அழகியே 3

அழகு 03
 
இரண்டு மாதங்கள் கடந்து போயிருந்தன.
அன்று வெள்ளிக்கிழமை. மயூரிக்கு எப்போதும் பகல் ஒரு மணியோடு அன்றைய பணி நேரம் முடிந்துவிடும். 
 
எங்கேயும் தங்காமல் அன்றைக்குச் சட்டென்று வீடு வந்து விடுவாள். ஏனென்றால் இன்னும் சிறிது நேரத்தில் ஸ்கூல் ட்ராஃபிக் ஆரம்பித்துவிடும்.
 
அவசர அவசரமாக தெஹிவளை ஜங்ஷனை தாண்டும் போது மனதுக்குள் ஓர் நிம்மதிப் பெருமூச்சு. அப்பாடா! இன்னும் சிறிது தூரத்தில் வீடுதான்.
 
அந்த ப்ளாக் ஆடியை வலது புறமாக கடற்கரையை நோக்கிய சாலையில் திருப்பியவள் வீட்டின் முன்பாக காரை நிறுத்தினாள்.
 
எப்போதும் இந்த நேரத்தில் அவளுக்காக ஷெட்டின் கதவைத் திறந்து விடும் அம்மா அன்று மிஸ்ஸிங்.
 
“எங்க அம்மாவைக் காணோம்? எங்கேயாச்சும் போயிருக்காங்களா? அப்பிடின்னா இன்னைக்குக் காலையிலேயே சொல்லி இருப்பாங்களே?!” தனக்கு மட்டும் கேட்கும்படியாக பேசிக்கொண்டவள் காரை விட்டிறங்கினாள்.
 
ரோட்டிலேயே காரை பார்க் பண்ணிவிட்டு வீட்டிற்குள் வந்தாள் மயூரி. வீட்டில் யாருடைய நடமாட்டத்தையும் காணவில்லை. ஒருவகையான அமைதி குடிகொண்டிருந்தது.
 
அம்மாவின் அறையை எட்டிப் பார்த்தாள். கட்டிலில் ஒருக்களித்துப் படுத்திருந்தார் விஷாகா.
 
“ஓ… தூக்கமா? என்ன இந்த நேரத்துல? இந்நேரத்துக்குத் தூங்க மாட்டீங்களே?!” அம்மாவிற்குக் கேட்கும் படியே பேசியவள் முதலில் காரை ஷெட்டில் பார்க் பண்ணினாள்.
 
வெளியே அடித்த கோடை வெயிலுக்குக் கூட அவள் வீடு குளுகுளுவென்றுதான் இருந்தது.
தங்கள் வீட்டை நினைத்த போது மனதுக்குள் ஒரு இதம் பரவியது பெண்ணிற்கு. எப்போதும் ஒரு மனிதனுக்கு அவன் வீடு மகிழ்ச்சி கொடுப்பதாக இருக்க வேண்டும்.
 
அந்த விஷயத்தில் மயூரி கொடுத்து வைத்தவள்தான். பார்த்துப் பார்த்து நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுக் கட்டப்பட்டிருந்தது அவர்கள் வீடு.
 
காரை பார்க் பண்ணிவிட்டு உள்ளே வந்தவள் முகம் கழுவிக்கொண்டு டைனிங் டேபிளில் அமர்ந்தாள். இப்போதும் அம்மா எழுந்து வரவில்லை.
 
சரி, போனால் போகட்டும் என்று நினைத்துக்கொண்டு தானே பரிமாறிக்கொண்டு பசியாற ஆரம்பித்தாள். 
 
அன்றைக்கு நண்டுக்கறி, கீரை மசியல், ரசம். சாப்பாடு வெகு பிரமாதமாக இருந்தது. மயூரி எப்போதும் சாப்பாட்டில் கஞ்சத்தனம் பார்ப்பதில்லை. சுவையாக இருந்தால் ஒரு வெட்டு வெட்டிவிடுவாள்.
 
அதிலும் விஷாகாவின் கைப்பக்குவத்தை யாராலும் அடித்துக்கொள்ள முடியாது. சாப்பிட்டு முடித்த பிறகும் வலது கையில் வாசனை மீதமிருந்தது.
டேபிளை விட்டு எழுந்த மயூரி அப்போதுதான் அதைக் கவனித்தாள்.
 
