அழகியே 5

அழகு 05
 
‘நாடகமா?!’ அந்த வார்த்தையில் வருணின் தாடை இறுகியது. சட்டென்று நிமிர்ந்து தன் எதிரே நின்றிருந்த அந்த வயது போன பெண்மணியைப் பார்த்தான்.
 
என்னவென்று சொல்வது? இவரை எப்படி எதிர்ப்பது? இவரை விரோதியாக பார்க்கத் தன்னால் இயலுமா?
 
“கவுத அம்மே?” இன்னுமொரு ஆண் குரல் உள்ளிருந்து கேட்கவும் வருணின் கவனம் இப்போது அங்கே சென்றது. அவன் கைகளில் இதுவரைக் கிடந்த விஷாகா தன்னைச் சமாளித்துக்கொண்டு மெதுவாக எழுந்து உட்கார்ந்தார்.
 
“பொட்டக் எவில்லா பலன்டக்கோ. (கொஞ்சம் வந்து பாருங்களேன்.)” அந்தக் குரலில் இருந்த ஏளனத்தை ஒரு கையாலாகாத தனத்தோடு பார்த்திருந்தான் வருண்.
 
அறுபது வயதிருக்கும் அந்த மனிதருக்கு. தன் மாமியின் கணவர் இவர்தான் என்று வருணுக்கு புரிந்தது. இந்த வீட்டில், குடும்பத்தில் நடக்கும் அனைத்து அசம்பாவிதங்களுக்கும் அந்த மனிதருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று வருண் நன்கறிவான்.
 
தன் மாமியாரின் அருகில் வந்த அழககோன் ஒரு ஏளன புன்னகையோடு இளையவனைப் பார்த்தார்.
 
“அனுப்பின கடிதம் இந்தப் பயலுக்கு ஒருவேளை கிடைக்கலையோ?” வேண்டுமென்றே சத்தமாக தனது சந்கேகத்தை வெளியிட்டார் அந்த மனிதர்.
 
“அதெல்லாம் கிடைச்சிருக்கும், சொத்து இல்லையா… அதான் பறந்து வந்திருக்கான்.” எந்தவித இரக்கமும் இல்லாமல் வந்தது பதில். 
 
“சார்!” அந்த வார்த்தைகளில் சரவணன் பதறிப்போனான்‌ என்றால் விஷாகா சட்டென்று தனது அண்ணன் மகனின் கையைப் பற்றிக் கொண்டார். 
 
அந்தத் தொடுகையில் சட்டென்று அவர் பக்கம் திரும்பினான் வருண். கண்கள் இரண்டும் குளமாக அவனையே பார்த்திருந்த அந்த விழிகள் இரண்டும் அவனை இறைஞ்சின.
 
ஏனோ அவன் பார்வை இப்போது கதவோடு ஒன்றி நின்றிருந்த பெண்ணைப் பார்த்தது. அந்தக் கண்களில் இன்னும் ஆச்சரியத்தின் அளவு குறைந்திருக்கவில்லை. 
 
ஆச்சரியத்தையும் தாண்டி அந்தக் கண்களில் இன்னும் ஏதேதோ உணர்வுகள் தோன்றி மறைந்தன.
ஆனால் அவற்றையெல்லாம் ஆராயும் மனநிலையில் வருண் அப்போது இல்லை.
 
“மயூரி! யாரு கதவைத் தட்டினாலும் என்ன ஏதுன்னு பார்க்காம போய் திறந்திடுவியா? இந்தக் குடும்பத்துக்குன்னு ஒரு கௌரவம், அந்தஸ்து இருக்கு.” வயதில் மட்டுமே மூத்திருந்த அந்தப் பெண்ணின் வார்த்தைகள் வருணை கண்டபடி தாக்கின.
 
“ஆச்சீ…” வார்த்தைகளின் வீரியம் தாங்காமல் பெண் வாய் திறந்தது.
 
“நீ உள்ளே போ!” இது தந்தையின் கட்டளை.
 
“நீ எதுக்கு இப்போ இப்பிடி உட்கார்ந்து இருக்கே?” மனைவிக்கும் ஒரு அதட்டல் போட்டுவிட்டு வருணை முறைத்தார் அழககோன்.
 
பெண்கள் இருவரும் எந்த மறுப்பும் சொல்லாமல் உள்ளே நுழைய தனது முழு உயரத்திற்குமாக எழுந்து நின்றான் வருண். 
 
