அழகியே 13

அழகு 13
 
வருணின் மனம் முழுவதும் குழப்பம் நிரம்பிக் கிடந்தது. நெஞ்சின் மேல் யாரோ ஒரு பாறாங்கல்லைத் தூக்கி வைத்தது போல உணர்ந்தான்.
 
ஆறு மணிக்கெல்லாம் கண் விழித்தவன் அருகில் உறங்கும் பெண்ணைத் திரும்பிப் பார்த்தான். அவள் முகம் நிர்மலமாக இருந்தது.
 
சின்னதாக ஒரு புன்னகையோடு உறங்கிக் கொண்டிருக்கும் அவளைப் பார்த்த போது சட்டென்று அம்மாவின் ஞாபகம் வந்தது. 
 
‘வருண்! நீயா தம்பி இது?!’ என்று அம்மா கேட்பது போல ஒரு மாயை தோன்றி அவனை மிரட்டியது. 
 
அவளைத் தொந்தரவு செய்யாமல் வருண் மெதுவாக எழுந்தான். அவள் கண்விழித்தால் அவளை நேர்கொண்டு தன்னால் பார்க்க இயலுமா என்பதே அவனுக்குச் சந்தேகமாக இருந்தது.
 
குளித்து முடித்தவன் யூனிஃபார்மை மாட்டிக்கொண்டு நேராக கிச்சனுக்கு போய்விட்டான். நேற்று பார்ட்டி நடந்ததால் இன்னும் யாரும் எழுந்து கொள்ளவில்லைப் போலும்.
டீ ஒன்றைக் குடித்தவன் நேராக ப்ரிட்ஜிற்கு போய்விட்டான்.
 
எப்போதுமே இவன் பணியை ஆரம்பிக்கும் போது டாமினிக் அங்கே வந்திருப்பான். 
 
இன்று அவன் கூட இன்னும் வந்திருக்கவில்லை.நேரத்தைப் பார்த்தான். அப்போதுதான் ஏழு மணி. இன்னும் கொஞ்சம் தாமதித்துத்தான் கேப்டன் வருவார். வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான் வருண்.
 
டாமினிக் உள்ளே நுழைந்தவன் வருணை அந்நேரத்திற்கு அங்கே பார்த்துத் திகைத்துப் போனான்.
 
“ஹேய் விபி! குட்மார்னிங்!”
 
“குட்மார்னிங் கேப்டன்!”
 
“இந்நேரத்துக்கு இங்க என்னய்யா பண்ணுறே?” இன்னும் ஏதோ கேலியாகக் கேட்கப் போன டாமினிக் எதிரிலிருப்பவனின் முகம் பார்த்து அதை அடக்கிக் கொண்டான்.
 
“என்னாச்சு விபி?”
 
“ஒன்னுமில்லை கேப்டன்.”
 
“விபி! உனக்கு என்னாச்சுன்னு கேட்டேன்?” டாமினிக்கின் குரல் உயர்ந்தது. அந்த உரிமையான அதட்டலில் வருணின் கண்கள் லேசாகக் கலங்க டாமினிக் அதிர்ச்சி ஆனான்.
 
“விபி! வாட் இஸ் திஸ் மேன்?” வருணின் கையைப் பிடித்தவன் அவனைச் சட்டென்று இழுத்துக்கொண்டு கப்பலின் ஓரத்திற்கு வந்தான்.
 
வருணின் உள்ளத்தைப் போல கடலின் அலைகளும் அந்தக் கப்பலை முட்டி மோதிக் கொண்டிருந்தன. சில்லென்ற நீர்த்திவலை முகத்தில் பட்டது.
 
“சொல்லு விபி, என்னாச்சு?” 
 
“என்னை எதுவும் கேட்காதீங்க கேப்டன்.” வருண் தடுமாறினான். 
வருணை தனக்குத் தெரிந்த இந்த இரண்டு வருட காலத்தில் இப்படி அவனை டாமினிக் பார்ப்பது இதுதான் முதல் தடவை!
 
“நீ என்ன நடந்ததுன்னு இன்னும் எங்கிட்டச் சொல்லலை விபி!” டாமினிக் அதட்டினான்.
 
