அழகியே 18

 
அழகு 18
 
“குட்மார்னிங் லேடீஸ் அன்ட் ஜென்டில்மென்! திஸ் இஸ் யுவர் கேப்டன் வருண் ஸ்பீக்கிங்…” தன் ஆண்மை நிறைந்த குரலில் அந்த உல்லாசப்பயண கப்பலைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தான் வருண்.
 
இரண்டு ஆண்டுகள் கண்மூடித் திறப்பதற்குள் கடந்து போயிருந்தன. தன் விடா முயற்சியால் முப்பத்து மூன்று வயதில் தன் இலட்சியத்தை எட்டிப்பிடித்த இளம் கேப்டன் வருண்!
 
கிட்டத்தட்ட இருபத்தைந்து நாட்கள் முழுதாகக் கப்பலில் பயணம் செய்துவிட்டு கிரீஸ் நாட்டிலிருந்து தன் தாய்நாட்டிற்குத் திரும்புகிறான் வருண்.
 
மனம் முழுவதும் எதையோ சாதித்து விட்ட உணர்வு அவனுக்குள் பொங்கிப் பெருகியது. தன் தாயால் விதை போடப்பட்டு தனக்குள் நீரூற்றி வளர்த்த விருட்சம் இன்று பூத்துக் காய்த்து அவனுக்குக் கனிகளை வாரி வழங்கிக் கொண்டிருந்தது.
 
முதன்முதலாக இந்தக் கப்பல் பயணத்தை ஆரம்பித்த போது டாமினிக்கைத்தான் முதலில் அழைத்தான் வருண். அப்போது அவன் போலாந்து நாட்டில் இருந்தான்.
 
“கேப்டன்!” உணர்ச்சி மேலிட வார்த்தைகள் வராமல் தடுமாறினான் வருண்.
 
“ஹேய் விபி! இனி என்னை கேப்டன்னு நீ கூப்பிடாதே! சாதிச்சுட்டயா!” உண்மையான அக்கறையோடு சந்தோஷத்தோடு ஆர்ப்பரித்த டாமினிக்கை பார்த்த போது வருணின் கண்கள் கலங்கிப் போயின.
 
“ஹேய் விபி…” வருணின் நிலையை உணர்ந்தவன் போல டாமினிக் அவனைச் சமாதானம் செய்தான். 
 
இதோ! இன்று அந்தக் கப்பல் பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு தாய்நாடு திரும்புகிறான் வருண். ஆனால் அவன் சந்தோஷத்தைக் கூட இருந்து கொண்டாடாமல் இலங்கைக்கு ஓடிவிட்டார் ராகினி.
 
என்றைக்கு கொழும்பில் இருந்த அவர்கள் வீடு ஆயத்தம் ஆனதோ, அதற்கு அடுத்த வாரமே ராகினி இலங்கை கிளம்பிவிட்டார்.
 
வருணால் அசையக்கூட இயலாத நேரம் அது. ஆனால் அம்மாவின் பிடிவாதத்தை அவனால் சமாளிக்க இயலவில்லை.
 
சரவணனை தொடர்பு கொண்டு அம்மாவை முழுதாக அவன் கையில் ஒப்படைத்திருந்தான்.
 
பண்டாரநாயக்கா விமான நிலையத்தைப் போய் சேருவது மட்டும்தான் ராகினியின் வேலை. மீதி அனைத்தையும் சரவணன் பார்த்துக் கொள்வான்.
 
அம்மாவிற்கு இலகுவாக இருக்க வேண்டுமே என்பதற்காக ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸில் டிக்கெட் போட்டிருந்தான் வருண். எங்கேயும் தாமதிக்காத நேரடி பயணம். 
இருந்த போதிலும் அம்மா சரவணனிடம் போய் சேரும் வரையும் இவனுக்குப் பெரும் பதைபதைப்பாகவே இருந்தது. 
 
ஆனால் அம்மா இலங்கை போன சிறிது நாட்களிலேயே அந்த வீட்டோடு ஒன்றிப் போனார். வருண் கூட ஏதோ ஓர் ஆசையில் அம்மா போகிறார், போன வேகத்திலேயே திரும்பி விடுவார் என்றுதான் நினைத்திருந்தான். 
 
