அலை ஓசை 17

sea2-62c2a027

அலை ஓசை – 17

கிரைம் பிரான்ச் இருந்து வெளியே வந்த அந்த தாய், தான் செல்லும் வழியில் இளம்காதல் ஜோடிகள் செல்லுவதை கண்டு, ‘தானும் இவ்வாறு தானே தன் தனாவோடு சென்று இருப்போம்’ என்ற கடந்த காலத்திற்குள் சென்றாள். அதோடு, தனக்கு வந்த லவ் லெட்டருக்கு என்ன பண்ணுவது என்று அவனிடமே நின்ற பொழுதுகளை நினைத்து சிரித்தும் கொண்டாள் .

அன்று, குட்டி மா மிகவும் குழம்பி கொண்டு இருந்தாள். “இப்போ என்ன பண்ணுறது.. ஒண்ணுமே புரியலயே… தனா கிட்ட கேட்கலாமா? திட்டுவானா? என் மேல தப்பு இல்லையே? சின்னா கிட்ட கேட்கலாமா? வேணாம் வேணாம்.. பேயாட்டம் ஆடிடுவான். தனா கிட்டயே கேட்போம்” தன் கையில் இருக்கும் காகிதம் ஆயிரம் டன் வெயிட் போல, அவள் மண்டையில் இறங்கி அழுத்தம் கொடுத்து இருந்தது.

அவளின் குழம்பிய முகத்தை பார்த்து கொண்டே வந்தான், அவளின் நாயகன்.

“என்னடா குட்டி மா, முகமே ஒரு மாதிரி இருக்கு.. உன் தனா கிட்ட சொல்லுடா… ” கேட்கும் விதம் சரியாக இருந்தால், அதற்கான பதிலும் உண்மையாக இருக்கும். சைக்கோலஜி கிளாஸ்ஸஸ் இங்க யூஸ் ஆகுது டா தர்மா… இது அவன் மனசாட்சி தான்.

“இந்த லெட்டர் பாருடா ” தனா என்னை தப்பா நினைச்சிட கூடாது… ஊரிலுள்ள எல்லா கடவுள்களையும் குட்டி மா வேண்ட, தன் கைகளை பின்னே கட்டி கொண்டு ” நீயே சொல்லிடுடா. நீ தான் படிச்சிட்ட போல… ஆமா தான? ” சங்கடமாக அவள் தலை அசைக்க,

“அப்புறம் என்ன டா? சொல்லு, ” அமைதியான அவனது குரல், அவள் பதட்டத்தை குறைத்தது.

“அர்ஜுன் என்னை லவ் பண்ணறதா லெட்டர் எழுதி கொடுத்து இருக்கிறான்டா தனா. என்ன பண்ணுறதுனே தெரியல! ” குழம்பிய முகத்துடன் கூற, அவள் கூறுவதை கேட்டு கொண்டே வந்த சின்னா , அதிர்ந்து தர்மாவின் முகத்தை பார்க்க,

“ரிலாக்ஸ் அண்ட் திங்க் . உனக்கும் அர்ஜுன பிடிச்சு இருந்தா ஒகே சொல்லிடு. ஓவர்த்திங் பண்ணாத. மைண்ட்ல இருந்து இல்லாம ஹார்ட்ல இருந்து யோசி. டைம் ஆகிடிச்சு. வீட்டுக்கு போலாம்.. சின்னா! நான் குட்டிய அழைச்சிட்டி போறேன்டா” தன் காதலை மறைத்து, தர்மா கூற, அவன் மன போராட்டங்களை சின்னா அறிந்தான்.

தர்மா கனத்த மனதோடு வீட்டிற்கு செல்ல, மறுநாள் குட்டிமாவும் , நேற்று எதுவும் நடக்காதது போல சுற்றி திரிய, சின்னாவின் உந்துதலில் தர்மாவும் கேட்டே விட்டான், “அர்ஜு கிட்ட என்ன பதில் சொன்ன?” என்று! “எனக்கு என் தனா இருக்கானு சொல்லிட்டேன், தனா!” அவள் கூறிய பதிலில் சின்னாவே அதிர்ந்து பார்க்க, தனாவின் நிலையை கேட்கவும் வேண்டுமோ?! சிலையாகவே நின்றுவிட்டான். தன்னை போலவே தன் குட்டிமாவும் தன்னை மட்டுமே நினைத்து இருக்கிறாள் என்ற சந்தோஷத்தில்!

