அழகியே 9

அழகு 09
 
அடுத்த நாள் வருண் ஆறு மணிக்கெல்லாம் கண்விழித்து விட்டான். நேற்றிரவு கொஞ்சம் தாமதமாகத்தான் தூங்கி இருந்தான். பக்கத்தில் திரும்பிப் பார்க்க… அவன் பிரித்துப் போட்டிருந்த கட்டிலில் சுகமாக உறங்கிக் கொண்டிருந்தாள் மயூரி.
 
‘இவள் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள்? ஏதோ கப்பலில் ஊர் சுற்றிப் பார்க்க வந்தது போல ஜாலியாக இருக்கிறாளே!’ தன் தூக்கம் கெட்டுப்போன கோபத்தில் வருண் உள்ளுக்குள் பொருமி கொண்டிருந்தான்.
 
ஆனால் இன்னுமொரு மனது அவனை இடித்துரைத்தது. ஒருவேளை அதுதான் அவனது மனசாட்சியோ!
 
‘வந்ததுதான் வந்தாள், பாவம் விட்டுவிடேன்… அவள் கொஞ்சம் இந்தக் கப்பல் பயணத்தை ரசிக்கட்டுமே!’
 
அரவம் செய்யாமல் மெதுவாக எழுந்தவன் பாத்ரூமிற்குள் நுழைந்து காலைக்கடன்களை முடித்தான்.
 
கொஞ்சம் தாமதமாக குளிக்கலாம்.
அந்தப் பெண் எழுந்தவுடன் டீ குடிக்கவில்லை என்றால் ஏதோ தலைவலிக்கும் என்று சொன்னாளே!
 
ஏதோ இப்போது மயூரி டீ குடிப்பதுதான் மிகவும் முக்கியம் என்பது போல அவசரமாக ரூமைவிட்டு வெளியே போனான்.
 
டைனிங் ஏரியா அமைதியாக இருந்தது. வருண் போகும்போது அங்கே யாரும் இல்லை. நல்லவேளையாக கேப்டன் இல்லை. 
 
இல்லாவிட்டால் முதலிரவு முடிந்து வரும் புதுமாப்பிள்ளையைக் கலாட்டா பண்ணுவது போல என்னை ஒரு வழி பண்ணி விடுவார்.
 
கடலில் அவன் இருந்தாலும் தரையில் அனைத்தும் திட்டமிட்டப்படி செவ்வனே நடந்து கொண்டுதான் இருந்தன.
 
அதற்கென அவனால் நியமிக்கப்பட்டிருந்த ஆட்கள் இவனுக்கு சதா தகவல்களை வழங்கிய வண்ணம்தான் இருந்தார்கள்.
 
இன்னும் இரண்டே இரண்டு நாட்கள். கப்பல் ‘பெனாங்’ போய் சேரும் போது அவன் தந்தையின் கனவு இல்லப் பத்திரம் அவன் பெயருக்கு மாற்றப்பட்டிருக்கும்.
 
ஆறு மாதகால இடைவெளியில் வருண் அனைத்தையும் கச்சிதமாக, தெளிவாக திட்டமிட்டிருந்தான். இவை அனைத்துக்கும் பின்னால் சரவணன் அறிமுகப்படுத்திய லாயரின் வழிகாட்டல் இருந்தது.
 
இடைப்பட்ட காலத்தில் இலங்கைப் பிரஜாவுரிமையையும் வாங்கி இருந்தான். பல சட்டச் சிக்கல்களை அது தவிர்க்கும் என்பது லாயரின் அறிவுரை.
 
சட்டவிரோதமான நடவடிக்கைகள் என்பதால் அவர் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவில்லையே தவிர வருணின் நியாயமான கோரிக்கைக்குப் பக்கபலமாக இருந்தார்.
 
தனியாக வேறொரு குழுவை நியமித்து அனைத்துக் காரியங்களும் திட்டமிட்டபடி நிறைவேறிக் கொண்டிருந்தன.
 
அந்தப் பெண்ணைக் கப்பலுக்குக் கொண்டு வந்ததும் அவர்கள்தான்.
விஷாகாவை நினைத்த போது மாத்திரம் வருணுக்கு லேசாக மனம் வருந்தியது. ஆனாலும் அவனால் எதுவும் பண்ண முடியவில்லை. 
 
சரவணனுக்கும் வருணின் திட்டங்கள் அனைத்தும் தெரியும். இலங்கையை விட்டுப் போனாலும் சரவணனோடு வருண் தொடர்பில்தான் இருந்தான்.
 
ஆனால் தன் மாமி எந்த நிலையில் தொடர்பு கொண்டாலும் எதையும் தவறி சொல்லி விடாதே என்று கண்டிப்பாக எச்சரித்திருந்தான்.
 
அதேபோல மகளைக் காணவில்லை என்றவுடன் விஷாகா அடுத்த நாள் சரவணனைத்தான் தொடர்பு கொண்டிருந்தார். 
 
எதிர்பார்த்த விஷயம் என்பதால் சரவணன் மிகவும் கவனமாக ஏற்கனவே திட்டமிட்டது போல் விஷாகாவுடன் பேசி இருந்தான்.
 
மயூரி காணாமல் போன அடுத்த நாளே வீட்டுப் பத்திரம் வருண் பெயருக்கு மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை பலாத்காரமாக அந்த மனிதர்கள் முன் வைக்கப்பட்டது.
 
அப்போதே அங்கிருந்த அனைவருக்கும் இது வருணின் வேலைதான் என்பது புரிந்தும் போயிற்று. விஷாகாதான் மனதளவில் பெரிதும் உடைந்து போனார்.
 
