அலைகடல்-32.2

IMG-20201101-WA0016-54ab5e8a

அலைகடல்-32.2

சென்னையில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் பிரதான சாலையில் இருந்து பிரிந்து சென்றுக்கொண்டிருந்தது ஆரவ்வின் கார். அதிகாலை சூரியன் கிழக்கே எழுந்துக்கொண்டிருக்க, மெது மெதுவே இருள் விலகி செவ்வானம் வானமெங்கும் பரவிக்கொண்டிருந்தது.

முன்னைக் காட்டிலும் பன்மடங்கு பாதுகாப்போடு அவனது வாகனத்தின் முன்னாலும் பின்னாலும் பாதுகாவலர்களின் வாகனம் சென்று இவர்களை பாதுகாக்க, கடனே என்று வேடிக்கை பார்த்தவாறு வந்துக்கொண்டிருந்தாள் பூங்குழலி.

நேற்று இடமாற்றம் வேண்டும் என்று வேந்தனிடம் அவளது வீட்டிற்குச் செல்வதற்காகக் கூற, அதைக் கேட்ட ஆரவ்வோ இருவரையும் தனது பண்ணை வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக கூறி இழுத்தும் வந்துவிட்டான்.

மறுத்தவளை வேந்தன் அது இதுவென்று பேசி சம்மதிக்க வைத்துவிட்டான். விளைவு இரு நாட்கள் விடுமுறையோடு இதோ ஒரு அழகிய பயணம். பயணம் அழகாய்தான் இருந்தது. என்றுமே ஓட்டுனரிடம் காரை கொடுத்து வெட்டியாக அமர்ந்து செல்ல ஆரவ் விரும்பாததால் அவனே இன்றும் காரை செலுத்திக்கொண்டிருக்க, அவனருகில் வேந்தன் அமர்ந்துக்கொள்ள, சலசலவென்று இருவரும் பேசிக்கொண்டே வந்தனர்.

பூங்குழலியைப் பேச வைக்க முயற்சி செய்தும் அவளின் ஒத்துழையாமை இயக்கத்தில் தோற்று இருவரும் பின்வாங்கினர்.

ஆனால் அப்படியே விடுபவனா ஆரவ்? காதலை சொல்லிவிட வேண்டுமென்றே முக்கிய வேலைகளை முடித்து இந்த இரு நாட்களை ஒதுக்கியவன் ஆகிற்றே!

ஒரு நொடியில் சொல்லி விடலாம்… சொல்வதாக இருந்தால் மட்டும். ஆனால் ஆரவ்விற்கு அவள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பேராசை… ம்ம் பேராசைதான். குறைந்தபட்சம் மறுக்காமல் யோசித்தால்கூட போதும். அதற்கு என்று ஒரு சூழ்நிலை இந்த இருநாட்களில் அமையாமலா போய்விடும் என்ற நம்பிக்கையில் அவனிருந்தான்.

“இதுல இருந்து நம்ம இடம் ஆரம்பிக்குது…” என்றவாறு கண்ணாடியில் பூங்குழலி முகம் காண

அவளோ கேட்டும் கேட்காதது போல் வெளியே மும்முரமாக கண்களை அலைபாய விட்டிருந்தாள்.

“இங்க கிட்டதட்ட நூறு ஏக்கர் இருக்கு… முந்நூறு குடும்பம் வசிக்கவும் செய்றாங்க அவங்களே இதையெல்லாம் பார்த்துப்பாங்க. பண்ணைல இருந்து வர பொருட்களை விற்பனை செய்ற பொறுப்பை அவங்க பிள்ளைங்க கிட்ட கொடுத்துருக்கேன். அவங்களுக்கு எல்லாம் போக நல்லாவே லாபம் கிடைக்குது…”

கேட்க நன்றாகதான் இருந்தது பூங்குழலிக்கு. ஆனால் இத்தனையும் இவன் உண்மையாகவே நேர்மையாக வாங்கிய சொத்தா? எப்படி முடியும்? காலம் காலமாக அரசியல் செய்பவர்களின் மீதான பிம்பம் அவளை அப்படி யோசிக்க வைக்க, அதனை கண்ணாடியின் ஊடே படித்தானோ என்னவோ!

