அழகியே 14

 
அழகு 14
 
மயூரி துறைமுகத்தை விட்டு வெளியே வந்த போது சரவணன் இவளுக்காகக் காத்திருந்தான். அவனைப் பார்த்த மாத்திரத்தில் மயூரியின் முகத்தில் ஒரு வெறுமையான புன்னகைத் தோன்றியது.
 
“மேடம்…” அவன் தட்டுத்தடுமாற எதையும் கண்டு கொள்ளாதவள் போல தான் கையில் வைத்திருந்தவற்றை காரில் வைத்தாள்.
 
எல்லாவற்றையும் வைத்துவிட்டு அவள் நிமிர்ந்த போது அவள் முகத்தைப் பார்க்கத் தைரியம் இல்லாதவன் போல தலையைக் குனிந்து கொண்டான் சரவணன்.
 
“ஆக… சரவணனுக்கும் எல்லாம் தெரிஞ்சிருக்கு!”
 
“……………”
 
“நான் அன்னைக்கு ஃபோன் பண்ணும் போது அப்போ எல்லா ப்ளானும் ரெடியா இருந்திருக்கு, இல்லை சரவணன்?”
 
“மேடம்… அது…” சரவணன் தடுமாறினான்.
 
“வருண் மேல அவ்வளவு விசுவாசமா சரவணன்?” மயூரியின் கண்களில் தெரிந்த தீட்சண்யம் சரவணனை பேச வைத்தது.
 
“மேடம்… நீங்க என்னோட நிலைமையில இருந்தும் கொஞ்சம் யோசிச்சுப் பார்க்கணும்.”
 
“யோசிச்சிட்டாப் போச்சு!” கேலி போல மயூரி சொல்லவும் சரவணன் சட்டென்று பேசுவதை நிறுத்தினான்.
 
“பேசுங்க சரவணன், ஏன் நிறுத்திட்டீங்க?” பெண் மீண்டும் ஊக்கவும் அவளைக் கூர்ந்து பார்த்தான். இப்போது அந்த முகத்திலும் குரலிலும் கேலி இல்லை.
 
“அன்னைக்கு உங்க வீட்டுக்கு சார் கூட நானுந்தான் வந்திருந்தேன்.”
 
“ஞாபகமிருக்கு.”
 
“அன்னைக்கு சார்கிட்ட யார் வீடுன்னு கேட்டதுக்கு தெரிஞ்சவங்க வீடுன்னுதான் சொன்னாங்க.”
 
“ம்…”
 
“ஆனா உங்க வீட்டுல…” சரவணன் அதற்கு மேல் பேசாமல் இழுக்க மயூரி பெருமூச்சு விட்டாள்.
 
“புரியுது சரவணன்.”
 
“சாரோட இடத்துல நான் இருந்திருந்தா நடந்திருக்கிறதே வேற மேடம்.”
 
“………….”
 
“எனக்குமே ஒரு கட்டத்துல என்னடா இவங்க இந்தளவுக்குக் கேவலப்படுத்துறாங்க, இந்த மனுஷன் கல்லுமாதிரி இருக்காரேன்னு கோபங்கூட வந்துச்சு.”
 
“………….”
 
“ஆனா புலி பதுங்கினது பாயுறதுக்குன்னு‌ அப்போ எனக்குப் புரியலை.” சரவணனின் குரலில் தெரிந்த பரவசத்தைப் பார்த்து மயூரிக்கு அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை.
 
“அடுத்த நாள் லாயர்கிட்ட போனோம், நாந்தான் வெள்ளவத்தையில ஒரு லாயரை அரேஞ்ச் பண்ணினேன்.”
 
“ம்…”
 
“லாயர் முன்னாடி சார் எல்லாத்தையும் சொன்னாங்க, அப்போ நானும் அங்கதான் இருந்தேன் மேடம்.”
 
“ம்…”
 
“எல்லாம் பேசி முடிச்சதுக்கு அப்புறம் லீகலா எதுவுமே பண்ண முடியாதுன்னு லாயர் கைய விரிச்சுட்டாங்க, அப்பிடியே கேஸ் ஃபைல் பண்ணினாலும் வீட்டுல ஒரு பங்குதான் கிடைக்கும்னு சொன்னாங்க.”
 