“சொல்ல முடிஞ்சதா இருந்தா சொல்லி இருந்திருப்பேனே கேப்டன்!”
 
“எங்கிட்டச் சொல்ல முடியாததா?! அப்பிடி என்னத்தைய்யா…” பாதியில் பேச்சை நிறுத்திய டாமினிக் வருணை கூர்ந்து பார்த்தான். எதுவோ புரிவது போல இருந்தது.
 
அந்தப் பார்வையைத் தாங்கிக் கொள்ள இயலாதவனாய் வருண் தலையைத் திருப்பிக் கொண்டான். டாமினிக்கிற்கு சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டான்.
 
“விபி! ஸ்கூல் பையன் மாதிரி நடந்துக்காதே.” மீண்டும் அதட்டினான் கேப்டன். தன் இரு உள்ளங்கைகளாலும் இப்போது முகத்தை அழுந்தத் துடைத்தான் வருண்.
 
“தப்புப் பண்ணிட்டேன் கேப்டன்… நேத்து ட்ரிங்க்ஸ் வேற…”
 
“சரி சரி… விடு, முடிஞ்சு போச்சு… ஏன் தப்புன்னு சொல்றே விபி? மயூரியை நீ ஃபோர்ஸ் பண்ணினியா?” 
 
“………..” மௌனமாக இல்லை என்பது போல தலையை ஆட்டி மறுத்தான் வருண்.
 
“ஃப்ரீயா விடு விபி, எதுக்கு உன்னைச் சுத்தி இத்தனை வேலிகளைப் போட்டிருக்க நீ?!”
 
“உங்களுக்கு இதெல்லாம் புரியாது கேப்டன்.”
 
“புரியுது… நல்லாவே புரியுது விபி, இது உன்னோட கல்ச்சர், நீ இப்பிடித்தான் வளர்ந்திருக்கே!”
 
“…………….”
 
“உன்னோட கல்ச்சரை நீ மதிக்கிறே, நான் அதைப் பாராட்டுறேன்! ஆனா… இந்த நிமிஷம் நடந்து முடிஞ்ச விஷயத்துக்கு உன்னால யாரைக் குத்தஞ் சொல்ல முடியும் சொல்லு?”
 
“கேப்டன்?!”
 
“நிதானமா யோசி விபி! அந்தப் பொண்ணைப் பார்த்த நாள்ல இருந்து நான் உங்கிட்டச் சொல்றேன், அவ கண்ணுல உனக்கான மயக்கம் இருக்குன்னு, அந்தப் பொண்ணு உன்னை வெறித்தனமா லவ் பண்ணுதுன்னு!”
 
“…………….” 
 
“ஆனா நீ அதை ஏத்துக்கலை.”
 
“அதே வெறித்தனமான லவ் எங்கிட்டயும் இருக்கணுமில்லை கேப்டன்?” 
 
“ஷ்யூர்! நான் இல்லேங்கலை, மயூரியை போல உங்கிட்ட வெறித்தனமான லவ் இல்லைன்னாலும்… உம்மனசுலயும் லவ் இருக்கு விபி.”
 
“நோ!” ஆணித்தரமாக மறுத்தான் வருண்.
 
“காதல்னா என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும் விபி, ஒரு மனுஷனைப் பார்த்தா அவனோட தேவை என்னன்னும் எனக்கு நல்லாப் புரியும்.” இப்போது வருண் கேப்டனை நிமிர்ந்து பார்த்தான்.
 
“உன்னோட பார்வையில அந்தப் பொண்ணு மேல ஒரு பாசம் தெரிஞ்சுது விபி, ஒருவேளை அது மயூரி உன்னோட சொந்தக்காரப் பொண்ணுங்கிறதால வந்திருக்கலாம்!”
 
“……………….” 
 
“அந்தப் பார்வையில ஆசைத் தெரிஞ்சுது, நான் மயூரியை தொட்டப்போ அதே கண்ணுல பொறாமையும் தெரிஞ்சுது!” டாமினிக் நிதானமாகச் சொல்ல வருண் பதறினான்.
 
“கேப்டன்!”
 
