அழகியே 16

அழகு 16
 
விஷாகாவும் மயூரியும் வாழ்க்கையை எதிர்நோக்க மிகவும் சிரமப்பட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற் போல இருந்தது இருவருக்கும்.
 
இதுநாள்வரை வேலை, வேலை முடிந்தால் வீடு என்றிருந்த மயூரிக்கு குடும்பத்தை நிர்வகிக்கத் தெரிந்திருக்கவில்லை. 
 
அதைவிட கேவலம் விஷாகாவின் நிலைமை. பேரன், பேத்தி காணும் வயது வந்திருந்தும் அந்த அம்மாளிற்கு ஒன்றுமே தெரியவில்லை. 
 
ஆச்சி இதுவரை அனைத்து சொத்துக்களையும் தன் பெயரிலேயே வைத்திருந்ததால் இப்போது வக்கீல் வேறு வீடு தேடி வந்தார். 
 
பல பூர்வீகச் சொத்துக்களை சட்டரீதியாக ஆச்சியின் உயில் பிரகாரம் மாற்ற வேண்டி இருந்தது. இத்தனை சொத்துக்கள் தங்களுக்கு இருக்கின்றதா என்று மயூரிக்கு அன்றுதான் தெரியும்.
 
ஆனால் சொத்துக்கள் என்று கூறிக்கொண்டு வக்கீல் வந்து நின்ற போது விஷாகாவின் முகம் இறுகிப்போனது.
 
அம்மாவின் முக மாறுதலைப் பார்த்த மயூரி எதுவோ சரியில்லை என்று புரிந்து கொண்டாள். பல சொத்துக்களின் நிகர லாபமே கணிசமான தொகை என்று சொன்ன போது மயூரி திடுக்கிட்டுத்தான் போனாள். 
 
ஆனால் விஷாகா கல்லுப் போல அமர்ந்திருந்தார். ஆனால் உள்ளுக்குள் மறுகுகிறார் என்று புரிந்து போனது பெண்ணுக்கு.
 
ஆச்சி பெயரில் கணிசமான ஒரு தொகையும் வங்கியில் டெப்போசிட் பண்ணப்பட்டிருந்தது. அதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் வருமானம் வரும்படி ஆச்சி ஏற்பாடு பண்ணி இருந்தார்.
 
ஆக மொத்தம் மயூரிக்கு புரிந்ததெல்லாம்… அவளின் தனிப்பட்ட மாத வருமானம் அந்த வீட்டின் மாத வருமானத்திற்கு முன் ஒன்றுமே இல்லை என்பதுதான்.
 
“அம்மா, என்னம்மா இதெல்லாம்?!” வக்கீல் போகும்வரை காத்திருந்த பெண் தாயிடம் கேள்வி கேட்டாள். விஷாகா வாயைத் திறக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த மூடுமந்திரத்திற்கு விளக்கம் கிடைக்காது.
 
“தாத்தாவும் ஆச்சியும் இவ்வளவு வசதியானவங்களா?” ஆச்சரியமாகக் கேட்டது பெண்!
 
“உன்னோட தாத்தா கொஞ்சம் வசதியா வாழ்ந்தவங்கதான்.” முதல்முதலாக வாய் திறந்தார் விஷாகா.
 
“ஆனா எல்லாத்தையும் ஒரு கட்டத்துல தொலைச்சுட்டாங்க, ஆச்சி… பெருசா சொல்லிக்கிற மாதிரி அவங்கக்கிட்ட எதுவும் இருக்கலை.”
 
“அப்போ எப்பிடிம்மா இவ்வளவு சொத்தும் வந்திச்சு?”
 
“நீ என்ன நினைக்கிற?” மகளைப் பார்த்துக் கேட்டார் விஷாகா.
 
“மாமாவா?” இறங்கிய குரலில் கேட்டாள் மயூரி. விஷாகா தலையை மட்டும் ஆட்டி ஆமோதித்துவிட்டுக் குனிந்து கொண்டார்.
அதன்பிறகு இரண்டு பேரும் கொஞ்ச நேரம் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. விஷாகா எப்போதுமே மனிதர்களின் குறைகளை அம்பலத்தில் பேச பிரியப்படாதவர். அதனால் எப்போதும் போல இப்போதும் அமைதி காத்தார்.
 
