அழகியே 26 (இறுதி அத்தியாயம்)

 
அழகு 26
 
அடுத்த நாள் விடியலின் போது அந்தக் கடற்கரையோர வீடு அமைதியைத் தத்தெடுத்திருந்தது.
 
நேற்றைய விடியலின் கோலாகலம், கொண்டாட்டம் அனைத்தும் இன்று காணாமல் போயிருந்தன.
 
வருணிடமிருந்து இன்னும் எந்தத் தகவலும்  வந்திருக்கவில்லை. அவன் லண்டன் ஹீத்ரோவை போய்ச்சேர இன்னும் நேரம் இருந்தது.
 
நேற்று இரவு சிரித்தபடி தங்கள் அப்பாவிற்குப் பிரியாவிடை வழங்கிய குழந்தைகள் இப்போது அதே அப்பாவை வீடு முழுவதும் தேடினார்கள்.
 
ஆர்யன் எப்போதும் போல இப்போதும் கொஞ்சம் அழுத்தமாகத்தான் அமர்ந்திருந்தான்.
 
வாய்விட்டு அப்பா எங்கே என்று கேட்கவில்லையே தவிர அவன் சுறுசுறுப்பு கொஞ்சம் குறைந்திருந்தது.
 
ஆனால் அந்தப் பொடுசு வீடு முழுவதும் தன் அப்பாவைத் தேடியது. ஒவ்வொருவருடைய முகத்தையும் பார்த்துப் பார்த்துத் தனக்குத் தெரிந்த மழலையில் கேள்வி கேட்டது.
 
“ப்பா… ப்பா…” என்று வீடு முழுக்க வட்டமிட்டது. ஒரு கட்டத்தில் ராகினி அனுவை பார்த்து அழுதேவிட்டார்.
 
“ஐயையோ! என்னக்கா நீங்க? எதுக்கு இப்போ அழுறீங்க? குழந்தைங்கன்னா அப்பிடித்தானே? நாம பார்க்காததா?” என்று விஷாகாதான் அவரைச் சமாதானப் படுத்தினார்.
 
பத்திரமாகப் போய் சேர்ந்துவிட்டதாக வருணிடமிருந்து ஒரு குறுந்தகவல் மாத்திரமே வந்திருந்தது. போய் சேர்ந்த உடனேயே கப்பலுக்கு உடனடியாகப் போக வேண்டி இருந்ததால் அவனால் இவர்களைத் தொடர்பு கொள்ள இயலவில்லை.
 
மயூரியும் அவனை அழைத்துப் பேசவில்லை. கிளம்பும் போதே அவ்வளவு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினான். அதே மனநிலையில் குழந்தைகளைப் பார்த்தால் அவனால் தாங்க முடியாது.
 
அதோடு அனு வேறு அவனை ‘ப்பா… ப்பா…’ என்று அழைக்கும். நிச்சயமாக அதை வருண் தாங்கிக் கொள்ள மாட்டான்.
 
கப்பலுக்குப் போய் விட்டால் வேலையில் மும்முரமாகி விடுவான். இப்போது அவன் சிந்தனை வேலையில் திரும்புவதுதான் எல்லோருக்கும் நல்லது.
 
அன்றைக்கு முழுவதும் நன்றாக இருந்த அனுவிற்கு அடுத்த நாள் ஜுரம் வந்திருந்தது. குழந்தை சதா வருணையே தேட மயூரி தலையைப் பிடித்தபடி அமர்ந்துவிட்டாள்.
 
ராகினியும் விஷாகாவும் கூட கொஞ்சம் அதிசயித்துத்தான் போனார்கள். இந்தச் சின்னக் குட்டிக்குத் தன் தந்தையின் மேல் அத்தனைப் பாசமா என்று!
 
“பாருங்களேன் அக்கா! இத்தனை நாள் கூடவே இருந்த நாங்க அவளோட கண்ணுக்குத் தெரியலை, புதுசாப் பார்த்த அப்பாவையே தேடுறா?” விஷாகா சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார்.
 
ராகினிக்கு அதில் அத்தனைப் பெருமை. தன் மகன் குழந்தைகள் விஷயத்தில் நியாயமாக நடந்து கொள்ளவில்லையே என்ற குற்றவுணர்ச்சி அவரை இதுவரை அரித்தது. 
 
