அழகியே

அழகியே

அழகு 01
 
‘கல்ஃப் ஆஃப் மெக்சிகோ’ நீலப்பட்டாடை கட்டியிருந்தாள் நிலமகள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல், கடல், கடல் மாத்திரமே.
 
இருநூற்று இருபத்தைந்தாயிரம் டான் எடையுள்ள அந்த ராட்சசக் கப்பல் அமெரிக்காவின் ஹூஸ்டன் துறைமுகத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.
 
தன் முப்பது அடி ஆழத்தை நீருக்குள் புதைத்துக் கொண்டு அமைதியாக எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி தன் இலக்கை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருந்தது அந்த ‘மெர்சன்ட் நேவி’ கப்பல்.
 
ஹூஸ்டன் துறைமுகம் நெருங்க நெருங்க பறவைகளின் குதூகலச் சத்தம் காற்றில் நாலாபுறமும் மிதந்து வந்து கொண்டிருந்தது.
 
கப்பல்களில் இதுபோல மாதக்கணக்கில் பயணம் செய்யும் மாலுமிகளுக்கு இயற்கை மட்டுமே துணை. அதுவும் துறைமுகங்களை அணுகும்போது தங்களை வரவேற்கும் பறவைகளின் இன்ப ஒலியில் மனிதன் மற்றைய அனைத்தையும் மறந்து விடுவான்.
 
ஒரு மெல்லிய புன்னகையோடு கப்பலின் பிரிட்ஜில் (காக்பிட்) நின்று கொண்டிருந்தான் வருண். வருண் ப்ரமோதய… அந்த கப்பலின் சீஃப் ஆஃபீஸர். இன்னொரு வகையில் சொன்னால் அந்த கப்பலின் காப்டனுக்கு அடுத்த நிலை.
 
காப்டன் ஆவது ஒன்றே தன் வாழ்க்கையின் லட்சியம் என வாழ்ந்து கொண்டிருக்கும் முப்பத்து ஒரு வயது வாலிபன்.
 
“விபி…”
 
“காப்டன்.” சட்டென்று திரும்பினான் வருண். அவனை எல்லோரும் ‘விபி’ என்றுதான் அழைப்பார்கள்.
 
“பைலட்டை அனுப்பச் சொல்லி போர்ட்டுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டியா?”
 
“டன் காப்டன்.” உற்சாகமாக வந்தது வருணின் குரல்.
 
“ம்…” சோர்வு கலந்த குரலில் உறுமி விட்டு அப்பால் நகர்ந்தார் காப்டன். 
காப்டன் என்றால் ஏதோ வயதான மனிதர் என்று அர்த்தமல்ல, நாற்பதுகளைக் கூடத் தொட்டிராத இளம் போலந்து நாட்டு மாலுமி, பெயர் டாமினிக்.
 
மிகவும் கலகலப்பான மனிதர். வருணுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக டாமினிக்கைத் தெரியும்.  பிரான்ஸ் நாட்டின் லெ- ஹெவ்ரா துறைமுகத்திலிருந்து ஆரம்பித்தது அவர்கள் பயணம் அமெரிக்காவின் ஹூஸ்டனை நோக்கி. கடந்த இருபத்தைந்து நாட்களாக ஓயாத பயணம்.
 
தரைவழி பயணங்களைப் போன்றதல்ல கப்பல் பயணங்கள். பார்க்கும் திசையெல்லாம் நீலக்கடல் மட்டுமே தெரிவதால் ஒரு கட்டத்திற்கு மேல் மனம் சலித்துவிடும். 
 
துறைமுகம் என்றவொன்று வந்தால் போதும் என்று எண்ணம் ஏங்கத் தொடங்கிவிடும். இப்போது அந்த கப்பலில் இருந்த அனைத்துத் தர ஊழியர்களும் அதே மனநிலையில்தான் இருந்தார்கள்.
 
டாமினிக்கின் முகத்தில் சலிப்பு அப்பட்டமாக தெரிந்தது. காப்டனைப் பார்த்த வருண் வெளிப்படையாகவே சிரித்தான்.
 
