அலைகடல் – 35.1

IMG_20201204_144642-aeac8dd5

விசாகப்பட்டினம் கடற்கரை. 

ஜேஜே என்று திரளான மக்கள் கூட்டம் கடற்கரையில் நிரம்பி வழிய, சிகப்பு கம்பளம் விரித்து வைத்திருந்த வழியாக அங்கே அமைத்திருந்த மேடையை நோக்கி ராணுவ பாதுகாப்புடன் சென்றுக்கொண்டிருந்தனர் ஆரவ்வும் பூங்குழலியும். வேந்தன் இப்போது பன்னிரண்டாம் வகுப்பென்பதால் அவனை அழைத்து வரவில்லை. 

எப்போதும் போல் ஆரவ் வெள்ளை சட்டை, கருப்பு பேன்ட் சகிதம் வர, கணவனின் பணிக்கு ஏற்றவளாக புடவைக்கு மாறியிருந்தாள் பூங்குழலி. கடல் நீல நிற காட்டன் புடவையும் அலைகளின் வெள்ளி நிற பார்டரும் அவளின் நிறத்திற்கு அழகாய் பொருந்த, அதற்கு பொருத்தமான முத்து நகை அணிந்து ஆரவ்வின் வலப்புறம் வந்த பூங்குழலியின் தோற்றம் வெகுவாக மாறியிருந்தாலும், கம்பீரம் சற்றும் குறையவில்லை. இருந்த அழகும் மேலும் மெருகேறி வாழும் வாழ்க்கைக்கு ஏற்ப சுடர்விட்டு பிரகாசித்தது எனலாம். 

மேடையில் அமர்ந்திருந்த ஆந்திர முதல்வர் ஆரவ் மேடையேறியதும் வரவேற்கும் விதமாக எழுந்து புன்னகையுடன் கைகுலுக்கி கட்டி அணைத்தவர், பூங்குழலியையும், “வணக்கம்” என்று கைகுவித்து வரவேற்றார். பதிலுக்கு அவரிடம் கைகுவித்து, கணவன் அருகே அமர்ந்த பூங்குழலிக்கு நெஞ்சமெல்லாம் சந்தோஷத்தில் அலைகடலின் ஆர்ப்பரிப்பு. 

பின்னே இருக்காதா? கடற்படையும் ராணுவமும் ஆங்காங்கே பாதுகாப்புக்கு அணிவகுத்து நிற்க, கோலாகலமாய் தொடங்கியது இந்திய கடற்படை தின விழா. 

அவர்கள் சேர்ந்து வாழ்ந்த இந்த ஆறு மாதத்தில் பூங்குழலி விரும்பிக்கேட்டது இதைதான். வருடந்தோறும் நடைபெறும் இவ்விழாவில் வருடம் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் என்று அவள் கேட்க, கொடுத்த வாக்கின் படி அழைத்து வந்திருந்தான் ஆரவ். 

பூங்குழலி அருகிலிருக்கும் ஆரவ்வை மறந்தாள், அங்கிருக்கும் கூட்டத்தை மறந்தாள், ஏன் இருக்கும் இடத்தையே மறந்தவளின் பார்வையெல்லாம் வானத்தின் மீதுதான். ராக்கெட் விமானம் வித வித வடிவத்தில் வானத்தை சுற்றி சுற்றி சாகசம் செய்ய, அடுத்து கடற்படை ஹெலிகாப்டர் விமானம் பறந்தது.  

கீழே சீராக வீரர்கள் இந்திய கொடி, வாத்தியங்கள் சகிதம் அணிவகுத்து நடந்துக்கொண்டிருக்க, தூரத்தே கடலில் ஒற்றைத் திமிங்கலமாய் விக்ரமாதித்ய கப்பலும் அதன் முன்னும் பின்னுமாக பல சிறிய போர் கப்பல்கள் கடலில் குண்டு பாய்ச்சிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் நெஞ்சம் நெகிழ்ந்து உணர்ச்சி வசப்பட்டாள் பூங்குழலி. 