அதற்குத் தகுந்தாற்போலவே ஆர்யனும் ஆரம்பத்தில் வருணை அண்டாதது அவருக்கு என்னவோ போல இருந்தது.
 
ஆனால் அவை எல்லாவற்றையும் இப்போது அனு நேர் பண்ணி இருந்தாள். மயூரிக்குத்தான் கணவனின் பிரிவு, குழந்தைக்கு ஜுரம் என்று மனது அலைபாய்ந்து கொண்டே இருந்தது.
 
அதேநேரம் கப்பலில் வருண் படு பிஸியாக இருந்தான். சம்பந்தப்பட்ட சீஃப் ஆஃபீஸரை அடுத்த ஃப்ளைட்டிலேயே அவருடைய தாய்நாட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.
 
சௌத்தாம்ப்டன் துறைமுகத்தில் மேலும் ஒரு நாள் ‘வோயேஜ் ஆர்டர்’ கிடைக்கும் வரை கப்பல் நின்றிருந்தது.
 
அதற்கிடையில் கப்பலிலிருந்து புறப்பட்டுப் போன சீஃப் ஆஃபீஸரின் பொறுப்புகள் அனைத்தையும் தன் வசமாக்கிக் கொண்டான் வருண்.
 
“அப்புறம் விபி…” அட்டகாசமாக வந்து நின்றான் கேப்டன். வருண் அவனைப் பார்த்த பார்வையில் டாமினிக் அதிசயித்தான்.
 
“என்ன விபி? என்னைய்யா ஆச்சு? எதுக்கு இந்த முறை முறைக்கிறே?”
 
“நான் கொஞ்சம் சந்தோஷமா இருந்தா உங்களுக்குப் பொறுக்காதா கேப்டன்?” கேப்டன் மேல் பாய்ந்தான் வருண்.
 
“யோவ்! என்னைய்யா ஆச்சு? சும்மா சும்மா இப்பிடி எரிஞ்சு விழுந்தா எப்பிடி? என்னதான் ஆச்சுன்னு முதல்ல சொல்லு?”
அன்றைக்கு டாமினிக்கை வீடியோ காலில் அழைத்து ராகினி பேசிய போது மயூரியை மாத்திரமே காண்பித்திருந்தார். 
 
அந்த அதிர்ச்சி, அதன் பிறகான பேச்சுவார்த்தைகள் என்று நேரம் ஓடியிருந்தது. அதன் பிறகுதான் குழந்தைகள் எழுந்து வந்தார்கள்.
 
அதற்கு முன்பாக டாமினிக் அழைப்பைத் துண்டித்திருந்ததால் குழந்தைகளை கேப்டன் அப்போது சரியாகப் பார்த்திருக்கவில்லை.
 
இப்போது தனது ஃபோனிலிருந்த குழந்தைகளின் ஃபோட்டோவை எடுத்து வருண் காட்டவும் டாமினிக் அவர்களை ஆசையாகப் பார்த்தான். 
 
அன்றைக்குத் திருமணம் நடந்த அன்றும் டாமினிக்கால் குழந்தைகளைச் சரிவர பார்க்க முடியவில்லை. கல்யாணப் பரபரப்பில் எல்லோரும் இருந்ததால் குழந்தைகளை இவனிடம் யாரும் காட்டவுமில்லை.
 
“யோவ் விபி! அந்த அஞ்சு நாள்லயா?!” டாமினிக் இதே வார்த்தைகளைப் பலமுறைக் கேட்டு தன் சந்தேகத்தை நிவர்த்தி பண்ண முயன்றான். வருண் இப்போது குலுங்கிச் சிரித்தான்.
 
“எதுக்கு விபி சிரிக்கிறே?”
 
“ஒரேயொரு நாள் கேப்டன்.”
 
“வாட்!” அங்கிருந்த நாற்காலியில் கேப்டன் தன் நெஞ்சைப் பிடித்தபடி அமர்ந்துவிட்டான். 
 
