அவள் பௌர்ணமி 1

IMG-20200921-WA0010-808982fb

அவள் பௌர்ணமி 1

அவள் பௌர்ணமி 1

 

நிழல் காதலன் – காட்சி ஒன்று:

தொன்னூறுகளின் காலக்கட்டம் இது…

நடுவானில் பௌர்ணமி முழு நிலவை கருமேகம் முழுவதுமாக மறைத்திருக்க, மழை தூறுமா? தூறாதா? என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்த காலநிலை!

அங்கே தனியே ஓர் இளம்பெண் மட்டும் வேகநடையிட்டு நேரே சென்று கொண்டிருந்தாள்! யார் அவள்?

அவள் பௌர்ணமி!

அவளுக்கென்று யாருமில்லை. அவளும் யாருக்காகவும் இல்லை. இனி அவளும் இருக்க போவதில்லை!

அவளுக்கே அவளுக்காக இருந்தவன் இப்போது இல்லாமலே போயிருந்தான். அவன் உயிருடன் இல்லை என்பதை அவளால் நம்ப முடியவில்லை. அவன் மீது அவள் கொண்ட தாளாத நேசம் நம்பவிடவில்லை.

ஆனால், தன் உயிரானவனை உயிரற்ற கூடாக கண்டு விட்டாளே! 

தன்னை பார்த்ததும் கொஞ்சமாய் விரிந்து ஒளிரும் அவன் கண்கள்! 

அவள் விரல்களை எப்போதும் ஆதரவாய் பற்றிக் கொள்ளும் அவன் விரல்கள்! 

அவளை காதலாக தழுவிக் கொள்ளும் அவன் கைகள்!

அவன் ஓயாத பேச்சு! 

சாயாத பார்வை! 

திகட்டாத முத்தங்கள்!

முடியாத காதல்கள்! 

எல்லாமே முடிந்தே போனதோ?

இனி அவளுக்கென்று என்ன? ஒன்றுமே இல்லை! அவனில்லாத உலகத்தில் அவளுக்கென்று மிச்சமாக எதுவும் இல்லை! அவனில்லாத இடத்தில் அவளும் இனி இருப்பதாக இல்லை.

இதோ தன்னுயிர் நீத்தாவது தன்னவனை அடைந்திட,‌ இறுதி வழி தேடி நடக்கிறாள் அவள்.

எலுமிச்சை மஞ்சளில் சிவப்பும் நீலமும் பூக்கள் இறைக்கப்பட்ட மேல் சட்டை, அடர் சிவப்பில் மஞ்சள், நீல நிற நெருக்கமான பூக்கள் கொண்ட முழுநீள பாவாடை, சிறு பிடிப்பானுக்குள் அடக்கப்பட்டும் எதிர் காற்றில் அடங்காமல் பறக்கும் செம்பட்டை நிற கூந்தல், இருபது வயதிற்குள் பொருந்தும் தோற்றம். இவள் தான் பௌர்ணமி.

நட்ட நடு இரவு. எங்கும் இருட்டு. அமானுஷ்ய அமைதி. எங்கிருந்தோ அகோரமாக கேட்கும் சில தெளிவற்ற ஒலிகள். திடமான மனிதனும் வியர்த்து வழியும் அந்த வேளையில், அவள் எதையும் கண்டு கொள்ளாமல் நடந்தாள்…

ஒழுங்கற்ற கரடு முரடான பாதை. வெளிச்சமற்ற இரவு. முகத்திலும் மனதிலும் சிறிதும் பயமற்று நடந்தாள்…

தூரமாய் தெரிந்த ஒற்றை விளக்கு வெளிச்சத்தை நோக்கி நடந்தவள், காலில் ஏதோ தட்டுப்படவே நின்று விட்டாள்.

அது இரும்பு தண்டவாளம்! அவள் தேடி வந்ததும் இதைத்தானே. வந்து விட்டாள். இன்னும் சில நிமிடங்களில் அவளின் கலக்கம், தயக்கம், கண்ணீர், கவலை, வலி, வேதனை எல்லாம் முடிந்து போகும்.