ஆனால் ராகினி அவன் நினைப்பைப் பொய்யாக்கி இருந்தார். காலாகாலமாக அந்த வீட்டிலேயே வாழ்ந்தவர் போல் அங்கேயே ஒன்றிப் போனார். 
 
சொல்லப் போனால் ஆரம்பத்தில் அவருக்கு இலங்கையின் வெயில் காலங்கள் அவ்வளவாக ஒத்துக்கொள்ளவில்லை. ஆனாலும் பிடிவாதமாக சமாளித்தார்.
 
அந்த வீடு தன் கணவரின் கனவு என்பது மட்டுமே ராகினிக்கு அங்கு வந்த அனைத்து சோதனைகளையும் தாங்கப் போதுமானதாக இருந்தது.
 
அம்மா இல்லாமல் வருண் மிகவும் கஷ்டப்பட்டான். ஆனாலும் அம்மாவின் சந்தோஷம் அவனுக்கு முக்கியம் என்பதால் அவரை எந்த விதத்திலும் அவன் தொந்தரவு செய்யவில்லை.
 
அந்தப் பென்னம்பெரிய கப்பலை ஒரு கேப்டனாக தான் முதன்முறையாக இயக்கும் போது அதைப் பார்த்து மகிழ தன் தாய் இல்லையே என்று வருண் மிகவும் வருந்தினான்.
 
சௌத்தாம்ப்டன் துறைமுகத்தை வந்து சேர்ந்த பிறகும் வருணுக்கு இரண்டு நாட்கள் தலைக்கு மேல் வேலை இருந்தது. 
 
எல்லாவற்றையும் முடித்துவிட்டு வீடுவந்து சேர்ந்தவன் விச்ராந்தியாக அன்றுதான் உட்கார்ந்தான். சொல்லாமல் கொள்ளாமல் அப்பாவின் ஞாபகம் வந்தது.
 
தன்னை இந்த அந்தஸ்தில் அப்பா பார்க்கவில்லையே என்று மனம் வருந்தியது. பரவாயில்லை, குறைந்தபட்சம் அவர் ஆசைப்பட்ட படி அம்மா இப்போது அந்த வீட்டில் வசிக்கிறார்களே! அதுவே அவனுக்குப் பரம திருப்தியாக இருந்தது.
 
ராகினி அந்த வீட்டிற்குப் போனவுடனேயே விஷாகாவை தொடர்பு கொண்டார். விஷாகா குடும்பம் இப்போது கொழும்பில் இல்லை என்பது ராகினிக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது.
 
இருந்தாலும் அடுத்த மாதமே விஷாகா கொழும்பு வந்து சேர்ந்தார். தன் அண்ணாவின் அன்பு மனைவியைப் பார்ப்பதற்காக. 
 
வந்தவர் வெறும் கையோடு வரவில்லை. இதுநாள்வரைத் தங்கள் வசம் இருந்த அண்ணனின் சொத்துக்கள் அனைத்தையும் வருணின் பெயருக்கு மாற்றிக் கொண்டு வந்திருந்தார்.
 
விஷாகா வந்த போது மயூரி கூட வரவில்லை. தனியாகவே வந்திருந்தார். சொத்துக்களை விஷாகா நீட்டியபோது ராகினி அதை வாங்க மறுத்துவிட்டார். ஆனால் விஷாகா விடவில்லை.
 
“அக்கா, பாவக்கணக்கு ரொம்ப ஏறுதுக்கா, போதும்… நானும் என்னோட பொண்ணும் இனிமேலாவது நிம்மதியா மூச்சுவிடணும், கருணைக் காட்டுங்கக்கா.”
 
“உங்களுக்கு விசரே விஷாகா? இதை வாங்குறதுக்கே இவ்வளவு தூரம் நான் வந்தனான்?”
 
“இல்லைக்கா, உங்க மனசுல அந்த எண்ணம் இல்லை, எனக்கு அது நல்லாவே தெரியும்.”
 
“தெரிஞ்ச பிறகும் இதை ஏன் என்னட்ட நீட்டுறியள்? இது உங்கன்ட சகோதரம் உங்களுக்கென்டு வாங்கினது.”
 
