதுபோல்.

ஆம்… இத்தனை வருடங்களில் இது முதல் கொலை முயற்சி அல்லவே! ஆனால் என்ன இம்முறை கவனக்குறைவால் நூலிழையில் உயிர் தப்பியிருக்கின்றனர்.

“அதுக்காக பயந்து வீட்டில் உட்கார்ந்தா ஆச்சா? அதெல்லாம் அவனுக்கு தேவையான பாதுகாப்பு பக்காவா இருக்கும். டேய் இன்னைக்கு நானே உன்னை கொண்டு விடுறேன் வா” என்றவாறு இருவரும் கிளம்ப, காரின் முன் பக்கம் ஆரவ் அருகே அமர்ந்து பூங்குழலியைக் கண்டு கையசைத்தான் வேந்தன். அவன் செய்வதைக் கண்டு கூடவே ஆரவ்வும் கையசைக்க, பார்க்கவே கண்கொள்ளா காட்சியாகதான் அது இருந்தது.

இவளோ, ‘மனுஷிய மருந்துக்கும் மதிக்குறதில்லை… இருக்கட்டும் ஏதாவது ஆச்சு அப்புறம் பார்த்துக்குறேன்’ எரிச்சலில் வீட்டைப்பூட்டி குளிக்கச் சென்றாள்.

குளித்து உடைமாற்றியவளின் கண்களில் அலமாரியின் கடைசியில் இருக்கும் பெட்டி தட்டுப்பட, ஆரவ் அலமாரியை வாரிச் சுருட்டி அதில் போட்டதும் நினைவு வந்தது.

வீட்டில் யாருமில்லாததால் இப்போது பார்க்கலாம் என்றெண்ணி பெட்டியையும் புதிதாக வாங்கிய செல்பேசியையும் எடுத்து படுக்கையில் வைத்தாள்.

இதுவரை கிடைத்த அதிர்ச்சிகளை எல்லாம் தூக்கி சாப்பிடும்படியான அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் உள்ளடக்கி பூங்குழலிக்கு பரிசளிக்க அமைதியாக காத்திருந்தது அது.

முதலில் செல்பேசியில் எடுத்து வைத்திருந்த துருப்பு சீட்டுகள் ஒவ்வொன்றாய் பார்வையிட, அர்ஜுன் குடும்பத்தின் தவறுகளெல்லாம் பக்கவான ஆதாரத்தோடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

அதில் ஆள் கடத்தல், கொலை எல்லாம் பெரியவர்கள் அருள்ஜோதியும் புருஷோத்தமனும் செய்திருக்க, அர்ஜுனோ சொத்து குவிப்பில் கில்லாடியாக இருந்தான். இதுமட்டும் வெளியே இவன் விட்டால் அவர்களின் மொத்த வாழ்வும் க்ளோஸ்.

இருந்தும் ஏன் விட்டு வைத்திருக்கிறான் என்று தெரியாமல், அதையெல்லாம் ஒரு பொருட்டாக மதிக்காமல் கடந்தவளின் முன் பூவேந்தன் பிறப்பு குறித்து சில சாட்சிகள் சிக்க, அதனை பார்க்க ஆரம்பித்தாள்.

ஐந்து வருடங்களுக்கு முன்னால் எடுத்த காணொளியில் இருந்து…

சுமார் நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் தலை கைகளில் ஏற்பட்ட காயத்தால் கட்டு போடப்பட்டு படுத்திருக்க, அவர் அருகில் டிப்டாப்பாக நாற்காலியில் அமர்ந்திருந்த இளைஞன், “சொல்லுங்க… எதுக்காக புருஷோத்தமன் ஆளுங்க உங்களை கொல்லப்பார்க்கணும்?” என்று விசாரித்தான்.

“நான் என் மகளோட கல்யாணத்துக்காக முப்பது லட்சம் கேட்டு அவங்களை மிரட்டினேன். பணம் வாங்குவதற்கு நான் போகாம இன்னொரு ஆளை அனுப்பினேன். ஆனா அவனை பிடிச்சி மிரட்டி, என்னை கண்டுபிடிச்சி கொல்ல வந்துட்டாங்க. அப்போதான் நீங்க என்னை காப்பாத்துனது” என்றார் அவர்.

