அலைகடல்-34.1

IMG-20201101-WA0016-a11496e6

மனைவியை அனுப்பி வைத்த கையோடு வேந்தனையும் நடன வகுப்பில் இறக்கிவிட்டவன் அலுவலகம் வர, வினோத் அவசரமாகக் கதவைத் தட்டி அனுமதி கிடைத்ததும் அறையினுள் நுழைந்தான்.

“சார்… எக்ஸ் சீப் மினிஸ்டர் அருள்ஜோதிய ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்காங்க. புருஷோத்தமனுக்கும் அவருக்கும் நடந்த பயங்கர சண்டைல கைகலப்பாகி இருக்கு. அர்ஜுன் இடையில தடுக்கப் போக, அந்த சண்டைல தெரியாம கீழே விழுந்து பின்மண்டைல அடி” என்றான் அவன்.

நெற்றி சுருங்க, “எதுக்குன்னு தெரியுமா?” என்ற ஆரவ்வின் கேள்விக்கு, “இல்ல சார் அது இன்னும் தெரியல” என்றவனை போகச் சொன்னவன் இரு கைகளையும் கோர்த்துக் கோர்த்து பிரித்தவாறு அதையே பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.

நியாயமாகப் பார்த்தால் அவன் ஆடாவிட்டாலும் அவன் தசை ஆடியிருக்க வேண்டும். ஆனால் அவனோ தசை, மனம், ஏன் உடலின் ஒவ்வொரு அணுவிலும் கூட வெறுப்பை விதைத்திருந்தான் போலும். யாருக்கோ எதுவோ என்பது போல் இருந்தவனின் மூளை மட்டும், “ஏன்? அடிக்குற அளவு என்ன பிரச்சனை?” என்று கேள்விகேட்டது.

அதன்பின் தோளைக் குலுக்கியவன், வேலையில் ஆழ்ந்துவிட, திடுமென மனம் பூங்குழலி செல்லும் முன் பார்த்த பார்வையை நினைவுபடுத்தியது.

அந்த இமைக்கா பார்வை… அதில் இருந்த ஏதோ ஒன்று… அவள் எதையாவது ஏடாகூடமாய் செய்துவைத்துவிட்டு தன்னை பார்க்கும் பார்வை. சட்டென்று எழுந்தான் அவன்.

‘என்ன செய்து வைத்தாள் இன்று?’

அதற்குள் வினோத், “சார்… போலிஸ் புருஷோத்தமனை அரெஸ்ட் பண்ண போயிட்டு இருக்காங்க. மிஸ்டர் அருள்ஜோதி மனைவி தன் குழந்தையை கடத்திக் கொன்னதும் இல்லாம தன் கணவனையும் கொல்லப் பார்க்குறாங்க என்று அவங்க அண்ணன் மேலேயே கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க” என்ற தகவலுடன் வர, “பூங்குழலி…” என்று பல்லைக் கடித்தான் ஆரவ்.

இந்நேரம் கொச்சி சென்றிருப்பாள் என்று கணக்கிட்டவன் அவளுக்கு அழைக்க, சுவிட்ச் ஆப் என்று பதிவு செய்யப்பட்ட குரல் கேட்டு மேலும் அவனின் கோபத்தைக் கிளப்பியது.

என்ன செய்து வைத்தாள் என்று தெரியவில்லை. ஆனால் வேந்தனைப் பற்றி அவர்களுக்கு இன்னும் தகவல் செல்லவில்லை. விசாரிக்க ஆரம்பித்து தெரிந்துக்கொண்டால் என்னாவது? வேந்தனை விட்டுக்கொடுப்பதா?

அவன் மீது பாசம் மட்டும் வைக்கவில்லை என்றால் வேந்தன் பற்றிய உண்மை தெரிந்ததும் எங்கேனும் கண்காணாத இடத்திற்கு அனுப்பி வைத்திருப்பானே தவிர அவர்களுக்கு தெரியவிட்டிருக்க மாட்டான். அப்படியிருக்கையில் பாசமும் வைத்து, காதல் மனைவி உயிரே வைத்திருக்கும் வேந்தனை இப்போது விடுவானா என்ன?