டெலிஃபோன் ஸ்டான்ட்டில் ஒரு கடித உறை இருந்தது. கூடவே ஒரு காகிதம் காற்றில் மெதுவாக அசைந்து தன் இருப்பைப் பெண்ணுக்குக் காட்டிக் கொடுத்தது.
 
உள்ளூர் தபால் போல தோன்றாததால் மயூரி அதை கையில் எடுத்துப் பார்த்தாள். வெளிநாட்டுத் தபால். ஆச்சி பெயருக்கு வந்திருந்தது.
 
“ஆச்சிக்கு ஃபாரின்ல இருந்து லெட்டரா? வாய்ப்பில்லையே?!” புலம்பிய படியே உறையை ஊன்றி கவனித்தாள். இங்கிலாந்தில் இருந்து வந்திருந்தது கடிதம்.
 
சட்டென்று மனது படபடக்க கடிதத்தைப் பிரித்தாள் மயூரி. கிறுக்கலான கூட்டெழுத்தில் எழுதப்பட்டிருந்த கடிதத்தின் முடிவில் ‘வருண் ப்ரமோதய’ என்று கையொப்பம் இடப்பட்டிருந்தது.
 
ஆச்சரியத்தால் கண்கள் விரிந்து போக அந்த எழுத்துக்களை ஒரு முறைத் தொட்டுப் பார்த்தாள் பெண். உள்ளுக்குள் சிலிர்த்தது.
 
ஏதோ உணர்வு தூண்ட அண்ணார்ந்து பார்த்தாள். அறை வாசலில் சாய்ந்திருந்த அம்மா அவளையே பார்த்திருந்தார். கண்களில் குழப்பம் இருந்தாலும் உள்மனது அம்மாவின் முகத்தில் மகிழ்ச்சியைத் தேடியது.
 
ஆனால் மயூரி தேடிய மகிழ்ச்சி விஷாகாவின் முகத்தில் தெரியவில்லை. பதிலாக ஒரு திருப்தி தெரிந்தது. 
 
‘இப்போதுதான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது.’ என்று சொல்லாமல் சொன்னது விஷாகாவின் முகம்.
 
அண்ணன் மகனின் மடல் அம்மாவிற்கு திருப்தியையோ நிம்மதியையோ கொடுத்ததில் ஆச்சரியமில்லைதானே!
 
ஆனால் அவள் எதிர்பார்த்த மகிழ்ச்சியை ஏன் அம்மா காட்டவில்லை. அவள் வந்ததும் வராததுமாக இந்தக் கடிதத்தைப் பற்றிச் சொல்லி ஏன் ஆர்ப்பரிக்கவில்லை?!
 
அப்போதுதான் கடிதம் ஆச்சியின் பெயருக்கு வந்திருப்பது மயூரிக்கு ஞாபகம் வந்தது. கடிதத்தைப் பார்த்துவிட்டு ஆச்சியும் அப்பாவும் ஒரு நாட்டியம் ஆடியிருப்பார்களோ?!
 
அதனால்தான் அம்மா ஓய்ந்து போனார்களோ?
அம்மா சட்டென்று கார்டனுக்குள் போகவும் மயூரி திகைத்துப் போனாள். அப்படி என்னதான் எழுதி இருக்கிறது இந்தக் கடிதத்தில். 
 
ஆச்சிக்கு வந்த கடிதத்தைப் படிக்க ஒரு மாதிரியாக இருந்த போதும்… கடிதம் எல்லோரின் பார்வையிலும் படும்படி வைக்கப்பட்டிருந்ததால் படிக்க ஆரம்பித்தாள் பெண்.
 
அந்த எழுத்தைப் படிப்பது மிகவும் சிரமமாக இருந்தது மயூரிக்கு. எந்தவித அலட்டலும் இல்லாமல் சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது மடல். 
 
‘ஆச்சி அசோக மாலிக்கு…’ பரவாயில்லையே, மாமன் மகனுக்கு ஆச்சியின் பெயர் தெரிந்துதான் இருக்கிறது. சிரித்தபடி மேலே படித்தாள் மயூரி. 
 
‘வருண் எழுதிக் கொள்வது, நான் யாரென்று உங்களுக்குத் தெரியாததால் என்னை முதலில் நானே அறிமுக படுத்திக்கொள்கிறேன். நான் உங்கள் மகன் ப்ரமோதயவின் மகன்.
 
