அழகியே 4

அழகு 04
 
ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்த போது சூடான காற்று வந்து வருணின் முகத்தில் மோதியது.
 
இரண்டு வார விடுமுறையில் ஒரு வாரம் கடந்து போயிருந்தது. 
ஏர்போர்ட் டாக்ஸி ஒன்றை புக் பண்ணிவிட்டு காத்திருந்தான் வருண். அந்த வாகனம் அவன் முன்னால் வந்து நிற்க இரண்டு நிமிடங்கள்தான் ஆகியிருக்கும், அதற்குள்ளாகவே வியர்த்துப் போனது.
 
காரிற்குள் ஏறி உட்கார்ந்து ஏசியின் குளிர்ந்த காற்றை ஒரு நொடி ஆழ்ந்து அனுபவித்தான். 
 
“வெல்கம் டூ ஸ்ரீ லங்கா சார்.” ட்ரைவர் அழகாக புன்னகைக்க அந்த வரவேற்பு அவனை வெகுவாக கவர்ந்தது.
 
“தான்க் யூ.” இவனும் பதிலுக்குப் புன்னகைத்தான்.
 
“மியூசிக் வெக்கட்டுமா சார்?”
 
“ஓ ஷ்யூர்.” இவன் அனுமதி கிடைத்ததும் மிதமான ஒலியில் இசை தவழ்ந்தது.
 
‘பேபி ஐம் பர்ஃபெக்ட் ஃபார் யூ…’ வன் டைரக்ஷன் பாடல் ஒலிக்க வருண் புன்னகைத்தான். வாகனம் அந்தக் காலை நேர நெரிசலில் தன்னையும் இணைத்துக் கொண்டது.
 
“எனக்கு இவங்க பாட்டுன்னா ரொம்பப் பிடிக்கும் சார்.” கண்ணாடி வழியாக இவன் முகத்தில் தவழ்ந்த புன்னகையைக் கவனித்த ட்ரைவர் அவனாகவே தகவல் வழங்கினான்.
 
“ஓ…”
 
“பார்த்திருக்கீங்களா சார்?” சட்டென்ற கேள்வியில் திகைத்தான் வருண்.
 
“என்ன?”
 
“இல்லை… வன் டைரக்ஷன் உங்க ஊர்க்காரங்கதானே, பார்த்திருப்பீங்களோன்னு நினைச்சேன்.”
 
“இல்லைப்பா.”
 
“ஸெய்ன் ஏன் சார் இப்பிடிப் பண்ணிட்டாரு?” அவன் ஆதங்கத்தை நினைத்தபோது வருணிற்கு சிரிப்பு வந்தது. ஐந்து பேர் அடங்கிய அந்த பொப்பிசை குழுவில் இருந்து இப்போது ஒருவர் விலகிவிட்டார்.
 
“அவனவனுக்கு ஆயிரம் பிரச்சினை இருக்கு, உனக்கு இப்போ ஸெய்ன் வன் டைரக்ஷனை விட்டுப் போனதுதான் பிரச்சினையான்னு நினைக்கிறீங்க இல்லை சார்?” கேள்வி கேட்டவனே அதற்கான பதிலையும் சொன்னான். வருணின் புன்னகை இப்போது அதிகமானது. 
 
“ஏதோ பேச்சுவார்த்தைப் போகுது போல, கூடிய சீக்கிரமே திரும்ப வந்து உங்களை மாதிரி ரசிகர்களுக்காக பாடுவாங்கன்னு நினைக்கிறேன்.”
 
“கண்டிப்பா… கண்டிப்பா சார்.” ட்ரைவர் மகிழ்ச்சியின் உச்சத்திற்குப் போனதை அவன் குரலே சொன்னது.
சீட்டில் சாய்ந்து அமர்ந்து கொண்டான் வருண். மனம் இப்போது அம்மாவிடம் ஓடியது. வாடிய அந்த முகம் பிள்ளையின் மனதை லேசாக அசைத்திருந்தது.
 