பூங்குழலி என்ன செய்தாள் என்று தெரிந்துகொள்ள வேண்டி அவளைப் பின்தொடரும்படி ஏற்பாடு செய்திருந்த பாதுகாவலரை தொடர்பு கொண்டால், “மேடம் அப்போவே கொச்சி ஆபிஸ்க்குள்ள போயிட்டாங்களே. நாங்க உங்களுக்கு மெசேஜ் பண்ணிட்டோமே சார்” என்றனர் அவர்கள்.

சரியென வைத்தவன் ஆத்திரம் தாளாமல், “ச்சை…” என்று தரையில் எட்டி உதைத்தான்.

வீடு வந்தவனின் உள்ளுணர்வு அவளின் அறைக்குச் செல்லுமாறு உந்தித்தள்ள, உள்ளே நுழைந்து விளக்கைப் போட்டான் ஆரவ். ஒளி பெற்ற அறையின் நடுவே படுக்கையில் மேல் வைத்திருக்கும் பொருள் பார்வையைக் கவர, அதை நெருங்கினான்.

ஒரு பெட்டியும் அதன் மேல் மடித்து வைத்த காகிதமும், அது பறக்காமல் இருப்பதற்காக பூங்குழலி தனியாக யாருக்கும் தெரியாமல் வாங்கிய செல்பேசியும் இருந்தது.

செல்பேசியை நகர்த்தி காகிதத்தைப் பிரித்தவன் கண்ணில், “I took your trump card as my weapon. sorry” (மன்னித்துவிடு. உனது துருப்புச் சீட்டை எனது ஆயுதமாக எடுத்துக்கொண்டேன்) என்ற மனைவியின் வாசகம் பட,

சொல்லப்பட்ட செய்தியில் முழுதாய் அதிர்ந்து பெட்டியில் என்ன இருக்கிறதென்று பார்க்க, தான் ரகசியமாய் வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் அழகாக அடுக்கி வைத்திருப்பதைக் கண்டவனின் வாய் தானாக முணுமுணுத்தது, “ஒ மை காட். ஷி இஸ் வெரி டேஞ்சரஸ்” என.

காலையில் கிளம்பும் அவசரத்திலும் அந்த கைபேசியில் இருந்து அருள்ஜோதியிடம் முழுதாய் இரண்டு நிமிடம் பேசியவள், கடத்தியவனை விசாரித்த வீடியோவில் குழந்தையை புருஷோத்தமன் கொல்ல சொன்னது வரை கட் செய்தும், அவர்கள் இருவரின் பேச்சை பதிவு செய்யப்பட்ட ஆடியோவும் அனுப்பிவிட்டே கிளம்பியிருந்தாள்.

அன்றைய அவளின் புதிரான நடவடிக்கைக்கு இன்று காரணம் புரிந்தது அமுதனுக்கு. அன்றே அவளுக்கு தன்னைப் பற்றிய அனைத்து உண்மையும் தெரிந்திருக்கிறது. அதனாலே அன்று தன்னைக் கலங்கடித்திருக்கிறாள் என்று புரிய, தான் மிரட்டுகையில் தன்னைப் பற்றி என்ன நினைத்திருப்பாள் என்ற யோசனையில் லஜ்ஜையாய் அசடு வழிந்தான் ஆண்மகன்.

தன் காதல் தெரிந்தவுடன் அவள் சென்றுவிடவில்லை… கூடவே தன்னைக் குறித்த உண்மையை வெளியே கூறி, பழிவாங்க அழகாய் சந்தர்ப்பம் இருந்தும் அவள் அதை பயன்படுத்தவில்லை. அது எப்படி ஒரு நிறைவை அவனுக்கு கொடுத்தது என்று வார்த்தையால் வர்ணிக்க முடியாது.

கூடுதலாக தான் அணைத்து முத்தமிட்டபோது முதலில் விலகப் பார்த்து பின் அமைதியாக இருந்த பூங்குழலியின் மனது இப்போது இவனிற்குத் தெளிவாகத் தெரிய, அவளே தெளிந்து வரும் நாளுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தான்.