“இது எல்லாமே என்னோட சொந்த உழைப்புல வாங்கினது. இதுன்னு இல்ல என்னோட ஒட்டுமொத்த சொத்து மதிப்புல ஒரு ரூபாய் கூட மத்தவங்க பணம்… முக்கியமா மக்கள் பணம் இருக்காது. எங்கம்மா எனக்காக சேர்த்து வைத்தது அண்ட் நான் சம்பாதித்தது மட்டும்தான்” என்று சற்று பெருமையாகவே கூற, மனதினுள் நினைத்ததற்கு பதில் வந்ததில் திடுக்கிட்டாலும் அதன்பின் முகத்திலும் எதையும் காண்பிக்கவில்லை அவள்.

இருந்தும் உள்ளே ஒரு குரல், பரவால்லதான் என்று அவளையும் மீறி குரல்கொடுத்துச் சென்றது. வர வர இப்படிதான் கொஞ்சம் கொஞ்சமாக அவன் மீதான எண்ணங்கள் மாறிக்கொண்டே இருக்கிறது. இது எங்கு சென்று முடியும் என்று தெரியவில்லை ஆனால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விலகிவிட வேண்டும் என்று உறுதியாக இருந்தாள் பூங்குழலி. அந்த உறுதி எத்தனை நாளைக்கோ!

கண்ணுக்கு எட்டிய வரை தென்னை மற்றும் பாக்கு தோட்டம் அமைந்திருக்க, நடுவே கீழ் மற்றும் மேல் தளத்தோடு ஒற்றையாய் வீற்றிருந்தது அந்த பண்ணை வீடு. அதுவே அதற்கு தனி ஒரு அழகைக் கொடுக்க, மேல் தளத்தில் இரு அறைகள் கீழே ஹால், கிட்சன் மற்றும் ஒரு படுக்கையறை என விசாலமாகவே கட்டப்பட்டிருந்தது.

ஜன்னல்கள் அதிகம் திறந்திருக்க, மின்விசிறி, ஏசியை விட அதிக காற்றோட்டமும், அதில் குளிர்ச்சியுடன் கலந்த இயற்கையின் மனமும் வீட்டில் கமழ்ந்து பூங்குழலியின் மனதை வருடி மலரச்செய்தது.

எதாவது சொல்கிறாளா என்று அவளின் முகத்தையே அடிக்கடி திரும்பி பார்த்த ஆரவ்வின் கண்களில் அவளின் மலர்ச்சி பட்டுவிட, அதுவே அவனை வெகுவாக திருப்திபடுத்தியது. அவ்வளவு தூரம் கார் ஓட்டிய களைப்பையும் மீறி உற்சாகமும் அவனை உற்சாகமாய் தொற்றியது.

காலை பத்து மணிக்கெல்லாம் குளித்து, சாப்பிட்டு ஆண்கள் இருவரும் வெளியே செல்ல தயாராகி விட்டனர்.

“அப்படியே நடந்துட்டு வருவோம்… நீயும் வாயேன் பூமா” என்ற வேந்தனின் அழைப்பிற்கு மறுக்க மனமில்லாமல் அவர்களுடன் நடக்க ஆரம்பித்தாள்.

இதுபோல் அவள் இயற்கையோடு இணைந்தே பல வருடங்கள் ஆகியிருந்தது. கடல், அதன் உப்புகாற்று, வேலை, விமானம் இதுவே அவளின் வாழ்க்கையாக, இப்போது கொஞ்சம் ஆசுவாசம்… நன்றாக மூச்சை இழுத்து வெளியேற்றினாள் பூங்குழலி.

மூவருமே இலகுவான உடையே அணிந்திருந்தனர். தொளதொள டீசர்ட் இடுப்பை தாண்டி தொங்க, பனியன் பேன்ட் சகிதம் பூங்குழலி என்றால் மற்ற இருவரும் டீசர்ட், பைஜாமாவை உடுத்தியிருந்தனர்.

‘ஆரவ், வேந்தனின் முகத்தில்தான் எவ்வளவு சந்தோசம்! அடிக்கடி இங்கு வருவார்கள் போலும்…’ தன்போக்கில் சிந்தித்தபடி நடந்த பூங்குழலி அப்பொதுதான் கவனித்தாள் தாங்கள் மாந்தோப்புக்குள் நுழைந்துவிட்டதை.