மற்றைய இருவரும் வானத்துக்கும் பூமிக்குமாக குதித்தார்கள். இத்தனை நாள் கட்டிக் காத்து வந்த சொத்தை அத்தனைச் சுலபத்தில் வருணுக்கு தூக்கிக் கொடுக்க அழககோனுக்கு கசந்தது.
 
ஆச்சி என்ன நினைத்தாரோ… முதலில் மருமகனோடு சேர்ந்து குதித்தவர் பிற்பாடு அமைதியாகிவிட்டார்.
 
குடும்ப மானம், கௌரவம் என்று சதா கூப்பாடு போடுபவருக்கு இந்த அடி பலமாக வீழ்ந்திருக்கும் போலும்! பெண்பிள்ளை விவகாரம் வேறு!
 
மயூரி வீட்டுக்கு வந்தால் போதும் என்ற நிலைக்கு ஆச்சி தள்ளப்பட்டு விட்டார். அதற்காக எதை இழக்கவும் அவர் இப்போது தயார்!
 
தனது டீயை பருகிவிட்டு அவளுக்கானதை எடுத்துக் கொண்டு ரூமிற்கு வந்தான் வருண். அவள் இன்னும் ஆழ்ந்த தூக்கத்திலேயே இருந்தாள்.
 
மேசை மேலிருந்த மேகஸினை எடுத்தவன் அதைச் சுருட்டி லேசாக அவளை அடித்தான். கண்விழித்துப் பார்த்தவள் அவனைக் காணவும் புன்னகைத்தாள்.
 
“குட்மார்னிங் ஆஃபீஸர்.” அவள் வாழ்த்து அவனுக்குச் சிரிப்பை வரவைத்தது. அவனுக்கென்று ராகினி வாங்கிய நைட் ட்ரெஸ்ஸில் இருந்தாள்.
 
“குட்மார்னிங்… டீ இருக்கு.” அவன் சொன்னதுதான் தாமதம்… எழுந்து உட்கார்ந்தவள், 
 
“தான்க் யூ.” என்றாள்.
 
“ஆறிடப்போகுது.”
 
“இதோ…” அவசரமாக எழுந்து போனவள் இரண்டு நிமிடங்களில் பல்துலக்கி விட்டு வந்தாள். அவன் ஆடை அவ்வளவு மோசமாக இல்லாமல் அவளுக்குப் பொருந்தி இருந்தது.
 
அசௌகரியமாக உணர்ந்திருப்பாள் போலும்… முகம் துடைத்த பெரிய டவலால் உடலைப் பாதி மறைத்தால் போல வந்து டீயை பருகினாள்.
 
“நீங்க குளிக்கப் போறீங்களா என்ன?”
 
“எனக்கு இன்னும் டைம் இருக்கு.”
 
“என்னோட ட்ரெஸ் காஞ்சிடுச்சு, நான் சட்டுன்னு குளிச்சிட்டு வந்திடுறேன்.” அவன் பதிலை எதிர்பாராமல் பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டாள் மயூரி. 
 
வருண் தன் லேப்டாப்பை மடியில் வைத்துக்கொண்டு கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். ஒரே உடையை அவள் மாறி மாறி தினமும் உடுத்துவது வருணுக்கும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.
 
ஆனாலும் என்ன செய்வது?
இத்தனைக்கும் கையால் வேறு உடைகளைக் கழுவுகிறாள். லான்ட்ரி ரூமில் கழுவலாம்… ஆனால் இந்தப் பெண்ணை எப்படி வெளியே அழைத்துச் செல்வது?!
 
வாட்ஸ்ஆப்பில் ராகினி மெஸேஜ் அனுப்பி இருந்தார். அதற்குப் பதிலை மட்டும் அனுப்பி வைத்தான் வருண். அழைத்துப் பேசவில்லை.
 
இந்தப் பெண் இப்போது பார்ப்பதற்கு அமைதியாக இருக்கிறாள். அம்மாவோடு பேசும்போது ஏதாவது ஏடாகூடமாக நடந்துகொண்டால் என்ன செய்வது?
 
முதலில் வீட்டுப் பத்திர வேலைகள் நிறைவு பெறட்டும். அதன்பிறகு எது எப்படி நடந்தாலும் வருணுக்கு கவலையில்லை.
 
பாத்ரூம் கதவு சட்டென்று திறக்க வருண் நிமிர்ந்து பார்த்தான். அவள் நேற்றுத் துவைத்துப் போட்ட ஆடையையே உடுத்தி இருந்தாள். 
 
லேசாக கசங்கி இருந்தது. அவள் எழுந்து கொள்ளும் முன்பாகவே அயர்ன் பண்ணி வைத்திருக்கலாமோ! அயர்ன் பண்ணுவதற்குரிய ஏற்பாடும் லான்ட்ரி ரூமில்தான் இருக்கிறது.
 
தன் எண்ணத்தின் போக்கைக் கவனித்த வருண் திடுக்கிட்டுப் போனான். என்ன இது?! நான் சர்வ சதாகாலமும் அவளைப் பற்றியே நினைக்கிறேன்!
 
இவள் உடை கசங்கி இருந்தால் எனக்கென்ன, இல்லாவிட்டால்தான் என்ன?! நான் என்ன இப்படி மாறிப்போனேன்!
 
சிந்தனையில் இருந்த வருண் மயூரி அருகில் வந்ததைக் கவனிக்கவில்லை. அருகே வந்த பெண் அவன் லாப்டாப்பை எட்டிப்பார்த்தாள்.
 
“என்ன?”
 
“இல்லை… லேப்டாப் என்ன மாடல்னு பார்த்தேன்.”
 
“எதுக்கு?”
 
“சும்மாதான்.” இயல்பாக அவள் சொல்ல அதைப் பெரிது படுத்தாதவன் லேப்டாப்பை கட்டிலில் வைத்துவிட்டுக் குளிக்கப் போய்விட்டான்.
 