அடுத்த நாள் காலையில் விக்ரமாதித்யா கப்பலை நோக்கி சிறிய ரக போர் கப்பலில் சென்றுக்கொண்டிருந்த பூங்குழலிக்கு கண்டிப்பாக அர்ஜுன் வீட்டில் பூகம்பமே வெடித்திருக்கும் என்று தெரியும்.

அன்று அர்ஜுனை வீட்டில் பார்த்ததில் இருந்தே அவளின் மனம் பிராண்டிக் கொண்டுதான் இருந்தது. அவன் தந்தை செய்வதையெல்லாம் செய்துவிட்டு சிறிதும் குற்ற உணர்ச்சியின்றி தன் மகனை அனைத்து சொத்துக்கும் வாரிசாக்கினார் என்றால் இவனோ அதில் ஆட்டம் போட்டதும் இல்லாமல் ஆரவ்விற்கு எதிராக தன்னைத் திருப்பி, அவன் நினைத்தது நடக்கவில்லை என்று தன்னிடமே தவறாக நடக்க முயன்றானே! என்ன தண்டனை அனுபவித்தான் இவன்?

அவளிற்கு அன்றே ஆரவ் அர்ஜுனை அடித்து தண்டனை கொடுத்ததெல்லாம் தெரியாதே!

அமுதனையே அத்தனை பாடுபடுத்தி, உண்மை அறிந்த பின்பே மன்னித்தவளுக்கு அர்ஜுனை சாதாரணமாய் விட்டுவிட மனமில்லை. அதற்காக அவனிற்கு பிறந்ததைத் தவிர வேறு ஒரு தவறும் செய்யாத குழந்தையைத் தண்டிக்க முடியுமா என்ன? அதனாலே அன்று அமைதியாய் இருந்தாள்.

இந்த யோசனைக் கூட கிளம்பும் முன் பெட்டியை எடுத்து வெளியே வைக்கையில் தோன்றியதுதான். தோன்றியபின் தாமதமேது? அருள்ஜோதியின் நம்பரும் துருப்புச்சீட்டில் இருக்க, பேசப் பிடிக்கவில்லை என்றாலும் காரியம் ஆகவேண்டுமே! குரலை மாற்றி பாதி உண்மையைக் கூறி, ஆதாரத்தை அனுப்பிய பின்பே ஒரு திருப்தி.

கூடவே அவளின் நியாய மனம் பெற்றவர்களிடம் இருந்து பிள்ளையைத் தெரிந்தே பிரிப்பது தவறு என்று வாதாட, மற்றொரு மனமோ, ‘அதற்காக இப்போது வேந்தனிடம் உண்மையைக் கூறி அவனை அனுப்பி வைக்க முடியுமா? அவர்களைப் பொறுத்தவரை குழந்தை இறந்துவிட்டதுதானே அப்படியே இருக்கட்டும்…’ என்று அடம்பிடித்தது சுயநலமாய். வேந்தனைப் பற்றி தெரிய வாய்ப்பில்லைதான்… தெரிந்தாலும் அமுதன் பார்த்துக்கொள்வான் என்ற தைரியம் இருந்தது.

இப்போது அவளின் யோசனையை ஆக்கிரமித்தான் அமுதன். தான் செய்து வைத்து வந்திருந்த வேலையால் கண்டிப்பாக கோபம் வந்திருக்கும். கோபத்தில் எப்படி கத்துவான் அவன்… அடிப்பது போல் நின்றுக்கொண்டு, கடுகடுவென முகத்தில் முள்ளைக் கட்டியவாறு படபடவென்று பொரிவான். அக்காட்சி மனக்கண்ணில் விரிய, அதில் வசீகரமாய் புன்னகைத்தது அவளின் இதழ்கள்.

இனி அவ்வாறு தன்னிடம் கோபம் கொள்ள யாரும் இல்லை… நினைக்கையில் ஒரு வித வாட்டம் வர, சட்டென்று தன் எண்ணம் போகும் பாதையை அறிந்து திடுக்கிட்டு விழித்தவள், தன் தலையை உலுக்கி அவ்வாட்டத்தை அவசரமாய் வெளியேற்றினாள்.