“அதை இத்தனை நாளும் நான் அனுபவிச்சது போதும்கா.” 
ராகினி எவ்வளவோ தடுத்தும் வாதிட்டும் விஷாகா தன் பிடியிலேயே நின்றுவிட்டார். 
 
“என்னோட கடைசி காலம் வரைக்கும் என்னோட அண்ணா ஸ்தானத்துல இருந்து நீங்க எனக்கு என்ன வேணும்னாலும் குடுங்கக்கா, நான் சந்தோஷமா வாங்கிக்கிறேன், ஆனா இது உங்களுக்குச் சேர வேண்டியதுக்கா, அதை மறுக்காம வாங்கிக்கங்கக்கா!” சொல்லிவிட்டு விஷாகா கதறி அழுத போது ராகினியால் எதுவுமே பேசமுடியவில்லை.
 
அதன்பிறகு இடைப்பட்ட இந்த இரண்டு வருடங்களில் அவ்வப்போது விஷாகா கொழும்பு வருவார். வந்து இரண்டு நாட்கள் ராகினியோடு தங்கி இருப்பார். இரண்டு பேரும் இதுவரைத் தாங்கள் தவறவிட்ட காலத்தைப் பிடிக்க முயன்றார்கள்.
 
மறந்தும் மயூரி தன் மாமியைப் பார்க்க வரவில்லை. ராகினி சில சமயங்களில் மயூரி பற்றிக் கேட்பதுண்டு. ஆனால் விஷாகா எதையாவது சொல்லிச் சமாளித்து விடுவார்.
 
இங்கு நடக்கும் அனைத்தையும் மகனோடு பேசும் பொழுதுகளில் ராகினி சொல்லி விடுவார். வருண் கேட்டுக் கொள்வான். ஆனால் பதில் எதுவும் சொல்ல மாட்டான்.
 
சொத்துப் பத்திரங்களைத் திரும்பக் கொண்டு வந்து கொடுத்தார்கள் என்று சொன்ன போது மட்டும் கொஞ்சம் ஆச்சரியப்பட்டான். 
 
“விஷாகா இவ்வளவு காலமும் கொழும்புல இருந்திட்டு இப்ப திடீரென்டு ஏன் சீகிரிய போனவா என்டு எனக்கு விளங்கேயில்லை தம்பி.” ஒருநாள் இப்படிப் புலம்பினார் ராகினி.
 
“என்னையும் இந்தத் தரம் சீகிரியவுக்கு வாங்க அக்கான்னு விஷாகா கூப்பிட்டவா, ஆனா எனக்கு என்னமோ இந்த வீட்டை விட்டு நகர விருப்பமில்லாம இருக்கு தம்பி, உன்ட அப்பா என்னோடேயே இருக்கிற மாதிரி எனக்கு இருக்கு!” இன்னொரு நாள் பேச்சு இப்படிப் போனது.
 
அன்று மதியம் பகல் உணவை உண்டுவிட்டு நன்றாக உறங்கி எழுந்தான் வருண். உடம்பில் ஒரு புத்துணர்ச்சி பிறந்தது. ஃபோன் அடித்தது.
 
“யாரது? இந்நேரம் கூப்பிடுறது?” தனக்குத்தானே பேசிய படி ஃபோனை எடுத்தான். சரவணன் அழைத்துக் கொண்டிருந்தான்.
 
“ஹலோ சரவணன், சொல்லுங்க… என்ன இந்த நேரத்துல கூப்பிட்டிருக்கீங்க?”
 
“சார்! நான் மேடமை பார்த்தேன் சார்!” கண்டேன் சீதையை என்பது போல பரபரத்தான் சரவணன்.
 
“ஓ…” இப்போதும் வருண் பேசாமல் இருக்க சரவணனுக்கு கோபம் வந்தது.
 
“சும்மா பார்க்கலை சார், கையில ரெண்டு குழந்தைங்களோட பார்த்தேன்!” சரவணன் வெடித்தான். வருணின் வலது கண் மட்டும் இப்போது லேசாக இடுங்கியது.
 