அறிமுகம் செய்து கொள்ளும் அளவில்தான் நம் உறவு இருக்கிறது என்பது மனதுக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அந்த வருத்தம் எதுவும் உங்களுக்கு இல்லை என்று தெரிந்ததால் நான் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்.’
 
இப்போது மயூரியின் நெற்றி சுருங்கியது. ஆச்சியிடம் அப்படி எந்த விஷயத்தை வருண் பேசப்போகிறான்?!
 
‘என் அப்பாவிற்குச் சொந்தமான, அவரின் சொந்த உழைப்பில் கட்டிய வீடொன்று உங்கள் வசம் இருப்பதாக நான் அண்மையில் அறிந்தேன். அந்த வீட்டை அவர் எத்தனை ஆசைகளோடும் கனவுகளோடும் கட்டினார் என்பதை அவர் கைப்பட எழுதிய டைரி எனக்குச் சொன்னது.’
 
மயூரிக்கு இதைப் படிக்கும்போது திக்கென்றது. இவன் எந்த வீட்டைச் சொல்கிறான்? தாங்கள் குடியிருக்கும் இந்த வீட்டைத் தவிர அவர்களுக்கென வேறெந்த வீடும் கிடையாதே?!
 
‘அந்த வீடு எனக்கு இப்போது வேண்டும். உங்கள் பேச்சைக் கேட்காத மகனைத் தூக்கி எறிய முடிந்த உங்களால் ஏன் அவரின் சொத்தைத் தூக்கி எறிய முடியவில்லை? நடந்தது எதைப் பற்றியும் இப்போது பேச நான் விரும்பவில்லை. அந்த வீடு என் தந்தை என் அம்மாவிற்கும் எனக்குமாக ஆசையாசையாகக் கட்டியது. இதுவரை அதைச் சம்பந்தமே இல்லாதவர்கள் அனுபவித்தது போதும்.
 
இனிமேலாவது அது உரியவர்களிடம் இருக்கட்டும். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.’
கொஞ்சம் காரசாரமாக கடிதத்தை முடித்திருந்தான் வருண். மயூரிக்கு எதுவுமே புரியவில்லை. கடிதத்தை யாருக்கும் தெரியாமல் தனது ஃபோனில் நகலெடுத்துக் கொண்டவள் அதை அப்படியே அது இருந்த இடத்தில் வைத்தாள்.
 
தாயைத் தேடிக்கொண்டு மயூரி போனபோது எங்கேயோ வெளியே போயிருந்த அப்பா வீடு திரும்பவும் ஆச்சி சட்டென்று அவர் ரூமிலிருந்து வெளியே வந்தார்.
 
“மொகத்த உனே புதே?” (என்ன நடந்தது மகன்?)
 
“பயவென்ட எப்பா அம்மே… (பயப்பட வேண்டாம் அம்மா) எகுல்லன்ட மொக்குத் கரன்ட பெஹெ.” (அவர்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது)
அப்பா பேசிய பாஷை புரியாதவள் போல அம்மாவிடம் போனாள் மயூரி. இறுகிய முகத்தோடு நின்றிருந்த விஷாகா,
 
‘இப்போது எதுவும் பேசாதே!’ என்பது போல தலையை இடம் வலமாக ஆட்டினார். பெண் அத்தோடு மௌனித்துப் போனாள்.
 
‘என்ன நடக்கிறது இந்த வீட்டிலே?!’ மயூரிக்கு தலை வெடித்தது. பெண் அறிந்து கொள்ள ஆர்வத்தோடு இருந்த மாமன் மகனைப் பற்றி ஆச்சியும் அப்பாவும் என்னென்னவோ பேசினார்கள்.
 
கோர்ட், கேஸ், வக்கீல்… இப்படியெல்லாம் வார்த்தைகள் பரிமாறப்படவும் மயூரிக்கு தலை கால் புரியவில்லை. இரவு உணவை முடித்துக்கொண்டு அன்னையின் வருகைக்காக தன் அறையில் காத்திருந்தாள்.
 
கை தானாக அலைபேசியை எடுத்தது. அந்த கடிதத்தின் நகலை எடுத்து இன்னுமொரு முறைப் பார்த்தாள் மயூரி. 
 