ஒரு வாரம் கடந்த நிலையில் அந்த லெட்டர் வருணின் கைகளில் கிடைத்தது. கிடைத்த அடுத்த நாளே டிக்கெட் போட்டுவிட்டான்.
 
“வருண்… இது சரியா வரும் என்டு நான் நினைக்கேயில்லை தம்பி.” கடிதத்தைப் படித்த அம்மா சொன்ன வார்த்தை இதுதான். 
 
ஆனால் வருணிற்கு அத்தனைக் கோபம் வந்தது. கோபம் என்று சொல்வதை விட வெறி என்றே சொல்லலாம்.
 
“என்ன தைரியம் இருந்தா இப்பிடியொரு பதிலை அனுப்பி இருப்பாங்க!” 
 
“அவங்க குணம் அதுதான், நாம பேசாம விட்டுடுவோம் தம்பி.” 
 
“அவங்க குணம் அதுதான் என்டா என்ட குணத்தை நானும் கொஞ்சம் காட்டுறனே.”
 
“உன்ட அப்பாவின்ட குடும்பத்தோட பகையை வளர்த்துக்காத வருண், கேட்டாக் குடுப்பாங்க என்டு நினைச்சன்…”
 
“கேக்குற மாதிரி கேட்டா கட்டாயம் குடுப்பாங்க.”
 
“வேண்டாம் வருண்…”
 
“இப்ப உங்கன்ட பிரச்சினை என்ன அம்மா?‌ நான் ஸ்ரீ லங்காக்கு போறதுல உங்களுக்கு என்ன கஷ்டம்?” ஏதோ பேச வந்த தாயை அடக்கியது மகனின் குரல்.
 
“என்ன செய்ய வேணும் என்டு எனக்குத் தெரியும், நீங்க கொஞ்சம் சும்மா இருங்க.” தடுக்க முயன்ற தாயின் வாயை அடைந்தவன் நேற்று ஃப்ளைட்டை பிடித்து இதோ… இன்று வந்து சேர்ந்துவிட்டான்.
 
கண் சுற்றுப்புறத்தை ஆராய்ந்தது. ஆங்காங்கே ‘வெல்கம் டூ ஸ்ரீ லங்கா’ எனும் பதாகைகள் தொங்க விடப்பட்டிருந்தன. 
 
உடம்பு லேசாக புல்லரிக்க கண்கள் கலங்கியது வருணிற்கு. இரண்டு வயதில் ஏற்கனவே வந்திருந்தாலும் நினைவு தெரிந்து இப்போதுதான் தன் பெற்றோரின் தாய்நாட்டைப் பார்க்கிறான். 
 
உடம்பு, மனது இரண்டும் என்னவோ பண்ணியது வருணிற்கு. அந்த உணர்வு சுகமாக இருக்க ஆழமான ஒரு மூச்சை இழுத்துவிட்டான்.
 
வழிநெடுகிலும் இருந்த பெரிய அளவிலான புத்த விகாரங்கள் அவன் கண்களை வெகுவாக கவர்ந்தன. ஒரு மணிக்கூறு போனது கூடத் தெரியாமல் இயற்கையோடு இணைந்திருந்தான்.
 
அந்த வீதிக்குள் நுழையும்போதே கடற்காற்றின் உப்பு வாசத்தை அவன் நாசி உணர்ந்து கொண்டது.
 
“பக்கத்துல கடல் இருக்கா ட்ரைவர்?” 
 
“ஆமா சார், கோல் ஃபேஸ் (காலிமுகத்திடல்) இருக்கு.”
 
“அப்பிடின்னா?”
 
“இலங்கையோட மேற்குக் கடல் சார், காரை அங்க நிப்பாட்டட்டுமா?”
 
“கண்டிப்பா” வருண் அனுமதி வழங்கும் போதே கடல் ஆர்ப்பரிக்கும் சத்தம் கேட்டது. நீலக்கடல் கண்ணுக்கு விருந்தாக அமைய தன் காதலியைப் பார்த்துவிட்ட மகிழ்ச்சி அந்த ஆஃபீஸருக்கு.
 