“பதறாதே… எதுக்குப் பதறுறே? அது இயற்கை! உனக்கு அப்பிடியெல்லாம் தோணணும்னுதான் நான் அப்பிடி நடந்துக்கிட்டதே!”
 
“சாரி கேப்டன்.”
 
“மயூரியோட அருகாமையை நீ என்ஜாய் பண்ணினே, இதுவரைக்கும் உங்கம்மாவைத் தவிர இப்பிடி யாரையாவது ஷாப்பிங்னு கூட்டிக்கிட்டு அலைஞ்சிருக்கியா?”
 
“அம்மாவைக் கூடக் கூட்டிக்கிட்டுப் போனதில்லை.”
 
“ஆங்… பார்த்தியா! எதுக்கு இவ்வளவு பணத்தை எங்கிட்டக் குடுக்குறீங்கன்னு கேட்டே! ஆனா கொண்டு போன பணத்தை முழுசாக் காலி பண்ணிட்டு வந்திருக்கே! இத்தனைக்கும் உனக்கோ, உங்கம்மாக்கோ நீ எதுவும் வாங்கலைன்னு எனக்குத் தெரியும்.”
 
“…………….”
 
“நான் இன்னுமொன்னு சொன்னா நீ தப்பா எடுத்துக்கக் கூடாது!”
 
“சொல்லுங்க கேப்டன்.”
 
“போன வருஷம் என்னோட பர்த்டே டைம்ல நாம அமெரிக்கால இருந்தோம், ஞாபகமிருக்கா?”
 
“மறக்குமா கேப்டன்! அந்த ஸ்நோல நாம பட்ட பாடு கொஞ்ச நஞ்சமா?”
 
“ம்… அந்த பனியில கூட எப்படா போர்ட் வரும்னு காத்திருந்து நீ எனக்காகப் போய் கிஃப்ட் வாங்கிட்டு வந்தே.”
 
“கேப்டன்!” அதிர்ச்சியில் உறைந்த வருண் எழுந்து நின்று விட்டான்.
 
“உட்காரு மேன்! எல்லாத்துக்கும் சின்னப் பிள்ளை மாதிரி பிஹேவ் பண்ணிக்கிட்டு!” டாமினிக் அதட்ட வருண் மீண்டும் உட்கார்ந்தான்.
 
“நேத்து என்னோட பர்த்டே ன்னு முந்தாநாள் உனக்கு நல்லாவேத் தெரியும், ஷாப்பிங் வேற போயிருக்கே… ஆனாலும் உனக்கு என்னோட ஞாபகம் வரலை!” வருண் இப்போது கண்களை இறுக மூடிக்கொண்டான்.
 
“அந்தளவுக்கு நீ அந்தப் பொண்ணோட நேரம் செலவழிக்கிறதை விரும்பியிருக்கே விபி, அது உனக்குப் பிடிச்சிருக்கு! உன்னைச் சுத்தி இருக்கிறவங்களை அந்தப் பொண்ணோட நினைப்பு மறக்கடிக்க வெச்சிருக்கு!”
 
“இதெல்லாம் எனக்குப் போதலையே கேப்டன்!”
 
“அதுவும் எனக்குப் புரியுது விபி! நடந்த இந்த விஷயமெல்லாம் உனக்குள்ள மயூரி மேல ஒரு லவ்வை உண்டு பண்ணி இருந்திருக்கும்… அவ அழககோனோட பொண்ணா இல்லாம இருந்திருந்தா!”
 
“………….” வருணின் முகம் இப்போது கடுகடுத்தது.
 
“காம் டவுன் விபி… காம் டவுன்…”
 
“அவங்களை நினைச்சாலே எனக்கு ரத்தம் கொதிக்குது கேப்டன்.” 
 
“எனக்குப் புரியுது விபி, வாழ்க்கையை அது போக்குல விடு… இப்பிடி மண்டையைப் போட்டு உடைக்காதே, உனக்குப் பிடிச்சிருந்தா மயூரியை உன்னோடயே வெச்சுக்கோ, இல்லைன்னா விட்டுடு.”
 
