அழகியே 7

அழகு 07
 
மணி ஏழைத் தாண்டும் போதே ஆச்சி வீட்டில் தன் அர்ச்சனையை ஆரம்பித்துவிட்டார். காரணம் இன்னும் மயூரி வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை.
 
விஷாகாவிற்கு பெரிய தலை வேதனையாக இருந்தது. இதுவே இப்போது வாடிக்கையாகி விட்டது.
‘இந்தப் பெண் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறதே!’ கிச்சனில் நின்றுகொண்டு இரவு உணவைத் தயாரித்தபடி தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தார் விஷாகா.
 
அந்தத் தாயிற்கு மகளின் மனது லேசாக இப்போது பிடிபட்டது. எப்போதும் ஆச்சியை எதிர்ப்பவள்தான் மயூரி. ஆனால், வருண் வந்து போன பிற்பாடு அந்த எதிர்ப்புணர்வு இன்னும் அதிகப்பட்டிருந்தது.
 
விஷாகாவிற்கும் தன் அன்னை, அண்ணன் மகனிடம் நடந்துகொண்ட முறையில் உடன்பாடு இல்லைதான். இருந்தாலும் இப்படியே வாழ்ந்து பழகியவர் என்பதால் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விட்டார்.
 
ஆனால் மயூரி ஆச்சியை முழுதாக எதிர்த்தாள். தன்னால் முயன்றமட்டும் வேண்டுமென்றே காரியங்கள் பண்ணினாள்.
 
ஆச்சிக்கு வீட்டுக்குத் தாமதமாக வருவது சுத்தமாகப் பிடிக்காது என்பதால் இப்போதெல்லாம் தினமும் தாமதமாகவே வந்தாள்.
 
“இப்பிடிப் பண்ணாதே மயூரி.” விஷாகா எவ்வளவு கெஞ்சியும் அவள் கேட்கவில்லை.
 
அன்றைக்கும் வழமைபோல பேத்தி மீது குற்றப்பத்திரிகைப் படித்த ஆச்சி மருமகனிடம் மயூரியின் திருமணத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார்.
 
“வயச யனவனே புத்தே.(வயது போகிறதே மகன்)” 
ஆச்சிக்கும் அழககோனுக்கும் அந்த டாக்டர் பையன் மேல் நல்ல அபிப்பிராயம் இருந்ததால் அந்த வரனையே முடித்து விடலாம் என்று திட்டம் போட்டார்கள்.
 
இவர்கள் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது அழககோனின் ஃபோனிற்கு ஒரு மெஸேஜ் வந்தது. 
 
பேச்சை நிறுத்திவிட்டு ஃபோனை எடுத்துப் பார்த்தவர் அதிர்ந்து போனார். மருமகனின் முகத்தைப் பார்த்த ஆச்சியும்,
 
“மொக்கத்த புத்தே?(என்ன மகன்?)” என்றார் கலவரத்தோடு.
வெள்ளவத்தை பீச் அருகே அந்த ப்ளாக் ஆடி தன்னந்தனியாக தன் எஜமானி இல்லாமல் நின்றிருந்தது.
 
“மகே தெய்யோ!(ஆண்டவா!)” ஃபோனுக்கு வந்திருந்த படத்தைப் பார்த்துவிட்டு ஆச்சி அலற, சமையலறையில் இருந்து ஓடிவந்தார் விஷாகா.
 
“என்ன ஆச்சு?” அவர் கேட்ட கேள்விக்கு அங்கிருந்த இருவருமே பதில் சொல்லாமல் போக கணவரின் கையிலிருந்த ஃபோனை சட்டென்று பிடுங்கிப் பார்த்தார். 
 
இரண்டென இருந்த சிலைகள் இப்போது மூன்றென ஆனது!
 
பேச மறந்து பெரியவர்கள் திகைத்து நின்றது எவ்வளவு நேரமோ தெரியாது. சட்டென்று காலிங் பெல் அடிக்கவும் மூவரும் உறைந்து போனார்கள்.
 
