அவள் பௌர்ணமி 10

IMG-20200921-WA0010-068dcc26

அவள் பௌர்ணமி 10

 

அன்றைய மாலையில் படப்பிடிப்பு தளம் மலைப்பகுதியில் உட்புறம் தேடி கண்டெடுத்த இடத்தில் அனுமதி பெற்று அமைக்கப்பட்டிருந்தது.

 

நீரோடையும் புல்வெளியுமாக இருந்த இடத்தை இன்னும் அழகாக காட்ட படிப்பிடிப்பு காட்சிகளுக்கு பொருத்தமாக அந்த இடத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு கொண்டிருந்தன.

 

விக்னேஷ், பிரியா காட்சி அமைப்பிற்கான வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்க, மித்ராவதி முகிலனிடம் காட்சியின் லாவகம் பற்றி விவரித்து கொண்டிருந்தார். காலை முதலே ஓய்வு சாய்வற்ற படப்பிடிப்பில் அனைவருக்கும் சோர்வு தட்டி இருக்க, அதையும் உதறிவிட்டு தன் பணிகளில் மும்முரம் காட்டினர்.

 

கேரவேனில் இருந்து வேகமாக இறங்கி வந்த அமிர்தி நேராக மித்ராவிடம் வந்து நின்றாள்.

 

“மேடம், அந்த காஸ்டியூம் டிசைனர் கொடுக்கிற டிரஸ் எனக்கு சுத்தமா பிடிக்கல, வேற ட்ரஸ் கொடுக்க சொன்னாலும் இதைதான் போடனும்னு கம்பல் பண்றாங்க… என்னால முடியாது மேடம்” அமிர்தி தவிப்பாக பேச பேச, மித்ராவதியின் முகம் இறுகியது.

 

‘இருக்குற தலைவலியில இது வேற’

 

“விக்கி” அவரின் ஓங்கிய அழைப்பிற்கு ஓடி வந்து நின்றான் விக்னேஷ்.

 

“காஷ்டியூம்ல என்ன பிராப்ளம்னு பார்த்து கிளியர் பண்ணி விடு, மறுபடி இந்த சில்லியான மேட்டரெல்லாம் என்கிட்ட வர கூடாது மைன்ட்இட்” அவர் காட்டமாக மொழிய, “ஓகே மேடம் ஐ வில் ஹேன்டில் திஸ்” என்றவன், அமிர்தியை அழைத்துக் கொண்டு நகர்ந்தான்.

 

“வித் இன் ஆஃப் ன் ஹவர்ல ஸ்பாட்டுக்கு வந்தாகனும்” மித்ராவதியின் உத்தரவு அவர்களின் பின்னோடு மோதியது.

 

கேரவேன் சென்று ஆடை வடிவமைப்பாளர் தேர்ந்து வைத்திருந்த துணியை பார்த்தான். அது உள்ளாடையாக மட்டுமே இருந்தது.

 

“இதை போட்டு எப்படி நடிக்க முடியும் விக்கி சார்? இது பேய் கதைனு தான சொல்லி இருந்தீங்க?” அமிர்தி கோபமாகவே கேட்க,

 

“ஹீரோயின் மேடம், நாங்க கொடுத்த டிரஸ்ஸ நீங்க போட்டு நடிச்சு தான் ஆகனும்! அங்க காட்ட மாட்டேன் இங்க காட்ட மாட்டேனு பேசினா நடிக்க வந்திருக்கக் கூடாது. இதையெல்லாம் எதிர் பார்க்காம தான் இந்த ஃபீல்டுக்கு வந்தீங்களா என்ன?” ஆடை வடிப்பாளன் திமிராகவே பதில் பேசினான்.

 

பிரச்சனை என்னவென்று விக்னேஷிற்கு புரிந்தது. “திரு, அவங்க ஃபீல்டுக்கு புதுசுன்னு உனக்கும் தெரியும் தான, இப்படி டூ பீஸ் எடுத்து போட சொன்னா அவங்களுக்கு பதட்டமா இருக்கும்னு கூட புரியாதா உனக்கு. எத்தனை வருசமா எத்தனை பேரை பாத்துட்ட இருக்க நீ?” அவன் கடிந்து கொள்ள, “இந்த ஸீனுக்கு இந்த காஸ்டியூம்னு முன்னவே சூஸ் பண்ணது தான விக்கி, இவங்க தான் என்னவோ ரொம்ப பிகு பண்றாங்க” அவனும் காட்டமாக பேசினான்.