சற்றுப் பொறுத்து கேப்டன் வருணை நிமிர்ந்து பார்க்க… அடுத்த நொடி இரண்டு பேரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
 
“ஜகஜாலக் கில்லாடிய்யா நீ! ஒரு கல்லுல ரெண்டு மாங்காவா?! எப்பிடி விபி தெரிய வந்துது? அதுவும் இவ்வளவு காலம் கழிச்சு?” கேலியாக ஆரம்பித்து தீவிரமாகக் கேட்டான் டாமினிக்.
 
வருண் நடந்தது அத்தனையையும் ஒன்றுவிடாமல் கேப்டனுக்கு சொல்லி முடித்தான். அமைதியாக அனைத்தையும் கேட்டிருந்த டாமினிக்கின் முகம் முதலில் தன் நண்பனுக்காக வருந்தினாலும் பிற்பாடு அவனுக்காக மகிழ்ந்தது.
 
“சரி விடு விடு… வாழ்க்கைன்னா எல்லாந்தான், அதுக்காக ட்யூட்டியை விட முடியுமா?” என்றான் சமாதானம் சொல்வது போல.
 
“கொலை வெறியில இருக்கேன் கேப்டன், பேசாம ஓடிப்போயிடுங்க!”
 
“நல்லா என்ஜாய் பண்ணிட்டுத்தானே விபி வந்திருக்கே, அப்புறம் என்னய்யா?”
 
“நல்லா என்ஜாய் பண்ணினேனா? நீங்கப் பார்த்தீங்களா?”
 
“அடப்போய்யா! இதையெல்லாமா பார்ப்பாங்க?” டாமினிக் சாதாரணமாகக் கேட்க வருணின் கண்களில் நெருப்புப் பறந்தது.
 
“ஒரேயொரு நாள்… இப்பவும் ஒரேயொரு நாள்தான்… என்னோட லைஃப்ல எப்பவுமே ஒரு நாள்தான்னு எழுதி இருக்குப் போல.” என்றான் வருண் எரிச்சலோடு.
 
“என்னது?! இப்பவும் ஒரு நாளா?! ஸ்ரீ லங்கால நின்ன அவ்வளவு நாளும் நீயென்னப் பூப்பறிச்சிக்கிட்டு இருந்தியா?” சீறினான் கேப்டன். 
 
“ஒன்னையெல்லாம்… நீயெல்லாம் என்னோட ஃப்ரெண்டுன்னு வெளியே சொல்லிடாதே!” எப்போதும் டாமினிக் வருணை பார்த்துச் சொல்லும் அதே வார்த்தைகள்.
 
“உங்களாலதான் கேப்டன், எல்லாமே உங்களாலதான்… உங்களுக்குக் கூப்பிட வேற ஆளே கிடைக்கலையா?” தன் மேல் எரிந்த விழுந்த நண்பனின் உள்ளக் கிலேசத்தை டாமினிக் புரிந்து கொண்டான்.
 
“சாரி விபி, நான் சத்தியமா இப்பிடி எதிர்பார்க்கலை மேன்!” டாமினிக்கின் குரலில் உண்மையான வருத்தம் தெரிந்தது.
 
“சரி விடுங்க.” இரண்டு பேரும் அதன்பிறகு வேலையில் கவனமாகிவிட்டார்கள். வருண் கப்பலில் தானிருக்கும் நாட்களை எண்ண ஆரம்பித்திருந்தான்.
 
***
 
“குட்டி, எப்பிடிடா இருக்கே?” வருணின் குரல் குழைந்து வந்தது. தூக்கக் கலக்கத்தில் இமைகளைப் பிரித்த மயூரி ஃபோனை காதில் சரியாக வைத்தாள்.
 
“அத்தான், நீங்க எப்பிடி இருக்கீங்க? சாப்பிட்டீங்களா?”
 
“எல்லாம் ஆச்சுடா? சின்னது ரெண்டும் எங்க?”
 
“ஆளுக்கொரு பாட்டிக்கிட்டத் தூங்குறாங்க.”
 
“எங்கம்மாக்கிட்டப் போறாங்களா?” ஆர்வமாகக் கேட்டான் வருண்.
 
“ம்… ஆர்யன் சட்டுன்னு போய்ட்டான், பொடுசும் போகும்… ஆனா அப்பப்ப உங்கம்மாவை முறைக்கும்.”
 
“ஹா… ஹா… அவ எம் பொண்ணுடி!” கணவனின் குரலில் தொனித்த பெருமையில் மயூரியும் சிரித்தாள்.
 