காரை ட்ரைவர் சாலையின் ஓரமாக அனுமதிக்கப்பட்ட ஓரிடத்தில் நிறுத்த அவசரமாக இறங்கினார் வருண். 
 
“கடல்னா ரொம்பப் பிடிக்குமா சார்?” அந்தக் கேள்வியில் சட்டென்று திரும்பியவன் பற்கள் தெரிய புன்னகைத்தான்.
 
“ரொம்ப பேச மாட்டீங்களா சார்? எல்லாத்துக்கும் ஒரு சிரிப்புத்தான் பதிலா வருது?”
 
“புதிய ஊர், தெரியாத ட்ரைவர்… அப்பிடி என்னத்தைப் பேசிட முடியும்?”
 
“ஓ… அதுவும் சரிதான், ஆனா கஸ்டமர்ஸ் எனக்குப் புதுசில்லை சார், எல்லாருமே எனக்குச் சொந்தம்தான்.” அந்த அழகான பதில் வருண் முகத்தில் புன்னகையை வருவித்தது.
 
“ஏர்போர்ட்டுக்கு மட்டுந்தான் வேலை பார்க்குறீங்களா?”
 
“ஆமா சார், ஏன் கேக்குறீங்க?”
 
“இல்லை… எங்கேயாவது வெளியே போகணும்னா உங்களையே கூப்பிடலாம்னு பார்த்தேன்.”
 
“தெரியாத ட்ரைவர்னு இப்போதான் சொன்னீங்க?!”
 
“இந்தத் தெரியாத ட்ரைவர் கொஞ்சம் நல்லவர் மாதிரி தெரியுறாரே, நான் என்னப் பண்ணட்டும்?”
 
“ஹா… ஹா… நல்லாப் பேசுறீங்க
சார்.”
 
“இப்போதான் யாரோ நான் பேச மாட்டேன்னு சொன்னாங்க?!”
 
“ஐயையோ! ஹா… ஹா…” அந்த ட்ரைவர் சிரிக்க வருணும் சிரித்தான்.
 
“எங்க ‘கோல்ஃபேஸ்’ எப்பிடி இருக்கு சார்?”
 
“உங்களோடதா? அதென்ன அப்பிடிச் சொல்லிட்டீங்க?!”
 
“ஓ… அப்போ சார் ஃபாரினர் இல்லையா?”
 
“ம்ஹூம்… அம்மா, அப்பா ரெண்டு பேருமே ஸ்ரீ லங்கன்.”
 
“அடடா! அப்போ சார் நம்ம ஊர்க்காரரு! எங்க தங்கப் போறீங்க சார்? சொந்தக்காரங்க வீட்டுலயா? எங்கிட்ட ஹோட்டல் அட்ரஸ் குடுத்திருக்காங்களே?!” அந்தக் கேள்வி வருணை லேசாக வாடச்செய்தது.
 
“ஏதாவது தப்பாக் கேட்டுட்டேனா சார்?”
 
“இல்லையில்லை… சொந்தக்காரங்க இருக்காங்க, ஆனா ஹோட்டல்லதான் தங்கப் போறேன்.”
 
“ஓ… நாலு மணியோட என் ஷிஃப்ட் முடிஞ்சிடும் சார், அதுக்கப்புறம் எங்க போறதுன்னாலும் நீங்க தாராளமா என்னைக் கூப்பிடலாம்.” 
அதன்பிறகு வருணுக்கு தனிமைக் கொடுத்துவிட்டு அந்த ட்ரைவர் அப்பால் நகர கடலை ஆசையோடு பார்த்தான் வருண். 
 
கடல் அலைகள் ‘என்னைப் போல உண்டா!’ என்பது போல ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன. அவன் உள்ளமும் கிட்டத்தட்ட அதே நிலையில்தான் அப்போது இருந்தது.
 
‘என்ன திண்ணக்கம் இருந்தால் அப்பிடியொரு பதிலை அனுப்பி இருப்பார்கள்?’ நினைத்த மாத்திரத்தில் நெஞ்சு கொதித்தது. அப்பா இவர்களையெல்லாம் விட்டுத் தூரப் போனதின் ரகசியம் புரிந்தது. 
 