‘சென்ற வருடம் நான் அந்த விமானத்தை ஓட்டினேன்… விக்ரமாதித்திய கப்பலில் அதை இறக்கினேன்’ மலரும் நினைவுகளை நினைத்து மலர்ந்திருந்தவளுக்கு இனி அப்படி ஒருகாலம் வரவே வராது என்னும் நிதர்சனம் உரைக்க, அழுகை வரும்போல் இருந்தது. ஒன்றா இரண்டா கிட்டதட்ட எட்டு வருட பந்தமல்லவா? அமுதன் வேண்டும், அவனின் காதல் வேண்டும் என்று அதை விட்டுவந்துவிட்டாலும் அதன் மீதான மனதின் பிடித்தம் முற்றிலும் விலகவில்லை. 

அவள் தவிப்பை உணர்ந்தவன் போல் இருக்கையின் மேல் இருந்த அவளின் கையைத் மெதுவாய் அழுத்திய ஆரவ், “பச்… என்ன பூங்குழலி. நீ ஆசைப்பட்ட என்று கூட்டி வந்தால் இப்படி உக்காந்துட்டு இருக்க? ஜஸ்ட் என்ஜாய் த மொமென்ட். வாழ்நாள் முழுதும் அங்க வேலை செய்ய முடியாது. ஒருகட்டத்தில் விலகதான் வேண்டும் இல்லையா…” என்று பொறுமையாய் எடுத்துரைத்தவன் பின் அவளின் மனநிலை மாற்றும் பொருட்டு, 

“கீழ அந்த பொண்ணு உனக்கு தெரிந்தவளா? அடிக்கடி உன்னையே பார்த்துட்டு இருக்கா” என  

யாரென தேடியவளின் கண்களில் அணிவகுப்பில் நடந்து முடித்து ஓரமாக நின்றிருந்த ஜான்சி தென்பட்டாள். பூங்குழலி தன்னைப் பார்த்ததும் கையிலிருந்த இந்திய தேசியக் கொடியை உற்சாகத்தில் ஆட்ட, சிரிப்புடன் அருகிலிருந்தவனிடம் ஆமாம் என தலையாட்டினாள் பூங்குழலி. 

“யார்?” என்ற ஆரவ்விடம், “ஜான்சி… என்னோட ஜூனியர். ரியாஸ் லவ் பண்ற பொண்ணு” என்றதும் புதிய தகவலில் ஆச்சரியப்பட்டவன்,  

“வாட்… இது அந்த பொண்ணுக்கு தெரியுமா?” என்று வினவ, 

“அதெல்லாம் தெரியும்… ரெண்டு பேரும்தான் லவ் பண்றாங்க. விளையாட்டுத்தனமா இருந்தாலும் வேலைல ஒரு குறையும் சொல்ல முடியாது” என்று மனமார பாராட்ட, 

“அங்கேயும் லவ் பண்ணலாம்தானே. இதை நான் யோசிக்கவே இல்லை. நீ யாரையும் விரும்பிருக்க வாய்ப்பில்லைன்னு நினைச்சேன். உனக்கும் அங்கே ப்ரோபோசல் எதாச்சும்…” என்று வேண்டுமென்றே வம்பிழுத்தவனை, 

“என்னது?” என சுட்டெரித்தாள் மனைவி. 

“இல்ல… மோஸ்ட்லி வந்திருக்காதுதான். இருந்தாலும் வந்திருந்தா…” என்று இழுத்தவனிடம் அதன் பின் பேசவில்லை. பூ முகமும் என்னவோ போல் ஆகிவிட்டது. அதைப் பார்த்த பிறகு ஆரவ்விற்கு தோன்றியதெல்லாம் ஒன்றுதான்.  

இன்றைக்கு வீட்டில் தரமான ஒரு சம்பவம் இருக்கிறது என்று. இந்த ஆறு மாதத்தில் அவளின் ஒவ்வொரு அசைவும் பார்வையும் அமுதனுக்கு அத்துப்படி அல்லவா? அவ்வப்போது இதேபோல் அவன் வம்பிழுப்பதும் அதற்கு அவள் யோசித்து யோசித்து சண்டையிடுவதும் அவர்களின் வாழ்க்கையில் இயல்பான ஒன்றானது. கூடவே அவளை சமாளிக்கும் கலையும் கைவரப்பெற்றதால் சகஜமாகவே இருந்தான் அவன். 

விழா இனிதே முடிந்து இவர்கள் வீட்டிற்கு வரவே நடு இரவானது. இன்னமும் அப்படியொரு கேள்வியைக் கேட்ட ஆரவ்வைக் காய்ச்சிக்கொண்டுதான் இருந்தாள் பூங்குழலி. அதையெல்லாம் கேட்டும் கேளாதவனாய் இருந்தவன், இரவு தங்களின் அறைக்குள் அவள் நுழைந்ததுமே பிடித்துக்கொண்டான். 