‘அவன் பெருமையடித்துக் கொள்ளும் பெண்ணிற்கு அவனைக் காணாமல் ஜுரம் வந்துவிட்டது என்றால் அவனால் தாங்க முடியுமா?’ 
 
“வீடியோவை ஆன் பண்ணு குட்டி.” 
 
“அத்தான்… அது…”
 
“பண்ணுடிங்கிறேன்ல!” அவள் நிலைமை அவனுக்குப் புரிந்தது. இருந்தாலும் அதட்டினான். கலைந்து போயிருந்தது பெண்.
 
“பசங்க ரெண்டு பேரும் இல்லைன்னதும் மேடம் ரொம்ப ஃப்ரீயா இருக்கீங்கப் போல?” அவள் இப்போது சிரித்துக் கொண்டாள்.
 
“என்ன அத்தான் ரூம் சின்னதா இருக்கு? அன்னைக்கு நல்லாப் பெருசா இருத்துச்சே?”
 
“அன்னைக்கு ஆஃபீஸர் வைஃபோட வந்திருந்தார், இன்னைக்குத் தனியாத்தானே வந்திருக்கார்.” 
 
“ஓஹோ! அப்போ அன்னைக்கு ஷிப்புக்குள்ள போறதுக்கு முன்னாடியே வைஃபோடதான் வாறீங்கன்னு சொல்லியாச்சு!”
 
“யெஸ்…” அழகாகச் சிரித்தான் வருண்.
 
“எவ்வளவு பெரிய ஃப்ராடுத்தனம் பண்ணிட்டு சிரிப்பு வேறயா உங்களுக்கு?” அவள் செல்லமாகக் கடுகடுத்தாள்.
 
“நான் பண்ணின அழகான ஃப்ராடுத்தனம்டி அது.” சொல்லிவிட்டு வருண் இன்னும் புன்னகைத்தான்.
 
“அப்பிடிச் சிரிக்காதீங்க அத்தான்.” இப்போது பெண் பார்வையைத் தாழ்த்திக் கொண்டது.
 
“வேற எப்பிடிச் சிரிக்கிறதாம்!”
 
“டெக் டிபார்ட்மெண்ட் ல இந்த வாட்டி யாராச்சும் பொண்ணுங்க இருக்காங்களா?”
 
“ஹா… ஹா… இருக்காங்கடி, ரெண்டு போலிஷ் பொண்ணுங்க, சும்மாத் தளதளன்னு… நீ பார்க்கணுமே, அழகுன்னா அழகு அப்பிடியொரு அழகு!” அவன் அவ்வளவு பேசிய பிறகும் மயூரி சிரித்தாள்.
 
“என்னடீ? இவ்வளவு சொல்லுறேன் நீ சிரிக்கிறே?!”
 
“இந்த மூஞ்சைப் பார்த்தா எங்களுக்குத் தெரியாதா இது என்னப் பண்ணும்னு? அதுக்கெல்லாம் ஒரு கட்ஸ் வேணும் அத்தான்.”
 
“அடிங்… யாருக்குடீ கட்ஸ் இல்லை?”
 
“உங்களுக்குத்தான், ஷிப்ல நாலு நாளைச் சும்மாவே வேஸ்ட் பண்ணின ஆளுதானே நீங்க?”
 
“ஆமாமா… இப்பத்தைய பொண்ணுங்களுக்கெல்லாம் அள்ளிக்கிட்டு வந்து கதறக்கதற ரேப் பண்ணுற பசங்களைத்தான் புடிக்குது, எங்களை மாதிரி இளிச்சவாயனுங்களைப் புடிக்க மாட்டேங்குது.”
 
“நான் அப்பிடி உங்களைச் சொன்னேனா அத்தான்?”
 
“நாலு நாளை வேஸ்ட் பண்ணிட்டேன்னு சொன்னியே? அப்ப மட்டுமா வேஸ்ட் பண்ணினேன்? இப்போ சீகிரியவுல வெச்சுந்தான் மிஸ் பண்ணிட்டேன்.”
 
“ரொம்பத்தான்!” மயூரி கணவனை நொடித்துக் கொண்டாள்.
 
“இந்த ஒரு நாள் கணக்கு ரொம்ப அநியாயம் குட்டி.”
 