“சார்! நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க சார்! எனக்கு உங்க மேல பயங்கரமா ஆத்திரம் வருது சார்!”
 
“என்னாச்சு சரவணன்?”
 
“இன்னும் என்ன சார் ஆகணும்? எத்தனைத் தடவை மேடமை பத்தி உங்கக்கிட்டப் பேசி இருப்பேன்? ஒரு நாளாவது பிடி குடுத்திருப்பீங்களா?”
 
“எதுக்கு இந்தப் பதட்டம் சரவணன்?”
 
“ஆமா சார்! பதட்டந்தான், நம்ம சார் மேடத்தை கோட்டை விட்டுட்டாங்களேங்கிற பதட்டந்தான்.” சரவணன் கோபத்தில் இரைந்தான். ஆனால் அதை வருண் கண்டுகொள்ளவில்லை.
 
“எங்க பார்த்தீங்க சரவணன்?” படு நிதானமாகக் கேட்டான் வருண்.
 
“இன்னைக்கு கனடால இருந்து வந்திருந்த ஒரு கப்பிளை சீகிரிய கூட்டிக்கிட்டுப் போனேன் சார், அங்கதான் மேடமை பார்த்தேன் சார்.” விட்டால் சரவணன் அழுது விடுவான் போலிருந்தது. 
 
“அவங்க அங்கதான் இருக்காங்கன்னு எனக்கு முன்னாடியே தெரியும் சரவணன்.”
 
“சார்!” சரவணனுக்கு தூக்கிவாரிப்போட்டது.
 
“உங்களுக்கு எப்பிடி சார் தெரியும்?”
 
“அப்பாவோட சிஸ்டர் அம்மாவை பார்க்க கொழும்புக்கு ரெண்டு மூனு தடவை வந்திருந்தாங்க.”
 
“ஓ…” இதற்கு என்ன பதில் சொல்வதென்று சரவணனுக்கு புரியவில்லை. 
 
வருண் மேல் அவனுக்கு அளவு கடந்த பாசம் உண்டு. அது ஏன், எதனால் என்பதெல்லாம் சரவணனுக்கு தெரியாது. சிலரைப் பார்த்தவுடனேயே நமக்குக் காரணம் இல்லாமல் பிடித்துப் போகும். இது அது மாதிரியான பாசம்தான்!
 
வருண் தன்னை ஒரு ட்ரைவராக நினைக்காமல் உடன்பிறப்பு போல பழகுகிறார். அதே போல அவர் அம்மாவும் தன்னிடம் எல்லாம் சொல்வார் என்று சரவணன் எதிர்பார்க்கவில்லை.
 
ராகினியின் அனைத்துத் தேவைகளையும் சரவணன்தான் கவனித்துக் கொள்கிறான். ஆனால் விஷாகா அங்கு வந்து போனது அவனுக்குத் தெரியாது.
 
ராகினி அதை அவனிடம் சொல்ல வேண்டும் என்று சரவணன் எதிர்பார்க்கவில்லை. ஆனால் தனக்குத் தெரிந்த விஷயத்தை ஏன் வருண் தன்னிடம் சொல்லவில்லை என்று சரவணனுக்கு இப்போது கோபம் வந்தது.
 
“எங்கிட்ட ஏன் சார் இதை நீங்க முன்னமே சொல்லலை?”
 
“எதுக்கு சரவணன்?”
 
“நான் போய் மேடமை பார்த்திருப்பேன் இல்லை?”
 
“பார்த்து?”
 
“போதும் நிறுத்துங்க சார்! என்ன எதுவுமே தெரியாத மாதிரியே பேசுறீங்க?” சரவணனின் குரல் இப்போது கோபத்தில் உயர்ந்திருந்தது.
 
இதுவரைக் காலம் சரவணன் தன்னிடம் இப்படியெல்லாம் பேசியே இராததால் வருணுக்கு ஆச்சரியமாக இருந்தது.
 
“என்னாச்சு சரவணன்?!”
 
“பின்ன என்ன சார்? மேடமுக்கு உங்களைப் பிடிக்கும்னு உங்களுக்குத் தெரியாது? எவ்வளவு ஆசையா உங்களை அன்னைக்கு வெளியே கூட்டிக்கிட்டுப் போனாங்க?”
 