பூங்குழலி வேலையிடத்தை அடைந்ததுதான் தாமதம் விஷயத்தைக் கேள்விப்பட்டு விழுந்தடித்து அவள் முன் வந்து நின்றான் ரியாஸ்.

“மேம் சாரி மேம்… என்னாலதான் நீங்க அவங்க கண்ணுல பட்டீங்க. நீங்க ரெண்டு பெரும் லவ் மேரேஜ் என்று சொன்னது பொய் என்று எனக்கு நல்லாத் தெரியும். என்ன நடந்துச்சு சொல்லுங்க மேம். என்னால உருவான தப்பை நானே சரி செய்ய பார்க்கிறேன்” என்று படபடக்க,

அவன் பதட்டத்தில் இருக்கும் அக்கறையை உணர்ந்தவளோ முன்பைப் போல் மௌனமாய் கடக்காமல், “ரியாஸ்… கூல். நீ எனக்கு நல்லதுதான் பண்ணிருக்க சரியா. ஒன்னும் பிரச்சனை இல்லை” என்று முடிக்கவும் மற்றவர்ள் வந்து அவளுக்கு திருமண வாழ்த்தைச் சொல்லவும் சரியாக இருந்தது.

பூங்குழலி கூறியதில் உடன்பாடில்லை என்றாலும் அத்தனை நாள் குற்ற உணர்ச்சி ரியாஸிடம் இருந்து விடைபெற்றது என்னவோ உண்மை.

அவளிடம் வம்பு வளர்க்கும் அபிஷேக் கூட இப்போது அவள் முதலமைச்சரின் மனைவி என்றதில் இருந்த இடம் தெரியாமல் ஒதுங்கிப்போக ஆரம்பிக்க, எந்த தொல்லையும் இன்றி நாட்கள் மாதங்களாக மாறி பறந்துக்கொண்டிருந்தது.

ஆரவ்வின் காதல், காத்திருப்பில் கூடுதலானது என்றால் பூங்குழலியின் பிடித்தம் மெல்ல மெல்ல காதலை நோக்கி அடியெடுத்து வைத்துக்கொண்டிருந்தது.

காலை எழுந்ததும் குளிக்கையில் புதிதாய் கழுத்தில் தட்டுப்படும் தாலி அவள் அமுதனின் மனைவி என்பதை நினைவுபடுத்தும். உணவு உன்கையில் மாம்பழ ஜூஸ் வந்தால் மாந்தோப்பில் வைத்த போட்டியும் அதில் தான் செய்த திருகுதாளமும் ஆரவ்வின் கோபமும் நினைவு வரும், மீன் இருந்தால் பூங்குழலி மீனாக அது தெரியும்.

உடற்பயிற்சி செய்கையில், ‘பிப்டி கேஜி தாஜ்மஹால் எனக்கே எனக்கா’ என்ற அமுதனின் பாடல் காதுக்குள் ஒலித்து உதடுகளில் புன்னகையை ஏற்படுத்தும். அதை பார்த்தவர்கள் காணாததை கண்டது போல் ஆ வென்று பார்க்க, இவளோ சாவகாசமாய் பயிற்சியை முடித்துச் சென்றுவிடுவாள்.

ஜான்சிதான் பவிகாவிடம், “மேடம் பார்த்தியா இப்போலாம் சிரிச்ச முகமா இருக்காங்க” என்று சொல்லிச் சொல்லி ஆச்சரியப்பட்டாள்.

இரவானால் கடைசியாக அமுதன் அணைத்து முத்தமிட்டது கண்ணுக்குள் வந்த பிறகே உறக்கமும் இவளை வந்தணைக்கும். இங்கே இவள் முந்தின கசப்பான நினைவுகளை மறந்து முழுதாக கணவனின் காதலால், அவன் நினைவுகளால் ஆக்கிரமிக்கப்பட,

அங்கே ஆரவ்வோ இருந்த இடத்தில் இருந்தே ஒடிசா கம்பெனியை இந்தியாவை விட்டே ஓடும் அளவுக்கு ஓட ஓட விரட்டினான்.