 

“ஜஸ்ட் ஷட்அப், ஷூட்டிங்கு டைம் ஆகிட்டு இருக்கு. இப்ப உன்னோட ஆர்கியூ தான் முக்கியமா போச்சா?” என்று குரலை உயர்த்தி அவனை அடக்கியவன், “அந்த வொயிட் ஷால் எங்க?” கேட்டதும் ஒரு வெள்ளைநிற துணியை எடுத்து தந்தான்.

 

“கெட் அவுட்” விக்னேஷின் சீற்றத்தில் அவன் கடுப்போடு வெளியேறி விட, அமிர்திக்கு இவன் புரிய வைக்க முயன்றான். 

 

“இன்னைக்கு சந்துரு, பௌர்ணமியோட ரொமான்டிக் ஸீன்ஸ் தான் ஷுட் பண்ண போறோம்னு சொல்லி இருக்கோமில்ல, நீங்க ரெண்டு பேரும் குளத்துல குளிக்கிற மாதிரி ஸீன், முழு காஸ்டியூமோட குளத்தில குளிக்கிற மாதிரி காட்ட முடியாது. அது ரியாலிஸ்டிக்கா இருக்காது. சோ இந்த ஒயிட் ஷால் மட்டும் தான் உன் பாடிய கவர் பண்ணி இருக்கனும். உங்களுக்கு எல்லா விதத்திலயும் கம்ஃபர்டபுளா தான் வியர் பண்ணி விடுவாங்க, சோ டோன்ட் பேனிக் ஓகே” இவன் விளக்கி சொல்லியும் அமிர்தி தெளியாத முகத்துடனே நின்றிருந்தாள்.

  

“என்ன பாலி அமைதியா இருக்க, இதையெல்லாம் சொல்லி புரியவைக்க முடியாதா உன்னால?” விக்னேஷ் உடனிருந்த பாலியையும் முறைத்து வைத்தான்.

 

“வெத்து பேச்சுக்கெல்லாம் மட்டும் வாய் ஓயாம பேசறது. இப்ப என்ன?” இவன் மேலும் காட்டமாக சீற,

 

“சும்மா குதிக்காத, நானும் சொல்லிட்டு தான் இருந்தேன், அந்த பாழாபோன திரு தான் தேவையில்லாததெல்லாம் பேசி அமுமாவ டென்ஷன் பண்ணி விட்டுட்டான்” பாலியும் தன் பங்கிற்கு எகிற,

 

“சரி, நீங்க ரெண்டு பேரும் மோதிக்காதீங்க, நான் ரெடியாகுறேன்” அமிர்தி அரை மனதாக சம்மதித்தாள்.

 

“குட்” என்றவன், அங்கிருந்த அலங்கார உதவி பெண்களிடம் திரும்பி, “இன்னும் டிவன்டி மினிட்ஸ்ல ரெடியாகி இருக்கனும், சீக்கிரம் முடிங்க” என்று துரிதப்படுத்திவிட்டு வெளியேறினான்.

 

***

 

நிழல் காதலன் – (ஃபிளாஷ் பேக்) காட்சி

 

வழக்கமான பாலொளி முன்னிரவில் பௌர்ணமியுடன் சந்துருவும் தன் ஊன்றுகோல் உதவியோடு அந்த ஒற்றைவழி குறுக்கு பாதை வழியே சென்றனர்.

 

இன்று சித்ரா பௌர்ணமி. இதுவரை எத்தனையோ பௌர்ணமி முழுநிலவை இவர்கள் இங்கே நடுஇரவு வரை ரசித்திருந்தாலும், இன்றைய முழு நிலவை மனமொத்த காதலர்களாக ரசிக்க இருவரும் அதீத ஆவலாக வந்திருந்தனர்.

 

வந்ததும் முதலில் அந்த ஓடை நீர் அவர்களை அழைக்க, பௌர்ணமி எப்போதும் போல தண்ணீரில் காலைவிட்டு ஆட்டியபடி ஓடையின் கரையில் அமர்ந்து கொண்டாள்.

 

சந்துரு தன் மேலாடையை களைந்துவிட்டு அப்படியே தண்ணீரில் பாய்ந்து உற்சாகமாய் நீச்சல் பயின்றான். இப்போதெல்லாம் அவனுக்கு நீச்சல் கைவந்த கலையாகி போயிருந்தது.

 

ஏறிவரும் இரவுக்கு முழுநிலவு தன் பாலொளியால் வெள்ளை அரிதாரம் பூசிவிட்டிருக்க, முழு இருளும் இல்லாமல் முழு ஒளியும் இல்லாமல் மயக்கும் மந்தகாச உலகை அங்கே வடித்திருந்தது.