“கேப்டன்…”
 
“அவ உன்னை மாதிரி இல்லை விபி, ரொம்ப ப்ராக்டிகலா இருக்கா, நீ மதிக்கிற அதே கல்ச்சரை அவளும் மதிப்பா இல்லையா? அவளோட பக்கத்து நியாயத்தையும் நீ யோசிக்கணும்.”
 
“ரொம்பக் குழப்பமா இருக்கு கேப்டன்!”
 
“உனக்குப் பிடிச்சதைப் பண்ணு! எதுக்காகவும் உன்னை நீயே ஃபோர்ஸ் பண்ணாதே! அது எல்லாரையும் நரகத்துல தள்ளிடும், நிதானமா யோசி.” வருணின் தோளில் தட்டிவிட்டு கேப்டன் எழுந்து போய்விட்டான். 
வருண் அப்படியே அங்கே சிறிது நேரம் அமர்ந்திருந்தான்!
 
***
 
மயூரி எழுந்த போது நன்றாக விடிந்து விட்டிருந்தது. அவள் அருகில் அவன் இல்லை. முகத்தில் ஒரு புன்னகை அழகாக மலர்ந்தது.
 
அவன் அவளுக்குச் சொந்தமில்லை என்பது அவளுக்கு நிச்சயமான உறுதி. இருந்தாலும் அந்தக் கணத்தை, அவனோடான உறவை அவள் பெரிதும் விரும்பினாள்.
மயூரி எப்போதும் அப்படித்தான்.
 
நாளை நாளை என்று இன்றைய பொழுதைக் கோட்டை விடும் ரகம் அல்ல.
 
விஷாகா அடிக்கடி வீட்டில் அவர் அண்ணாவைப் பற்றிப் பேசுவதாலேயோ என்னவோ அந்த மாமாவைப் பற்றிய ஒரு மதிப்பும் மரியாதையும் பெண்ணின் மனதுக்குள் உண்டாகிவிட்டது.
 
காலப்போக்கில் மாமாவிற்கு மகன் ஒருவன் இருக்கின்றான் என்று தெரியவந்தபோது… அந்த மதிப்பும் மரியாதையும், ஆசையும் பாசமுமாக மாறிவிட்டது.
 
குடும்பத்தில் இருந்த பிரச்சனையின் காரணமாக அவனைப் பார்க்கவே முடியாதென்றுதான் மயூரி நினைத்திருந்தாள்.
 
ஆனால்… அந்த மாமன் மகனே அவள் முன்பாக வந்து நின்ற போதுதான்… இத்தனை நாளாக அவன் நினைவு தனக்குள் நீறுபூத்த நெருப்பாக இருந்திருக்கிறது என்று புரிந்து கொண்டாள்.
 
இந்தக் கப்பல் பயணம் அமைந்திருக்காமல் போயிருந்தால் கூட மயூரி வேறு யாரையும் திருமணம் செய்து கொண்டிருப்பாளா என்பது சந்தேகம்தான்! 
 
அந்த டாக்டரை அவ்வளவு தூரம் புறக்கணித்தாளே! 
 
ஆனால் தான் எதிர்பாராத நிகழ்வுகள் எல்லாம் வாழ்க்கையில் நடந்தேறிய போது… மயூரி முதலில் திடுக்கிட்டாலும் பிற்பாடு அதை ரசித்தாள் என்றுதான் சொல்ல வேண்டும்.
 
அடுத்ததாக நடந்த நிகழ்வு அவள் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விட்டது. அப்படியொரு பாஸ்போர்ட்டை மயூரி கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதைப் பார்த்த போதுதான், அந்தக் கணம்தான் ஏன் தன் ஆசையை, கனவை நிறைவேற்றிக் கொள்ளக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது. 
 
தன் அத்தான் அதற்கெல்லாம் உடன்பட மாட்டான் என்பது அவள் அறிந்ததுதான். இருந்தாலும் ஒரு நப்பாசை! அவன் இதற்கெல்லாம் சம்மதிக்க மாட்டானா என்று.
 
கட்டிலில் இப்போது புரண்டு படுத்தாள் மயூரி. மனம் பூரிப்பில் பொங்கிச் சிதறியது. தனக்கு இல்லவே இல்லை என்று நினைத்த அத்தான் இப்போது அவள் உடல் முழுதும் இனித்தான். 
 