“அதுக்கு?”
 
“உங்களுக்கும் அவங்களைப் புடிக்கும் சார், நீங்க நடிக்கிறீங்க.”
 
“……………” 
 
“நீங்க என்னை இவ்வளவு காலமும் வெறும் ஒரு ட்ரைவரா பார்த்திருக்கலாம், ஆனா நான் அப்பிடியில்லை சார்.” சரவணன் கவலையோடு சொன்னான்.
 
“இது அநியாயமான பேச்சுன்னு உங்களுக்கே தெரியும் சரவணன்.”
 
“பின்ன எதுக்கு சார் எங்கிட்ட இருந்து மேடமை பத்தின விஷயத்தை மறைச்சீங்க?”
 
“நமக்கு அது தேவையில்லை சரவணன்.”
 
“என்ன சார் தேவையில்லை? என்ன தேவையில்லை? மேடம் உங்களுக்குத் தேவையில்லையா? உங்க மனசைத் தொட்டுச் சொல்லுங்க?”
 
“…………….”
 
“பேச மாட்டீங்க, இப்ப மட்டும் பேச மாட்டீங்க, ஆனா இனி பேசி என்ன பிரயோஜனம் சார்? அதான் கைல ரெண்டு குழந்தைங்களோட நிக்குறாங்களே!”
வாய்ப்பில்லை சரவணன், நீங்க தப்பான எதையோ பார்த்திருக்கீங்க.”
 
“சார்! நீங்க என்ன விளையாடுறீங்களா? ரெண்டு குழந்தையையும் நர்சரில கொண்டு விட்டுட்டு வந்த மேடமை நானே எங்கண்ணால பார்த்தேன்.”
 
“வேற யாரோட குழந்தைங்களா இருக்கும் சரவணன்.”
 
“நானே மேடம்கிட்ட கேட்டேன் சார்.”
 
“என்ன சொன்னா?” வருணுக்கு இப்போது லேசாகத் திக்கென்றது.
 
“முதல்ல பேசவே தயங்கினாங்க… அப்புறமா என்ன நினைச்சாங்களோ, என்னோட குழந்தைங்கதான் சரவணன்னு சொன்னாங்க சார்.”
 
“அப்பிடியா சொன்னா?!”
 
“ஆமா சார், எனக்கு அந்த நிமிஷமே எல்லாம் வெறுத்துப் போச்சு! என்ன உலகம் சார் இது?”
 
“குழந்தைங்களை நீங்க பார்த்தீங்களா சரவணன்?”
 
“தூரத்துல பார்த்தேன் சார், கார்ல கஸ்டமர் இருந்ததால என்னால சட்டுன்னு ஒன்னும் பண்ண முடியலை, அவங்கக்கிட்ட பர்மிஷன் வாங்கிட்டுப் போறதுக்குள்ள மேடம் பசங்களை நர்சரியில விட்டுட்டு வந்துட்டாங்க.”
 
“ம்…”
 
“எனக்கும் மேடத்தோட பசங்களைப் பார்க்க ஆசையா இருந்துச்சு, ஆனா எந்த உரிமையில நான் அவங்களைப் பார்க்கிறது?” 
 
“சரவணன்!”
 
“சொல்லுங்க சார்.”
 
“இப்போ எங்க இருக்கீங்க?”
 
“சீகிரியலதான் சார்.”
 
“குட், நாளைக்கு?”
 
“தெரியலை சார், கஸ்டமர் நிற்கச் சொன்னா இங்கேயே இருப்பேன், இல்லைன்னாக் கிளம்பணும்.”
 
“அவங்க அவசரமாக் கிளம்பணும்னா வேற கார் அரேஞ்ச் பண்ணிக் குடுங்க, நான் சொல்லுற வரைக்கும் நீங்க கொழும்புக்கு போக வேணாம்.” 
 
“ஏன் சார்?”
 
“காரணமாத்தான், நான் சொல்றதைச் செய்யுங்க.”
 
“சரி சார்.”
 
“நான் அப்புறமாக் கூப்பிடுறேன்.”
 