மயூரிக்கு என்னப் பேசுவதென்றே தெரியவில்லை. பேசுவதாக இருந்தால் இறந்து போன தங்கள் உறவைப் பற்றியும், தொலைந்து போன தங்கள் உறவைப் பற்றியும் பேச வேண்டும்.
 
அதில் அவளுக்கு உடன்பாடு இல்லை. அதற்கும் மேலாகப் பேசியே ஆகவேண்டும் என்ற தேவை இருந்ததால் வாயைத் திறந்தாள்.
 
“பாவக்கணக்கு ஏறிக்கிட்டே போகுதேம்மா!” என்றாள் வருத்தத்தோடு. விஷாகா மகளின் பேச்சை மறுக்கவில்லை. 
 
“ஏம்மா இப்பிடியெல்லாம் நடந்துது? மாமா ஏன் எல்லாத்தையும் இங்கேயே வாங்கினாங்க? அங்க ஏதாவது வாங்கி இருக்கலாம் இல்லையா?”
 
“மாமாக்கு அங்கேயே தொடர்ந்து இருக்கிற ஐடியா இருக்கலை மயூரி, மாமியும் யாழ்ப்மாணத்து பொம்பிளைதானே? தேவையானதை சம்பாதிச்சு முடிச்சிட்டு இங்கேயே வந்துடணுங்கிற ஐடியால இருந்தாங்க.”
 
“ஓ…”
 
“இங்க வந்தா வாழுறதுக்கு வருமானம் வேணும் இல்லையா? அங்க சொகுசா வாழ்ந்து பழகிட்டாங்க, இங்க வந்து என்னப் பண்ணுறதுன்னு மாமாக்குத் தெரியலை, அதால இப்பிடி அசையாச் சொத்துக்களை வாங்கிப் போட்டாங்க.”
 
“ம்…”
 
“சொத்தா இருந்தா எந்தப் பிரச்சினையும் இல்லை, தேவைப்படும் போது வித்துக்கலாம்னுதான் சொன்னாங்க.”
 
“உங்க கல்யாணத்துக்கு அப்புறமா மாமா வரவே இல்லையாம்மா?”
 
“இல்லை.”
 
“ஏன்?”
 
“அந்தக் கல்யாணத்துல உன்னோட ஆச்சி ஆடின ஆட்டம் கொஞ்ச நஞ்சமில்லை, வேப்பிலை அடிக்கத்தான் நம்ம வீட்டுலயும் ஆள் இருந்துச்சில்லை.”
 
“ம்…” 
 
“பொண்ணு புதுசாக் கல்யாணம் பண்ணி புருஷனோட வந்திருக்குன்னு மாமியோட வீட்டாளுங்களும் வந்திருந்தாங்க, ரொம்பக் கேவலமாப் போச்சு.”
 
“ஓ…”
 
“மாமாக்கு அதோடயே வெறுத்துப் போச்சு.”
 
“ஆனாலும் சொத்தை எதுக்கு விட்டுக் குடுத்தாங்க? கேட்டு வாங்கி இருக்கலாம் இல்லை?”
 
“ஒரு வாட்டி கேட்டாங்க.” வேதனையோடு சொன்னார் விஷாகா.
 
“கேட்டாங்களா?! கேட்டுமா குடுக்கலை ஆச்சி?!” மயூரி ஆச்சரியத்தின் உச்சத்திற்குப் போனாள்.
 
“அங்க ஏதோ வீடு வாங்கணுங்கிறதுக்காக பணம் வேணும்னு கேட்டாங்க.”
 
“இவங்க என்ன சொன்னாங்க?”
 
“பணம் வேணும்னா பொண்டாட்டி வீட்டாளுங்கக்கிட்டக் கேளு, எதுக்கு எங்கிட்டக் கேட்கிறேன்னு சத்தம் போட்டாங்க.”
 
“சத்தம் போட்டாங்களா?! இதென்ன நியாயம்மா இது? அவங்க வாங்கினதைத்தானே கேட்டாங்க? இதுலென்ன தப்பு இருக்கு?”
 