மனமே இல்லாமல் எழுந்தவள் குளித்து முடித்தாள். கறுப்பும் பச்சையுமாகப் பெரிய பூக்கள் போட்ட ஒரு சுடிதாரை அணிந்து கொண்டாள். 
 
கிச்சனுக்கு போய் டீ குடித்து, காலை உணவை உண்டு, பிற்பாடு மதிய உணவை உண்டு, கொஞ்சம் தூங்கி எழுந்து… அப்போதும் வருண் ரூமிற்கு திரும்பவில்லை.
 
மனதுக்குள் எதுவோ தோன்ற மயூரி கப்பலின் மேல் தளத்திற்குச் சென்றாள். லேசாக இருள் சூழ ஆரம்பித்திருந்தது.
 
கட்டுப்பாட்டு அறையை எட்டிப் பார்த்தாள். அங்கே வருண் இல்லை. பெரும் குழப்பமாக இருக்க உள்ளே நுழைந்தாள். ஒரு சில ஆஃபீஸர்களோடு கேப்டன் நின்றிருந்தார்.
 
“ஹலோ கேப்டன்!” அவள் குரலில் வேலையை விட்டுவிட்டுத் திரும்பினான் டாமினிக்.
 
“ஹலோ மயூரி!”
 
“விபி எங்க கேப்டன்?” அவள் கேள்வியில் அவன் ஒரு பெருமூச்சு விட்டான். அவன் கண்கள் கப்பலின் ஒரு புறத்தைச் சுட்டிக்காட்டியது. 
மயூரி அந்தத் திசையில் திரும்பிப் பார்த்தாள். ஆர்ப்பரிக்கும் கடலைப் பார்த்தபடி அங்கே வருண் நின்றிருந்தான்.
 
“என்னாச்சு கேப்டன்? வேலையில ஏதாவது ப்ராப்ளமா?”
 
“ம்ஹூம்…” உதட்டைப் பிதுக்கினான் டாமினிக்.
 
“ஓ…” இப்போது அவன் பிரச்சனை நான்தானா என்று நினைத்த மயூரி கேப்டனை பார்த்துப் புன்னகைத்துவிட்டு மெதுவாக வருணை நோக்கி நடந்தாள்.
உலகத்தையே மறந்து நின்றிருந்தான் அவள் நாயகன். அவனருகே போனவள்,
 
“அத்தான்…” என்றாள் மெதுவாக. சட்டென்று திரும்பினான் வருண். முகம் முழுவதும் குழப்பம். அவனை அந்தக் கோலத்தில் பார்த்த மாத்திரத்தில் மயூரிக்கு உருகிப் போனது!
 
“என்னாச்சு அத்தான்? ஏன் இப்பிடி இருக்கீங்க? சாப்பிட்டீங்களா?”
 
“என்ன? என்ன கேட்டே?” அவள் பேசும் பாஷை புரியாதவன் போல தடுமாறினான் வருண். 
 
“சாப்பிட்டீங்களா நீங்க?” அவள் மீண்டும் கேட்க பதில் சொல்லாமல் அப்படியே நின்றிருந்தான் வருண்.
 
“அத்தான் நீங்க சாப்பிட்டீங்களா இல்லையா?”
 
“ஞாபகமில்லை…”
 
“ஞாபகமில்லையா?!” அந்தப் பதிலில் மயூரி அதிர்ந்து போனாள்.
 
“ட்யூட்டி முடிஞ்சிருச்சா அத்தான்?” இப்போது மட்டும் ஆமென்பது போல தலையை ஆட்டினான் வருண்.
 
“அப்போ ரூமுக்கு வரவேண்டியதுதானே? வாங்க எங்கூட.” கட்டளைப் போன சொன்னவள் அவன் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு ரூமிற்கு போனாள்.
 
“போய் குளிங்கத்தான் முதல்ல.” அவள் டவலை நீட்டவும் வாங்கிக் கொண்டவன் குளித்து உடை மாற்றி வந்தான். நேரம் ஏழை நெருங்கி இருந்தது.
 
