அழகியே 16

அழகு 17
 
வருணுக்கு அன்றைய நாள் முழுவதும் வேலை சரியாக இருந்தது. அந்த உல்லாசப்பயண கப்பல் எத்தனைக்கு எத்தனை வசதிகளைக் கொண்டிருந்ததோ அதே அளவிற்கு கேப்டனையும் மற்றைய ஆஃபீஸர்களையும் வைத்து ஆட்டியது!
 
ஆனாலும் அந்தத் தொழிலின் மேல் அவர்களுக்கிருந்த காதல், பற்று அவர்களுக்கு உண்டான களைப்பை உணரவிடாமல் செய்தது. 
 
டாமினிக்கை கேட்டால்… கூடவே வேலை செய்த இளம் பெண் ஆஃபீஸர்களும் அதற்கு ஒரு காரணம் என்று சொல்வான். 
 
அன்றைக்குத் தனது பணி நேரத்தை முடித்துவிட்டு அறைக்கு வந்த வருண் களைப்பு மிகுதியால் சற்று நேரம் கண்ணயர்ந்து விட்டான்.
 
ஃபோன் சிணுங்கும் சத்தம் கேட்கவும் வருணின் தூக்கம் தானாகக் கலைந்தது. ஃபோனை எடுத்துப் பார்த்தான். சரவணன் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான். 
 
இலங்கையை விட்டுக் கிளம்பிய பின்னும், அவன் நினைத்துச் சென்ற காரியம் நிறைவேறிய பிறகும் சரவணனோடான அவன் உறவு நீடித்தது.
 
பேச வேண்டிய தேவை ஏற்படும் போது இதுபோல சரவணன் குறுஞ்செய்தி அனுப்புவான். வருண் எப்போது ஃப்ரீயாக இருக்கின்றானோ அப்போது அழைத்துப் பேசுவான்.
 
“சொல்லுங்க சரவணன்.” 
 
“தூங்குறீங்களா சார்? டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?”
 
“இல்லையில்லை, ரொம்ப டயர்டா இருந்துது, அதான் தூங்கிட்டேன், இனித்தான் சாப்பிடணும், நீங்க சொல்லுங்க.”
 
“சார், வீட்டு வேலை கிட்டத்தட்ட முடிஞ்சிடுச்சு.”
 
“குட்! கையில பணம் இருக்கா சரவணன்? இன்னும்
அனுப்பணும்னாச் சொல்லுங்க.”
 
“இல்லை சார், பணம் தாராளமா இருக்கு, அது ஒன்னும் பிரச்சினையே இல்லை.”
 
“ம்…”
 
“பெயின்டிங் வேலை எல்லாம் முடிஞ்சு போச்சு, நீங்க சொன்ன எல்லா ஃபர்னிச்சரையும் ஆர்டர் பண்ணிட்டேன்.”
 
“ம்… அவங்க பொருட்கள் ஒன்னும் இங்கே இருக்கலை இல்லை?”
 
“இல்லை சார், போகும் போது எல்லாத்தையும் கொண்டு போயிட்டாங்க.”
 
“குட்.”
 
“ஆர்டர் பண்ணினது ஒவ்வொன்னா வர வர நீங்க சொன்ன மாதிரி அரேஞ்ச் பண்ணினாச் சரி சார்.”
 
“கார்டன் எப்பிடி இருக்கு?” 
 
“அதுக்கெல்லாம் ஆளுங்க போட்டிருக்கேன் சார், மார்னிங், ஈவ்னிங் வந்து பார்த்துக்கிறாங்க.”
 
“குட், அம்மா அங்க வரும்போது எல்லாம் பக்காவா‌ இருக்கணும் சரவணன்.”
 
“கண்டிப்பா இருக்கும் சார், அம்மா எப்போ வருவாங்க சார்?”
 
“கூடிய சீக்கிரமே, வீடு கை மாறினதை நான் இன்னும் அம்மாக்குச் சொல்லலை.”
 
