அலைகடல்-29.2

IMG-20201101-WA0016-6c92da4e

அலைகடல்-29.2

கடிதம் முடிந்திருக்க, சொட்டு சொட்டாய் பூங்குழலியின் விழியின் வழியே வழிந்த நீர் டைரியில் படவும் பட்டென்று அதை மூடி வைத்தாள் அவள்.

ஆரவ்வின் காதலை நினைத்து அழுதாளா? அவனை வெறுக்கும் தன்னை நினைத்து அழுதாளா? அந்த தாயின் வார்த்தைகளை நினைத்து அழுதாளா? ஒன்றும் தெரியவில்லை ஆனால் மனம் பாரமாக, அழுகை நிற்காமல் வந்தது.

எப்பேர்ப்பட்ட பெண்மணி… தவறே செய்யாமல் தவறெல்லாம் தன் மேல் என்று ஏற்றுக்கொண்டு துரோகம் செய்த கணவனையும் விட்டுக்கொடுக்காமல் அதே நேரம் மன்னிக்காமல் பிரிந்து… அப்பப்பா.

கஷ்டத்தை தவிர வேறு பார்க்காத அவர்களுக்கு சொர்க்கத்தை காட்டி அதையும் பறித்து வாழ்க்கை அவர்களை இவ்வளவு வஞ்சித்திருக்க வேண்டாம்.

தன்மானம் கைவிடாத பெண்ணின் காதலையும் காயத்தையும் அத்தனை வலியுடன் கூறியது அந்த கடிதம். கூடவே மகனது வளர்ப்பையும்!

இப்படி ஒரு அறிவுரையை எந்த ஒரு நல்ல இந்தியத் தாயும் தன் மகனிற்கு கூறியிருக்க மாட்டாள். மேலும் தான் பட்ட கஷ்டத்தை மற்றொரு பெண் படக்கூடாது என்ற எண்ணம் இவ்வுலகில் எத்தனை பேருக்கு இருக்கும்? மிக மிக சொற்பம்… விரல் விட்டு எண்ணிவிடலாம்.

அத்தனை சொன்ன அந்த தாய் ஒரு பெண்ணின் விருப்பமில்லாமல் தாலியை கட்டக்கூடாது என்று சொல்லவில்லையே!

அதைதான் பூங்குழலியும் நினைத்தாள். ‘அனைவருக்கும் உங்கள் மகனை பிடிக்குமா இல்ல மகன் அப்படி செய்யமாட்டான் என்று அவன் மீது அளவு கடந்த நம்பிக்கையா? விருப்பம் இல்லா பெண்ணை கட்டாயப்படுத்துவது தவறென்று கூறி வளர்க்கவில்லையே’ என்று மனதோடு அவரிடம் சண்டையிட்டாள் மருமகள்.

இதை படித்த பிறகும் ஒரு மகனாய் தந்தையுடன் சேராமல், தாயிற்காக அவரை தோற்கடிக்க நினைத்து கிளம்பியதெல்லாம் சரிதான். அன்றைய அவன் செயல்களுக்கு பின்னேயும் நியாயமான காரணம் இருக்கிறதென்றால் இருந்துவிட்டு போகட்டும். மன்னிக்க முடியவில்லை என்றாலும் மறக்கத் தயார்.

ஆனால் அவன் காதலுக்காக விருப்பம் இல்லாத என்னை கட்டாயப்படுத்தி, மிரட்டி மணம் புரிய இவனிற்கு யார் அதிகாரம் கொடுத்தது. நான் அவனை விரும்பவில்லையே!

சொல்லப்போனால் இப்போது கடிதத்தை படித்த பிறகு ஆரவ் யாரென்ற உண்மையை வெளியே சொல்ல பூங்குழலியாலும் முடியவே முடியாதென்று தோன்றியது. ஆம் ஆரவ் அருள்ஜோதியின் மகன் என்ற ஆதாரத்தை தேடிதான் அவளின் தேடுதல் தொடங்கியது.