கப்பலில் வேலை செய்வதால் பலதரப்பட்ட, பல நாட்டு மனிதர்களைப் பார்த்திருக்கிறான். ஆனால் இவர்கள் போல யாரையும் பார்த்ததில்லை.
 
“ஒழுங்கா வளர்ந்திருந்தா இப்பிடி வெட்கமே இல்லாம வந்து நிற்கத் தோணுமா?” மீண்டும் ஒரு எள்ளல் பேச்சு அந்த மனிதரிடமிருந்து.
 
“சார்… போகலாமா?” அதற்கு மேல் அங்கே நிற்க சரவணனுக்கே பிடிக்கவில்லை. வருண் அவனை அமைதியாக திரும்பிப் பார்த்தான்.
 
“ஒழுங்கா வளர்த்திருக்கணும்… அதான் நான் பெத்தது தராதரமே பார்க்காம ஒன்னை இழுத்துக்கிட்டு வந்து நின்னுச்சே, அதுக்கு இப்பிடித்தான் வளர்க்கத் தெரிஞ்சிருக்கும்!” வருணின் கை முஷ்டி இப்போது இறுகியது.
 
“நான் வளைச்சுப் பிடிச்ச மாதிரி நீயும் போய் வளைச்சுப் பிடின்னு அனுப்பி வெச்சிருக்காங்க போல இருக்கு.” சொல்லிவிட்டு அந்தப் பெரிய மனிதர் சிரித்தார்.
 
“அந்த லட்சணத்துல நாங்க இங்கப் பொண்ணு வளர்க்கலை… குடும்பம், மானம், மரியாதை, கௌரவம் எல்லாம் என்னன்னு சொல்லிக் குடுத்து வளர்த்திருக்கோம், பக்கத்துல போனாலே கால்ல கிடக்கிறதைக் கழட்டிடும்.” ஆச்சியின் வார்த்தைகளில் அதற்கு மேலேயும் அங்கே நிற்கப் பிடிக்காமல் வருணின் கைகளைப் பிடித்து இழுத்தான் சரவணன்.
 
“பேச்சு ரொம்ப மோசமா இருக்கு சார், போகலாம் சார்.” 
 
“கார்ல வெயிட் பண்ணுங்க சரவணன்.” தன்னைப் பிடித்து இழுத்த சரவணனின் கையை லேசாக விலக்கி விட்டான் வருண்.
 
“சார்!”
 
“ஒரு ரெண்டு நிமிஷம்தான், இதோ வந்திடுறேன்.” சரவணன் வெளியே போகும் வரைப் பார்த்திருந்தவன் வீட்டின் வாசலை அடைத்துக் கொண்டு நின்ற அந்தப் பெரிய மனிதரிடம் வந்தான்.
 
இளையவன் வந்த தோரணையில் எங்கே அவன் தன்னை அடித்துவிட போகிறானோ என்று பயந்தவர் போல அவர் சட்டென்று விலகினார்.
 
ஆச்சியின் முகமும் பயத்தால் வெளுக்க இவனையே குரோதத்தோடு பார்த்திருந்தார். அவருக்கும் ஒரு முறைப்பையே பதிலாக தந்தவன் வீட்டினுள் சென்றான்.
 
இவர்களின் வார்த்தைகள், அவர்கள் நடந்துகொண்ட விதம் எல்லாவற்றையும் தாண்டி… தான் நிற்கும் அந்த இடம் தன் தந்தையின் கனவு என்பது மட்டுமே வருணுக்கு ஞாபகத்தில் இருந்தது. 
 
டைரிக்குள் இருந்த வீட்டின் மேப் அங்கே கண்ணுக்கு முன்னே கட்டடமாக நின்றிருந்தது. கூடத்தில் மாட்டப்பட்டிருந்த ஊஞ்சலை அருகே சென்று தொட்டுப் பார்த்தான்.
 
அது கூட அவன் தந்தை அந்த இடத்தில் அது இருக்க வேண்டும் என்று திட்டமிட்டதுதான்.
 
சமையலறை ஊஞ்சலுக்கு அடுத்தாற்போல இருக்க வேண்டுமே!
இருந்தது… கண்களில் கண்ணீர் பெருக தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண்மணியோடு இருந்தது சமையலறை.
 
“வருண்…” சத்தம் வெளியே கேட்காமல் தன் உடன்பிறப்பின் ரத்தத்தை கண்களால் வருடிக் கொடுத்தார் விஷாகா.
 