“யாரும் யாருக்கிட்டயும் எதுவும் பேசமுடியாது, போகும்போது இப்போ எல்லாத்தையும் கொண்டா போனாங்க?” கசப்பாகச் சிரித்தார் விஷாகா.
 
“இந்தப் பாவப்பட்ட சொத்து நமக்குத் தேவையாம்மா?” பலத்த யோசனைக்குப் பிறகு கேட்டாள் மயூரி.
 
“இதைப் பத்தி நானே உங்கிட்டப் பேசணும்னு இருந்தேன் மயூரி, என்னோட பேர்ல இருக்கிற எல்லாச் சொத்தையும் நான் வருணுக்கு குடுக்கப் போறேன், உம்பேர்ல வர இருக்கிறதை என்னப் பண்ணுறதுன்னு நீதான் முடிவெடுக்கணும்.”
வருண் என்ற வார்த்தையில் மயூரியின் கண்கள் பளிச்சிட்டன. நாசி சட்டென்று அவன் வாசத்தை உணர்ந்தது.
 
“இல்லைம்மா, எல்லாச் சொத்தையும் உரியவங்களுக்கே குடுத்திடலாம், போதும்! இதையெல்லாம் வெச்சிருந்து என்னப் பண்ணப் போறோம்? நமக்குத் தேவையான அளவு சம்பாதிக்க என்னால முடியும், நாம அதுக்குள்ள வாழப் பழகலாம்.”
 
“ம்… மயூரி!” பேச்சு முடிந்தது என்பது போல எழுந்த மகளைத் தடுத்தார் விஷாகா.
 
“கொஞ்சம் உட்காரு, உங்கூட நான் இன்னொரு விஷயமும் பேசணும்.”
 
“என்னம்மா?” மீண்டும் நாற்காலியில் அமர்ந்தாள் பெண்.
 
“அந்த டாக்டர் வீட்டாளுங்களுக்கு நான் என்ன பதில் சொல்ல? அந்தப் பையனுக்கு உன்னை‌ ரொம்பப் புடிச்சிருக்கும் போல.”
 
“ஐயையோ!” பதறிய மகளை வினோதமாகப் பார்த்தார் விஷாகா.
 
“மத்தவங்களை நினைச்சு நம்ம வாழ்க்கையை நாம கெடுத்துக்கிறதுல எந்தப் பிரயோஜனமும் இல்லை மயூரி, ஆச்சி வாழ்ந்து முடிச்சவங்க.” ஆச்சியை நினைத்து தான் வருந்துவதாக அம்மா நினைக்கிறார் என்பது மயூரிக்கு புரிந்தது.
 
“உங்கப்பாவைப் பத்தி உனக்கு நான் சொல்லவே தேவையில்லை.”
 
“இல்லைம்மா… நான்…” மயூரி இப்போது தடுமாறினாள்.
 
“சொல்லு, உம்மனசுல என்ன இருக்கோ அதை நீ தாராளமாச் சொல்லு, இப்பிடிக் கேட்க எனக்கு அப்போ யாரும் இருக்கலை, அதால நான் இழந்தது போதும், நீ நல்லா இருக்கணும்.”
 
“அம்மா…” மயூரிக்கு முதலில் வார்த்தைகள் வர மறுத்தன. ஆனால் அம்மா தன் பதிலுக்குக் காத்திருப்பது புரியவும் மனதைத் திடப்படுத்திக் கொண்டாள்.
 
“அம்மா… எனக்குக் கல்யாணம் வேணாம்மா.”
 
“என்னது? கல்யாணம் வேணாமா? ஏன்? என்னாச்சு?” கேள்விகளை அடுக்கினார் அம்மா.
 
“பிடிக்கலை.”
 
“என்னப் பிடிக்கலை? இந்த டாக்டர் மாப்பிள்ளைப் பிடிக்கலைனா வேற பார்க்கலாம்.”
 
“இல்லையில்லை… இல்லை… இல்லைம்மா.” மகளின் பதட்டம் விஷாகாவிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
 
“உம்மனசுல ஏதாவது இருந்தாச் சொல்லு மயூரி, அம்மா என்னால முடிஞ்சதைக் கண்டிப்பாச் செய்றேன்.” அம்மாவின் பேச்சில் மகள் புன்னகைத்தாள்.
 
