அலைகடல்-29.1

IMG-20201101-WA0016-0d4d609c

என் ஆசை மகன் அமுதனுக்கு…

என்னடா அம்மா டைரிலாம் எழுதி வச்சிருக்காங்க என்று பார்க்குறியா? எல்லாம் உனக்காகதான். ஒருவேளை தீடீர்ன்னு நான் இந்த உலகத்துல இல்லாம போனா அடுத்து என்னன்னு நீ திகைச்சி நின்னுற கூடாதுல்ல. ஒரே உறவும் இழந்து நீ தடுமாறிப் போயிட்டா என்னால தாங்க முடியுமா அமுதா?

அதுக்குதான். நான் இந்த உலகத்தில் இல்லாம போனாலும் நீ அழக்கூடாது. எனக்காக என்றில்லை எதற்காகவும் கலங்கக்கூடாது.

இந்த உலகம் என்னையும் தாண்டி உனக்காக பரந்து விரிந்திருக்கு கண்ணா. அதில் சந்தோஷமா உன்னோட மிச்ச வாழ்க்கையை வாழு… நான் எங்கிருந்தாலும் உன்னை பார்த்துட்டே இருப்பேன்.

இப்போ நான் இதை எழுதிட்டு இருக்கிறதுக்கான காரணம் உனக்கு சில உண்மைகள் தெரியணும் என்றுதான். என்ன நடந்தது? ஏன் உன் பெற்றோர் பிரிந்தாங்க… இதெல்லாம் நீ எனக்காக கேட்காவிட்டாலும் சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு உண்டுதானே.

உனக்கு தெரிஞ்சதெல்லாம் அப்பா வேற கல்யாணம் பண்ணிட்டாங்க அதனால அம்மா பிரிஞ்சி வந்துட்டாங்க அவ்வளவுதான். நடந்தது என்னமோ அதுதான் ஆனால் முழுக்க முழுக்க தப்பு உங்கப்பா மேல் மட்டும் இல்ல என் மேலயும் இருக்கு.

நடந்த எல்லாத்தையும் சொல்லணும் சொல்லணும்ன்னு நினைப்பேன் ஆனா ஏனோ உன் முகத்தைப் பார்த்து சொல்ல முடிந்ததில்லைடா. சொன்னா என் உணர்வுகளை சரியா புரிஞ்சிப்பியா அப்படிங்குற பயத்துலயே சொல்லாம விட்டுட்டேன் அதுக்காக அம்மாவை மன்னிச்சிரு.

பத்து வயது வரை அப்பா என்றிருந்த உறவை ஒரே நாள்ல அறுத்து அமெரிக்கா கூட்டிட்டு வந்தப்போ அது எனக்கு தப்பா தெரியல. ஆனா இப்போ யோசிச்சு பார்க்குறேன்… கொஞ்சம் என் சுயமரியாதையை விட்டிருந்தா, தன்மானத்தை சிதைச்சிருந்தா நீ உன் தந்தையை பிரிய வேண்டி இருந்திருக்காது. யார் கண்டது அவர்கள் வீட்டில் உன்னை வாரிசா ஏற்றுக்கொண்டிருந்தாலும் இருக்கலாம்!

என்ன புரியலையா? அதுக்கு உனக்கு முதல்ல இருந்து சொன்னாதான் புரியும்.

என் அம்மா… அதாவது உன் பாட்டிதான் என்னை கஷ்டப்பட்டு வளர்த்தது. சாப்பாட்டிற்கே வழி இல்லாம எத்தனையோ நாள் இருந்திருக்கோம். அந்த நிலைமைல எதிர்பாராத விதமா விபத்துல சிக்குன வடநாட்டு குடும்பத்தை தன்னோட ரத்தம் கொடுத்து காப்பாத்துனாங்க எங்கம்மா. அதுதான் எங்க வாழ்க்கையோட முதல் திருப்புமுனை. அந்த நன்றிக்காக எங்களை அவங்க கூடவே வீட்டை பார்த்துக்குற வேலைக்காக அழைச்சிட்டு போனாங்க.