“சாப்பிட்டுட்டு வரலாமா அத்தான்?”
 
“ம்…” பொம்மைப் போல பதில் சொன்னவன் அவள் சொன்னதையெல்லாம் செய்தான்.
 
உண்டு முடித்துவிட்டு இருவரும் மீண்டும் ரூமிற்கு வந்தார்கள். 
இப்போதும் ஏதும் பேசாமல் அவன் அமைதியாக உட்கார்ந்திருக்க மயூரி அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
 
“என்னாச்சு அத்தான்? ஏன் இப்பிடி இருக்கீங்க?” ஒரு புன்னகையோடு பெண் கேட்க வருண் பேசாமலேயே இருந்தான்.
 
“கில்ட்டியா ஃபீல் பண்ணுறீங்களா அத்தான்?”
 
“ஏன்? உனக்கு கில்ட்டியா இல்லையா?”
 
“இல்லையே!” அவள் சாதாரணமாகச் சொன்னாள்.
 
“வீட்டுக்குப் போன உடனே உங்கம்மாக்கிட்ட இங்க நடந்ததை எல்லாம் உன்னால சொல்ல முடியுமா?”
 
“அதிலென்ன அத்தான் உங்களுக்குச் சந்தேகம்?”
 
“வாட்!” இப்போது வருண் அதிர்ந்து போனான்.
 
“கண்டிப்பா வீட்டுக்குப் போன உடனேயே அம்மாவை உக்கார வெச்சு இங்க நடந்தது அத்தனையையும் சொல்லுவேன்.”
 
“ஏய்… நீ… என்ன…” அவன் தடுமாற்றம் பார்த்து மயூரி சிரித்தாள்.
 
“ஓரு விஷயத்தைப் பண்ணினா, அது தப்பாவே இருந்தாக் கூட… அதை ஏத்துக்கிற தைரியம் எங்கிட்ட இருக்கு அத்தான்!”
 
“அதுக்காக… இதையெல்லாம் போய்…”
 
“இல்லைன்னா அந்த டாக்டரை என் தலையில கட்டிடுவாங்களே!” 
 
“……………”
 
“அத்தான், எனக்கு வயசு இருபத்தியேழு, இதுவரைக்கும் கல்யாணம் பண்ணணுங்கிற இன்ட்ரெஸ்ட் வரலை…”
 
“ஏன்?” சட்டென்று அவன் கேட்க மயூரி உதட்டைப் பிதுக்கினாள். அந்தக் கேள்விக்கு அவனுக்கு விடை சொல்ல அவள் விரும்பவில்லை.
 
“வீட்டுல இருக்கிறவங்களைக் கொஞ்சம் சமாளிக்கணும், அது மட்டுந்தான் இப்போ என்னோட பிரச்சினை, அதுக்கு மட்டும் என்ன பண்ணுறதுன்னு யோசிக்கணும், அவ்வளவுதான்.” அவள் இலகுவாக முடித்தாள்.
 
ஆனால் வருணால் அப்படி எதையும் இலகுவாகக் கடக்க இயலவில்லை. எவ்வளவு பெரிய தவறு, குற்றம்…
 
தான் செய்த விபரீதத்திற்கு என்ன வார்த்தைச் சொன்னாலும் தகும் என்றுதான் வருண் நினைத்தான்.
 
முகத்தைத் கைகள் இரண்டாலும் மூடிக்கொண்டு அவன் சற்று நேரம் அமர்ந்திருக்க அவன் அருகே வந்தாள் மயூரி. அவன் கைகள் இரண்டையும் பிரித்துத் தன் கன்னத்தில் வைத்துக் கொண்டாள்.
 
“எம்மேல கோபமா இருக்கீங்களா அத்தான்?”
 
“இல்லைம்மா… எம்மேல கோபம் வருது இப்போ!”
 
“ஏன் அத்தான்?”
 
“உன்னைத் தூக்கினப்போ கூட எனக்கு அது தப்பாத் தோணலை, என்னைக் கேவலப்படுத்தினவங்களுக்கு நான் குடுத்த தண்டனைன்னுதான் அதை நினைச்சேன்.”
 