தன்னைச் சமாளித்துக் கொண்டு எழுந்து போன அழககோன் வீட்டு வாசலில் யாரையும் காணாது திகைத்துப் போனார்!
 
பயப்பந்து நெஞ்சுக்குள் உருள பெண்கள் இருவரும் எழுந்து போய் பார்த்தபோது மயூரியின் ஹேன்ட் பாக் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்தது.
 
அதைப் பார்த்த மாத்திரத்திலேயே விஷாகா அதிர்ந்து போய் உட்கார… இப்போது மீண்டுமொரு மெஸேஜ் ஃபோனிற்கு வந்தது. 
 
‘சொன்னது போல செய்து முடித்தால் எந்தச் சேதாரமும் இல்லாமல் பெண் வீடு வந்து சேருவாள், அதிகப்பிரசங்கித்தனமாக போலீஸுக்கு போய் உன் புத்தியைக் காட்டினால் பெண் கடலில் மிதப்பாள்!’
 
அந்தக் ‘கடல்’ என்ற வார்த்தையில் விலுக்கென்று நிமிர்ந்தார் விஷாகா. ஆனாலும் மனது ஏற்றுக்கொள்ள மறுத்தது.
 
‘சீச்சீ… இருக்காது…’ தனக்குள் சொல்லிக்கொண்டே உள்ளுக்குள் உருக ஆரம்பித்தார். தகவல்களை வழங்கிய எண்ணும் புதிதாக இருக்கவே யாராலும் எந்த முடிவுக்கும் வர இயலவில்லை.
 
என்ன செய்வது என்று புரியாமலேயே குழப்பத்தோடு கழிந்தது அந்த இரவு! சரியாக இரவு பன்னிரண்டு மணிக்கு மீண்டுமொரு தகவல் வந்தது அழககோனின் ஃபோனுக்கு!
 
***
மயூரிக்கு இமைகளைப் பிரிப்பது வெகு சிரமமாக இருந்தது. பசைப் போட்டு ஒட்டியது போல பிரிய மறுத்தன.
 
மின்குமிழ் வெளிச்சம் இமைகளைத் தாக்கவும் சிரமப்பட்டுக் கண்களைத் திறந்தாள். தலை விண்ணென்று தெறித்தது. நெற்றிப் பொட்டைச் சுட்டு விரலால் அழுத்திப் பிடித்தாள்.
 
இருக்கும் இடம் வித்தியாசமாக இருக்க சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள் பெண். நெஞ்சுக்குள் திக்கென்றது!
 
‘நான் எங்கே இருக்கிறேன்?!’
மூளைக்குள் ஏதோ மணியடிக்க சட்டென்று தன் ஆடைகளைச் சரிபார்த்தாள். எந்த மாறுதலும் தெரியவில்லை.
 
மனதுக்குள் ஓர் இதம் பரவ இதுவரை அடைத்து நின்ற மூச்சுக்காற்றை ஒரு பெருமூச்சாக வெளியிட்டவள், சுற்றும்முற்றும் அந்த அறையைப் பார்த்தாள்.
 
‘என்னைச் சுற்றி என்ன நடக்கிறது?!’ அந்த அறைக்குள் இருந்த செயற்கை வெளிச்சம் மயூரியின் மனதுக்குள் திகிலை மூட்டியது.
 
‘இப்போது இரவா பகலா? நேரம் என்ன?’
 
தனக்கு இறுதியாக நினைவிருந்த நிகழ்வுகளைச் சட்டென்று மீட்டிப் பார்த்தாள். வேலையை விட்டு வீடு கிளம்பியது ஞாபகம் வந்தது.
சரவணனோடு கூடப் பேசினாளே!
 
அதன் பிறகு… ஏதோ நினைவு வர தனது கைக்கடிகாரத்தைத் திருப்பி அன்றைய தேதியைப் பார்த்தாள். நடந்தது அத்தனையும் நேற்றைய நிகழ்வுகள் என்று சொன்னது கடிகாரம்.
 