கொத்து கொத்தாய் கைக்குள் அடங்கா, எண்ணிக்கையில் அளவிடா அளவு மாங்காய்கள் தொங்கிக்கொண்டிருக்க, பார்க்கவே நாவூறியது பூங்குழலிக்கு. அவர்கள் இன்னமும் நடந்து செல்லவும் பின்தொடராமல் நின்றவள், கீழே கிடந்த சிறு கல்லை எடுத்து குறி பார்த்து வீசினாள்.

குறி சரியாக மாங்காய் மேல் பட்டாலும் கீழே விழாமல் லேசாய் ஆடியதோடு போக்கு கட்டியது அது. சற்று பெரிய கல்லை தேடுகையில் பொத் பொத் என்ற சத்தத்துடன் இரு மாங்காய் அடுத்தடுத்து கீழே விழ, சுற்றி நோக்கியவள் கண்ணில்பட்டது தன்னருகில் விழுந்த மாங்காய்களும் கூடவே வி வடிவில் குறி பார்த்து அடிக்கும் கவண் வில்லோடு நிற்கும் ஆரவ்வும்.

அவனைக் கண்டு, ‘நான் கேட்டேனா?’ என்ற பார்வை பார்த்தவள் பெரிய கல் கொண்டு அடித்து ஒரு மாங்காயை வீழ்த்தி அதை சென்று எடுத்தாள் இவள்.

‘ஒஹ்… நான் அடித்த மாங்காவை தொட மாட்டாளோ’ என்று உள்ளே நொடித்தவனை வேந்தனின் குரல் கலைத்தது.

“அண்ணா… பூமா சூப்பரா குறி பார்த்து அடிக்குறால்ல. நாம நம்ம விளையாட்டை விளையாடுவோமா. எனக்கு பதிலா பூமா விளையாடுவா” என்று கூற

தான் காதலைச் சொல்ல ஒரு வழி கிடைத்ததில் மனதிற்குள் வேந்தனை தூக்கிச் சுற்றினான்.

“என்ன… என்ன விளையாட்டு?” என்று புரியாமல் வினவியவளிடம்

“அது ஒன்னுமில்ல பூமா… உனக்கு நல்லா குறிபார்த்து மாங்காய் அடிக்க தெரியும்தானே?” என்று கேட்க

பூங்குழலி முழித்து ஒரு மாதிரியாக தலையாடினாள். பின்னே ட்ரைனிங்கில் மாங்கு மாங்கென்று துப்பாக்கி சுட கற்றுக்கொண்டவளிடம் மாங்காய் அடிக்க தெரியுமா என்று கேட்டால்!

அதைதான் ஆரவ்வும் சொன்னான், “அவளுக்கு மாங்காய் மட்டுமில்லடா… கண்ணை மூடியும் கூட மனுஷங்களை குறிபார்த்து அடிக்க தெரியும்” என்றவனின் விரல்கள் நெற்றியோரத்தில் இருக்கும் தழும்பை வருட, பூங்குழலிக்கு அது உருவான அன்று நடந்த நிகழ்வு நினைவிற்கு வந்து முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கச் செய்தது.

அவளே இப்போதுதான் சற்று மறந்திருந்தாள்… விடுகிறானா அவன்?

அதையெல்லாம் கவனிக்காமல், “மாங்காய் அடிக்குற போட்டி பூமா… இங்க பாரேன் இந்த கவண் வச்சி உன்னால எவ்ளோ அடிக்க முடியுமோ அடிக்கணும். ஆளுக்கு ஒரு மரம், முப்பது கல், பத்து நிமிஷம் ரெடியா?” என்று வினவ

தன் குறிபார்க்கும் திறமை மீது உள்ள நம்பிக்கையில் சரி என்றிருந்தாள் பூங்குழலி.

ஆரவ், “சும்மா எப்படி போட்டி வைக்க? எதாவது பெட் வைக்கணும்ல்ல” என்று கொக்கியோடு நிறுத்த, அவனை ஆராய்ச்சியாக ஆராய்ந்தாள் இவள்.

“சரிண்ணா என்ன பெட்?” என்ற வேந்தனிடம்

“நான் ஜெயிச்சா நான் சொல்றதை தோத்தவங்க கேட்கணும்… ரொம்பலாம் இல்ல ஒரே ஒரு விஷயம்தான்” என்றான் ஆரவ்.

இப்போது வேந்தனும் யோசனையுடன் அவனைப் பார்க்க, ‘என்னடா இது அக்கா தம்பிங்க ரெண்டும் ஒரே மாதிரி பார்க்குறாங்க?’ என்று நினைத்து அவனும் அதுபோலவே பார்த்து வைத்தான்.