“இப்பவும் அவங்களுக்குத் தண்டனைக் குடுத்திருக்கிறதா நினைச்சுக்கோங்க அத்தான்.”
 
“நோ! இது மகா பாவம்!” 
 
“நீங்க பேசுற டயலாக் எல்லாம் நான் பேசி இருக்கணும், எங்கே… நம்ம விஷயத்துலதான் எல்லாம் தலைகீழா இருக்கே!” மயூரி சொல்லி முடித்த போது வருண் சட்டென்று சிரித்தான்.
 
“நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன், நீங்க இப்பிடி உக்கார்ந்து அந்த அழகான மூடை கெடுக்காதீங்க அத்தான்… ப்ளீஸ்…” 
 
வருண் இப்போது பெருமூச்சு விட்டான். தான் ஒரு பெரிய சங்கடத்தில் மாட்டி இருப்பது புரிந்தது. அழககோனின் மகள் எந்தக் கட்டத்திலும் அவன் வாழ்க்கையில் நுழைய முடியாது! அதில் அவன் உறுதியாக இருந்தான். 
 
ஆனால் அதை அவளிடம் திரும்பத் திரும்பச் சொல்ல இயலவில்லை. அதற்காக அவளை அப்படியே விடவும் மனம் வரவில்லை.
 
“ஸ்ரீ லங்கால எத்தனை நாள் தங்குவீங்க அத்தான்?”
 
“ம்… என்னக் கேட்டே?”
 
“ஷிப் ஊருக்குப் போனதும் எத்தனை நாள் அங்க தங்குவீங்கன்னு கேட்டேன்?”
 
“ரெண்டு நாள்.”
 
“அப்போ எங்கூடப் பேசுவீங்களா அத்தான்?”
 
“………….”
 
“நான் எங்கக் கூப்பிட்டாலும் வருவீங்களா?”
 
“ம்…” வருண் தலையை ஆட்டினான். அதன்பிறகு மயூரியும் பேசவில்லை, வருணும் பேசவில்லை. அமைதியாகி விட்டார்கள்.
 
மீதமிருந்த நான்கு நாட்களும் மயூரிக்கு மிகவும் இன்பமாகக் கழிந்தது என்றுதான் சொல்ல வேண்டும். 
 
வருண் அவளிடம் மிகவும் இதமாக நடந்து கொண்டான். நோகடிக்கும் வார்த்தைகள், கண்டனப் பார்வைகள் எதுவுமே இருக்கவில்லை.
 
நிறையப் பேசினார்கள், சிரித்தார்கள். தங்கள் வாழ்க்கையில் இதுவரைக் கடந்து வத்த பக்கங்களை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொண்டார்கள். 
 
நாட்கள் மிகவும் சுவாரசியமாக, இதமாகக் கடந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அன்றைய இரவிற்குப் பிறகு இருவரும் உறவைக் கூட நாடவில்லை. 
 
ஆனால் அன்னியோன்யமாக இருந்தார்கள். கை கோர்த்து நடந்தார்கள். மணிக்கணக்கில் ஆர்ப்பரிக்கும் கடலைப் பார்த்தபடி நின்றிருந்தார்கள்.
 
இவை எல்லாவற்றையும் ஒரு மௌன சாட்சி போல பார்த்திருந்தான் டாமினிக். இந்த நாடகம் எதுவரைப் போகிறதென்று பார்க்க அவனுக்குமே சுவாரஸ்யமாக இருந்தது.
 
***
 
கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்திருந்தது. மயூரியின் நடவடிக்கைகள் எப்போதும் போல இயல்பாகவே இருந்தது. 
 
வருண்தான் ஏதோ அனலுக்குப் பக்கத்தில் நிற்பவன் போல எப்போதும் ஒரு அசௌகரியத்தோடு உலவிக் கொண்டிருந்தான்.
 
“நான் நினைச்சதை விட இந்தப் பொண்ணு ரொம்ப போல்ட் விபி!” டாமினிக் ஆச்சரியப்பட்ட போது வருண் ஆமோதிப்பாய் தலையை மட்டும் ஆட்டினான்.
 