இப்போது கடிதத்தின் சாரம் அவளைக் கவரவில்லை. மாறாக, அந்த கையெழுத்தை ஊன்றிக் கவனித்தாள். அவளை அறியாமலேயே முகத்தில் புன்னகை அரும்பியது.
 
‘கிறுக்கி வைத்திருக்கிறானே! ஒருவேளை அவனும் கிறுக்கன்தானோ?! கை எழுத்தே இந்த லட்சணம் என்றால் ஆள் பார்க்க எப்படி இருப்பான்?’
 
மாமாவை அவள் புகைப்படத்தில் பார்த்திருக்கிறாள். ஜம்மென்று இருப்பார். ஒற்றை மகன்… அவனும் அவர் போலத்தானே இருப்பான்.
மாமி கூட அழகுதானாம். அம்மா சொல்லக் கேட்டிருக்கிறாள். அந்தப் பெண்ணின் அழகில் வீழ்ந்ததால்தான் அம்மாவை எதிர்க்கும் தைரியம் அவள் மாமாவிற்கு வந்ததாம்.
 
‘மகனும் ஒருவேளை எந்தப் பெண்ணின் அழகிலாவது வீழ்ந்திருப்பானோ? விழட்டுமே… எனக்கென்ன வந்தது?’ அலட்சியமாக தோளைக் குலுக்கினாலும் மயூரியின் மனது ஏனோ அந்த நொடி வெறுமையானது.
 
கதவு திறக்கும் ஓசைக் கேட்கவும் சட்டென்று அலைபேசியை ஆஃப் பண்ணினாள் பெண். விஷாகாதான் உள்ளே வந்து கொண்டிருந்தார்.
 
“என்னம்மா நடக்குது இந்த வீட்டுல? கோர்ட், கேஸ் ன்னு என்னென்னவோ பேசுறாங்க?” மகளின் கேள்விக்கு அன்னை சட்டென்று பதில் சொல்லி விடவில்லை. கட்டிலில் அமர்ந்து சற்று நேரம் அமைதியாக இருந்தார்.
 
“அந்த லெட்டர்…” மீண்டும் பெண்ணே கேள்வி கேட்டாள்.
 
“வருண்தான் அனுப்பி இருக்கான்.”
 
“உங்க… உங்க அண்ணன் மகனா?”
 
“ம்…”
 
“எந்த வீட்டைச் சொல்றாங்கம்மா? எனக்குத் தெரிஞ்சு நமக்கு வேறெந்த வீடும் இல்லையே?” மயூரிக்கு அப்போதும் விஷயம் முழுதாக விளங்கவில்லை. இப்போது விஷாகா தடுமாறினார்.
 
“என்னாச்சும்மா? ஏதாவது பேசுங்களேன்!”
 
“வருண் சொன்னது இந்த வீட்டைத்தான் மயூரி.” ஒரு இறுகிய குரலில் தாய் சொன்ன போது பெண் திகைப்பின் உச்சத்திற்குப் போனது.
 
“என்… என்னம்மா… சொல்றீங்க?! அப்போ… இது நம்ம வீடு… இல்லையா?”
 
“…………….” விஷாகாவின் தலை இடம் வலமாக ஆடியது. இல்லை என்பது போல.
 
“இந்த வீடு… ஆச்சியோடது…” தலையில் வீழ்ந்த இடியின் வீரியம் அதிகமாக இருந்ததால் வார்த்தைகள் சிக்கியது பெண்ணுக்கு.
இப்போதும் எதுவும் பேசாமல் மௌனமாகவே இல்லையென்று தலையாட்டினான் விஷாகா.
 
“அம்மா…” குரல் நலிந்து போக அம்மாவை அழைத்தது பெண். மகளின் கையை மெதுவாக தட்டிக் கொடுத்தார் விஷாகா.
 
அந்த வீட்டை எப்போதுமே ஒரு பிரமிப்போடு பார்ப்பாள் மயூரி. அவள் பிறந்தது, வளர்ந்தது, படித்தது, சிரித்தது, ஆடியது, பாடியது எல்லாமே அந்த வீட்டில்தான்.
 
அவள் பிறப்பதற்கு முன்பு கட்டப்பட்டிருந்தாலும் அத்தனை நவீனமாக நாகரிகமாக அமைக்கப்பட்டிருந்தது அந்த வீடு. 
எவ்வளவுதான் மனதில் கவலையும் உடம்பில் சோர்வும் இருந்தாலும் வீடு என்று சொன்னவுடன் அவள் உள்ளம் மகிழ்ந்து போகும்.
 