“எதுக்காக அவர் பணம் தர ஒத்துகிட்டார்… என்ன சொல்லி மிரட்டுனீங்க?” என்ற கேள்விக்கு பதில் கூற அவர் சற்று தயக்கம் காட்டியது போல் இருந்தது.

“எங்ககிட்ட சொன்னா எங்க சாரே உங்க பொண்ணு கல்யாணத்தை ஒரு குறையும் இல்லாம பாதுகாப்பா நடத்தி வைத்து வேற ஊருக்கு அனுப்புவார். இல்லைன்னா எப்போ அந்த புருஷோத்தமன் ஆளுங்க கிட்ட நீங்கலாம் மாட்டுவீங்களோ தெரியாது. உங்க அதிர்ஷ்டம் நாங்க புருஷோத்தமனை கண்காணிச்ச நேரமா பார்த்து அவர் கிட்ட சிக்கிருக்கீங்க. அடுத்தமுறையும் உதவி செய்வோம்ன்னு எதிர்பார்க்காதீங்க” என

அது நன்றாக வேலை செய்து உடனடியாக வாய் திறந்தார்.

“பத்து வருஷம் முன்னால முதலமைச்சரோட குழந்தையை கொன்னு எங்கேயாவது புதைச்சிரும்படி சொல்லி என்கிட்ட தூக்கி கொடுத்ததே அவருதான். அதான் அதை அவங்க குடும்பத்துக்கிட்ட சொல்லிருவேன்னு பணம் புரட்ட வேண்டிய இக்கட்டான சூழ்நிலைல மிரட்டினேன். இல்லைன்னா என் பொண்ணு ஆசைப்பட்டவனை கட்டிக்க முடியாத சோகத்துல செத்துருவாப்பா” என்று அழ

“உங்க பொண்ணு என்றால் வலிக்குது இதே அடுத்தவன் குழந்தை என்றால் கொன்னுருவீங்களோ?” கடுப்போடு கேட்டான் அந்த டிப்டாப்.

“இல்ல சார் இல்ல… நான் கொலை எல்லாம் என்னைக்கும் செஞ்சதே இல்லை. சின்ன சின்ன கடத்தல், அடிதடின்னுதான் தொழிலை ஓட்டினேன். எங்காவது வெளி மாநிலத்துக்கு போய் ஆசிரமத்துல விட்டுறலாம்ன்னு நினைச்சிதான் குழந்தையை வாங்கிட்டு கிளம்பினேன். ஆனா எல்லா இடத்திலையும் போலீஸ் சல்லடையா சலிக்க, என்னால சென்னையைத் தாண்ட முடியல.

அதான் ஒரு குப்பைத்தொட்டில வச்சிட்டு கிளம்பிட்டேன். ஆனாலும் நானும் ரெண்டு குழந்தைக்கு அப்பன்தானே… மனசு கேட்காம திரும்ப எடுத்துட்டு வர போனப்போ ஒரு புண்ணியவான் குழந்தையை தன்னோட எடுத்துட்டு போனதை பார்த்தேன். எதுக்கு எடுத்துட்டு போறாருன்னு பின்னாடியே போய் பார்த்தா *** மருத்துவமனைல அவரோட இறந்துபோன குழந்தைக்கு பதிலா இந்த குழந்தையை தன் குழந்தையா வளர்க்க போறதா டாக்டர்கிட்ட சொல்லிட்டு இருந்தார். எந்த சாமி புண்ணியமோ குழந்தை நல்ல இடத்துல போய் சேர்ந்துட்டான்ங்கிற திருப்தில நானும் கிளம்பிட்டேன்” நீண்ட நேர பேச்சின் விளைவாக இருமலுடன் முடித்தார் அவர்.

அதன் பிறகு புருஷோத்தமனை மிரட்டிய ரெக்கார்ட் இருக்கிறதா என்று கேட்டு அந்த ஆதாரத்தையும் கைப்பற்றியதோடு முடிந்தது காணொளி.