“சரி சார்.” சரவணன் ஃபோனை வைத்துவிட்டான். 
 
வருண் அமைதியாக சோஃபாவில் சாய்ந்து உட்கார்ந்தான். சரவணன் அளவுக்கு அவன் பதட்டப்படவில்லை. ஏனென்றால் அவனுக்கு நிச்சயமாகத் தெரியும், அது அவள் குழந்தைகள் அல்ல!
 
அது அவளால் முடியாத காரியம். சரவணன் உண்மையில் அவளைக் குழந்தைகளோடு பார்த்திருக்கலாம். ஆனால், அவை நிச்சயமாக அவள் சுமந்து பெற்ற குழந்கைகளாக இருக்காது.
 
எந்த தைரியத்தில் அவன் மனம் அவனுக்கு இப்படியொரு உறுதி மொழியைக் கொடுக்கிறது என்று அவனுக்கே தெரியாது. 
 
இருந்த போதிலும் தன் மனம் சொன்னதை வருண் உறுதியாக நம்பினான். அம்மாவும் அடிக்கடி இப்போதெல்லாம் இலங்கைக்கு வரச்சொல்லி அழைப்பதால் எதுவோ உந்த சட்டென்று ஒரு விமான டிக்கெட்டை முன்பதிவு செய்தான்.
 
மீண்டும் ஏதோ தோன்ற சரவணனை திரும்ப அழைத்தான். இவன் அழைப்பை எதிர்பார்த்திருந்தான் போலும். அவசரமாக இணைப்பில் இணைந்தான்.
 
“சொல்லுங்க சார்.”
 
“சரவணன் இன்னைக்கு மேடமை பார்த்த அதே இடத்துக்கு, அதே டைமுக்கு நாளைக்கும் நீங்க போங்க.”
 
“சரி சார்.” சரவணன் லேசாகக் குழம்பினான்.
 
“அதே குழந்தைகங்களோட திரும்பவும் மேடம் வந்தா…”
 
“போய் பேசட்டுமா சார்?” முந்திக்கொண்டு கேட்டான் சரவணன்.
 
“இல்லை… வேணாம், அந்தக் குழந்தைங்க யாருன்னு விசாரிங்க.”
 
“சார்!” சரவணனுக்கு ஒன்றுமே புரியவில்லை. எதற்காக இப்போது இந்த பிரேத பரிசோதனை?! எல்லாவற்றையும் கை நழுவ விட்டுவிட்டு இப்போது எதைப்பிடிக்க இந்த மனிதர் முயற்சிக்கிறார்?!
 
“இதால யாருக்கு என்ன லாபம் சார்? போன காலத்தைத் திரும்பப் பிடிக்கவா முடியும்?”
 
“சொன்னதைச் செய்யுங்க சரவணன்.” அத்தோடு வருண் பேச்சை முடித்துக் கொண்டான். 
 
நிதானமாக அன்றைய பொழுது அவனுக்குக் கழிந்தது. நீண்ட நாட்களாகப் பார்க்க வேண்டும் என்று அவன் நினைத்திருந்தேன் ஒரு திரைப்படத்தை அன்று பார்த்து முடித்தான்.
 
அடுத்தநாள் அவனுக்கு அத்தனை நல்லதாக விடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எப்போது வருணுக்கு விடியும் என்று காத்திருந்து சரவணன் அழைத்தான்.
 
“சொல்லுங்க சரவணன்.”
 
“சார்! மேடமை பார்த்தேன் சார்.”
 
“அதே ப்ளேஸ்லயா?”
 
“ஆமா சார்.”
 
“பேபீஸ்?”
 
“கூடவே வந்திருந்தாங்க.”
 
“ம்…”
 
“அவங்களோடதுதானாம் சார்! நான் நல்லா விசாரிச்சேன்.”
 
“எப்பிடி சரவணன்? சான்ஸே இல்லையே? ரெண்டு வருஷத்துல ரெண்டு குழந்தைங்களா?” வருணுக்கு சிரிப்பு வந்தது.
 
“ட்வின்ஸாம் சார், ஒரு பையன், ஒரு பொண்ணு.” வருணின் சிரிப்பு இப்போது உதட்டிலேயே உறைந்து போனது.
 