அதற்குக் காரணம் அங்கிருக்கும் மனிதர்கள் மட்டுமல்ல, அந்தக் கட்டடமும்தான். நிச்சயமாக கைதேர்ந்த நிபுணர் ஒருவரால்தான் அந்த வீடு வடிவமைக்கப் பட்டிருக்க வேண்டும் என்று மயூரி அடிக்கடி நினைப்பதுண்டு.
 
“அண்ணாதான் இந்த வீட்டை டிசைன் பண்ணினாங்க.” அந்தக் குரலில் சட்டென்று கலைந்தாள் மயூரி.
 
“அப்போ… அப்பா…”
 
“உங்கப்பாக்கும் இந்த வீட்டுக்கும் சம்பந்தமே இல்லை.”
 
“அப்போ ஆச்சி… சொன்னதெல்லாம்…”
 
“உன்னோட ஆச்சியும் அப்பாவும் அவங்க இஷ்டத்துக்கு, அவங்க காரியம் ஆகுறதுக்கு ஆயிரம் பேசுவாங்க.” கறாராக வந்தது விஷாகாவின் குரல்.
 
“ஆனா இன்னைக்கு வரைக்கும் இதைப்பத்தி நீங்க எங்கிட்ட எதுவுமே சொன்னதில்லையேம்மா.” தன்னுடையது என்று இதுகாறும் நினைத்திருந்தது இனி தனக்கில்லை என்று எண்ணிய மாத்திரத்தில் மயூரியின் குரல் கலங்கியது.
 
விஷாகா இப்போது ஒரு பெருமூச்சு விட்டார். இவ்வளவு காலமும் உரிமைக் கொண்டாடாத அண்ணன் மகன் இப்போது என் சொத்தைக் கொடு என்று கேட்பான் என்று அவர் மட்டும் எதிர்பார்த்தாரா என்ன?!
 
ஆனால் விஷாகாவின் மனதுக்குள் இப்போது இனம்புரியாத வைராக்கியம் ஒன்று உருவானது. தன் அண்ணனுக்குத் தன்னிடமிருந்து கிடைக்காத ஆதரவை அவர் மகனுக்குத் தான் கொடுத்தே ஆகவேண்டும்.
 
“மயூரி… வருணை நீ கல்யாணம் பண்ணிக்கிறியா?”
 
“அம்மா!” தன் தாய்க்குப் பைத்தியம் ஏதும் பிடித்து விட்டதா என்பது போல இப்போது அவரைப் பார்த்தாள் பெண்.
 
“உங்களுக்கு என்னம்மா ஆச்சு? இங்க இப்போ என்ன நடக்குது, நீங்க என்னப் பேசுறீங்க?”
 
“மனசுல தோணிச்சு, அதான் கேட்டேன்.”
 
“என்னமோ உங்க அண்ணன் பையனுக்கு என்னை ரொம்பப் புடிச்சுப் போய் உங்கக்கிட்ட வந்து பொண்ணு கேட்ட மாதிரியில்லைப் பேசுறீங்க!”
 
“அதெல்லாம் அவனுக்குப் புடிக்கும்.”
 
“ஹா… ஹா… ஆசைப்படுறதுக்கும் ஒரு அளவு வேணாமா?”
 
“நான் என்னதான் பண்ணுறது சொல்லு.” தன் கண்களை அழுந்தத் துடைத்துக்கொண்ட விஷாகா மூக்கையும் உறுஞ்சினார்.
 
“நீங்க அழுறதால போன உங்கண்ணன் திரும்ப வரப்போறது இல்லைம்மா.” மகளின் ஆறுதலில் பொங்கி வந்த கேவலை அடக்கிக் கொண்டார் பெரியவர்.
 
“இந்தக் குடும்பத்துக்காக நாயா உழைச்சாரு, அவர் இவங்கக்கிட்ட கேட்டது என்ன? எனக்குப் பிடிச்சப் பொண்ணைக் கட்டிக்கிறேங்கிறதுதானே…”
 
“மாமா இன்னும் கொஞ்சம் பிடிவாதமா இருந்திருக்கணுமோ?”
 
“எங்கண்ணன் இவங்களுக்குத் தேவையில்லை, அவர் ஆசைப்பட்ட பொண்ணு இவங்களுக்குத் தேவையில்லை, ஆனா அவர் அனுப்பின பணம் மட்டும் இவங்களுக்கு இனிச்சுது.”
 