வஞ்சிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கைக்கு ஏதோ என்னால் முடிந்தது இதை வெளியில் கூறாமல் இருப்பதுதான் என்று இப்போது அவள் மனம் பின்வாங்கிவிட்டது.

ஆக ஆரவ்வை பழிவாங்கவே என்றாலும் இதை எடுக்க முடியாது… எந்த ஆதாரத்திற்காக இதையெல்லாம் எடுத்தாலோ அதெல்லாம் கண்முன் இருந்தும் பத்மாவதி தேவி என்ற ஒற்றை பெண்மணியின் எழுத்துகள் அவள் கையைக் கட்டிப்போட்டது.

அதற்காக அவனை சும்மா விட்டுவிட இவள் ஒன்றும் மகாத்மாவும் இல்லை. அவன் படுத்திய பாடும் கொஞ்சம் நஞ்சம் இல்லை! அடுத்து என்ன செய்ய வேண்டும் என யோசித்தவள் அதன்படி செய்ய முடிவெடுத்து செயலில் இறங்கி விட்டாள்.

மாலை வேந்தன் வருகையில் கண்டது பெட்டி படுக்கையைக் கட்டி ஆரவ்வின் பக்கத்து அறைக்கு மாறிக்கொண்டிருந்த பூங்குழலியைதான்.

“ஹே பூமா… என்னாச்சு எதுக்கு இந்த ரூம் போற?” என்றவனிடம் முகம் கொடுத்தே பேசவில்லை அவள்.

“உன்னைதான்… எதுக்கு இப்போ இங்க வந்த? அண்ணா மேல கோபத்துலயா?” பின்னோடு அறைக்குள் நுழைந்தவனிடம்

“நான் எப்போது அவனுடன் சேர்ந்திருந்தேன் இப்போது கோபப்பட?” என்றவள் சான்றிதழ், பாத்திரங்கள் அடங்கிய பெட்டியை அலமாரியினுள் தள்ளினாள்.

‘இதை வேற எடுத்த இடத்துல வைக்க வேண்டும். இனி அவனை மீண்டும் தூங்க வைத்து திரும்ப உள்ள வைப்பதெல்லாம் நடக்கிற காரியமா? பேசாமல் அவனிடமே காட்டி என்னவென கேட்டுவிடுவோமா? ஹ்ம்ம் அப்படிதான் செய்யணும் வரட்டும் வீட்டிற்கு’ தனக்குள் உழன்றவாறு இப்போது துணிகளை எடுக்கச் செல்ல,

அதை எடுக்கவிடாமல் பெட்டியில் மேல் படுத்துக்கொண்டு பதில் சொன்னால்தான் எழுவேன் என்பதுபோல் பார்த்த இளையவனை முறைத்தவள் கடுங்கோபத்துடன், “ஒழுங்கா எந்திச்சு போயிருடா… இருக்குற கடுப்புல உன்னை ஏதாச்சும் செஞ்சிறபோறேன்” என்று கடிக்க,

“நான் என்ன பண்ணினேன்… என் மேல ஏன்டி ஏறுற” என்று எகிறினான் அவன். அவன் அப்படிதான் கோபம் அதுவும் வந்தால் எதிரில் பெண்ணாக இருந்தால் ஏக வசனத்தில் பேசி விடுவான். இதுவரை வகுப்பு பெண்களை ஒத்த வயதுடையவர்களை பேசியவன் இப்போது தமக்கையிடமும் பேச,

“டி சொன்னா பல்லை உடைப்பேன். என்ன புது பழக்கம் இது? எழுந்திருடா” என்றவாறு சுள்ளென்று கையில் ஒரு அடி போட சென்றவள் அவன் எழ முயற்சிக்கவும் கையில் விழ வேண்டிய அடி கைத்தவறி கன்னத்தில் விழ, அதிர்ந்து போய் கன்னத்தைப் பிடித்தான் வேந்தன்.