“ஏன் சார்?”
 
“அம்மா இன்னும் அந்த வீட்டைப் பார்த்ததில்லை, பார்க்கணும்னு ரொம்ப ஆவலா இருக்காங்க, விஷயம் தெரிஞ்சா அடுத்த ஃப்ளைட்ல ஏறிடுவாங்க.”
 
“நியாயந்தானே சார்!” சரவணன் சிரித்தான்.
 
“அதான் எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டுச் சொல்லலாம்னு இருந்தேன்.”
 
“நிறைய கேள்விகள் வரும் இல்லை சார் அம்மாக்கிட்ட இருந்து?”
 
“ம்… ஆனா என்னப் பண்ண முடியும்? சமாளிக்க வேண்டியதுதான்.”
 
“மேடம் கூட பேசினீங்களா சார்?” கேட்கலாமா வேண்டாமா என்ற தயக்கத்திற்குப் பிறகு அந்தக் கேள்வியைக் கேட்டான் சரவணன். ஆனால் வருணின் பதில் எந்தத் தயக்கமும் இன்றி நிதானமாக வந்தது.
 
“இல்லை சரவணன்.”
 
“ஓ…” சரவணனின் குரல் கொஞ்சம் ஏமாற்றத்தைக் காட்டியது.
 
“மேடமை இந்த நாள்ல நானும் எங்கேயும் பார்க்கலை சார்.”
 
“ம்…” இப்போது பேச்சற்று இருவரும் மௌனமாக இருந்தார்கள்.
 
“அம்மா வரும்போது நீங்களும் கூட வருவீங்களா சார்?”
 
“தெரியலை சரவணன், என்னால இப்போதைக்குக் கொஞ்ச நாள் எங்கேயும் அசைய முடியாது, ஆனா அம்மா போய்த்தான் ஆகணும்னு பிடிவாதம் பிடிச்சா என்னப் பண்ணுறதுன்னுதான் யோசிக்கிறேன்.”
 
“ம்… நாங்கெல்லாம் இருக்கோமில்லை சார், பார்த்துக்கிறோம்.”
 
“அந்த நம்பிக்கையிலதான் இருக்கேன்.”
 
“மேடம்கிட்ட கேட்டா என்ன சார்?”
 
“புரியலை சரவணன்?”
 
“இல்லை… இப்பிடி அம்மா வர்றாங்க, கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்கன்னு கேட்கலாமே!” தன் சாரை மேடத்தோடு பேச வைத்துவிடும் ஆசை சரவணனுக்கு நிறைய இருந்தது.
 
தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்காத குறையாக வருணோடு மயூரி பற்றிப் பேச காரணங்களைக் கண்டு பிடித்துக் கொண்டிருந்தான். ஆனால் சம்மந்தப்பட்டவன் பிடி கொடுக்க வேண்டுமே!
 
“இல்லை சரவணன், அது சரிவராது.” அதற்கு மேல் பேச ஒன்றுமில்லை என்பது போல அத்தோடு பேச்சை‌ முடித்துக் கொண்டான் வருண்.
 
“ஓகே சரவணன், பசிக்குது… சாப்பிடணும், நான் இன்னொரு நாள் கூப்பிடுறேன், பை.”
 
“பை சார்.” ஏமாற்றத்தோடு சரவணன் அங்கே பேச்சை முடித்தது வருணுக்கு தெரியாது. 
 
சாப்பிடலாம் என்று போய் உட்கார்ந்து உணவை ஆர்டர் செய்தான். ஃபோனை எடுத்துப் பார்க்க அம்மா மெஸேஜ் அனுப்பி இருந்தார்.
 
‘உன்னோட பேச வேணும் தம்பி, நேரம் இருக்கேக்குள்ள ஃபோன் பண்ணு.’ 
 
‘சாப்பிட்டுவிட்டு அழைக்கிறேன்.’ என்று பதில் அனுப்பிவிட்டு சாப்பாட்டில் கவனமானான் வருண். பக்கத்தில் யாரோ உட்காரும் அரவம் தெரிந்தது. திரும்பிப் பார்த்தான். அந்த இளம் ஆஃபீஸர்!
 