“…………” 
 
“எனக்கே கவலையாப் போச்சு மேடம்! என்ன மாதிரியான உலகம் இது?! என்னாலப் புரிஞ்சுக்கவே முடியலை!”
 
“என்னாலயும் அம்மாவாலயும் எங்க வீட்டுல எதுவும் பேசமுடியாது சரவணன்.”
 
“அடுத்த நாள் நீங்களும் உங்கம்மாவும் வந்து நின்னப்ப அது எனக்கு நல்லாவே புரிஞ்சுது, ஆரம்பத்துல சார் கூட எதுக்கு உங்களுக்கு நம்பர் குடுத்தேன்னு எம்மேலக் கோபப்பட்டாங்க.”
 
“ஓ…”
 
“ஆமா, ஆனா நீங்க சாருக்கு ஏதோவொரு வகையில ஹெல்ப் பண்ணுவீங்கன்னு நான் நினைச்சேன்.”
 
“எங்களால என்னப் பண்ண முடியும் சரவணன்?”
 
“அது அப்புறமாத்தான் புரிஞ்சுது மேடம், சாரும் அதுக்கப்புறமாக் கிளம்பிப் போயிட்டாங்க, ஆனாலும் எங்கூட அடிக்கடி பேசுவாங்க மேடம்.” விட்டால் இந்த சரவணன் வருணுக்கு ஒரு ரசிகர் மன்றமே ஆரம்பித்து விடுவான் போல இருக்கிறதே!
 
“கடைசியா, சரவணன்! நான் இதை இப்பிடித்தான் ஹேன்டில் பண்ணப் போறேன்னு சொன்னப்போ… எனக்கு எதுவும் தப்பாத் தோணலை மேடம்.”
 
“ஒரு பொண்ணோட வாழ்க்கைன்னு நீங்க யோசிக்கவே இல்லையா சரவணன்?” இதைக் கேட்கும் போது மயூரி புன்னகைத்தாள்.
 
“ஒரு பொம்பிளைப் பிள்ளைய வீட்டுல வெச்சிருக்கிறவர் மாதிரியா உங்கப்பா அன்னைக்கு நடந்துக்கிட்டார் மேடம்?” சரவணன் முகத்திலும் இப்போது கோபம் பூத்தது.
 
“நானா இருந்திருந்தா அந்த அடாவடித்தனத்துக்கு வெட்டியிருப்பேன் மேடம்!” தாடை இறுக சரவணன் பேசிய போது மயூரிக்கு ஆச்சரியமாக இருந்தது.
இந்த சரவணனுக்கும் வருணுக்கும் என்ன சம்பந்தம்? உறவா? நட்பா? எதுவுமே இல்லையே?! அப்படி இருந்தும் எதற்காக இத்தனை ஆவேசம் கொள்கிறான்?!
 
“அதான் இப்போ எல்லாம் நீங்க நினைச்ச மாதிரி நடந்திருச்சே சரவணன், விடுங்க.” மயூரி சமாதானம் செய்ய சரவணன் சட்டென்று அவளிடம் வந்தான்.
 
“மேடம்…” அவன் எதையோ சொல்லத் தயங்குபவன் போல தன்னருகே வந்து நிற்கவும் மயூரி சரவணனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.
 
“என்ன சரவணன்?!”
 
“நீங்க சாரை தப்பா நினைக்கக் கூடாது?” அந்தக் குரலில் இருந்தது என்ன? கெஞ்சலா? இல்லை மன்றாடலா? மயூரிக்கு புரியவில்லை.
 
“அவங்க ரொம்ப நல்லவங்க மேடம்.”
 
“ம்ஹூம்!”
 
“தப்பு முழுசும் உங்க வீட்டு ஆளுங்க மேல.”
 
“நான் இல்லேன்னு சொல்லலையே சரவணன்.”
 
“நீங்க சாரை மனசு நொந்து திட்டிடக்கூடாது.” 
 
“நானா? உங்க சாரையா? இல்லை சரவணன்.” மயூரி சிரித்துக் கொண்டே காரில் ஏறி உட்கார்ந்தாள். பேசியது போதும் என்று தோன்றியது போலும்.
 
“நான் சொல்ற இடத்துக்கு முதல்ல போங்க சரவணன்.”
 