பூங்குழலிக்கும் அதிர்ச்சிதான். அவள் சமாதானம் செய்ய வருவதற்குள் அவன் கோபத்தில் வெளியேறிவிட, பின்னே செல்ல துடித்த கால்களை அடக்கி அங்கேயே இருந்துக்கொண்டாள் பூங்குழலி.

ஆரவ்வோ இன்னமும் குற்றவாளியைப் பற்றி அடி நுனி தெரியாமல், சரணடைந்த இருவரையும் அவனின் கஸ்டடியின் கீழ் ஒருநாள் விசாரிக்க ஏற்பாடு செய்துவிட்டு அலுவலகத்தில் இருந்து கிளம்பினான்.

வீட்டிற்கு வந்தவனை அணைத்துக்கொண்ட வேந்தன், “அண்ணா… பூமா என்னை அடிச்சுட்டா” என்று குற்றஞ்சாட்ட,

“ஸ்ஸ்ஸ்… வேந்தா மெதுவா” என்றவாறு யாரேனும் கவனிக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தான்.

“அதெல்லாம் யாரும் இல்லை… பார்த்துட்டுதான் சொல்றேன் என்னன்னு போய் கேளுங்க. வர வர ரொம்ப பண்றா பாருங்க இங்க” என்றான் முகத்தை முழுதாக சுருக்கி. அவன் காட்டிய ஒரு பக்க கன்னம் சன்னமாக வீங்கியிருந்தது.

முதன்முதலாக ஆரவ்விற்கு வீட்டினுள் இருந்து பஞ்சாயத்து வருகிறது. என்றுமே அவன் வீடு அமைதி பூங்காவாகதான் இருக்கும். பூங்குழலி வந்த பின் அது சற்று ஆட்டம் கண்டாலும், ஆரவ்வும் பூங்குழலியும்தான் அடித்துக்கொண்டிருப்பார்களே தவிர வேந்தன் எப்போதும் இருவருக்கு செல்லம்தான்.

இப்போது வேந்தன் அடிவாங்கியதாகக் கூறி கன்னம் சிவக்க நின்றிருக்க தடுமாறிப் போனான் பெரியவன். “என்ன… ஏதாவது சண்டை போட்டீங்களா?” என்று சந்தேகமாய் வினவ,

“இல்லண்ணா நான் எதுவுமே பண்ணலை என்னன்னு கேட்டேன் பதில் சொல்லாம அடிச்சிட்டா” என்றான் கண்கள் கலங்கியபடி.

திக் என்றது ஆரவ்விற்கு. இருந்தும் சமாளித்து, “சரி சரி… ஐஸ் கியூப் வச்சியா? நாம போய் என்னன்னு கேட்போம் இதுக்கெல்லாம் சின்னப்புள்ள மாதிரி அழாதடா… சரியா போயிரும்” என்று முதுகில் ஆறுதலாக தட்டிக்கொடுக்க,

“நான் வரல… இனி நானா அவகிட்ட பேசினா என்னை என்னன்னு கேளுங்க. ராட்சசி” என்று இப்போது திட்டித்தீர்த்தான் இவன்.

‘என்னடா இது! காலையில் கொஞ்சிட்டு இருந்தவங்க இப்படி அடிச்சுக்கறாங்க’ என்று உள்ளுக்குள் விழித்தவாறு சென்று அவளின் அறைக்கதவை தட்ட, கதவு திறக்கப்படவில்லை.

“கதவை இப்படி பூட்டி வச்சிட்டா அடுத்து உள்ள இருக்குற தாழ்ப்பாளையும் எடுக்க வேண்டி வரும் பூங்குழலி… என்ன எடுக்கவா?” என்று வெளியிலிருந்து கேட்டான் ஆரவ்.

சில பல மெல்லிய சத்தத்தின் பின் கதவு திறக்கப்பட, தலை கலைந்து, கண்கள் சிறிது சிவப்பேறி என்னமோ போல் இருந்தாள் அவள்.