அவன் பாத்ரூமை விட்டு வெளியே வந்த போது யூனிஃபார்மில் இருந்தான். மயூரி அவன் முகத்தைத் தயங்கியபடியே பார்த்தாள்.
 
“இப்போ என்ன?” அவள் பார்வைகள், அதன் தேவைகள் எல்லாம் சிறிது வருணுக்கு பிடிபட்டிருந்தது.
 
“இன்னைக்கு ட்யூட்டியா உங்களுக்கு?” கேள்வி வினோதமாக இருக்க பெண்ணை ஆழ்ந்து பார்த்தான் வருண்.
 
“இல்லை… இந்த ரூம்லயே உக்கார்ந்திருக்க போரடிக்குது…”
 
“அதுக்கு?!”
 
“என்னையும் வெளியே கூட்டிட்டுப் போறீங்களா?”
 
“வாட்!” ஆஃபீஸர் அதிர்ந்து போனான்.
 
“ஏன்? எதுக்கு இவ்வளவு ஷாக் ஆகுறீங்க? நான் இந்த ரூமை விட்டு வெளியே வர்றது அவ்வளவு பெரிய குத்தமா?”
 
“நீ உம்மனசுல என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்கே? ஏதோ ஷிப்ல ஊர் சுத்திப் பார்க்க வந்த மாதிரி பேசுறே!”
 
“ஆஃபீஸர், உங்களுக்கே இது நியாயமா இருக்கா? நானெல்லாம் இந்த ஷிப் ல இன்னொரு தரம் வர்றதை நினைச்சும் பார்க்க முடியாது, ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு, சுத்திப் பார்த்துக்கிறேனே.” அவள் தன் தரப்பு நியாயத்தைச் சொன்னாள்.
 
“லூசா நீ?”
 
“இப்பிடியே அடைஞ்சு கிடந்தா அதுதான் நடக்கும், ப்ளீஸ்…” பெண் கெஞ்சியது.
 
“முடியாது.” உறுதியாக மறுத்தான் வருண்.
 
“ப்ளீஸ் ஆஃபீஸர்…” அவள் மீண்டும் கெஞ்சவும் அவன் ஒரு நொடி அவளைச் சந்தேகமாக பார்த்தான்.
 
“இப்போ எதுக்கு ப்ளான் பண்ணுறே?”
 
“ப்ளானா?”
 
“வெளியே போய் என்னப் பண்ணுற ஐடியாவுல இருக்கே?” அவன் சந்தேகம் இன்னும் அதிகமானது.
 
“ஐயோ ஆண்டவா! ஏதாவது பண்ணுறதா இருந்தா இந்த ரூம்ல இருந்தே பண்ண மாட்டேனா?”
 
“இந்த ரூம்ல இருந்து என்னப் பண்ண முடியும் உன்னால?”
 
“ஏன்… இந்தப் பொட்டியை இங்கதானே வெச்சுட்டுப் போனீங்க, இது போதாதா?” அவள் அவனது லேப்டாப்பை சுட்டிக் காட்டவும் வருண் திகைத்துப் போனான். அதற்குத்தான் அவன் பாஸ்வேர்ட் போட்டு வைத்திருக்கிறானே?!
 
அவன் எண்ணத்தின் போக்கு புரிந்தவள் போல மயூரி சிரித்தாள். அந்த சிரிப்பு அத்தனை நல்லதாக படவில்லை வருணுக்கு.
 
“என்னப் பண்ணி வெச்சிருக்கே?” உறுமலாக கேட்டவன் லேப்டாப்பை திறந்தான்.
 
“நான் பெருசா ஒன்னும் பண்ணலையே!” நமுட்டுச் சிரிப்போடு சொன்னவளை அவன் பார்வை சுட்டெரித்தது.
 
“எதுக்கு இப்போ முறைக்கிறீங்க ஆஃபீஸர்?”
 
“என்னப் பண்ணினே?” அவன் ஸ்ருதி உயர்ந்தது.
 
“உங்க வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் மட்டும் மாத்தினேன், அவ்வளவுதான்!” அவள் சொல்லி முடித்ததுதான் தாமதம், வருண் மளமளவென்று வாட்ஸ்ஆப்பை செக் பண்ணினான்.
 
ஆமாம்! அவன் ஸ்டேட்டஸில் ‘குட் மார்னிங்’ என்று டைப் பண்ணி இருந்தாள். வருணின் கோபம் எல்லைத் தாண்டி எகிறியது.
 
“அழககோனோட பொண்ணுக்கிட்ட இந்த ஃப்ராடு தனத்தை நான் முன்னமே எதிர்பார்த்திருக்கணும்.” வார்த்தைகள் அமிலமென மயூரியின் முகத்தில் தெறித்தன.
 
இதுவரை ஒரு நமுட்டுச் சிரிப்போடு நின்றிருந்த பெண்ணின் முகத்தில் அந்த வார்த்தைகளைக் கேட்டு அத்தனை வலி தெரிந்தது. 
 
அவள் முகத்திலிருந்த சிரிப்பைத் துணி கொண்டு துடைத்தாற் போல ஒரு சோகம் தெரிந்தது.
 
தனக்குத்தான் அவன் மாமா மகன், சொந்தம், சொல்லாத காதல்… இவை எல்லாம். அவனைப் பொறுத்தவரை நான் வெறும் ஒரு கருவி. 
 
அவன் தேவை தீர்ந்ததும் நீ யாரோ நான் யாரோ என்று போகப் போகிறான். அவனிடம் நான் அதிகம் உரிமை எடுத்தது தவறுதான்! 
 
நிகழ்காலத்தின் உண்மைச் சட்டென்று புரிய மயூரி விளக்கம் சொன்னாள். குரல் இறங்கிப் போயிருந்தது.
 