இந்தப் பெண்ணைப் பார்த்த போது கூடவே நின்றிருந்த இன்னொரு பெண்ணின் ஞாபகம் வந்தது. ஆனால் அவளை இப்போது அங்கே காணவில்லை. 
 
கீழ்த்தளத்தில் இருந்த வீட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் தன் கண்களால் வருடினான் வருண்.
 
‘இந்த வீடு எனக்கு வேண்டும்!’ அவன் மனதில் அந்த நொடி தோன்றியது இது மட்டும்தான். அதற்கு மேல் தாமதிக்காமல் சட்டென்று வெளியே போனவன் காரில் ஏறி உட்கார்ந்து கொண்டான்.
 
சரவணன் காரை ஸ்டார்ட் செய்ய எதுவும் பேசாமல் சீட்டில் தலைசாய்த்து கண்களை மூடிக்கொண்டான். நடந்தேறிய நிகழ்வுகளை மனம் ஏற்க மறுத்தது. 
இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று அடம்பிடித்த மனதை அடக்கினான், அதுதான் பார்த்தாகிவிட்டதே! இன்னும் என்ன சந்தேகம்.
 
ஈரக்காற்று முகத்தில் மோத கண்களைத் திறந்தான் வருண். கார் கடற்கரை வீதியில் நின்றிருந்தது.
 
“ஹோட்டல் ரூமை விட இந்த இடம் உங்களுக்கு இப்போ பெட்டரா இருக்கும்னு தோணிச்சு சார்.” இது சரவணன்.
 
“ம்…”
காரை விட்டிறங்கிய சரவணன் சுற்றி வந்து வருண் உட்கார்ந்திருந்த பக்கமாக கதவைத் திறந்து விட்டான். வருணும் மறுக்கவில்லை, இறங்கி நின்றான். 
 
சூரியன் அஸ்தமித்து கொஞ்ச நேரம்தான் ஆகியிருக்கும் போலும். வானின் செந்நிறம் இன்னும் மங்காமல் ஆங்காங்கே திட்டுத்திட்டாகத் தெரிந்தது.
 
“ரொம்பப் பொறுமையா இருந்தீங்க சார்.” சரவணன் சட்டென்று சொல்ல அவனைத் திரும்பிப் பார்த்தான் வருண்.
 
“சாரி சார், உங்க குடும்ப விஷயம்… இருந்தாலும் என்னால எதுவும் சொல்லாம இருக்க முடியலை.”
 
“எனக்கு ஒரு லாயர் வேணும் சரவணன்.”
 
“ஒகே சார்.”
 
“நாலு நாள்தான் இங்க தங்குவேன், அதுக்குள்ள லீகலா ஏதாவது பண்ண முடியுமான்னு பார்க்கணும்.”
 
“சரி சார்.”
 
“எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை சரவணன், நல்ல ஃபேமஸ் லாயரா பாருங்க.”
 
“சொல்லிட்டீங்க இல்லை சார், கொஞ்சம் டைம் குடுங்க, ஏற்பாடு பண்ணுறேன்.” சொல்லிவிட்டு ஃபோனை எடுத்துக்கொண்டு சரவணன் அப்பால் நகர தனது ஃபோனை எடுத்தான் வருண். 
அம்மாவை அழைத்தான். இவன் அழைப்பை எதிர்பார்த்திருப்பார் போலும், சட்டென்று அழைப்பை ஏற்றார்.
 
“வருண்!”
 
“அம்மா!”
 
“எங்க இருக்கிறாய் தம்பி? போய் அவங்களைப் பார்த்த நீயோ?” ராகினியின் குரலில் அவ்வளவு பதட்டம்.
 
“எதுக்கு நீங்கள் இப்ப இவ்வளவு டென்ஷன் ஆகுறியள் அம்மா?”
 
“என்ன நடந்துச்சு வருண்? உன்ட குரல் அவ்வளவு நல்லா இல்லையே?”
 
“எதிர்பார்த்ததுதான்.”
 
“ஓ… அவங்க அனுப்பின கடிதத்தைப் பார்த்த உடனேயே அது நமக்குத் தெரிஞ்சதுதானே…”
 
“கடிதம் கொஞ்சம் பரவாயில்லை என்ட அளவுக்கு நடந்துக்கிட்டாங்க.”
 
“……………” ராகினி இப்போது எதுவும் பேசவில்லை. மகனின் வேதனையின் அளவு புரிந்தது போல அமைதியாக இருந்தார்.
 