“பூ ஏன் இன்னைக்கு பூகம்பமா வெடிக்குது” என்றவாறு அவளுள் புதைந்தவனை விலக்கியவள், “எதுக்கு அப்படி கேட்டீங்க? வேறொருத்தனை விரும்பி அவனை விட்டுட்டு உங்களை திருமணம் செய்றவளா நான்?” என்று சண்டை பிடிக்க, 

“பூவே… எதுக்கு பெரிய பெரிய வார்த்தைலாம் பேசுற சும்மா கேலி கூட பண்ணக்கூடாதா உன்னை? நான் பண்ணாம வேற யாரு பண்ணுவா?” என்று கொஞ்ச, 

“கேலிக்கும் ஒரு அளவு இருக்கு அமுதன். எனக்கு இப்படிலாம் கேட்டால் பிடிக்காது. ஏன் நீங்க கூடதான் சினிமால அத்தனை பொண்ணுங்களோட நடிக்குறீங்க… அவங்களும் உங்க மேல வந்து விழுகுறாங்க. நான் கேட்டேனா உங்களுக்கு ப்ரோபோசல் வந்திருக்கான்னு? கேட்டிருந்தா தெரிஞ்சிருக்கும்” ஏனோ அந்த கேள்வியை அவ்வளவு எளிதாகக் கடந்து போகமுடியவில்லை அவளால். 

“சரி சரி… நான்தான் தப்பு போதுமா. இனிமே கேட்டா கன்னத்துல சப்புன்னு ஒன்னு குடு” என்றவனை  

“அதென்ன இனிமேல்? ஏற்கனவே கேட்டதுக்கு யார் கொடுப்பா” என்றவள் அவன் தடுக்கும் முன் சப்பென்று கன்னத்தில் அறைந்துவிட, 

“ஸ்ஸ்…” என்றவாறு அவள் அடியைச் சுகமாய் தன் கன்னத்தில் தாங்கியவன், அவளை அணைத்துக்கொண்டு கழுத்தில் முகம் புதைத்து கலகலவென சிரித்தான். 

பூங்குழலிக்கோ அவன் சிரிப்பில் சண்டையிடும் எண்ணம் போய்விட, சலிப்பானது. இவனிடமா ஒத்துவாழ முடியுமா என்று பயந்தாள். தானே சண்டையிட்டும் கூட கெஞ்சியோ, கொஞ்சியோ அல்லது இப்படி சிரித்தோ மனதை மாற்றிவிடுகிறான். 

அவனின் தலை முடியைப் பிடித்து ஆட்டியவள், “எதாவது ஒன்னு பண்ணி மனசை மாத்திரு. அடிச்சதுக்கு வெக்கமே இல்லாம சிரிக்குற நீ” என  

“யார் அடிச்சா நீ தானே? அடிச்சிக்கோ” என்றவன் மீண்டும் எதையோ நினைத்து சிரிக்க, “எதுக்கு இப்போ சார்க்கு இப்படி ஒரு சிரிப்பு” என்றாள் அவனின் சிரிப்பில் உருவான புன்னகையுடன். 

“ஒரு சிஎம் அப்படிங்குற பயமில்லாம அடிக்குறியே… வெளிய தெரிஞ்சா என்னாகும்ன்னு நினைச்சேன்” என  

“சொல்லிருவியா வெளிய… சொல்லிதான் பாரேன்! பிறகு உன் கெத்து என்னாகுறது” என்று மனைவி கேலி செய்ய, 

“என் கெத்துக்கு என்னடி… நீ வரதுக்கு முன்னாடி என்னை யாராலையும் அடக்க முடியாது தெரியுமா? ஏன் இப்போகூட யாராலையும் என் முன்னாடி நின்னு குரல் உயர்த்திக்கூட பேச முடியாது. நீ என்னடான்னா கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம அடிக்குற… அடக்குற. அலைகடல் மாதிரி ஆர்ப்பரிச்சிட்டு இருந்தவன்டி நான்” என்றவாறு கன்னம் உரச,  

“ஓஹோ… இப்ப அந்த அலைகடலுக்கு என்னாச்சாம்…” குரல் அவனின் நெருக்கத்தில் கொஞ்சிக் குழைந்தது. 