“ஹாய் ஆஃபீஸர்!”
 
“ஹாய்.” சின்னதாக ஒரு புன்னகையைச் சிந்தித்து விட்டு சாப்பாட்டைத் தொடர்ந்தான் வருண். 
 
“இன்னைக்கு ஈவ்னிங் பார்ட்டிக்கு வருவீங்கதானே ஆஃபீஸர்?”
 
“என்ன பார்ட்டி?!” வருணுக்கு சுத்தமாக எதுவும் ஞாபகம் இல்லை.
 
“பார்த்தீங்களா… அதுக்குள்ள மறந்துட்டீங்களே! இன்னைக்கு ‘விமன்ஸ் டே’ செலபிரேட் பண்ணுறோம், கேப்டன் பர்மிஷன் குடுத்துட்டாங்க!” பெண் ஆர்ப்பரித்தது.
 
‘அந்த மனுஷனுக்கு என்ன? பல்லை இளிச்சிக்கிட்டு பர்மிஷன் குடுத்திருப்பாரு!’ டாமினிக்கை மனதுக்குள் திட்டித் தீர்த்தான் வருண்.
 
“இன்னைக்கு நீங்க கண்டிப்பா பார்ட்டிக்கு வரணும், நான் உங்களுக்காகக் காத்திருப்பேன்.” தலையைச் சரித்து மோகனமாக அந்தப் பெண் புன்முறுவல் பூத்த போது வருணின் இதழ்களும் அவன் அனுமதி இல்லாமலேயே புன்னகைத்தன.
 
“ஷ்யூர்.” அவசரமாக ஒரு உறுதி மொழியை வீசிவிட்டு எழுந்து விட்டான். அம்மாவுக்கு ஃபோன் பண்ண வேண்டும். காத்துக் கொண்டிருப்பார்.
 
“ஓகே பை.”
 
“பை ஆஃபீஸர்.” அந்தப் பெண்ணின் பெயர் லோரா. லண்டனில் வசிக்கின்றாளாம். அவளையும் அவள் குடும்பத்தைப் பற்றியும் அன்று வருணிடம் பேசும் போது முழுதாக ஒப்புவித்திருந்தாள்.
 
அது மட்டுமல்ல, வருணை பற்றிய அனைத்துத் தகவல்களையும் அவனிடமிருந்து முழுதாக வாங்கி இருந்தாள்.
 
முக்கியமாக, அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதோடு… கைவசம் இப்போது எந்த கேர்ள் ஃப்ரெண்ட்டும் இல்லை. 
லோராவின் பேச்சிலும் பார்வையிலும் ‘உன்னை எனக்கு மிகவும் பிடிக்கிறது.’ என்ற சேதி அப்பட்டமாகத் தெரிந்தது.
 
அந்த வாட்டசாட்டமான இளம் ஆஃபீஸரை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்?!
 
ரூமிற்கு வந்த வருண் அம்மாவை அழைத்தான். ராகினி இவன் அழைப்பிற்காகக் காத்துக் கொண்டிருந்திருப்பார் போலும். முதல் ரிங்கிலேயே அழைப்பை ஏற்றார்.
 
“ஹலோ அம்மா.”
 
“தம்பி, சுகமா இருக்கிறியோ? சாப்பிட்டு முடிச்சிட்டியா?”
 
“ஓம்… நீங்க சொல்லுங்க, என்ன திடீரென்டு கால் பண்ணச் சொல்லி மெஸேஜ் அனுப்பி இருக்கிறியள்! உடம்புக்கு ஒன்டும் இல்லைத்தானே?” 
 
“அதெல்லாம் கடவுள் புண்ணியத்தால நல்லாத்தான் இருக்கிறன் தம்பி, இந்த விஷாகாவோட இன்டைக்குக் கதைச்ச நான் தம்பி.” வருணின் கண்கள் இப்போது இடுங்கியது. 
 