“உங்களுக்குத்தான் எல்லாத்துக்கும் ஒரு நாள் போதுமே அத்தான்.” சொல்லிவிட்டு அவள் வீடியோவை ஆஃப் பண்ணிவிட்டாள். வருண் அங்கே பெருங்குரலெடுத்துச் சிரிப்பது கேட்டது.
 
“அது… ஆர்வக்கோளாறு, அனுபவமின்மை… இப்பிடி வெச்சுக்கோ, ஆனா இந்தத் தடவை ஐயா பயங்கர உஷாரு.”
 
“ஓஹோ!”
 
“ப்ரதாயினி…”
 
“சொல்லுங்க அத்தான்.”
 
“நாளைக்கே பசங்களுக்கு பாஸ்போர்ட் எடுத்திரும்மா.”
 
“சரித்தான்.” 
 
“ரெண்டு வாரம் முடிஞ்சதும் அடுத்த நாள் நான் அங்க நிப்பேன்.” அவன் குரலில் ஒரு வேகம் இருந்தது இப்போது.
 
“அதுவரைக்கும் நாங்க சீகிரிய போகட்டுமா அத்தான்?”
 
“வேணாம் வேணாம், சும்மா எதுக்கு அலைஞ்சுக்கிட்டு, இப்போதைக்கு நீ உங்க ஆஃபீஸுக்கு ‘நோ பே’ குடுத்திடு.”
 
“ம்…”
 
“சரவணன் கிட்டச் சொல்லுறேன், பாஸ்போர்ட் ஆஃபீஸுக்கு தனியாப் போய் அலையாதே, ஹெல்புக்கு அம்மாவைக் கூட்டிக்கிட்டுப் போ.”
 
“சரிங்கத்தான்.”
 
“கவனமா இருந்துக்கோ, பசங்க பத்திரம், நல்லா சாப்பிடு.”
 
“ம்…”
 
“அடுத்த ட்ரிப் போகும் போது கண்டிப்பா நாலு பேரும் போறோம், இது நம்மளால முடியாதுடி.”
 
“டைம் பறந்திடும், கவலைப்படாதீங்க அத்தான்.” 
 
“சரிம்மா நீ தூங்கு”
 
“ஓகே அத்தான்.” அழைப்பைத் துண்டித்த மயூரி இரண்டு நாட்களுக்கு முன்பு அவன் தன்னோடு கூடிக் களித்த கட்டாந் தரையைப் பார்த்தாள்.
 
மனம் கனத்துப் போனது. கட்டிலில் இருந்து இறங்கியவள் அவன் படுத்துக் கிடந்த இடத்தில் போய் படுத்துக் கொண்டாள்.
மனம் ‘அத்தான் அத்தான்’ என்று பிதற்றியது!
 
***
 
இரண்டு மாதங்கள் கடந்து போயிருந்தன. அன்றைக்கு அந்த க்ரூஸின் டெக் டிபார்ட்மெண்ட்டில் வருண் படு பிஸியாக நின்றிருந்தான்.
 
மீண்டும் இன்னுமொரு ஐரோப்பிய பயணம், கேப்டனாக. வெசல் பயணிகளால் நிறைந்திருந்தது. இருந்தாலும் எந்த டென்ஷனும் இல்லாமல் கூலாக இருந்தான் கேப்டன்.
 
அவன் பணி நேரம் ஏற்கனவே முடிந்திருந்தது. இருந்தாலும் அடுத்து வந்த ஆஃபீஸரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து ஒரு சில முக்கியமான விஷயங்களையும் கலந்தாலோசித்துவிட்டு ரூமிற்கு‌ வந்தான்.
 
ரூம் கதவை வருண் வந்து திறந்ததுதான் தாமதம், அனு அவன் மேல் வந்து பாய்ந்து ஏறியது.
 
“ப்பா…” சின்னவளை‌க் கைகளில் அள்ளிக் கொண்டவன் ஆர்யனை நோக்கி ஒரு கையை நீட்டினான்.
நீட்டிய கையை ஒரு புன்னகையோடு வந்து பற்றிக்கொண்டது குழந்தை.
 
ஆர்யன் இப்போதெல்லாம் இப்படித்தான் நடந்து கொள்கிறான். எதிலும் அளவுக்கு மீறிய நிதானம். சட்டென்று பேசுவதில்லை. 
 