காதலை சொல்ல ஆயிரம் வழி இருக்கிறது. பெரும்பாலும் ஆண்களே முதலில் வெளி படுத்துவர். வெட்கத்தாலோ இல்லை இயல்பான கூச்சத்தாலோ பெண்கள் தங்கள் காதலை மனதிலேயே மறைத்து வைத்து விடுவர். கை மீறி செல்லும் வேலையில் மட்டுமே பெண்ணின் காதல் அவள் உதட்டில் வார்த்தைகளாக வெளி வரும்.

அந்த நிலையில் தான் குட்டிமாவும் இருந்தாள். மறை முகமாக அவள் தன்னிடம் சொன்ன காதலை உணர்ந்த தர்மா, அவளை அணைத்து, “ஆமாம்டா, உன் தனா எப்போதும் உனக்கு இருப்பான்.உனக்கு துணையா எப்போதும் “

“ஐ லவ் யூ”, மேஜிக்கல் வெர்ட்ஸ் தான். ஆனால், அதை சொல்லி மட்டுமே தங்களின் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. உனக்காக எப்போதும் நான் இருப்பேன் என்ற உணர்வை உணர்த்தினாலே, அது காதல் தான். அழகான காதல் கதை, தர்மாவிற்கும் அவனது குட்டிமாவிற்கும் அந்த நிமிடம் உருவானது.

வெக்கத்தையே கொழச்சி கொழச்சி     
குங்குமம் பூசிக்கோடி……     
ஆசையுள்ள வேர்வையப்போல் வாசம் ஏதடி     
     
ஏ பூங்கொடி வந்து தேன் குடி     
அவ கைகளில் உடையட்டும் கண்ணே கண்ணாடி……     
கத்தாழங்காட்டுக்குள் மத்தாளங்கேக்குது     
சுத்தானை ரெண்டுக்கு கொண்டாட்டம்     
குத்தாலச்சாரலே முத்தானப் பன்னீரே     
வித்தாரக்கள்ளிக்கு துள்ளாட்டம்     

காற்றோடு கசிந்து வந்த பாடல் வரிகளில் தன் நினைவு கடலின் ஆழம் சென்ற குட்டிமா, நிஜம் உரைக்க தலையை உலுக்கி, கண்ணோரம் கசிந்த கண்ணீரோடு, நினைவுகளில் இருந்து தற்காலிகமாக மீண்டு, அடுத்து தான் செய்ய வேண்டிய விஷயங்களை மனதில் உருபோட்டுக் கொண்டு சென்றாள்…  நடக்கும் நாடகத்தின் நாயகன், தன்னவனே தான் என்ற தீர்மானத்தோடு!

# # # # #

உக்கிரன் தர்மாவிற்கு கால் செய்து கிரைம் ப்ராஞ்சில் நடந்ததை கூறிய உடன், தர்மாவின் ஆச்சரிய புருவ முடிச்சே, இதை அவன் எதிர் பார்த்து இருக்க வில்லை என்று கூற , அடுத்து சந்திரா என்ன செய்வாள் என்பதை யூகித்தவனாய் சக்கரவர்த்திக்கு கால் செய்தான்.

“ஹலோ சக்ரவர்த்தி ஸ்பிக்கிங் ” குரலை கேட்ட உடன் ,”பெயர் எல்லாம் நல்ல தான் இருக்கு. ஆனா, செய்யுற வேலை தான் சரியாய் இல்லை” குரலை கேட்ட உடன் சக்ரவர்திக்கு கோபம் பொங்கியதோ?