“அப்பிடியில்லை… ஃப்ராடுத்தனம் பண்ணுறதா இருந்தா உங்கம்மாக்கு ஒரு மெஸேஜை அனுப்பி இருந்திருப்பேன்… எனக்கு உங்களை நம்ப வெக்கணும்… எம்மனசுல எங்கேயும் உங்களைக் காட்டிக்குடுக்கிற எண்ணம் இல்லைன்னு உங்களுக்குப் புரிய வெக்கணும்… அவ்வளவுதான், சாரி.” என்றவள் அமைதியாக அந்த ஜன்னலோரம் போய் நின்று கடலை வெறிக்கத் தொடங்கிவிட்டாள்.
 
வருண் அவள் முதுகை வெறித்தபடி சற்று நேரம் அப்படியே நின்றிருந்தான். தன் முன்னே நிற்கும் பெண் அவனுக்குப் பெரும் புதிராக இருந்தாள்.
 
தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்த போதும் அவள் ஏன் அதை உபயோகப்படுத்தவில்லை?! அவள் சொன்னது போல ராகினிக்கு ஒரு மெஸேஜ் போயிருந்தால் போதும். அவன் திட்டங்கள் அனைத்தும் தவிடு பொடி ஆகியிருக்கும்.
 
கப்பலில் நான்கு நாட்கள் தங்க, சுற்றிப்பார்க்க ஒரு பெண் இப்படியெல்லாம் நடந்து கொள்வாளா? அதுவும் தன்னைத் திட்டமிட்டுக் கடத்திய ஒருவன்… கூடவே இருக்கும்போது!
 
அப்படியென்றால் அவளை இங்கே தங்க வைத்திருப்பது எது? அந்த வீடு என் கைக்கு வந்து சேர வேண்டும் என்ற அவளின் நியாயமான புத்தியா?!
 
இருக்கலாம்… நேற்றுக்கூட சொன்னாளே, உன்னிடம் முறையில்லாமல் நடந்த பாட்டியை நான் வெறுப்பேற்றினேன் என்று!
லேப்டாப்பை மூடி கப்போர்டில் வைத்தவன் ரூமை விட்டு வெளியேறிவிட்டான். காலை உணவை முடித்துக்கொண்டு அவளுக்கானதையும் எடுத்துக்கொண்டு மீண்டும் ரூமுக்கு வந்தான் வருண்.
 
அவள் அப்படியேதான் நின்றிருந்தாள். அதிர்ச்சியில் கொஞ்சம் வார்த்தைகளை அதிகமாக விட்டுவிட்டோமோ என்று அவனுக்கே தோன்றியது.
 
“சாப்பிடு.” மேசை மேல் ப்ளேட்டை வைத்தவன் அவள் அருகே வந்தான்.
 
“இப்போ என்னோட ட்யூட்டி டைம், என்னால உன்னை வெளியே கூட்டிக்கிட்டுப் போக முடியாது.” அந்த வார்த்தைகளில் ஆவலே வடிவாக அவனைத் திரும்பிப் பார்த்தாள் பெண்.
 
“என்ன?” அவள் பார்வையைப் புரிந்து கொள்ள முடியாமல் அவன் கேட்கவும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள் மயூரி. 
 
‘பின்னே அதுக்கும் இவன் ஏதாவது வலிக்கிற மாதிரி சொல்லிடுவானே!’
 
“ஈவ்னிங் ட்யூட்டி முடிஞ்சதுக்கு அப்புறம் கூட்டிக்கிட்டுப் போறேன், பொழுது சாயுற நேரம் கடல் பார்க்க இன்னும் அழகா இருக்கும்.”
மனதுக்குள் குதூகலித்தாலும் மயூரி தன் உணர்ச்சிகளை வெளிப்படையாக காட்டிக்கொள்ளவில்லை. அமைதியாகவே நின்றிருந்தாள்.
 
“சாப்பிடு.” மீண்டுமொருமுறை சொல்லிவிட்டு வருண் போய்விட்டான். மயூரிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. இத்தனை இணக்கமாக அவன் தன்னிடம் பேசுவான் என்று பெண் எதிர்பார்த்திருக்கவும் இல்லை.
 
‘கொஞ்சம் நல்லவன்தானோ?!’
உணவைத் திரும்பிப் பார்த்தாள். கிரிபத் (வெண்பொங்கல்), தொட்டுக்க கட்டசம்பொல். கூடவே இரண்டு ப்ரெட் ஸ்லைஸ். டோஸ்ட் பண்ணி இருந்தது, அதோடு பட்டர்.
 
“அடேயப்பா! சாப்பாடு மூனு வேளையும் பிரமாதமாத்தான் இருக்கு.” அனைத்தையும் மறந்து விட்டு உணவில் கவனமானாள் பெண்.
 
***
 
வருணுக்கு மூளைக் குழம்பியது. அந்தப் பெண்ணை அவனால் புரிந்து கொள்ள இயலவில்லை.
 
அழககோனின் மகளுக்கு அவன் பூசியிருந்த வர்ணம் வேறு.
 
அவள் தன் மாமியின் பெண்ணும் கூட என்பதை அவன் மறக்கவில்லை. இருந்தாலும் அவளை இத்தனை நல்லவளாக வருண் எதிர்பார்த்திருக்கவில்லை.
 
“விபி என்னாச்சு?” அந்தக் குரலில் சட்டென்று கலைந்தான் வருண்.
 
“கேப்டன்?”
 
“நீ இங்க இல்லை, என்னாச்சு? வைஃப் கூட சண்டையா?” கண்ணடித்தான் டாமினிக்.
 
“சும்மா இருங்க கேப்டன்.”
 
“நான் உண்மையைத்தானே விபி சொல்றேன்.”
 