“என்னய்யா சிரிப்பு?” தன் மேல் பாய்ந்த காப்டனைப் பார்த்து மீண்டும் வேண்டுமென்றே சிரித்தான் வருண். இருவருக்குள்ளும் இருந்த இரண்டு வருட கால நட்பு இதையெல்லாம் அனுமதித்திருந்தது.
 
“காம் டவுன் காப்டன்.”
 
“என்னத்தை காம் டவுன்? நீ சொன்னேன்னு இந்த கப்பல்ல கான்ட்ராக்ட் போட்டேன் பாரு, எம் புத்தியை எதால வேணும்னாலும் அடிச்சுக்கலாம்.”
 
“ஹா… ஹா…”
 
“சிரிக்காத விபி, கடுப்பாகுது!” 
 
“இப்ப உங்க பிரச்சினை என்ன காப்டன்?”
 
“யோவ்! கன்டெய்னரைக் கட்டிக்கிட்டு எத்தனை நாளைக்கு அழுறது? இந்த ஷிப் ல கண்ணுக்கு ஒரு குளிர்ச்சி இருக்கா?”
 
“ஏன்? சுத்திவர நல்லா கண்ணைத் தொறந்து பாருங்க, ஹூஸ்டனோட அழகு உங்க கண்ணுக்குக் குளிர்ச்சியா தெரியலையா?” வருண் சொல்லி முடிக்க தன் தலையில் அடித்துக் கொண்டான் டாமினிக்.
 
“அட ஆண்டவா! இந்த உப்புச்‌ சப்பில்லாதவனை எல்லாம் என்னோட தலையில கட்டி என்னை இப்பிடிச் சோதிக்கிறியே!”
டாமினிக் மீண்டும் வானத்தை நோக்கி கையை உயர்த்தி வாய்விட்டுப் புலம்பவும் வந்த புன்னகையை வாய்க்குள் அடக்கிக் கொண்டான் வருண்.
 
“இந்த வயசுல ரசிக்கிற அழகு இது இல்லை விபி.”
 
“பின்ன எதுவாம்?”
 
“அது…” கள்ளத்தனமான சிரிப்போடு வருணின் தோளில் கையைப் போட்டுக்கொண்டான் டாமினிக்.
 
“இதுவே ஒரு லக்ஷூரி க்ரூஸ் ல நான் கேப்டனா இருந்தேன்னு வை விபி…”
 
“அங்க மட்டும் என்ன வாழுதாம்? இதே மாதிரி ஒரு போர்ட் ல ஷிப்பை பார்க் பண்ண இந்நேரம் மரைன் பைலட்டுக்கு வெயிட் பண்ணிக்கிட்டுத்தான் இருந்திருப்பீங்க.”
 
“அது சரிதான், ஆனா… க்ரூஸ் ல ஸ்விம்மிங் பூல் இருக்கும், பார் இருக்கும், அங்க வண்ணம் வண்ணமா, கண்ணுக்குக் குளிர்ச்சியா பொண்ணுங்…”
 
“கேப்டன்!” டாமினிக் முடிக்கும் முன்பு வருணின் குரல் அவனைக் கடிந்தது.
 
“நாம இப்போ யூனிஃபார்ம் ல இருக்கோம்!”
 
“இல்லைன்னா மட்டும் நீ துவைச்சுக் கிழிச்சுக் காயப்போட்டிருவ, ப்ளடி ஸ்ரீ லங்கன்!”
 
“திஸ் இஸ் வெரி ரூட் கேப்டன்!”
 
“என்னய்யா ரூட்? இத்தனை வயசுக்கு ஒருத்தியைத் தொட்டிருப்பியா?” டாமினிக்கின் கேள்வியில் வருண் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான்.
 
அவர்களின் ஷிப் அப்போது ஹூஸ்டன் துறைமுகத்தில் நுழைவதற்கான வரிசையில் காத்து நின்று கொண்டிருந்தது. 
இது போன்ற உலகின் மிக முக்கியமான, பெரிய துறைமுகங்களுக்குள் கப்பலைக் கொண்டு செல்வது அத்தனைச் சுலபமான காரியமல்ல.
 
