அழகியே 19

அழகு 19
 
அடுத்த நாள் மாலை ஆறு மணி போல ஸ்ரீ லங்கா வந்து சேர்ந்து விட்டான் வருண். சரவணன் ஏர்போர்ட்டிற்கு வந்திருந்தான்.
 
“அவங்கப்பன் எங்க சரவணன்?” எடுத்த எடுப்பிலேயே வருண் கேட்ட முதல் கேள்வி இதுதான்.
 
“யாரு சார்? அழககோனா?”
 
“ம்…” உறுமலாக வந்தது பதில்.
 
“அவரைப் பத்தி எதுவுமே தெரியலை சார்.”
 
“சீகிரியலதான் இருக்கானா?”
 
“இல்லை சார், விசாரிச்ச வரைக்கும் இங்க அம்மாவும் பொண்ணும் மட்டுந்தான் இருக்கிறதாச் சொல்றாங்க.”
 
“நல்லா விசாரிச்சீங்களா?”
 
“ஆமா சார்… ஆனா…” சரவணன் மென்று விழுங்கினான்.
 
“சொல்லுங்க, எதுக்குத் தயங்குறீங்க சரவணன்?”
 
“மேடமோட வீட்டுக்காரர் எங்கன்னு அதே தெருவுல இருக்கிற ஒரு அம்மாக்கிட்டக் கேட்டேன்.”
 
“ம்…”
 
“அவங்க என்ன சொல்றாங்கன்னா…”
 
“சொல்லுங்க.”
 
“ஷிப்ல வேலை செய்யுறதா…” எப்படி சொல்வதென்று சரவணனுக்கு புரியவில்லை, ஆனாலும் சொன்னான்.
 
“ஓ… அப்பிடி சொல்லி இருக்காங்களாமா?” 
 
“ம்…” வெறும் ஒற்றை எழுத்தோடு நிறுத்திக் கொண்டான் சரவணன். 
 
‘உனக்கும் அந்தப் பெண்ணிற்கும் இடையில் குழந்தை உருவாகும் அளவிற்கு உறவு இருந்ததா?’ என்று ஏப்படி கேட்க முடியும்?!
 
ஆனால் சரவணன் கேட்க தயங்குவதை வருண் புரிந்து கொண்டான். இயல்பாக அவனே சந்தேகத்தைத் தீர்த்தான்.
 
“சான்ஸ் இருக்கு சரவணன்.”
 
“சார்!” சரவணனின் கைகளில் கார் தடுமாற சட்டென்று அதைப் பாதையின் ஓரமாக நிறுத்தினான் சரவணன். வாகன நெரிசல் அதிகமில்லாத பகுதி என்பதால் அன்றைக்கு இருவரும் தப்பினார்கள்.
 
சரவணனின் பார்வை வருணை குற்றம் சாட்டியது. தங்கள் அந்தரங்கத்தை அவனிடம் கூற முடியாமல் வருண் அமைதி காத்தான்.
 
வீடு வந்த சேர்ந்த போது இரவாகிப் போனது. ராகினி மகனின் வருகைக்காகக் காத்திருந்தார். வீடு முழுக்க சமையல் வாசனை கமகமத்தது.
 
முதல் முறை அந்த வீட்டிற்குள் நுழைந்த அனுபவத்தை இப்போது நினைத்துப் பார்த்தான் வருண்.
அன்றைக்கு நடந்த சம்பவங்கள் அந்தந்த இடத்தைப் பார்க்கும் போது ஞாபகம் வந்தது.
 
‘இந்த இடத்தில் நின்று கொண்டுதானே அந்த அம்மா அன்று என்னை அவ்வளவு கேவலமாகப் பேசியது? இன்றைக்கு அந்த அம்மா எங்கே?!’ வாழ்க்கையின் விந்தையை நிலையின்மையை நினைத்துப் பார்த்தான் வருண்.
 
வீட்டை ஒரு முறை மகனுக்குச் சுற்றிக் காண்பித்தார் ராகினி. எல்லா இடங்களையும் பார்த்து முடித்த மகனின் தோளில் சாய்ந்து ஓவென்று கதறி அழுதார்.
 