அந்த குடும்பத்து தலைவர் ஒரு கல்லூரி பேராசிரியர். என்னை படிக்க வைத்ததும் அவர்தான். நானும் கிடைத்த வாழ்க்கையோட அருமை புரிந்து கெட்டியாக பிடித்து படித்தேன். பள்ளி முடிஞ்சி கல்லூரியில் சேர எதை படிப்பது என்று யோசித்தபோது பேராசிரியரே அவரோட கல்லூரில அந்த காலத்துல அவ்ளோவா மக்கள் மத்தியில் புகழ் பெறாத கணினி படிப்பை எடுக்க சொன்னார்.

தயங்கிய என்னை நகரங்களில் பரவலாக தொடங்கிய கணினி செயல்பாடு பத்தி புரிய வைத்து இதை படிச்சா உன் எதிர்காலம் பிரகாசமா இருக்கும் என்று கூற, கண்ணை மூடி பலத்த போட்டிக்கு மத்தியில் கல்லூரியில் தேர்வாகி சேர்ந்தேன்.

அங்கே தமிழ்நாட்டுல இருந்து வந்த ஒரே ஆண்மகனா உங்க அப்பா இருந்தார். அதுதான் என் வாழ்க்கையில் இரண்டாவது திருப்புமுனை. ஒரே ஊர் என்ற பாசம்… தானாகவே சென்று பேச ஆரம்பித்தேன். என்னோட தவறுகளின் தொடக்கமா இருந்ததும் அதுதான்.

அவர் தான் யார் என்று எங்கேயும் சொன்னதே இல்லை. சாதாரண குடும்பத்தில் இருந்து கஷ்டப்பட்டு வந்ததாகதான் சொன்னார். அதனால் பழக்கம் நெருங்கி காதல்ல முடிஞ்சது.
அவரும் என்னை அன்று உண்மையா நேசிச்சார்தான். எங்கள் காதல் பொய்யில்லை. ஹ்ம்ம் முட்டாளின் சொர்க்கமா தெரியுதோ? பரவால்ல இருக்கட்டும்… நிஜமாவே அந்த காலங்கள் எல்லாம் இந்த முட்டாளின் சொர்க்கம்தான்!

யார் எவர்ன்னு அவர் சொல்லாம இருக்கலாம் ஆனா படிக்க சென்று படிப்பை மட்டும் பார்க்காமல் காதலிக்கலாமா? என் தவறுதான்.

ஒருநாள் என்னோட அம்மா படுத்த படுக்கையானாங்க, அவங்க கடைசி ஆசையா ஒருத்தன் கையில் என்னை பிடிச்சி கொடுக்க முடியலையேன்னு அழுதாங்க, எனக்கு மனம் தாங்கவில்லை. அதான் எனக்காக இவர் இருக்கிறாரேன்னு அவங்க முன்னாடி இழுத்துட்டு போய் கல்யாணமும் பண்ணிக்கொண்டேன். அடுத்த பெரிய தவறு… பெரியவர்களின் சம்மதம் இல்லாமல் சிறுபிள்ளைத்தனமாய் நான் எடுத்த முடிவு.

அதைக்கூட விட்டுவிடலாம் ஆனால் வீட்டில் இப்போது சொல்ல வேண்டாம் படிப்பை முடித்து சொல்வோம் என்றவரிடம் சரி என்ற எனக்கு, அவரை அதுவரை தள்ளி இருப்போம் என்று சொல்லத்தோன்றவில்லை. விளைவு படித்து முடிக்கையில் நீ என் வயிற்றில் இருந்தாய். தவறென்றாலும் நான் செய்த தவறுகளில் நீ மட்டுமே எனக்கு உயிராய் பிடித்த தவறு.

விஷயம் அறிந்த பேராசிரியர் பெரிதும் கோபித்து என்னுடன் தொடர்பை அறுத்துவிட்டார். ஆனால் நாங்கள் உண்மையாகவே உன் வருகையில் மகிழ்ந்துதான் இருந்தோம்.