“யாரு நீ ? யார்கிட்ட பேசுறனு தெரிஞ்சு தான் பேசுறியா?” “சும்மாவா சொன்னாங்க, குற்ற உள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்னு… அதுக்குள்ள என் வாய்ஸ மறந்துட்டியே சக்ரா.. த..ர்..மா பேசுறது” தர்மாவின் பெயரை கேட்டவுடன் சப்த நாடியும் அடங்கியது சக்ரவர்த்திக்கு.

“ஏ..து..க்கு எனக்கு கா..ல் பண்ணி..இருக்க.. அங்க என் பொ…ண்…ண்…ணு” வார்த்தைகள் தந்தி அடித்ததோ, “உன் பொண்ண கூட உனக்கு நியாபகம் இருக்கா ?” தர்மாவின் வாயில் நக்கல் வழிந்ததோ!

“இங்க பாரு.. என்னை என்ன வேணா பண்ணு . நான் தப்பு பண்ணிருக்கேன். ஒத்துக்கறேன். ஒன்னு இல்ல ரெண்டு இல்ல ஆயிரம் கோடின்னு கூட தப்பு பண்ணிருக்கேன். சின்னது பெருசுன்னுலாம் கணக்கு இல்லாம நிறைய தப்பு பண்ணிருக்கேன். என் பொண்ணை ஒன்னும் பண்ணிடாத. எனக்கு பொண்ணா பிறந்தது தவிர அவ வேற எதுவும் தப்பு பண்ணல” எப்போதும் தன் பெயரில் இருக்கும் கம்பீரத்தோடு பேசும் மனிதர், பாசத்தில் உருகி நின்றார். அவரும் ஒரு பெண்ணை பெற்றவர் அல்லவே?

“நீ கெஞ்சுறதா பாத்தாலும் பாவமா தான் இருக்கு. ஆனா என்ன பண்ண?வேலைன்னு வந்துட்டா, என் வேலை ஆகுற வரை நான் யாரையும் நம்புறது இல்ல. எல்லாம் நீ கத்து கொடுத்தது தான சக்ரா?” “நான் என்ன பண்ணனும். அது மட்டும் சொல்லு. என் பொண்ணை விட்டுரு. என் பொண்ணை நீ விட்டுறேன்னு சொன்னா, நீ சொல்றத என்னனாலும் நான் கேக்குறேன்”

மஹாபாரத துரோணாச்சார்யாவின் நிலையில் தான் சக்ரவர்த்தியும் இருந்தாரோ? தர்மன் தன் பிள்ளை இறந்து விட்டான் என்ற செய்தியில் அவர் இறந்து நின்றாராம். இன்று இந்த தர்மன் கூறும் செய்தியில் சக்ரவர்த்தியும் அப்படிப்பட்ட நிலையில் நின்றாரோ? விதிக்கே ஆச்சரியம் தான்!

“உன் பாஸ் இப்போ இந்தியா வந்துட்டான். அதுனால நீ என்ன பண்ணுற… ” கட்டளைகள் விட்டபடி தர்மா இருக்க, திகில் பார்வையில் எதிராளி இருந்தான். “இது எல்லாம் நான் உன்னை கண்டிப்பா பண்ணனும்னு கூட சொல்லல. ஆனா நீ பண்ணின வேலை எல்லாம் நான் சொல்லாமலே உன் பொண்ணுக்கு தெரியவரும் போது, பாவ காசுல தான் இவளோ நாள் உயிர் வாழ்ந்து இருக்கோம்னு உன் பொண்ணு நினைச்சி, அவ உயிரவிடுறதுகூட வாய்ப்பு இருக்கு. அவ அப்படி பட்ட பொண்ணு தான? நீ இதுலாம் பண்ணினவாச்சும் என் ராஜா அவளை ஏதாவது பேசி சமாதானம் பண்ணி, அவளையே கல்யாணம் பண்ணிக்கவும் வாய்ப்பு இருக்கு… அவ வாழ்க்கைகாவது நீ பண்ணியே ஆகணும்” தர்மா சொல்லில் அம்பு எய்தினான், பிரம்மா அஸ்த்திரமோ?