‘என்ன மாதிரியான மனிதர்கள்? சாதாரணம் ஒரு வீட்டிற்காக இப்பிடியெல்லாமா பேசுவார்கள்?!’ கண்கள் நீலக்கடலின் அழகை மறந்து திட்டம் போட ஆரம்பித்திருந்தது
 
‘இவர்களைச் சும்மா விடக்கூடாது!’
 
“சார்!”
 
“ஆங்…”
 
“என்னாச்சு சார்? ரெண்டு மூனு தடவைக் கூப்பிட்டுப் பார்த்தேன், பதிலே சொல்லலை?”
 
“உங்க பேர் என்ன ட்ரைவர்?”
 
“சரவணன்.” 
 
“ஓ… நீங்க ஜெஃப்னா வா? (யாழ்ப்பாணம்)”
 
“இல்லையில்லை… கொழும்புதான் சார்.”
 
“அப்பிடியா? எனக்கு இங்க எதுவும் சரியா தெரியலை சரவணன், தப்பா எடுத்துக்காதீங்க.”
 
“பரவாயில்லை… கிளம்பலாமா சார்?”
 
“ம்…” வருணின் முகத்தைப் பார்த்த அந்த சரவணனுக்கு என்னப் புரிந்ததோ… அதன் பிறகு அதிகம் பேசவில்லை. ஆங்காங்கே முக்கியமான இடங்கள் வரும்போது மட்டும் வருணிடம் காண்பித்தான்.
 
“இது அலரி மாளிகை சார், பிரதமரோட வாசஸ்தலம், ஆனா அப்பப்போ ஜனாதிபதியும் யூஸ் பண்ணுவாங்க.”
 
“ஓ…” 
 
 “இது வெள்ளவத்தை சார், நிறைய தமிழர்கள் வாழுற இடம்.”
 
“ஆஹா…” இப்படியே பயணம் முடிய வருண் தங்க வேண்டிய ஹோட்டல் வந்து சேர்ந்தது.
 
‘மௌன்ட் லவீனியா ஹோட்டல்’
அந்த வெள்ளைக் கட்டடத்தின் முன்பாக காரை நிறுத்தினான் சரவணன். அப்போது அடித்த வெயிலுக்கு கட்டடத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த செயற்கை நீர் அலங்காரம் மிகவும் இதமாக இருந்தது.
 
வாகனத்தை பார்க் பண்ணிவிட்டு வருணின் உடமைகளை ஹோட்டலின் உள்ளே எடுத்துச்செல்ல உதவினான் சரவணன்.
 
“பரவாயில்லை சரவணன், ஒரு பேக்தானே… நானே பார்த்துக்கிறேன்.” நான்கு நாட்கள் மாத்திரமே இலங்கையில் தங்கி இருக்க முடிவு செய்திருந்தான் வருண்.
 
அதற்கு மேல் தங்க அவனது தொழில் இடம் கொடுக்கவில்லை. இப்போது இரண்டு வாரங்கள் ஓய்வெடுத்ததற்கே டாமினிக் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டான்.
 
“நீ இல்லைன்னா எனக்கு ஒன்னுமே
ஓடாது விபி.”
 
“அந்த வீட்டை நினைச்சு அம்மா கொஞ்சம் அதிகமாகவே கவலைப்படுறாங்க கேப்டன், நான் போய் என்ன ஏதுன்னு பார்த்துட்டு சீக்கிரமாவே வந்திடுறேன்.”
 
“கரெக்ட் கரெக்ட்… அதை என்னன்னு கண்டிப்பா பாரு விபி, ஏதாவது ஹெல்ப் வேணும்னா கண்டிப்பா கால் பண்ணு.”
 
“ஷ்யூர் கேப்டன்.”
 
“தன்மையா கேளு, குடுத்தா வாங்கிக்கோ, இல்லைன்னா ஆச்சியைத் தூக்கி கடல்ல போட்டுரு, தட்ஸ் ஆல்.” இலகுவாக வழி சொன்ன கேப்டனை நினைத்த போது இப்போது சிரிப்பு வந்தது வருணுக்கு.
 