எத்தனை அனுபவமிக்க கேப்டனாக இருந்தாலும் அந்தந்த துறைமுகங்களின் ஆழ அகலங்களை நன்கறிந்த மரைன் பைலட்டுகள் இருப்பார்கள். அவர்கள்தான் இது போன்ற ராட்சத கப்பல்களைத் துறைமுகங்களுக்குள் வழி நடத்துவார்கள்.
 
போர்ட்டுக்கு தகவல் அனுப்பிவிட்டு பைலட்டின் வருகைக்காக அனைவரும் ப்ரிட்ஜில் காத்துக் கொண்டிருக்கும் போதுதான் இந்த பேச்சுவார்த்தை கேப்டனுக்கும் வருணுக்கும் நடந்து கொண்டிருந்தது.
 
அவர்கள் மாத்திரமல்லாமல் ப்ரிட்ஜில் அப்போது பல நிலைகளிலும் இருக்கும் இளைய மாலுமிகளும் இருந்ததால்தான் வருண் திடுக்கிட்டதே.
 
“என்ன மேன் முழிக்கிறே?”
 
“கேப்டன்… இங்க நாம மட்டும் இல்லை.”
 
“தப்பிக்கப் பார்க்காதே, கேட்ட கேள்விக்கு முதல்ல பதில் சொல்லு, யாரையாவது தொட்டிருக்கியா?” மற்றைய மாலுமிகளின் கவனம் கப்பலை நங்கூரமிடுவதில் இருந்ததால் வருண் இப்போது லேசாக சிரித்தான்.
 
“இல்லைதான்… இப்போதைக்கு கண்ணுக்கும் கருத்துக்கும் மட்டுமே விருந்து.”
 
“அப்போ எப்பதான்…” அதற்கு மேல் வருண் காதை மூடிக் கொண்டான். டாமினிக்கின் வாயிலிருந்து கெட்ட கெட்ட வார்த்தைகள் தாறுமாறாக வந்து வீழ்ந்தன.
 
“கேப்டன் ப்ளீஸ்…”
 
“உன்னையெல்லாம் திருத்த முடியாது விபி.”
 
“திருந்துற அளவுக்கு அப்பிடியென்ன
நான் கெட்டுப் போயிட்டேன்?”
 
“கெட்டுப் போகலையேங்கிறதுதான் என்னோட கவலையே!”
 
“அட ஆண்டவா! இது ஒரு குத்தமா?”
 
“ஏன் விபி, கொஞ்சம் ஃப்ரீயா வாழ்ந்தாத்தான் என்ன? கல்யாணத்துக்கு அப்புறம் ட்ரூவா, சின்ஸியரா இருந்தா போதாதா?” அடங்காத ஆர்வத்தோடு கேட்டான் டாமினிக்.
 
“எனக்குப் போதாதே கேப்டன், என்னோட கண்ணுக்காவது விருந்துக்கு அனுமதியுண்டு, எனக்கு வரப்போறவளுக்கு அதுக்குக் கூட அனுமதியில்லை.” சொல்லிவிட்டு சிரித்தான் வருண்.
 
“கண்ட்ரி ப்ரூட்!” 
 
“ஹா… ஹா…” மீண்டும் வருண் பொங்கிச் சிரிக்க டாமினிக் கோபத்தின் உச்சத்திற்குப் போனான்.
 
“தேர்ட் ஆஃபீஸர்! ஆர் யூ ரெடி?” வருணின் மேலுள்ள கோபத்தில் டாமினிக் சத்தம் போட அந்த இடமே அதிர்ந்தது.
 
“யெஸ் கேப்டன்!” அன்றைக்குக் கப்பலில் பயிற்சி பெறுவதற்கென தயாராகி இருந்த அந்த இளம் இருபத்தி மூன்று வயது தேர்ட் ஆஃபீஸர் ஒரு நடுக்கத்தோடு பதில் சொன்னான்.
 