“உங்க வீட்டு ஆளுங்க அங்…” சரவணனை முழுதாகப் பேச விடாமல் மயூரி குறுக்கிட்டாள்.
 
“முதல்ல நான் சொல்ற இடத்துக்குப் போங்க, பின்னாடி அம்மாவைப் போய் பார்க்கலாம்.” 
 
“சரி மேடம்.” மயூரி சொன்ன விலாசத்தை நோக்கி கார் விரைந்தது.
 
***
 
அடுத்த நாள் காலை ஆறு மணிக்கெல்லாம் மயூரி அந்த ஹோட்டலுக்கு முன்பு வந்துவிட்டாள். பத்து நாட்களுக்குப் பின்பு அந்த ப்ளாக் ஆடி தன் ராணியைக் கண்ட சந்தோஷத்தில் திளைத்திருந்தது!
வருவதற்கு முன்பே வருணுக்கு தகவல் போயிருந்தது. தூக்கக் கலக்கத்தில் இருந்திருப்பான் போலும்.
 
“இவ்வளவு ஏர்லியா எங்கம்மா போறோம்?” என்றான் கொட்டாவியை விட்டபடி.
 
“அத்தான், இன்னும் பத்து நிமிஷத்துல நான் ஹோட்டல் முன்னாடி நிப்பேன், ஹர்ரி அப்!” பேசிய படியே அவள் காரை ஸ்டார்ட் செய்வது இங்கே வருணுக்கு கேட்டது.
 
“ஓகே.” அதற்கு மேல் அதிகம் பேசாமல் எழுந்து குளித்து விட்டு கைக்கு அகப்பட்ட எதையோ அணிந்து கொண்டு வெளியே வந்தான்.
 
அவள் சொல்லியிருந்த பத்து நிமிடமும் அதற்குள் கரைந்து போயிருந்தது. அவள் அவனுக்காகக் காத்திருந்தாள்.
 
“குட்மார்னிங் அத்தான்.”
 
“குட்மார்னிங்.” பதில் சொன்னபடியே காரில் ஏறி உட்கார்ந்தான் வருண்.
கார் மெதுவாக வேகமெடுத்தது.
 
“டீ கூட குடிக்கலை நான்.” குறைப்பட்டான் வருண்.
 
“நாமிருக்க பயமேன்!” சொல்லிவிட்டு கலகலவென சிரித்தாள் பெண். 
வருண் சிறிது நேரம் எதுவும் பேசாமல் காலை நேரத்து அழகை ரசித்தான். பாடசாலைச் சீருடையில் சிறார்கள் ஆங்காங்கே கண்ணில் பட்டார்கள். 
 
கடைகள் இன்னும் திறந்திருக்கவில்லை. வேலைக்குச் செல்லும் மனிதர்கள் தங்கள் வாகனங்களில் டீயோடு, சான்ட்விச்சோடு உட்கார்ந்திருப்பது தெரிந்தது.
 
வருண் திரும்பி அருகிலிருந்த பெண்ணைப் பார்த்தான். குளித்து முடித்து குர்தாவும் லூஸாக பாண்ட்டும் அணிந்திருந்தாள். 
ட்ரைவ் பண்ணுவதற்கு வசதியாக இருக்க இப்படி அணிந்திருக்கிறாள் என்று புரிந்தது.
 
“என்ன அத்தான் அப்பிடிப் பார்க்கிறீங்க?”
 
“நேத்து வீட்டுக்குப் போகலைப் போல?” கேட்கலாமா, கூடாதா என்ற பலத்த சிந்தனைக்குப் பிறகு கேட்டான் வருண்.
 
“ம்ஹூம்.”
 
“ஏன்?”
 
“என்ன அவசரம்? ஆறுதலாப் போகலாமே.”
 
“அதுதான் ஏன்னு கேட்குறேன்?”
 
“……………” பதிலேதும் சொல்லாமல் சிரித்தாள் மயூரி.
 
“இதெல்லாம் கேட்க உனக்கென்ன ரைட்ஸ் இருக்குன்னு நினைக்கிறியா?”
 
“ஐயோ அத்தான்! நீங்க எல்லாத்துக்கும் இப்பிடித்தான் தப்பா அர்த்தம் பண்ணுவீங்களா?”
 