வருண் அம்மாவின் தலையைத் தடவிக் கொடுத்தான். அவர் மனதில் இருந்த வேதனையைக் கண்ணீரால் கரைத்துக் கொள்கிறார். ஆனால் அவனுக்கு அது கூட இயலாதே!
 
“வருண்!”
 
“என்ன அம்மா?”
 
“அப்பா ஆசைப்பட்ட மாதிரி அவரால இந்த வீட்டுல புள்ளை குட்டின்னு வாழ முடியேலை, ஆனா நீயாவது அப்பிடி இந்த வீட்டுல வாழ வேணும் ராசா.”
 
“ம்…” 
 
“அம்மா அதை இந்தக் கண்ணால பார்த்து சந்தோஷப் படவேணும், சரியே?” தேம்பல்களுக்கு நடுவே கேட்ட தாய்க்கு சம்மதமாகத் தலையை ஆட்டினான் வருண். 
 
அடுத்த நாள் காலையிலேயே வந்துவிடும் படி சரவணனை பணித்துவிட்டு உள்ளே வந்த மகனை ஆச்சரியமாகப் பார்த்தார் அன்னை.
 
“எங்க போகப் போறாய் தம்பி? அதுவும் நாளைக்கே? அப்பிடி இங்க உனக்கு யாரைத் தெரியும்?!”
 
“போறதுக்கு முன்னாலேயே இப்பிடி கேள்வி கேட்டாப் போற காரியம் என்னத்துக்கு ஆகும்?” கேலி போல அம்மாவிடம் கேட்டுவிட்டு தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் போய்விட்டான் வருண்.
 
ஆனால் அடுத்த நாள் காலையிலேயே திட்டமிட்டபடி பயணத்தைத் தொடங்கி விட்டான்.
 
சரவணன் காலையிலேயே காரை எடுத்துக்கொண்டு வந்துவிட்டான்.
 
ராகினியும் அதற்கு மேல் மகனிடம் எதையும் கேட்டுத் துளைக்கவில்லை. அமைதியாக வழியனுப்பி வைத்தார்.
வருணும் சரவணனும் சீகிரிய வந்து சேர்ந்த போது நண்பகல் பன்னிரெண்டு ஆகி இருந்தது.
 
நேராக மயூரியின் வீட்டிற்கு முன்பாக காரை நிறுத்தினான் சரவணன்.
 
“இந்த வீடா?!” ஆச்சரியமாகக் கேட்ட வருணை திரும்பிப் பார்த்தான்
சரவணன்.
 
“ஆமா சார்.”
 
“ஷ்யூரா தெரியுமா சரவணன்?”
 
“ஆமா சார், ஏன் சார் இப்பிடி கேட்குறீங்க?” ஆச்சரியமாகக் கேட்டான் சரவணன்.
 
“இந்த வீட்டுக்கு நான் முன்னாடியே வந்திருக்கேன் சரவணன்!”
 
“அப்பிடியா?!” சரவணனுக்கு இந்தத் தகவல் அதிசயமாக இருந்தது. ஆனால் ‘எப்போது?’ என்று மட்டும் கேட்கவில்லை.
 
வருண் காரை விட்டிறங்கி அந்த வீட்டைக் கொஞ்ச நேரம் பார்த்தபடி நின்றிருந்தான். அன்று அவர்கள் இருவரும் வந்து சிரம பரிகாரம் செய்த அதே வீடு!
 
‘ஆனால் அன்றைக்குத் தான் கேட்ட போது தெரிந்தவர்கள் வீடு என்று சொன்னாளே!’ யோசனையோடு நின்றிருந்தவனை உலுக்கினான் சரவணன்.
 
“சார்…” சரவணன் கண்ணைக் காட்ட திரும்பிப் பார்த்தான் வருண். ஆவலே வடிவாக வந்து கொண்டிருந்தார் விஷாகா.
 
ஆனால்… இவனைப் பார்த்த மாத்திரத்தில் அவரின் முகம் உணர்ச்சிகளைத் துடைத்துத் தூர எறிந்திருந்தது.
 
‘வேறு யாரையோ எதிர்பார்த்து வந்திருப்பாராக இருக்கும்!’
என்றைக்காவது ஒரு நாள் தன் கண்களால் தன் அண்ணன் மகனைப் பார்த்துவிட மாட்டோமா என்று ஒரு காலத்தில் ஏங்கிய பெண்மணி அவர்.
 