‘இதெல்லாம் வாழ்க்கையில் சகஜமப்பா.’ என்பது போல அந்த இளம் ஆஃபீஸரின் தோளில் தட்டிக் கொடுத்தான் வருண்.
 
“கொஞ்சம் டென்ஷனா இருக்கு ஆஃபீஸர், கேப்டன் வேற சத்தம் போடுறாரு.” அந்த இளையவன் பயப்பட,
 
“அதான் நாங்கெல்லாம் இருக்கோமில்லை, நாட் டு வொர்ரி, கேப்டனை பத்தி தெரியாதா? அவர் அப்பிடிதான்.” என்றான் வருண்.
சற்று நேரத்திலெல்லாம் மரைன் பைலட் ஒரு ஹெலிகாப்டரில் வந்து இறங்க இவர்களின் கப்பல் துறைமுகத்தை நோக்கி நகர ஆரம்பித்தது.
 
அன்றைய பொழுது தனது ஷிஃப்ட் டை முடித்துக் கொண்டு தனக்கென வழங்கப்பட்டிருந்த அறைக்கு வந்தான் வருண்.
 
இன்றைக்கு ஹூஸ்டன் நகரில் தனக்குத் தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என எண்ணிக் கொண்டான். கடைசியாக ஃபிரான்ஸில் இருபத்தைந்து நாட்களுக்கு முன்பாக வெளி மனிதர்களைப் பார்த்தது!
 
இதுபோன்ற தொலைதூரங்களைக் கப்பலில் கடக்கும் போது மனது லேசாக வாடிப்போகும். அதுவும் கன்டெய்னர்களை சுமக்கும் கப்பல்களில் வேலை பார்ப்பது கொஞ்சம் சிரமம்தான்.
 
கேப்டனை நினைத்த போது சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வந்தது வருணிற்கு. கொஞ்சம் உல்லாசி, அத்தோடு சுகவாசி.
 
வாழ்க்கையை முடிந்த வரை அனுபவித்துவிட்டு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது டாமினிக்கின் கொள்கை.
 
அவ்வப்போது தன் கொள்கையை வருண் மீது திணிப்பதும் உண்டு.
 
தன் அறையோடு இருந்த அந்த குட்டி பாத்ரூமில் குளியலை முடித்துக்கொண்டு வெளியே வந்தான் வருண். 
 
கப்பலின் கேட்டரிங் பிரிவிற்கு அழைத்து தனக்கான உணவை ஆர்டர் பண்ணியவன் கட்டிலில் வந்து அமர்ந்து கொண்டான். கை இயல்பாக ஃபோனை இயக்கியது.
 
“ராகினி மேடம் கால் பண்ணினாங்களா என்ன?” வாய்விட்டுப் பேசியபடியே வாட்ஸ்ஆப்பை பார்த்தான். ராகினி அழைத்திருக்கவில்லை, ஆனால் வாய்ஸ் மெஸேஜ் வைத்திருந்தார்.
 
“ஆஹா… மேடம் என்ன சொல்லி இருக்காங்க?” மீண்டும் தனக்குத்தானே பேசிக்கொண்டு அம்மாவிடமிருந்து வந்த அந்த ஒலிப்பதிவை ஓட விட்டான்.
 
“வருண், அம்மா பேசுறன், உன்ட பெரிய சூட்கேஸுக்கு அடியில… உடுப்புகளுக்குக் கீழ ஒரு டைரி வெச்சிருக்கன், எடுத்துப் படி, கடைசி வரைக்கும் முழுசா படி, அதுக்குப் பிறகு எனக்குக் கால் பண்ணு, நாம ரெண்டு பேரும் பேசலாம்.” 
வருணுக்கு ஆச்சரியமாக இருந்தது.
 
அவன் அம்மா இப்படியெல்லாம் பேசுபவரல்ல. கழுத்தைச் சுற்றி மூக்கைத் தொடுவது எல்லாம் ராகினியின் வழக்கமல்ல.
 
நினைத்ததைச் சட்டென்று பேசி விடுவார். இது என்ன புதிதாக இருக்கிறது!
 