காருக்குள் ஏறி அமர்ந்த போது ஏதோ ஒரு கால் வந்தது. கடைசியாக பேசி முடித்த போது ஏதோ வித்தியாசமான வாசம் வந்தது ஞாபகம் இருந்தது.
 
காரிற்குள் யாரோ மயக்க மருந்தை அடித்திருக்கிறார்கள். தான் காரை ஸ்டார்ட் பண்ணி விடக்கூடாது என்பதற்காக ஃபோன் பண்ணி இருக்கிறார்கள்! ஆனால் யார்?!
 
‘கார் என்ன ஆனது? அம்மா தேடுவார்களே? சும்மாவே குதிக்கும் ஆச்சிக்கு இப்போது மெல்லுவதற்கு நல்ல அவல் கிடைத்திருக்கும்.
ஆனாலும்… அம்மா தவித்துப் போவார்களே?!’
 
நெஞ்சு தடதடவென அடித்துக்கொள்ள உடம்பு குளிர்ந்து போனது. கண்களைக் கரித்துக் கொண்டு வந்தது. பயத்தால் அடிவயிற்றில் ஏதோ அசௌகரியமாக உணர்ந்தாள்.
 
கலங்கிய மனதையும் பயந்த உடலையும் மெதுமெதுவாக நிதானப்படுத்தினாள் மயூரி. இது கலங்கும் நேரமல்ல. நிதானமாக சிந்திக்கும் நேரம். 
 
தன் கலக்கமும் பயமும் எதிராளிக்குச் சாதகமாகிவிடும். அதற்கு இடம் கொடுக்கக் கூடாது.
 
இயற்கையிலேயே மயூரி கொஞ்சம் தைரியமான பெண் என்பதால் தன்னை ஒருநிலைப் படுத்திக்கொண்டாள்.
 
சற்று நேரம் எதுவுமே புரியவில்லை. யார் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள்?! தன்னை இந்த நிலையில் கொண்டு வந்து நிறுத்தும் அளவிற்கு தனக்கு எதிரிகளென்று யாருமில்லையே!
 
பணம் பணமென்று பறக்கும் தன் தந்தை கூட பகைவர்களைச் சம்பாதித்ததில்லையே!
 
அப்படியிருக்க ஏன் இப்படியெல்லாம் தனக்கு நடக்கிறது?!
 
என்ன, ஏது என்று எதுவும் புரியாமல் மலங்க விழித்தபடி மயூரி சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள். வாய் கசந்து வழிந்தது.
 
அந்த அறையை மீண்டுமொரு முறைத் தலையைத் திருப்பிப் பார்த்தாள். வித்தியாசமாக இருந்தது.
 
‘என்ன மாதிரியான இடம் இது?!’ வீடு போலவும் இல்லை, ஹோட்டல் ரூம் போலவும் இல்லை. 
 
அறையின் கதவை மெதுவாக இழுத்துப் பார்த்தாள். வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்தது. சலிப்போடு நின்றிருந்தவளுக்கு இயற்கைத் தன் செயற்பாடுகளைக் காட்ட ஆரம்பிக்க சட்டென்று அந்த அறையோடு ஒட்டியிருந்த வாஷ் ரூமிற்கு ஓடினாள்.
 
அதுகூட ஏதோ மினியேச்சர் போலவே இருந்தது. எல்லா வசதிகளும் இருந்தன, ஆனால் அளவில் சிறியதாக இருந்தது.
 
ரூமிலேயே பேஸ்ட், பிரஷ், டவல் என அனைத்தும் இருக்கவே காலைக் கடன்களை முடித்துக்கொண்டு வந்து கட்டிலில் அமர்ந்தாள்.
 
சட்டென்று தலைக்கு மேல் ஏதோ பொருட்கள் அசையும் சத்தம் கேட்டது. ஓடிப்போய் மீண்டும் கதவை இழுத்துப் பார்த்தாள்.
 