“உங்களால முடிஞ்சதா இருந்தா நானே சொல்லி இருப்பேனே!”
 
“அப்போ, உன்னோட மனசுல என்னமோ இருக்கு இல்லை?” அம்மா துருவித்துருவிக் கேட்க ஒரு கட்டத்தில் மயூரி பெருமூச்சு விட்டாள். அம்மாவின் கண்களை நேராகப் பார்த்தவள்,
 
“உங்க அண்ணன் பையனை எனக்குக் கட்டி வைக்கிறீங்களா?” என்றாள் சாதாரணமாக. விஷாகாவிற்கு தூக்கிவாரிப் போட்டது.
 
“மயூரி!”
 
“உங்களால முடியாதில்லை… அதாலதான் நான் எதுவும் பேச வேணாம்னு நினைச்சேம்மா.”
 
“இது என்ன முட்டாள்தனம் மயூரி? எந்த முகத்தை வெச்சுக்கிட்டு உன்னோட மாமிக்கிட்ட நான் மாப்பிள்ளைக் கேட்க முடியும்? நீ இதை யோசிச்சுப் பார்த்தியா?”
 
“நான் எதையும் யோசிக்கலைமா, யோசிச்சு நிதானிச்சு வர்றதுக்குப் பெயர் காதலில்லை, எனக்குப் புடிச்சிருந்துது, அவ்வளவுதான்.”
 
“மயூரி!” விஷாகா இப்போது விக்கித்துப் போனார்.
 
“ஒரு மனுஷனை மனசுல நினைச்சுக்கிட்டு என்னால இன்னொரு மனுஷனை ஏமாத்த முடியாதும்மா.”
 
“அப்போ உன்னோட வாழ்க்கை என்னாகுறது மயூரி? உன்னோட எதிர்காலம்?”
 
“ஏம்மா? எனக்கு நீங்க இல்லையா?”
 
“எத்தனை நாளைக்கு மயூரி? உனக்குன்னு ஒரு புருஷன், புள்ளைகுட்டி… இதெல்லாம் வேணாமா?”
 
“இதெல்லாம் இருந்தும் நீங்க என்னத்தைம்மாச் சாதிச்சீங்க?” அந்தக் கேள்வி விஷாகாவை சுட்டது போலும். சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.
 
“எல்லாருக்கும் என்னை மாதிரியே வாழ்க்கை அமையுங்கிறது இல்லை மயூரி, சந்தோஷமா வாழுறவங்களும் இருக்காங்க, நீ வீணாப் பிடிவாதம் பிடிக்காதே.”
 
“……………..”
 
“இந்த முட்டாள்தனத்தையெல்லாம் மூட்டைக் கட்டி வெச்சிட்டு ஒழுங்கா ஒரு…”
 
“அம்மா!” மயூரி அம்மாவைப் பாதியிலேயே நிறுத்தினாள். முழுதாக எல்லாவற்றையும் சொல்லாவிட்டால் அம்மா இந்தப் பேச்சை நிறுத்தமாட்டார் என்று புரிந்து போக மயூரி அம்மாவை ஆழ்ந்து பார்த்தாள்.
 
மகளின் பார்வை அந்தத் தாய்க்கு நல்லதாகப் படவில்லை போலும். மேனி நடுங்க அவள் வார்த்தைகளுக்காகக் காத்திருந்தார்.
மயூரி ஒரு கணம் தயங்கினாள். அதன்பின் அனைத்தையும் தன் அம்மாவிடம் மளமளவென்று ஒப்புவித்து விட்டாள்.
 
தான் செய்தது தவறு என்று இன்றுவரை அவளுக்குத் தோன்றவில்லை. இனிமேல் தோன்றப்போவதும் இல்லை. அப்படியிருக்க ஏன் மறைக்க வேண்டும்? அதுவும் அம்மாவிடம்.
 
தன் மனதில் இருந்தவை அனைத்தையும் தாயிடம் கொட்டிவிட்டு பாரம் இறங்கியவள் போல அவரையே பார்த்திருந்தாள் மகள்.
 