மயூரி முதலில் கொஞ்சம் பயந்தாள். ஆனால் அவன் தன் அப்பாவைப் போல என்று பிற்பாடு புரிந்தது. ராகினி கூட அதைத்தான் சொன்னார்.
 
“வருணும் சின்னப்பிள்ளையா இருக்கேக்குள்ள இப்பிடித்தான் பிள்ளை, அளந்து அளந்துதான் கதைப்பான்.”
குழந்தைகள் இரண்டையும் அணைத்துக் கொண்ட வருண் மனைவியைத் திரும்பிப் பார்த்தான்.
 
முகம் வாடிப்போய் இருந்தது. 
இது தினமும் நடப்பதுதான். வேலையிலிருந்து வந்தவுடன் சின்னக் குழந்தைகளைத் தூக்கி முதலில் கொஞ்சினால் வளர்ந்த குழந்தையின் முகம் வாடிவிடும்.
 
“அப்பா குளிச்சிட்டு வந்தர்றேன், நீங்க ரெண்டு பேரும் நல்ல பசங்களா டீவி பார்ப்பீங்களாம்.” குழந்தைகளைக் கட்டிலில் உட்கார வைத்து டீவியை ஆன் பண்ணியவன் டவலை எடுத்துக் கொண்டு பாத்ரூமிற்குள் போனான்.
 
போகும் போது சும்மா போகாமல் மயூரியையும் இழுத்துக் கொண்டு போனான்.
 
“விடுங்க அத்தான்.” திமிறிய பெண்ணை அவன் கைகள் அலட்சியம் செய்தன.
 
“எப்பப் பார்த்தாலும் பசங்கதான் உங்களுக்கு முக்கியம்!”
 
“ஏன்டீ! சின்னப் பசங்களோட போட்டிக்கு நிப்பியா நீ?!”
 
“ஆமா!” சட்டமாக அவள் பதில் சொன்னாள்.
 
“நீ அவங்களுக்கு அம்மாடீ.”
 
“அதுக்கு முன்னாடியே நான் உங்களுக்குப் பொண்டாட்டி!”  இப்போது வருண் சிரித்தான்.
 
“இப்பிடிச் சிரிக்காதீங்கன்னு பல தடவை உங்கக்கிட்டச் சொல்லி இருக்கேன்.” அவள் தன் கணவனை மிரட்டினாள்.
 
“ஆண்டவா! இதுக்கு மேல தாங்காதுடா! யோவ் கேப்டன்! நீ தெய்வம்யா… இன்னைக்கு வரைக்கும் கல்யாணம் பண்ணாம வாழ்க்கையை என்ஜாய் பண்ணுறே பாரு!” தனக்குத்தானே புலம்பிய கணவனின் வாயில் ஒரு அடி போட்டவள் வெளியே போக எத்தனித்தாள். 
 
ஆனாலும் எப்போதும் கோட்டைவிட அவன் முட்டாள் அல்லவே! மனைவியை இறுக அணைத்திருந்தான். அந்த இறுக்கம் இருவருக்கும் அப்போது தேவைப் பட்டிருந்தது.
 
முழுதாக ஐந்து நிமிடங்கள் இருவரும் அசையாமல் அப்படியே நின்றிருந்தார்கள். மயூரியின் கண்கள் லேசாகக் கலங்கின.
 
“லூஸாடி நீ…” லேசாகக் கடிந்து கொண்டவன் அவளை விடுவித்தான். வெளியே குழந்தைகள் எதற்கோ சண்டைப் போடும் சத்தம் கேட்கவும் மயூரி வெளியே வந்துவிட்டாள்.
 
அன்றைக்கு இரவு நன்றாக அப்பாவோடு ஆட்டம் போட்டுவிட்டு குழந்தைகள் இருவரும் உறங்கிவிட்டார்கள். 
 
இரவு ஆடையில் பாத்ரூமிலிருந்து வெளியே வந்த மனைவியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான் வருண்.
 
அன்றைக்கு கிச்சனில் நின்றிருந்த போது எண்ணெய் தெறித்த இடத்தில் இன்னும் பெண்ணிற்குத் தோலில் லேசான மாற்றம் தெரிந்தது. 
வருண் அந்த இடத்தை லேசாகத் தடவிப் பார்த்தான்.
 