“யாராவது இருக்கீங்களா? ஹலோ… ஹெல்ப்…” மீண்டும் மீண்டும் கத்தியும் எந்தப் பிரயோசனமும் இருக்கவில்லை. 
 
கதவோடு ஓய்ந்து போய் அமர்ந்தவளுக்குப் பசித்தது. கண்ணை லேசாக கரித்துக்கொண்டு அழுகை வர சுற்றும்முற்றும் பார்த்தாள். 
 
சின்னதாக ஒரு ஃபிரிட்ஜ் இருந்தது. மயூரிக்கு காலையில் எழுந்தவுடன் டீ குடிக்காவிட்டால் தலை வலிக்கும். இவள் ப்ரஷ் பண்ணிய உடனேயே டீயை நீட்டுவார் விஷாகா.
 
‘கடவுளே! என்ன சோதனை இது? யார் இப்படியெல்லாம் பண்ணுகிறார்கள்? எதற்காக? அம்மா என்னைக் காணாமல் துடித்துப் போவார்களே?’ கண்ணீர் முட்டிக்கொண்டு வர சட்டென்று எழுந்து அந்த ரூமை மீண்டும் ஆராய்ந்தாள்.
 
டீவி மாத்திரம் இருந்தது. தொலைபேசி இருந்த இடத்தில் அது அகற்றப்பட்டிருந்தது. வேண்டுமென்றே அகற்றி இருக்கிறார்கள்.
 
தலை லேசாக வலிக்க ஆரம்பித்தது. கூடாது… இப்போது தலைவலி வேறு வந்து தொலைத்தால் அவளால் எதையும் சிந்திக்க முடியாது.
 
அவசர அவசரமாக ஃபிரிட்ஜை திறந்து பார்த்தாள். கேக், பழங்கள், ஜூஸ் என நிறையப் பொருட்கள் இருந்தன.
 
‘ஆக… தன்னைப் பட்டினி போட்டு சாகடிக்கும் எண்ணம் சம்பந்தப்பட்டவர்களுக்கு இல்லை.’
அப்படி எதை எதிர்பார்த்து என்னை இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள்?! அந்த டாக்டரின் முகம் மயூரியின் மனதுக்குள் வந்து போனது.
 
“சீச்சீ! அந்த லூசுக்கு இந்தளவு தைரியம் இருக்கா என்ன?!” வாய்விட்டே புலம்பியவள் கேக்கை எடுத்துச் சாப்பிட்டாள். 
 
வாய் கசப்பிற்கு லெமன் கேக் நன்றாக இருந்தது. இப்போது மீண்டும் தலைக்கு மேல் சத்தம் கேட்கவும் மீண்டும் ஓடிப்போய் கதவை திறக்க முயற்சித்தாள். 
 
சத்தம் போட்டுப் பார்த்தாள். எந்தப் பதிலும் இல்லை. இப்படியே இரண்டு மணிக்கூறுகள் கடந்து போக மயூரி ஓய்ந்து போனாள். 
 
சரி… பார்க்கலாம்! எந்த ஒரு விஷயத்திற்கும் முடிவென்ற ஒன்று இருக்க வேண்டும்தானே! கொஞ்ச நேரம் தைரியமாக இருந்த மனது பிற்பாடு கலங்கிப் போனது.
அறையில் இருக்கும் வசதிகளைப் பார்த்த போது…
 
சம்பந்தப்பட்டவர்களுக்குத் தன்னை நோகடிக்கும் எண்ணம் கொஞ்சமும் இல்லை என்று நன்றாகவே புரிந்தது.
தன்னிடம் தவறாக நடந்து கொள்ளும் எண்ணம் இருந்திருந்தால் அந்த எண்ணத்தை நேற்றிரவே நடத்திக் கொண்டிருக்கலாமே!
 
இந்த எண்ணம் தோன்றிய போது பெண் உள்ளம் ஒரு கணம் தைரியம் கொண்டது.
 