ஆனால் விஷாகா… ஏதோ செவிப்புலனைத் தொலைத்தவர் போல சற்று நேரம் எதுவும் பேசாமல் அப்படியே அமர்ந்திருந்தார்.
 
தான் ஏதேனும் கனவு காண்கின்றோமா என்ற சந்தேகம்தான் அவருக்கு முதலில் தோன்றியது. பேசாமல் அப்படியே அமர்ந்திருந்தார்.
 
“அம்மா!” தாயின் கையைப் பிடித்து லேசாக அசைத்தாள் மயூரி. அப்போதும் அவரிடம் அசைவில்லாமல் போக இப்போது அவரது கையைப் பலமாக அசைத்தாள் பெண்.
 
“அம்மா!” இப்போது சற்றுச் சத்தமாக மகள் அழைக்க விஷாகாவின் கண்ணிலிருந்து கண்ணீர் கரகரவென வழிந்தது.
 
“அம்மா!” மயூரி வலியோடு அம்மாவை அணைத்துக் கொள்ள குலுங்கிக் குலுங்கி அழுதார் விஷாகா. 
 
“அம்மா, என்னோட நிலையில இருந்தும் நீங்க யோசிச்சுப் பார்க்கணும்.” மயூரி சொல்ல இப்போது தன்னை அணைத்திருந்த மகளை உதறித் தள்ளினார் விஷாகா.
 
“என்னடி யோசிக்கணும்? முட்டாள் மாதிரி காரியத்தைப் பண்ணி வாழ்க்கையைத் தொலைச்சிட்டு…”
 
“இல்லைம்மா! நான் எதையும் தொலைக்கலை, ஒரு வாரந்தான்னாலும் நான் ஆசைப்பட்ட வாழ்க்கையை, ஆசைப்பட்டவனோட வாழ்ந்தேன், இது தப்பா?”
 
“தப்புத்தான்! அந்த ஒரு வாரம் மட்டுமே வாழ்க்கை ஆகிடாது மயூரி.” விஷாகா கோபத்தில் கொதித்தார்.
 
“வருஷக்கணக்குல வாழ்ந்தவங்களுக்குக் கூட இதைப்போல ஒரு நிறைவு கிடைக்காதும்மா, எனக்கு இது போதும்!”
 
“உனக்குப் போதுமா இருக்கும், ஆனா இந்த ஊருக்கு அது போதாதே! இந்த உலகத்துக்குப் போதாதே!” படபடத்தார் அன்னை.
 
“ஊரையும் உலகத்தையும் பத்தி நான் கவலைப்படலை.” அவள் பிடியில் அவள் உறுதியாக நின்றாள்.
 
“உனக்குத்தான் புத்தி இப்பிடிக் கோணலாப் போச்சுதுன்னா அந்த மடையனுக்கு எங்கப் போச்சு புத்தி? வந்தவரைக்கும் லாபம்னு நினைச்சுட்டானா?” முதல் முறையாக தன் அண்ணன் மகனைச் சாடினார் விஷாகா.
 
“அம்மா ப்ளீஸ்… அத்தான் மேல எந்தத் தப்பும் இல்லை, அவரைச் சும்மாத் திட்டாதீங்க.” 
 
“அத்தானா?!” விஷாகா மலைத்தே போனார். அந்த ஒற்றை வார்த்தையே அவன் மேல் அவளுக்கு எத்தனை கிறுக்கு என்று அவருக்குச் சொன்னது.
 
ஏனென்றால் அவர்கள் வட்டத்தில் இந்த உறவு முறை சொல்லி யாரையும் அழைப்பதில்லை. அத்தான் என்ற வார்த்தையையே அவர்கள் உபயோகிப்பது கிடையாது. 
அதற்கு மேல் விஷாகா பேசவில்லை. பெயருக்கு எதையோ கொறித்துவிட்டு இருவரும் படுக்கைக்குப் போய் விட்டார்கள்.
 
இரவு முழுவதும் உறங்காமல் கண்ணீர் வடித்தபடி இருந்த அம்மாவை அவளும் உணர்ந்தாள்தான். ஆனாலும் எதைச் சொல்லி ஆறுதல் படுத்துவது என்று புரியாததால் அமைதியாக அப்படியே படுத்திருந்தாள்.
 