“கேப்டன், இந்தப் பொண்ணை என்னால புரிஞ்சுக்கவே முடியலையே…” 
 
“அந்தக் கருமத்தை யாராலயும் புரிஞ்சுக்க முடியாது, ஏன்? என்னாச்சு?” டாமினிக் கேட்க வருண் அன்று காலையில் நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தான். 
இப்போது கேப்டனும் லேசாக தடுமாறினான். பெண்களை நன்கு அறிந்தவன் என்பதால் மயூரியின் மனது லேசாக அவனுக்குப் பிடிபட்டது.
 
“விபி… ரொம்ப சிம்பிளா முடிய வேண்டிய விஷயத்தை நீதான் சிக்கலாக்கிக்கிட்டயோ?!”
 
“புரியலை கேப்டன்.”
 
“நீ சொல்லுறதைப் பார்த்தா… பொண்ணுக்கு உம்மேல ஒரு ஐடியா இருக்கும் போல இருக்கே…”
 
“வாட்?!” வருண் அன்று இரண்டாம் முறையாக அதிர்ந்தான்.
 
“இதுக்குத்தான் மனுஷ பிறவிங்க கூடவும் கொஞ்சம் சகவாசம் வெச்சுக்கணும்னு சொல்றது, இப்பப்பாரு… கூட இருக்கிற பொண்ணோட மனசையே உன்னால புரிஞ்சுக்க முடியலை.”
 
“சான்ஸே இல்லை கேப்டன்… அழககோன் பொண்ணா? ஹா… ஹா…” அதிர்ச்சி நீங்கிய பிறகு சிரிப்பு வந்தது வருணுக்கு.
 
“பின்ன என்ன ரீஸனா இருக்கும்? நீயே சொல்லு பார்க்கலாம்?”
 
“அது… அதான் எனக்கும் புரியலைன்னு உங்களைக் கேட்கிறேனே கேப்டன்.”
 
“எனக்குத் தெரிஞ்சு… ஒரு பொண்ணு இப்படியொரு சிட்டுவேஷன்ல ஜாலியா இருக்கான்னா… அதை அவ என்ஜாய் பண்ணுறான்னு அர்த்தம்.”
 
‘அப்படியும் இருக்குமோ?!’ வருணின் மனது குழம்பியது.
 
“ஏதோ… வந்ததோட ஷிப்பை பார்த்துக்கிறேன்னு சொன்னாளே?” 
 
“ஏன் விபி… அந்தப் பொண்ணும் ஏதோ ஒரு நல்ல பொசிஷன்ல இருக்கான்னு சொன்னே இல்லை?”
 
“ம்…”
 
“ப்ளாக் ஆடி ஒன்னு வெச்சிருக்கான்னு ஏதோ சொன்னே இல்லை?”
 
“ஆமா…”
 
“இப்ப சொல்லு… இதே பொண்ணுக்கு ஒரு க்ரூஸ்ல போறது பெரிய விஷயமா?” டாமினிக் கேட்ட போது ‘இல்லை’ என்றுதான் வருணுக்கு தோன்றியது.
 
“ஒருவேளை சொந்தம் விட்டுப்போக…” பேச ஆரம்பித்த வருண் டாமினிக்கின் பார்வையில் பேச்சைப் பாதியிலேயே நிறுத்திக்கொண்டான்.
 
“இப்போ உன்னோட பிரச்சனை என்னைய்யா? நீதான் லவ் பண்ண மாட்டே… அவளும் பண்ணக்கூடாதா? எனக்கு வாயில நல்லா வந்திரும்!” 
 
“…………….”
 
“உனக்கெல்லாம் இவ்வளவு அழகா வந்து வாய்க்குது பாரு… ஈவ்னிங் கூட்டிக்கிட்டு வா, நமக்கும் ஏதாவது லக் அடிக்குதான்னு பார்ப்போம்.” டாமினிக்கின் பேச்சில் வருண் திகைத்துப் போனான்.
 
‘என்ன இந்த மனுஷன் இப்பிடியெல்லாம் பேசுறாரு?!’ 
அதன்பிறகு கொஞ்ச நேரம் வருணுக்கு வேலை ஓடவில்லை.
கேப்டனின் பேச்சே மூளைக்குள் வண்டு போல அரித்தது. 
 
நேற்றைக்கு அவளைப் பார்த்த பொழுதிலிருந்து இந்த நொடி வரை நடந்த நிகழ்வுகளை மீட்டிப் பார்த்தான். சும்மா இருந்த மனதில் இப்போது சாத்தான் டான்ஸ் ஆடினான்.
 
நேற்றைய இரவு அத்தனை நிர்மலமாக தூங்கினாளே! முன்பின் தெரியாத ஒரு ஆடவன் கூட இருக்கின்றான் என்ற தயக்கம் அவளுக்குக் கொஞ்சமும் இருக்கவில்லையே!
 
இத்தனைக்கும் எனது தேவைக்காக அவளை நான் கடத்திக்கொண்டு வந்திருக்கிறேன். ஒருவேளை உறவுக்காரன் என்ற உரிமையோடு பழகுகிறாளோ?!
 
அப்படித்தான் இருக்கும். இந்த கேப்டன் எப்போது எதை உருப்படியாக சொல்லி இருக்கிறார். பெண்களைப் பார்த்தாலே இவருக்கு இப்படித்தான் பேசவரும்.
 
எண்ணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு அதன்பிறகு வேலையில் கவனமாகிவிட்டான் வருண்.
 
மறக்காமல் மதிய உணவின் போது அவளுக்குரியதைக் கொண்டு போய் ரூமில் கொடுத்துவிட்டு வந்தான். கிச்சனில் சொல்லி வைத்திருந்ததால் அழகாக தயார் செய்து வைத்திருந்தார்கள்.
 