“விடுங்க அத்தான்.” லேசாகக் கூச்சப்பட்ட பெண்ணை அவன் கண்கள் ஆச்சரியமாகப் பார்த்தது.
 
“இன்னமும் புதுப்பொண்ணு மாதிரி அதென்ன வெட்கம்?”
 
“புதுப்பொண்ணுக்கு மட்டுந்தான் வெட்கம் வரணும்னு சட்டம் எதுவும் இருக்கா?”
 
“இல்லையா என்ன?”
 
“இல்லை, கடைசி வரைக்கும் பொண்டாட்டி புருஷங்கிட்ட வெட்கப்பட்டாத்தான் அழகு அத்தான்.”
 
“இன்டரெஸ்டிங்…” ரசித்துச் சொன்னவனின் தாடையில் எம்பி ஒரு முத்தம் வைத்துவிட்டு அப்பால் நகர்ந்தாள் மயூரி.
 
“அது என்ன எப்பப்பார்த்தாலும் பசங்களோட போட்டிக்குப் போறது? மல்லுக்கு நிக்குறது?” இப்போது மயூரி எதுவும் பேசவில்லை. அமைதியாக நின்றிருந்தாள்.
 
“பசங்களுக்காகத்தான் நான் உன்னைத் தேடி வந்தேங்கிற‌ எண்ணம் உன்னோட மனசுல இன்னமும் இருக்கு இல்லையா ப்ரதாயினி?” அவன் பார்வை மட்டுமல்ல, குரலும் கூர்மையானது.
 
“அப்பிடியில்லை அத்தான்.” அவள் குரல் நலிந்து போனது.
 
“இல்லைன்னா நீ இப்பிடி நடந்துக்க மாட்டே… தேவையில்லாத எண்ணங்களை, சந்தேகங்களை மனசுக்குள்ள வளர்த்துக்கிறது நம்ம உறவுக்கு நல்லதில்லைம்மா.”
 
“……………….”
 
“உன்னோட குடும்பத்து மேல இருந்த கோபத்தால நான் உன்னைத் தேடி வரலை… அது தப்புத்தான், இல்லேங்கலை.” 
 
“அத்தான்… ப்ளீஸ், வேணாம் விட்டுருங்களேன்.” அவள் அவன் பேச்சைத் தடுக்க முயன்றாள்.
 
“இல்லைடா, இன்னைக்கு இதைப் பேசித் தீர்த்திடணும், உன்னோட மனசுல என்னைப் பத்தின சந்தேகம் என்னைக்கும் இருக்கப்படாது.”
 
“சந்தேகமெல்லாம் எதுவுமில்லை அத்தான்.”
 
“ஆனா வருத்தம் இருக்கு, முள்ளு மாதிரி அது உன்னைச் சில நேரங்கள்ல குத்துது.”
 
“………………”
 
“அவசரமா உங்கிட்ட ஓடி வர குழந்தைங்க எங்கிற ஒரு விஷயம் காரணமா இருந்துச்சு, இல்லேங்கலை… ஆனா அந்தக் காரணம் இல்லாமப் போயிருந்தாலும் நான் உன்னைத் தேடி வந்துதான் இருந்திருப்பேன்… என்ன, இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு வந்திருப்பேனா இருக்கும்.”
 
“அந்த ரெண்டு வருஷத்துல அந்த லோரா மாதிரி இன்னும் நாலு பேரு வந்து போயிருப்பாளுங்க!” அவள் வாய்க்குள் முணுமுணுத்தாள். 
 
“நாலு பேரு என்ன, நாப்பது பேரு வந்தாலும் இங்க இருக்கிறது நீதானேடி ராட்சசி!” அவன் தனது இடது மார்பைத் தட்டிக் காட்டினான். 
 
“உறவொன்னு வேணும்னாப் பொண்டாட்டிதான் வேணுங்கிற நாட்டுல நான் பொறக்கவுமில்லை, வளரவுமில்லைம்மா… நினைச்சா அனுபவிக்கலாம்.”
 
“……………..” 
 