“லைன்ல இருக்கிறியோ?”
 
“ம்… சொல்லுங்க.”
 
“கனகாலமாக் கதைக்கேயில்லை என்டுட்டு இன்டைக்கு நான்தான் கூப்பிட்டனான்.”
 
“ம்…”
 
“விஷயத்தைக் கேட்டியோ! அந்த அம்மா செத்துப் போயிட்டுதாம்!”
 
“யாரு?!” வருணுக்குமே இப்போது திக்கென்றது.
 
“உன்ட அப்பாவின்ட அம்மா!”
 
“ஓ!” இருவரும் மேலே பேச முடியாமல் சிறிது நேரம் மௌனித்தார்கள்.
 
“நல்லாத்தான் இருந்தவங்களாம், திடீரென்டு இப்பிடி ஆகிப்போச்சுது அக்கான்னு விஷாகா கவலைப்பட்டது தம்பி.”
 
“ம்… சரி விட்டுத் தள்ளுங்க, அந்த ஊர்ல இனி கொஞ்சம் மழை நல்லாவே பெய்யும்.” அலட்சியமாகச் சொன்னான் வருண்.
 
“வருண்! என்ன தம்பி பேச்சு இது?!” ராகினியின் குரல் மகனைக் கண்டிக்க வருணுக்கு எரிச்சல் வந்தது.
 
“அன்டைக்கு அந்த அம்மா பேசின பேச்சை மட்டும் நீங்க கேட்டிருக்க வேணும், அப்ப தெரிஞ்சிருக்கும் உங்களுக்கு!”
 
“ஏன்? அந்த அம்மா என்னைப் பேசினதே இல்லையோ?! என்னை மட்டும் பேசினவா என்டே நீ நினைக்கிறாய்? என்ட குடும்பத்தையே நடுரோட்டுல நிக்க வெச்சுக் கேள்வி கேட்டுது அந்த அம்மா.”
 
“பின்ன என்னத்துக்கு அந்தப் பொம்பளைக்கு இப்ப வரிஞ்சு கட்டுக்கொண்டு சப்போர்ட் பண்ணுறியள்?!”
 
“என்னதான் கோபம் இருந்தாலும் ஒரு சாவுல சந்தோஷப்பட்டா அவன் மனுசனே இல்லை தம்பி.”
 
“சரி… நான் மனுசனே இல்லை, விடுங்க.” வெடுக்கென்று சொன்னான் மகன்.
 
“என்னத்துக்கு இப்ப உனக்கு இவ்வளவு கோபம் வருது வருண்?” 
 
“ஒன்டுமில்லை விடுங்கோ.” தாயின் மேல் எரிந்து விழுந்தான் மகன். ஏனோ தெரியவில்லை, அம்மா இப்போது விஷாகாவின் பேச்சை எடுத்தது அவனுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. 
 
ஆனால் வீடு கை மாறிய விஷயத்தை அம்மாவிடம் சொல்ல இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று தோன்றியது. அவனுக்குச் சிரமத்தைக் கொடுக்காமல் ராகினியே பேச்சை ஆரம்பித்தார்.
 
“தம்பி… நான் ஒன்டு சொன்னா நீ கோவிப்பியோ?”
 
“சொல்லுங்க.” என்ன வரப்போகிறது என்று வருணுக்கு ஏற்கனவே புரிந்து விட்டது.
 
“நான் நாட்டுக்கு ஒரு தரம் போயிட்டு வரட்டே?” அம்மா கேட்டு முடிக்க மகன் வாய்விட்டுச் சிரித்தான்.
 
“என்ன, மாமியார் மண்டையைப் போட்டதும் உங்களுக்கு தைரியம் வந்துட்டுது போல?!”
 
“டேய்! ஏன்டா இப்பிடியெல்லாம் கதைக்கிறாய்?” 
 