“ஹ்ம்ம் ஓகே. அதேதான் எனக்கும்… நானும் ஒரு விஷயம்தான் கேட்பேன்” என்று உறுதியுடன் உடன்பட்டாள் பூங்குழலி.

பூங்குழலிக்கும் அவன் எதை கேட்கப்போகிறான் என்று தெரியும். ஆரவ்விற்கும் அவள் எதை கேட்கப்போகிறாள் என்று தெரியும். எதையும் அறியாமல் போட்டியை தொடங்கி வைத்தான் பூவேந்தன்.

அசுர வேகத்தில் சரியாக குறி பார்த்து ஏறிய ஆராம்பித்தான் ஆரவ். அவனிற்கு குறையாத வேகத்தில் பூங்குழலியும் அடித்து வீச, அங்கே இருவருக்கு பதிலாக காதலா? பிரிவா? என்ற இரண்டே விஸ்வரூபம் எடுத்து அங்கே போட்டிப்போட்டது.

இருவரும் சிறுபிள்ளைகள் அல்லதான். பெரிய பதவியில் வகிப்பவர்கள்தாம். பிடிவாதத்திலும் சளைக்காமல் போட்டியிடுபவர்கள்தான். ஆனால் அனைத்தையும் மறந்து அந்நேரம் குழந்தைகள் ஆகினர் இருவரும். என்ன சற்று முரட்டு குழந்தைகளாகப் போய்விட்டனர்.

போட்டியென்றால் வெற்றியும் இருக்கும் தோல்வியும் இருக்கும் தானே! ஐந்து நிமிடத்தில் எல்லாம் பூங்குழலிக்கு மாங்காய் விழும் சத்தம் மூலமே தெரிந்துவிட்டது அமுதன் தன்னைக் காட்டிலும் அதிகம் அடித்துக்கொண்டிருக்கிறான் என.

பதட்டம் தன்னைப்போல் அவளை ஆக்கிரமிக்க, எப்போதும் நேர்வழியில் செல்பவள் முதன் முறையாக குறுக்கு வழியை உபயோகிக்க தயாரானாள்.

எப்போதும் குறுக்கு வழியை தேர்ந்தெடுக்கும் ஆரவ்வோ தன்னவளிடம் காதல் சொல்லிவிடும் அவசரத்தில் நேர்மையாக யானை பலம் வந்தவன் போல் அடித்துத் தள்ள, சுள்ளென்று வந்து விழுந்த கல்லால் தோளில் பயங்கர வலியெடுக்க, தடுமாறிப் பூங்குழலியைப் பார்த்தான் அவன்.

அவள் மும்முரமாக குறி பார்த்து அடிக்கவே தெரியாமல் பட்டிருக்கும் என்றெண்ணி மீண்டும் ஆரம்பிக்க, அடுத்த இரு நிமிடங்களில் தலையில் சுள்ளென்று அதே வலி.

அவ்வளவுதான் தன் கவணை கீழே வீசி, பூங்குழலியைக் கடும் கோபத்தோடு பார்த்தவன், “குழலி நீ சீட் பண்ற…” என்று கத்த

“நான் என்ன பண்ணினேன்?” என்றாள் எதுவும் தெரியாததுபோல்.

உடனே அருகிலிருந்த வேந்தனிடம் கைநீட்டி, “டேய்… நீ சொல்லு உங்கக்கா வேணும்ன்னே என்மேல கல் எறிந்தாளா இல்லையா?” என்று விசாரிக்க,

வேந்தனோ பேந்த பேந்த முழிக்க ஆரம்பித்தான். பூமா முதல் தரம் அடிக்கும்போதே பார்த்தவன் அவளை எச்சரிக்கை செய்யும் முன் அவனை கண்களால் அடக்கியிருந்தாள்.

தமக்கை செய்வது தவறென்று தெரியும்… அவளை சொல்லவும் முடியாமல் ஆரவ் தடுமாறியதை காணவும் முடியாமல் தவித்தவன் இருவரும் சண்டையிட்டு கடைசியாக தன்னிடம் திரும்பவும் கதிகலங்கிப் போனான்.

இருவருமே அவனைதான் முறைத்துக்கொண்டிருந்தனர். ‘நானே தேடிப் போய் ஆப்பை தூக்கி தலைக்கு மேலே வைத்துக்கொண்டேனா’ என்று உள்ளுக்குள் கதறியவன் எடுத்தான் மின்னல் ஓட்டம்.