ஆனால் இன்று அதே அண்ணன் மகன் தன் வாசலில் வந்து நிற்கும் போது… அவனை மூன்றாவது மனிதனைப் பார்ப்பது போல பார்த்தார்.
 
‘வா…’ என்று ஒரு வார்த்தை அழைக்கவில்லை. அந்தக் கண்களில் கனிவும் இல்லை. உதட்டில் புன்னகையும் இல்லை.
 
“அம்மா… சார்…” சரவணன்தான் பேச்சை ஆரம்பித்தான். ஆனால் அவனால் கூட முழுதாகப் பேச முடியவில்லை.
 
“இப்ப எதுக்கு உங்க சார் எங்களைத் தேடி வந்திருக்கார்?” இளக்காரமாக வந்தது கேள்வி.
 
“இது நியாயமில்லை அம்மா! எதிரியா இருந்தாலும் வான்னு ஒரு வார்த்தை அழைக்கிறதுதான் நம்ம மரியாதை.” பரிவாகச் சொன்னான் சரவணன்.
 
“சரவணா! நியாய அநியாயம் பார்க்கிற நிலையில நான் இப்போ இல்லை, அதுவும் இந்தா நிக்குற மனுஷன் விஷயத்துல.” வருணை அவர் கண்கள் சுட்டிக் காட்டியது.
சரவணனை ஏற்கனவே தெரியும் என்பதால் இயல்பாகப் பேசினார் விஷாகா.
 
“வேணாம்மா, வார்த்தைகளை விடாதீங்க, சொந்தம் எப்பவும் விட்டு…” தொடர்ந்து பேசப்போன சரவணனின் கையைப் பிடித்துத் தடுத்தான் வருண்.
 
‘நான் பார்த்துக் கொள்கிறேன், நீ அமைதியாக இரு!’ என்பது போல இருந்தது அந்தத் தொடுகை. சரவணனுக்கு விஷாகாவை முதல் நாள் பார்த்த ஞாபகம் வந்தது.
 
அன்றைக்கும் இப்படித்தானே நடந்தது. வருணுக்கு சிங்களம் புரியுமோ புரியாதோ என்கின்ற சந்தேகத்தில் அன்றைக்கும்‌ சரவணன்தானே முந்திக்கொண்டு பேசினான்!
 
“உங்க பொண்ணு எங்க?” நிதானமாகக் கேட்டான் வருண். அந்த அளவுக்கு மீறிய நிதானத்தில் அமைதியே உருவான விஷாகாவிற்கே கோபம் வந்தது.
 
“ஏன்? எதுக்குப்பா நீ என்னோட பொண்ணைத் தேடுறே? உனக்குத்தான் காரியம் ஆச்சில்லை? அதுக்கப்புறம் உனக்கெதுக்கு எம்பொண்ணு?” கோபமாக விஷாகா பேசிக்கொண்டிருக்கும் போதே வாசலில் ஹார்ன் சத்தம் கேட்டது.
 
அந்த ஒலி கேட்ட மாத்திரத்தில் விஷாகாவின் முகம் மலர்ந்து போனது. வாசலில் நின்றிருந்த இரு விருந்தினரையும் கண்டு கொள்ளாமல் வெளியே ஓடினார்.
 
பெரிதாக இருந்த அந்த கேட்டை விஷாகா திறந்துவிட அந்த ப்ளாக் ஆடி உள்ளே நுழைந்தது. நுழைந்த மாத்திரத்தில் வாசலில் நின்றிருந்த மனிதர்களைப் பார்த்த அந்த இயந்திரம் தன் வேகத்தை ஒரு சில நொடிகள் குறைத்துக் கொண்டது.
 
அந்த வேகக்குறைப்பு பொய்யோ எனும் வகையில் மீண்டும் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு செம்மண் பாதையில் ராஜ பவனி வந்தது.
 
காரிலிருந்து இறங்கிய மயூரி தான் அணிந்திருந்த சன் கிளாஸை கழட்டி உள்ளே வைத்தாள். காரின் பின் சீட்டில் இரண்டு குழந்தைகளுக்கான கார் ஸீட்டுகள் இருக்க அதில் அழகே உருவாக அமர்ந்திருந்தன இரண்டு ஒரு வயது குழந்தைகள்.
 