அதன் பின் இருவருக்கும் மும்பையில் வேலை. நான் உடனடியாக சேர, அவர் வீட்டிற்கு போய் சம்மதம் வாங்கி வந்து சேர்ந்தார். அப்போதும் நான் உடன் வருவதாக கூறினேன். ஆனால் குழந்தை பிறந்த பிறகு சென்றால் விரைவில் சமாதானம் ஆகிவிடுவார்கள் என்றவரை முழுதாய் நம்பித் தொலைத்தது என் மனம்.

ஆனால் நீ பிறந்தும் அதோ இதோ என ஐந்து வருடங்கள் ஓட, அவரின் வீட்டிற்கு மட்டும் என்னை அழைத்துச் செல்லவே இல்லை. ஆனால் மேலதிகாரி திட்டிவிட்டார் என வேலையில் இருந்து விலகிவந்தவர்,

“நான் யார் தெரியுமா? இவனிடம் எல்லாம் கைகட்டி திட்டுவாங்கனும் என்று எனக்கு தலையெழுத்தா” என்று கூறவும் முதன்முதலில் சந்தேகம் வந்து அவருடன் சண்டையிட்டது அன்றுதான்.

அதில் அவர் யாரென்ற உண்மையைக் உரைக்க, எனக்கு தலையில் இடி விழுந்தால் கூட உரைந்திருக்காது.

அதன்பின்னான என் அழுகையில் கரைந்து, தந்தையிடம் உண்மையைக் கூறுவதாகக் கூறி புறப்பட்டார்.

சென்றவர் மீண்டும் வந்து தொழில் மற்றும் அரசியல் வேலைகள் செய்ய என்னை மட்டும் தந்தை அழைக்கிறார். உங்களை சிறிது காலம் இங்கேயே இருக்க சொன்னார். எப்படியும் வேலையை விடமாட்டாய் தானே? இங்கேயே இரு. உரிய நேரம் வந்ததும் அழைத்துச் செல்கிறேன் என்றார்.

ஏனோ நம்ப மறுத்து என்னுள் பயபந்து உருவானது. நான் அங்கிருக்க மறுக்க, என் மறுப்பை அவர் கண்டுக்கொள்ளவே இல்லை. அங்கு சென்ற பின் அவரின் வருகை குறைய குறைய வரும்போதெல்லாம் சண்டையிட ஆரம்பித்தேன்.

நீ கூட நினைத்திருப்பாய் ஏன் இந்த அம்மா எப்போதும் தந்தையிடம் சண்டையிடுகிறாள் என்று. ஆனால் ஐந்தே வயதான உன்னிடம் என்ன சொல்வேன் நான்? உங்க அப்பா அவரின் குடும்பத்தினர் சொல் கேட்டு நம்மளை கைவிட்டு விடுவாரோ என்று பயமாக இருக்கிறது என்றா?

அன்றைய என் பயம் உன் பத்து வயதில் உண்மையானது. உன் தந்தை அவரின் அத்தை பெண்ணையே திருமணம் செய்ததாக வந்த செய்தியில் எத்தனை தூரம் படிப்பில் அறிவில் நான் உயரத்தில் இருந்தாலும் அனைத்தும் குப்பைக்கு சமமாக தெரிந்தது. உயிரான கணவனை உயிருடன் நான் இழந்துவிட்டேன் அல்லவா…

குறைந்தபட்சம் முன்பே இதைப்பற்றி தெரிந்திருந்தால் கூட அதைத் தடுக்க இறுதிவரை போராடிருப்பேன். இனி அங்கு சென்று நான் என்ன செய்வது. அத்தனை வருட என் வாழ்க்கை சீட்டு கட்டு மாளிகையாய் காற்றில் கலைந்து விழுந்தது.

இப்போது பொறுமையாக அலசிப் பார்க்கிறேன்… காதல் திருமணம் அனைத்திலும் நானே முன்னால் நின்றிருக்கிறேன். எல்லாம் என் தவறுதானோ?