“சார்.”
 
“சொல்லுங்க சரவணன்.”
 
“இது என்னோட விசிட்டிங் கார்ட் சார்.”
 
“குடுங்க.”
 
“ஃப்ரீ ஆகிட்டுக் கூப்பிடுங்க சார்.”
 
“கண்டிப்பா, இன்னைக்கு ஈவ்னிங் ஒரு இடத்துக்கும் போக வேண்டி இருக்கும், நாலு நாள் இங்க தங்குவேன் சரவணன்.”
 
“ஓகே சார்.”
 
“முடிஞ்சா இந்த நாலு நாளும் நீங்க லீவ் போட்டுருங்களேன் சரவணன், நான் உங்களுக்கு ஃபுல் பேமெண்ட் குடுத்திடுறேன்.”
 
“ஷ்யூர் சார்.” அந்த ஒப்பந்தம் சரவணனுக்கு ரொம்பவும் பிடித்திருக்கும் போலும். வாயெல்லாம் பல்லாகிப் போனது. 
 
“ஓகே சார், நீங்க ரெஸ்ட் எடுத்துட்டு ரெடியாகி என்னைக் கூப்பிடுங்க, அஞ்சு நிமிஷத்துல வந்திடுவேன்.”
 
“ஓகே பை.” அத்தோடு சரவணன் கிளம்பிவிட ஹோட்டலின் உள்ளே வந்தான் வருண்.
 
ஹோட்டல் பார்வைக்கு மிகவும் திருப்தியாக இருந்தது.
 
பாஸ்போர்ட்டை ரிசப்ஷனில் கொடுத்து அனைத்துச் சம்பிரதாயங்களையும் முடித்தவன் அறைச் சாவியை வாங்கிக் கொண்டான்.
 
ஹோட்டல் ரிசப்ஷனிலேயே வெளிநாட்டவர்களுக்காக கொடுக்கப்படும் சிம்மையும் மறக்காமல் வாங்கிக் கொண்டு அறைக்கு வந்தான் வருண்.
 
ஹோட்டலை சுற்றி இருந்த இடமெல்லாம் பொன்மணல் பரப்பாகவே காட்சி அளித்தது. கடலை அண்மித்திருந்த இடம் என்பதால் இனம்புரியாத ஒரு நெருக்கம் வருணுக்கு அந்த நிமிடம் அந்த இடத்தோடு தோன்றியது.
 
நெருக்கத்திற்குக் காரணம் கடல் மாத்திரமா? இல்லை… தன் தந்தை பிறந்து வளர்ந்த ஊர் என்பதாலா?! உள்ளம் லேசாகக் கலங்க அறைக் கதவைத் திறந்தான். அறை வெகு நேர்த்தியாக இருந்தது. குறை சொல்ல எதுவுமே இருக்கவில்லை. ஜன்னல் திரையை விலக்க நீலக்கடல் பரந்து விரிந்து கிடந்தது.
 
அம்மாவை அழைக்க வேண்டுமே என்பதையும் மறந்து அந்தக் கடலையும் கடலோர தென்னைகளையும் தன் கேமராவிற்குள் அடக்கினான் வருண்.
 
பார்க்கப் பார்க்க அந்த இடத்தின் அழகு தெவிட்டவில்லை வருணுக்கு. இதற்காகத்தான் தாய்நாடு தாய்நாடு என்று அத்தனைப் பேரும் பறந்து பறந்து வருகிறார்களா?
 
இதையெல்லாம் ரசித்துப் பழகிய பின்பு அங்கே எத்தனைக் கொட்டிக் கொடுத்தாலும் எப்படி மனம் லயிக்கும்?!
 
மேற்குக் கடல் என்று சரவணன் சொன்னாரே… சூரிய அஸ்தமனம் இங்கிருந்து பார்க்க எப்படி இருக்கும்?! 
 