“ஓ…” வாய் பேசினாலும் மனது பின்னோக்கி ஓடியது. இடைப்பட்ட இந்த இரண்டு வருட காலத்தில் அவன் மறந்து போன அழககோனின் மகள் இப்போது ஞாபகம் வந்தாள்.
சாத்தியமா?! இது உண்மையிலேயே சாத்தியமா?! அந்த ஓர் நாள் இரவு இது சாத்தியமாகப் போதுமானதாக இருந்ததா?!
 
சிந்தனைகள், சந்தேகங்கள் என பல தோன்றிய போதும் அவள் இன்னொருவனைத் திருமணம் செய்திருப்பாள் என்ற எண்ணம் மட்டும் வருணுக்கு தோன்றவே இல்லை.
 
அவளுக்குக் குழந்தைகள் இருந்தால் அது நிச்சயமாக அவனுடையதுதான். அதில் எந்த சந்தேகமும் அவனுக்கு இல்லை.
 
“சரவணன்!”
 
“சொல்லுங்க சார்.”
 
“நீங்க… பிள்ளைங்களோட பர்த் செட்டிஃபிகேட்டை எங்க எடுக்கணுமோ அங்க எடுத்துப் பாருங்க, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை.”
 
“சார்! நீங்க…” சரவணன் வெருண்டு போனான். ஆனால் வருணின் குரல் எப்போதும் போல உறுதியாக வந்தது.
 
“அந்தக் குழந்தைங்க ரெண்டும் அவளுக்கே அவளுக்குன்னு பொறந்ததா இருந்தா… நிச்சயமா பர்த் செட்டிஃபிகேட்ல என்னோட பெயர் இருக்கும்.”
 
“சார்! நீங்க என்ன… சொல்றீங்க சார்!” சரவணனின் குரல் அங்கே கலங்குவது இங்கே வருணுக்கு புரிந்தது.
 
“சொன்னதைச் செய்யுங்க சரவணன்.” மீண்டும் ஆணைப் பிறந்தது.
 
அடுத்து வந்த இரண்டு மூன்று மணித்தியாலங்களில் சரவணன் தீயாக வேலை செய்தான். ஆனால் கொண்டு வந்த சேதி அத்தனை உவப்பானதாக இருக்கவில்லை. 
 
“சார்! பர்த் செட்டிஃபிகேட்ல அம்மாவோட பெயரா மேடம் பெயர்தான் இருக்கு.”
 
“ம்…”
 
“ஆனா… அப்பா பெயர்…”
 
“பரவாயில்ல… சொல்லுங்க சரவணன்.” உள்ளம் அடித்துக் கொண்டாலும் சரவணனை ஊக்கினான் வருண்.
 
“எதுவுமே இல்லை சார்.”
 
“வாட்?!” 
 
“ஆமா சார்… உங்களுக்கு வேணும்னா ஒரு ஃபோட்டோ எடுத்து அனுப்பட்டுமா?”
 
“உடனே அனுப்புங்க.” வருண் கட்டளையிட அடுத்த நொடி ஃபோட்டோ வந்தது. வருண் அந்தப் பத்திரத்தை ஆராய்ந்தான். சரவணன் சொன்னது சரியாக இருந்தது.
 
‘இத்தனைத் தூரமா இலங்கை முன்னேறிவிட்டது?!’
பிள்ளைகளின் பிறந்த தேதியைப் பார்த்தான். அவன் கணக்குச் சரியென்று பத்திரம் அடித்துச் சொன்னது. உடம்பில் ஓர் சிலிர்ப்பு ஓட தனது ஆடைகள் அனைத்தையும் அள்ளிக் கொண்டு பயணத்திற்கு ஏற்பாடு பண்ணினான் வருண்.
 
முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டை அன்றைக்கு இரவே புறப்படுவதற்காக உறுதிப்படுத்தினான்.
 
அம்மாவிற்கும் ஓர் அவசர‌ தகவல் பறந்தது. அவன் வருகையை ராகினி ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தாரோ இல்லையோ! சரவணன் ஒவ்வொரு நிமிடத்தையும் எண்ணியபடியே இருந்தான்!