“இவங்கன்னா? யாரு ஆச்சியா?” 
 
“ஏன்? உங்கப்பா அவ்வளவு நல்லவரோ?” ஆங்காரமாக கேட்டார் விஷாகா.
 
“ஓ…”
 
“ரெண்டும் சேர்ந்துக்கிட்டுத்தானே அந்த ஆட்டம் போட்டாங்க.”
 
“பெத்த பிள்ளையை மருமகனோட சேர்ந்துக்கிட்டு ஆச்சி எதிர்த்தாங்களா?!”
 
“அப்பிடியும் சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்யுது.”
 
“என்னால நம்பவே முடியலைம்மா! அந்தப் பொண்ணு நம்ம இனம் இல்லைங்கி…”
 
“அந்தப் பொண்ணா?! மாமின்னு மரியாதையா பேசு!” சொன்ன குரலில் அத்தனைக் கோபம்.
 
“சரி சரி… இந்த சில்லியான காரணத்துக்காக அவங்களை இவ்வளவு தூரம் ஒதுக்கி வெக்கிறதுன்னா…”
 
“ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம் மயூரி, இவ்வளவு காலமும் ஒதுங்கியே இருந்தவன் இப்போ திடீர்னு வர்றான்னா… ஏதோ காரணம் இருக்கு, எது எப்பிடியா இருந்தாலும் இப்போ என்னோட ஃபுல் சப்போர்ட் வருணுக்கு உண்டு! இதால என் புருஷன் எனக்கில்லைன்னு போனாலும் நான் கவலைப்பட மாட்டேன், அம்மா இல்லைன்னு போனாலும் கவலைப்பட மாட்டேன்.” 
மிகவும் ஆணித்தரமாக சொல்லிவிட்டு எழுந்து போகும் அம்மாவை ஒரு விளங்காத பார்வைப் பார்த்தாள் மயூரி. பிரச்சனையின் தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை.
 
மாமா கட்டிய வீடென்றால் அது ஏன் ஆச்சியின் பெயருக்கு வந்தது? அப்படியே இருந்தாலும் இத்தனைக் காலம் சும்மா இருந்தவர்கள் இப்போது ஏன் உரிமைக் கொண்டாடுகிறார்கள்?!
 
தனது அலைபேசியில் இருந்த அவனது கையெழுத்தை மீண்டும் எடுத்துப் பார்த்தது பெண். கிறுக்கலாக இருந்தாலும் அந்த எழுத்துக்கள் பெண்ணை ஏதோ செய்தன!
 
***
 
இரண்டு வார விடுமுறையில் வீடு வந்திருந்தான் வருண். அப்பாவின் டைரியைப் படித்து முடித்தபோது நிச்சயம் அம்மாவைப் பார்த்தே ஆக வேண்டும் என்று தோன்றியது.
 
அவனுக்கான விடுமுறைக் காலமும் அந்த நேரத்தில் வந்ததால் நேராக வீடு வந்துவிட்டான். சாதாரணமாக அதிகம் விடுமுறைகளை அவ்வளவு எளிதில் எடுப்பவனல்ல. ஆனால் என்னவோ இந்த முறை அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று தோன்றிவிட்டது.
 
எங்கே, எப்படி, எப்போது ஆரம்பிப்பது என்று ஒன்றுமே புரியவில்லை. இவனைப் பார்த்ததிலிருந்து அம்மாவின் முகமும் சற்றே இறுகினாற்போல மாறிவிட வருணுக்கு காய் நகர்த்துவது மிகவும் சிரமமாக இருந்தது.
 
ஆனாலும் பேசித்தானே ஆகவேண்டும்! அவன் அம்மாவின் விருப்பு வெறுப்புகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு… அவன் தந்தையின் ஆசைக்காக, கனவை நிறைவேற்றுவதற்காக பேச வேண்டும்.
 
அன்றைக்கு இரவு உணவை முடித்தபோது வருண் அம்மாவை நிமிர்ந்து பார்த்தான். ராகினியும் அதேநேரம் மகனைப் பார்த்தவர் புன்னகைத்தார்.
 
“என்ன வருண், இன்டைக்கு அம்மாக்கிட்ட பேசலாம்னு நினைக்கிறியோ?”
 