அவள் பயங்கர அழுத்தக்காரி என்பது அவனும் அறிந்ததுதானே! முள்ளின் மேல் நிற்பது போல தான் உணர முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் எப்படி அவளால் இருக்க முடிகிறது?!
 
இந்த கப்பலுக்குள் வரும் போது மயூரி எதுவும் கொண்டு வந்திருக்கவில்லை. ஆனால் இப்போது பெனாங்கில் வாங்கிய பொருட்களே எக்கச்சக்கமாக இருந்தது.
 
அத்தனையையும் மூட்டைக் கட்டி இருந்தாள் பெண். அவள் அத்தான் அவளுக்காக வாங்கிக் கொடுத்த பொருட்கள்.
 
வருணுக்கு அன்று வேலைகள் அதிகமாக இருந்தது. அனைத்தையும் முடித்துவிட்டு அவன் ரூமிற்கு வந்த போது மணி மூன்றைத் தாண்டி இருந்தது.
 
மயூரி ஏற்கனவே கப்பலில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களிடமும் பேசிவிட்டு, நன்றி சொல்லிவிட்டு வந்திருந்தாள்.
இது பிரியாவிடைக்கான நேரம்! ரூமிற்குள் வந்த வருணை பார்த்து அழகாகச் சிரித்தாள் மயூரி.
 
வருணின் முகம் எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை. பாறை போல இருந்தது.
 
“அதே ஹோட்டல்லதான் தங்குவீங்களா… இல்லை உங்க வீட்டுல தங்குவீங்களா அத்தான்?” பத்திரம் கைமாறிய பிறகு ஆச்சி அந்த வீட்டில் இருக்க சம்மதித்திருக்க மாட்டார் என்பது மயூரிக்கு நிச்சயம்.
 
“ஹோட்டல்.” ஒற்றைச் சொல்லில் வந்தது பதில். 
 
“ம்… நாளைக்கு நீங்க ஃப்ரீயா அத்தான்?”
 
“ம்…”
 
“நாளன்னைக்கு உங்களுக்கு ஃப்ளைட்டா?”
 
“ம்…”
 
“அப்போ நாளைக்கு ஒரு நாள் எங்கூட வெளியே வர்றீங்களா?”
 
“எங்கே?”
 
“அதை நான் நாளைக்குச் சொல்றேன்.” ஏதோ உல்லாசப் பயணம் வந்தது போல எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ரூமை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு புறப்பட ஆயத்தமானாள் மயூரி.
 
அவள் பாஸ்போர்ட்டை அவள் கையில் கொடுத்தான் வருண். கூட இன்னுமொரு ஃபைலையும் அவளிடம் நீட்டினான்.
 
எதுவும் சொல்லாமல் வாங்கிப் பார்த்தாள் மயூரி. பாஸ்போர்ட் எடுப்பதற்காக அவன் தயாரித்த அனைத்துப் பத்திரங்களும் அதில் இருந்தன.
 
“வெளியே சரவணன் இருக்காரு.”
 
“ஓ…”
 
“நீ எங்க போகணுமோ அங்கே கூட்டிட்டுப் போவாரு.”
 
“ம்… உங்க நம்பரை சரவணன் கிட்ட வாங்கிக்கட்டுமா?” 
 
“ம்…” 
 
இது என்ன மாதிரியான உரையாடல் என்று இருவருக்குமே புரியவில்லை. ஆனாலும் பேசிக் கொண்டார்கள்.
 
உத்யோக பூர்வ நடவடிக்கைகள் அனைத்தையும் முடித்துவிட்டு அவளை கப்பலிலிருந்து வெளியே அழைத்து வந்தான் வருண்.
 
அதன் பிறகு இருவரும் பேசிக்கொள்ளவில்லை. தூரத்தே சரவணன் நிற்பது தெரிந்தது. 
மயூரி திரும்பி வருணை பார்த்துப் புன்னகைத்தாள். அது நிறைவான புன்னகை.
 
“தான்க் யூ அத்தான்!” இது மயூரி.
 
“சாரி!” இது வருண்.
இருவரும் இரு வேறு திசைகளில் திரும்பிப் பார்க்காமல் நடக்க ஆரம்பித்தார்கள்.