“அது இந்த பூப்போன்ற பொண்ணுகிட்ட அடங்கிப்போய் அமைதியின் சிகரம் ஆகிருச்சாம்” 

சொன்னவன் சொன்னபடியே பூப்போன்ற பெண்ணின் மென்மையில் தன்னைத் தொலைத்து அவளுக்குள் அடங்கிப்போக ஆரம்பித்தான். 

தூங்குவதற்காகத் தன் மார்பில் விழிமூடி சாய்ந்திருந்த பூங்குழலியின் தலையை மெதுவாக வருடிவிட்டான் ஆரவ். 

“குழலி…” 

“ம்ம்…” என்றாள் தூங்குவதற்கு முன்னான குரலில்.  

“தூக்கம் வருதா?”  

“ம்ஹும்…” வந்தாலும் ஏதோ பேச நினைப்பதாலே இப்படிக் கேட்கிறான் என்று தெரிந்தவள் அதை கேட்பதற்காக மறுத்துக்கூற, 

“அப்போ நான் சொல்றதை கவனி. என்னோட அப்பப்போ ஆபிஸ் வரது மட்டும் போதுமா உனக்கு. மத்தவங்க மாதிரி வெளிய கூட உன்னால சுதந்திரமா சுத்த முடியாது. இப்போ ஒன்றும் தோணாது. ஆனா கொஞ்ச காலம் போனா ஒரு சலிப்பு வந்துரும் பூவே… ஏதாவது பண்ணனும் என்ற ஐடியா இருக்கா? கப்பல்ல முதன்முதலா கம்பீரமா, திறமையா பார்த்த பொண்ணை வீட்டுக்குள்ள பூட்டி போட்டுட்டேனோன்னு மனசு கிடந்து அடிக்குதுடி” என்றான் அமுதன்.  

அனைத்தையும் பொறுமையாய் உள்வாங்கியவள் தன் தாடையை நெஞ்சில் நிமிர்த்தி வைத்து கணவன் முகம் பார்த்தவாறு, “ஹ்ம்ம்… அப்போ உங்க பதவியை எனக்குத் தரீங்களா?” என்றிருந்தாள் சிறிதும் யோசிக்காமல். 

சற்று முன்பு நடந்த சங்கமத்தைப் பறை சாற்றும் கலைத்த கோலத்தில்  பேரழகாக ஜொலித்தது பூ முகம். இப்படி இருந்துக்கொண்டு கேட்டால் உயிரையே கேட்டாலும் தருவானே!  

“வச்சிக்கோ” என்றான் சாதாரணமாய். 

“நிஜமாவா?” என்றவளிடம், “நிஜமாதான்… இன்னும் ஒரு வருஷம்தான் இருக்கு தேர்தலுக்கு. நீ என் இடத்துல இருந்து போட்டி போடு. உன்னை ஜெயிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு” என்றான் பொறுப்பாய். 

அதில் பூங்குழலியின் மனம் காதலில் நெகிழ, “ஏன் என்னை இவ்ளோ காதலிக்குறீங்க? நான் உங்க அளவு உங்களை காதலிக்கலை தெரியும்தானே!” என்றாள் எப்போதும்போல். மிகவும் நெகிழ்ந்திருந்தால் மட்டுமே அமுதனை மரியாதையாகப் பேச வரும் பூங்குழலிக்கு மற்ற நேரமெல்லாம் வா போதான். அவனும் அப்படிதான்… வெளியே பூங்குழலி அல்லது குழலி என்பவன் அவர்களின் தனிப்பட்ட நேரத்தில் கொஞ்சுவதெல்லாம் பூ பூவே பூவுதான். 

பூங்குழலி இவ்வாறு கேட்பதற்குக் காரணம் உண்டு. இன்னமும் அவள் காதலை வாய் வார்த்தையாக அவனிடம் கூறவேயில்லை. அமுதன்தான் விதவிதமாக சொல்லுவான், கொஞ்சுவான், அழகை ஆராதிப்பான்.  அவள் அதை மௌனமாய் கேட்டுக்கொண்டு ரசிப்பதோடு சரி பதிலுக்கு அவனைப்போல சொல்லத் தோன்றாது வரவும் வராது. அவனிற்கும் கேட்க நெஞ்சு முழுக்க ஆசையிருந்தாலும் தானாகவே அவளுக்கு தோன்றும்போது சொல்லட்டும் என்று விட்டுவிடுவான். 