ஒரு கையை மேலே தூக்கி அசைத்தவாறு ஓடிக்கொண்டே, “இல்ல எனக்கு எதுவும் தெரியாது… நான் எதையும் பார்க்கலை” என்றதோடு இவர்களில் கண்களில் இருந்து நொடியில் மறைந்தே விட, அதில் வந்த சிரிப்பை கடினப்பட்டு அடக்கியவாறு உள் உதட்டை அழுந்தக் கடித்துக்கொண்டிருந்தாள் பூங்குழலி.

ஆரவ்வோ, “இந்த போட்டியே வேணாம்… மறுபடியும் முதல இருந்து ஆரம்பி வா” என்று படு டென்ஷனாக ஆட்டத்தை கலைக்கச் சொல்ல,

“அதெல்லாம் முடியாது… விளையாட்டு கலைச்சா கலைச்சதுதான். நான் கிளம்புறேன்” என நழுவ பார்த்தவளை,

“ஏய்…” என்று பிடிக்கச் செல்ல,

பின்புறமிருந்தே நடந்ததால் இவன் பிடிக்க வரவும் வேக எட்டு எடுத்து வைத்தவள் மாங்காய் இருந்ததை கவனிக்காமல் அதின் மேல் மிதித்து விட, ஆரவ் பிடிக்க வருவதற்குள் மல்லாந்து கீழே விழுந்தாள் பூங்குழலி.

நல்ல வேளையாக உடனே சுதாரித்து கைகளை ஊன்றியதால் தலையில் அடிப்படாமல் தப்பித்துவிட, காலைதான் அசைக்க முடியவில்லை அவளால். அசைத்தாலும் வலி உச்சந்தலை வரை பாய அப்படியே அமர்ந்துவிட்டாள் அவள்.

அவள் விழுகையில் சற்று பதறிய ஆரவ்வோ, விழுந்த பின் அவள் அமர்ந்திருக்கும் நிலையைக் கண்டு சிரிப்புடன் நெருங்கி உதவிக்காக கையை நீட்டினான்.

அதை பார்த்தவள் ஆபத்துக்கு பாவமில்லை என்றெண்ணி பற்றப்போக, “ப்ரெண்ட்ஸ்…” என்றான் குறும்புடன்.

அதில் திகைத்து கையை இறக்கியவள் அப்படியே அமர்ந்துக்கொள்ள,

பெருமூச்சோடு, “சரி சரி… நோ ப்ரெண்ட்ஸ்… எனிமிதான் சரியா? எந்திரி” என்றான் நீட்டிய கையோடு. குரலில் இருந்த குறும்பு மறைந்து என்னமோ போல் ஒலித்தது.

அவன் கையைப் பிடித்துக்கொண்டே எழுந்தவள், எழுந்ததும் காலை கீழே வைத்துப் பார்க்க, வலியில் சட்டென்று மேலே தூக்கிவிட்டாள்.

“என்ன பண்ணுது… கால் வலிக்குதா” என்றவாறு மண்டியிட போனான் அவன். அதில் பதறி அவனைத் தடுத்தவள், “இல்ல கொஞ்சம் சுளுக்கு பிடிச்ச மாதிரி இருக்கு பாண்டேஜ் போட்டா சரி ஆகிரும்” என

“அதெல்லாம் வேணாம்… இங்க ஒரு பாட்டி நல்லா சுளுக்கு எடுப்பாங்க உடனே சரி ஆகிடும். நடக்க முடியுமா உன்னால… இல்ல அவங்களை இங்க வரச் சொல்லவா?” என்று அவளின் காலை பார்த்துக்கொண்டே கேட்க,

“என்னால முடியும். நடந்தே வரேன்” என்றவள் ஆரவ் தூக்கி விட்ட கையை விடாமல் பிடித்து அவனின் உதவியோடு நாலு எட்டு வைத்து நடந்தவள் பின் நின்றுவிட,

என்னவென பார்த்தவனின் பார்வையைத் தாங்கியவள், பற்றியிருந்த கையை இன்னமும் இறுக பற்றி லேசாய் குலுக்கியவாறு, “ப்ரெண்ட்ஸ்…” என்றிருந்தாள் இதழ்களில் உதயமான சிறு புன்னகையுடன்.

அலைகடல் ஆர்ப்பரிக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!