இவனைப் பார்த்தபோது சட்டென்று மின்னிய கண்களையும் மலர்ந்த முகத்தையும் வருண் கவனிக்கத் தவறவில்லை.
 
இதுவரை தோன்றாத சந்தேகங்கள் டாமினிக்கின் பேச்சிற்குப் பின் தோன்றியது. அந்த மனிதர் எல்லோரையும் குழப்புவார்.
 
இவ்வளவு நேரமும் தனியாக ரூமில் இருந்த பெண் யாரையாவது பார்த்தால் மலர்ந்து சிரிக்கத்தான் செய்வாள். இதற்குப் போய்…
 
வருணுக்கு அன்று ஓவர் டைம் இருந்ததால் சற்றுத் தாமதமாகத்தான் ரூமிற்கு வந்தான். வரும்போதே டீயும் ஸ்நாக்ஸ்ஸும் எடுத்துக்கொண்டு வந்தான். டீவி பார்த்துக்கொண்டு இருந்தது பெண்.
 
“ஏன் ஆஃபீஸர்… அப்பிடி யாருக்கு ரூமுக்கு எடுத்துக்கிட்டுப் போறீங்கன்னு யாரும் இங்க உங்களைக் கேட்க மாட்டாங்களா?” 
 
‘உனக்கு இது தேவையில்லாத கேள்வி.’ என்பது போல அவளை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு டவலோடு பாத்ரூமிற்கு போனான் வருண்.
 
“அடேயப்பா! பார்வையெல்லாம் பலமாத்தான் இருக்கு! கொஞ்சம் பேசினா என்ன குறைஞ்சா போயிடுவாங்க.” அவன் தலை மறைந்ததும் இவள் வாய் புலம்பியது.
 
அவள் தன் டீயை குடித்து முடிக்கவும் வருண் பாத்ரூமிலிருந்து வரவும் சரியாக இருந்தது. இள நீல நிறத்தில் ஷர்ட் அணிந்திருந்தான். மயூரி முயன்று தன் கண்களைத் திருப்பிக் கொண்டாள்.
 
“ரெடியா?” அவன் கேட்ட போது அவள் அவன் முகத்தைச் சோகமாக பார்த்தாள்.
 
“என்னாச்சு?”
 
“நான் பார்க்க எப்பிடி இருக்கேன்?”
 
“என்ன?”
 
“ரெண்டு நாளா தலை கூட வாரலை, பேய் மாதிரி இருக்கேனா?” முகத்தை அவள் பாவம் போல வைத்துக்கொண்டு கேட்க வருண் சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
 
கேசம் கலைந்து கிடந்தது. அலுங்கிய ஆடை, ஒப்பனை இல்லாத முகம்… ஆனாலும் பார்க்க அழகாக இருந்தாள். 
 
“கப்போர்ட்ல என்னோட ஜெல் இருக்கு, க்ரீம் இருக்கு… யூஸ் பண்ணிக்கோ, நான் ஹெயார் ப்ரஷ் யூஸ் பண்ண மாட்டேன்.” அவன் சொன்னதுதான் தாமதம்.
 
மளமளவென்று ஜெல்லை தலையில் தடவி சீர்படுத்திக் கொண்டாள். முகத்துக்கு க்ரீமும் தடவிக் கொண்டாள்.
 
“அடுத்த தடவை யாரையாவது கடத்தும்போது இதையெல்லாம் கொஞ்சம் கன்ஸிடர் பண்ணுங்க ஆஃபீஸர்.”
 
“அதுக்கு எங்கப்பாக்கு வேற வீடு எதுவும் இல்லையே.”
 
“உங்களுக்கு எப்பிடி? நீங்க எங்கெல்லாம் வீடு வெச்சிருக்கீங்க?” கண்ணாடி முன் நின்றபடி கேட்டவள் சட்டென்று இவனைத் திரும்பிப் பார்த்தாள்.
 
“ஓ… தப்பாக் கேட்டுட்டேனோ? நான் ப்ராப்பர்ட்டியை சொன்னேன் ஆஃபீஸர்.” 
 
“உன்னோட வாய் சும்மாவே இருக்காதா?”
 
“உங்களைப் பார்க்கிறதுக்கு முன்னாடி இந்த ரூம்ல ரெண்டு நாள் ஊமை மாதிரித்தானே இருந்தேன், கொஞ்சம் பேசிக்கிறேனே…” பேசிய படியே ரூமை விட்டு வெளியே வந்தவள்,
 
“அப்பாடா!” என்றாள் ஒரு ஆசுவாச மூச்சோடு.
 
“இந்த ஷிப்ல என்னோட கெஸ்ட் நீ இப்போ.”
 
“ஓகே.”
 
“கொஞ்சம் என்னோட மரியாதைக் காத்துல பறக்காம பார்த்துக்குவேன்னு நினைக்கிறேன்.” அவன் தணிந்த குரலில் சொல்ல மயூரி சிரித்தாள்.
 
“உங்களுக்குக் கெஞ்ச வரலை ஆஃபீஸர், விட்டுருங்க.” என்றவளின் தோரணை அதன்பின் மாறியே போனது.
 
முதலில் அவளை டைனிங் ஏரியாவிற்கு அழைத்துச் சென்றான் வருண். கிச்சனில் இரவு உணவு தயாராகிக் கொண்டிருந்தது. இவனைப் பார்த்ததும் செஃப் வந்து பேசினார்.
 
“இப்போ உடம்பு எப்பிடி இருக்கும்மா?” அந்த வயதானவர் கேட்ட போது மயூரி விழித்தாள்.
 
“இப்போ பரவாயில்லை செஃப்.” வருண் சமாளித்தான்.
 
“முதல் தடவைக் கப்பல்ல வர்றவங்களுக்கு இது சகஜந்தான், ஏதாவது சாப்பிடணும் போல இருந்தா சொல்லும்மா, பண்ணிக் குடுக்கிறேன்.” இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் மயூரி தலையை ஆட்டி வைத்தாள். 
 