“அப்போ என்னப் பிரச்சினைன்னு சொல்லலாம் இல்லை?”
 
“நீங்க நாளைக்குக் கிளம்பிடுவீங்க,
இன்னைக்கு ஒருநாள்தான் உங்களோட என்னால இருக்க முடியும், வீட்டுக்குப் போயிருந்தா இன்னைக்கு இப்பிடிக் கிளம்பி வந்திருக்க முடியுமா?”
 
“அப்போ கார் எப்பிடி?”
 
“அது உங்க வீட்டுலேயே நின்னுது, அம்மாக்கூடப் பேசினேன், அவங்க சரவணன் கிட்ட கீயை அனுப்பி இருந்தாங்க.”
 
“ஓ… அம்மா…”
 
“ஒன்னும் ப்ராப்ளம் இல்லை, நல்லா இருக்காங்க.”
 
“எம்மேல கோபமா இருக்காங்களா?”
 
“நான் அதெல்லாம் கேட்டுக்கலை அத்தான், நான் நல்லா இருக்கேன், சேஃபா இருக்கேன், நாளைக்கு வீட்டுக்கு வந்திடுவேன், கவலைப்படாதீங்க, இவ்வளவுதான் பேசினேன்.”
 
கார் சிட்டியை விட்டுத் தாண்டி இன்னும் கொஞ்சம் வேகமெடுத்தது. அவள் கைகளில் அந்தக் கறுப்பு நிற இயந்திரம் மிக லாவகமாக இயங்கிக் கொண்டிருந்தது. 
 
போக்குவரத்து விதிகளை மீறிய சாரதிகளுக்கு ஈடுகொடுத்து தன் திறமையைக் காட்டிக் கொண்டிருந்தாள் பெண்.
 
வாழ்க்கையில் எல்லாவற்றையும் மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறாள் இந்தப் பெண் என்றுதான் தோன்றியது வருணுக்கு. 
இப்படியானவர்களுக்கு எதிர்பார்ப்பும் இருக்காது, ஏமாற்றமும் இருக்காது. அன்றன்றைய பொழுதுகளில் இன்பமாக வாழ இவர்களுக்குத் தெரியும்.
 
‘ஆஸ்தியும் இல்லை, அவஸ்தையும் இல்லை.’ என்று இவர்களைப் போன்றவர்களுக்குத்தான் பாடியிருப்பார்கள் போலும்!
 
“வேற ஏதாவது பிரச்சனையா?”
 
“இல்லையே!” அவன் திரும்பத் திரும்பக் கேட்டும் மயூரி பதில் சொல்லவில்லை. 
வருணுக்கு நேற்று வேலை அதிகமாக இருந்தது.
 
துறைமுகத்துக்கு வந்து சேர்ந்திருந்த கப்பலைப் பற்றி ஒரு ஆஃபீஸராக அவன் செய்ய நிறைய கடமைகள் இருந்தன.
 
அத்தோடு சரவணன் மேல் இவனுக்கு மிகவும் நம்பிக்கை இருந்தது. இவன் காலால் இட்டதை அவன் தலையால் செய்வான் என்பது வருணுக்கு உறுதி.
 
ஆனால் சரவணன் நேற்று இவனை அழைத்துச் சொன்ன சேதி அத்தனை நல்லதாகப் படவில்லை வருணுக்கு.
 
“சார்…”
 
“சொல்லுங்க சரவணன்.”
 
“மேடம் அவங்க வீட்டுக்குப் போகலை சார்.”
 
“என்ன? ஏன்?”
 
“தெரியலை சார், வேறொரு அட்ரஸ் குடுத்து இங்கப் போன்னு சொன்னாங்க.”
 
“யாரோட வீடு அது?”
 
“ஃப்ரெண்ட் போல இருந்துது சார் அந்தப் பொண்ணு, ஒன்னா வேலை பார்ப்பாங்களா இருக்கும்.”
 
“ம்…”
 
“அதுக்கு அப்புறமா அவங்க அம்மாவை போய் பார்க்கச் சொன்னாங்க, என்னோட ஃபோனை வாங்கித்தான் அவங்க அம்மாவோட பேசினாங்க.”
 