“வீடு ரொம்ப அழகா இருக்கு அம்மா!”
 
“அப்பிடியே!”
 
“அந்த ஊஞ்சல் கூட அதே இடத்துல இருக்கு.” மகனின் பதிலில் ராகினி அந்தப்புறம் வெடித்து அழும் சத்தம் கேட்டது. 
 
கண்கள் கலங்க மகனும் இங்கே அமைதியாகிவிட்டான். வீட்டின் ஒவ்வொரு பகுதியும் எப்படி இருக்க வேண்டும் என்று அவனது தந்தை டிஸைன் பண்ணி இருந்தார்.
 
எந்தெந்த இடங்களில் எந்தெந்தப் பொருட்களை வைக்க வேண்டும் என்றும் அவரது டைரியில் குறிப்பிட்டிருந்தார்.
 
‘இத்தனைக் காலம் கடந்து இப்போது அந்த டைரி அம்மாவின் கண்களில் பட வேண்டுமா?’
 
“கவனம் வருண், நாலு நாளையும் சந்தோஷமா செலவு பண்ணு, ஊரைச் சுத்திப் பாரு, அது போதும், இந்த மனுஷங்க சகவாசமே நமக்கு வேண்டாம் என்டுதானே அப்பாவே ஒதுங்கினவர்.”
 
“……………..”
 
“எந்தப் பிரச்சினையும் நமக்குத் தேவையில்லை வருண், அப்பா இவ்வளவு ஆசையோட இந்த வீட்டைக் கட்டி இருப்பார் என்டு நான் நினைக்கேயில்லை, இவங்கன்ட மாதிரி தெரிஞ்சுதான் தன்னோட ஆசையை மனசுக்குள்ளேயே புதைச்சுட்டார் போல.”
 
“அம்மா… நான் நாளைக்கு உங்களுக்குக் கால் பண்ணுறேன்.”
 
“சரி தம்பி, உரமா யோசிக்காதே… விட்டுத்தள்ளு.”
 
“சரி சரி… பை.” அவசரமாக அழைப்பைத் துண்டித்தான் வருண்.
அம்மா சொல்வதைப் போல அத்தனை எளிதில் இவர்களைச் சும்மா விட அவன் மனம் இசையவில்லை. ஒரு கை பார்த்தே ஆகவேண்டும்.
 
எத்தனை எளிதாக இன்று அவமானப்படுத்தினார்கள்! குடும்பம், கௌரவம், அது, இது என்று எவ்வளவு பேசினார்கள்!
 
அப்படியென்றால்… அவனுக்குக் குடும்பமில்லையா? அதற்கென்றொரு கௌரவம், அந்தஸ்து இல்லையா? இத்தனைக் கீழ்த்தரமாக தன்னையும் தன்னைப் பெற்றவர்களையும் பேசுபவர்களைச் சும்மா விடுவதா?
 
“சார்.”
 
“சொல்லுங்க சரவணன்.”
 
“வெள்ளவத்தையில ஒரு நல்ல ஃபேமஸ் லாயர் இருக்கார், நாளைக்கு காலையில பத்து மணிக்கு அப்பாயின்மென்ட் குடுத்திருக்காங்க சார்.”
 
“ஓகே சரவணன், டைமுக்கு வந்திடுங்க, நான் ரெடியாகி வெயிட் பண்ணுறேன்.”
 
“ஒன்னும் ப்ராப்ளம் இல்லை சார், சாப்பிட்டுட்டு நிம்மதியா தூங்குங்க, நாளைக்கு எல்லாத்தையும் பார்த்துக்கலாம்.”
 
“ம்…” அதற்கு மேல் இருவரும் அங்கு தாமதிக்காமல் கிளம்பிவிட்டார்கள். 
சரவணனின் மனது வருணை நினைத்து மிகவும் வேதனைப்பட்டது. சிலரைப் பார்க்கும்போது நம் மனதில் ஒரு வித பிணைப்பு உருவாகிவிடும்.
அதற்குக் குறிப்பாக எந்தக் காரணமும் இருப்பதில்லை.
 
ஆள்மனது அவர்கள் நல்லவர்கள் என்று நம்மிடம் அடித்துச் சொல்லும், விவாதிக்கும்.
 