“வேற எப்பிடிக் கதைக்கச் சொல்லுறியள்? இவ்வளவு நாளும் நாட்டுக்குப் போக வேணும் என்டு நீங்க கேக்கயில்லைத்தானே?” வருணின் குரலில் சிரிப்பிருந்தது.
 
“அது சரிதான்…” ராகினியும் இப்போது இழுத்தார்.
 
“வீடு ரெடியாகிடுச்சு அம்மா.” சட்டென்று போட்டு உடைத்தான் வருண்.
 
“வீடா? யாரோட வீடு தம்பி?”
 
“நம்மளோட வீடு, அப்பா ஆசையாசையா உங்களுக்கென்டு கட்டின வீடு.”
 
“என்ன… சொல்லுறாய் தம்பி…” ராகினிக்கு வார்த்தைகள் சிக்கின.
 
“உண்மையாத்தான் சொல்லுறியோ? எப்பிடி? எப்ப குடுத்தவங்க?”
 
“ரெண்டு மாசம் இருக்கும்.”
 
“என்ன?! ரெண்டு மாசமோ?! பின்ன நீ ஏன் என்னட்ட இவ்வளவு நாளும் இதைச் சொல்லயில்லை?!”
 
“அவங்க இவ்வளவு காலமும் பாவிச்ச வீடு, எனக்கு எல்லாத்தையும் புதுசாச் செய்ய வேணும் போல இருந்தது, அதான் ஆளுங்களைப் போட்டு திருத்தி, பெயிண்ட் பண்ணி என்டு கொஞ்சம் வேலைகள் செய்தனான்.”
 
“ஓ…” ராகினி கொஞ்ச நேரம் எதுவும் பேசவில்லை. எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்.
 
“என்ன சத்தத்தையே காணம்?!” இப்போதும் என்ன வரப்போகின்றது என்று வருணுக்கு புரிந்தது. கேள்விகளை எதிர்கொள்ளத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டான்.
 
“அந்த மனுசி லேசுல வீட்டைக் குடுத்திருக்காதே! நீ… என்ன செய்த நீ வருண்?”
 
“நான் வேற என்ன செய்திருப்பன் என்டு நீங்க நினைக்கிறியள்?”
 
“அதைத்தான் நான் உன்னட்ட கேக்கிறன்? அவ்வளவு காரசாரமாக் கடிதம் எழுதி இங்க அனுப்பிட்டு உனக்கு வீட்டைக் குடுக்க என்னென்டு சம்மதிச்சவியள்?”
 
“அதெல்லாம் கேக்குற மாதிரிக் கேட்டா எல்லாம் குடுப்பாங்கள், உங்களுக்கும் உங்கன்ட மனுசனுக்கும் யாருக்கிட்ட எப்பிடிப் பேசணுமென்டு தெரியேயில்லை.”
 
“வருண்… ஏதாவது ஏடாகூடமாச் செய்த நீயோ தம்பி? நல்லா இருந்த மனுசி பொட்டென்டு போய் சேர்ந்துட்டாவே?!” ராகினியின் குரல் சந்தேகத்தில் நடுங்கியது.
 
“உங்களுக்கென்ன விசரே அம்மா! விட்டா அந்தக் கிழவியின்ட கழுத்தை நசிச்சு நான் சைன் வாங்கிட்டன் என்டு சொல்லுவியள் போல இருக்கு?”
 
“நீ செஞ்சாலும் செய்வாய்டா தம்பி!” ராகினி அலறினார்.
 
“ஐயோ ஆண்டவா! எனக்கு எதிரி வெளியே இல்லை, வீட்டுக்குள்ளதான் இருக்கு!” சத்தமாகச் சொன்னவன்,
 
“அந்தக் கிழவி செத்துப் போச்சுது என்டா அதோட காலம் முடிஞ்சு போச்சுதென்டு அர்த்தம், அதுக்கும் நீங்க என்னையே சொல்லுவியள்?”
 