அவளின் கால்களுக்கிடையில் தண்டவாளத்தின் அதிர்வை அவளால் உணர முடிந்தது. நிமிர்ந்து பார்த்தாள். தூரத்தே ரயில் வண்டி வேகமாக சீறி வந்துக் கொண்டிருந்தது. அதை எதிர் நோக்கி நின்று கொண்டாள்.

ரயில் வண்டியின் முகப்பு அதிவேகமாக அவளை நோக்கி பாய்ந்து வந்து கொண்டிருந்தது. ஆழ மூச்செடுத்து கண்களை இறுக மூடி நின்றாள். மூடிய இமைகளில் அவன் சிரித்த முகத்தின் பிம்பம்.

‘இதோ வந்துட்டேன் சந்துரு… உன்கிட்ட வந்துட்டேன், உன்ன பார்க்காம என்னால இருக்க முடியாது. இனியும் என்னை தேட விடாம, நீயே என்னை சேர்த்துக்கோ…’ 

ரயில் வண்டியின் முகப்பு அவளை மோதி கடக்கையில், அவளுடல் மேலெழுந்து காற்றில் மிதந்தது!

ரயில் வண்டி சத்தம் தூரமாக தேய்ந்து கேட்டது. ஆனால் அவளுக்கு எதுவும் கேட்கவில்லை. கேட்கவும் கேட்காது.

வலியற்ற மரணமா? மூடியிருந்த கண்களை திறந்து பார்த்தாள். தானிருந்த நிலை பார்த்து அலறி நடுங்கி விட்டாள்! தன் உடல் சிதைந்து கோர மரணம் ஏற்பட்டு இருந்தால் கூட, இத்தனை பயந்து இருக்க மாட்டாளோ என்னவோ?

எந்த பிடிமானமும் இன்றி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தாள் அவள்!

“ஆங்… ஆங்… ஆ…” 

தொண்டயைக் கிழித்துக் கொண்டு வெலவெலத்து அவள் கத்த, அலுங்காமல் குலுங்காமல் தரையில் இறக்கி விடப்பட்டாள். 

அவள் இதயத்தின் தடதடப்பு குறைய சில நிமிடங்கள் ஆனது. 

இப்போது தான் தன்னை சுற்றி ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தாள். தன் உள்ளுணர்வு உணர்ந்த விசயத்தில் இரு கைகளாலும் வாய் மூடி அதிர்ந்து நின்றாள்.

சில நொடிகளில், வாய்விட்டு கதறினாள். காற்று வெளியில் தன் கைகளை நீட்டி துழாவினாள்.

‘சந்துரு… சந்துரு… நீயா? நீதான? வந்துட்டியா சந்துரு!’ அவள் உள்ளம் கூக்குரலிட்டது.

ஆனால், அவள் குரல்வளையில், “ஆங் ஆங் த்ரு த்ரு…” என்ற சத்தம் மட்டுமே வந்தது.

காற்றில் அவள் கைகளுக்கு எதுவும் தட்டு படாமல் போக, ‘நீ இங்க தான இருக்க, எனக்கு தெரியலயே… அய்யோ’ என்று தலையில் அடித்து கொண்டு கலங்கினாள்; கதறினாள்; வெடித்து அழுதாள்.

”பௌர்ணமி… அழாம என்னை பாரு…” காற்றில் அதிராமல் அவன் குரல் அவளுள் மட்டும் ஒலித்தது.

அவளால் அவன் குரலை கேட்க முடியவில்லை. ஆனால் உணர‌ முடிந்தது! விதிர்த்து மெல்ல பார்வையை நிமிர்த்தி பார்த்தாள். 

நீல வண்ண ஒளி சிற்பமாக காற்றில் அவன் உருவம் மிதந்தபடி அவள் பார்வைக்கு தோற்றமானது.

காதல் பித்தேறிய பேதை, மறு யோசனை இன்றி, அவனை தாவி அணைத்துக் கொண்டாள்.

”த்ரு த்ரு ஆகாங் ஆகாங்”

‘சந்துரு… சந்துரு… என்னைவிட்டு போகாத… என்னையும் உன்னோட அழைச்சிட்டு போயிடு’ அவன் மார்பில் புதைந்து கதறினாள்.

ஆனால், அவனை தீண்டும் உணர்வு அவளுக்கு இல்லை; குழம்பினாள். நிமிர்ந்து தன் கைகளால் அவன் முகத்தை, மார்பை, கைகளை வருடி பார்த்தாள்; அவனை தொட முடிந்தது; தழுவ முடிந்தது; ஆனால் அதை உணர முடியவில்லை.