சரவணனுக்கும் வருணை பார்த்த போது அப்படித்தான் தோன்றியது. ஏதோவொரு நட்புணர்வு உருவானது. இன்று சாயங்காலம் நடந்தேறிய நிகழ்வுகள் அந்த உணர்வை இன்னும் அதிகமாக்கியது.
 
வருணின் பிரச்சனை என்னவென்று சரவணனுக்கு முழுதாக தெரியாது. கேட்பதுவும் நாகரிகமில்லை. ஆனால் லேசாக புரிந்தது. கூட நின்று தோள் கொடுக்க மனது தவித்தது.
 
சரவணனின் வயதும் தொழிலும் மனிதர்களை எடைபோட கற்றுக்கொடுத்திருந்தது. இன்று அந்த வீட்டில் இருந்த மனிதர்களை ஓரளவு சரியாகவே எடைபோட்டிருந்தான்.
 
அங்கிருந்து கிளம்புவதற்கு சற்று முன்பாக சட்டென்று அந்தப் பெண் மாடியின் பால்கனிக்கு வந்ததையும் தன்னோடு சைகையில் பேசியதையும் சரவணன் இப்போது வருணிடம் சொல்லவில்லை.
 
வீட்டைப் பார்ப்பதற்காக வருண் உள்ளே போனபோது காட்சிகளின் வீரியம் தாங்காமல் காரின் அருகில் வந்து நின்றுகொண்டான் சரவணன்.
சட்டென்று அப்போது அந்தப் பெண் மாடி பால்கனிக்கு வந்தாள். வருண் எந்த ஹோட்டலில் தங்கி இருக்கின்றான் என்று கேட்டாள்.
 
சரவணனும் சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு பதில் சொன்னான். சட்டென்று புரிந்து கொண்டாள்.
 
பொதுவாக அந்த ஹோட்டல் வெளிநாட்டவர்களின் தெரிவு என்பதால் அது ஒன்றும் அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை.
 
அதன் பிறகு சரவணனின் தொலைபேசி இலக்கத்தையும் வாங்கிக் கொண்டாள். காரின் அருகில் நின்றபடியே கைகளால் ஒவ்வொரு இலக்கமாக சரவணன் காட்ட அதைக் குறித்துக் கொண்டு கட்டை விரலை உயர்த்திக் காட்டிவிட்டு உள்ளே போய் விட்டாள். 
 
சரவணன் இந்த நிகழ்வைப் பற்றி இப்போது வருணிடம் கூறவேண்டாம் என்று முடிவு செய்து கொண்டான். அந்தப் பெண் ஏதோ இவனுக்கு உதவ நினைப்பது போலதான் தெரிந்தது.
என்னதான் நடக்கிறது என்று பார்ப்போமே! அந்தக் கார் ஹோட்டலை நோக்கி நகர்ந்தது.
 
***
 
அடுத்த நாள் காலை சரியாக பத்து மணிக்கு வருணும் சரவணனும் அந்த லாயரின் ஆஃபீஸில் இருந்தார்கள். கொஞ்சம் வயதான மனிதர், ஆனால் அனுபவம் மிகுந்தவர் என்று புரிந்தது.
 
கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் அந்தச் சந்திப்பை ஏற்பாடு பண்ணி இருந்தான் சரவணன். வருண் இலங்கையில் தங்க நினைத்திருந்த நான்கு நாட்கள் எந்த ஏற்பாட்டிற்கும் போதுமானதாக இருக்கவில்லை.
 
“இத்தனை வருஷம் கழிச்சு என்ன வருண் அந்த சொத்து மேல இப்போ திடீர்னு ஆசை?” அந்த லாயர் கேட்கவும் சரவணன் சட்டென்று எழுந்து வெளியே போகப்போனான்.
 
“பரவாயில்லை உட்காருங்க சரவணன்.” அவனைத் தடுத்த வருணின் குரல் லாயருக்கு பதில் சொன்னது.
 
“இப்பவும் சொத்து மேல எந்த ஆசையும் கிடையாது சார்… சமீபத்துலதான் அப்பாவோட பழைய டைரி ஒன்னு அம்மாவோட கண்ணுல பட்டிருக்கு.”
 
“ம்…” 
 
“அம்மாவைக் கல்யாணம் பண்ணுறதுக்கு முன்னாடியே இந்த லேன்ட் டை அப்பா வாங்கி இருக்காங்க, அப்பாவோட சிஸ்டருக்கு அப்போ கல்யாணம் ஆகாததால அதை முடிச்சுட்டு வீட்டு வேலையை ஆரம்பிக்கலாம்னு அப்பா நினைச்சிருக்காங்க.”
 