காரின் பின் இடப்பக்க கதவைத் திறந்த விஷாகா அங்கே அமர்ந்திருந்த பெண் குழந்தையை ஆவலே வடிவாகத் தூக்கிக் கொண்டார்.
 
அடுத்த பக்கம் இருந்த ஆண் குழந்தையை மயூரி தூக்கிக் கொள்ள இருவரும் வீட்டை நோக்கி நடந்து வந்தார்கள்.
 
விஷாகாவின் நடையில் லேசான தடுமாற்றம் இருந்தது. ஆனால் மயூரியின் உடல் மொழியில் எந்த மாற்றமும் இல்லை.
 
வருண் நடந்து கொண்டிருக்கும் அனைத்தையும் அமைதியாகப் பார்த்தபடியே இருந்தான். ஆனால் சரவணனின் இதயம் அத்தனை உறுதியானது இல்லைப் போலும்! வெலவெலத்துப் போனான்.
 
“ஹலோ அத்தான்! எப்பிடி இருக்கீங்க?” அழகான புன்முறுவலோடு பெண் கேட்க வருணின் இதழோரம் வசீகரமான ஒரு குறும்புப் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.
 
“சரவணன், என்னைப் பார்க்க நீங்க தனியாவே வரலாம், அத்தானோட வந்தாத்தான் என்னைப் பார்க்க முடியும்னு உங்களுக்கு யாரு சொன்னது?” மயூரி கேலியாகக் கேட்டுக் கொண்டிருக்க இப்போது வருணின் பார்வை குழந்தைகளிடம் தாவி இருந்தது.
 
ஆணும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள். கொழுகொழுவென்று பார்க்க கொள்ளை அழகாக இருந்தார்கள். 
 
‘ஒரு வயது ஆகியிருக்குமா? இருக்கும், இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும்.’
 
“உள்ள வாங்க அத்தான்.” இயல்பாக அழைத்தவள் அவர்களை உள்ளே அழைத்துச் சென்றாள். விஷாகா சட்டென்று அவர் கையிலிருந்த குழந்தையோடு உள்ளே போய்விட்டார்.
 
“உட்காருங்க, இதோ வந்தர்றேன்.” அவர்களிடம் சொல்லிவிட்டு குழந்தையோடு உள்ளே போனவள் ஐந்து நிமிடங்களில் மீண்டும் வெளியே வந்தாள்.
 
“சொல்லுங்க அத்தான், எப்போ ஸ்ரீ லங்கா வந்தீங்க?” ஏதோ தன்னோடு நெடு நாட்களாகப் பழகிய நண்பரிடம் பேசுவது போல இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தாள் மயூரி.
 
வருணுக்கும் அங்கே நடக்கும் நாடகம் சுவாரஸ்யமாக இருந்திருக்கும் போலும். அமைதியாக இருந்தான். ஆனால் சரவணனின் மண்டை வெடித்தது!
 
“வேலை என்ன ஆச்சு?” இது வருண்.
 
“இங்கேயே ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டேன் அத்தான்.”
 
“ஓ… இந்த வீடு?”
 
“எங்க தாத்தாவோ…” வாக்கியத்தை ஆரம்பித்தவள் அதன் அபத்தம் புரிந்து சட்டென்று நிறுத்தினாள்.
 
“தாத்தாவோடது.” அவள் தாத்தா என்றால் அவர் அவனுக்கும் தாத்தாதானே!
 
“சரவணன், என்னோட திங்ஸ்ஸ இங்கக் கொண்டு வந்து வைங்க.” சரவணன் அந்த உத்தரவில் சட்டென்று எழுந்தான்.
 
“ஐயோ அத்தான்! இங்க இருக்கிறது ரெண்டு ரூம்ஸ்தான்.” மயூரி சட்டென்று சொன்னாள்.
 
“முப்பது வருஷம் எங்க வீட்டுல வாழ்ந்திருக்கீங்க, ஒரு மூனு நாள் உன்னோட வீட்டுல எனக்கு இடம் குடுக்க மாட்டியா என்ன?”
 