# # # # #

சுடும் பகல் அது தேய தேய
இரவோ கனவெனும் மயக்கம் சேர்க்க…
நெஞ்சில் உன் நியாபகம் தான்
பாலை நில தாகம் போல!

செல்லும் பாதை போர்களமாய் இருக்க
நான் போரிட மறந்தேன் உன்னாலே…
அனிச்ச பூவாய் என்னை சீண்டாதே
சூரியனின் அக்னியில் தகிப்பவன் நானே!

சிறகுகள் விரித்து பறந்திட வேண்டுமே
கைக்குள் அடங்கா நீள வானில்…
உன் சேலைக்குள் என்னை பூட்டும்
எண்ணம் வைக்காதே அது கிழிந்திடுமே!

# # # # #

மனதெனும் தாய்க்காக குழப்பம் எனும் குழந்தையை தத்தெடுத்து, அவளது வருத்தத்தை போக்கிய ஆதி, மூளை எனும் பசி அரக்கனுக்கு தர்மா எனும் தீனியை போட்டு இருந்தான். அடைத்து இருந்த வீட்டில் இருந்து தப்பிப்பதே முதல் வேலை என்று தரை தளத்திற்கு வந்த பிறகே அறிந்து இருந்தான், வீட்டை சுற்றி இரண்டு நாய்கள் கட்டுப்பட்டு இருப்பதை.

“லொ…ள்…லொ…ள்…லொ…ள்…” என்று குறைத்த நாய்கள் அவனை துரத்த, “தப்பிச்சு ஓடுடா ஆதி… சிக்கினா சின்னாபின்னம் தான்” என்று ஓடி கொண்டு இருந்தான். அந்த உயிர் காக்கும் ஓட்டத்திலும், அவனது மூளை அவனுக்கு எச்சரிக்கை விட்டது, ‘வீட்டினுள் செல்லாதே, வீட்டுக்கு சென்றால் சிக்னல் கிடைக்காது ‘ என்று.

வீட்டின் மதில் சுவரை ஏறி நின்றான், நாயும் ஒரே தாவில் ஏறியது. ‘மிலிட்டரி ட்ரைனிங் எல்லாம் நாய்க்கு கொடுக்க பட்டதோ’ ரணகளத்திலும் ஆதிக்கு கிளுகிளுப்பு கேட்டது! ஓட்டத்தில் வேகம் எடுத்தான், நாயும் வேகமெடுத்தது. வீட்டின் சுவருக்கு தாவினான், நாய்கள் கீழ் இறங்கியது.

வீட்டின் உள்ளுக்குள் வந்த ஆதி வாய்விட்டே கதறி இருந்தான், ‘மாஸ்டர் உத்தரவு போல, வீட்டுக்குள்ள தள்ளி விட்டுருச்சு அந்த நாய்கள். வீட்டுக்குள்ள சிக்னல் வரலையே. இப்போ நான் அடுத்து ஜாமர் எங்கன்னு தேடணுமாய்யா. கொடுமை கொடுமைனு கோவிலுக்கு போனா, அங்க ஒரு கொடுமை தலை விரிச்சு ஆடின கதையா இருக்கே என் நிலைமை. உன் பிளான் எல்லாம் பக்கவா இருக்குமே தர்மா. நீ சொதப்புவன்னு நான் நினைச்சு கூட பாத்துருக்க கூடாது தான். இப்போ நான் எப்படி சந்திராவிற்கு தகவல் சொல்லுறது?”

எனினும், அவனது மொபைலை ஆன்லேயே வைத்து இருந்தான். ஏதேனும் ஒரு மூலையில் சிக்னல் வராதா என்ற நப்பாசையில்!

# # # # #

ஏதோதோ திட்டம் செய்கிறேன்
எல்லாம் தோல்வியே தொடுகிறது
எனினும் விடாது போராடுகிறேன்
தர்மத்தை நிலை நாட்ட
தர்மமே தர்மத்தை தான்
காக்க போராடுகிறது
என்பதை அறியாமல்!

# # # # #

வெயிட் அண்ட் வாட்ச்…

அலைகளின் ஓசை அடங்குவதில்லை…

# # # # #