அதுபோக வேந்தனுடன் நடிக்கும் படமான ஆடலரசன் திரைப்படத்திற்கு அவன் பகுதியை ஒரே மாதத்தில் முடித்து கொடுத்தவன் அடுத்து வேந்தனுக்கு பழக்கமில்லாத நடிப்பை வீட்டில் அவ்வப்போது கற்றுக்கொடுத்தான்.

மற்றொரு புறம் அருள்ஜோதி குடும்பம் சின்னாபின்னாமாகச் சிதறி உடைந்திருந்தது. அர்ஜுன் தனியாக தன் குடும்பத்தைக் கூட்டிச் செல்ல, அந்த பிரிவு அவர்களோடு மட்டுமல்லாமல் கட்சியிலும் எதிரொலித்தது.

உடல் நிலை தேறி வந்த அருள்ஜோதி அதற்கு மேல் முடியாமல், “எல்லாம் நான் செஞ்ச பாவம்தான். அதான் பதவியும் கைவிட்டு போயிருச்சு வாரிசும் இல்லாம போயிருச்சு” என்றவாறு மனைவியிடம் அனைத்தையும் சொல்லி அழ, தன் கணவன் வாழ்வில் தனக்கு முன் ஒருத்தி அதுவும் பத்து வயதில் மகனும் உண்டு என்று தெரிந்ததிலே இடிந்து இறுகி போய், யாரிடமும் பேசாமல் தனக்கென்று ஒரு வட்டத்தை போட்டுக்கொண்டு வாழ ஆரம்பித்தார் அவர்.

அன்று ஏனோ பூங்குழலியின் உறக்கம் பறிபோக, உறக்கம் வரவில்லையென்றால் எப்போதும் வேடிக்கை பார்க்கும் இடத்தில் சூடான டீயுடன் வந்து நின்றாள். அன்றைக்கு பௌர்ணமி போலும் கப்பலின் வெளிச்சத்தை விட பிரகாசமாய் ஒளி வீசிக்கொண்டிருந்தது நிலா.

அலைகடலாய் பொங்கிக்கொண்டிருக்கும் அவளின் அகக்கடல் ஆழ்ந்த அமைதியில் அமிழ்ந்து, கடலின் மேற்பரப்பில் பிரதிபலிக்கும் வெண்ணிலவின் வெள்ளிகதிரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.

என்ன நடக்கிறது எனக்குள்? முழித்திருக்கும் போதெல்லாம் மூச்சு முட்டியவனின் நினைவு இப்போது உயிர் மூச்சாகிப் போன மாயம்தான் என்ன? வேந்தனைக் கூட இவ்வளவு யோசித்திருக்க மாட்டாளே!

ஆனால் அவனுடன் சென்று வாழ்வது தனக்குச் சாத்தியமா? இருவருக்குமே பிடிவாதம் அதிகம். கொள்கைகள் வேறு வேறு. கண்டிப்பாக முட்டிக்கொள்ளும் அதில் சந்தேகமே இல்லை. யாரோ ஒருவர் விட்டுக்கொடுத்தால் அன்றி வாழ்க்கை சுமூகமாக செல்லாதே!

அவளின் யோசனையைக் கலைத்தது, “அதெல்லாம் கல்யாணம் ஆனா காதல் தானாக வரும்… உனக்கு என்னை பிடிச்சிருக்குல்ல அப்போ ஓகே சொல்லு” என்ற ரியாஸின் குரல்.

இவள் சற்று ஓரத்தில் ஒதுங்கியிருந்ததால் கவனிக்காமல் ஜான்சியிடம் பேசி இல்லை இல்லை மிரட்டிக்கொண்டிருந்தான் அவன்.

“உன்னை எனக்கு பிடிக்கும் எப்போ சொன்னேன்? நீயா நினைச்சிகிட்டா எப்படி?” என்றாள் ஜான்சி கோபமாய். நிஜமாகவே அவள் அவன் மீது ஏக கோபத்தில் இருந்தாள். பூங்குழலி இல்லாத நாட்களில் அவன் ஒழுங்காக இவளிடம் பேசக்கூட இல்லை. என்னவென்று இவள் கேட்டதிற்கும் பதில் இல்லை.