“இல்லை தம்பி…”
 
“எனக்கு ஆயிரம் வேலை கிடக்கு, நீங்க முதல்ல ஃபோனை வையுங்க.” கோபமாக அழைப்பைத் துண்டித்திருந்தாலும் வருணின் மனதுக்குள்ளும் வண்டு புகுந்திருந்தது.
 
எத்தனை உதாசீனமாக அன்று என்னிடம் பேசியது அந்தப் பெண்மணி! என்னையும் என் பெற்றோரையும் எவ்வளவு அவமானப் படுத்தினார்கள்! இன்று எங்கே அவர்கள்?! 
 
மனது கொக்கரித்தாலும் தான் செய்த காரியத்தால்தான் அந்த அம்மாக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்குமோ என்ற குற்றவுணர்ச்சி வருணை அரிக்க ஆரம்பித்தது.
 
இந்த குற்றவுணர்ச்சியை வளர விட்டால் அது தனக்கே உலை வைத்துவிடும் என்று புரிந்து கொண்டவன் சட்டென்று எழுந்து விட்டான். 
 
இன்றைக்கு இரவு அந்தப் பெண் பார்ட்டி இருக்கின்றதென்று சொன்னாளே! கவனத்தை முழுதாக அதன் பக்கம் திருப்பினான் வருண்.
 
***
 
அன்று இரவு ஏழு மணிக்கு மேலாக பார்ட்டியை அரேஞ்ச் பண்ணியிருந்தது அந்த மகளிர் குழு. வேறு ஒன்றுமில்லை, அந்தக் கப்பலின் முக்கிய உயர் பதவிகளில் அதிகம் இருந்தது பெண்கள்.
 
கப்பல் பிரயாணத்தின் போதே உலக மகளிர் தினமும் வந்ததால் அதைக் கொண்டாட அத்தனை மகளிரும் திட்டம் போட்டிருந்தார்கள்.
 
மகளிர் என்று சொன்னாலே நம் கேப்டன் மலர்ந்து, மகிழ்ந்து போவாரே! அனுமதி வழங்கிவிட்டார். உல்லாசக் கப்பல் என்பதால் வசதிகளுக்குக் குறைவிருக்கவில்லை.
 
பெண்கள் அனைவரும் கண்ணைக் கவரும் வகையில் அங்கே ஏற்கனவே பிரசன்னமாகி இருந்தார்கள். 
 
வருண் கறுப்பு நிறத்தில் சூட் அணிந்திருந்தான். இவனைக் கண்டதும் லோரா ஆவலே வடிவாக இவனிடம் ஓடி வந்தாள். நல்ல சிவப்பு நிறத்தில் குட்டையாக ட்ரெஸ் அணிந்திருந்தாள். 
 
அவளது பளிங்கு நிறத்திற்கு அந்தச் சிவப்பு ஆடை மிகவும் எடுப்பாக இருந்தது. 
 
“ஹாய் ஆஃபீஸர்.” யூனிஃபார்மில் இல்லாததால் தைரியமாகப் பெண் வருணை நெருங்கியது.
 
“ஹேய் விபி!” டாமினிக்கும் வந்துவிட அந்த இடமே கலகலப்பாகிப் போனது. 
 
ஆண்களும் பெண்களும் சிரிக்கும் சத்தம் அந்த இடத்தை நிரப்பியது. டாமினிக் எந்த பாராபட்சமும் இன்றி அனைத்துப் பெண்களோடும் நேரம் செலவழித்தான்.
 
சில திருமணமான பெண்கள் இவன் அடிக்கும் கூத்தை அவர்கள் கணவன்மார்களுக்கு ஃபோனைப் போட்டுக் காண்பித்தார்கள்.
 
அவர்களோடும் இவன் சிரித்துப் பேசினான். வருண் எல்லாவற்றையும் ஒரு புன்னகையோடு பார்த்திருந்தான். உணவு பரிமாறப்பட்டது. லோரா வருணை விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டாள்.
 