“ஓ…”
 
“இதுக்கு நடுவுலதான் அப்பா அம்மாவை மீட் பண்ணி இருக்காங்க, சரி எப்பிடியும் இவங்களையெல்லாம் சம்மதிக்க வெக்கலாம்னு நினைச்சிருப்பாங்க போல.”
 
“ம்…”
 
“தங்கையோட கல்யாணத்துக்குத் தேவையான பணத்தை ரெடி பண்ணிக் குடுத்துட்டு வீட்டு வேலையை ஆரம்பிச்சிருக்காங்க.”
 
“அப்போ அதுவரைக்கும் ஆச்சீ அப்பாவோட நல்லாத்தான் இருந்திருக்காங்க?”
 
“ஆமா… ஆச்சியோட தூரத்து சொந்தம்தான் அந்த அழககோன்.”
 
“யாரு… உங்க மாமியோட வீட்டுக்காரரா?”
 
“ஆமா… கொஞ்சம் வசதியான இடம், பையன் யூகே ல இருக்கான்… இப்பிடிக் கணக்குப் போட்டு மாமியைக் கல்யாணம் பண்ணி இருக்காரு.”
 
“ஓ…”
 
“அப்பாக்கு இந்தக் கல்யாணத்துல அவ்வளவு இஷ்டம் இருக்கலையாம், ஆனா ஆச்சியை எப்பிடியோ கைக்குள்ள போட்டுக்கிட்டு காரியத்தைச் சாதிச்சிருக்காரு.”
 
“ஆக… காசுக்காக கல்யாணம் பண்ணி இருக்காரு!”
 
“ஆமா சார்.”
 
“மாமியோட லைஃப் எப்பிடி இருக்கு?”
 
“அது தெரியலை சார்.”
 
“ம்…”
 
“ஆச்சி எந்த விஷயத்துலயும் அப்பா பேச்சைக் கேட்கலை, கல்யாணம் பண்ண சம்மதமும் குடுக்கலை, ஒரு கட்டத்துல அப்பா யூகே ல அம்மாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.”
 
“ம்…”
 
“அப்பா தொடர்ந்து பணம் அனுப்பிக்கிட்டே இருந்திருக்காங்க, வீட்டையும் கட்ட ஆரம்பிச்சிருக்காங்க, எனக்கு ரெண்டு வயசா இருந்தப்போ மாமியோட கல்யாணம் நடந்திருக்கு.”
 
“ஏன் அவ்வளவு லேட்?”
 
“அது தெரியலை சார், இந்த மனுஷன் சும்மா எதையும் பண்ணி இருக்க மாட்டாரு, ஏதாவது கணக்குப் போட்டிருப்பாரு.”
 
“இருக்கலாம்.”
 
“கல்யாணத்துக்கு அப்பா, அம்மா எல்லாரும் வந்திருக்காங்க.”
 
“உங்களுக்கு எதுவும் ஞாபகமில்லையா வருண்?”
 
“இல்லை சார்.”
 
“கல்யாணத்துல என்ன நடந்துதாம்?”
 
“அதை இன்னை வரைக்கும் அம்மா எங்கிட்ட சொன்னதில்லை, ஆனா அந்தக் கல்யாணத்தோட அப்பா தன்னோட குடும்பம் தனக்கு வேணாம்னு முடிவு பண்ணிட்டாங்க.”
 
“ஓ… தமிழ் பொண்ணு, யாழ்ப்பாணம் வேற… கேக்கணுமா?” இப்போது அந்த லாயர் சிரித்தார்.
 
“ஆனா அப்பா அதை அனுமதிக்கலை சார், என்னோட அம்மாவை ராணி மாதிரித்தான் பார்த்துக்கிட்டாரு.”
 
“ரொம்ப நல்ல மனுஷரா இருந்திருப்பாரு போலயே?!”
 
“ஆமா சார்.”
 
“ஆச்சிதான் கொஞ்சம் ரஃப் லேடியா தெரியுறாங்க, ஆனா சிஸ்டர்… நல்ல மாதிரியோ?”
 
“ம்… அப்பிடித்தான் தெரியுது சார், அம்மாவும் அதையேதான் சொல்லுவாங்க.”
 
“அப்பா அதுக்கப்புறம் சிஸ்டர் கூடவும் பேசலையா?”
 