‘தனக்கு உடம்பிற்கு முடியவில்லை என்று சொல்லி இருக்கிறானா?’
 
“தான்க் யூ செஃப்.” அத்தோடு அங்கிருந்து நகர்ந்தவன் கப்பலின் ஒவ்வொரு இடத்தையும் காட்டினான்.
துணி துவைப்பதற்கு ஆஃபீஸர்களுக்கு என்று வேறு அறை இருந்தது. அங்கு அழைத்துச் சென்று வாஷிங் மெஷின், ட்ரையர், அயர்னிங் ஸ்டான்ட் என எல்லாம் இருக்குமிடத்தையும் காட்டினான்.
 
“அயர்ன் ஸ்டோர் ரூம்ல இருக்கும், கேட்டு வாங்கிக்கோ.”
 
“ம்…”
 
“இது ஹாஸ்பிடல்.”
 
“ஹாஸ்பிடலா?!”
 
“சிக் ரூம் மாதிரி.”
 
“ஓ… டாக்டர் இருப்பாங்களா?”
 
“இல்லை, இங்க இருக்கிற எல்லா ஆஃபீஸரும் ட்ரெய்ன்ட் ஃபர்ஸ்ட் எய்டர்ஸ்.”
 
“ஓ… அப்போ சாரும் பாதி டாக்டருன்னு சொல்லுங்க.” 
 
“ஆமா… ரொம்பப் பேசுறவங்க வாயைத் தைக்க எனக்குத் தெரியும்.” சொல்லிவிட்டு மேலே நடந்தான் வருண்.
 
“ப்ரிட்ஜ் ல இப்போ கேப்டன் இருப்பாரு, பேரு டாமினிக்.”
 
“எந்த நாட்டுக்காரர்?” அவள் கேட்ட கேள்வியில் நடையை நிறுத்தியவன் நின்று நிதானமாக அவளைத் திரும்பிப் பார்த்தான். மயூரி வாயை இறுக மூடிக்கொண்டாள்.
 
“கொஞ்சம் ஃப்ரீயா பேசுவாரு, பழகுவாரு… கவனம்!” அதற்கு மேல் அவன் எதுவும் பேசவில்லை. அமைதியாக நடந்தவன் அவளை அந்தக் கட்டுப்பாட்டு அறைக்குள் அழைத்துச் சென்றான்.
 
“குட் ஈவ்னிங் ஆஃபீஸர்.” இளம் மாலுமிகளின் வாழ்த்துக்கு வருண் பதில் வாழ்த்துச் சொன்னான். இவளையும் பார்த்துப் புன்முறுவல் சிந்தியவர்கள் வேலையில் கவனமாகி விட்டார்கள்.
 
“ஹாய் ஏன்ஜல்!” அட்டகாசமாக ஒலித்த அந்தக் குரலில் மயூரி திடுக்கிட்டுத் திரும்பினாள். 
 
“வெல்கம் டு மை ஷிப்!” இரு கைகளையும் விரித்து லேசாகக் குனிந்து அவளை வரவேற்றான் அந்த வாலிபன். வருணை விட கொஞ்சம் பெரியவனாக இருப்பான் போலும்.
 
மயூரி சட்டென்று வருணை திரும்பிப் பார்க்க அவன் முகத்தில் புன்னகை இருந்தது. ஆனால் இவளைத் திரும்பிப் பார்த்த போது அந்தக் கண்களில் எச்சரிக்கைத் தெரிந்தது.
 
“தான்க் யூ.” அழகாக முறுவலித்தவள் தன்னை நோக்கி நீண்ட கையை மரியாதை நிமித்தம் பிடித்துக் குலுக்கினாள்.
 
கை குலுக்கலோடு மட்டும் நிற்காமல் லேசாக அவளை கேப்டன் அணைத்து விடுவிக்க மயூரிக்கு என்னவோ போல் ஆனது. 
 
சுதந்திரமாக வளர்ந்தவள்தான், ஆனால் இது போலெல்லாம் கிடையாது. விஷாகா துவைத்துக் காயப்போட்டு விடுவார்.
 
அப்போதுதான் வருணின் முகத்தைக் கவனித்தாள் பெண். கேப்டன் அவளை அணைத்த போது அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. பெண்ணுக்கு இப்போது சுவாரஸ்யம் பிறந்தது.
 
“கம் கம்…” அவள் கையைப் பிடித்துத் தன்னோடு அழைத்துக் கொண்டு போனார் கேப்டன். வருணை பெண் திரும்பிப் பார்க்க அவன் கண்களில் ஜுவாலைத் தெரிந்தது.
 
“விபி முகத்தைப் பார்த்தீங்களா?” மயூரியின் காதோடு சரிந்து கேப்டன் மெதுவாக கேட்க இப்போது மயூரி திகைத்தாள்.
 
“ரொம்ப வெறைப்பா இருப்பானே!” அந்தக் கேள்வி அவளைத் திகைக்க வைத்தது. மெதுவாக திரும்பி வருணை பார்த்தாள்.
 
தன்னை விட்டு அப்பால் போகும் அந்த இருவரையும் வெறித்தபடி நின்றிருந்தான். கண்களில் குரோதம் இன்னும் அதிகரித்தது.
 
“என்ன… முறைக்கிறானா?”
 
“யெஸ் கேப்டன்.”
 
“நல்லா முறைக்கட்டும், மயூரி… டு யூ லவ் விபி?” அந்த நேரடி கேள்வியில் மயூரி திணறினாள். பெண் திணறுவதை கேப்டன் சில வினாடிகள் ரசித்துப் பார்த்திருந்தான்.
 