“ம்…”
 
“நான் அங்கப் போனேன்.”
 
“ஏதாவது சொன்னாங்களா?” அவசரமாகக் கேட்டான் வருண்.
 
“ஒன்னுமே கேட்கலை சார், ஆனா அவங்கப் பார்த்த பார்வையை என்னாலத் தாங்க முடியலை சார், வேதனையாப் போச்சு.”
 
“ம்… எதிர்பார்த்ததுதானே சரவணன்.”
 
“இருந்தாலும் பார்க்கிறதுக்கு ரொம்பப் பாவமா இருந்துச்சு சார், புருஷன் சரியில்லைன்னா ஒரு பொம்பிளையோட நிலைமை இதுதான் சார்.”
 
“புருஷன் மட்டுமா அங்க சரியில்லை? பெத்ததும் சரியில்லையே?”
 
“அது வாஸ்தவம்தான்! அந்த ரெண்டு ஜந்தும் எங்கண்ணுல படலை சார்.”
 
“விட்டுத்தள்ளுங்க சரவணன்.”
 
“அவங்கம்மா ஒரு பை குடுத்தாங்க, அதைத் திரும்பக் கொண்டு வந்து மேடம்கிட்ட குடுத்துட்டேன் சார்.”
 
“ஓகே, நான் பார்த்துக்கிறேன் சரவணன்.”
 
“சார், நான் ஒன்னு சொன்னா நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?”
 
“என்ன சரவணன் நீங்க? சும்மா சொல்லுங்க.” வருண் இப்போது சிரித்தான்.
 
“மேடம் உங்களுக்கு ரொம்பப் பொருத்தமா இருப்பாங்க சார்.” அதற்கு மேல் பேச தைரியம் இல்லாமல் சரவணன் அழைப்பைத் துண்டித்து விட்டான். வருணின் முகத்தில் இருந்த புன்னகை காணாமல் போயிருந்தது.
கார் சட்டென்று நிற்க வருண்
 
வெளியே பார்த்தான். ஒரு ரெஸ்டாரன்ட் முன்பாக நின்றிருந்தது கார்.
 
“சாப்பிடலாம் அத்தான், நீங்க டீ கூடக் குடிக்கலை இல்லை? பசிக்கும்.” அக்கறையாக அவனைக் கவனித்தாள் பெண். அப்போது மட்டுமல்ல, அன்று முழுவதும் அவள் அவனை அப்படித்தான் பார்த்துக் கொண்டாள்.
 
காலை உணவை முடித்து, சூடாக டீயும் அருந்திவிட்டுக் கிளம்பிய பயணம் அதன் பிறகு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.
 
எங்கே போகிறோம், என்ன, ஏது என்று வருணுக்கு எதுவுமே தெரியாது. என்னோடு ஒரு நாள் செலவழிக்க முடியுமா என்று கேட்ட பெண் இழுத்த இழுப்பிற்கெல்லாம் ஆடினான்.
 
நான்கு மணிநேரம் பயணம் செய்தார்கள். பயணம் சலிக்காதவாறு ஆங்காங்கே காரை நிறுத்தி வயல் வரப்புகள், தோட்டங்கள் என்று என்னென்னவோ காட்டினாள்.
 
கமுகு மரத்தோப்பு, மாந்தோப்பு என வழிநெடுகிலும் பார்க்க நிறைய இருந்தன. றம்புட்டான், சோளம் என நிறைய வாங்கி உண்டார்கள்.
 
தன் பெற்றோர்களின் தாய்நாட்டை முதல் முதலாகப் பார்க்கும் நெகிழ்ச்சி வருணுக்கு நிறையவே இருந்தது. அவள் காட்டிய ஒவ்வொன்றையும் ஆவலாகப் பார்த்தான். நிறைய புகைப்படங்கள் எடுத்துக் கொண்டான்.
 
கடைசியாக அந்த இடத்தில் கார் போய் நின்ற போது சிலுசிலுவென மழை தூற ஆரம்பித்திருந்தது. சின்னதாக ஒரு வீடு. ஆனால் பார்க்க அழகாக இருந்தது.
 
“யாரோட வீடு இது?”
 