அதற்கு பின்னே அந்த மிரட்டல் ரெக்கார்ட் ஓட, அதனை அணைத்துவிட்டாள் பூங்குழலி.

இதுதான் முதலில் அவனிற்கு கிடைத்த ஆதாரமாக இருக்கும். இதை நூல் பிடித்தே மற்றவையெல்லாம் கண்டுபிடித்திருப்பான் என்று புரிந்துக்கொண்டாள் அவள்.

ஆனால் எப்படி சரியாக குட்டா அவன் தம்பி என்று தெரியாமலே அவனிடம் வந்து சேர்ந்தான்! விதியின் விசித்திரத்தில் இதுவும் ஒன்றுதான் இல்லையா.

சற்றுநேரம் அமைதியாய் அனைத்தையும் அசைபோட்டவள் பின், ‘தன்னுடையதில் என்ன வைத்திருப்பான்? நாம்தான் ஒரு தவறும் செய்யவில்லையே… ஹ்ம்ம் அது கூட துருப்புச்சீட்டுல இல்லாம தனியாதானே இருந்தது’ என்றவாறு அதனுள் போக,

சென்னை வந்த பிறகு வெளியில் சுற்றியதெல்லாம் வீடியோவாகவும் புகைப்படமாகவும் அதில் நிறைந்து இருந்தது. ‘ஆக என்னை பின்தொடர்வதையே தொழிலாக வைத்திருந்தான் போலும்’ என்றெண்ணி முடிக்கவில்லை,

அடுத்தடுத்து வீட்டினுள் டீவி பார்த்துக்கொண்டிருந்தது, தலைகுனிந்து சாப்பிட்டது, தம்பியுடன் ஹால் சோபாவில் விளையாடியது, செய்தித்தாள் படித்தது, தோட்டத்தில் உலாவியது அனைத்தும் வரிசையாக வர, உச்சபட்சமாக முதலிரவன்று அவள் ஆழ்ந்து தூங்கியதையும் அழகாக படம்பிடித்திருந்தான் ஆரவ்… பூங்குழலியின் அமுதன்.

அதுவரை இருந்த இயல்புநிலை மாறி பெண்மைக்கே உரிய எச்சரிக்கை உணர்வு தலைதூக்க, அடிவயிற்றையே புரட்டிபோட்டு குப்பென்று அங்கிருந்து உருவமில்லாமல் ஏதோ எழுந்து அவளின் நெஞ்சை அடைத்தது.

அதில் நெஞ்சம் நடுங்க, ‘என்ன இதெல்லாம்… இதைக்கூட கவனிக்காம என்ன பண்ணி தொலைச்சேன்’ என்று ஒரு மனம் கேள்வி கேட்க,

மற்றொரு மனமோ, ‘நீ எங்கே அவனை நிமிர்ந்து பார்த்தாய்? அவன் இடப்பக்கம் வந்தாலே உன் கழுத்து வலப்பக்கம் போய் சுளுக்கிக்கொள்ளும். இதில் எங்கேயிருந்து இதெல்லாம் கவனிக்க?’ என்று நகைத்தது. அதில் தலையைப் பிடித்துக்கொண்டாள் பூங்குழலி.

‘அமுதன் என்னை விரும்புகிறானா? அதெப்படி சாத்தியம்? இல்லை இருக்காது நான் அப்படி உணரவேயில்லை. அப்படியென்றால் இதெல்லாம் என்னது? இதற்கு என்ன அர்த்தம்?’ யோசித்து யோசித்தே தலைவலி வரும்போல் இருந்தது.

அழுத்தி தலையோடு முகத்தையும் துடைத்தவள், “கண்டுபிடிக்குறேன்… என்ன நடக்குது என்னை சுத்தின்னு கண்டுபிடிக்குறேன் அதுவரை குழப்பிக்க வேண்டாம்” என்றாள் ஸ்தரமாய்.

பெட்டியை திறந்து அதிலிருந்த பாத்திரங்கள், சான்றிதழ்கள் அனைத்தும் பொறுமையாய் வெளியே எடுத்துவைத்து ஒவ்வொன்றாய் பார்வையிட, சொத்து பத்திரங்களே அதிகம் இருந்தது.