அன்றைக்கு முடிவெடுத்தேன் அப்பா என்கிற உறவு உனக்கும் வேண்டாம், கணவன் என்கிற உறவு எனக்கும் வேண்டாம் என.

என் திறமைக்கு முன்பே என்னைத்தேடி வந்த அமெரிக்கா வேலையை அப்போதே ஏற்றுக்கொண்டேன்.

ஆனால் உன் தந்தை நான் எதிர்பார்த்தாற் போல் அப்படியே தலை மூழ்கிவிடவில்லை. நான்தான் சொன்னேனே அவர் என்னை விரும்பியது நிஜமென்று… இல்லையென்றால் இத்தனை வருடம் வாழ்ந்திருக்க முடியுமா?

உன் மீதும் மகனென்ற பாசம் நெஞ்சு முட்ட அவருக்கு உண்டு… உனக்கே அது தெரியும். ஆனால் நம்மை விட பெரிதாக இன்னொன்றை மதிப்பவரிடம் நாம் இருக்க வேண்டாம் என்று நினைத்தேன்.

அமெரிக்கா போகும் முன் வந்தவர் இரண்டாம் திருமணத்திற்கு விளக்கம் சொன்னார் பார். எப்படி என் தாயின் கடைசி ஆசைக்கு அவரை நான் திருமணம் செய்தேனோ அதே போன்ற சூழ்நிலையில் அவரின் தாயின் கடைசி ஆசை என்று அத்தை பெண்ணுடன் திருமணம் முடிந்ததாம். அதுவும் இதுவும் ஒன்றா? என் மனம் மரத்து போனதால் வலிக்கவில்லை போல, வேடிக்கையாக இருந்தது.

இப்போது எதற்கு இங்கு வந்தார் என்றுதான் எனக்கு தோன்றியது. தோன்றியதைக் கேட்கவும் அவர் கூறியது இன்னும் அச்சுப்பிறழாமல் என் மூளையில் பதிவாகியிருக்கிறது.

“என்றானாலும் என் மனைவி என்றால் அது நீதான். என் மகன் என்றால் அது அமுதன்தான். அதை யாராலும் மாற்ற முடியாது. பதவிக்கு வரும்வரை இங்கே இரு பத்மா… முதலமைச்சர் ஆனதும் அடுத்த நாளே தமிழ்நாட்டிற்கு அழைத்து செல்கிறேன்” என்றார்.

சீ என்றானது எனக்கு. அவர் என்று முதலமைச்சர் ஆவாரோ. அதுவரை மனைவியாக அங்கொருத்தி இருக்க, என்னை யாரென அங்கே அழைத்து செல்வார்? வப்பாட்டியாகவா? நினைக்கவே குமட்ட, வெடித்துவிட்டேன் அவரிடம்.

கடைசியா உங்களுக்கு நான் வேண்டும் என்றால் பதவியை தூக்கிபோட்டு என்னிடம் வாருங்கள் முன்பைப் போல வேலை செய்து வாழ்வோம்… பதவி வேண்டுமென்றால் எங்களை தூக்கிபோட்டு அதனிடம் செல்லுங்கள் ஆனால் என்றைக்கும் அதன்பின் எங்களைக் காண வரவேகூடாது. வந்தால் நான் உயிருடன் இருக்கமாட்டேன் என்றேன்.

ஐந்து நிமிடம் அமைதியாக இருந்தார். என்ன யோசித்தாரோ பின், “என்னால இங்கே இருந்து திரும்ப கண்டவனிடம் பேச்சு வாங்க முடியாது பத்மா… மன்னித்துவிடு” என்று என்னை ஒரு பார்வை பார்த்தவர் அதன்பின் பத்து வருட வாழ்க்கையைத் திரும்பியும் பாராமல் சென்றார்.

அதுவே எங்களின் கடைசி சந்திப்பு. உடைந்து போய் அன்று நான் அழுத அழுகை இந்த ஜென்மத்திற்கு போதுமானது. அதன் பின் நான் அழவேயில்லை. உனக்காக… உன்னை பார்த்து தேறிக்கொண்டேன் என் துன்பத்தில் இருந்து.