அதில் வந்த விஷயத்தை மறந்தவன், “என்னாச்சு… உடம்பு என்ன பண்ணுது? ஏன் இப்படி இருக்க?” என்று லேசாய் பதற

அத்தனை நாள் கண்டுக்காமல் விட்ட அவனின் உணர்ச்சிகளை இப்போது நேருக்கு நேர் பார்த்து கவனித்தவள்,

“ஒன்னும் ஆகலை சொல்லுங்க எதுக்கு என்னை கூப்பிடீங்க மிஸ்டர் ஆரவமுதன்?” என்றாள் எதையும் வெளிக்காட்டாமல் மூன்றாம் மனிதரிடம் பேசும் பாவனையில்.

சட்டென்று அந்த வித்தியாசத்தை உணர்ந்துவிட்டான் ஆரவ். ‘ஏன் இப்படி பேசுறா?’ என்றெண்ணி அவளின் திடீர் மாற்றத்தில் புருவம் சுருக்கினான்.

ஆராய்ச்சியாக பார்த்து அமைதியாக இருக்கவும் அவள் கதவை மூடப்போக, அதைச் செய்யவிடாமல் அவளை உள்ளே தள்ளி கதவை சாற்றினான் ஆரவ்.

“ஏன் இன்னைக்கு வித்தியாசமா நடந்துக்குற? இந்த ரூம்க்கு வந்திருக்க… வேந்தனை அடிச்சி அழ வச்சிருக்க… என்ன நினைச்சிட்டு இருக்குற உன் மனசுல?” என்று கோபம் இருந்தாலும் கத்தாமல் இரைய,

வேந்தன் அழுதான் என்றதில் உள்ளே பதறினாலும் வெளியே கல்லென இறுகி அசையாமல் இருந்தாள் பூங்குழலி.

“இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்…” என்றவனை அதற்கு மேல் பேச விடாமல்

“அங்கே இருக்கப்பிடிக்கலை அதான் இங்கே வந்துட்டேன் அண்ட் வேந்தன் என்னை டி போட்டு பேசுனான் அதான் அடிச்சேன். கிளியரா மிஸ்டர் ஆரவமுதன்” என்றாள் அலட்சியமாய்.

“நான் என்ன சொல்லி கல்யாணம் பண்ணினேன் நியாபகம் இருக்கா இல்லையா? நீ ஒவ்வொன்னா மீறிட்டு இருக்க… சத்தியத்தை நான் மட்டும் காப்பாத்திட்டு இருப்பேன்னு நினைக்காத” என்று எப்போதும் போல் எச்சரிக்க, சும்மாவே அசராதவள் உண்மை தெரிந்த பின்பா அசருவாள்.

முழு கை இருக்கும் டீ ஷர்டை முழங்கை வரை ஏற்றி விட்டவள், “எதையும் நான் மறக்கல… நியாபகம் வச்சிட்டேதான் நான் சொல்றேன். இனி இங்கே தான் இருக்கப்போறேன். சொல்லு என்ன பண்ணப்போறன்னு சொல்லு” என்றாள் இன்றோடு இதற்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டும் என்ற தொனியில்.

“ஸ்ஸ்ஸ்… இதென்ன ஆட்டிடூட் குழலி. அப்படின்னா உனக்கு வேந்தன் முக்கியமில்லையா?” வழக்கமாய் இதை சொன்னதும் அடங்கிப்போகும் பூங்குழலி இப்போதும் அடங்குவாளா என்ன!

‘இந்தா வந்துருச்சுல்ல பூச்சாண்டி’ என்று நக்கலாக எண்ணியவள், “அவன் யாருக்கு முக்கியம்… அவன் என்ன என் தம்பியா? உன் தம்பிதானே… அவனை வச்சி என்னை எதுக்கு கார்னர் பண்ண பாக்குற? இனிமே அவனை நீ என்ன செஞ்சாலும் ஐ டோன்ட் கேர்” என்றாள் கையை ஆட்டி.