ஒருவேளை… தன்னை மனதால் வலுவிழக்கச் செய்துவிட்டு நோகடிக்க நினைக்கிறார்களோ!
 
குரங்கு மனது எப்படி எப்படியெல்லாமோ தன் இஷ்டப்படி கற்பனைப் பண்ணியது.
இவ்வளவெல்லாம் பண்ணும் அளவிற்குத் தனக்கு எதிரியென்று யாருமில்லையே! மனது மீண்டும் குழம்பியது.
 
‘எதுவாக இருந்தாலும் வருவது வரட்டும்! ஒரு கை பார்த்து விடுகிறேன். அப்படி என்ன செய்து விடப்போகிறார்கள்?!’
 
ஆனால் மயூரியின் மன உறுதியையும் குலைக்கும் வகையில் நடந்தேறின அடுத்து வந்த நிகழ்வுகள். 
 
அன்றைக்கு முழுவதும் அந்த அறைக்குள் யாரும் வரவேயில்லை. அவ்வப்போது தலைக்கு மேலே ஏதேதோ சத்தங்கள் கேட்டன. 
 
அப்போதெல்லாம் மயூரி உதவி தேடி அழைத்துப் பார்த்தாள். பலம் கொண்ட மட்டும் கதவைத் தட்டினாள். எந்தப் பிரயோஜனமும் இல்லை.
 
ஒரு கட்டத்தில் உள்ளும் புறமும் ஓய்ந்து போனது. அந்த அறைக்கு ஜன்னலும் இருக்கவில்லை. சுற்றுப்புறத்தை ஆராய்ந்தாலாவது தான் எங்கே இருக்கிறோம் என்று புரிந்து போகும். 
 
இரவு நெருங்க நெருங்க மயூரிக்கு மனது பந்தயக் குதிரை போல தடதடத்தது. கண்கள் லேசாக சொருகியது. ஆனாலும் கண்மூடித் தூங்க அவள் பெண்மை அனுமதிக்கவில்லை.
 
நேற்று காலையில் அணிந்த ஆடை. மனது அருவருக்க பெயருக்கு அந்த கேக்கையே மீண்டும் உண்டுவிட்டு கட்டிலில் அமர்ந்தாள்.
 
இரண்டு ஒற்றைப் படுக்கைகளை (சிங்கிள் பெட்) ஒன்றாக இணைத்துப் போடப்பட்டிருந்தது. கட்டிலுக்கு எதிரே சின்னதாக ஒரு கப்போர்ட் இருந்தது. 
இத்தனை நேரமும் அதைத் திறந்து பார்க்கத் தோன்றவில்லை அவளுக்கு. தனக்கான ஆடைகள் ஏதாவது அங்கிருக்குமோ என்ற எண்ணம் தோன்ற திறந்து பார்த்தாள். வெறுமையாக இருந்தது.
 
டீவியும் வேலை செய்ய மறுத்தது. எல்லாவற்றையும் திட்டமிட்டே செயலிழக்கச் செய்திருக்கிறார்கள்.
 
அந்த கப்போர்டில் ஒன்றிரண்டு ஆங்கில நாளிதழ்கள் இருக்க அதை எடுத்துப் புரட்டினாள். எப்போது தூங்கினாள் என்று தெரியாது. 
 
சட்டென்று கண்விழித்த போது கட்டிலில் இருந்த போர்வையை இயல்பாக போர்த்தியபடி தான் உறங்கியிருப்பது புரிந்தது. 
 
எழுந்து உட்கார்ந்து கைக்கடிகாரத்தைப் பார்த்தாள், அடுத்த நாள் என்றது. பயம் இப்போது கொஞ்சம் விலகி இருந்தது. சூரியனைப் பார்த்து இரண்டு நாட்கள் ஆகின்றன.
 
தினமும் வரும் சூரியன்… நாம் என்றைக்கும் அதைக் கண்டு கொண்டதே இல்லை. இப்போது இல்லை என்றபோது அதன் அருமைப் புரிந்தது.
 