இது எதையும் உன்னிடம் கூறாமல் தந்தையின் திருமணத்தை மட்டும் கூறி என்னுடன் உன்னை வைத்துக்கொண்டேன்.

நான் மட்டும் உன் தந்தையின் பேச்சை உனக்காக வேணும் ஒத்துக்கொண்டிருந்தால், நீ உன் தந்தையை இழந்திருக்க மாட்டாயோ என்று இப்போதெல்லாம் அடிக்கடி தோன்றுகிறது. வயதாகிவிட்டால் எண்ணங்கள் மாறுமோ?

ஆனாலும் அவரை பிரிந்த விஷயத்தில் நான் தவறு செய்யவில்லை அமுதா… உன்னை எங்களுக்கிடையில் அலைக்கழித்துதான் தவறு செய்துவிட்டோம். நல்லதொரு குடும்ப வாழ்க்கையை நீ எங்களால் இழந்துவிட்டாய். அதற்காக என்னை மன்னித்துக்கொள்.

இப்போதும் நீ உன் தந்தையிடம் சென்றால் அவர் இரு கரம் நீட்டி உன்னை வரவேற்பார் என்பது நிச்சியம். அவரின் பாசம் நேசம் பொய்யல்ல ஆனால் அதைவிட முன்பே சொன்னதுபோல் பதவி வெறி அதிகமாகிவிட்டது அவ்வளவுதான். உனக்கு விருப்பமிருந்தால் அவரிடம் செல் இதில் எனக்கு எந்த வருத்தமுமில்லை.

இத்தனை வருடமும் என்ன நடந்ததென்று கேட்காமல் எனக்கு ஆறுதலாக இருந்த உனக்கு என் அன்பு முத்தங்கள். வயது கோளாரில் நான் செய்த தவறுக்கு தண்டனை உனக்கா மகனே?

எங்கு வேண்டுமோ செல்… என்ன தோன்றுகிறதோ அது உனக்கு நியாயமாகப் பட்டால் செய். இந்த அம்மாவின் ஆசிர்வாதம் எப்போதும் உன்னுடன் இருக்கும்.

கடைசியாக உன்னிடம் ஒரு வேண்டுகோள். உனக்கென்று ஓர் உறவு கடைசிவரை வருமென்றால் அது உன் மனைவி மட்டுமே.

கண்டிப்பாக நீ உன் தகப்பனை போல் இருக்கமாட்டாய் என்று தெரிந்தாலும் இதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

என்றுமே ஒருவனுக்கு ஒருத்திதான்… அதுதான் நியாயமும் கூட. திருமணம் செய்து உன்னை நம்பி வரும் அவளை கடைசிவரை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக்கொடுக்காதே. உன்னால் அப்படி வாழ முடியாதென்றால் உன்னை கெஞ்சிக்கேட்கிறேன் தயவுசெய்து திருமணத்தை செய்யாதே. அமெரிக்க கலாச்சாரத்தையே ஏற்றுக்கொள்.

ஒரு தாய் கூறுகின்ற வார்த்தை இதுவல்லதான். ஆனால் தாய் என்பதற்கு முன் நான் ஒரு பெண் அல்லவா? நான் பட்ட அடியையும் வலியையும் கண்ணீரையும் என் வயிற்றில் பிறந்த நீ வேறு ஒரு பெண்ணிற்கு மறந்தும் பரிசளித்துவிடாதே. இது என் மேல் ஆணை.

உன்னை கொள்ளை கொள்ளும் பெண்ணொருத்தியை கண்டு, காதல் கொண்டு, மணம் புரிந்து, வாழ்நாளுக்கும் உண்டான மகிழ்ச்சியுடன் அவளோடு வாழ்வதை கண்டிட நான் எப்போதும் காத்துக்கொண்டிருப்பேன்.

என்றும் பேரன்புடன்
உன் அம்மா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!