“தாத்தா வீடுன்னா இது உங்க வீடும்தானே.” அவள் குரல் லேசாக இறங்கியது.
 
“நீ விரட்டுறதைப் பார்த்தா அப்பிடித் தோணலையே.”
 
“உங்களுக்கு இங்க வசதிப்படாது அத்தான்.”
 
“பரவாயில்லை, சமாளிச்சுக்கிறேன்… சரவணன் காரை எடுங்க.” அவன் அத்தோடு எழுந்து கொண்டான். 
வருணின் பையை உள்ளே கொண்டு வந்து வைத்த சரவணன் சட்டென்று காரை ஸ்டார்ட் செய்ய இவன் போய் ஏறிக்கொண்டான். கார் போய்விட்டது.
 
“என்ன நடக்குது மயூரி இங்க?” இவர்கள் போகும் வரைக் காத்திருந்த விஷாகா வெளியே வந்தார்.
 
“இவங்க எப்போம்மா வந்தாங்க?”
 
“ஏன்? அவன் வர்றது உனக்குத் தெரியாதா?”
 
“தெரிஞ்சிருந்தா உங்கக்கிட்ட சொல்லாம இருந்திருப்பேனா?”
 
“ஆமாமா, நீ எங்கிட்ட எல்லாத்தையுமே சொல்லிட்டுப் பண்ணுற ஆள்தான்.” விஷாகா பேச்சால் மயூரியை குத்த ஒரு பெருமூச்சோடு உள்ளே போய் விட்டாள் மயூரி.
 
***
 
சரவணன் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். வருண் ஏதோ தீவிர சிந்தனையில் மூழ்கி இருந்தான். 
 
“சார்.”
 
“சொல்லுங்க சரவணன்.” சிந்தனை கலைய திரும்பினான் வருண்.
 
“எங்கே போறோம்?”
 
“பசிக்குது, முதல்ல ஒரு நல்ல ஹோட்டல்ல காரை நிறுத்துங்க சாப்பிடலாம்.”
 
“ஓகே சார்.” சரவணன் காரை ஓர் உணவகத்தின் முன் நிறுத்த இருவரும் போய் உண்டு முடித்தார்கள்.
 
“எனக்குக் கொஞ்சம் தனியா இருக்கணும் போல இருக்கு சரவணன், காரை அந்த ராக் இருக்கிற இடத்துக்கு ஓட்டுங்க.”
 
“சரிங்க சார்.” 
கார் சீகிரிய குன்று இருந்த இடத்திற்கு அருகில் வந்து நின்றது. வருண் இறங்கிக் கொண்டான். 
 
“ரொம்ப தூரம் போயிடாதீங்க சரவணன்.”
 
“ஓகே சார்.”
 
“எனக்கு அந்த வீட்டுல தங்க இடம் கிடைச்சதே பெரிய விஷயம், இதுல உங்களை நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது.” வருண் லேசாகப் புன்னகைக்க சரவணன் முகத்தில்
கவலைத் தோன்றியது.
 
“மேடம் ரொம்ப அழுத்தமா இருந்த மாதிரி எனக்குத் தோணிச்சுது சார்.”
 
“…………” பதிலேதும் சொல்லாமல் இப்போதும் வருண் சிரித்தான்.
 
“பேசாம நீங்களும் ஹோட்டல்ல தங்கலாமே சார்? இங்க நிறைய ஸ்டார் ஹோட்டல் இருக்கு.”
 
“இல்லை சரவணன், நீங்க ஹோட்டல்ல தங்குங்க, அம்மா கூப்பிட்டா ஆன்ஸர் பண்ணாதீங்க, நான் பேசிக்கிறேன்.”
 
“ஓகே சார்.” 
அதற்கு மேல் அங்கே நிற்காமல் வருண் கிளம்பி விட்டான். பொடி நடையாக அந்த நீளமான பாதையில் குன்றை நோக்கி நடந்து போனான்.
அன்றைக்கு அவளோடு இந்த இடத்திற்கு வந்தது ஞாபகம் வந்தது.
 
கூடவே அன்றைய இரவு, குழந்தைகளின் முகம் என ஏதேதோ நினைவு வந்தது.
 