“அம்மா…”
 
“பிடிக்குதோ பிடிக்கல்லையோ… பேசித்தானே ஆகவேணும்.” அம்மாவின் குரலிலிருந்த கசப்பு மகன் முகத்திலும் லேசாக பிரதிபலித்தது.
 
“சும்மா வீடொன்டு கட்டிப் பார்த்தார், எவ்வளவோ காசைத்தான் அவங்களுக்காக கொட்டிட்டார், சரி இதையும் அவங்களே வெச்சிருக்கட்டும், நமக்கென்னத்துக்கு என்டுதான் முதல்ல நானும் நினைச்சனான்.” 
 
“ம்…” அம்மாவின் அழகான யாழ்ப்பாணத் தமிழை ஒரு ரசனையோடு கேட்டபடி ‘ம்’ கொட்டினான் வருண்.
சரளமாக இல்லாவிட்டாலும் பெற்றோர்களின் தாய் மொழியை எழுத, படிக்க, பேச வருணுக்கு தெரியும். பெற்றோர்கள் இருவருமே அதில் மிகவும் சிரத்தையாக இருந்தார்கள்.
 
தங்கள் காலம் முடிந்த பின்பும் வருண் தங்கள் தாய்நாட்டுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்று இருவருமே விரும்பினார்கள்.
 
“உன்ட அப்பாவின்ட மனசுல அந்த வீட்டைப் பத்தி இவ்வளவு ஆசை இருந்திருக்கும்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கேயில்லை.”
 
“அப்பா உங்களுக்கிட்ட அந்த வீட்டைப்பத்தி பேசினதே இல்லையோ?”
 
“இல்லை வருண், என்னைக் கலியாணம் செய்யுறதுக்கு முன்னமே அந்தக் காணியை அப்பா வாங்கிட்டார்.”
 
“ஓ…”
 
“தன்ட பெயர்ல இருந்தா ஒவ்வொரு வேலைக்கும் தான் போக வேண்டி வருமென்டு அவரின்ட அம்மா பேர்ல உறுதியை எழுதி இருந்தவர்.”
 
“உறுதியென்டா ‘டீட்’ தானே?” 
 
“ஓம்.”
 
“அதுதான் அவங்களுக்கு நல்ல வசதியாப்போச்சு.”
 
“உன்ட அப்பா அப்பிடியெல்லாம் தனக்குத் தனக்குன்னு யோசிக்கிற மனுசன் இல்லை வருண்.”
 
“நல்ல ஏமாளி என்டு சொல்லுங்க.” வருணின் முகம் இப்போது கோபத்தில் சிவக்க ராகினி பெருமூச்சு விட்டார்.
 
“ஒருவேளை என்னைக் கலியாணம் செய்யாம அவரின்ட அம்மா கை காட்டின சிங்களப் பெட்டையைக் கட்டி இருந்தா… இப்பிடியெல்லாம் நடந்திருக்காதோ என்னவோ?!”
 
“அப்பிடி அப்பா கட்டி இருந்தா இந்த சீன் ல ராகினி வாறதெப்பிடி, வருண் வாறதெப்பிடி?” மகன் சொல்ல ராகினி மெதுவாக புன்னகைத்தார்.
 
“அதான் டைரியில எழுதி தள்ளி இருக்காரே மனுசன், அவளை இன்டைக்கு அங்கப் பார்த்தன், இங்கப் பார்த்தன்… ஹா… ஹா…” வருண் இப்போது உண்மையாகவே வாய்விட்டுச் சிரித்து அம்மாவைக் கேலி பண்ணினான்.
 
“உனக்கு இனி இது ஒன்டு போதும் என்னை நையாண்டி பண்ண!”
 
“கேப்டன் கிட்டச் சொல்லவும் விழுந்து விழுந்து சிரிச்சவர்.”
 
“டேய்! இதையெல்லாம் ஏன் அவன்கிட்டச் சொன்ன நீ?”
 
“சும்மா ஒரு ஃபன் தானேம்மா.”
 
“அவரின்ட வீட்டுல ஒத்துக்கொள்ள மாட்டாங்க என்டு எனக்கு நல்லாவே தெரியும் வருண்.” அம்மாவின் முகம் இப்போது கடந்த காலத்திற்குப் போய்விட்டது.
 
“ஏன்?”
 