எண்ணமிட்டபடியே கப்போர்ட்டில் இருந்த தனது பெரிய சூட்கேஸை எடுத்தான் வருண். தனது பயணத்திற்கான உடமைகளை எப்போதும் அவன் அம்மாதான் ஆயத்தம் செய்வார்.
 
“ராகினி மேடம், அப்பிடி யாரோட டைரியை என்னோட சூட்கேஸ்ல வெச்சிருக்கீங்க?! இது என்ன இன்னைக்கு எல்லாம் புதுசா இருக்கு? ம்…” வாய் அது பாட்டுக்குப் பேச கை அந்த டைரியை தேடியது.
 
‘1989’ ஆம் ஆண்டிற்கான பழைய டைரி ஒன்று அவனது ஆடைகளுக்கு அடியில் இருந்தது. வருண் ஆச்சரியத்தோடு அதைக் கைகளில் எடுத்தான்.
 
‘ப்ரமோதய விக்ரமசிங்ஹ’ பெயர் அழகான எழுத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அது அவன் அப்பாவின் டைரி! அதை எதற்கு அவன் அம்மா தன்னிடம் கொடுத்திருக்கிறாள்?!
 
குழப்பத்தோடு டைரியை புரட்டினான் வருண்.
 
***
 
பன்னிரண்டு மாடிகள் கொண்ட அந்தக் கட்டடத்தின் கார் பார்க்கிங்கில் இருந்து எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளியே வந்தது அந்த ப்ளாக் ஆடி. 
 
தகவல் தொழில்நுட்ப பாடநெறிக்கான தனியார் நிறுவனமொன்றின் கொழும்பு கிளை அந்தக் கட்டடத்தின் மூன்று தளங்களைத் தன்வசம் ஆக்கியிருந்தது. 
 
காரின் ஏசி யை நிறுத்திவிட்டு கண்ணாடியைத் திறந்து விட்டாள் மயூரி. முழுப்பெயர் மயூர ப்ரதாயினி.
 
இரவு நேர குளிர்காற்று சில்லென்று முகத்தில் வந்து மோதிய போது அன்றைய நாளின் களைப்பு முழுவதும் தீர்ந்தாற்போல உணர்ந்தாள் பெண்.
 
நேரம் இரவு ஏழு முப்பது. அந்தத் தனியார் தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் முழுநேர விரிவுரையாளராக பணியாற்றுகிறாள் மயூரி.
 
போக்குவரத்து நெருக்கடியைக் தவிர்ப்பதற்காக காலி வீதியைத் தவிர்த்துவிட்டு மரைன் வேயில் காரை வளைத்துத் திருப்பினாள் பெண். இதமான கடற்காற்று முகத்தில் வந்து மோதியது.
 
வெள்ளவத்தை… இலங்கையின் தலைநகர் கொழும்பில் அமைந்திருக்கும் ஒரு குட்டி யாழ்ப்பாணம் இது என்று சொன்னால் மிகையாகாது.
 
தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் பகுதி. காரை வீதியின் ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி சற்று நேரம் அலைபாயும் அந்தக் கடலைப் பார்த்தபடி நின்றிருந்தாள் மயூரி.
 
வீட்டில்தான் அவள் பெயர் மயூரி, வேலை செய்யும் இடத்தில் மாணவர்கள் அனைவருக்கும் அவள் ப்ரதாயினி மிஸ். 
 
தூரத்தே ட்ரெயின் வரும் ஓசைக் கேட்டது. கடற்கரை ஓரமாக இருந்த அந்த ரயில் பாதையில் கற்றாழை மரங்களுக்கூடே வண்டி போவதைப் பார்ப்பதே ஒரு தனி அழகுதான்.
 
பக்கத்தில் பேச்சுக்குரல் கேட்கவும் திரும்பிப் பார்த்தாள் மயூரி. கணவன் மனைவி இருவர் தங்களுக்குள் ஏதோ விவாதித்தபடி நடந்து போய்க்கொண்டிருந்தார்கள்.
 