ஆனால் அடுத்த நாள் காலை எழுந்த போது விஷாகா மிகவும் தெளிவாக இருந்தார். இரவு முழுவதும் கண்ணீர் சிந்தியபடி நிதானமாக சிந்தித்திருப்பார் போலும். காலையில் டீயோடு மயூரியிடம் பேச ஆரம்பித்தார்.
 
“நீ செஞ்சது சரியா, தப்பான்னு யோசிக்கிற நிலைமையில இப்போ நாம இல்லை, முடிஞ்சது முடிஞ்சதுதான்… போனது போனதுதான்.” அம்மாவின் பேச்சை மகளின் மனது ஏற்றுக்கொள்ள மறுத்தது.
 
‘எது முடிந்து போனது?! அப்படி எது என்னை விட்டுப் போய் விட்டது?! கிடைக்கவே கிடைக்காதா என்று நான் ஏங்கிய உறவு கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் நான் இருப்பது ஏன் அம்மாவிற்குப் புரியவில்லை?’
மனதுக்குள் வாதிட்டவள் மேலும் விஷாகா ஏதோ பேசவும் அதில் கவனத்தைச் செலுத்தினாள்.
 
“இப்போ என்னப் பண்ணுறதா முடிவெடுத்திருக்கே? இதுக்கு மேல உங்கிட்டக் கல்யாணம், கருமாந்திரத்தைப் பத்தியெல்லாம் பேசுறது நியாயமே இல்லை.” 
இனி நீ எடுப்பதுதான் முடிவு. அதற்குக் கட்டுப்பட்டு உன்னோடு என்னால் முடிந்த காலம் வரைக் கூட வருகிறேன் என்பது போல அமர்ந்திருந்தார் விஷாகா. 
 
மயூரி ஏற்கனவே இதைப்பற்றி மிகவும் நிதானமாகச் சிந்தித்து முடிவெடுத்திருந்தாள். ஏனென்றால் தன் வாழ்க்கையில் இனி என்ன நேர்ந்தாலும், யார் எப்படித் தூற்றினாலும் அவள் காதலுக்காக அவளால் அதைத் தாங்கிக் கொள்ள முடியும்.
 
ஆனால் அம்மா?! அவரை இனிமேலும் சங்கடப்படுத்த, துன்பப்படுத்த மயூரி விரும்பவில்லை. அம்மாவை அடக்கி ஆண்ட இருவரும் இப்போது அவர்களோடு இல்லை. 
 
இனிமேலாவது அவர் நிம்மதியாக, சுதந்திரமாக வாழட்டுமே! அசோக மாலியின் மகளாக இல்லாமல், அழககோனின் மனைவியாகிய இல்லாமல், மயூரியின் அம்மாவாக மீதமிருக்கும் வாழ்க்கையை அவர் நிறைவாக வாழட்டுமே!
 
“நாம இனி இங்க இருக்க வேணாம்மா.”
 
“இங்க இருக்க வேணாம்னா? இந்த வீட்டுலயா?” புரியாமல் கேட்டார் விஷாகா.
 
“இல்லை, இந்த ஊர்லயே இருக்க வேணாம்.”
 
“அப்போ எங்கப் போலாம்னு சொல்றே?!”
 
“தாத்தாவோட ஊருக்குப் போலாம்.”
 
“எங்க, சீகிரியக்கா?”
 
“ஆமா.”
 
“ஏன்?”
 
“எனக்கு இங்க இருக்கப் புடிக்கலை.”
 
“அதுக்காக ஏன் அவ்வளவு தூரம் போகணும்னு நினைக்கிறே?‌ இத்தனை வருஷம் இங்க வாழ்ந்துட்டு எதுக்கு திடீர்னு அங்க போகணும்னு முடிவெடுத்திருக்கே?” விஷாகாவிற்கு மகளின் போக்கு பிடிபடவில்லை.
 
“அங்க தாத்தாவோட பழைய வீடொன்னு இருக்கில்லைம்மா?”
 
“ஆமா.”
 
“அங்க போயிருக்கலாம்மா.”
 
“அப்போ உன்னோட வேலை?”
 