‘எதற்காக இப்படி தினமும் சுட்டெரிக்கிறாய்?!’ என்று கோபம் கொள்வது மறந்து போய் அதே சூரியனைப் பார்க்க மனது அந்தக் கணம் ஏங்கியது.
 
தலையைப் பிடித்துக்கொண்டு சற்று நேரம் அப்படியே அமர்ந்துவிட்டாள் மயூரி. சூடாக ஏதாவது தொண்டைக்குள் இறங்கினால் போதும் என்றிருந்தது.
 
பல்லை மட்டும் விளக்கிக் கொண்டு வந்தாள். வயிறு முழுதாக நிரம்பாததால் இயற்கை கூட அவளோடு மல்லுக்கட்டியது.
ஃப்ரிட்ஜில் இருந்த உணவுப் பொருட்கள் இப்போது ருசிக்க மறுத்தன. வயிற்றை நிரப்ப வேண்டும் என்பதற்காக எதையோ கொறித்தாள்.
 
தலை வலிக்க ஆரம்பித்தது. இதற்கு மேல் அவளால் முடியாது. நிச்சயம் டேப்லெட் வேண்டும். இல்லாவிட்டால் வாமிட் வருவது உறுதி.
 
உடுத்திருந்த ஆடை இரண்டு நாட்கள் கடந்திருந்ததால் எனக்கு ஓய்வு கொடு என்று கெஞ்சியது. மாற்றுடை இல்லாமல் எப்படிக் குளிப்பது என்றும் புரியவில்லை.
 
அசௌகரியமாக இருக்கவே ஏசியின் குளிர்ச்சியை அதிகப்படுத்தினாள் பெண். நல்லவேளையாக மாதாந்திரத் தொல்லைகளுக்கு இன்னும் நாட்கள் இருந்தன. இல்லாவிட்டால் என்ன ஆகியிருக்கும்?! அந்த வகையில் பிழைத்தாள்.
 
நேரத்தைப் பார்த்தாள், காலை எட்டு மணி என்றது கைக்கடிகாரம். நேற்றும் இன்றும் வேலைக்குப் போகவில்லை. 
 
முறையாக அறிவிக்கவும் இல்லை. வீட்டை நிச்சயம் தொடர்பு கொண்டிருப்பார்கள். ஆனால் கார் வேலை செய்யும் கட்டட வளாகத்தின் பார்க்கிங்கில்தானே நிற்கிறது!
 
அதை யாராவது கவனித்தால் என்ன ஆகும்?! அம்மாவிற்கு எந்த அளவிற்குத் தகவல் போயிருக்கும்?
 
அம்மாவை நினைத்த மாத்திரத்தில் மயூரிக்கு சட்டென்று கண்ணீர் பொங்கியது. வீட்டில் இன்னும் இரண்டு ஜீவன்கள் இருந்தாலும் அவர்களைப் பற்றி அவள் அதிகம் கவலைப்படவில்லை.
 
இந்நேரம் இரண்டு பேரும் கூடிக்கூடி அவளைப் பற்றி தப்புத் தப்பாக ஏதாவது கற்பனைப் பண்ணி இருப்பார்கள். ஆச்சி ‘குடும்ப கவுரவம் காற்றில் பறந்து விட்டதே, யாரை இழுத்துக்கொண்டு ஓடினாளோ!’ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்திருப்பார்.
 
அப்பா… இப்போதாவது ஆச்சியின் பேச்சைக் கேட்காமல் என்னைப் பற்றிச் சிந்திப்பாரா? சந்தேகம்தான்.
 
ஆனால் அம்மா பாவம். என்ன ஏது என்று ஒன்றும் புரியாமல் தவித்துப் போவார்கள். போதாக்குறைக்கு வேலை செய்யும் இடத்திலிருந்து அழைத்து விபரம் கேட்டால் நொறுங்கிப் போவார்கள்.
 