மனம் தன்னை மறந்தாலும் வயிறு தன் இருப்பைக் காட்ட வருண் அவசர அவசரமாக குளியலை முடித்தான். சீ ஃபூட் இங்கே பிரசித்தம் என்பதால் உணவை ஆர்டர் பண்ணிவிட்டு அம்மாவிற்கு மெஸேஜ் அனுப்பினான்.
 
“கவனம் வருண், வார்த்தைகளை அளந்து பேசு, உடம்பையும் மனதையும் அலட்டிக் கொள்ளாதே.” சுருக்கமாக வந்தது பதில். 
 
உணவை உண்டுவிட்டு அப்படியே அடித்துப் போட்டாற் போல உறங்கிவிட்டான் வருண்… அன்றைய மாலைப் பொழுது அவனுக்கு வைத்திருக்கும் விசித்திரங்களை அறியாமல்.
 
***
 
தூக்கம் கலைந்து எழுந்த வருண் உடல் களைப்புத் தீர மீண்டும் ஒரு முறைக் குளித்தான். நேரத்தைப் பார்க்க அது ஐந்து என்றது.
 
சரவணனின் பணி நேரம் முடிந்திருக்கும் என்பதால் அவனை அழைத்து இப்போது வர முடியுமா என்று கேட்க சாதகமான பதிலே கிடைத்தது.
 
ப்ரவுன் நிறத்தில் ஷர்ட் ஒன்றை அணிந்து கொண்டவன் அதற்கு மேட்ச்சாக கறுப்பு நிற டெனிம்மையும் அணிந்தான். 
 
சற்றே நீண்டிருந்த தலை முடியை ஜெல் தடவி அடக்கி ரிஸ்ட் வாட்ச்சையும் கட்டிக்கொண்டான். 
 
நேராக டைனிங் ஏரியாவிற்கு வந்தவன் இலங்கையின் முதல்தர தேயிலையை ருசி பார்த்தான்.
 
மெல்லிய கசப்புடன் தொண்டையில் இறங்கிய சூடான பானம் புத்துணர்வைக் கொடுத்தது.
 
‘கேப்டன் இந்நேரம் கூட இருந்திருந்தால்… டீ மட்டுந்தானா விபி என்றிருப்பார்.’ மனிதரை நினைத்த மாத்திரத்தில் வருணின் முகத்தில் புன்னகை அரும்பியது.
 
தொலைபேசி சிணுங்க கவனம் கலைந்தான் வருண். சரவணன் அழைத்துக் கொண்டிருந்தான்.
 
“சொல்லுங்க சரவணன்.”
 
“ஹோட்டல் கார் பார்க்கிங்ல வெயிட்
பண்ணுறேன் சார்.”
 
“இதோ… வந்திடுறேன்.” 
அவசரமாக வெளியே வந்த வருண் சரவணனின் காரை கண்டுபிடித்து அதில் ஏறிக் கொண்டான்.
 
“நல்ல தூக்கம் போல… முகம் ஃப்ரெஷ்ஷா இருக்கு சார்!” 
 
“ஆமா சரவணன்.” பதில் சொல்லிவிட்டு ஃபோனில் தான் சேமித்து வைத்திருந்த அந்த முகவரியை சரவணனிடம் கொடுத்தான் வருண்.
 
“ம்… பக்கத்துலதான் இருக்கு சார் இந்த அட்ரஸ்.”
 
“தெரியும், அதாலதான் இந்த ஹோட்டலை புக் பண்ணினேன்.”
 
“ஓ… தெரிஞ்சவங்களா சார்?”
 
“ம்… கிட்டத்தட்ட அப்பிடித்தான்.” பிடி கொடுக்காத பதில். சரவணன் எதையும் கண்டுகொள்ளாமல் காரை ஸ்டார்ட் செய்தான்.
 
இருபத்தி மூன்று… வெள்ளை காம்பவுண்ட் சுவரில் பித்தளை நிறத்தில் இலக்கம் பொறிக்கப்பட்டிருந்தது. வீட்டின் அருகே காரை நிறுத்தச் சொல்லாமல் எதிர்ப்புறமாக நிறுத்தப் பணித்துவிட்டு அந்த வீட்டைச் சற்று நேரம் வாகனத்தில் இருந்தபடியே பார்த்தான் வருண்.
 