“என்ன விபி? பொண்ணு பயங்கரமாக் கவனிக்குது?!” இவன் மேல் ஒரு கண்ணை வைத்திருந்தான் போலும், டாமினிக் இவன் காதோரமாகக் கேட்டுவிட்டு நகர்ந்து விட்டான்.
 
சாப்பிட்டு முடிந்ததும் அந்த உயர் ரக இத்தாலியன் ‘டஸ்கன்’ வைனை கிண்ணத்தில் ஊற்றி வருணிடம் நீட்டினாள் லோரா. 
 
வருண் மறுக்கவில்லை, வாங்கிக் கொண்டான். இன்று மனதுக்குள் இனம்புரியாத ஏதோவொன்று அவனை அரித்துக் கொண்டிருந்தது.
என்னவென்று புரியவில்லை.
 
ஆனால்… அம்மா இன்று பேசாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று மட்டும் மனது சொன்னது.
 
அந்த ஆச்சியை பற்றியோ அவர் இறந்தது பற்றியோ அவன் சிறிதும் கவலைப்படவில்லை. ஆனால் அதையொட்டி ஏதேதோ ஞாபகங்கள் வந்தன. 
 
தான் அன்று தொட்டணைத்த தேகம் ஒன்று அதன் நினைவுகளை மீண்டும் அவனுக்குள் மூட்டியது. அந்த சுகம் மீண்டுமொரு முறைக் கிடைத்தால் நன்றாக இருக்கும் போல தோன்றியது.
 
இன்னொரு கிண்ணத்தில் இருந்த வைனை அவனாகவே போய் எடுத்து வந்தான் வருண். இவன் முகத்தைப் பார்த்த டாமினிக் என்ன நினைத்தானோ இவனிடம் வந்தான்.
 
“விபி, ஆர் யூ ஓகே?”
 
“யெஸ் கேப்டன்.” இவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே லோரா அவனிடம் வந்தாள்.
 
“ஆஃபீஸர்… ஷால் வீ!” அவன் தோளை உரசியபடி பெண் கையை நீட்ட அப்போதுதான் வருண் சுற்றுப்புறத்தை உணர்ந்தான்.
 
ஒவ்வொருவரும் ஜோடி சேர்ந்தபடி ஆட ஆரம்பித்திருந்தார்கள்.
 
கையிலிருந்த கிண்ணத்தை முழுதாக வாயில் சரித்த வருண் தானும் எழுந்து அந்த இளம்பெண்ணோடு கை கோர்த்துக் கொண்டான். 
 
பிரமாதமாக ஆடியது பெண். இந்தத் தொழிலுக்கு வருவதென்று முடிவெடுத்த பின்னால் அதற்குத் தகுந்த படி தனது திறமைகளை எல்லா வகையிலும் வளர்த்துக் கொண்டான் வருண். அதில் இப்படியான டான்ஸும் அடக்கம்.
 
இது போன்ற உல்லாசப்பயண கப்பல்களில் பல களியாட்டங்கள் நடப்பதுண்டு. சில பிரயாணிகள் கப்பலின் கேப்டன், உயர் ஆஃபீஸர்களை சந்திக்கப் பிரியப்படுவதுண்டு. 
 
அப்போது அவர்களிடம் தங்கள் கேள்விகளை, சந்தேகங்களைப் பயணிகள் கேட்டுத் தெளிவு பண்ணிக் கொள்வார்கள்.
 
சிலர் தங்கள் பிள்ளைகளுக்கு இந்தத் துறையைத் தேர்வு செய்யலாமா என்று கேட்டுத் தெளிவு பெறுவார்கள்.
 
அதிலும் சில நேரங்களில் ‘விஐபி’ பயணிகளுக்காக விஷேட ஏற்பாடுகள் இருக்கும். அவர்களுக்கான கவனிப்பு, அவர்கள் தங்கும் அறைகள் எல்லாம் கற்பனைக்கு எட்டாததாக இருக்கும்.
 