“இவ்வளவும் நேர்மையா சம்பாதிச்சதா? இத்தனையும் சேர்த்து வைத்து என்ன செய்வது?” என்றவாறு அடுத்ததை எடுக்க, அவன் கீழ் இயங்கும் பல ஆசிரமங்கள், டிரஸ்ட் குறித்து காட்டியது அது.

“நல்லது… ஏதோ பாவத்தோடு புண்ணியமும் சேர்த்து வைக்குறான் போல. இல்லை என்றால் ஒரேடியா நரகத்துல எண்ணெய்ச் சட்டிக்குள்ளதான் நீச்சல் அடிக்கணும்” இவ்வளவு நேரத்தில் இதை பார்த்ததும் மனம் சற்று லேசாக கிண்டல் கூட வந்தது.

அதற்குள் மதியம் ஆகவும் பசி வயிற்றைக்கிள்ள, மாலை வேந்தன் வருவதற்குள் இதை முடிக்க வேண்டும் என்றெண்ணி இன்றும் கீழே செல்லாமல் உணவை அறையிலேயே முடித்தாள் அவள்.

மீண்டும் முன்னை விட வேகமாக படிக்க ஆரம்பிக்க, வேந்தனின் பெயரில் இருக்கும் சொத்துக்கள் ஒவ்வொன்றாய் வர ஆரம்பித்தது. பினாமி சொத்தா என்று பார்த்தால் தன் பெயரில் உள்ள தியேட்டர் ஒன்றை எழுதி வைத்திருந்தான். கூடவே அதில் இருந்து வந்த வருமானத்தில் ரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை வீடு, மால் என்றும் வாங்கி கொடுத்திருக்க, பார்த்தவளுக்கு எப்படி இருக்குமாம்?

‘தம்பியென்றும் பாராது கொல்லப்போவதாய் தன்னிடம் சொன்னவன், பழி வாங்குவதற்காக மட்டுமே தன்னுடன் வைத்திருப்பதாக கூறியவன் செய்யும் வேலையா இது?

துளி பாசம் இல்லாமல்தான் அவன் சொத்தை இவனிற்கு தூக்கி கொடுத்தானா இருக்கும்? சரி உண்மை தெரியும் முன்பே தியேட்டர் எழுதி வைத்தான் என்றாலும் போன வருடம் வாங்கிய மால் எதற்காக?

ஆக மிரட்டலும் அர்த்தமற்ற மிரட்டல்தானா? அதை நம்பி தான் திருமணம் செய்ததுதான் மிச்சம்!’

எத்தனை முறைதான் தன் தலையில் கை வைப்பாள் அவள். ஆனாலும் வேறு வழியும் அப்போதைக்கு தெரியாததால் சத்தமின்றி நெற்றியில் கைவைத்து அமர்ந்துக்கொண்டாள்.
இப்பொழுது சந்தேகமே இன்றி மனம் ஐயம் திரிபுர அடித்துக்கூறியது அவன் உன்னை விரும்புகிறான் என்று. நடிகனுக்கு நடிக்கச் சொல்லியா தரவேண்டும்.

திரையில் காதலிப்பது போல் நடிக்கத் தெரிந்தவனுக்கு நிஜத்தில் காதலை மறைத்து நடிக்க தெரியாதா… ஆனால் ஏன்? அப்படி என்ன செய்து விட்டேன் நான்… பார்க்கும்போதெல்லாம் திட்டி, சண்டையிடுவதை தவிர. என்ன கண்டான் என்னிடம்?’ கேள்விகள் அதை தொடர்ந்து இதை எப்படி எடுத்துக்கொள்ள என்று தெரியாத குழப்பங்கள் எல்லாம் அலையலையாய் எழுந்து பெண்ணவளைத் தாக்கியது.

அதன் தாக்கத்தை குறைக்க தலையை உதறியவள், கையில் பட்டதை புரட்ட,

அமெரிக்காவில் பள்ளி மற்றும் கல்லூரி முடித்திருப்பதாக காட்டிய அனைத்து சான்றிதழிலும் பெயர் இருக்கும் இடத்தில் ‘அமுதன்’ மட்டுமே இருக்க, ஆரவ் என்கிற பெயரோ மருந்திற்கும் கண்ணில் படவில்லை.