இப்போதைய அவளின் கேள்விக்கு, “காதலுக்கு ஏதுடி அளவு. அப்படியே இருந்தாலும் பரவால்ல இப்போ என்ன… உனக்கும் சேர்த்து நான் காதலிச்சிட்டு போறேன்” என்றான் எளிதாக. 

“அப்போ நானும் உங்களை மாதிரி லவ் பண்ணனும், அதை உங்ககிட்ட சொல்லணும்ன்னு ஆசையில்லையா… எங்கே உங்க நெஞ்சை தொட்டு சொல்லுங்க” என கணவனை அறிந்தவளாகக் கேட்க, 

“ஹாஹா… ஆரம்பிச்ச பேச்சு வேற எங்கேயோ போகுதே பூவு. இங்கேபார் எனக்கெல்லாம் காதல் வந்ததே பெருசு. அதுவும் ஏடாகூடமான ஆளுகிட்ட வந்து அதுக்கு எதிர்காலம் இருக்கா இல்லையான்னே தெரியாம நான் பட்டபாடு எனக்குதான் தெரியும்” 

“இப்போ அந்த கவலை இல்லை நீ என்கூட இருக்க அதுபோதும். அதுக்கும் மேல துளி பிடித்தம் இல்லாம, உன் மனசு ஓரத்துல கூட நான் பதியாமலா உன்னை முழுசா எனக்கு குடுத்திருப்ப?”  

இதை கூறுகையில் மொத்த ரத்தமும் முகத்திற்கு பாய்ந்தது பூங்குழலிக்கு. அவன் முகம் பார்க்க முடியாமல் அவன் நெஞ்சிலே புதைந்துக்கொள்ள, அவளை இறுகி அணைத்துக்கொண்டான் அமுதன். 

இருவரும் சற்று நேரம் பேசவில்லை. இதயம் மட்டும் அவளின் சொல்லாத காதலை இதமாய் பரிமாறிக்கொண்டிருந்தது தனது லப்டப் அலைவரிசையால். 

அமுதன் தொடர்ந்தான், “அந்த பிடித்தம்தான காதல் பூங்குழலி. என்ன அதை நீ ஒத்துகிட்டு சொல்ல பல வருஷம் ஆகும். அதுவரை என்னால காத்திருக்க முடியாதும்மா. நீ உனக்கு தோணும்போது சொல்லு… அப்போவும் இப்படியே நான் இருப்பேனா இல்ல பொக்கை வாயா இருப்பேனான்னு சொல்ல முடியாது. முப்பத்தைந்து வயசாகி அங்கங்க முடி நரைக்க ஆரம்பிச்சிருச்சி பாரு. இந்த முகத்தை இப்போவே நல்லா பார்த்து வச்சிக்கோ” என்றவாறு அவளைத் தன் முகம் காண வைக்க, 

சொன்னதைச் செய்தாள் அவன் தர்மபத்தினி. அவன் சொன்னதுபோல் அங்கங்கே முடி நரைத்தாலும் அது அவன் கம்பீரத்தையோ தோற்றத்தையோ சிறிதும் அசைக்கவில்லை. 

எக்கி அவனின் தாடையில் முத்தம் பதித்தவள், “முழுசா நரைத்து கிழவன் ஆனாலும் இந்த முகம் எனக்கு பிடிக்கும். நான் அப்போவும் சொல்வேன்… இப்போவும் சொல்வேன்… எப்போவுமே சொல்வேன்… ஐ லவ் யூ போதுமா” காதல் கூறிய மறுகணம் அவன் கழுத்தில் முகம் புதைக்க, 

எதிர்பாராத இன்ப அதிர்ச்சி தந்த தாக்குதலில் மொத்தமாய் நிலைகுலைந்தாலும் தன்னில் புதைந்தவளிடம் தானும் புதைந்து, மீண்டும் அவளுள் புதையலைத் தேடத் தொடங்கினான் பூங்குழலியின் அமுதன். 

இன்னும் என்ன ஒன்னும் வேண்டாமே

போதும் இவ போதும்

கன்னத்தோடு கன்னம் உரசும்

நெருக்கம் அது போதும் 

கண்கள் மூடி காதல் சொல்லடி

நீயுமில்லா நிமிடமும் நரகங்கள் ஆகுமடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!