“தெரிஞ்சவங்களோடதுதான், கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கலாம் அத்தான்.” மயூரி காரை பார்க் பண்ணிவிட்டு அவனோடு வீட்டுக்குள் நுழைந்தாள்.
 
“இன்னைக்கு வெதர் ரொம்ப நல்லா இருக்கு அத்தான், லைட்டா தூறலோட… வெயில் அடிச்சிருந்தா நீங்க கஷ்டப்பட்டிருப்பீங்க.” 
மதிய உணவிற்கான நேரம் இன்னும் நெருங்கி இருக்கவில்லை என்பதால் இரண்டு பேரும் சற்று ஓய்வெடுத்து விட்டு மீண்டும் வெளியே போனார்கள்.
 
“இது எந்த இடம்?”
 
“சீகிரிய அத்தான்.”
 
“ஏதாவது ஸ்பெஷல் ப்ளேஸா?”
 
“ஆமா, காசியப்பா எங்கிற கிங் இந்த இடத்தைத்தான் அவனோட கேப்பிட்டலா வெச்சிருந்தான்.”
 
“ம்…”
 
“இங்க சின்னதா ஒரு மலை இருக்கு அத்தான், அதுக்கு மேலதான் அவனோட பேலஸ் இருந்திருக்கு.”
 
“ரியலி!”
 
“ஆமா, இந்தியாவோட அஜந்தா ஓவியங்கள் மாதிரி இங்கேயும் இருக்கு, அழியாம!”
 
“அப்பிடியா?!” இருவரும் அந்த மலைக் குன்றிற்குப் போனார்கள். 
அவன் கை வளைவில் தன் கரம் கோர்த்துக் கொண்டு அவன் தோளோடு சாய்ந்த படி அன்றைக்கு முழுவதும் நடந்தாள் மயூரி. நூற்றி என்பது மீட்டர் உயரமான அந்தக் குன்றை இருவரும் ஏறிப்பார்த்தார்கள். 
 
சிங்கத்தின் பாதம் போல இருந்த இடம், அழியா வண்ணம் கொண்ட ஓவியங்கள், குன்றின் உச்சியில் இருந்த சிதிலமடைந்த ஒரு ராச்சியத்தின் மீதங்கள் என அனைத்தையும் பார்த்தார்கள்.
 
வருண் அந்த இடத்தை மிகவும் ரசித்தான் என்றுதான் சொல்ல வேண்டும். சூழ்ந்திருந்த காட்டு மரங்களின் குளுமையோடு இருந்தது அந்த ஒற்றைக் குன்று.
 
நிறைய வெளிநாட்டவர்களின் சுற்றுலாத் தலமாக அந்த இடம் இருந்தது. நண்பகல் வெயில் அங்கு உறைக்கவே இல்லை. ரம்மியமாக இருந்தது.
 
குன்றின் உச்சி மீது ஏறி நின்று சுற்றியிருந்த பச்சைப் பூமியைப் பார்த்த போது ஏதோ உலகை வென்றுவிட்ட திருப்தி உண்டானது இருவருக்கும்.
 
தரமான உணவகங்களும் இருந்ததால் அங்கேயே உணவை முடித்துக் கொண்டார்கள்.
 
“ரொம்ப அழகா இருக்கு இந்த ப்ளேஸ் ப்ரதாயினி.”
 
“ம்… உங்களுக்குப் புடிக்கும்னு எனக்குத் தெரியும் அத்தான்.” 
அடுத்து அவனை தம்புள்ளையின் பொற்கோயிலுக்கு அழைத்துச் சென்றாள் மயூரி. புத்த பகவானின் நூற்றி ஐம்பத்தி மூன்று சிலைகளைக் கொண்ட அந்த குகைக் கோயிலைப் பார்த்த போது வருண் அசந்து போனான்.
 
குகையின் உள்ளே இருந்த சிற்பங்களையும் சித்திரங்களையும் பார்த்த போது அவனுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது.
 
குகையின் உள்ளே எழுந்த ஒரு வகையான இயற்கையின் வாசம் அவனை அத்தனைக் கவர்ந்தது.
 
“ப்யூட்டி ஃபுல்… ப்யூட்டி ஃபுல்!” என்று ஒவ்வொரு இடமாக ரசித்தான். புகைப்பட எடுத்தான்.
 