“தம்புள்ளை ப்ரான்ச்சுக்கு ட்ரான்ஸ்ஃபர் கேட்கலாம்னு இருக்கேன்.”
 
“ஓ…” மகள் நிறைய யோசனையின் பின்புதான் இந்த முடிவிற்கு வந்திருக்கிறாள் என்று அந்த அம்மா அந்தக் கணம் புரிந்து கொண்டார். 
ஆனாலும் ஏன் இத்தனைத் தூரம்? அந்த எண்ணம் அவர் மனதைக் குழப்பவே சட்டென்று கேட்டார் விஷாகா.
 
“அந்த வீட்டுக்கு வருண் உங்கூட வந்திருந்தானா?” தன்னைக் குறிபார்த்த அந்தக் கேள்வியில் மயூரி கொஞ்சம் நிலைகுலைந்து போனாள்.
தாய் அறியாத சூலா? அம்மாவிடம் எதையும் மறைக்க முடியாமல் அவள் தலை மேலும் கீழும் ஆடியது.
 
“ஓ…” அதற்கு மேல் விஷாகா விவாதிக்கவில்லை. மகள் சொன்ன எதையும் மறுக்கவுமில்லை. மயூரி மிக தெளிவாக முடிவுகளை ஏடுத்திருப்பது கொஞ்சம் திருப்தியாக இருந்தது அவருக்கு.
 
இன்றைய இளம் வயதினரைப் போலல்லாமல் தான் நினைத்த ஒன்றிலேயே உறுதியாக நின்று அதுவே தன் வாழ்க்கை முழுமைக்கும் போதும் என்ற அவள் உறுதி ஒரு பெண்ணாக அவருக்குப் பிடித்திருந்தது.
 
அவள் தான் ஆசைப்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொண்ட விதம் வேண்டுமானால் தவறாக இருக்கலாம். ஆனால் அந்த வாழ்க்கை தனக்கு நிலைக்காது என்று தெரிந்த போதும் மனதை மாற்றிக் கொள்ளாமல் இத்தனை உறுதியாகத் தன் முடிவில் நிற்கிறாளே!
 
“எங்கிட்டக் கொஞ்சம் பணமிருக்கு, தாத்தாவோட வீட்டைக் கொஞ்சம் புதுப்பிக்கலாம், என்னென்ன முக்கியமாத் தேவையோ அதைப் பண்ணிக்கலாம்.”
 
“ம்… அக்கம்பக்கத்துல இருக்கிறவங்க உங்கப் பொண்ணுக்கு இருபத்தி ஏழு வயசாச்சுதே, ஏன் இன்னும் கல்யாணம் பண்ணலைன்னு கேட்டா நான் என்ன சொல்றது?”
 
“எனக்குக் கல்யாணம் ஆகலைன்னு ஏம்மா சொல்லப் போறீங்க? ஆச்சுன்னு சொல்லுங்க.”
 
“புருஷன் எங்கேன்னு கேட்பாங்களே? என்ன சொல்றது?”
 
“உண்மையைச் சொல்லுங்க, ஷிப்ல வேலை பார்க்கிறாரு, வருஷத்துக்கு ஒரு தரம்தான் வீட்டுக்கு வருவார்னு சொல்லுங்க.”
 
“உம்புருஷன் வருஷத்துக்கு ஒரு தரம் உன்னைப் பார்க்க வருவாரா?” அந்தக் கேள்வியில் கேலி இருந்ததோ?! இருந்தாலும் மயூரி அதைக் கண்டுகொள்ளவில்லை.
 
“இல்லாத அந்தப் புருஷன் நம்ம வீட்டுக்குத்தான் வரணுமா? ஏன், அவரைப் பார்க்க நாம கொழும்புக்கு வரக்கூடாதா?”
 
“……………” இப்படிப் பேசும் பெண்ணிடம் என்ன சொல்வது! விஷாகா அதன்பிறகு அமைதியாகிப் போனார். 
 
தான் பெற்று வளர்த்த மகள் இப்போது தன்னை வழிநடத்தும் அளவிற்கு வளர்ந்துவிட்டாள் என்பது முதன்முதலாகப் புரிந்தது அந்தத் தாய்க்கு!