“அது… அது வந்து…”
 
“உங்க கண்ணே சொல்லுது… அந்த ராஸ்கலை நீங்க எவ்வளவு லவ் பண்ணுறீங்கன்னு.” இப்போது மயூரி வெட்கத்தில் தலை குனிய கேப்டன் வாய்விட்டுச் சிரித்தான்.
 
இவை எல்லாம் வருணின் பார்வைக்குத் தப்பவில்லை. எல்லாவற்றிற்கும் தனது கற்பனைக்கேற்ப வேறு நிறம் பூசிக்கொண்டான்.
 
“ஆனா புரிஞ்சுக்க மாட்டான், இப்பவும் நீங்க என்னோட சிரிக்கிறதை, பேசுறதை அவனால டைஜஸ்ட் பண்ண முடியலை, ஆனா அதைச் சொன்னா… அதுக்கும் ஏதாவது சப்பைக்கட்டுக் கட்டுவான்.”
 
“………….”
 
“விபி மனசுல இருக்கிறதை நான் வெளியே கொண்டு வரவா?”
 
“எப்பிடி?” ஆவலே உருவாக அவனை அண்ணார்ந்து பார்த்தாள் பெண்.
 
“பெருசா ஒன்னுமில்லை… லேசா என்னோட சிரிச்சுப் பேசுங்க, நான் இப்போ உங்க தோள்ல லைட்டா கையைப் போடுவேன், தப்பா எடுத்துக்காதீங்க.” சொல்லிவிட்டு மயூரியின் தோளில் கையைப் போட்டுக்கொண்டு அவளை நேவிகேஷன் டிபார்ட்மெண்ட்டிற்கு அழைத்துச் சென்றான் கேப்டன்.
 
“கேப்டன்!” திடீரென்று அவர்கள் அருகில் வருணின் குரல் கேட்டது.
 
“சொல்லு விபி.” திரும்பிக்கூடப் பார்க்காமல் மயூரிக்கு நேவிகேஷன் பற்றி ஒரு வகுப்பே நடத்திக் கொண்டிருந்தான் டாமினிக்.
 
“எனக்குப் பசிக்குது.”
 
“போய் சாப்பிடு மேன், அதை ஏன் எங்கிட்ட வந்து சொல்றே?” டாமினிக் திரும்பவும் இல்லை, மயூரியின் தோளிலிருந்து கையை எடுக்கவும் இல்லை.
 
“நாங்க ரெண்டு பேரும் வர்றதா செஃப் கிட்ட சொல்லிட்டு வந்திருக்கேன்.” 
 
“அப்படியா?!” என்றவன் மயூரியை பார்க்க அவள் தலையைக் குனிந்து கொண்டாள். 
 
“அப்போ நானும் கூட வர்றேன்.”
 
“தேவையில்லை… உங்க ட்யூட்டி டைம், நீங்க அதைக் கவனிங்க.” என்றவன், பெண்ணின் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு வேகமாக நடந்தான். 
 
அவள் கையை வருண் பற்றியிருந்த இடத்தில் வலித்தது பெண்ணுக்கு. விறுவிறுவென நடக்கும் தன்னைப் பார்த்து டாமினிக் சிரிப்பதை வருண் அறியவில்லை. ஆனால் மயூரி பார்த்தாள்.
 
பசிக்கின்றது என்று சொன்னவன் நேராக அவர்களது ரூமிற்கு வந்திருந்தான். ரூம் கதவை மூடியதுதான் தாமதம், இதுவரை அவன் பிடித்திருந்த பெண்ணின் கையை வீசிய வேகத்தில் மயூரி சுவரில் மோதி நின்றாள்.
 
இப்படியொரு தாக்குதலை வருணிடம் இருந்து அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. திட்டுவான் என்று தெரியும், ஆனால்…
அவளருகே வந்தவன் அவள் கழுத்தை ஒற்றைக் கையால் நெரித்தான். முகம் ஜிவுஜிவு என்று சிவந்து போனது.
 
“அதான் அவ்வளவு சொன்னேன்ல? அதுக்கப்புறமும் அவங்கிட்டப் பல்லைக் காட்டிக்கிட்டு நிக்கிறே!” அவன் பிடித்த பிடியில் மயூரிக்கு கழுத்து வலித்தது.
 
“வலிக்குது வருண்.” அவன் பெயரை முதன்முதலாக உச்சரித்தாள் பெண். 
 
“தொடுறான்… தோள்ல கையைப் போடுறான்… நீயும் இளிச்சிக்கிட்டு நிக்கிறே!”
 
“கையை எடுங்க வருண்… வலிக்குது எனக்கு.” அவள் பேச்சை அவன் கண்டுகொள்ளவே இல்லை.
 
“உங்கம்மா உன்னை நல்லா வளர்த்திருக்காங்கன்னு நினைச்சேன், ஆனா நீ அலையுற, ஆம்பிளைக்கு அலையுற, என்ன வேணும் உனக்கு அவங்கிட்ட? அதை நீ எங்கிட்டக் கேட்டிருக்கலாமே!” கஷ்டப்பட்டு அவன் கைகளில் ஒன்றைத் தன் கழுத்திலிருந்து பிரித்தாள் மயூரி.
 
தன் கையைப் பற்றியிருந்த அவள் கையை உதறியவன் அவள் இடையைப் பிடித்தான். அவள் முகத்துக்கும் அவன் முகத்துக்குமான இடைவெளி மிகவும் குறைவாக இருந்தது.
 
மருண்ட அந்த விழிகளில் அவன் எதைக் கண்டானோ… சட்டென்று அவளை விடுவித்தான். விடுவித்த வேகத்தில் வெளியேயும் போய்விட்டான். 
 
வலித்த தன் கழுத்தைத் தடவிய படி சுவரில் சாய்ந்து கொண்டாள் மயூரி.