“என்ன நடந்தது ஏது நடந்ததுன்னு இன்னைக்கு வரைக்கும் எனக்கு ஒரு க்ளியர் பிக்சர் இல்லை சார், வீட்டுல அம்மா, அப்பா ரெண்டு பேருமே நான் இருக்கும் போது இது சம்பந்தமா எதுவுமே பேசமாட்டாங்க, ஒருவேளை தனியா பேசிக்குவாங்களோ என்னமோ!”
 
“ம்…”
 
“ரெண்டு மூனு தடவை மட்டும் வீட்டுல லைட்டா சண்டை வந்திருக்கு.”
 
“யாரு? உங்கப்பாவா? அம்மாக்கூட சண்டைப் போட்டாங்களா? இது அவரோடு கேரக்டருக்கு செட் ஆகலையே வருண்!” லாயர் கேலி பண்ணிச் சிரிக்க சரவணனும் சிரித்தான்.
 
“அம்மாதான் சண்டைப் போட்டாங்க சார்.”
 
“ஆ… இது ஓகே.” மீண்டும் இப்போது அங்கே சிரிப்பலை.
 
“தன்னால அப்பா அவரோட குடும்பத்தைப் பிரிஞ்சிருக்கிறது அம்மாக்கு ரொம்ப கில்ட்டியா இருந்திருக்கும் போல… ஸ்ரீ லங்கா போய்ட்டு வாங்கன்னு சொன்னாங்க, பட்… அப்பா மறுத்துட்டாங்க.”
 
“ம்… அதெல்லாந்தான் இவங்களுக்கு ரொம்பக் கோபத்தை உண்டு பண்ணி இருக்கும் போல.”
 
“இருக்கலாம்.”
 
“சிஸ்டரோட ஒரு நல்ல ரிலேஷனை அப்பா மெயின்டெய்ன் பண்ணி இருந்திருக்கலாம்.”
 
“இந்த மனுஷனை அப்பாக்கு பிடிக்கலைப் போல, இவரைக் கல்யாணம் பண்ணாதேன்னு அப்பா சிஸ்டர் கிட்ட சொல்லி இருந்திருக்காங்க, ஆனா அவங்களுக்கு அம்மா பேச்சைத் தட்ட முடியலை.”
 
“ம்…” 
இப்போது சற்று நேரம் அந்த இடத்தில் அமைதி நிலவியது. 
 
“அந்த வீடு இப்போ உங்களுக்கு வேணும்னு நீங்க நினைக்கிறீங்க இல்லையா வருண்?”
 
“ஆமா சார்.”
 
“ஆனா நீங்க போட்ட லெட்டருக்கு ரொம்ப காரசாரமான பதில் அனுப்பி இருக்காங்களே? அதுல இருந்தே அது நடக்காதுன்னு உங்களுக்குப் புரியலையா?”
 
“எங்கப்பா வீட்டை எனக்குக் குடுக்கிறதுக்கு இவங்க யாரு சார்?”
 
“அது உங்கப்பா வீடுதான் எங்கிறதுக்கு எந்த ஆதாரமும் இல்லையே வருண்? லேன்ட் ஆச்சி பேர்ல லீகலா ரெஜிஸ்டர் ஆகி இருக்கு.”
 
“அப்பா இந்த ஆச்சிக்குப் பணம் அனுப்பினதுக்கான எல்லா ஆதாரமும் எங்கிட்ட இருக்கு சார்.”
 
“ம்…” வக்கீல் பலமாக யோசித்தார்.
 
“அப்பா பணம் அனுப்பாம இதெல்லாம் பண்ணுற அளவுக்கு இவங்கக்கிட்ட எதுவுமே இல்லை சார்.”
 
“அதையெல்லாம் சட்டம் தூண்டித் துருவி பார்க்காது வருண், டாக்குமெண்ட் லீகலா ஆச்சி பேர்ல இருக்கு, ரைட்?”
 
“ஆமா சார்.”
 
“அப்போ இது அவங்க சொத்து.”
 
“எங்க இருந்து வந்துது சார் அந்த ஆச்சிக்கு இந்த சொத்து?” வருணின் குரலில் இப்போது கோபம் தெறித்தது.
 
“அது சட்டத்துக்குத் தேவையில்லாத விஷயம் வருண், ஆதிமூலம் ரிஷிமூலம் எல்லாம் சட்டம் பார்க்காது.”
 
“அப்போ எனக்கு…” அதற்கு மேல் வார்த்தைகள் சிக்கியது வருணுக்கு.
 