கண் மண் தெரியாத கோபம் வந்தது மயூரிக்கு இப்போது.  தன்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்த அந்த நல்ல மனிதனை தனக்குத் தெரிந்த கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்தாள்.
 
சட்டென்று வருணின் ஞாபகம் வந்தது. இந்த அல்லோலகல்லோலத்தில் அவனை மறந்திருந்தாள் பெண். கண்ணீர் இன்னும் கொஞ்சம் பெருகியது.
அன்றைய பொழுதும் அப்படியே கழிய மயூரி ஓய்ந்து போனாள்.
 
தன்னை இங்கே கொண்டு வந்து சிறை வைத்தவர்களின் நோக்கம் என்னவென்று அவளால் அனுமானிக்க இயலவில்லை.
 
முதலில் யார் இதைச் செய்திருப்பார்கள் என்ற சந்தேகம் இருந்தால்தானே நோக்கத்தை அனுமானிக்க முடியும்! காரியத்தை முடித்தவர்கள் ஏன் காலதாமதம் செய்கிறார்கள்?! 
 
அவர்களின் தேவை என்னவென்று சொன்னால்தானே அவளுக்கும் புரியும். எது எப்படி இருந்தாலும் தன்னைத் தவறான வழியில் நடத்தும் எண்ணம் சம்பந்தப்பட்டவர்களுக்கு இல்லை என்பது மயூரிக்கு இப்போது உறுதியானது.
 
தன் அழகில் மயங்கி யாராவது இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்களா என்றெல்லாம் அவள் சிறிதும் நினைத்துப் பார்க்கவில்லை.
 
அந்தளவிற்கெல்லாம் அவள் அழகின் மேல் அவளுக்கு நம்பிக்கை இல்லை.
சிந்தனையின் போக்கு சிரிப்பு மூட்டவே சத்தமாகச் சிரித்தாள் மயூரி. தனது மாணவர்களைக் கடகடவென்று மனதுக்குள் கொண்டு வந்தாள்.
 
அவர்கள் யாராவது தன்மீது கொண்ட கோபத்தின் காரணமாக இப்படி நடந்து கொள்கிறார்களா? வாய்ப்பே இல்லையே! அவர்களுக்கெல்லாம்
 
‘ப்ரதாயினி மிஸ்’ என்றால் இஷ்டம்தானே!
 
பசி இப்போது காணாமல் போயிருந்தது. அதே கேக்கை எத்தனை நேரத்திற்கு உண்பது? ஃப்ரிட்ஜில் இருந்த ஆப்பிளை மாத்திரம் சாப்பிட்டாள்.
 
உடல், மனம் இரண்டும் லேசாக சோர்ந்து போனது. கட்டிலில் உட்கார்ந்த படி இருந்தவள் அப்படியே கண்ணயர்ந்து விட்டாள். 
 
நேற்று முழுவதும் தலைக்கு மேல் கேட்ட சத்தங்கள் இப்போது நின்று போயிருந்தன. ஏதாவது ஃபேக்டரி நடக்கும் இடமாக இருக்கும் போலும். இல்லாவிட்டால் சத்தம் அத்தனைப் பெரிதாக இருக்க வாய்ப்பில்லை.
 
சிந்தனை செய்தபடியே மயூரி கண்ணயர்ந்து சிறிது நேரம் ஆகியிருக்க வேண்டும். எங்கோ கதவில் சாவி சுழலும் சத்தம் கேட்டது.
 
முதலில் அந்த ஒலியைப் புறக்கணித்த பெண்ணின் மூளை பிற்பாடு சட்டென்று விழித்துக் கொண்டது.
 
அவள் தன்னைச் சுதாரித்து எழுந்து உட்கார்வதற்கு முன்பாக கதவு திறந்து கொண்டது. கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த உருவத்தைப் பார்த்த மயூரியின் கண்கள்…
 
பெண்ணின் உள்ளத்துச் சிந்தனைகள் இப்போது வர்ணனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது! கண்கள் தெறித்து விடுவன போல விரிந்து போயின.
 