அவன், அவள் தவிப்பை நிர்மலமாக பார்த்து நின்றான். 

அவனை தொட்டு தன் கைகளை பார்த்து, அவன் முகத்தையும் பார்த்தாள்.

அவன் வலியாய் இதழ் மலர்ந்தான். ‘என்னோட உடல் அழிஞ்சு போச்சு, உன் பார்வைக்கு தெரியறது, என் ஆன்மா மட்டும் தான்’ அவன் இதழசைத்தான்.

அவன் சொல்வதை உள்வாங்கியபடி, அவள் கருவிழி இப்படியும் அப்படியும் வேகமாக அலைந்தது.

‘இது நிஜந்தான பொய்யில்லையே, நான் உன்ன… உன்னோட ஆன்மாவ பார்க்கிறேனா? இது… இது என் கனவில்லையே?’ நம்பிக்கையின்றி பரிதவித்து கேட்டது‌ அவள் உள்மனது.

பதிலாக அவளை நெருங்கி வந்தவன், அவள் கன்னம் பற்றி அழுத்த கிள்ளி விட்டான். ”ஸ் ஆ…” என்று வலியில் தன் கன்னத்தை தேய்த்துக் கொண்டவள், ‘ஆனா, எப்படி? நீ எப்படி எனக்கு தெரியுற?’ அவள் கலங்கிய கண்கள் விரிந்து வியந்து கேட்டன.

”இந்த ஒருவாரமா நீ எனக்காக படுற அவஸ்தை எல்லாம் பார்த்துட்டு உன் பக்கத்திலேயே தான் இருந்தேன்… உன்ன ஆறுதல் படுத்த கூட முடியாம தவிச்சிட்டு இருந்தேன்… இப்ப எனக்காக நீ உயிரையே விட துணிஞ்சதுக்கு அப்புறமும் என்னால சும்மா இருக்க முடியல.

என்னை சுத்தி இருக்க ஒளி துகள்களை ஈர்த்து, என் உருவத்துக்குள்ள பொருத்தி,‌ உனக்கு காட்டுறேன்” என்று விளக்கம் தந்தான்.

அவள் பதிலின்றி கலங்கி நின்றாள். தன்னவனை இப்படியா பார்க்க வேண்டும் நான். மனம் உடைந்து போனாள்.

மறுபடி தண்டவாள அதிர்வு. தூரத்தே ரயில் வண்டி சத்தம். அந்த‌ ராட்சத எந்திர மலைப்பாம்பு வேகம் பிடித்து வந்தது.

“த்ரு ஆங் இங் ம்ம்”

‘சந்துரு… இன்னொரு வண்டி வருது பாரு… நீ இங்கேயே இரு நானும் உன்னமாதிரி… உன்கூடவே வந்திறேன்’ என்று சைகையில் சொல்லி வேகமாக‌ நகர்ந்தவளை அவன் கைப்பிடித்து தடுத்தான்.

திரும்பியவள், ‘எனக்கு சாவ நினைச்சு சுத்தமா பயம் இல்ல… நீ என்கூட இல்லாம இருக்கறது தான் பயமே… நான் உன்னோடவே இருக்கனும்… அதுக்கு நானும் சாகனும்…’ மனதின் தளராத உறுதியோடு அவன் பிடியை உதற முயன்றாள்.

அவன் ஆத்மா பிடித்த பிடியை தளர்த்தாமல் நின்றது. ரயில் வண்டி நெறுங்கி வந்து விட்டது. ‘அச்சோ வண்டி போயிட போகுது விடு சந்துரு’ அவள் மனம் பதறினாள்.

“ஆங் காங் ம்ம் த்ரு” அதீத உணர்ச்சிவசத்தில் அவள் குரல்வளை சத்தம் எழுப்பியது.

”நீ சாக முடியாது பௌர்ணமி… உனக்கான கர்மா இன்னும் மிச்சமிருக்கு. அதை முடிக்காம உன் பிறப்பு மடியாது” என்றது அவன் ஆத்மா நிதானமாக.