“டென்ஷன் ஆகாதீங்க வருண், கேஸ் ஃபைல் பண்ணலாம், இல்லேங்கலை… உங்கக்கிட்ட இருக்கிற எவிடன்ஸை கோர்ட்ல காட்டி வாதாடலாம்… ஆனா…”
 
“…………..”
 
“உங்கப்பா பணம் அனுப்பி இருக்காரு, ஆனா அதை யூஸ் பண்ணித்தான் இந்த வீட்டைக் கட்டி இருக்காங்க எங்கிறதை அவங்க மறுக்கலாம்… அடுத்ததா, அவங்களுக்கு வேற ஏதாவது வருமானம் இருந்ததா காட்டலாம்.”
 
“அப்பிடி எதுவுமே இல்லை சார்.”
 
“திட்டம் போட்டு குடும்பத்துக்குள்ள வந்த மாமா இதையெல்லாம் முறையடிக்க இந்நேரம் இன்னொரு திட்டம் போடாம இருப்பாருன்னா நினைக்கிறீங்க?”
 
“அப்பா அவரோட கைப்பட எழுதின டைரி இருக்கு சார், அந்த ஆதாரம் போதாதா?”
 
“அந்த வகையில பார்த்தாலும்… ஆச்சி பேர்ல லீகலா டாக்குமெண்ட் இருக்கிறதால உங்களுக்கு ஏதாவது ஷேர் கிடைக்க வாய்ப்பிருக்கு வருண்.”
 
“என்னது? ஷேரா?!”
 
“அதுவும் அந்தம்மா விருப்பப்பட்டா…”
 
“இது அநியாயம் சார்!”
 
“நியாய அநியாயம் எல்லாம் மனசாட்சிக்குப் பயப்பட்டவங்களுக்குத்தான் வருண்.” லாயர் லேசாக புன்னகைத்தார். 
 
“வேற ஏதாவது வழி இருக்கா சார்?”
 
“ஒன்னு… நீங்க அவங்களை உங்க வழிக்குக் கொண்டு வந்து அவங்களா உங்களுக்குச் சொத்தை விருப்பப்பட்டுக் குடுகாகணும்.”
 
“அதுக்கு வாய்ப்பே இல்லை சார்.”
 
“இல்லைன்னா…”
 
“சொல்லுங்க சார்.”
 
“ஒரு லாயரா இதை நான் உங்களுக்குச் சொல்லக் கூடாது.”
 
“பரவாயில்லை, சொல்லுங்க சார்.”
 
“அவங்களா சொத்தை உங்களுக்குக் குடுக்கணும்.”
 
“புரியலை…”
 
“நீங்க குடுக்க வைக்கணும்… நீதி, நியாயம், நேர்மை இதையெல்லாம் தூக்கிக் குப்பைத்தொட்டியில போட்டுரணும்.”
 
“ஓ…” வருண் திகைத்தது ஒரு நிமிடம்தான்.
 
“எதுக்கும் எனக்கு ரெண்டு நாள் டைம் குடுங்க வருண், ஜூனியர்ஸோட உங்க கேஸை டிஸ்கஸ் பண்ணுறேன், ஏதாவது லூப் இருக்கான்னு பார்க்கலாம்.” 
லாயரின் குரலில் அவ்வளவு நம்பிக்கை இருக்கவில்லை. அது தனக்காகச் சொல்லப்பட்ட ஆறுதல் வார்த்தைகள் என்று வருண் புரிந்து கொண்டான்.
 
வருணும் சரவணனும் அதற்கு மேல் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள். ஹோட்டலை வந்து சேரும் வரை இருவரும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. 
 
“நம்பிக்கையோட இருங்க சார், ஏதாவது ஒரு வழி கிடைக்காம போகாது.”
 
“பார்க்கலாம் சரவணன்.”
சரவணன் காரை பார்க்கிங்கில் நிறுத்த வருண் இறங்கினான். அதே நொடி இவர்களுக்கு எதிர்திசையில் பார்க் பண்ணியிருந்த அந்த ப்ளாக் ஆடியிலிருந்து ஒரு பெண் இறங்கினார்.
 
வருண் சட்டென்று அண்ணார்ந்து பார்த்தான். இறங்கியது வேறு யாருமல்ல… விஷாகா! ட்ரைவர் ஸீட்டில் அமர்ந்திருந்தாள் மயூரி!