அதில் முற்றாக அதிர்ந்து போனான் ஆரவ். “உன்கிட்ட இதை எதிர்பார்க்கலை பூங்குழலி… உன் மேல போய் அவன் இவ்ளோ பாசம் வைத்திருக்க வேண்டாம்” என்றான் ஒரு மாதிரி குரலில்.

ஆரவ்வின் ஒவ்வொரு வார்த்தைக்கு பின்னாலும் இருக்கும் அர்த்தத்தைப் படிக்க ஆரம்பித்தாள் அவள்.

“ஏன் அவனை கொல்ல போறேன்னு சொன்ன உன்மேலயே அவன் இவ்ளோ பாசம் வைத்திருக்கும் போது நான் எந்த விதத்துல குறைஞ்சு போயிட்டேன்… ஆல்ரைட் எனக்கு இன்னைக்கு சண்டை போடுற மூட் இல்லை வந்த வேலை முடிஞ்சதுன்னா கிளம்பலாமே” என்று வாசலைக் காட்டினாள்.

“இது என் வீடு…” என்றான் உச்சக்கட்ட கடுப்பில்.

“ஒஹ் ஆமால. அப்போ நான் வெளிய போயிரவா… என் வீட்டுக்கு” சாந்தமாய் வினவியவளின் முன் அதற்கு மேல் நிற்க முடியாமல் போக, “ச்சை” என்றவாறு வெளியேறினான் ஆரவ்.

அவன் வெளியேறியதும் பெருமூச்சோடு படுக்கையில் மடிந்தமர்ந்த பூங்குழலிக்கோ புயல் அடித்து ஓய்ந்தாற்போல் இருந்தது.

‘அவனை அடிச்சா உனக்கு வலிக்குது. அப்போ பார்த்து பார்த்து வளர்த்த எனக்கு எவ்ளோ வலிக்கும். ஆனா இப்போ எதையும் நான் காட்டமாட்டேன் அமுதன். நீ பண்ணுனதை நான் உனக்கே பண்றென் அப்போ தெரியும் அந்த வலி எப்படி இருக்கும்ன்னு… சாரி குட்டா கையில அடிக்க வந்து தெரியாம கன்னத்துல அடிச்சிட்டேன்’ தம்பியிடம் மனதோடு மன்னிப்பை யாசித்தாள் பூங்குழலி.

இந்த புது பூங்குழலியைப் புரிந்துக்கொள்ள முடியாமல் யோசனையோடு வந்தவனிடம், “என்னவாம் அண்ணா?” என்றான் வேந்தன் உர்ரென.

“ஒன்னும் இல்லடா… தெரியாம அடிச்சிருப்பா. இந்த கேஸ் டென்ஷன் போல கொஞ்ச நாள் அவளை தனியா விடு என்ன… சரியானதும் பேசுவா பாரு” என்று வேந்தனை சமாதானம் செய்தவனுக்கு அவனை சமாதானம் செய்யதான் முடியவில்லை.

பூங்குழலியின் பேச்சுக்கள் ஏனோ இனம்புரியாத கலக்கத்தை விதைக்க, ‘தன் செயல்களால் எரிச்சலுற்று வேந்தனை வெறுக்கத் தொடங்குகிறாளோ?’ என்று உழன்றான்.

இதே சிந்தனையில் அறையினுள் நடைபயின்றவனுக்கு பூங்குழலி இல்லாமல் உறக்கம் வேறு போக்கு காட்ட, வெறுமையான படுக்கையையே மனதில் உண்டான வெறுமையுடன் வெறித்திருந்தான் ஆரவ்.

என்னை சுடும் காதல் உன்னை சுடவில்லயா
முகத்திற்கு கண்கள் ரெண்டு
முத்தத்திற்கு இதழ்கள் ரெண்டு
காதலுக்கு நெஞ்சம் ரெண்டு
இப்பொது ஒன்றிங்கு இல்லையே
தனிமையிலே தனிமையிலே
துடிப்பது எதுவரை சொல்லு வெளியே…

அலைகடல் ஆர்ப்பரிக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!