ஆரவ் என்றே இங்கு தமிழ்நாட்டில் திரையில் அறிமுகம் செய்யப்பட்டதாக நினைவு. புனைபெயர் அதுவென்றால் அவனின் உண்மைப்பெயர் அமுதனா!

சினிமாவிற்காக ஆரவ்வாக வந்து அரசியலுக்காக ஆரவமுதனாக மாறியிருக்கிறானா?

“மிஸ்டர் ஆரவமுதன்” என்று தான் அழைக்கையில் அதைப் பிடிக்காமல், ‘அமுதன் வேண்டாம் ஆரவ் என்று மட்டும் அழை’ என்றானே.

அவன் வேண்டாம் என்றதை தான் வேண்டுமென்றே கூறி அழைக்க, அப்போது அவன் கண்களில் வெளிப்பட்ட பாவனை… நினைத்ததை சாதித்ததும் வரும் பாவனை. அன்று புரியாதது இன்று புரிந்தது. புதிராக இருந்த அனைத்தும் அதனதன் இடத்தில் கச்சிதமாக அமரும் உணர்வு.

“கடவுளே!” வாய்விட்டு புலம்பியவளுக்கு அவன் சொல்லாக் காதல் சிறிது சிறிதாக ஆழமாய் செல்வதுபோல் தோன்ற, அதன் சுழலில் சிக்கி திணறும் பிரமை. அதற்கு மேல் முடியாமல் படுக்கையில் சுருண்டுவிட்டாள்.

மூளை கொஞ்சம் கொஞ்சமாய் இனி செய்ய வேண்டியவற்றிக்கு வழிகாட்டிக்கொண்டிருந்தது.

‘இனி தன்னை எதுவும் கட்டுப்படுத்தாது. குட்டாவின் உயிருக்கும் ஆபத்து நேராது. எல்லாம் தன்னை ஏய்க்க அவன் கூறிய பொய். இதற்கு மேல் தான் இங்கு இருக்கவேண்டிய கட்டாயமோ அவசியமோ இல்லை’

‘கிளம்பி விடு பூங்குழலி… உன் வீட்டிற்கு கிளம்பி விடு’ மூளை கட்டளையிட உடல் அதன் சொல்லை ஏற்று எழ ஆரம்பித்தது.

ஆனால் மூளை சொல்வதை மனம் என்றேனும் மறுப்பின்றி கேட்டிருக்கிறதா என்ன!

‘இப்போது நீ கிளம்பினால் கண்டிப்பாக மக்கள் பார்வை மீண்டும் உன்புறம் திரும்பும். அமுதன் ஒன்றும் சொல்லாவிட்டால் கூட அவன் பரப்பி விட்ட கதைகளால் மற்றவர்கள் குற்றவாளி நீதான் என்று ஏக மனதாய் முடிவு கட்டினாலும் கட்டுவார்கள்” நியாயமாய் நிதர்சனத்தை முன் வைத்தது அது.

“வரட்டும் அவன்… இன்னைக்கு இரண்டுல ஒன்னு பார்த்திருவோம்” என்றவாறு அனைத்தையும் உள்ள வைத்தவளின் கையில் கடைசியாக இருந்த டைரி தட்டுப்பட, அதை எடுத்து முதல் பக்கத்தை புரட்டினாள் அவள்.

பத்மாவதி தேவி என்னும் பெயர் கொட்டை எழுத்தில் அழகாக முன் பக்கத்தை அலங்கரிக்க, அமுதனின் தாய் பெயரோ என்றெண்ணியவாறு அவள் விரல்கள் அதன் அழகில் ஒருமுறை வருடியது.

அடுத்த பக்கத்தில், ‘என் ஆசை மகன் அமுதனுக்கு’ என்றதன் கீழே பத்தி பத்தியாய் கடிதம் எழுதிருக்க, சிறிதும் தயக்கமின்றி அதை வாசிக்கத் தொடங்கினாள் பூங்குழலி.

அலைகடல் ஆர்ப்பரிக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!