இவற்றிற்கெல்லாம் ஏற்றாற் போல
கப்பலின் ஊழியர்கள் தங்களைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.
தாளத்திற்கு ஏற்ப அவளோடு இசைந்து ஆடினான் வருண். ஆடுவது என்று வந்துவிட்டு,
 
“என்னைத் தொடாதே!” என்று எப்படிச் சொல்ல முடியும்?! வருண் ஆரம்பத்தில் பெண்ணின் நெருக்கத்தைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. 
 
அவள் இடை அணைத்து, தோள்களைப் பற்றி என்று விதவிதமாக ஆடினான். நேரம் செல்லச் செல்ல பெண்ணின் நெருக்கம் அதிகமானது. 
 
வருணின் உள்ளத்துக்குள் உறைந்திருந்த ஏதோவொரு கண்ணுக்குத் தெரியாத பனிப்பாறை, அந்தப் பெண்ணின் தீண்டல்களில் லேசாகக் கரைவது போலிருந்தது.
 
வருணின் கைகள் அவள் தோள்களை இதமாக இப்போது வருடியது. அந்த வருடல் பெண்ணுக்குள் ஏதேதோ கற்பனைகளை உண்டு பண்ண முழுதாக அவன் மேல் சாய்ந்தாள்.
வருண் அவளை விலக்கவில்லை.
 
சற்று முன் அவன் தேடிய சுகத்தைத் தன்மேல் சாய்ந்திருந்த பெண்ணில் தேடத் தொடங்கினான்.
 
‘இல்லையே… அது இது இல்லையே!’ அவன் மனது முரண்பட்டது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அவன் சுகித்த இன்பம் என்பது போல எதுவோ ஒன்று அவனை அலைக்கழித்தது.
 
வருண் பெண்ணை மெதுவாகத் தன்னிலிருந்து விலக்கினான். நான் தேடும் சுகம் இவளிடம் இல்லை. இவளால் அதைக் கொடுக்க முடியாது!
 
“ஆஃபீஸர்…” அந்தப் பெண் விழித்தது. இதுவரை நன்றாக இருந்தவருக்கு இப்போது என்ன ஆனது? ஏன் விலகுகிறார்?!
 
“சாரி.” அந்த ஏக்கம் நிறைந்த பார்வைக்குப் பதில் சொல்ல இயலாமல் ஒற்றை வார்த்தையோடு அங்கிருந்து அகன்று விட்டான் வருண்.
 
வைன் கொடுத்த போதை இப்போது அவனுக்குப் போதவில்லை. நேராக பாருக்குப் போனான். பாரில் வேலை செய்த ஊழியர்கள் இவனைப் பார்த்ததும் மகிழ்ந்து போனார்கள்.
 
ஒன்றன் பின் ஒன்றாக நான்கைந்து கிண்ணங்கள் உள்ளே இறங்கியது. அடுத்ததிற்காக வருண் கையை நீட்டிய போது அந்தக் கரத்தைத் தடுத்தது இன்னொரு கரம்.
சட்டென்று திரும்பினான் வருண். அவனருகே டாமினிக் அமர்ந்திருந்தான்.
 
“என்னாச்சு விபி? ஏன் இன்னைக்கு இவ்வளவு டென்ஷனா இருக்கே?”  
வருண் கேப்டனின் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. இன்னும் கொஞ்சம் உள்ளே இறக்கினான். வருணின் முகத்தைக் கூர்ந்து பார்த்த டாமினிக் இப்போது சிரித்தான்.
 
“உனக்கு இப்போ தேவைப்படுறதைக் குடுக்கத்தான் அங்க ஆள் இருக்கே? எதுக்கு வீணா உன்னையே நீ கஷ்டப்படுத்திக்கிறே விபி?” 
டாமினிக்கின் பேச்சில் வருணுக்கு அத்தனைக் கோபம் வந்தது.
 
வெடுக்கென்று எழுந்தவன் பாரை விட்டு வெறியேறி விட்டான்.
 
டாமினிக்கின்‌ அட்டகாசமான கேலிச் சிரிப்பு வருணை தொடர்ந்தது!