மனது லேசாக அடித்துக்கொண்டது. நல்ல உயரமான சுற்றுமதில் என்பதால் வீட்டின் உட்புறம் சரியாகப் புலப்படவில்லை. ஆனால் மேல்மாடி தெரிந்தது.
 
அவன் அப்பாவின் கனவு இல்லம்! இப்படியொரு வீட்டைக் கட்டி அதில் தன் தாயோடு வாழ ஆசைப்பட்டிருக்கிறார் மனிதர்.
 
தங்கையின் பொறுப்புகள் அனைத்தும் தீர்ந்ததும் தன் தாயின் தலைமையில் அனைத்தையும் நடத்தியும் இருக்கிறார்.
 
ஆனால் என்ன செய்வது?! ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ கொடுத்து வைக்கவில்லையே! தனக்கு இப்படியொரு ஆசை இருந்ததைக் கூட கடைசிவரை மனிதர் தன் தாயிடம் கூட கூறவில்லையே!
 
“என்னாச்சு சார்?” காரை விட்டு வெகுநேரம் வருண் இறங்காததால் சரவணன் யோசனையோடு கேட்டான். 
 
“இது எங்க வீடு சரவணன்.” சட்டென்று கட்டுகள் அறுந்து வருண் சொல்லவும் சரவணன் திகைத்தான்.
 
“என்ன சொல்றீங்க சார்?! இவ்வளவு பெரிய வீட்டை வெச்சுக்கிட்டு எதுக்கு ஹோட்டல்ல போய் தங்குறீங்க?!”
இந்தக் கேள்விக்கு என்னவென்று பதில் சொல்வது? ஒரு பெருமூச்சோடு காரிலிருந்து இறங்கினான் வருண். நிதானமாக வீதியைக் கடந்தவன் சுவரோடு இருந்த காலிங் பெல்லை அழுத்தினான்.
 
நல்ல கெட்டியான தேக்கில் காம்பவுண்ட் கதவு இருக்க, அது நனைந்து விடாமல் மேலே சின்னதாக, அழகாக கூரைப் போடப்பட்டிருந்தது. பக்கத்தில் பெரிய ரோலிங் கேட்.
 
சில நொடி காத்திருப்பிற்குப் பதில் சொல்வது போல கதவு லேசாக திறந்தது. நெஞ்சம் துடிக்க கதவின் பின்னே நிற்கும் தன் தந்தையின் சொந்தத்தை அளவெடுத்தது வருணின் விழிகள்.
 
“கவுத? (யாரது?)” கேள்வி தனக்குப் புரிந்த பாஷையில் இருந்த போதும் வருணிற்கு பதில் சொல்ல நா எழவில்லை. 
 
ஆனால் சரவணன் நிலைமையை தவறாக புரிந்து கொண்டான். யூகே இலிருந்து வந்திருக்கும் இந்த வாலிபனுக்கு சிங்கள மொழி புரியும் என்பது அவனுக்குத் தெரியாது.
 
சட்டென்று காரை விட்டு இறங்கியவன் நேராக இவர்களிடம் ஓடி வந்து பதில் சொன்னான்.
 
“மே மஹத்தயா இங்கிலண்ட் இந்தலா எனவா நோனா. (இந்தக் கனவான் இங்கிலாந்தில் இருந்து வருகிறார் அம்மையாரே)”
இப்போது வருணின் கை சரவணின் தோளைத் தொட்டது. நான் பேசிக் கொள்கிறேன், நீ அமைதியாக இரு என்பது போல இருந்தது அந்தத் தொடுகை.
 
“வருண்… வருண் ப்ரமோதய!” ஆழ்ந்த குரலில் தன் எதிரே நிற்கும் இளம் பெண்ணிடம் சொன்னான் வருண். 
 
எந்தச் சலனமும் இல்லாமல் தன்னைப் பார்த்திருந்த அந்த விழிகள் சில நொடிகள் தாமதித்து தன் பாவத்தை மாற்றிக்கொள்ளும் அழகை ரசித்தபடி நின்றிருந்தான் வருண். 
 