“அம்மா அப்பாவோட ஊரை யாரோ சுத்திக்காட்ட வேண்டி இருக்கு.”
 
“நீ யாரோ இல்லையே.”
 
“நான் யாரு அத்தான்?” அவள் சட்டென்று கேட்க அவன் சிரித்தான்.
 
“சிரிச்சே மழுப்புங்க.” 
எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்து விட்டு அவர்கள் மீண்டும் பயணப்பட்ட போது ஐந்து மணி தாண்டிவிட்டது. எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக காரை செலுத்தினாள் மயூரி.
 
அன்றைக்கு முழுவதும் அவனோடு இருந்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது பெண்ணுக்கு. கப்பலிலும் ஒன்றாக இருந்தார்கள்தான். 
 
ஆனாலும் இப்படி பொது வெளியில் அவன் கையோடு கை கோர்த்து தோள் உரச நடப்பது பரம சுகமாக இருந்தது அவளுக்கு.
 
இந்த நொடி இப்படியே நின்று விடக்கூடாதா, உறைந்து போகக் கூடாதா என்று மனது ஆசைப்பட்டது.
 
பேச்சற்ற மௌனம்தான் வழி நெடுகிலும் இருந்தது. ஆனாலும் அதை மயூரி விரும்பினாள். அவன் அருகாமையை, அவனுக்கே அவனுக்கான அந்த வாசனையை அவள் வெகுவாக ரசித்தாள். 
 
உள்ளமும் உடலும் இப்போது அவன் ஒற்றை அணைப்பிற்காக ஏங்கியது. வெளியே சொல்ல முடியாத ஆசையோடு மீண்டும் கொழும்பு வந்து சேர்ந்தார்கள்.
 
காரை ஹோட்டலின் முன்பாக நிறுத்தினாள் மயூரி. நேரம் இரவு பத்து மணி. ஹோட்டல் வளாகம் கொஞ்சம் அமைதியாகவே காணப்பட்டது.
 
“நாளைக்கு எத்தனை மணிக்கு ஃப்ளைட் அத்தான்.”
 
“மார்னிங் சிக்ஸுக்கு ஏர்போர்ட்ல நிக்கணும்.”
 
“ஓகே… தான்க் யூ அத்தான்.” அவள் முகம் புன்னகையைக் காட்டினாலும் அதில் வலி தெரிந்தது. 
 
“நான் சொன்னதுக்காக எங்கூட வந்ததுக்கு ரொம்ப தான்க்ஸ்.” மீண்டும் ஒரு சிரிப்பு. ஏமாற்றம், வலி, நிராசை என ஏதேதோ உணர்ச்சிகள் அந்தச் சிரிப்பிற்குள்.
 
எதையோ பேச வாயெடுத்தவள் சட்டென்று நிறுத்தினாள். வருண் அவளையே பார்த்தபடி நின்றிருந்தான். உதடு வரை வந்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டு அவள் திரும்பிய போது வருண் அவள் கைப்பிடித்து நிறுத்தினான்.
 
“சொல்ல வந்ததைச் சொல்லிட்டுப் போ.”
 
“இல்லை… ஒரே ஒரு தரம்…” அதற்கு மேலும் தாமதிக்காமல் அவனை இறுகக் கட்டிக்கொண்டாள் மயூரி. 
கடைசி முறையாக என்று நினைத்திருப்பாள் போலும். அவள் நெருக்கம் அதீதமாக இருந்தது. முழுதாகக் இரண்டு நிமிடங்கள் அவனோடு ஒட்டிக் கொண்டு நின்றாள்.
 
தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவள் மனமே இல்லாமல் விலகிய போது வருண் அவள் இதழ்களை நாடி இருந்தான்.
 
இப்போது அவன் என்ன நினைத்தானோ! அவள் செலவழித்த நேரத்தை விட அதிகமாக அவன் செலவழித்தான்.
 
எதிர்பாராத அந்த இன்பத்திற்குள் மயூரி திளைத்து நின்ற போது வருண் சட்டென்று விலகினான். 
 
எதிலிருந்தோ தப்பித்து ஓடுபவன் போல விடுவிடுவென்று ஹோட்டலை நோக்கி போய்விட்டான்.
மயூரி தனித்து நின்றிருந்தாள்!