தாய்மொழி சிங்களம் என்றாலும் மயூரிக்கு தமிழ் நன்றாகப் புரியும்.
தமிழ் மேலும் தமிழர்கள் மேலும் அவளுக்கு எப்போதுமே அலாதியானதொரு பிரியம் உண்டு.
 
அதற்குக் காரணம் அவள் இதுவரைப் பார்த்திராத அவள் தாய்மாமன்.
இன்றைக்கும் அவள் அம்மா தன் அண்ணனை நினைத்து அழாத நாளில்லை. அம்மாவிற்கு மாமா மேல் அத்தனைப் பாசம். 
 
வெளிநாடு சென்றவர் அங்கே ஒரு தமிழ் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டாராம்.
 
குடும்பம், பாரம்பரியம் என்று உயிரை விடும் பாட்டிக்கு அது பெருத்த அடியாகப் போகவே அத்தோடு மகனைத் தலைமுழுகி விட்டார்.
ஃபோன் சிணுங்கவும் எடுத்துப் பார்த்தாள், அம்மாதான் அழைத்துக்கொண்டிருந்தார். 
 
“சொல்லுங்கம்மா.”
 
“எங்க இருக்க மயூரி?”
 
“வெள்ளவத்தை.”
 
“ரொம்ப நேரமாச்சேம்மா.”
 
“இதோ வந்திடுறேம்மா.”
 
“ஆச்சி இப்பவே சத்தம் போட ஆரம்பிச்சுட்டாங்க.”
 
“அவங்க உங்க அம்மாவா இல்லை மாமியாரான்னு எனக்குச் சமயத்துக்குச் சந்தேகமே வருது.”
 
“பெரியவங்களை அப்பிடியெல்லாம் பேசக்கூடாது மயூரி.”
 
“சரி சரி… இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுறேன், நான் என்ன சின்னக் குழந்தையாம்மா?”
 
“அதுக்காகச் சொல்லலை மயூரி… காலம் கெட்டுக் கிடக்குதும்மா.”
 
“புரியுது… வந்திடுறேம்மா.” அதற்கு மேல் பேச்சை வளர்க்காமல் காரை ஸ்டார்ட் செய்தாள் பெண். 
மயூரியின் குடும்பம் வசிப்பது
 
‘மவுண்ட்- லவேனியா’ வில். கடற்கரையை அண்மித்திருந்தது அவர்கள் வீடு. 
 
வீடு என்று சொன்னாலே மயூரியின் மனதில் ஓர் இதம் பரவும். 
 
பன்னிரண்டு பேர்ச் நிலத்தில் அழகான தோட்டத்தோடு வடிவமைக்கப்பட்டுக் கட்டப்பட்டிருந்தது அவர்கள் வீடு.
 
பாட்டியின் வீடு, அவர் காலத்திற்குப் பிறகு அவள் அம்மா விஷாகாவிற்கு அது சொந்தமாகும்படி பத்திரம் பதியப்பட்டிருந்தது.
 
வீட்டை நெருங்கும் போதே கார் ஷெட்டின் ரோலிங் ஷட்டரை திறந்துவிட்டார் அம்மா. அந்த ப்ளாக் ஆடியை உள்ளே செலுத்தி நிறுத்திவிட்டு இறங்கினாள் மயூரி.
 
“என்ன… மாமியார் மருமகன்கிட்ட புகார் வாசிக்க ஆரம்பிச்சுட்டாங்களா?”
 
“பத்து நிமிஷமா அதான் நடக்குது உள்ள.”
 
“நடக்கட்டும் நடக்கட்டும்.”
மயூரி வீட்டினுள் நுழையும் போதே ஆச்சியின் குரல் கோபமாக ஒலித்துக்கொண்டிருந்தது. அதைக் கண்டும் காணாதவள் போல தனது அறைக்குள் புகுந்து கொண்டாள் பெண்.
 