“அம்மா…” அவள் உதடுகள் அசைந்தன. ஆனால் சத்தம் மட்டும் வரவில்லை. அவள் தாயை அழைத்திருப்பாள் போலும். சரவணனுக்கு நடப்பது அனைத்தும் விந்தையாக இருந்தது.
 
“மயூரி! யாரு வந்திருக்கா?” உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது. வருணின் கண்கள் அந்தக் குரலைத் தேடி உள்ளே திரும்பின.
 
“அம்மே… மெஹெ என்டக்கோ. (அம்மா… இங்க வாங்களேன்)” குரல் நலிந்து போக லேசான படபடப்போடு தன் தாயை அழைத்தது அந்தப் பெண்.
 
“கவுத அனே? (யாரப்பா?)” இலகுவாக கேட்டபடி வந்த விஷாகா அங்கே நின்றிருந்த வாலிபனை ஒரு நொடி கூர்ந்து பார்த்தார். 
 
“மயூரி… இது… இது யாரு?” விஷாகாவின் குரல் இப்போது தந்தியடித்தது. 
 
அன்னை தன் மாமன் மகனைக் கண்டுகொண்டுவிட்டார் என்பது புரிந்து போக கதவை முழுதாக திறந்த பெண் அதன் மேல் சாய்ந்து கொண்டாள்.
 
இப்போது விஷாகாவும் வருணும் நேருக்கு நேராக நின்றிருந்தார்கள். நடக்கும் கூத்தை ஒரு விசித்திரமான பார்வையோடு பார்த்திருந்தான் சரவணன்.
 
“அப்பாவோட சிஸ்டர் நீங்கதானா? விஷாகா எங்கிறது…” வருண் முழுதாக முடித்திருக்கவில்லை. விஷாகா கால்கள் தடுமாற நிலத்தில் சரிந்தார்.
 
“ஐயோ!” சரவணன் சத்தம் போட வருண் அந்தப் பெண்மணியைச் சட்டென்று தாங்கிக்கொண்டான். மயூரிக்கு இது எதுவும் புரிந்தாற்போல தெரியவில்லை. கல்லுப் போல நின்றிருந்தாள்.
 
“மேடம்… மேடம்!” விஷாகாவின் கன்னத்தில் லேசாகக் தட்டி பலமான குரலில் அழைத்தான் சரவணன். 
 
“மேடம்! கொஞ்சம் தண்ணி கொண்டு வர்றீங்களா?” சரவணனின் ஏவலுக்கு எந்த பதிலும் சொல்லாமல் சிலையென நின்றிருந்தாள் மயூரி. 
 
வீட்டிற்கு முன்பாகவே தோட்டம் இருந்தது. அங்கே இருந்த டேப் கண்ணில் பட சரவணன் ஓடிப்போய் அதைத் திறந்து தன் கைகளை ஈரப்படுத்திக் கொண்டு வந்தான். 
 
“ஏதாவது பேசுங்க மேடம்.” வருணின் மடியில் கிடந்த விஷாகாவின் முகத்தைத் தன் ஈரக்கரங்களால் துடைத்து விட்டான்.
 
“இன்னைக்குத்தான் என்னை முதல்முதலா பார்க்குறாங்க சரவணன், அந்த ஷாக் அவங்களுக்கு.”
 
“ஓ… சொந்த மாமியா சார்?”
 
“ம்…”
 
“அப்ப இவங்க?” மயூரியை சுட்டியது சரவணனின் கேள்வி.
 
“தெரியலை.” பதில் சொன்ன முகத்தை வலியோடு பார்த்தன பெண்ணின் விழிகள்.
 
“மொன நாடகம்த மேக்க? (என்ன நாடகம் இது?)” அப ஸ்வரமாக ஒலித்த அந்தக் குரலில் அனைவரும் திரும்பிப் பார்த்தார்கள். கண்கள் இடுங்க நின்றிருந்தார் அசோக மாலி.