கதவை முழுதாக திறக்காமல் சற்றே திறந்து, அந்த இடைவெளியையும் அடைத்துக் கொண்டு நின்ற தன் மாமன் மகனின் சாதுர்யத்தை அவள் கவனிக்காமல் இல்லை.
 
அவனைக் கண்டவுடன் இயல்பாக உதட்டில் பூக்க ஆரம்பித்திருந்த புன்னகையைக் கிள்ளித் தூர வீசினாள் மயூரி.
 
ஆக… வில்லனாக மாறிப்போனது என் நாயகன்தானா?! ராவணனாக மாறியது என் ராமன்தானா?! இந்த இரண்டு நாட்களும் நரகத்தைக் காட்டியது என் சொர்க்கம்தானா?!
 
கதவில் இது நேரம் வரை சாய்ந்து நின்றிருந்தவனின் புருவங்கள் ஒரு நொடி அவளைக் கேலியாக பார்த்து ஏறி இறங்கியது. 
 
அவன் உதட்டில் உறைந்திருந்த அந்தப் புன்னகைக்கும் இந்த வில்லத்தனத்திற்கும் சம்பந்தமே இல்லாததால் மயூரிக்கு சிரிப்பு வந்தது.
 
‘அட முட்டாள்பயலே! வா ன்னு ஒரு வார்த்தைச் சொல்லி இருந்திருந்தா ஊருக்கு முந்தி நானே உங்கூட ஓடி வந்திருப்பனே!’
 
அப்போதுதான் அவன் ஆடையைக் கவனித்தாள் மயூரி. ஆரம்பகட்ட அதிர்ச்சி அப்போதுதான் நீங்கி இருக்க அவனை மேலிருந்து கீழாக ஒரு பார்வைப் பார்த்தாள் பெண்.
 
முழுதாக வெண்ணிறத்தில் இருந்தான் வருண். வெள்ளை நிற அரை ஸ்லீவ் ஷர்ட், வெள்ளை பேன்ட், தோள்பட்டையில் கறுப்புநிற ‘எப்பொலெட்’.
 
அவள் சிந்தனையையின் போக்கை லேசாக உணர்ந்து கொண்டவன் போல கதவை மூடிவிட்டு உள்ளே வந்தான் வருண்.
 
தன்னைச் சுற்றியிருந்த மாயவலை சட்டென்று அவிழ்ந்து போகவும் எந்தப் பதட்டமும் இன்றி எதிரே நின்றிருந்தவனை நிதானமாக இப்போது அளவெடுத்தாள் பெண்.
 
அந்த நொடி அம்மா, அப்பா, ஆச்சி, வீடு, கார், வேலை… அனைத்தும் மறந்து போயின. அவன் அணிந்திருந்த ஆடை அவனை ஏதோவொரு ஆஃபீஸர் என்று பறைசாற்றியது. ஆனால் எந்தத் துறை?!
 
‘நேவி ஆஃபீஸரோ?!’
அறைக்குள் வந்தவன் தான் கொண்டு வந்திருந்த சூட்கேஸை அங்கிருந்த கப்போர்டில் வைத்தான்.
 
அறையின் ஒரு சுவரில் இருந்த எதையோ படக்கென்று இழுத்து ஏதோ செய்ய அறைக்குள் சட்டென்று சூரிய ஒளி பரவியது.
 
பட்டப்பகல் சூரியன் கண்களைக் கூசச் செய்ய புறங்கையால் கண்களை மறைத்தாள் மயூரி. சூரிய ஒளி கண்களுக்குப் பரிச்சயமாக இரண்டொரு வினாடிகள் தேவைப்பட்டது.
 
அதன் பிறகு ஜன்னல் வழியே தானிருந்த உலகத்தைக் பார்த்த மயூரி அதிர்ச்சியின் உச்சத்திற்குப் போனாள்! ஏனென்றால்… அவளைச் சூழ இருந்தது நீலக்கடல்!