மலை ஏறினால் மன நிம்மதி கிடைக்கும் என்று சொல்வார்களல்லவா?! வருணுக்கும் அப்படித்தான் தோன்றி இருக்கும் போலும்.
 
உயரமான அந்தக் குன்றில் ஏறாமல் பக்கவாட்டில் இருந்த சிறிய குன்றொன்றில் ஏறி அமர்ந்து கொண்டான். ஜன நடமாட்டம் அவ்வளவு அதிகமாக இருக்கவில்லை.
 
மூன்று மணி வெயில் உடம்பில் உறைக்காத வண்ணம் சூழ இருந்த அடர்ந்த மரங்கள் குடை விரித்திருந்தன. குன்றின் மேல் தலைசாய்த்து கண்மூடினான் வருண்.
 
மூடிய கண்களுக்குள் ப்ரதாயினி வந்தாள். அன்று முதன்முதலாகப் பார்த்த அதே பெண். எந்த மாற்றமும் தெரியவில்லை. அப்படியேதான் இப்போதும் இருக்கிறாள்.
 
ஆனால் கொஞ்சம் அழுத்தம் கூடி இருக்கிறது. இருபத்தி ஒன்பது வயதில் இத்தனை அழுத்தம்… கொஞ்சம் அதிகம்தான்.
 
தன்னை காரில் இருக்கும் போதே அவள் பார்த்திருப்பாள். இருந்தும், எத்தனை அவசரமாகத் தன் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டாள்!
 
தன்னைப் பார்த்ததும் அவள் கோபப்படுவாள் என்று வருண் நினைத்திருக்கவில்லை. அவள் குணம் என்னவென்று அவனுக்கு ஓரளவு பிடிபடும். 
 
ஆனால் இத்தனை நிதானத்தை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. இரு விரல்களால் நெற்றிப்பொட்டை அழுத்திக் கொண்டான்.
 
சரவணன் சொன்னது போல ஹோட்டலில் தங்கி இருக்கலாம்தான். ஆனால் அதில் ஏனோ அவனுக்கு உடன்பாடு இருக்கவில்லை. இந்த அதீதமான அழுத்தத்தைச் சமாளிக்க அருகே இருப்பதுதான் நல்லது என்று தோன்றியது.
 
விஷாகா நிச்சயமாக இதை எதிர்க்கக் கூடும். ஆனாலும் அதைப் பொருட்படுத்தக்கூடிய மனநிலையில் வருண் இப்போது இல்லை. 
 
முதலில் மயூரி வாயைத் திறக்க வேண்டும். பர்த் செட்டிஃபிகேட்டிலேயே தந்தையின் பெயரை இந்த உலகிற்குச் சொல்லப் பிரியப்படாதவள் தான் கேட்டவுடன் ஓடி வந்து ஒத்துக்கொண்டு விட்டுத்தான் மறுவேலை பார்ப்பாள் என்று வருண் நிச்சயமாக நினைக்கவில்லை.
 
அதற்காக?! அவளை அப்படியே விட்டுவிடவும் முடியவில்லை. அவன் மனம் அந்தக் கணம் என்ன நினைக்கிறது என்று அவனுக்கே குழப்பமாக இருக்க சிந்தனையை அதன் போக்கில் உலவ விட்டான்.
ஃபோன் அடித்தது. எடுத்துப் பார்த்தான். அவள்தான் அழைத்துக் கொண்டிருந்தாள். முகத்தில் ஒரு இளநகைத் தோன்ற அழைப்பை ஏற்றான்.
 
“ஹலோ!”
 
“அத்தான், நான்தான்…”
 
“ம்… சொல்லு, பழைய நம்பரை இன்னும் வச்சிருக்கே போல?” இரண்டு வருடங்களுக்கு முன்பு அவன் தனது ஃபோனில் சேமித்துக் கொண்ட அவளுடைய அதே எண்ணில் இருந்துதான் அழைத்திருந்தாள்.
 
“நீங்க அதே நம்பரை வச்சிருக்கும் போது நாங்க வெச்சிருக்க மாட்டோமா?”
 
“ஏன்? நடுவுல நான் இந்த நம்பரை மாத்தி இருக்கலாம்னு உனக்குத் தோணலையா?” இதற்கு அதில் அவள் பதில் சொல்லவில்லை. பேச்சு இரு பொருள்பட நகர்வதால் சட்டென்று நிறுத்திக் கொண்டாள்.
 