ரூமின் கதவை மூடும் போது தனது திருமணம் பற்றி ஆச்சி அவள் தந்தையிடம் பேசுவது காதில் விழுந்தது. ஒரு நிமிடம் திகைத்தாலும்… தன்னை மீறி என்ன நடந்துவிட போகிறது என்று குளியலறைக்குள் நுழைந்தாள்.
 
“கொச்சர காலே மே வகேம இன்ட புலுவங்த புதே?”(இன்னும் எவ்வளவு காலம் இதே போல இருக்க முடியும் மகன்?) 
 
மயூரி டைனிங் டேபிளில் வந்து அமரும் போது ஆச்சி அவள் தந்தையிடம் இதைத்தான் கேட்டுக் கொண்டிருந்தார். 
 
அம்மாவிடம் மகள் கண்களால் கேள்வி கேட்க, அதைக் கண்டும் காணாதவர் போல மகளின் ப்ளேட்டில் இடியாப்பத்தைப் பரிமாறினார் விஷாகா. 
 
மிளகு, சீரகம், மஞ்சள் மூன்றையும் ஒன்றாக வைத்து அரைத்து தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்க வைத்து சொதி வைத்திருந்தார் அம்மா. கூடவே நெத்திலி வறுவல். 
 
‘நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசுங்கள், அதைப்பற்றி எனக்கு யாதொரு கவலையும் இல்லை.’ என்பது போல உணவை ஒரு பிடி பிடித்தாள் மயூரி. பகலுணவு எப்போதுமே கேன்டீனில்தான் உண்பாள் பெண். 
 
அதனால் இரவு போஜனம் அந்த வீட்டில் எப்போதும் விசேஷமாக இருக்கும்.
 
“சீக்கிரமா மயூரிக்கு ஒரு வரன் பார்க்கணும்.” ஆச்சி சொல்லி முடிக்க மயூரிக்கு புரையேறியது. அம்மா மகளின் தலையில் லேசாக தட்டினார்.
 
ஆச்சியும் அப்பாவும் இவளை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு மீண்டும் தங்கள் பேச்சைத் தொடர்ந்தார்கள். வீட்டில் அதிகம் பேசுவது சிங்களம்தான்.
 
“வயசு இருபத்தி ஏழு, இவ்வளவு நாளும் படிப்பு படிப்புன்னு தள்ளிப் போட்டுக்கிட்டு இருந்தா, அதான் இப்போ சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டா இல்லை? இனியும் எதுக்கு வீணா காலத்தைக் கடத்தணும்?”
 
ஆச்சியின் பேச்சிற்கு அப்பா எப்போதும் மறுப்புச் சொன்னது கிடையாது என்பதால் இப்போதும் தலையையே ஆட்டி வைத்தார்.
 
மாமியார் பேச்சைத் தட்டாத மருமகளைத்தான் மயூரி பார்த்திருக்கிறாள். ஆனால் அவள் வீட்டில் எல்லாமே தலைகீழ். மாமியார் பேச்சிற்கு தாளம் தப்பாமல் ஆடும் மருமகன்.
 
உணவை முடித்துக்கொண்டு தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள் பெண். கூடவே வேலை செய்யும் ரோஹித் தின் ஞாபகம் சட்டென்று வந்தது மயூரிக்கு.
 
வேலையில் சேர்ந்த இந்த இடைப்பட்ட காலத்தில் ரோஹித் அவளைப் பார்க்கும் பார்வையில் ஒரு சுவாரஸ்யம் இருப்பதை மயூரி இப்போதெல்லாம் உணர்கிறாள்.
 
அடிக்கடி அவளோடு ஏதேனும் காரணம் வைத்துக் கொண்டு வந்து பேசுகிறான். கேன்டீனிலும் உணவு உண்ணும் போது அவளோடு வந்து இணைந்து கொண்டு அவன் வீட்டுக் கதைகள் பேசுகிறான்.
 
ஆனால்… அவன் தனக்குச் சரியான துணையாக இருப்பானா? ஆச்சியும் அப்பாவும் எப்போதும் எதிர்பார்க்கும் அவர்களது பாரம்பரியத்தில் வந்தவன்தான் ரோஹித்.
 