அவள் இரண்டு கைகளால் தலையில் அடித்து கொண்டு அழுதாள். ‘நீயில்லாம நான் எப்படி இருப்பேன்… நீயில்லாத உலகத்தில எனக்குன்னு யாரு இருக்கா? என்னை உன்னோடவே கூப்பிட்டுக்கோ சந்துரு’ அவனிடம் கெஞ்சி வேண்டி கதறினாள்.

”நீ இனிமே தனியாள் இல்ல பௌர்ணமி. என் உயிரோட மிச்சம் உனக்குள்ள உயிரா முகிழ்ந்திருக்கு…” என்றவன் அவளின் மணி வயிற்றை கை காட்டினான்.

விழிகள் அகல விரிய, அவள் ஸ்தம்பித்து நின்றாள். ஈர விழிகளோடு தன் வயிற்றை கை நடுங்க வருடி தந்தாள்.

பரவசமாய்… பரிதவிப்பாய்… அவனை ஏறிட்டாள்.

அவன் இதமாய் புன்னகை தந்தான். ”நம்ம குழந்தைய உனக்கு துணையா விட்டிருக்கேன்… அவனை பத்திரமா இந்த பூமிக்கு கொண்டு வர கடமை உனக்கு இருக்கு” அவள் உயிர் வாழ்வதற்கான அவசியத்தை வலியுறுத்தினான்.

‘நான்… என்னால… தனியா எப்படி முடியும்? நீயும் நானும் சேர்ந்து நம்ம குழந்தையை வளர்க்க ஆச பட்டேனே’ அவள் கண்கள் கலங்கி மொழிந்தன.

‘நீதான் இந்த குழந்தையோட அப்பான்னு என்னால சொல்ல முடியுமா? சொன்னாலும் யாராவது கேப்பாங்களா? புரிஞ்சுப்பாங்களா? நம்புவாங்களா?’ அவளின் பேதை மனம் கதறியது.

‘இல்லாத அப்பாவுக்கு, வாய் பேச முடியாத அம்மாவுக்கு பிறந்து, இந்த பாழ்பட்ட சமூகத்தில நம்ம குழந்தை பாடுபடறதை விட, அது பிறக்காமையே போகலாம்…’

‘பௌர்ணமி…’ அவன் கோபமாக அழுத்திய குரலில் ரத்த சிவப்பாக மாறி போக, அவன் உருவம் கொடூர சாயல் காட்டியது.

இவளின் இதயம் சில்லிட்டது.

‘சந்துரு…’ அவள் இதழ்கள் நடுங்க அசைந்தது.

அவன் மெல்ல சாந்தமானான்.

அவள் உதடு பிதுங்கி அழ தொடங்க, அவளை தன்னோடு அணைத்து கொண்டான்.

‘நீயில்லாம நான் எப்படி சந்துரு?’ அவன்மேல் சாய்ந்தபடி தேம்பினாள்.

அவனுக்கும் தெரியும் தன்னை தவிர அவளுக்கு யாரும் இல்லை என்று. அவனுக்கும் அவளை தவிர யாரும் இல்லை.

இப்போதல்ல, பிறப்பிலிருந்தே கால் ஊனமான அவனும், கேட்டல், பேசுதல் திறனற்ற அவளும் தனித்தவர்கள் தான்.

அவனின் தனிமை உலகத்தை அழகாக மாற்றியவள் அவள் மட்டும் தான். அவர்கள் உலகத்தில் அவர்கள் இருவர் மட்டும் தான். வேறு யாரும் வர முடியாது. அவர்கள் அன்பின் ஆழத்தை புரிந்து கொள்ளவும் முடியாது.

அந்த அற்புதமான உலகத்தை சிதைத்து, தன் உயிரை குடித்து, தன்னவளை தவிக்க விட்ட யாரையும்… யாரையும் அவன் விட்டு வைக்க போவதில்லை.

அவன் உருவம் விகாரமாக மாறி, கொடூர முகம் காட்டியது.

அத்தோடு தன்னவளுக்கும் தன் பிள்ளைக்குமான உரிமையை பெற்று தரவும் அந்த ஆத்மா சங்கல்பம் ஏற்றுக் கொண்டது.

அந்த சங்கல்பம் முடியும்வரை, அவன் உரிமை வேட்டை தொடரும்.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!