“அப்ப நாட்டுல கடும் பிரச்சினை நடந்துகொண்டு இருந்த நேரம்.”
 
“……………”
 
“வடக்குல இருந்த சனங்களை அப்பாவின்ட ஆட்களுக்குப் பிடிக்காது.”
 
“அப்பிடியும் சொல்ல முடியாதுதானே? அப்பாவின்ட சகோதரம் ஒன்டு நல்ல மாதிரியென்டு சொல்லி இருக்கிறியள்?”
 
“ஓம்… அவான்ட பெயர் விஷாகா, தங்கமான பிள்ளை!” அந்தப் பெயரைச் சொல்லும்போது ராகினியின் முகம் மலர்ந்தது.
 
“பின்ன ஏன் எல்லாரையும் பிழையா சொல்லுறியள்? இவங்களுக்கு நல்ல மனசு இல்லை, அதான் உண்மை.” 
 
“விஷாகாவின்ட கல்யாணத்துக்குத்தான் முதல் முதலா நாட்டுக்குப் போன நாங்கள், அப்ப உனக்கு ரெண்டு வயசு.”
 
“ம்…” மேலும் கதை கேட்கும் ஆர்வத்தில் மகன் உட்கார்ந்திருக்க தாயின் கசங்கிய முகம் அந்த ஆர்வத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
 
அம்மாவின் முகத்தையே பார்த்திருந்த வருண் அதற்கு மேல் தனது தாய் பேச மாட்டாள் என்று புரிந்து போக பெருமூச்சொன்று விட்டான்.
 
இது எப்போதும் நடப்பதுதான். தன் பாட்டி பற்றி அம்மா எப்போதும் எதுவும் பேசியதே இல்லை. பெற்ற மகனே தன் தாயை ஒதுக்கி வைத்ததில் இருந்து அந்த அம்மாளின் லட்சணத்தை வருண் தானாக யூகித்துக் கொண்டான்.
 
ஆனால் தன் மாமியின் பேச்சு வரும்போது மட்டும் அம்மாவின் முகம் மலர்ந்து போகும். நாத்தனாரின் திருமணத்திற்குப் போனதை எப்போதுமே மகனோடு ஒருவித மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்வார் ராகினி.
 
அவ்வளவுதான்… அதற்கு மேல் அம்மா எப்போதுமே பேசியதில்லை. கணவரின் உறவுகளைப் பிள்ளையிடம் குறை கூற அவருக்குப் பிடிக்காது போலும்.
 
வருணுக்கு அப்போது இரண்டு வயது என்பதால் என்ன நடந்தது என்று அவனுக்கும் சரியாக ஞாபகம் இல்லை. நடந்தது எதுவாக இருந்தாலும் அது அத்தனை விரும்பத்தக்கதாக இருந்திருக்கவில்லை என்பது அவன் யூகித்து அறிந்து கொண்டது.
 
“அம்மா!” மகனின் அழைப்பில் நிமிர்ந்து பார்த்தார் ராகினி.
 
“லெட்டர் இந்நேரம் போய் சேர்ந்திருக்கும்தானே?”
 
“ம்… போயிருக்கும்.”
 
“பதில் பாசிட்டிவ்வா இருக்கும் என்டு நினைக்கிறியளோ?”
 
“தெரியேல்ல… இவ்வளவு காலத்துக்குப் பிறகும் மனுசங்க திருந்த மாட்டாங்களோ வருண்?”
 
“சொந்த மகனே இல்லையென்டு ஆனபிறகு நீங்களும் நானும் அவங்களுக்கு என்னத்குக்கு?”
 
“நான் தேவையில்லை… நீயுமா அவங்களுக்குத் தேவையில்லை வருண்?” அம்மாவின் கேள்வியில் தோளைக் குலுக்கினான் வருண்.
 
“பார்ப்போம்… என்னதான் நடக்குதென்டு.” வேலைகள் தலைக்கு மேல் இருந்ததால் அத்தோடு எழுந்து தனது ரூமிற்குள் போய்விட்டான் வருண்.
 
கணவனின் உருவாக போகும் தன் மகனையே பார்த்திருந்தார் ராகினி. மனது ஏனோ கொஞ்சம் பரிதவித்தது. காலதாமதம் செய்துவிட்டோமோ என்று ஒரு நொடி நினைத்தவர் தலையை உலுக்கிக் கொண்டார்.