இவர்களிடம் சொன்னால் நிச்சயமாக மறுக்க மாட்டார்கள். ஆனாலும் ஏனோ சொல்ல மனம் வரவில்லை.
 
அவனைப் பார்க்கும் போது அப்படியெல்லாம் எந்த உணர்வும் மயூரிக்குள் எழவில்லையே. அப்படியிருக்க எப்படி மேலே யோசிப்பது?!
 
சட்டென்று கதவு திறந்து கொள்ள அண்ணார்ந்து பார்த்தாள் மயூரி.
 
அவள் அம்மாதான் உள்ளே வந்து கொண்டிருந்தார். கையில் துவைத்து மடித்த ஆடைகள் இருந்தன.
அவள் கப்போர்டில் அனைத்தையும் சீராக வைத்தவர் மகளின் அருகில் வந்து அமர்ந்து கொண்டார்.
 
“வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறமும் லேப்டாப்பை பார்க்காத மயூரி, கண் என்னத்துக்கு ஆகிறது?” அம்மாவின் பேச்சில் மடியிலிருந்த லேப்டாப்பை மூடி வைத்தாள் பெண்.
 
“வெளியே ரொம்ப மும்முரமா உன்னோட கல்யாணப் பேச்சுப் போகுது.”
 
“இன்னைக்கு ராத்திரியே எந்தப் பயலையாவது கொண்டு வந்து நிறுத்திடுவாங்களோ?”
 
“ஹா… ஹா… கொண்டு வந்து நிறுத்தினாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை மயூரி.”
 
“ம்…”
 
“ஏன் மயூரி?”
 
“என்னம்மா?”
 
“உன்னோட மனசுல யாராவது இருக்காங்களா?” அம்மாவின் கேள்வியில் மகள் உதட்டைப் பிதுக்கினாள்.
 
“அப்பிடி இருந்தா உங்கக்கிட்ட சொல்லாம இருப்பேனாம்மா?”
 
“ஆனா அம்மா மனசுல ஒரு ஆசை இருக்கு மயூரி.” கண்களில் கனவுகளோடு அம்மா சொல்ல இப்போது மயூரி திடுக்கிட்டாள்.
 
அவள் சிறு பெண்ணாக இருந்தது முதல் அம்மா எப்போதும் அவளிடம் சொல்லும் ஆசை இது. என்றைக்குமே நிறைவேற முடியாத அம்மாவின் ஆசை.
 
“அம்மா…” 
 
“புரியுது… அம்மா முட்டாள் மாதிரி மனசுல ஆசையை வளர்த்துக்கிறான்னு நீ நினைக்கிறே இல்லை மயூரி?”
 
“…………….”
 
“மனசுல ஏதோ ஒரு மூலையில… ஒரு குரல் அடிக்கடி சொல்லுது மயூரி… என்னோட ஆசைக் கண்டிப்பா நிறைவேறும்னு.” 
 
“வேணாம்மா.”
 
“கூடப் பொறந்தது… ஒவ்வொன்னையும் ஆசையாசையா எனக்காக பார்த்துப் பார்த்துப் பண்ணின அண்ணனை அவ்வளவு சீக்கிரத்துல வேணாம்னு என்னால விட முடியாது மயூரி.”
 
“பெத்த தாயே வேணாம்னு சொல்லிட்டாங்களே?”
 
“அதுக்காக?” மகளை உறுத்து விழித்த விஷாகாவின் கண்களில் நீர் திரண்டது. அதற்கு மேல் எதுவும் பேசாமல் எழுந்து வெளியே போய்விட்டார்.
 
மயூரி தலையில் கையை வைத்துக்கொண்டு பெருமூச்சொன்று விட்டாள்.
 
இதுவரைத் தான் பார்த்திராத மாமன். இனிமேலும் பார்க்க வாய்ப்பேயில்லை.
 
அவரை நினைத்துக் கண்ணீர் விடும் அம்மா. இதெல்லாவற்றிற்கும் நடுவில் அவள்… கூடவே அவன்! 
யாரவன்?!
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!