“அதுக்குக் கூட இந்தக் குட்டி மட்டும் போதும்னு நினைச்ச ஆளு நானு… என்னைச் சந்தேகப்படாதே!” மயூரி தன் அத்தானை இப்போது இறுக அணைத்துக் கொண்டாள்.
 
“நம்மக் கூட முறையில்லாமக் குடும்பம் நடத்தினவன்தானேன்னு நீ நினைக்கலாம்.”
 
“ஐயையோ! அப்பிடியெல்லாம் இல்லைத்தான்.”
 
“அந்த லோரா பின்னாடி போக எனக்கு எத்தனை நேரம் ஆகியிருக்கும் சொல்லு, ஆனா முடியலைடி… அவ தொட்டப்போக் கூட அந்த அழககோனோட பொண்ணு தொடுற மாதிரி இது இல்லையேன்னுதான் மனசு அப்பவும் சொல்லிச்சு.”
 
“அந்த அழககோனோட பொண்ணு என்ன ஆனா அத்தான்?” மயூரியின் குரலில் சிரிப்பிருந்தது இப்போது. வருணும் லேசாகச் சிரித்தான்.
 
“மூளைப் படிச்சுப் படிச்சுச் சொல்லிச்சு, அழககோனோட பொண்ணு வேணான்டா வருண், வேணான்டா வருண்னு!”
 
“ம்…”
 
“ஆனா மனசு கேட்கலையே, அவதான் வேணும்னு ஒத்தைக் கால்ல நின்னுடிச்சு.”
 
“அப்பிடியா? அழககோனோட பொண்ணு தேறுவாளா அத்தான்?”
 
“எனக்கு இப்பெல்லாம் அழககோனோட பொண்ணை மறந்து போச்சு பொண்ணே! என்னோட மாமி பொண்ணைத்தான் ஞாபகம் இருக்கு.”
 
“ம்ஹூம்…” அவள் மீண்டும் அவனைக் கேலி பண்ணினாள்.
 
“என்னடீ… கேலி பண்ணுறியா?”
 
“ஆமா.”
 
“இந்த வருண் அந்த அழககோனோட பொண்ணுக்கிட்ட தோத்துட்டு இப்போ வெட்டி ஜம்பம் அடிக்கிறான்னு நினைக்கிறியா?”
 
“ஆமா.” அவள் சுலபமாக அவனைத் தாக்கினாள், சிரித்துக்கொண்டே!
 
“ஏய்!” அவளை முரட்டுத்தனமாக இழுத்தவன் சிரித்த அந்த உதடுகளைச் சிறை செய்தான்.
 
“நான் தோத்துப் போனதுல உனக்கு அவ்வளவு சந்தோஷமாடீ?”
 
“எந்தப் பொண்ணுக்குத்தான் அவ புருஷன் அவக்கிட்டத் தோத்துப்போனா சந்தோஷம் வராது.” 
 
“உங்கிட்ட நான் தோத்துப் போறதுலதான் உனக்கு சந்தோஷம்னா நான் எப்பவும் உனக்கு ஒரு படி கீழேயே இருக்கேன் குட்டி.”
 
“அடடா! என்ன அத்தான் இப்பிடியெல்லாம் பேசுறீங்க?”
 
“உங்கிட்ட எனக்கு எந்த ஈகோவும் இல்லைடா.”
 
“உங்கப்பாவும் உங்கம்மாவை இப்பிடித்தான் காதலிச்சிருப்பாங்களா அத்தான்?”
 
“எப்பிடி?”
 
“இப்போ நீங்க சொல்றீங்களே, இதுமாதிரி! சுயநலமில்லாம… ஈகோ இல்லாம… உங்கிட்டத் தோத்துப் போனாலும் எனக்கது சந்தோஷம்ங்கிற மாதிரி…”
 
“தெரியலையேடா…” மனைவியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் வருண்.
 
“அன்பு… ஒரு மனுஷனை எப்பிடியெல்லாம் மாத்துது இல்லை அத்தான்?”
 
“ம்…” வருணின் முதுகோடு தன் கைகளைக் கோர்த்து அவனைத் தானும் அணைத்துக் கொண்டது பெண். மனைவியின் நெற்றியில் இதழ் பதித்த வருண் தானும் அவளோடு இன்னும் இழைந்து கொண்டான். இடைவெளியே இல்லாதபடி!
 
நிறைவு.