 

எப்போதுமே நீரின் அளப்பறிய சக்தி அவனை வியக்க வைக்கும். அவனை அதிகம் ஈர்க்கும். இந்த நீர்வெளியில் மட்டுமே அவனால் எந்த உதவியும் இன்றி சுயமாக உலா வர இயலும். நீருக்குள் நீந்தும் போது அவன் உணரும் சுதந்திரத்தை நிலத்தில் ஒருபோதும் உணர்ந்ததில்லை. ஏதோ ஒரு வகையில் அவன் ஒடுக்கப்படுகிறான் என்பது அவனுக்கே புரிந்திருந்தது. நிலம் அவன் ஊனத்தை பறைச்சாற்றுகிறது. நீர் அவன் ஊனத்தை மறக்க செய்கிறது.

 

தண்ணீருக்குள் அவனால் நிற்க முடியும்! நின்ற வாக்கிலேயே தன் காதலானவளை இழுத்து கட்டிக் கொள்ள முடியும்! அவளை கைகளில் ஏந்திக் கொள்ள முடியும்! 

 

தனியே நீச்சலாடி சலித்து கொண்டவன், கரையில் இருந்த பௌர்ணமியை கையசைத்து அழைக்க, அவளும் சம்மதமாக தலையாட்டி, நீரில் இறங்க முயன்றவளை அவன் தடுத்தான்.

 

அவள் என்னவென்று பார்க்க, அவளை மேலாடை களைந்துவிட்டு தண்ணீரில் வரும்படி சைகை செய்ய, பௌர்ணமி முகம் சுருக்கி அவனை முறைத்து வைத்தாள். 

 

அவளின் முறைப்பிற்கு அட்டகாசமாக சிரித்தவன், “நான் என்ன கேட்டுட்டேன்னு இப்படி முட்ட கண்ணு முழிய பிதுக்கிற? நான் சொன்னதை செய்யுடி இல்ல?” அவன் அவளை அசையாத நேர் பார்வை பார்க்க, இவள் தான் அவன் பிடிவாதத்தில் சங்கடப்பட்டு போனாள். தயங்கி, திணறி அவள் நிற்க, கெஞ்சி, மிரட்டி இவன் விரட்ட, தப் தப்பென்று நடையில் கோபம் காட்டி நடந்து மரத்தடியின் மறைவுக்கு சென்றவள், தூய வெள்ளை ஆடை சுற்றி தன் பொன்மேனியை மறைத்து கொண்டு வெளி வந்தாள்.

 

அவளை உரிமையாக பார்த்த இவன் பார்வை சட்டென மேல் நோக்கி வானத்து முழு நிலவை பார்த்துவிட்டு இவளிடம் இறங்கியது. அவள் கட்டி வந்த வெள்ளாடை பால்நிலா வண்ணத்தை ஒத்திருக்க, அந்த நிலவை தான் இழுத்து இவள் ஆடை கட்டி கொண்டாளோ? என்ற பித்தான சந்தேகம் அவனுள் எழ, உல்லாசமாக சிரித்துக் கொண்டான்.

 

அவன் பார்வையிலும் சிரிப்பிலும் தன் கோலத்திலும் அவளை வெட்கம் தின்ன தளிர் நடை பயின்று நீருக்குள்  இறங்கியவளை அவன் கரம் கோர்த்து இழுத்துக் கொள்ள, அவள் நாணி கோணி அவனுள் ஒடுங்கினாள்.

 

சந்துரு நீரில் மிதந்தபடி நேராக நின்று பௌர்ணமியை தன் மார்போடு கட்டிக் கொண்டான். அவளை இருகைகளில் ஏந்தி சுழற்றினான். அவன் விளையாட்டில் இவள் கிளுக்கி கிளுக்கி சிரித்திட, இவனும் அவளோடு உல்லாசமாக வாய்விட்டு சிரித்தான். அவன் முகத்தில் நீரை வீசி அடித்தவள், அவன் கைகளில் இருந்து துள்ளி விழுந்து நீருக்கடியில் மூழ்கி நழுவிக் கொண்டாள். இவனும் உடலை வாகாய் வளைத்து நீருக்குள் புகுந்து அவளை துரத்தலானான். 

 

நீச்சலில் சந்துருவை திணற வைக்கும் அசகாய சூரியாக இருந்தாள் பௌர்ணமி. அவன் வேகம் பிடித்து அவளை நெருங்கவும் இவள் அவனை ஏய்த்து விலகி நீந்தவும் என இணை சேரும் மீன் ஜோடிகளுக்கு போட்டியாக இவர்களும் நீருக்கடியில் நீந்திப்பிடி விளையாட்டை ஆடி களித்தனர். 