“எங்க இருக்கீங்க அத்தான்?” 
 
“சீகிரிய.” 
 
“சீகிரியல எங்க அத்தான்?”
 
“ஓ… ஊரோட பேரும் அதுதானா? அன்னைக்கு நீ கூட்டிக்கிட்டு வந்து இடத்துலதான்.”
 
“சாப்பிட்டீங்களா?”
 
“ஆச்சு, ஆனா நைட்டுக்கு உங்க வீட்டுலதான் டின்னர்னு உங்கம்மாக்கிட்டச் சொல்லு.”
 
“சரி அத்தான்.” 
 
“இப்போ வந்தா ஒரு டீ கிடைக்குமா… இல்லை உங்கம்மா என்னை முறைப்பாங்களா?”
 
“வாங்க அத்தான்…” என்றாள் சிரித்துக்கொண்டே.
 
“அம்மா ஏதாவது சொன்னாங்களா அத்தான்?”
 
“பெருசா இல்லை, லைட்டா.” இப்போதும் அவள் சிரிக்கும் சத்தம் கேட்டது.
 
“கேப்டன் எப்பிடி இருக்கார் அத்தான்?”
 
“ம்… நல்லா இருக்கார்.” 
 
“இப்பவும் ரெண்டு பேரும் ஒரே ஷிப்லதான் வேலை பார்க்குறீங்களா?”
 
“இல்லை.”
 
“ஏன்?”
 
“ஒரு ஷிப்புக்கு ஒரு கேப்டன் போதும்னு சொல்லிட்டாங்க.”
 
“ஓ…” பேச்சின் அர்த்தம் புரியாமலேயே ‘ஓ’ போட்டவள் சட்டென்று நிதானித்தாள்.
 
“வாவ்! அத்தான்… சூப்பர் சூப்பர்! நினைச்சதைச் சாதிச்சுட்டீங்க! சொல்லவே இல்லை?!” பேச்சு வாக்கில் எல்லோரிடமும் பேசுவது போல சட்டென்று சொல்லி விட்டாள் மயூரி.
 
“நிறைய பேர் எங்கிட்டேயும் எதுவும் சொல்லலைப் பொண்ணே!” நிதானமாகச் சொன்னான் வருண். மயூரி அதற்குச் சொல்ல இருக்கும் பதிலை அறிய அவன் காத்திருந்தான்.
 
“நீங்க கேப்டன் ஆன விஷயத்தை இந்த மயூரிக்கு மெனக்கெட்டு ஒரு ஃபோனைப் போட்டுச் சொல்றது உங்களுக்கு எப்பிடிப் பெருசாத் தோணலையோ… அதே மாதிரி மத்தவங்களும் நினைச்சிருக்கலாம் இல்லையா அத்தான்?” 
 
“ம்… இந்த அளவுக்கு ஸ்ரீ லங்கா முன்னேறி இருக்கும்னு நான் நினைக்கலை, என்னோட தப்புத்தான் அது.” இலகுவாக அவன் ஒப்புக்கொண்டான்.
 
“உங்கிட்ட நிறைய பேசணுமே ப்ரதாயினி!”
 
“பேசுங்க அத்தான்.”
 
“இப்போ இல்லை… நாளைக்கு உன்னால லீவ் போட முடியுமா?”
 
“ம்… முடியும் அத்தான்.”
 
“அப்போ லீவ் சொல்லிடு, பேசலாம்.”
 
“ஓகே, பை அத்தான்.”
 
“பை.” அழைப்பைத் துண்டித்து ஃபோனை பாக்கெட்டில் போட்டான் வருண். எதிரே தெரிந்த வாழ்க்கைப் பாதைக் கொஞ்சம் சிக்கலாக இருப்பது போல தோன்றியது.
 
இருந்தாலும், அதில் நடைபோடலாம் என்ற நம்பிக்கைப் பிறக்க எழுந்து கொண்டான். 
 
வரவேற்பில்லாத அந்த வீட்டிற்கு வலுக்கட்டாயமாகத் தன்னை இழுத்துக்கொண்டு போனான் வருண்!