ஆனால் கடந்த சில மாதமாக மீண்டும் தன்னவளின் பின் சுற்ற ஆரம்பித்தான் அவன். அவளோ, ‘என்ன நினைத்துக்கொண்டிருக்கிறான் என்னைப் பற்றி? அவனிற்குத் தோன்றினால் பேசுவான் இல்லையென்றால் கண்டுக்காமல் செல்வானா அதற்கு தான் ஆள் இல்லை’ என்று கருவிக்கொண்டிருந்தாள் இப்போது.

“சரி பிடிக்கலைன்னா எதுக்கு நான் இங்க நீ வரும்வரை வெயிட் பண்ணுவேன் என்று சொன்னதும் வந்த? எப்படியோ போறான்னு போக வேண்டியதுதானே” என்று மடக்க, பூங்குழலிக்கு அவர்களின் ஊடல் புரிய ஆரம்பித்தது.

கூடவே அவன் கூறிய, ‘கல்யாணம் ஆனா காதல் தானா வரும்’ என்ற வார்த்தைகள் தனக்கும் பொருந்தும் என்று தோன்ற, ‘அமுதனும் இப்படி நினைத்துதான் தன்னை திருமணம் செய்திருப்பானோ’ என்று அவனிடம் தாவியது மனது.

எங்கே சுற்றினாலும் அவனிடம் செல்லும் மனதை அவளுக்கே ஓங்கி அடிக்க வேண்டும்போல் இருந்தது. இதற்குள் அவர்கள் பேசி பேசி சண்டையை தொட்டுவிடுவார்கள் போல் இருக்க, “என்ன நடக்குது இங்க?” என்றவாறு அவர்களுக்குள் நுழைந்தாள் பூங்குழலி.

அவளை எதிர்பார்க்காத இருவரும் திரு திருவென்று திகிலுடன் விழிக்க, “என்ன அவன் உன்னை தொந்தரவு பண்றானா? ஒரு கம்ப்ளைன்ட் குடு அவனை சஸ்பென்ட் பண்ணிரலாம்” என

ரியாஸிற்கு மேல் பதறி போனாள் ஜான்சி. “ஐயோ மேம்… நாங்க சும்மா பேசிட்டு இருந்தோம்…” என்றவள் பூங்குழலி முறைக்கவும், “வந்து நாங்க லவ் பண்றோம் இப்போ சின்ன சண்டை அதான்” என்றாள் தலையை குனிந்துக்கொண்டு.

அதில் சிரிப்பு வரப்பார்த்தது பூங்குழலிக்கு. இருந்தும் அடக்கியவள், “டைம் ஆகிருச்சி. உங்க லவ் உங்களோட வேலையை பாதிக்காம பார்த்துக்கோங்க கோ அவே” என்று விரட்ட, விட்டால் போதுமென்று ஓடியே போனாள் ஜான்சி.

ஆனால் ரியாஸ் இவளிடம் ஓடிவந்து கையைக் பற்றி குலுவோ குலுவென்று குலுக்கியவன், “தேங்க்ஸ் மேம் தேங்க் யூ சோ மச்… நானும் மாசக்கணக்கா கேட்டுட்டு இருக்கேன் என் மேல இருக்குற கோபத்துல வச்சி செஞ்சிட்டு இருந்தா… இப்போதான் நிம்மதியா இருக்கு” என்றுவிட்டு அவள் பதில் சொல்லும் முன் அவனும் ஓடிவிட,

அதில் சிரித்துக்கொண்டே இடம் வலமாய் தலையாட்டிவள் அண்ணாந்து வானத்தை பார்த்தாள் பூங்குழலி. உலகமே வெகு அழகாக மாறிவருவது போல் தோன்றியது அவளுக்கு.

வாழ்வது ஒருமுறை… அதை நமக்கு பிடித்தவர்களுடன், நம்மைப் பிடித்தவர்களுடன் வாழ்ந்துதான் பார்ப்போமே!