 

அவளின் ஆட்டத்தில் இவன் பொறுமை கரைய, தன் முழுவேகம் பிடித்து நீந்தி அவளை வளைத்து பிடித்து தன்னுள் இறுக்கிக் கொண்டான். அதே நிலையில் இருவரும் மூச்சுக் காற்றுக்காய் நீருக்கு வெளியே தலை நீட்டினர். வேக வேக மூச்சுகளை இழுத்து விட்டு அவர்கள் நாசிகள் தேறின. 

 

இதுவரை அவன் நெருக்கம் உணராதவள், குளிர் நீருக்குள்ளும் அவனின் அகன்ற உள்ளங்கையின் கதகதப்பை தன் இடையின் அழுத்தத்தில் உணர்ந்து மன இடுக்குகளில் சஞ்சலம் ஒட்டி கொள்ள தவித்து போனாள். அந்த மெல்லியலாளின் முகத்தின் தவிப்பும், தேகத்தின் நடுக்கமும் இவனை பித்தேற செய்வதாய்.

 

ஓடை நீரின் சலசலப்பை விட இளம் உள்ளங்கள் அதீத இறைச்சலோடு சலசலத்தன. அவர்களின் எண்ணங்களின் நெருக்கத்தில் சதிராடிய காதல், இப்போது தேக நெருக்கத்தில் புயலின் முன்னெச்சரிக்கை காட்டி நின்றது.

 

அவன் நெருங்கினான். அவள் தயங்கினாள். விலகவில்லை. தடுக்கவோ மறுக்கவோ அவளிடம் ஏதுமில்லை. அவளுக்கான அனைத்தையும் அவனுக்கெனவே அர்பணித்து இருந்தாள் பேதையவள். அவனை தாண்டி அவளுக்கும் வேறு ஏதும் இருக்கவில்லை. 

 

அவனின் முதலெழுத்து முத்தங்களில் முடிவிலி காதலில் மயங்கியது அவள் பெண்மை. கிறங்கியது அவளின் மென்மை.

 

நீர்த்தடத்தில் இருந்து கரை ஒதுங்கிய பின்னும் உணர்ச்சி வேகத்தில் கரை காணாமல் தவித்தனர். அவள் புல்வெளி விரிப்பில் கிறங்கி சறிய, அவள் முகத்தருகே தாழ்ந்த அவன் ஈரச்சிகையில் வழிந்த துளிகள் அவள் மேனியில் பட்டு தெறிக்க, அவள்  மலரிதழோடு இதழாடி, அவளுள் மூழ்கினான்.

 

உயிர் காதலில் திளைத்த கூடல்! இன்பமும் இனிமையும் மிக்கதாம். இணைந்த இதயங்களில் புனிதமாக போற்றப்படுவதும்!

 

உச்சி வானை நிலவு ஏறியிருக்க, தன் கையணைப்பில் துவண்டு கண் மூடி கிடந்தவளை ஆசை தீர தீராது  பார்த்திருந்தான் சந்துரு. அவள் நுதலில் அழுத்த முத்தமிட்டு, நிமிர்ந்து படுத்தவன் கண்களில் ஈரம் தேங்கி அவன் காதோரம் வழிந்தது.

 

தன் மீது மோதிய பழி சொற்களில் தன்னுள் ஒடுங்கி, குறுகி போயிருந்தவன் இந்த நொடி தன்னை முழுமையான ஆண்மகனாய் உணர்ந்தான். தன்னவள் உறவில் நிறைவு கண்ட தருணம் அவன் ஆண் என்ற கர்வம் திமிரி முறுக்கேறி நின்றது. மனதை தாக்கி இருந்த அழுத்தங்கள் விலகி போக, அவன் கண்களில் ஈரம் கசிந்து வழிந்தது.

 

அதோ அந்த சந்திரன் பௌர்ணமி இரவில் முழுமை பெறுவதைப் போல, இதோ இந்த சந்துருவும், பௌர்ணமியான இவளின் அருகில் மட்டுமே முழுமை பெறுவதாக உணர்வு எழ, இன்னும் இன்னும் அவனுள் காதல் ஊற்றெடுப்பதாய்.

 

தன்னவளின் ஓய்ந்த தோற்றம் கூட, அவன் மதி மயக்க செய்வதாய். தீராத நேசம் தாளாமல் அவளிதழில் அழுத்த முத்தமிட, முகம் சுருங்கி திறவாத இமைகளை பாதி திறந்து அவனை பார்த்தவள், அவன் மார்பு கூட்டுக்குள் முகம் புதைத்து தன் கலைந்த தூக்கத்தை தொடர, சந்துருவின் முகத்தில் நிறைவான புன்னகை விரிந்தது.

 

***

அவள் வருவாள்…